🌞 மதி 23 🌛

இடையிலிங்கத்தினருக்கும் திருனர்களுக்கும் வித்தியாசம் உள்ளது. இடையிலிங்கத்தினர் பாலினத்தைத் தீர்மானிக்கும் X மற்றும் Y குரோமோசோம்களின் மாறுபாட்டால் பிறப்பிலேயே தெளிவற்ற உடல்கூறுடன் பிறக்கின்றனர். ஆனால் திருநங்கைகள் தம்மைப் பெண்ணாக உணர்ந்தாலும் அவர்கள் உடல்கூறுபடி XY குரோமோசோம் கொண்ட ஆண் தான். அதே போல திருநம்பிகள் தம்மை ஆணாக உணர்ந்தாலும் அவர்கள் XX குரோமோசோம் கொண்ட பெண் தான் – (கோபிஷங்கர் ஸ்ருஷ்டி அமைப்பு, Kim Zayhowski – Stanford University)

சஞ்சீவினி மீண்டும் தாமோதரனை அழைத்து அவளது நிலையை எடுத்துச் சொல்லலாம் என்று எண்ணியிருக்கும் தருணத்தில் தான் அன்றைக்கு இஷானியை நிராதரவாகத் தவிக்கவிட்டுச் சென்றவரின் கார் விபத்துக்குள்ளானதும் அவர் குடும்பத்துடன் இறந்ததும் சஞ்சீவினிக்குத் தெரியவந்தது.

தாய் தந்தையருடன் இஷானியைப் பற்றி பேசியவர் அஸ்மிதாவோடு அவளும் தனது மகளாக இருப்பதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கேட்டுத் தெளிவுபடுத்திக் கொண்டார். அன்றைய தினமே அஸ்மிதாவிடம்

“அஸ்மி! நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற பொண்ணு உன்னோட சிஸ்டர்… அவளோட நேம் இஷானி… இனிமே அவ நம்மளோட தான் இருக்கப்போறா… உனக்கு அவளைப் பிடிச்சிருக்கா?” என்று கேட்க

“பிடிச்சிருக்குமா… அவ பார்க்கிறதுக்கு டால் மாதிரி கியூட்டா இருக்கா… ஆனா என்னைப் பார்த்ததும் பயப்படுறாளா, சோ எனக்கு எரிச்சலா வருது” என்று முகத்தைச் சுளித்தாள் அஸ்மிதா.

சஞ்சீவினி மகளை மடியிலமர்த்திக் கொண்டவர் “அவ ரொம்ப பயந்து போயிருக்கா அஸ்மி…. அதான் அப்பிடி ரியாக்ட் பண்ணுறா… நீ அவளோட சாதாரணமா பழகுனா அவளும் குட் கேர்ளா உன் கூட விளையாட வந்துருவா” என்று சொல்ல அதன் பின்னர் அஸ்மிதா அடிக்கடி இஷானியின் அறைக்குச் செல்வாள்.

ஆனால் இஷானி அவளிடம் பேச்சு கொடுக்காமல் அலமேலுவைக் கட்டிக்கொண்டு அமர்ந்தபடி அவர் சொன்ன கதைகளைக் கேட்பது, அவரிடம் மெதுவானக் குரலில் இரண்டு வார்த்தைகள் பேசுவதோடு நிறுத்திக் கொண்டாள். அஸ்மிதாவும் அன்னையின் வார்த்தைகளை மதித்து இஷானியிடம் கோபப்படாமல் அவளை ஓர் ஆராய்ச்சிப்பார்வையுடன் கடக்கப் பழகிவிட்டாள்.

ஒரு நாள் வெளியே சத்தம் கேட்கவும் எட்டிப்பார்த்த இஷானி தோட்டத்தில் அஸ்மிதா சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடுவதை ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தாள். அஸ்மிதாவின் பார்வை அவளை நோக்கித் திரும்பவும் தப்பு செய்தவளைப் போல அவள் மிரள அஸ்மிதா அந்தச் சிறுவர்களிடம் ஏதோ சொல்லிவிட்டு வராண்டா நோக்கி வந்தாள்.

