பூவோ? புயலோ? காதல்! – 28

அத்தியாயம் – 28

மருத்துவமனை படுக்கையில் ஒரு சாய்ந்து படுத்து உறக்கத்தில் ஆழ்ந்திருந்தாள் வேதவர்ணா.

அவளின் ஒரு கையில் குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது.

இன்னொரு கை அவளின் வயிற்றின் பிள்ளையைத் தூக்கத்திலும் உணர்ந்து கொண்டிருந்தது.

அறையில் மெல்லிய வெளிச்சம் மட்டும் கசிந்து கொண்டிருக்க, படுக்கையின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து ஒரு கையால் மனைவியின் தலையை வருடி விட்டுக்கொண்டே, இன்னொரு கையால் கைப்பேசியைப் பிடித்தபடி அமர்ந்திருந்தான் ரித்விக்.

அவனின் கண்கள் கைப்பேசியில் ஒளிர்ந்த எழுத்துக்களை உள்வாங்கி அதை அவனின் மூளையில் பதிய வைத்துக் கொண்டிருந்தன.

கர்ப்பகால மனஅழுத்தத்தைப் பற்றிய விவரங்களை இணையத்தில் தேடித் தேடி படித்துக் கொண்டிருந்தான் ரித்விக்.

தனக்கு ஒரு வாரிசு வரப்போகிறது என்று ஒரு ஆண் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நேரம், பெண் அவனின் வாரிசை நல்லபடியாகச் சுமந்து பெற்று கணவனின் கையில் தரும் வரை அவள் அனுபவிக்கும் பேறுகாலச் சுகமான அவஸ்தைகள் சிலருக்கு கடுமையான அவஸ்தையாகவும் மாறி விடுவதைப் பல கட்டுரைகள் மூலம் படித்துத் தெரிந்து கொண்டான் ரித்விக்.

கணவன், மனைவிக்கான தாம்பத்திய நேரத்தில் ஒரு கர்ப்பிணி பெண், தாம்பத்திய வாழ்க்கையை வெறுக்கவும் செய்யலாம், விரும்பவும் செய்யலாம். ஒருவேளை அந்தப் பெண் தாம்பத்திய வாழ்க்கையை மிகவும் விரும்பி கணவனைச் சரணடைந்தால் அந்தக் கணவன் அவளின் மனநிலையைப் புரிந்து நடந்து கொள்வது அந்தப் பெண்ணின் மனநிலைக்கு நல்லது. அதை விடுத்து அந்த ஆண் மனைவியின் நெருக்கத்தைத் தவறாக நினைத்து விடக்கூடாது என்று ஒரு மருத்துவர் எழுதியிருக்க, ரித்விக்கிற்கு வேதா ஐந்தாமாதமாக இருக்கும் போது, அவளே நெருங்கியதும், பின்னிரவில் தாம்பத்தியத்தை வெறுத்ததும் நினைவில் வந்து போனது.

நல்லவேளையாக அந்த நேரத்தில் தான் வருவை காயப்படுத்தவில்லை என்று தோன்ற சிறிது நிம்மதியாக உணர்ந்தான் ரித்விக்.

இன்னும் சில கட்டுரைகள் படிக்க, அதில் இருந்த சில ஒற்றுமைகள் வேதாவின் நடவடிக்கையோடு ஒத்துப்போனது.

அதிலும் ஒரு கட்டுரை ரித்விக்கை பயமுறுத்தும் வகையில் அமைந்திருந்தது.

மருத்துவர் காயத்ரி வேதாவின் இந்த மனஅழுத்தம் அவளுக்கும், குழந்தைக்கும் பாதிப்பை தரும் என்று மட்டும் சொல்லியிருக்க, அந்தக் கட்டுரையில் எந்த மாதிரியான பாதிப்பு என்று விரிவாக எழுதப்பட்டிருந்தது.

சில பெண்களுக்குக் கர்ப்பத்தின் போது ஏற்படும் அழுத்தம் குழந்தை பிறந்த பிறகும் தொடர்ந்தால், அந்த அழுத்தம் குழந்தைக்கும், தாய்க்கும் இருக்கும் பிணைப்பை குறைக்கும் என்பதோடு மட்டுமில்லாமல் அந்தத் தாய் தன் குழந்தையையே வெறுத்து ஒதுக்க வாய்ப்பு உண்டு என்றும் எழுதியிருந்தது. அதுக்கு உதாரணமாகச் சிலரின் வாழ்க்கை முறையைப் பற்றி எழுதியிருந்தனர்.

