ஆட்டம் – 3

           ⚠️ Copyright ©️ 2019 - 2026 Ezhilanbu Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, without express written permission of the admin and the authors.

- legal team, ezhilanbunovels.com

“ உங்களது பரிசை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எனக்கும் ஆசைதான், ஆனால் நான் பாவிக்கும் திரவியங்கள் ரூயி மண்டபத்திலிருந்து வாங்குபவை மட்டும் தான்.கைக்குட்டைகளும் … “  என்று ஏளனச் சிரிப்போடு இழுத்தாள்.

அவள் கூற வருவது புரிந்தாலும் முகத்தில் எந்த மாறுதலையும் காட்ட நான் விரும்பவில்லை.

“ சென் ஜியா யின் நீ இன்னும்  சிறு பிள்ளைதான். சில விடயங்கள் உனக்கு புரிய தாமதமாகும் என்பது எனக்கு தெரியும் ஆனால் நான் ஏன் இதை கொடுத்தேன் என்று கூட உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை பார்,  அதை நினைத்தால் தான் எனக்கு வருத்தமாக இருக்கிறது.” 

நான் எண்ணியதைப் போல் அவள் முகம் இருளடைந்தது.ஜியாயினுக்கு அவளது தமக்கைக்கு முன்னுரிமை கிடப்பது பிடிக்காது எனவே சிருமிதனே என யார் கூறினாலும் அவளது கோபத்திற்கு தூபம் போட்ட மாதிரி தான் ….

அவள் புருவ மத்தியில் விழுந்த முடிச்சைப் பார்க்கும்போது, வலையை விரித்து காத்திருக்கும் மீனவனுக்கு அதில் விழும் இரையைப் பார்க்கும் ஆனந்தம் எனக்குள்.

“ மூத்த சகோதரி மிங் யுனான் !!! 

எனக்கும் உங்களைப்பற்றி நன்றாகத் தெரியும் , எனவே நீங்கள் விரும்பினால் ஏன் இங்கு வந்தீர்கள் என்று கூறலாம் , ஒருவேளை எதுவுமே இல்லாவிட்டால் எனது பணிப் பெண்ணிடம் கூறி உங்களுக்காக விருந்து படைக்க சொல்கிறேன். அதை வயிறு புடைக்க உண்டு விட்டு செல்லுங்கள்.உங்கள் வாழ் நாளில் பார்க்க முடியாத உணவுகளை இங்கு நீங்கள் பார்க்கலாம் … “ என கண்களை சுருக்கி சிரித்தாள்.

எனது பெயர் அவள் நாவிலிருந்து முழுதாக வெளி வந்தது.இதைத்தான் நான் வெறுக்கிறேன். என்னை விட அவள் சிறியவளாக இருந்தாலும் எனது தந்தையை விட அவளது தந்தை தராதாரத்தில் உயர்ந்தவர். எனவே எனது முழுப்பெயரை அவளால் கூப்பிட முடியும்.

இன்னும் சில நாட்கள் தானே எல்லாம்! இந்த ஏழாம் தரத்தில் உள்ள தந்தையின் மகளுக்கும் தலை நிமிரும் காலம் வந்து விட்டது என இவளுக்குத் தெரியாதே. அவள் மடமையை எண்ணி சிரிப்பு தான் வந்தது.

நான் கலாசாலைக்கு போனதே அங்கு கிடைக்கும் சரி சமமான மரியாதையைக் கருத்தில் கொண்டுதான். அதன் விளைவாகத்தானே இன்று இவள் என்னை விருந்தாளியாகவாவது உள்ளே அழைக்க முடிகிறது இல்லாவிட்டால் இன்று இந்த வீட்டின் வாசலைக் கூட திறந்திருக்கமாட்டாள்.

அப்படியிருந்தும் நுழைந்தது முதல் வீட்டின் சேவகர்கள் தொட்டு இவள் வரை … வார்த்தை , செய்கை என ஒவ்வொன்றிலும் அவமதித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாழடைந்த மண்டபமே அதற்கு சான்று இல்லையா … தலைநகரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய அதிகார பலமும் பண பலமும் படைத்த இவர்களின் வீட்டில் , உட்கார்ந்து பேசவா இடமில்லை.என்ன நடந்தாலும் இப்போது எனது உணர்வுகளை கட்டவிழ விடுவது நல்லதல்ல.என்னை நானே சமாதானம் செய்து விட்டு பேச ஆரம்பித்தேன்.

“ உனது வீட்டில் விருந்துண்ண நான் வருவேன், ஜியா யின் ஆனால் அதற்குரிய நாள் இன்று அல்ல .

WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright©️ezhilanbunovels.com.

சங் லாங் , என்யு ரோங் ( En yu Rong ) இவர்களின் கையில் உனது சிகையலங்காரக் குச்சி இருக்கிறது.உன்னிடம்  இருக்கும் பல அலங்கார அணிகலன்களில்களில் இது எதுவென்று உனக்கு தெரியாமல் இருக்கலாம், எனவே அதை நான் உனக்கு நினைவுபடுத்துகிறேன்.….

என்யு ரோங்கிடம் சங் லான் கூறிய கூற்றின் படி ஹுவா இயற்கை மரணம் எய்தவில்லை யாரோ அவளை தாக்கியிருக்கிறார்கள்.இது உண்மையா?  பொய்யா ? என்று எனக்குத் தெரியாது.

