💗அத்தியாயம் 32💗

சஹானா இன்னும் அழுது கொண்டு தான் இருக்கிறாள் என்பதை அவளது விம்மல் ஒலி உறுதிப்படுத்தியது. துளசி அவள் தோளில் தட்டிக் கொடுத்தவள் “அழாதிங்க சஹானா… இதுல உங்கத் தப்பு எதுவுமில்லைனு நான் சொல்ல மாட்டேன்… ஆனா உங்களை விட நான் பெரிய தப்பு பண்ணிருக்கேனே… என்னோட உயிரா யாரை நினைச்சேனோ அவனையே நான் இந்த ஆறரை வருசமா நம்பாம இருந்திருக்கேன்…. இப்போ எந்த மூஞ்சியை வச்சிகிட்டு நான் கிரிஷ் கிட்ட மன்னிப்பு கேப்பேன்?” என்று கலங்கத் தொடங்கினாள்.

சஹானாவும் அதைக் கேட்டதும் ஸ்தம்பித்தவள் பின்னர் சுதாரித்துவிட்டு “உன் மேலே கிரிஷ்கு எப்போவும் கோவம் வராது துளசி… நீன்னா அவனுக்கு அவ்ளோ பிடிக்கும்… அவனோட வருத்தமெல்லாம் நீ அவனை நம்பலையேனு தான்… இப்போ உனக்கு உண்மை தெரிஞ்சுடுச்சுனு கேள்விப்பட்டா உன்னை விட அவன் சந்தோசமா மாறிடுவான்… நீ அவன் கிட்ட பேசு துளசி… இல்லைனா என்னோட அண்ணா காலம் முழுக்க நீ அவனைச் சந்தேகப்படுறங்கிற தப்பெண்ணத்தோடயே இருந்துடுவான்” என்று சொல்லவே துளசியும் கிட்டத்தட்ட அந்த முடிவுக்குத் தான் வந்திருந்தாள்.

சஹானாவை அவளது அறைக்குச் செல்லும்படி சொல்லுவிட்டு மெதுவாக வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தவளின் கால்கள் கனக்கத் தொடங்கின. இதயத்தில் ஏற்றிவைத்த சுமையின் கனம் தான் கால்களைத் தாக்குகிறதோ என்று எண்ணியபடியே மாடிப்படி ஏறினாள் துளசி.

அவர்களின் அறைக்குள் நுழைந்தவளின் பார்வை, தான் இங்கிருந்து வெளியேறியபோது அமர்ந்திருந்த அதே கோலத்தில் இப்போதும் அமர்ந்திருந்த கிருஷ்ணாவின் மீது ஒரு விதக் குற்றவுணர்ச்சியுடன் படிந்தது.

இந்த நிமிடம் அவனது ‘பிரின்சஸ்’ என்ற வார்த்தைக்காக அவள் மனம் ஏங்க ஆரம்பித்தது. ஆனால் அதற்குரியவனோ இடிந்து போயல்லவா அமர்ந்திருந்தான்!

துளசி கலங்கிய கண்களுடன் அவன் அருகில் சென்றவள் அவனுக்கு முன்பு முழந்தாளிட்டாள். தன் கைகளால் அவன் முகத்தை ஏந்திக் கொண்டவளைப் பார்த்து திடுக்கிட்டான் கிருஷ்ணா. பின்னர் சமாளித்துக் கொண்டவன் எதுவும் பேசாமல் தன்னெதிரே கலங்கியக் கண்களுடன் இருப்பவளைக் கண்டதும் ஒரு கணம் அவனும் கலங்கிப்போனான்.

துளசி அவனது முகபாவத்தைக் கவனித்தபடியே “கிரிஷ்! நான் பேசுனது எல்லாமே தப்பு தான்… என்னை மன்னிச்சுடுனு உன் கிட்டக் கேக்க எனக்குத் தகுதி இருக்கானு தெரியலை… அப்பிடி கேக்க எனக்கு தைரியமும் இல்லை கிரிஷ்…. எனக்கு உன்னைப் பத்தியும் ஏஞ்சலினாவைப் பத்தியும்……” என்று அவள் பேசும் போதே விருட்டென்று எழுந்து கொண்டான் கிருஷ்ணா, அவனது முகத்தைப் பற்றியிருந்த துளசியின் கரத்தைத் தட்டிவிட்டவாறு.