அதில் ஒரு பெண் தன் குழந்தை தன்னிடம் பாலருந்துவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் குழந்தையை வீசி எறிந்ததையும், இன்னொரு பெண் தன் குழந்தையையே ஏற்றுக் கொள்ளாமல் யாரோ ஒரு பிள்ளையைப் போல் அந்நியமாகப் பார்த்து அந்தக் குழந்தையை வெறுத்ததாகவும் எழுதியிருந்தனர்.

இன்னும் அது போல் உதாரணங்களைப் படித்த ரித்விக்கின் கைகளில் நடுக்கம் உண்டானது. மேலும் படிக்க முடியாமல் கைப்பேசியை அணைத்துப் போட்டான்.

நடுங்கும் விரல்களால் மனைவியின் தலையைக் கோதிக் கொடுத்தான். அவனின் கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டன.

மனைவிக்கும் அந்தப் பாதிப்பு தொடர்ந்தால்? என்று நினைத்தவன் அதற்கு மேல் நினைக்க முடியாமல் கண்களை இறுக மூடிக் கொண்டான்.

தாய்மை சந்தோஷத்தை மட்டுமல்ல. வலிகளையும் தரும் என்பதை அந்தக் கணம் உணர்ந்தான்.

மெதுவாகக் கண்களைத் திறந்த ரித்விக் மனைவியின் முகத்தைக் கண்டான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை இரக்கத்துடன் பார்த்தான்.

அவளின் தலையில் இருந்த அவனின் விரல்கள் மெதுவாக நகர்ந்து மென்மையாக மனைவியின் முகத்தை வருடிச் சென்றன.

“ம்ம்…” கணவனின் வருடலில் மெதுவாகச் சிணுங்கினாள் வேதவர்ணா.

“நத்திங்டா… தூங்கு…” என்று மெல்ல அவளின் தோளில் தட்டிக் கொடுத்தான்.

“ம்ம்…” சரி என்பது போல் முனங்கியவள், அடுத்தச் சில நிமிடங்களில் கண்ணிமைகளை மென்மையாகப் பிரித்துக் கணவனைப் பார்த்தாள்.

“தூங்கு வருமா… சாரி எழுப்பி விட்டுட்டேன்…” என்று வார்த்தைக்கும் வலிக்குமோ என்பது போல மெதுவாகச் சொன்னவன், தட்டிக் கொடுத்து மனைவியைத் தூங்க வைக்கும் முயற்சியில் இறங்கினான்.

அவளோ கணவனுக்குப் பதில் சொல்லாமல் கண்களை அங்கே சுவற்றில் மாட்டியிருந்த கடிகாரத்திற்குத் திருப்பினாள்.

இரவு மணி பதினொன்றை தாண்டி கடிகார முள் ஓடிக் கொண்டிருந்தது.

“நீங்க தூங்கலையா ரித்வி?” யோசனையுடன் கணவனைப் பார்த்துக் கேட்டாள்.

“இதோ இப்போ கொஞ்ச நேரத்தில் தூங்கிருவேன். நீ தூங்கு…” என்றான் ரித்விக்.

“குழந்தைக்கு எதுவும் ரொம்ப ப்ராப்ளமா ரித்வி? அதான் நீங்க தூங்க முடியாமல் முழிச்சுட்டு இருக்கீங்களா?” என்று குழந்தையைப் பற்றிக் கேட்கும் போது நடுக்கத்துடன் கேட்டாள் வேதா.

“நோ… நோ வரு… பேபிக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை…” என்று வேகமாகப் பதிலளித்தான் ரித்விக்.

“அப்போ எனக்கா?”

“உனக்கும் எந்த ப்ராப்ளமும் இல்லை வரு. என்ன கொஞ்சம் பிரஷர் தான் இருக்கு. அதுவும் ட்ரீட்மெண்ட் எடுத்தா சரியாகிடும். பிரஷர் எல்லாம் இந்த நேரத்தில் சிலருக்கு வருவது தான். அதெல்லாம் பெரிய இஸ்யூ இல்லை வரு…” என்று மனைவியைச் சமாதானம் செய்தான்.