ஹுவாவின் அறையை அவள் ஒழுங்குபடுத்தும் போது முதல் நாள் இரவில் நீ அங்கு விட்டு வந்த தடயம் அவர்களிடம் இருக்கிறது.

எனவே எதிர்காலத்தில் நீயும் உனது குடும்பத்தாரும் அழும்போது உனக்கு தேவைப்படுமே  என இவற்றைப் பரிசளிக்கிறேன்.எனது நல்லெண்ணத்தை வீணாடிக்காமல் ஏற்றுக்கொள்வாய் என நம்புகின்றேன்” 

அவளது கண்கள் அகல விரிந்தன.கைகளில் தவழ்ந்த தேநீர்க் கிண்ணத்தை இறுகப்பற்றினாள்.சில முறை எச்சிலை விழுங்கிவிட்டு நான் பேசுவதற்காக காத்திருந்தாள்.

கொட்டிக் கிடந்த அமைதியை மண்டபத்தின் துருப்பிடித்த தூணோடு  வெட்டப்படாத மரக்கிளைகள் ஒன்று சேர்ந்து ஒலி எழுப்பிக் கொண்டிருந்தன. தேநீரின் நறுமணத்தைத் தாண்டி தூசும் துரும்புமே நாசியை வருடிக்கொண்டிருந்தன.அவளது முகமாற்றங்களை கண்ட நான்,  எதுவாக இருந்தாலும் அவளிடம் இருந்தே வரட்டும் என காத்துக் கொண்டிருந்தேன். அவள் கண்களில் இருந்த ஏளனமும் இதழ்களில் இருந்த சிரிப்பும் காணாமல் போயிருந்தது.

“ உங்களுக்கு எப்படி தெரியும் ,  யாரோ எதையோ சொன்னால், அது எல்லாம் உண்மையாகிவிடுமா ? அவள் உண்மையாகவே கொலை செய்யப்பட்டிருந்தாலும் அதற்குக் காரணம் நான் இல்லை எனவே நான் ஏன் பயப்பட வேண்டும் “   குரலை உயர்த்தினாலும் அவள் முகத்தில் கலவரம் குறையவில்லை.அவள் நான் கூறியதைக் கேட்டு பயப்படவில்லை,  எனக் காட்ட முயன்றாலும் தடுமாற்றத்தோடு வெளிவந்த வார்த்தைகள் ஜியாயினுடைய பலவீனத்தைக் காட்டின.

இதுதான் நான் ஆவலோடு எதிர்பார்த்த தருணம் .

“ எனக்கு எப்படித் தெரியும் என்பது இங்கு முக்கியமில்லை ஜியா யின்  ,  நீ என்ன செய்யப் போகிறாய் என்பது தான் முக்கியம்.

நன்றாக யோசி ,
சங் லானுக்குத் தெரிவது இங்கு  பெரிய விடயமில்லை  . 

ஆனால் என் யு ரோங்கை உன்னால் வீழ்த்த முடியாது.அவளது பின்புலம் உன் குடும்பத்தையே வீழ்த்தக் கூடியது.அது தெரிந்து  தான் சங் லான் அவளிடம் உதவி தேடிச் சென்றிருக்கிறார்.கலாசாலையில் ஹுவாவின் மரணத்தைப் பற்றி பேசக்கூடாது என்று கூறினாலும் யாரவது ஆதாரத்தோடு அரச காவல்துறையில்  முறையிட்டால் யாரால் என்ன செய்ய முடியும் ,

என்ன இருந்தாலும் நாங்கள் எல்ல்லோரும் ஒரே இடத்தில் கல்வி கற்கின்றோம்.சக மாணவிக்கு அநீதி இழைக்கப்பட்டது என்று தெரிந்தும் சும்மா இருக்க முடியாதில்லையா … “ 

நான் பேசப் பேச ஆசுவாசமாக உட்கார்ந்திருந்த அவள் இருப்புக்கொள்ளாமல் இருக்கையின் நுனிக்கே வந்து விட்டாள்.

அவளுக்குள் இருந்த கோபமும் எதிர்ப்பும் ஒரே நேரத்தில் வெளி வந்தது..

“ நான் அவளை எதுவும் செய்யவில்லை ,  அவளுடன் பேச மட்டும் தான் அன்றிரவு சென்றேன்.வேறு எதுவுமே எனக்கு தெரியாது.மேலும் யாருக்கோ பின் புலம் பெரிதாக இருந்தால் நான் ஏன் பயப்பட வேண்டும், என் தந்தை ஒன்றும் ஏழாம் தரத்தில் இல்லை , யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கூறி எங்களை வீழ்த்த முடியாது  “ அதிருப்தியும் கோபமும் அவளிடம் போட்டி போட்டுகொண்டன.

வார்த்தைகளால் குதறி எடுக்க இவளால் தான் முடியும். ஆனால் நான் இதற்கு தயாராகித்தானே வந்தேன்.

