பிழையில்லா கவிதை நீ – 29

அத்தியாயம் – 29

“ஹலோ ஜனா! என்ன சத்தத்தையே காணோம்?” என்று ஜெகன் கேட்டதும்,

தன் உணர்வுகளை அடக்கிக் கொண்ட ஜனார்த்தனி சாதாரணமாகப் பேச ஆரம்பித்தாள்.

“நானாவது இப்போ ஞாபகம் வந்து போன் போட்டேன். ஆனா சாருக்கு அப்படி எதுவும் இருந்த மாதிரி தெரியலையே? சுத்தமா மறந்து போய்ட்டீங்க போல?” என்று நக்கலாகக் கேட்டாள்.

“சோ, நான் போன் போடணும்னு நீ எதிர்பார்த்திருக்க. அப்படித்தானே?” என்று குறும்பாகக் கேட்டான் ஜெகவீரன்.

“ஆமா, அப்படியே நான் எதிர்பார்த்திட்டாலும்… எனக்கு வேற வேலை இல்லை பாருங்க…”

“ஆமா… ஆமா… டிடெக்டிவ் மேடம் தான் ரொம்பப் பிஸியாச்சே. பிஸி மேடம் இப்போ எதுக்குப் போன் போட்டீங்க?”

“யமுனா போன் பண்ணினாள். ஏதேதோ சொன்னாள். என்ன விஷயம்? சுனில் எப்படிக் கையெழுத்துப் போட்டான்?” என்று கேட்டாள்.

“இதைக் கேட்கத்தான் போன் போட்டியாக்கும்?” என்று ஏமாற்றத்துடன் கேட்டான்.

“பின்ன? நமக்குள் பேச வேற என்ன இருக்கு? இதைக் கேட்கத்தான் போட்டேன். சொல்லுங்க…” என்றாள்.

“நமக்குள் பேச ஒண்ணுமே இல்லையா ஜனா?” என்று ஆழ்ந்த குரலில் கேட்டான்.

‘ஹ்க்கும். ஆ…ஊ…ன்னா எப்படியோ பேச ஆரம்பிச்சுடுவான்’ என்று உள்ளுக்குள் நொடித்துக் கொண்டாள்.

“ஏன் அமைதியாகிட்ட? சொல்லு ஜனா… நமக்குள் பேச ஒண்ணுமே இல்லையா?” திரும்பவும் கேட்டான்.

“ம்ப்ச்… எனக்கு ஒண்ணுமே இல்லை. நீங்க இப்போ சுனில் பத்தி சொல்லப் போறீங்களா, இல்லையா?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.

“அதெல்லாம் போனில் சொல்ல முடியாது…” என்றான்.

“பிறகு?”

“நேரில் தான் சொல்ல முடியும்…”

“சரி, எங்கே மீட் பண்ணலாம்? காஃபி ஷாப் ஏதாவதில் மீட் பண்ணலாமா?”

“மீட் பண்ணும் போது கண்டிப்பா காஃபி குடிக்கலாம். ஆனா காஃபி ஷாப்பில் இல்லை…”

“வேற எங்கே?”

“உங்க வீட்டில்…” என்றான்.

“ஓ! சரி, எப்போ வர்றீங்க?” என்று கேட்டாள்.

“நாளைக்குக் காலையில்…” என்றான்.

“ஓகே, வாங்க…” என்று சொல்லி விட்டு வைத்தாள்.

மறுநாள் காலை ஒன்பது மணி அளவில் ஜனார்த்தனியின் வீட்டிற்கு வந்து நின்றான் ஜெகவீரன்.

காவல்காரன் உடையில் இல்லாமல் வண்ண உடையில் வந்திருந்தான்.

ஜனார்த்தனி வந்து கதவைத் திறக்க, அவனின் கண்கள் அவளின் மீது நிதானமாகப் பதிந்து மீண்டன. வழக்கம் போல் ஜீன்ஸ், டீசர்ட்டில் தான் இருந்தாள்.

“வாங்க ஜெகா…” என்று வரவேற்றாள்.

“அப்புறம் மேடம் எப்படியிருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான்.

அவனைப் பகலவன் வரவேற்று பேச, சுகுமாரியும் சற்று நேரம் பேசிவிட்டு இருவருக்கும் காஃபி போட்டுக் கொடுத்துவிட்டு உள்ளே சென்றார்.

“நீங்க ஜனாகிட்ட ஏதோ பேசணும்னு சொன்னீங்களாம். பேசிட்டு இருங்க. நான் கொஞ்சம் வெளியே போய்ட்டு வர்றேன்…” என்று விடைபெற்றுக் கிளம்பினார் பகலவன்.

“இப்போ சொல்லுங்க ஜெகா. சுனில் எப்படிக் கையெழுத்துப் போட்டான்?” என்று கேட்டாள்.

“கையெழுத்துப் போடலைனா இன்னொரு கையும் இருக்காதுன்னு சொன்னேன். ஒரு கையாவது மிஞ்சட்டும்னு பயந்து கையெழுத்துப் போட்டான்…” என்றான்.

“என்ன இன்னொரு கையா? ஏன் ஒரு கைக்கு என்னாச்சு?”

“தொட்டிலில் தொங்குது…” என்றான்.

“எப்படி?” என்று கண்களைச் சுருக்கிக் கேட்டவளைப் பார்த்து அலட்சியமாகத் தோளை உலுக்கினான்.

“ஓ! நீங்க தான் உடைச்சீங்களா? ஏன்?” என்று கூர்மையுடன் கேட்டாள்.