மருத்துவர் சொன்ன விஷயங்களை அவன் அவளிடம் சொல்ல நினைக்கவில்லை. அவளுக்கு ஒன்றும் இல்லை என்று சொல்வதே அவளை நிதானமாக வைத்திருக்கும் என்று நினைத்தான்.

“ம்ம் சரி…” என்று இந்த முறை கணவன் சொன்னதை அப்படியே ஏற்றுக் கேட்டுக் கொண்டாள் வேதவர்ணா.

“சரிமா, நீ தூங்கு…” என்று ரித்விக் சொல்ல,

“தூக்கம் வரலை ரித்வி, நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து இருக்கட்டுமா?” என்று கேட்டாள் மனையாள்.

“ஏன்டா?”

“பகல் எல்லாம் தூங்கிட்டு தானே இருக்கேன் ரித்வி. உங்க கூடக் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கேன்…” என்றவளை “ட்ரிப்ஸ் ஏறுகிற கையை அசைத்து விடாதே…” என்று எச்சரித்தபடி மெதுவாக எழுப்பிப் படுக்கையில் சாய்த்து அமர வைத்தான்.

“நீங்களும் என் பக்கத்துல உட்காருங்க ரித்வி…” என்று தன் அருகில் அமர சொன்னாள்.

அவன் அமர்ந்ததும் தன் தலையைக் கணவனின் தோளில் சாய்த்துக் கொண்டாள்.

“நான் கொஞ்சம் கவனமா இருந்திருக்கலாம்ல ரித்வி? சரியா படி ஏறாம இப்போ மூணு நாளா ஹாஸ்பிட்டலில் இருக்கோம்…” என்றாள் வருத்தத்துடன்.

“உன் மேல தவறு இல்லைமா… நீ மனசை போட்டு வருத்திக்காதே…” என்ற ரித்விக்கிற்கு, மருத்துவர் பேச சொன்னதை இப்போது மனைவியிடம் பேசினால் என்ன என்று தோன்றியது.

நேற்று நானே வேதாவிடம் பேசி விடுகிறேன் என்று மருத்துவரிடம் சொல்லிவிட்டு வந்தவன், அதன் பிறகு உடனே பேச தயக்கம் காட்டினான். அவனின் கோபத்தினால் தான் மனைவியின் ரத்த அழுத்தம் இன்னும் அதிகரித்தது.

இந்த நிலையில் மீண்டும் அவளிடம் ஏதாவது பேசி தானே அவளின் உயிருக்கு இக்கட்டான நிலையை உண்டாக்கி விடக்கூடாது என்று பேசுவதைத் தள்ளிப் போட்டான்.

இன்று தான் அவளுக்கு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்திருந்தது. ஆனாலும் பேச தயங்கித்தான் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான். ஆனாலும் ஒரேயடியாகவும் தள்ளிப் போட முடியாதே!

சும்மாவே ஏதாவது நினைத்துக் குழப்பிக் கொள்கிறாள். இந்த நிலையில் அவளுக்குள் இருக்கும் குழப்பத்தை இன்னும் வளர விடக்கூடாது என்று நினைத்தவன் இப்போதே பேசிவிடும் முடிவை எடுத்தான்.

தன் தோளில் சாய்ந்திருந்த மனைவியின் முகத்தைத் திருப்பித் தன் முகம் பார்க்க வைத்தவன், அவளின் நெற்றியில் இதமாக இதழோற்றல் ஒன்றை வைத்தான்.

“ம்ம் இங்கே…” கணவனின் இதழோற்றலை கண்களை மூடி ரசித்த வேதா, தன் இதழ்களின் மீது கையை வைத்து கேட்டாள்.

அவளே கேட்டதில் மென்னகை புரிந்த ரித்விக், தன் அதரங்களை அவளின் இதழ்களில் குடியேற்றினான்.

“ம்ம் இங்கேயும்…” இதழ்களுக்கு அடுத்துக் கன்னத்தைக் காட்டினாள் அவனின் மணவாட்டி.

அவள் கேட்டதை மறுக்காமல் கொடுத்த ரித்விக் மனைவியின் தோளை சுற்றி கைகளைப் போட்டு மெதுவாகத் தன் தோளோடு அணைத்துக் கொண்டான்.