“ ஓஹ் .. நீயும் அவளும் வழமையாக பேசிக்கொள்வதில்லை என்று எல்லோரும் கூறுகிறார்களே , அப்படிப் பேசினாலும் அது வாக்கு வாதத்தில் தான் முடிந்து விடுமாமே ,

ஒரு வேளை..  அன்றிரவு நீ ஹுவாவை சந்திக்க சென்றிருந்தாய் என்று நீ விட்டு வந்த தடயத்தால் நிருபித்து ஹுவாவின் இறப்புக்கு ஏதோ ஒரு விதத்தில் நீ காரணம் இல்லாவிட்டால் கொலையாளியை உனக்குத்தான் தெரியும் என வாதாடினால் உன்னால் எவ்வாறு மறுக்க முடியும் ?

அதுமட்டுமில்லாமல் இன்னும் ஒருவரைப் பற்றியும் நீ மறந்துவிட்டாய் ஜியா யின்.ஹுவாவின் உயிர்த்தோழி அயலின் .. அவளைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய் என நான் நினைக்கிறேன்.

அவளிடமிருந்தும் உன்னால் தப்ப முடியும் என நினைக்கிறாயா ? ”  ஏற்ற இரக்கங்களோடு அவளை ஒரு வழிக்கு கொண்டு வர முயன்றேன்.

” அவர்களால் என்னை குற்றவாளியாக காட்ட முடியுமானால் நான் நிரபராதி என என்னாலும் நிரூபிக்க முடியும்.

எனது தந்தையின் பின்புலத்தை வைத்து அதை செய்ய முடியாது என எண்ணுகிறீர்களா  ? “

அவள் கூறுவதைப் பார்த்தால் … அவளுக்கும் இதற்கும் உண்மையிலேயே தொடர்பு இல்லையா ,  இல்லாவிட்டால் அவள் நடிப்பைக் கண்டு நான் வியக்கிறேனா .. இது எப்படியாக இருந்தாலும் இந்த எண்ணத்தை நான் மாற்றியே ஆக வேண்டும்.

“ நான் நினைப்பது இருக்கட்டும்.ஹுவாவுக்கும் உனக்கும் ஆகாது, நடந்தவற்றை வைத்து உன்னை குற்றவாளி என்று கைது செய்யாவிட்டாலும் உன்னால் பழையபடி கலாசாலைக்கு வர முடியுமா ??… நீ வந்தாலும் உனது நிலைமை எப்படியிருக்கும் என எண்ணிப் பார்த்தாயா  ?

ஒரு வேளை நீ இதைக் காரணாமாகக் கொண்டு உனது கல்வியை நிறுத்தினால் அதனால் ஏற்படும் அவப் பெயரை உன்னால் தடுத்து நிறுத்த முடியுமா   ?

Copyright©️ezhilanbunovels.com. கதையைத் திருடி PDF போடாதீர்!

நீ வரக் கூடாது என நினைத்தாலும் உனது குடும்பத்தினர் அவ்வளவு பெரிய நஷ்டத்தை ஏற்றுக் கொள்வார்களா  ?

இல்லாத ஒரு விடயத்தைக் கூட மீண்டும் மீண்டும் கூறுவதால் அது இருப்பதாக ஒருவரை உணர வைக்க முடியுமாம், இப்போது நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.

“ நன்றாக யோசி ஜியா யின் , அவர்கள் உன்னை வீழ்த்த முன் நீ அவர்களை வீழ்த்துவதுதான் சிறந்தது.இதற்கு மேலும் உனக்கு புரியவில்லை என்றால் நீ உண்மையாகவே சிறுபிள்ளை தான்.உன்னோடு பேசுவதை விட நான் , எனது வேலையைப் பார்ப்பதே சிறந்தது.” 

” ஏன் என்ன என்று என்னால் விளக்க முடியாவிட்டாலும் , நீங்கள் சொல்வதை அப்படியே என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது .”

தூண்டிலை நோக்கி மீன் வருவதை என்னால் உணர முடிந்தது… 

“உன்னால் அதை அப்படியே மறுக்கவும் முடியவில்லையே !!! …  இதோ பார் என்னைப் பொருத்த வரையில் நீ ஒரு பொறுப்புள்ள பெண், சிறு சிறு தவறுகள் செய்தாலும் உனக்கென வரையறை வகுத்து நீ வாழ்கிறாய் அதனால் தான் உன்னோடு பேச வந்தேன்.

எனக்குத் தெரிந்து ம்…ம் .. சங் லான் இந்த கலாசாலையை விட்டு இன்னும் சில மாதங்களில் சென்று விடுவாள் , 

என்யு ரொங்காலும் இன்னும் ஆறு மாத காலத்திற்கு எதுவும் செய்ய முடியாது.ஆனால் அயலினுக்குத் தான்  எந்தத் தடையுமில்லை.அவளுக்குத் தெரிந்தால் என்ன நடக்கலாம் என்று நீயே யோசித்துக்கொள் .. !!!

எனக்கும் அவளைப் பிடிக்காது ,  எனவே நான் சொல்வது போல் நீ செய்தால் உன்னால் இந்த சிக்கலிலிருந்து தப்ப முடியும்.” 