இஷானி பயத்துடன் அவளைப் பார்க்க அஸ்மிதாவோ கிரிக்கெட் மட்டையை கதாயுதம் போலத் தோளில் தாங்கியபடி “நீ ஏன் ஒளிஞ்சிருந்து பார்க்குற? உனக்கு விளையாட ஆசையா இருக்கா? என் கூட வர்றியா?” என்று கேட்க

இஷானி மிரட்சியுடன் “நீ என் மேல பந்தைத் தூக்கி எறிய மாட்டல்ல?” என்று சதீசின் நினைவோடு பதிலுக்குக் கேட்டாள்.

அஸ்மிதா அவளை வினோதமாக நோக்கியவள் “சேச்சே! எனக்கு எப்போவுமே பவுலிங்ல இண்ட்ரெஸ்ட் இல்ல… ஒன்லி பேட்டிங் மட்டும் தான்… நீயும் வர்றியா? நான் சொல்லித் தர்றேன்” என்று பெரியமனதுடன் அவளை அழைத்தாள்.

இஷானியும் தயக்கத்துடன் அவளுடன் சென்றவள் முதலில் நாலைந்து பந்துகளைத் தவறவிட்டாலும் பின்னர் விளையாட்டின் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டவளாய் அருமையாய் விளையாட ஆரம்பித்தாள்.

விளையாட்டு முடிந்ததும் சிறுவர்கள் அஸ்மிதாவிடம் “இது யாரு அஸ்மி?” என்று கேட்க

அவள் இஷானியின் தோளில் கை போட்டபடி “இவ என்னோட சிஸ்டர்… நேம் இஷானி… இனிமே எங்க வீட்டுல தான் இருக்கப் போறா” என்று அறிமுகப்படுத்தி வைத்ததும் இஷானிக்குக் கண்ணில் நீர் பெருகத் தொடங்கியது.

இது வரை அவளது தம்பி கூட அவளை விளையாடும் போது உடன் சேர்த்துக் கொண்டதில்லை. அந்தக் கணமே அவளுக்கு அஸ்மிதாவை மிகவும் பிடித்துப் போனது. இருவருக்கும் வயது வித்தியாசம் வேறு இல்லாமல் போய்விட சீக்கிரமே அவர்கள் ஒருவருக்கொருவர் “இஷி, அஸ்மி” ஆகிவிட்டனர்.

அதே நேரம் தாமோதரன் இஷானியுடன் சேர்த்து சாலையோரத்தில் வீசிய பேக்கிலிருந்து அவளது மருத்துவ அறிக்கைகள் சஞ்சீவினியின் கையில் சிக்கியது. அதைப் பார்த்தவர் இஷானியிடம் கூறாமல் தனக்குத் தெரிந்த மருத்துவரிடம் அதைக் காட்டி விளக்கம் கேட்டவர் மருத்துவர் சொன்னத் தகவலில் யோசனைக்கு உள்ளானார்.

“சஞ்சீவினி மேடம்! அந்தப் பொண்ணு இண்டர்செக்ஸ் தான்.. அதுல எந்தச் சந்தேகமும் இல்ல… ஆனா இந்த ரிப்போர்ட் படி அவளுக்கு யூட்ரெஸ் இருக்கு… இவளோட குரோமோசோம் கண்டிசனை 46 XY அதாவது ஸ்வயர் சிண்ட்ரோம்னு (SWYER SYNDROME) சொல்லுவோம்… இதைக் கொனாடல் டிஜெனிசிஸ்னும் (GONADAL DYSGENESIS) சொல்லலாம்.