ஒருவரின் அணைப்பில் ஒருவர் சுகமாக இளப்பாறினர். பல நாட்களுக்குப் பிறகு கணவன் தன்னை இவ்வளவு நெருக்கத்தில் வைத்துக் கொள்கிறான் என்ற நினைவில் வேதாவின் கண்கள் கலங்கினாலும், அந்தத் தருணத்தை ரசித்து அனுபவித்தாள்.

“வரு…”

“ம்ம்ம்…”

“வரு… வருமா…” என்று மீண்டும் தயக்கத்துடன் மனைவியை அழைத்தான் ரித்விக்.

“சொல்லுங்க ரித்வி…” அவனின் தோளில் இருந்து லேசாகத் தலையை உயர்த்திக் கேட்டாள் வேதவர்ணா.

“நான் உங்கிட்ட ஒரு விஷயம் பேசணும் வரு…”

“பேசுங்க ரித்வி…”

“ஆனா நீ டென்ஷன் ஆகக் கூடாது சரியா?” என்று தயக்கத்துடன் மனைவியிடம் உறுதி கேட்டான்.

“ம்ம்… சரி ரித்வி…” என்றாள் ஏன் கணவன் இப்படிக் கேட்கிறான் என்று புரியாத முகப்பாவனையுடன்.

“ஆன்ட்டியை உடனே வரச் சொல்லுவோம்னு சொன்னதுக்கு ஏன் வேண்டாம்னு சொன்ன?” என்று கேட்டான்.

சித்ராவை உடனே வர வைப்பது பிடிக்காமல் தானே நேற்று ரத்தம் அழுத்தம் உயர்ந்தது. அதனால் அதில் இருந்தே பேச்சை துவங்கினான்.

“ஹான்… அது… அது ரித்வி…” என்று உடனே தடுமாறினாள் வேதவர்ணா.

“தயங்காம சொல்லு வரு. நான் நேத்து உன் மேல் கோபப்பட்டது தப்புத்தான். இனி பட மாட்டேன். இனி உனக்கு ஒரு விஷயம் வேண்டாம்னா எனக்கும் வேண்டாம் தான்…” என்று உறுதியளித்து மனைவி மனம் விட்டு பேச தூண்டினான்.

கணவனின் பேச்சு அவளை இளக்க, சிறிது தயக்கத்தை உதறியவள், “என்னைத் தப்பா நினைக்க மாட்டீங்க தானே ரித்வி?” என்று மெதுவாகக் கேட்டாள்.

‘அப்படி என்னவோ?’ என்று உள்ளுக்குள் பதறினாலும், “மாட்டேன்…” என்று வெளியே உறுதியாகச் சொன்னான்.

“எனக்குப் பயமா இருக்கு ரித்வி…” என்றாள்.

“பயமா? என்ன பயம் வரு?” புரியாத குழப்பத்துடன் கேட்டான் கணவனவன்.

“குழந்தையை நினைச்சு…” என்றாள் உள்ளே சென்ற குரலில்.

“குழந்தையை நினைத்தா? குழந்தைக்கு என்ன?” என்று இன்னும் தான் குழம்பி போனான் ரித்விக்.

“அம்மா நம்ம கூட ஒரு மாசம் தான் இருப்பேன்னு சொன்னாங்க…” என்றாள்.

“என்ன சொல்ற வரு… குழந்தையை நினைத்து பயம்னு சொன்ன… இப்போ ஆன்ட்டி எத்தனை நாள் நம்ம கூட இருப்பாங்கனு கணக்கு சொல்ற? புரியுற மாதிரி சொல்லேன்…”

“நான் ஒரு பொண்ணா இருந்துகிட்டு இப்படிச் சொல்றேன்னு என்னைத் தப்பா நினைக்காதீங்க ரித்வி…”

“சரிமா… நினைக்கலை… என்னனு சொல்லு…” பொறுமையாகவே விசாரிக்க ஆரம்பித்தான்.