அகல விரிந்த கண்களோடு ” ஆனால் .. ஆனால் அயலினுக்கு இன்னும் தெரியவில்லையே … அப்படியானால் நான்  இதைப் பற்றி கவலைப் படத் தேவையில்லையே  , மேலும் எனக்குத் தெரிந்து சங் லானுக்கும் அயலினுக்கும் பெரிதாக ஒத்துப் போவதில்லையே …, எனவே  நீங்கள் கூறுவதைப் போல் நடக்காது அல்லவா … “

” உன் சிறுபிள்ளைத் தனத்தைக் காட்டுகிறாயே ஜியா யின் …

அவர்கள் மூவருமே ஒருவருக்கொருவர் தொடர்புபட்டவர்கள் இல்லை தான்  , இருந்தாலும் ஹுவா என்ற கயிறு அவர்கள் மூவரையும் இணைத்து விடாது என்று என்ன நிச்சயம் ? …  

அயலினுக்கு இது எப்போது தெரியும் எப்போது உன்னைப் பழி வாங்குவாள் என காலம் முழுக்க பயத்தோடு இருக்கப் போகிறாயா  ? ….

அதற்கு பதிலாக நீ மட்டும் சரி என்று கூறினால் நாமிருவரும் இணைந்து அயலினை இந்த கலாசாலையில் இருந்து வெளியேற்றலாம்.அவள் இல்லாமல் மற்ற இருவரையும் சமாளிப்பது இலகு.நான் கலாசாலையின் மூத்த மாணவி , நானும் எனது வகுப்பும் சேர்ந்து அவர்களை ஒடுக்கினால் யாரால் அதைத் தடுக்க முடியும் ? “

அவள் யோசிக்க ஆரம்பித்தாள்..நான் கூறியதை மறுக்கவில்லை இதுவே பாதி வெற்றி தான்.

“ உனக்கு சம்மதம் என்றால் சொல்லியனுப்பு , 

அடுத்து நடக்கவேண்டியவற்றை நான் எனது பணிப்பெண்னின் ஊடாக செய்தியனுப்புகிறேன்.” 

உடலை முறித்துவிட்டு அவளுக்கு முகமன்களை கூறிவிட்டு வெளியில் வந்தேன்.பணிப்பெண்களின் நடத்தை மாறியிருந்தது.பவ்வியமும் அதிகரித்திருந்தது.வரும் போது பின்வாசலில் இருந்து அழைத்து வரப்பட்ட நான் இப்போது தலை நிமிர்ந்து முன் வாசலை நோக்கிச் சென்றேன்.

குதிரை வண்டியில் அமர்ந்த எனக்கு உண்மையில் வண்டி நகர்கிறதா … அல்லது வானில் மிதக்கிறதா ……. என்றே புரியவில்லை.ஷங்கானின் வடக்குப் புறத்தில் வாழ்பவர்கள் அனுபவிக்கும் சலுகைகளுள் இதுவும் ஒன்று.இந்தப் பகுதியில் உயர் குடி மக்கள் , அரச உத்தியோகத்தர்கள் , பிரபுக்கள் மற்றும் பணக்கார வணிகர்கள் மட்டுமே வாழ்கின்றனர்.எனவே இந்தப் பகுதியில் இருக்கும் அலங்காரப் பொம்மையில் இருந்து தெருவின் நடை பாதை வரை தூய்மையையும் நேர்த்தியையும் கொண்டிருக்கும்.

” ஆஹ் ….ஹ்ஹ ஹ்ஹ  “

வண்டியின் மேற்பகுதியில் தலை வேகமாக மோதி வலியெடுக்க ஆரம்பித்தது.

சற்றே நிதானித்த பின்

” என்ன நடக்கிறது “

எனப் பணிப்பெண்ணிடம் கேட்க “ மன்னிக்க வேண்டும் இளம் பிராட்டி , பாதையில் இருந்த பள்ளத்தில் குதிரை கால் வைத்து விட்டது.அந்த அதிர்ச்சியில் சற்றே கட்டுப்பாட்டை இழந்து விட்டது.இப்போது எல்லாம் சரியாகி விட்டது “

” ம்ம்ம் … சரி , ஆனால் அவனைப் பார்த்து ஓட்டச் சொல் .. “

” சரி இளம்பிராட்டி … “

இன்று இதைக் கவனிக்க எனக்கு நேரமில்லை.இப்போது நகரின் தெற்குப் புறத்திற்கு வந்து விட்டோம் போலத் தெரிகிறது.தெற்கு என்று கூறுவதை விட ஏழைகளின் உறைவிடம் என்று கூறுவது தான் சரியாக இருக்கும்.இனி குன்றும் குழியும் தான் எங்களை வரவேற்கும்.

இங்கிருந்து நான் தப்பிக்க ஒரே வழி தான் இருக்கிறது.இரவு மங்கை கூறியதைப் போல் அயலினை வீழ்த்த வேண்டும் அடுத்து  இந்த வருட இறுதியில் நான் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் , அதன் பின் வடக்கு வீதியில் இருக்கும் ஒரு ஆடவனை மணமுடித்தால், பிறப்பால் நான் அனுபவிக்கும் இந்த துன்பத்தை இழந்து புது வாழ்வு தொடங்க முடியும்.அந்தக் கனவுகளில் மிதந்தவாறு யன்னலின் சீலையை விளக்கினேன்..

ரூலானின் வண்டி சற்றுத் தள்ளி நின்றுகொண்டிருந்தது …இது நல்ல சந்தர்ப்பம்..

“  நான் இறங்குவதற்கு உதவி செய்..  “ 

“ சரி இளம்பிராட்டி .. இதோ ..”