இப்படிப்பட்டவங்க குழப்பமான ஜெனிட்டலோட பிறப்பாங்க… ஆனா பிறந்து கொஞ்சநேரத்துலயே செக்ஸ் செலக்டிவ் சர்ஜெரி பண்ணிடுவாங்க… அதனால வெளியே தெரியவர்றது இல்ல.. இன்னும் சில குழந்தைகளுக்கு வளர்ந்தா தான் அவங்க இண்டர்செக்ஸ்ங்கிறதே புரியவரும்… இன்னும் சிலர் தெரியாமலே தங்களை ஆணாவோ பெண்ணாவோ இயல்பான வாழ்க்கையை வாழுவாங்க… ஆனா இந்த செக்ஸ் செலக்டிவ் சர்ஜெரி பண்ணுறது குழந்தையோட வருங்காலத்தை ரொம்பவே பாதிக்கும் மேடம்” என்று சொல்ல சஞ்சீவினிக்கு அது எப்படி பாதிக்கும் என்ற கேள்வி எழாமல் இல்லை.

மருத்துவர் “ஒரு இண்டர்செக்ஸ் குழந்தைக்கு நீங்க செக்ஸ் செலக்டிவ் சர்ஜெரி பண்ணி ஆண்னு சொல்லுறிங்கனு வச்சுப்போம், வருங்காலத்துல வளர்ந்ததுக்கு அப்புறம் அந்த நபர் தன்னை பெண்ணை உணர்ந்தா என்ன பண்ணுறது? இதனால அவங்களுக்கு மனவேதனையும் வெறுப்பும் தான் மிஞ்சும்” என்று அந்த அறுவைச்சிகிச்சையின் பாதகத்தையும் விளக்கினார்.

“இப்போ இஷானி மத்தப் பொண்ணுங்களை மாதிரி மாற முடியாதா டாக்டர்?

“ஏன் அவளை மாத்தணும்னு நினைக்கிறிங்க மேடம்? அவ அப்படியே இருக்கட்டும்… அவளோட கொனாட்ஸ் சரியா இயங்காது… சோ அவளுக்கு ஈஸ்ட்ரோஜென் அண்ட் புரோஜெஸ்ட்ரான் லெவல் சரியா இருக்காது… அதோட கருமுட்டை உற்பத்தியும் சரியான மாதிரி இருக்காது… இதனால தான் அந்தப் பொண்ணு பியூபர்டி அட்டெண்ட் பண்ணுறது டிலே ஆகுது… அவளுக்கு ஹார்மோன் தெரபி கட்டாயம் தேவை… அது குடுத்தா மட்டும் தான் அவளால பியூபர்டி அட்டெண்ட் பண்ண முடியும், வருங்காலத்துல குழந்தை பெத்துக்க கருமுட்டையும் டெவலப் ஆகும்… இல்லைனா ரொம்ப கஷ்டம் மேடம்” என்று இஷானியின் உடல்கூறை விளக்கிவிட சஞ்சீவினி மறுயோசனை ஏதுமின்றி இஷானிக்கு ஹார்மோன் தெரபி அளிக்க முடிவு செய்தார்.

வீட்டில் அனைவரிடமும் சொல்லிவிட்டு இஷானியிடமும் அவளது உடல் நலம் பெற இதைச் செய்யப் போவதாகக் கூற அவள் “ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டு வந்ததுக்கு அப்புறமா நீங்க என்னைத் திட்ட மாட்டிங்கல்ல” என்று கேட்க

“ஏன்டா அப்பிடி கேக்கிற? நான் ஏன் உன்னைத் திட்டப் போறேன்?” என்று புரியாமல் வினவினார் சஞ்சீவினி.

“அப்பா ஒவ்வொரு தடவை ஹாஸ்பிட்டலுக்குப் போயிட்டு வர்றப்போவும் என்னைத் திட்டுவாங்கம்மா… அப்புறம் அடிக்கவும் செய்வாங்க…  நீங்களும் என்னைத் திட்டுவிங்களா?” என்று கேட்டவளின் குரலில் சஞ்சீவினிக்கு அழுகை வந்துவிட்டது.

அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டவர் “இல்லடா! நான் உன்னைத் திட்டவோ அடிக்கவோ மாட்டேன்.. இது ஒரு சின்ன டிரீட்மெண்ட் தான்… நீ பயப்படாத” என்று அவளுக்கு ஆறுதல் கூறினார்.

முறையான அன்பும் அரவணைப்பும் இருந்திருந்தாலே இஷானி தன்னையும் மற்றவர்களைப் போல எண்ணத் தொடங்கியிருப்பாள். ஆனால் தாமோதரனின் பிற்போக்குத்தனமான சிந்தனை ஒரு குழந்தையின் இயல்பான உடல்கூறில் மரபியல் ரீதியாக உண்டான சின்ன வித்தியாசத்தை ஏற்றுக் கொள்ளாததால் அன்று அந்த பன்னிரண்டு வயது சிறுமிக்குத் தன்னைப் பற்றிய தாழ்வுமனப்பான்மையும் மன அதிர்ச்சியும் ஒரு சேர உண்டாகிவிட்டது.

சஞ்சீவினி இதைப் புரிந்து கொண்டவராய் முறைப்படி அவளுக்கு ஹார்மோன் தெரபி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். அதே நேரம் அவளும் அஸ்மிதாவும் தனக்கு வேறு வேறு இல்லை என்பதை அவரது அன்பினால் இஷானிக்குப் புரியவைக்க வெகு சீக்கிரத்தில் இஷானியும் தனது பன்னிரண்டு வருடக் கடந்தகாலத்தை மறந்துவிட்டு சஞ்சீவினியின் இன்னொரு மகளாகவே மாறத் தொடங்கினாள்.

அஸ்மிதாவைச் சொந்தச் சகோதரியாகவே பாவித்தவள் அலமேலு மற்றும் ராஜகோபாலனை தனது உயிரினும் மேலானவர்களாக எண்ணி அன்பு காட்டத் தொடங்கினாள். அவளுக்குப் பிடித்ததைச் செய்ய சஞ்சீவினி என்றுமே தடை சொன்னதில்லை. இவ்வாறிருக்க ஹார்மோன் தெரபியின் பலனாக அவளது பதினெட்டாவது வயதில் பூப்பெய்தினாள் இஷானி.

அதன் பின்னரும் அவ்வபோது அவளுக்குச் சிறு சிறு குழப்பங்கள் வந்து செல்லும். ஆனால் செழியனின் உளவியல் ஆலோசனைகள் அவற்றைத் தவிடுபொடியாக்கி இஷானியை மற்றவர்களைப் போல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பச் செய்துவிடும்.

அப்படியிருந்தவளுக்கு அந்த வீடியோவைப் பார்த்ததும் அவளது இளம்பருவம் நியாபகத்துக்கு வந்ததால் தான் இவ்வளவு கலவரங்களும் நடந்தேறியது.

இவ்வளவையும் சஞ்சீவினியின் வாயிலாகக் கேட்ட ருத்ராவுக்கு இஷானியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் எவ்வளவு துயரமானவை என்று புரிந்தது. இவ்வளவுக்கும் மேலாக அவள் இயல்பான அழகான வாழ்க்கையை இந்தக் குடும்பத்தினருடன் வாழ்கின்றாள் என்றால் அவளது மனோதைரியம் தான் அதற்கு காரணம் என்று எண்ணியவனுக்கு இப்போதும் அவள் மீதிருந்த நேசத்தில் எவ்வித மாற்றமுமில்லை.

அதை யோசித்தபடி சஞ்சீவினியை நோக்கியவன் “சஞ்சுக்கா! இஷியோட வாழ்க்கையில இவ்ளோ விஷயம் நடந்திருக்கு… ஆனா எனக்கு அது எதைப் பத்தியும் கவலை இல்ல… நான் இஷானிங்கிறவளை மனசாற விரும்புறேன்கா… அவளோட ஒவ்வொரு செய்கையிலயும் எனக்கு என்னோட அம்மாவைப் பார்க்கிற மாதிரியே இருக்கு… என்னால அவளை மிஸ் பண்ண முடியாதுக்கா” என்று உறுதியுடன் கூற சஞ்சீவினிக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை.