துளசிக்கு அவனது இச்செய்கை அழுகையை வரவழைத்தாலும் இத்தனை நாட்கள் தான் செய்யாததையா அவன் செய்துவிட்டான் என்று எண்ணித் தன்னைத் தேற்றிக் கொண்டபடி அவளும் எழுந்தாள்.

மெதுவாக அவனது கரத்தைப் பற்றியவள் “கிரிஷ்… ஏஞ்சலினாவைப் பத்தி….” என்று ஆரம்பிக்கவும் கிருஷ்ணா அவளது கைகளை உதறியவன்

“இன்னொரு தடவை நீ ஏஞ்சலினாவைப் பத்தி பேசாம இருந்தா நல்லா இருக்கும் துளசி… நான் முன்னாடியே சொல்லிட்டேன் என்னோட அமெரிக்கா லைஃப் பத்தி நான் யாருக்கும் விளக்கம் குடுக்கப் போறதில்லனு… என்னால இனியும் நான் ஒழுக்கமானவன் தான்னு நிரூபிக்க முடியாது துளசி

காதல்ல நம்பிக்கை அவசியம் துளசி… அது இல்லாத காதல் இருக்கிறதும் ஒன்னு தான், இல்லாமப் போறதும் ஒன்னு தான்… என்னைக்காவது ஒரு நாள் உனக்கு என் மேல நம்பிக்கை வரும்னு காத்திருந்தேன்… ஆனா அந்த நாள் என் வாழ்க்கையில வரவே வராதுனு உன் வார்த்தை எனக்குப் புரிய வச்சிடுச்சு துளசி… இனிமே நான் உன் கிட்ட எந்த உரிமையும் எடுத்துக்கப் போறதில்லை… எந்த உறவையும் எதிர்பார்க்கப் போறதுமில்லை… இதுக்கு மேலே நம்ம ரெண்டு பேரும் இந்த டாபிக்கைப் பேசாம இருக்க ட்ரை பண்ணுவோம்” என்று அழுத்தமானக் குரலில் கிட்டத்தட்ட கட்டளை போல கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான்.

துளசி அவன் சொல்லிவிட்டுச் சென்ற வார்த்தைகளைக் கேட்டதும் நொறுங்கிப் போய்விட்டாள். எல்லையற்றக் காதலுடன் இத்தனை நாட்கள் அவன் அவளைச் சுற்றி சுற்று வந்த போது அவளது வெறுப்பு தோய்ந்த வார்த்தைகளை அம்பாய் வீசி வதைத்ததன் பலனை இப்போது அனுபவித்தவாறு கண்ணில் நீர் வழிய நின்றிருந்தாள் துளசி.

கிருஷ்ணாவின் காதலை மட்டுமே பார்த்துப் பழகிப்போனவளுக்கு அவனது இந்தச் சின்ன உதாசீனமே பெரும் இடியாக இருந்தது. இனி வரும் காலங்களில் அவனது கோபத்தை எவ்வாறு தாங்கப் போகிறாள் இவள் என்று எண்ணியபடி விதி தனது சதுரங்க ஆட்டத்தை சுவாரசியமாக விளையாட ஆரம்பித்தது.

**********

இன்னும் சாரதாவின் முகம் தெளியவில்லை. மனைவியின் எண்ணப்போக்கை உணர்ந்தவராக விஜயேந்திரன் அவரைச் சமாதானம் செய்ய விழைந்தார்.

“சாரும்மா! நீ இப்போ வருத்தப்படுறதால எதுவும் மாறப்போகுதா? தேவை இல்லாம உன்னைக் கஷ்டப்படுத்திக்காதே… பழைய கதையையே நினைச்சிட்டிருந்தா நிகழ்காலம் நரகமா போயிடும்னு நீ தானே சஹானாவுக்கு அட்வைஸ் பண்ணுவ… இப்போ நீயே இப்பிடி கலங்கிப் போய் உக்காந்தா என்ன அர்த்தம்?”