இறங்கி உடையை சரி பார்க்கும் விதமாக திரும்பிக் கொண்டேன்.நானாகப் போவதை விட எதேச்சையாகப் பார்க்கும் போது , திரும்பினால்  இலகுவாக இருக்கும்.கவனிக்காமல் போனால் என்ன செய்வது …. அடுத்த கட்டம் யோசிக்க தேவையின்றி அவள் குரல் என்னை அழைத்தது… மென் முறுவலோடு “ யார் .. “ எனக் கேட்டுக்கொண்டே திரும்பினேன்..

“ மிங் யுனான் இங்கு என்ன செய்கிறாய்  ? … “

“ ஆஹ் நீயா .. உன்னை இங்கு எதிர்பார்க்கவே இல்லையே ..

மன்னித்துவிடுங்கள் உங்களை இங்கு …” என நான் தயங்கித் தயங்கி பேசினேன்.

“ என்ன பேசுகிறாய் .. நானும் நீயும் ஒரே வயது தான் , எனவே என்னை நீ ,  வா , போ என தாரளமாக அழைக்கலாம்.எனக்கு இந்தத்  தரம் பார்த்து பழகுவதெல்லாம் ஒத்துக் கொள்ளாது.உன்னைப் பார்க்க வேண்டும் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.நீயே வந்து விட்டாய் !!

“ அப்படியா .. “  என  உண்மையாகவே வியந்தேன்.

நானும் அவளும் ஒரே ஆண்டில் கல்வி கற்கின்றோம்.ஆனால் வேறு வேறு வகுப்பில் இருப்பதால் பெரிதாக பேசிக்கொண்டதில்லை.என்னைப் பார்க்க வேண்டிய தேவையும் இருப்பதாக தெரியவில்லையே …

“ நான் இந்த வேலையை முடித்து விட்டு கலாசாலைக்குத் தான் செல்கின்றேன், நீயும் என்னோடு வருகிறாயா ?   …

“ ஆஹ் … நான் எப்படி உங்களோடு .. வந்து உன்னோடு ..

“ இப்போது தானே சொன்னேன், நான் அப்படியெல்லாம் பார்க்க மாட்டேன்.”

ரொம்பப் பெரிய மனது தான்  , ஆனால் இலகுவாக இதை ஏற்றுக்கொள்ளக் கூடாது , இந்த இரண்டு நிமிடத்திற்குள் எனக்குள் நடந்த சிறு போரைப் பற்றி அவள் அறிய வாய்ப்பில்லை.

“ ஆனால் நான் வீட்டுக்குச் சென்று எனது உடைமைகளை எடுத்துக் கொண்டு தான் வர வேண்டும் , அதுவரை உங்களை காத்திருக்க வைப்பது அவ்வளவு நன்றாக இருக்காது .. எனவே …. “

” ப் பூ .. இவ்வளவு தானா ; … நான் கூட நீ எண்ணி எண்ணி பேசியதில் என்னவோ என்று நினைத்து விட்டேன்.நான் எனது வேலையாட்களிடம் உனது உடைமைகளை பத்திரமாக கொண்டு வரச் சொல்கிறேன்.உனது பணிப்பெண்ணை அவர்களோடு அனுப்பிவிடு. இப்போது உன்னால் என்னோடு வர முடியுமல்லவா  ?”

” ஆம் ”  என சிரித்துக்கொண்டே தலையசைத்தேன்.

எனக்கு இந்த உயர்குலத்தினரிடம் பிடிக்காத ஒன்று இது தான்.அவர்களுக்கு தேவை இருந்தால் அதை உடனடியாக பூர்த்தி செய்து விட வேண்டும். அடுத்தவர்களுக்கு அதில் ஏற்படும் எந்த பிரச்சினையையும் யோசிக்க மாட்டார்கள் ஒருவேளை அப்படி அவர்களுக்கு தெரிந்தால் இப்படி பெருந்தன்மையாக உதவி செய்வதைப் போலக் காட்டி அவர்களாகவே மகிழ்ச்சியடைவதில் ஒரு அற்ப சுகத்தைக் காணுகிறார்கள்.

அவளது வண்டியில் ஏறி அமர்ந்தேன்.இன்னும் கொஞ்சம் குறைவாக அலங்கரித்திருந்தால் , அவளது செல்வ நிலை யாருக்கும் தெரியாது என்று நினைத்தார்களோ என்னவோ , உயர் ரக குதிரையிலிருந்து , உள்ளிருக்கும் திரைச்சீலை வரை நுணுக்கமான வேலைப்பாடுகளை கொண்டிருந்தது.நான் அமர்ந்திருந்த இருக்கை என்னைப் பாதியாக உள்வாங்கியிருந்தது.எனது தந்தையின் படுக்கை விரிப்பு கூட இவ்வளவு மென்மையாக நான் பார்த்ததில்லை.ருலானின் உடையில் இருந்த அகிலப்பட்டையின் மணம்  அந்த இடத்தையே சூழ்ந்திருந்தது.

வண்டியின் யன்னல் புறத்தில் நீட்டியிருந்த தலையை உள்ளே எடுத்து விட்டு என்னைப் பார்த்து புன்னகைத்தாள்.