“அம்மா ஒரு மாதம் தான் குழந்தையைப் பார்த்துக்க இருப்பேன்னு சொன்னாங்க ரித்வி. ஆனால் நம்ம தேவைக்காக இப்போதே நாம வேகமாக அம்மாவை வர வச்சுட்டா, குழந்தை பிறந்த பிறகு அந்த ஒரு மாதம் கூட நம்ம கூட இல்லாம, சீக்கிரமாகவே கிளம்பிட்டா, நான் என்ன பண்ணுவேன்?” என்று கலக்கத்துடன் கேட்டாள் வேதவர்ணா.

“அவங்க கிளம்பி போனால் என்னமா? அதான் நீயும், நானும் குழந்தையைப் பார்த்துக் கொள்வோமே?” என்று கேட்டான்.

“நீங்க என்ன பேசுறீங்க ரித்வி?” என்று சட்டென்று கோபப்பட்டாள் வேதவர்ணா.

அவளின் திடீர் கோபத்தை வியந்து பார்த்தான் ரித்விக்.

அவனின் பார்வையைக் கண்டவள், “அய்யோ… சாரி… சாரி… சாரி ரித்வி. தெரியாமல் கோபப்பட்டுட்டேன். இதுக்காகத் திரும்ப என் கூடப் பேசாமல் இருந்துடாதீங்க ரித்வி…” என்றாள் கண்கள் கலங்க பதட்டத்துடன்.

மனைவியின் திடீர் கோபமும், அது அப்படியே பதட்டமாக மாறியதையும் கவனித்த ரித்விக் இப்போது அவளின் மனநிலையை நன்றாகவே புரிந்து கொண்டான்.

திடீர் கோபம் அவளின் அழுத்தத்தின் பாதிப்பு. அதே நேரம் தான் முன் போலக் கோபப்பட்டுப் பேசாமல் இருந்து விடுவேனோ என்ற பயம் அவளுக்குப் பதட்டத்தைக் கொடுத்திருக்கிறது என்று.

“சரி வரு, நான் கோபப்படலை. நீ குழந்தையைப் பற்றிச் சொல்ல வந்ததைச் சொல்லு…” என்று கேட்டான்.

“நிஜமா? நிஜமா என் மேலே கோபம் இல்லையா ரித்வி?” நம்ப முடியாமல் கேட்டாள் வேதவர்ணா.

“நிஜமா கோபம் இல்லை வரு…” என்றான் அழுத்தமாக.

“ஆனா அன்னைக்குக் கோபப்பட்டு ரொம்ப நாளா என்கிட்ட பேசவே இல்லையே ரித்வி…” என்று இன்றும் அதை நினைத்துக் கண்ணீர் வடித்தாள்.

“அப்போ நீயே யோசிச்சு பார் வரு. நீ கோபத்தில் தான் அப்படிப் பேசினாய். ஆனால் பேசிய வார்த்தைகள் சாதாரணமானது இல்லை வரு. உன் காதலில் திக்கு முக்காடி வாழ்ந்துட்டு இருக்குற என்னிடம் நாம காதலிச்சதே தப்புன்னு சொன்னால் எனக்கு எப்படி இருக்கும்? இல்ல அதே வார்த்தைகளை நான் உன்னிடம் சொல்லியிருந்தால் உனக்கு எப்படி இருக்கும்? நீயே சொல்லேன்…” இன்னும் வார்த்தைகள் கொடுத்த வலி ரித்விக்கை விட்டு அகல மறுத்தது.

மனைவி எந்த மாதிரியான மனநிலையில் அப்படிப் பேசினாள் என்று இன்று புரிந்தாலும் சில விஷயங்களை, வார்த்தைகளை விரைவில் ஜீரணித்துக் கொள்வது கடினமே!

“தப்பு தான் ரித்வி. உங்க இடத்தில் நான் இருந்திருந்தால் உடைந்து உருக்குலைந்து போயிருப்பேன். உங்க வலி எனக்கு இப்போ புரியுது. ஆனா அப்போ உங்களுக்கு அது எப்படி வலியை தரும்னு எனக்கு அப்போ புரியாமல் போயிருச்சு…” என்றாள் மனவலியுடன்.

“சரி விடு வருமா… நடந்ததை மாத்த முடியாது. ஆனால் நடக்கப் போறதை நல்லதா மாத்திக்க நம்மால் முடியும். நாம இப்போ முடியுறதை மட்டும் பார்ப்போம்…” என்றான் ரித்விக்.