“இதுல அவளோட விருப்பமும் முக்கியம் ருத்ரா… அவ விருப்பத்துக்கு மாறா நான் எதையும் இஷி மேல திணிக்க மாட்டேன்… உனக்கு அவளைப் பிடிச்சிருக்கிற மாதிரி அவளுக்கும் உன்னைப் பிடிச்சிருந்தா உங்க ரெண்டு பேரை விட நான் தான் அதிகமா சந்தோசப்படுவேன் தெரியுமா?” என்று சொல்லவும்

ருத்ரா அவரது கைகளைப் பற்றிக்கொண்டவன் “கண்டிப்பா அவளுக்கு என்னைப் பிடிக்கும்கா… பிகாஸ் உன் வீட்டுப்பூனைக்குட்டி என் கிட்ட மட்டும் தான் அளவுக்கதிகமா சீறுது… அதை வச்சு சொல்லுறேன்” என்று சஞ்சீவினியின் வருத்தத்தைப் போக்கி அவரை இயல்பாக மாற்ற முயற்சித்தான்.

அவனது முயற்சியின் பலனாக ஒரு மெல்லியப் புன்னகை சஞ்சீவினியின் இதழ்களில் ஓட “சரிடா வாலு! போய் தூங்கு.. எதுவா இருந்தாலும் காலையில பேசிக்கலாம்… அஜ்ஜூ வேற தனியா தூங்குவான்” என்று சொல்லவும் ருத்ரா அவனது அறைக்குச் செல்ல அவரும் தனது அறையை நோக்கி நடைபோட்டார்.

அன்றைய இரவு கடந்தகாலத்தின் சுவடுகளை அந்த வீட்டில் பதித்துவிட்டு அனைவரின் நித்திரையையும் பறித்துக் கொண்டது. விடியற்காலையில் அந்தச் சுவடுகளை அழித்த நித்திராதேவி மீண்டும் அனைவரையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வந்ததன் விளைவு எப்போதும் காலை ஆறு மணிக்குள் அந்த வீட்டில் கேட்கும் இஷானியின் தேவாரப்பாடல் அன்றைக்கு ஒலிக்கவில்லை. நடனப்பயிற்சிக்கு வந்த குழந்தைகளைக் காவலாளி அவர்களின் ஆசிரியைக்கு உடல்நலமில்லை என்று காரணம் சொல்லித் திருப்பி அனுப்பிவைத்தார்.

ஏழு மணிக்கு தான் அந்த வீட்டில் பொழுதே விடிந்தது அன்றைய தினம். கண்ணம்மாவின் காபி மணம் அனைவரையும் எழுப்பிவிட ஒருவர் பின் ஒருவராக எழுந்து கொண்டனர். இஷானி அவளுக்குப் போட்ட ஊசியின் விளைவால் இன்னும் துயில் கலையவில்லை. அஸ்மிதா ஒரு முறை அவளது அறைக்குச் சென்று பார்க்கலாம் என்று காலடி எடுத்து வைத்தவள் அறையில் கண்ட காட்சியில் வாயைப் பிளந்தபடி நின்றாள்.

அங்கே இஷானி திருதிருவென்று விழித்துக் கொண்டிருக்க அவளை உதட்டின் மீது கை வைத்து பேசாதே என்று கண்ணால் கட்டளையிட்டுக் கொண்டிருந்தான் ருத்ரா.

அஸ்மிதாவுக்கு அதற்கான காரணம் புரியவில்லை. ஆனால் அவளது ருத்ரா மாமா மற்ற ஆண்களைப் போல அன்று என்பது மட்டும் அவளுக்கு நன்றாகத் தெரியும். அதோடு சமீபகாலங்களில் இஷானியைத் தழுவும் அவனது ரசனைப்பார்வைகளை இஷானி கவனித்தாளோ இல்லையோ அஸ்மிதா கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு கவனித்தாள். எனவே இதில் மோசமாக நினைப்பதற்கு எதுவுமில்லை என்று எண்ணியவள் குறுஞ்சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்தாள்.