“ நான் நேற்று தான் கேள்விப்பட்டேன். ஹுவாவின் மரணத்தின் போது உன்னை அயலின் அவமதித்துப் பேசினாளாமே !!..! ,  இந்த கலாசாலையின் மூத்த மாணவிகளை கிள்ளுக் கீரையாக நினைத்து விட்டாளா  ?  இதை இப்படியே விடுவது நல்லதாக எனக்கு படவில்லை அதைத்தான் இன்றைய கூட்டத்தில் நான் பேசப்போகின்றேன் ,   நீயும் வந்தது நல்லதாகிப் போயிற்று ..

அவளை என்ன செய்யப்வதாக உத்தேசித்துள்ளாய் கலாசாலையில்  ” 

அன்று நடந்த வாக்கு வாதம் கண் , மூக்கு வைத்து கலாசாலையில் வலம் வருவது நான் அறிந்ததே , இன்று வரை அதை தூபம் போட்டு நான் வளர விட்டதே இது போன்ற ஒரு சந்தர்ப்பத்திற்காகத் தானே .

“ ஓ அதுவா … என்ன செய்வது  எனக்கும் ஹுவாவை  ஆரம்பத்தில் இருந்தே தெரியும் , நல்ல குணம் கொண்டவள் , அயலின் அன்றைக்கு செய்தது அவ்வளவு நன்றாக இல்லை தான் ; இருந்தாலும்  என்ன செய்வது அவளும் நண்பியை இழந்த சோகத்தில் ஏதோ பேசி விட்டாள் , அதைப்  பெரிதாக எடுக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.”

குரலில் அமைதியை தேக்கி வைத்து அந்த வார்த்தைகளைக் கூறுவதற்குள் நான் பெரும் பாடு பட்டேன்.அதற்கேற்ப முக பாவனைக் கொண்டுவருவதில் கருத்தாய் இருக்க வேண்டியிருக்கிறதே.

“ மிங் யுனான் ,  நீ அநியாயத்திற்கு நல்லவளாக இருக்காதே , அன்று நானாக இருந்தால் அவளை  என்ன செய்திருப்பேன் என்றே சொல்ல முடியாது . என்ன காரணமாக இருந்தாலும் அவள் எவ்வாறு அப்படிப் பேச முடியும் இன்று உன்னை அவ மரியாதையாக பேசினால்  ,  நாளை என்னை அவமதிக்க மாட்டாள் என்று என்ன நிச்சயம்  … ” அவள் கண்கள் கோபத்தில் மின்னியது.. 

பரவாயில்லையே , நான் நினைத்தை விட வேகமாக அயலினை வெளியேற்றி விடலாம் போலத் தோன்றுகிறதே.

” நானும் இதை எதிர்பார்க்கவில்லை , எனக்கு தெரிந்து அயலினும் நல்ல பிள்ளை தான் .. எனவே .. “

 ” இல்லை , இல்லை இதற்கு நானே ஒரு முடிவு கட்டுகின்றேன் ” என ரூலான் சூளுரைத்துக் கொண்டாள்.

” எந்தப் பிரச்சினையும் வேண்டாம், இதை இப்படியே விட்டு விடுவது தான் நல்லது ”  என நான் நினைக்கிறேன்.

” கடவுளே … நீ எதையும் பேசாதே .. நானே இதை பார்த்துக் கொள்கிறேன்.”

நான் வேறு ஒன்றை திட்டமிட்டிருந்தேனே , இது எப்படி முடிந்தாலும் அவளை நோக்கியே அம்பு செல்வதை நான் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

🔶🔶🔶

“ எல்லோரும்  அமைதியாக இருங்கள் , நான் கொஞ்சம் பேச வேண்டும். சக மாணவியர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் அவளைப் பார்க்க ரூலான் பேச ஆரம்பித்தாள்.

“ ஹுவாவின் மரணத்தின் போது அயலின் மிங் யுனானை எதிர்த்துப் பேசியதைப் பற்றி நீங்கள் எல்லாரும் கேள்விப்பட்டிருப்பீர்கள்,  ஒருபோதும் சிறியவர்களை அடக்க வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. கடந்த ஆறு மாத காலமாக  அவர்களுக்கு நாங்கள் அளித்திருந்த சுதந்திரம் ,  நாங்கள் இந்த கலாசாலைக்கு வந்த போது எங்களுக்கு யாருமே தரவில்லை.எனவே அதற்கு அவர்கள் நன்றி கூறாவிட்டால் கூட பரவாயில்லை  , எங்களை அவமதிக்காமல் இருக்க வேண்டுமே.அதனால் இதற்கு ஏதாவது செய்தாக வேண்டும். “ 

கூடத்தில் சற்று நேரம் அமைதி நிலவியது.

” நீ என்ன செய்ய நினைக்கிறாய் ரூலான் … ”  அவளது வகுப்பு மாணவியிடமிருந்து கேள்வி பிறந்தது.

” ரூலான் கூறுவது சரிதானே .. ” என்று ஒரு குரல் கூற ,  அதை ஆமோதிக்கும் விதமாக சில தலைகள் ஆட்டப்பட்டன.

 “ நீ கூறுவது சரிதான் , இருந்தாலும் அது நடந்த நேரத்தையும் இடத்தையும் கருத்தில் கொண்டால் இதை தவறாக எடுக்க முடியாதல்லவா ? . மேலும் மிங் யுனானை தனிப்பட்ட முறையில் அவமதிக்க நினைத்து அவள் பேசியதாகவும் நான் கேள்விப்படவில்லை” என ஒரு மாணவி கூறினாள். 