“இதோ இந்த உங்க குணம் தான் ரித்வி நீங்க தான் எனக்கு வேணும்னு ஒத்தை காலில் என்னை நிக்க வச்சு என் வீட்டாரின் எதிர்ப்பை மீறி உங்களைக் கல்யாணம் பண்ணிக்க வச்சது. இப்போ சொல்றேன் ரித்வி… நான் உங்களைக் காதலித்தது தப்பே இல்லை. உங்கள் காதல் எனக்குக் கிடைத்ததை இந்த என் பிறப்பிற்கே கிடைச்ச வரமா நினைக்கிறேன்…” என்று உணர்ச்சிவசத்துடன் சொன்னாள் வேதவர்ணா.

இதை விட ஒரு சிறந்த காதலனுக்கு என்ன வேண்டும்? மனைவியின் வார்த்தைகள் காயம் பட்ட இதயத்திற்கு அவளே மருந்து தடவி விட்டதாக உணர்ந்தான் ரித்விக்.

அதோடு அவள் உணர்ச்சி வசப்பட்டதும் கருத்தில் பட, “எனக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கு வரு. எனக்கு நீ கிடைச்சதும் வரம் தான்…” என்று மனைவியை மென்மையாக அணைத்துக் கொண்டே சொன்னான்.

“உங்க இடத்தில் வேற ஆளா இருந்திருந்தால் ஒரு மனைவி அப்படிப் பேசியதற்கு அவளை அடித்திருப்பான். இல்லையென்றால் நம் காதலை பற்றி எப்படி நீ அப்படிச் சொல்லலாம் என்று கோபப்பட்டுப் பிரிய கூடச் செய்திருக்கலாம். ஆனால் நீங்க என்னிடம் பேசாமல் இருந்தாலும் எனக்காக நீங்க செய்த எதையுமே மாற்றிக் கொள்ளவில்லையே ரித்வி…”

“ஆனால் அதற்கும் சேர்த்து தான் உன்னிடம் பேசாமல் இருந்து உன்னை வதைத்து விட்டேனேடா?” என்று வருத்தத்துடன் சொன்னான் ரித்விக்.

“அது நான் அப்படிப் பேசிய தவறுக்கு அந்தத் தண்டனையாவது தேவைதான் ரித்வி…” என்று கணவனுக்கே சமாதானம் சொன்னாள் வேதவர்ணா.

“சரிடா வருமா, அதைப் பற்றிய பேச்சு இனி நமக்கிடையே வேண்டாம். குழந்தை பற்றிய விஷயத்திற்கு வா… உனக்கு என்ன பயம்?” என்று கேட்டான் ரித்விக்.

“நாம இரண்டு பேரும் குழந்தைக்காக இருக்கோம் தான் ரித்வி. ஆனா எந்த நேரமும் நீங்க வீட்டில் இருக்க முடியாது இல்லையா. அம்மா கிளம்பி போன பிறகு நான் தனியா எப்படிக் குழந்தையைப் பார்த்துக்குவேன்?” என்று பயத்துடன் கேட்டாள்.

“ஏன்டா குழந்தையைப் பார்த்துக் கொள்வதில் என்ன பயம்?” அவள் சொல்ல வருவது அவனுக்கு இன்னும் புரியவில்லை.

“குழந்தை வளர்ப்பு சாதாரணமானது இல்லை ரித்வி. பிள்ளையைக் கையில் தூக்குறதில் இருந்து, அதைக் குளிக்க வைத்து, அதுக்கு வயிற்றுக்குக் கொடுத்து, தூங்க வைத்து, அழுத போதெல்லாம் தூக்கி கண்ணும் கருத்துமா பார்த்துக்கணும் ரித்வி. ஆனா இதையெல்லாம் ஒரு மாத குழந்தையை வச்சுக்கிட்டு நானா எப்படித் தனியா பார்க்க முடியும்?” என்று கேட்டாள்.

“குழந்தைனா அப்படி எல்லாமே பார்த்து தான் ஆகணும் வரு. அதான் ஆன்ட்டி ஒரு மாசம் இங்கே இருப்பாங்களே. அந்த ஒரு மாசமும் ஆன்ட்டிகிட்ட இருந்து நல்லா கத்துக்கோ. அப்புறம் உனக்கே சுலபமாகிடும்…” இதெல்லாம் ஒரு பிரச்சனையா என்பது போல் மனைவியிடம் சொன்னான் ரித்விக்.