“இல்லைங்க! துளசியை இங்கே விட்டுட்டுப் போனப்போ மீராண்ணி என்ன சொன்னாங்கனு நியாபகம் இருக்கா? அவளுக்கு இன்னும் ஒரு குடும்பத்தை நிர்வகிக்கிற பொறுப்பு வரலைனு சொன்னாங்க… ஒரு சின்னப்பொண்ணு நாலு பேருக்கு சேலரி குடுத்து ஒரு பொட்டிக்கையும் லாபகரமா நடத்திக்கிட்டே குழந்தையை இத்தனை வருசமா தனியா வளர்த்திருக்கா… ரெண்டையும் அவளால பேலன்ஸ் பண்ண முடிஞ்சிருக்கே விஜய்…

என்னால ஏன் முடியலை? என்னால ஏன் சஹானாவையும் கிருஷ்ணாவையும் ஒரே நேரத்துல கவனிச்சுக்க முடியாம போச்சு? கிருஷ்ணாவுக்கு அம்மா இல்லாத குறை தெரிஞ்சுடக் கூடாதேனு யோசிச்ச நான் சஹானாவை எப்பிடி மறந்து போனேன்? இது எல்லாத்துக்கும் மேலே அவளுக்கு அளவுக்கதிகமா சுதந்திரத்தைக் குடுத்துட்டு அம்போனு விட்டது தான் என்னோட தப்புங்க”

“சாரும்மா இப்போவும் நீ தப்பா தான் யோசிக்கிற… குழந்தைங்க ஆணோ, பொண்ணோ அவங்களுக்கு நம்ம சுதந்திரம் குடுக்கிறது தப்பே இல்லை… ஆனா அந்தச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி அவங்க பண்ணுற காரியங்களை நல்லதா கெட்டதானு எடுத்துச் சொல்லுற கடமை நமக்கு இருக்கு…. அந்தக் கடமையை நீ மட்டுமில்ல, நானும் தான் செய்யத் தவறிட்டேன்… அதனால நீ எல்லாத் தப்பையும் உன் தலை மேலே போட்டுக்காத…. கிருஷ்ணாவை சஹானா எடுத்தெறிஞ்சு பேசுறப்போவே நம்ம கண்டிக்க தவறுனது, அவ வெஸ்டர்ன் கல்சர்ல மூழ்கிப் போறதை பார்த்துட்டும் அவளுக்கு எடுத்துச் சொல்லி புரியவைக்காம விட்டதுனு நம்ம மேலே குற்றங்கள் அதிகம்…

நம்ம செய்யத் தவறுனதை துளசி கரெக்டா செய்யுறா… அதை நினைச்சுச் சந்தோசப்படுவோம்… நம்ம பேத்தி கண்டிப்பா பிடிவாதம், தலைக்கனம் இல்லாம ஒரு தைரியமானப் பொண்ணா வளருவா.. சஹானாவுக்குச் சொல்லிக் குடுக்க முடியாத நல்லப்பழக்கங்களை நீ நம்ம பேத்திக்குச் சொல்லிக்குடு… நம்மளால இனிமே செய்ய முடிஞ்சது அது மட்டும் தான் சாரு… கண்ணைத் துடைச்சுக்கோ” என்று எடுத்துச் சொல்லி மனைவியின் முகத்தில் தெம்பு வந்தபிறகு தான் விஜயேந்திரனுக்குப் போன நிம்மதி திரும்பி வந்தது.

மனைவியைத் தேற்றிவிட்டு அவரும் ஒரு பக்கம் தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டார்.

அதே நேரம் கிருஷ்ணா துளசியிடம் பேசிவிட்டு வெளியேறியவன் மகளின் அறையை அடைந்தான். அங்கே ராகவேந்திரனுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த மித்ராவைக் கண்டதும் அவன் உள்ளத்தில் இருந்த கோபாக்கினி சற்று குறைந்தாற்போன்று இருந்தது.

வாயிலில் நிழலாடியதைக் கண்டதும் தாத்தாவிடமிருந்து கவனத்தைத் திருப்பிய மித்ரா கிருஷ்ணாவைக் கண்டதும் “அப்பா! இங்கே வாங்க… நான் தாத்தாவுக்கு மோட்டு பட்லு கதை சொல்லிட்டிருக்கேன்… தாத்தா இது வரைக்கும் அதை பார்த்ததே இல்லையாம்” என்று அழைக்கவும் உணர்வடைந்த கிருஷ்ணா புன்னகையுடன் மகளிடம் சென்றான்.

மகளின் கூந்தலை வருடியபடி அவள் அருகில் அமர்ந்தவன் “மித்தி தாத்தாவுக்கு வயசு ஆயிடுச்சுல்ல… அதான் மோட்டு பட்லு பத்தி தெரியலை… வயசானவங்களுக்கு இப்பிடி தான் நிறைய விஷயங்கள் தெரியாம இருக்கும்…. அப்போ நம்ம என்ன பண்ணனும்?” என்று கேட்டுவிட்டு மித்ராவை நோக்க

அவள் “என்னப்பா பண்ணனும்?” என்று தன் கோலிக்குண்டு கண்களை உருட்டியபடி கேட்க

“அவங்களுக்கு தெரியாத விஷயங்களை நம்ம சொல்லிக் குடுக்கணும்… இப்போ தாத்தாவுக்கு நீ மோட்டு பட்லு கதையை சொல்லுறல்ல, இதே மாதிரி” என்று உரைக்கவும் மித்ரா புரிந்ததென்று தலையாட்டினாள்.