“  என்னைப் பொறுத்தவரையில் இது ஒரு சிறிய விடயம் , அவள் ஒருவள் தவறு செய்தாள் என்றே வைத்துக் கொள்வோம் ஆனால் அதை மிங் யுனான் தனிப்பட்ட முறையில் அயலினோடு பேசி முடித்துக் கொள்வது தான் சிறந்தது என நான் நினைக்கிறேன் ….நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? .. “ என மாணவியர்களைப் பார்த்துக் கேட்டாள்.

காற்றடிக்கும் திசை எனக்குச் சரியானதாகத் தெரியவில்லையே …

இந்த மண்டபத்தில் இன்று கலாசாலையின் கடைசி வருடத்தில் படிக்கும் எல்லா மாணவியர்களும் ஒன்று கூடியுள்ளனர்.எனது வகுப்பு மாணவிகள் நான் கூறுவதை எப்படியும் ஏற்றுக்கொள்வார்கள்.அடுத்த வகுப்பில் சிலர் ஏற்றுக்கொண்டாலும் சிலரிடம் மறுப்பு தோன்றக்கூடும்.

அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேனே , ஆனால் இதில் எந்த அணியிலும் சேராமல் மௌனமாக வேடிக்கை பார்க்கும் குழுவும் இதில் அடங்கும் .எனவே அடுத்த வகுப்பு மாணவியரையும் , இந்த வேடிக்கை பார்க்கும் குழுவையும் ஒன்று சேர்க்க எனக்கு வேறு ஏதாவது ஒரு பெரிய ஆயுதம் தேவை.ஒருவேளை நான் அந்த உத்தியைப் பயன்படுத்தினால்  எனது குறிக்கோளை அடைய முடியும் என நினைக்கிறேன்.

“ அவள் சொல்வதும் சரிதான் ,

இல்லை என்ன சரி என்கிறாய் .” . 

இப்படியே விட்டால் .. இந்த வாதப் பிரதிவாதங்கள் நாளை வரைக் கூட நீளும் , ஒரு முடிவையும் காண மாட்டர்கள்.

“ நான் இங்கே ஏதாவது கூற முடியுமா .. “  மெல்லிய குரலில் அனுமதி கேட்டேன். 

” சொல்லு யுனான்  ,  நீ தான் பாதிக்கப்பட்டவள் ” என்று சில குரல்கள் கூற நான் குரலை தாழ்த்திக் கொண்டே பேச ஆரம்பித்தேன்.

முகத்தை சற்று சோகமாக வைத்துக் கொண்டு தொடர்ந்தேன்.

” அயலின் பேசியதை  தவறாக நான் ஒருபோதும் எடுக்கவில்லை , என்ன அவள் குரலை  சற்றே தாழ்த்திக் கூறி இருக்கலாம் , இருந்தாலும் உங்கள் எல்லோருக்கும் தெரியும் , எனது தந்தை 7 ம் தரத்தில் இருக்கும் அரச ஊழியர் , மேலும் நான்….  நான் …. உயர் குலப் பெண்ணும் இல்லை … எனவே இது போன்ற பல சம்பவங்களை அன்றாடம் சந்திக்க வேண்டியிருக்கிறது.

அவற்றோடு ஒப்பிடும் போது இதை நான் கருத்திலேயே எடுக்கவில்லை , இருந்தாலும் எனக்காக யோசிக்கும் எனது நண்பிகளுக்கு மனமார்ந்த நன்றி , இதை இப்படியே விட்டு விடுவதுதான் சிறந்தது ” .

அப்படியே எல்லோரையும் பாதியாக  வணங்கி விடை பெறுவது போலத் திரும்பினேன்.

இந்தக் கலாசாலையின் முதல் பத்து சட்டங்களில் ஒன்று இதுதான் .. இங்குள்ள எல்லா மாணவியர்களும் குலம் , தராதரம் , பணம் என எவ்வளவு வித்தியாசங்கள் இருந்தாலும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பது தான்.

என்ன இன்னும் யாரும் தடுக்கவில்லை … , இதை நடத்துவதற்காக எவ்வளவு தூரம் நான் இறங்க வேண்டியிருக்கிறது, எதிர்பார்த்த பலனைப் பெற இது என்ன இதற்குக் கீழும் இறங்கலாம்.  குறி தப்ப்பிவிட்டதா ?  எனது எண்ணங்கள் தறி கேட்டு ஓடும் போதே ஒரு குரல் ஆங்கரமாக ஒலித்தது.

“ இல்லை, இல்லை , மிங் யுனான் நீ நில் …  ,  நீங்கள் யார் என்ன சொன்னாலும் நான் இதை சும்மா விடுவதாக இல்லை.அவள் மனம் எவ்வளவு புண்பட்டிருந்தால் இதை ஒரு அவமானமாகவே அவளால் உணர முடியவில்லை.மேலும் இந்த கலாசாலைக்கு வெளியே வேண்டுமானால் தராதரம் பார்த்து பழகட்டும் . ஆனால் இங்கு இருக்க வேண்டுமானால் எல்லோரும் ஒரே தட்டில் தான் வைக்கப்படுவார்கள் பார்க்கப்படுவார்கள்.  லீ யுன் யுவான் கலாசாலையின் மாணவர்கள்.