நமட்டுச்சிரிப்புடன் தலையைக் குனிந்தபடி வந்தவள் எதிரே வந்த அலமேலுவின் மீது மோதிக்கொள்ள அந்த முதியப்பெண்மணி தடுமாறி விழப்போகவே அவரைக் கரம் பற்றி நிறுத்திய அஸ்மிதா

“வழியை பார்த்து வர மாட்டியா பாட்டி? உனக்கு என்ன பதினாறு வயசா நடக்குது? உற்சாகமா துள்ளி குதிச்சிட்டு வர்றியே கீழே விழுந்து அடிபட்டுச்சுனா என்ன பண்ணுவ?” என்று படபடக்க

“ஏன்டி சொல்ல மாட்ட? என்னைக்கும் இல்லாத அதிசயமா நீ தலையை குனிஞ்சு வந்தப்போவே சுதாரிக்காம விட்டது என் தப்பு தான்… எதிர்ல யாரு வர்றாங்கனு கவனிக்காம வந்துட்டு வாய் வேற பேசுறியாக்கும்?” என்று நொடித்துக் கொண்டார் அலமேலு.

அஸ்மிதா அதைக் கண்டுகொள்ளாமல் “சரி விடு பாட்டி… உன் பேத்தி தானே நான்… உன்னை மாதிரி தான் இருப்பேன்” என்று சொல்லிவிட்டு அவரது தோளைப் பற்றிச் சாய்ந்து கொண்டபடி யூடர்ன் அடித்து மீண்டும் வந்த வழியே அவருடன் திரும்பிச் செல்ல ஆரம்பித்தாள்.

“நான் இஷியைப் பார்க்க வந்தேன்… நான் இல்லைனா குழந்தை பயந்துடுவா” என்று சொன்னபடி அலமேலு மீண்டும் இஷானியின் அறைப்பக்கம் திரும்ப அவரை வலுக்கட்டாயமாகத் தன் பக்கம் திருப்பினாள் அஸ்மிதா.

“ஐயோ பாட்டி! உனக்கு வயசாயிடுச்சே தவிர விவரமே பத்தலை… இப்போ இஷியோட ரூமுக்குப் போகவேண்டாம்” என்று கேலிச்சிரிப்புடன் சொல்ல

“அட இவ ஒருத்தி! எப்போ பாரு தலையைச் சுத்தி மூக்கைத் தொடுவா… எதுவா இருந்தாலும் சுத்தி வளைக்காம சொல்லு” என்று அதட்டினார் அலமேலு.

“பாட்டி! அங்கே ருத்ரா மாமாவும் இஷியும் பேசிட்டிருக்காங்க… இப்போ நீயோ நானோ அங்கே போனா நல்லாவா இருக்கும்.. இது தெரியாம நான் வேற அங்கே போயிட்டேன்… ஐயோ எனக்கு வெக்கமா இருக்கு பாட்டி” என்று சொல்லி முகத்தை இருகரங்களாலும் மூடிக்கொண்டவளின் பேச்சின் அர்த்தம் இப்போது அலமேலுவுக்குப் புரியவர அவர் இதழிலும் ஒரு குறுஞ்சிரிப்பு மலர்ந்தது. தன் எதிரே முகத்தை மூடியபடி நின்றவளின் தலையில் செல்லமாகக் குட்டியவர் “ரொம்ப நேரம் வெக்கப்பாடாத! இந்தப் பூமி தாங்காதும்மா” என்று சொன்னபடி அஸ்மிதாவுடன் இடத்தைக் காலி செய்தார்.

தண்மதி ஒளிர்வாள்🌛🌛🌛