“சப்போஸ் உனக்கு தெரியாத விஷயங்களைப் பெரியவங்க எடுத்துச் சொன்னா நீ என்ன பண்ணனும் தெரியுமா? அடம் பிடிக்காம அவங்க சொல்லுறதை கேட்டுக்கணும்… அதை விட்டுட்டு கோவப்படக் கூடாது… பெரியவங்களை ஹர்ட் பண்ணக் கூடாது… சரியா?” என்று மகளுக்குப் புரியும் படி விளக்கியவன் ராகவேந்திரனைப் பார்க்க, அவரோ என் கண் முன்னே பிறந்து வளர்ந்தவன் எவ்வளவு அழகாக அவனது மகளுக்கு அறிவுரை கூறுகிறான் என்ற வியப்பு.

சென்ற மாதம் வரை கூட அவனை மனமுதிர்ச்சி இல்லாதவன் என்றே எண்ணியிருந்தவருக்கு மகனின் தெளிவான இந்த அறிவுரை ஒரு விஷயத்தைப் புரியவைத்துவிட்டது. ஒரு மனிதன் எல்லா காலங்களிலும் ஒரே மாதிரி குணாதிசயங்களுடன் இருப்பதில்லை. அனைத்தையும் காலமும், அவனைச் சுற்றியுள்ள சூழ்நிலையுமே தீர்மானிக்கிறது என்று எண்ணி மகனை மனதிற்குள் மெச்சிக் கொண்டார் அந்த தந்தை.

அதன் பின்னர் மகனுடன் சேர்ந்து பேத்தியுடன் அவள் கூறும் கதைகளைக் கேட்கத் தொடங்கினார் ராகவேந்திரன். மித்ராவும் குழந்தை தானே… என்ன தான் துளசியின் கண்டிப்பில் பயந்திருந்தாலும் வெகு சீக்கிரத்தில் சாதாரண மனநிலைக்கு வந்துவிட்டாள்.

உற்சாகமாக அப்பாவுடனும் தந்தையுடனும் கதை பேசிக்கொண்டிருந்தவள் சிறிது நேரத்தில் கண்ணம்மா “மித்தி பாப்பா உனக்கு சாயங்காலம் இடியாப்பம் செஞ்சு தரவா?” என்று கேட்டபடி அவளது அறைக்கு வரவும்

தனக்குப் பிடித்ததைச் செய்து தரப் போகிறார்கள் என்று ஆவலுடன் “ஓகே கண்ணா பாட்டி… எனக்குத் தேங்காய்ப்பாலும் வேணும்… அம்முக்கும் இது ரொம்ப பிடிக்கும்… நான் போய் அம்மு கிட்ட சொல்லிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு மாடியை நோக்கி ஓடியவளைப் பார்த்து புன்னகைத்தார் கண்ணம்மா.

அவரைக் கண்டதும் எழுந்த கிருஷ்ணா “கண்ணம்மா மித்தி செஞ்சதுக்கு ரொம்ப சாரி” என்று மெதுவாக மன்னிப்பு வேண்ட

கண்ணம்மாவோ “ஐயோ கிருஷ்ணா தம்பி நீங்களுமா? ஏற்கெனவே துளசிம்மா ரெண்டு தடவை கேட்டுட்டாங்க… மித்தி பாப்பா கூட அதை மறந்துட்டு சகஜமாயிட்டா… நீங்களும் மறந்துடுங்க… இதுல்லாம் பெரிய விஷயமே இல்லை” என்று சொல்லிவிட்டு சமையலறையை நோக்கிச் சென்றுவிட்டார். வீட்டின் சின்ன எஜமானி சொன்ன இடியாப்பம் தேங்காய்ப்பாலைச் செய்வதற்கு அவருக்கு அவ்வளவு அவசரம்.