“என்ன ரித்வி சாதாரணமா சொல்றீங்க? அது ஒன்னும் அவ்வளவு ஈசி இல்லை ரித்வி…” என்றாள் வேதவர்ணா.

ரித்விக்கிற்கு வேதாவின் மனநிலை புரியவில்லை. சிலருக்கு வளர்ப்பு முறைகள் தான் சில பாடங்களைக் கற்றுத்தரும். வேதாவின் பெரியப்பா மகளுக்குக் குழந்தை பிறந்த போது ஆறு மாதங்கள் அவள் பிறந்த வீட்டில் தான் இருந்தாள். அப்போது அவளது குடும்பத்தினர் அனைவருமே குழந்தையை எப்படியெல்லாம் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்கள் என்று கண்கூடாகப் பார்த்தவள் வேதவர்ணா.

அவளின் உறவுகளின் வீடுகளிலும் அது தான் நடைமுறை.

ஆனால் இப்போது தனக்கோ ஒரு மாதம் மட்டும் அன்னை துணை இருப்பார். அதன் பிறகு தான் எப்படிக் குழந்தையைப் பார்த்துக் கொள்ள முடியும் என்ற பயம் அவளை ஆட்கொண்டிருந்தது. கணவன் பக்க உறவுகளும் இல்லை. தன் பக்கம் அதன் பிறகு சித்ரா அவ்வளவு சீக்கிரம் திரும்ப வரமாட்டார்.

அப்படியிருக்கத் தனியாகத் தான் என்ன செய்யப் போகிறோம் என்ற பயமே அவளைத் தற்போதைய பிரச்சனையாக ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது.

இதெல்லாம் ஒரு பயமா?

இது தேவையில்லாத பயம்!

பெற்ற தாய்க்கு பிள்ளையை வளர்க்க தெரியாதா?

இதற்குத் தான் பெற்றவர்கள் பேச்சை கேட்டுத் திருமணம் முடித்திருக்க வேண்டும்!

பெற்ற பிள்ளையைக் கூட வளர்க்க தெரியாதவள் எதற்குப் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும்?

என்று வெளியே இருந்து வெறும் பார்வையாளர்களாக இருந்து பார்ப்பவர்களுக்குக் கேள்விகள் தோன்றும்.

ரித்விக்கிற்குக் கூடச் சட்டென்று இதற்குப் போய்ப் பயப்படுகிறாளே? என்று தான் தோன்றியது. ஆனால் ரித்விக்கும் மனைவியின் மனநிலையைப் புரிந்து நடந்து கொள்ளும் காலமும் வெகு அருகில் வந்து கொண்டிருந்தது.

வேதவர்ணாவின் நிலை ஒரு தாயின் மனநிலையில் நின்று தான் அதைக் கையாள வேண்டும்.

இப்போது வேதவர்ணா ஆட்பட்டிருந்தது தாய்மை அடைந்ததினால் வந்த கர்ப்பகால மனஅழுத்தத்தில்!

இந்த நேரத்தில் அவளுக்குச் சின்ன விஷயங்கள் கூடப் பூதாகரமாகத் தோன்றியது.

அப்படித் தோன்றும் தோன்றலில் உண்டாது தான் குழந்தை வளர்ப்பு முறையைப் பற்றிய பயமும்.

அவள் அந்தக் கர்ப்பகால மனஅழுத்தத்தில் இருந்து மீண்டு வந்த பிறகு பின்னாளில் அவளுக்கே தன் இன்றைய செயல் சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றலாம்.

அப்படித் தோன்ற அவள் அதிலிருந்து மீண்டு வர வேண்டும்!

உற்ற துணை உடன் இருந்தால் எந்த மாதிரியான சூழ்நிலையில் இருந்தும் யாராலும் மீண்டு வர முடியும்.

ரித்விக், வேதவர்ணாவின் உற்ற துணையாக இருக்கும் போது, அவள் மீண்டு வருவாள் என்பதில் எந்த ஐயமுமில்லை.

தோல்வி கண்டு துவளும் நேரத்தில்
தோள் கொடுக்க உற்ற துணை இருந்தால்
தோல்வியே தோல்வி கண்டுவிடும்!