நாளை அயலின் மற்றும் அவளது வகுப்பு மாணவர்கள் எல்லோரும் கலாசாலைக்குத் திரும்புவார்கள்.அப்போது அவள் யுனானுக்கு முறையான விதத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் அந்த அயலினை நான் சும்மா விட போவதில்லை “  என  ரூலான் கூறினாள்.

“  ஆம் அவள் சொல்வதும் சரிதான் இதை இப்படியே விடக்கூடாது.” இப்போது அங்கிருந்த பாதிக்கும் மேற்பட்டோர் இதற்கு உடன்பட்டனர்.இந்த ஆத்மார்த்த நட்பை பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது.அதை அவர்களுக்கு முன் அடக்க பேசும் பாடுபட்டு என் விழிகளில் இருந்து கண்ணீரே வந்து விட்டது.நுகத்தைப் பாதியாக கைகளால் மூடிக் கொண்டதால் நல்ல வேலையாக யாருக்கும் எதுவும் தெரியவில்லை.

” ஒரு அளவுக்கு மேல் இதை வளர விடுவது நல்லதில்லை என்றுதான் நான் கூறுவேன் ..” என அயலினுக்கு பரிந்து பேசிய மாணவி கூறினாள்.

இருந்தாலும் ஆரம்பத்தில் அவளுக்கு இருந்த ஆதரவு  இப்போது இருக்கவில்லை  , எனவே அவளும் அதன் பிறகு எதையும் பேசவில்லை.

இதையும் நான் எதிர்பார்த்தேன்,  நான்  நல்லவள் ஆயிற்றே ..வேடத்தை முழுமையாக நடிக்க வேண்டும் அல்லவா ..

“ இல்லை, இல்லை  …. வேண்டாம் ,வேண்டாம் , எந்தப் பிரச்சினையும் தேவையில்லை.. “ 

“ நீ சும்மா இரு , எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். “ என என்னை ஆசுவாசப்படுத்தி அதை முடிவுக்கு கொண்டு வந்தார்கள், இல்லை முடிவுக்கு கொண்டு வர வைத்தேன் என்றால் இன்னும் பொருந்தும் என நினைக்கிறேன்.

எல்லா அரங்கேற்றத்தையும் முடித்து விட்டு அறைக்குள் அமரும் போது ஒரு கடிதம் எனது மேசையில் தஞ்சமடைந்திருந்தது.

” காலம் முழுக்க பயத்தில் வாழ்வதை விட துணிந்து செயற்படுவதே மேல், நீங்கள் கூறிய விடயத்தை நான் ஒத்துக் கொள்கிறேன் ஆனால் இரண்டு நிபந்தனைகள். ஒன்று எனக்கு பிடிக்காத விடயத்தை செய்யச் சொல்லக் கூடாது இரண்டாவது இந்த கலாசாலையை விட்டு நான் வெளியேற்றப்படும் எதையும் செய்ய மாட்டேன் ” என ஜியாயினின் கையெழுத்தில் கடிதம் ரத்தினச் சுருக்கமாக எழுதப்பட்டிருந்தது.

அதைப் பார்த்ததும் வாய் விட்டு சிரித்து விட்டேன் ‘ அவள் விருப்பம் இனிமேல் இருக்குமா ‘ என நினைத்துக்கொண்டேன்.

இது நான் எதிர்பார்த்த பதில் தான் ,  இப்போதுதானே ஒரு முக்கியமான விடயத்தை நான் செய்ய வேண்டும்.

தூரிகையை லேசாக மையில் நனைத்து எழுத ஆரம்பித்தேன்.

‘ ஹுவா மரணிக்க முன் ஜியா யின் தான் அவளைப் பார்த்திருக்கிறாள்.மேலும் அவளது மரணம் ;  இயற்கை மரணமா என்பதே சந்தேகம் தான் இதை அப்படியே அயலினுக்கு தெரிவித்துவிடு …. ‘ 

இல்லை , இல்லை நேரடியாகவோ இலகுவாகவோ அவளுக்குத் தெரியக்கூடாது.

அந்த கடிதத்தை கசக்கி எறிந்தேன்.அதில் கோபம் இருக்கவில்லை .. ஆர்வம் தான் அதிகமானது ….

ம்ம் .. அவ்வாறு செய்தால் தான் அயலின் நம்புவாள்.

மனதில் தோன்றிய அந்த திட்டத்தை வரைய இன்னும் சில ஓலைகள் தேவைப்பட்டது.முழுதாக அதை எழுதியதும் , என்னையே நான் பாராட்டியாக வேண்டும் எனத் தோன்றிற்று.

நான் நினைத்தைவிட சுலபமாக இந்த வேலைகள் முடிந்து விட்டதே..
அருகிலிருந்த தேநீரை மெல்ல மெல்ல இரசித்து அருந்திக் கொண்டிருந்தேன்.எனது கடிதத்தில் இருப்பதைப் போல் வெற்றிகரமாக அயலினுக்கு இந்த தகவல் தெரிந்தால்  , அயலின் என்ன செய்யப்போகிறாள் என்பதைப் பார்க்கும் ஆவல் எனக்குள் அதிகரித்தது.

எனது எண்ணங்களை நிறைவேற்றத் துடிப்பதுபோல் யன்னலுக்கு வெளியே இருளில் இருந்து வெளிச்சம் பரவ ஆரம்பித்தது.