கிருஷ்ணா துளசியிடம் பேசப் போகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்ற மித்ரா இன்னும் திரும்பாதிருக்கவே தந்தையிடம் “டாட்! மித்தி இன்னும் வரலையே! நான் போய் பார்த்துட்டு வரட்டுமா?” என்று எழும்ப

ராகவேந்திரன் மகனைப் பார்த்தவர் கேலியாக “சரிடா கிளம்பு… மித்தியோட அம்மாவும் அங்கே தானே இருக்கா… நானும் இதே மாதிரி சவிம்மா கிட்ட சண்டை போட்டுட்டு உன்னைச் சாக்கா வச்சு தான் சமாதானத்துக்குப் போவேன்…. அப்பாவுக்குத் தப்பாத பிள்ளைடா நீ” என்று சொல்ல, கிருஷ்ணா ஓர் சமாளிப்புப் புன்னகையைச் சிந்திவிட்டு அங்கிருந்து அகன்றான்.

மாடிப்படி ஏறும் போதே துளசி ஏதோ சொல்லுவதும், அதற்கு மித்ரா கிண்கிணி நாதமாய்ச் சிரிப்பதும் கேட்கவே அம்மாவுக்கும் மகளுக்கும் எல்லாம் சரியாகி விட்டது போல என்று எண்ணியபடி அறைக்குள் நுழைந்தான்.

அங்கே துளசியின் மடியில் அமர்ந்திருக்கும் மகளிடம் மட்டும் பார்வையைப் பதித்தவன் துளசியை ஏறிட்டும் பார்த்தானில்லை. அவளைப் பார்த்தால் எங்கே அவள் உதிர்த்த வார்த்தைகள் மீண்டும் நினைவுக்கு வந்து தானும் அவளைப் போலவே வார்த்தைகளால் காயப்படுத்தத் தொடங்கிவிடுவோமோ என்ற அச்சம் தான் அதற்கு காரணம்.

இதே மனநிலை தான் மாலை வரைக்கும் நீடித்தது. கண்ணம்மா இடியாப்பம் செய்துவிட்டு அனைவரையும் மாலை சிற்றுண்டிக்கு அழைக்கவும் குடும்பத்தினர் அனைவரும் தெளிந்த முகத்துடன் தோட்டத்தில் ஒன்று கூடினர். பெரியவர்கள் கலக்கம் தீர்ந்து நிதானமான முகத்துடன் அமர்ந்திருக்க, இளையவர்கள் மனதின் போராட்டத்தை மறைத்துக் கொண்டு புன்னகை முகமாய் உரையாடினர்.

துளசியும் மித்ராவும் பழையபடி சிரித்துப் பேசுவதைக் கண்டதும் அனைவருக்கும் பிணக்குகள் எல்லாம் தீர்ந்து மகிழ்ச்சி திரும்ப வந்துவிட்டதென்ற மனநிறைவு. அதே மனநிறைவுடன் கலகலப்பான உரையாடல்களுடன் அந்த வீட்டின் சந்தோசமான சூழ்நிலை மீண்டும் திரும்பி வந்தது.

சஹானா துளசியிடம் அமர்ந்திருந்தவள் மற்றவர் அறியாவண்ணம் “இஸ் எவ்ரிதிங்க் இஸ் ஓகே துளசி?” என்று நமநமவென்ற குரலில் கேட்க

துளசி “எல்லாமே நார்மல் ஆயிடுச்சு சஹானா… நீங்க ஒரி பண்ணிக்காதிங்க” என்று நம்பிக்கையுடன் உரைத்தாள்.

துளசியின் குரலிலிருந்த நம்பிக்கை சஹானாவின் முகத்தையும் குரலையும் தெளியவைக்கவே அவளும் இனி அண்ணன் வாழ்வில் குழப்பம் ஏதும் நிகழாது என்று எண்ணி நிம்மதியடைந்தாள்.   

துளசியோ இத்தனை வருடங்கள் காரணமின்றி தன் வெறுப்பை மட்டுமே சுமந்த கிருஷ்ணாவுக்கு, இனி தனது கரை காணாத காதலும், அளவற்ற அன்பும், முழு நம்பிக்கையும் மட்டும் தான் அவனது மனதில் உள்ள வருத்தத்தைப் போக்கவல்லது என்று எண்ணினாள். இம்மூன்றுக்கும் இனி கிருஷ்ணா மட்டுமே சொந்தக்காரன் என்று மனதிற்குள் நினைத்த அந்நொடியில், மித்ராவை மடியிலமர்த்திக் கொண்டு அவளுக்கு உணவை ஸ்பூனால் ஊட்டிக்கொண்டிருந்த கணவனே அவள் கண்ணிலும் மனதிலும் நிறைந்து போனான்.