“ஏன்னா? உனக்காகத் தான்…”

“இப்படிக் கொஞ்ச கொஞ்சமா சொல்லாம முழுசா என்ன நடந்ததுன்னு சொல்லப் போறீங்களா இல்லையா?” என்று பொறுமையற்றுக் கேட்டாள்.

“இங்க பார் ஜனா, நீ சுனிலுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கணும்னு அவன் மேலே கேஸ் போட்டதெல்லாம் சரிதான். ஆனா நீ கொடுத்த கேஸுக்கு என்ன தண்டனை கிடைக்கும்னு நினைக்கிற? ஒரு சொற்ப தண்டனை தான் கிடைக்கும்.

அதுவும் உடனே கிடைச்சுடும்னு நினைக்கிறயா? கண்டிப்பா கிடையாது. வாய்தா… ஜாமீன்னு இழுத்தடிப்பு தான் அதிகம் நடக்கும். கோர்ட்டுக்கு இழுத்தடிச்சுட்ட என்ற கோபத்தில் இன்னும் ஏதாவது விபரீதமா தான் அவன் யோசிப்பான். அதனால் தான் உன்னைக் கேஸை வாபஸ் வாங்க சொன்னேன்.

சில விஷயங்களுக்கு எல்லாம் உடனடி தீர்வு தான் சரி. அது சட்டத்துக்குப் புறம்பானது தான். ஒரு காவல்காரனா நான் அதைச் செய்யவும் கூடாது. ஆனா ஒரு பொண்ணோட மானம், ஒரு குடும்பத்தோட உயிர் சம்பந்தப்பட்டது என்பதால் மனசாட்சி படி ஒரு வேலை செய்தேன்.

இப்போ அந்தச் சுனில் ஒரு காலும், கையும் உடைஞ்சு ஹாஸ்பிட்டலில் இருக்கான். அவனுக்கு நான் தான் இதைப் பண்ணினேன்னு தெரியாது. நான் வேற ஒரு வழியில் இந்த ஏற்பாடு பண்ணினேன். அது என்னன்னு எல்லாம் விளக்கம் கேட்காதே!

அவனுக்கு உயிர் பயமும் காட்டிக் கையெழுத்துப் போட வச்சுருக்கேன். இனி யஷ்வினி வழிக்கு அவன் வர மாட்டான். நீ இதைத்தானே எதிர்பார்த்த? நீ எதிர்பார்த்தது கிடைச்சுடுச்சு. இனி நீ அவன் மேலே போட்ட கேஸை வாபஸ் வாங்குவ தானே?” என்று கேட்டான்.

“வேற வழி? வாங்குறேன். இது நீங்க இவ்வளவு முயற்சி எடுத்து இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்ததுக்காக மட்டும் தான்…” என்றாள்.

“இப்பயாவது சரின்னு சொன்னீயே, சந்தோசம்…” என்றான்.

“வினயா விஷயத்தில் பிடிப்பட்டவங்க எல்லாம் என்ன ஆனாங்க?”

“எல்லாரும் ஜெயிலில் கம்பி எண்றானுங்க. சரி, அடுத்தவங்க பிரச்சினை எல்லாம் முடிந்தது. இப்போ நம்ம விஷயத்துக்கு வருவோம்…” என்று ஜெகன் ஆரம்பிக்க,

“நம்ம விஷயம்னு ஒன்னு இல்லைன்னு ஏற்கனவே உங்களுக்குச் சொல்லிட்டேன்…” என்று அவனை மேலும் பேச விடாமல் இடைவெட்டினாள் ஜனார்த்தனி.

“நீ இல்லைன்னு சொன்னதும் சரிதான்னு என்னால் கேட்டுட்டுப் போக முடியாது ஜனா. அதுவும் நீயும் என்னை விரும்புறன்னு தெரிஞ்ச பிறகு கண்டிப்பா விட்டுட்டுப் போக முடியாது…”

“உங்களை நான் விரும்புறேன்னு நான் எப்போ சொன்னேன்?”

“வாயைத் திறந்து சொன்னால் தான் தெரியும்னு நினைக்கிறயா ஜனா? எனக்குத் தெரியும் நீ என்னை லவ் பண்ற…” என்று உறுதியாகச் சொன்னான்.

“இல்லை… நான் பண்ணலை…” என்று உடனே மறுத்தாள்.

“ஜனா…” என்று அதட்டி அழைத்தவன், “போதும்! தேவையில்லாம வீம்பு பிடிக்காதே! மனசு முழுக்க விருப்பத்தை வச்சுக்கிட்டு நீ இப்படி இல்லைன்னு சாதிக்கும் போது எனக்கு வலிக்குது. ரொம்ப ரொம்ப வலிக்குது. நான் என்ன செய்தால் உன் மனசை என்கிட்ட சொல்லுவ ஜனா?” என்று கண்ணில் வலியுடன் கேட்டான்.

அந்த வலியைக் கண்டவள் சில நொடிகளுக்கு மேல் பார்க்க முடியாமல் சட்டென்று தன் முகத்தைத் திருப்ப, எதிரே இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்த ஜெகன் எழுந்து அவளின் அருகே வந்து அமர்ந்தான்.

அவன் அருகில் வந்ததை உணர்ந்தாலும் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள்.

அவள் மடியின் மீதிருந்த அவளின் கையை எடுத்து மென்மையாகப் பற்றியவன் இன்னொரு கையால் அவளின் முகத்தைத் தன் பக்கம் திருப்பினான்.

அவளின் கண்களை ஆழ்ந்து பார்த்தவன், “உனக்கு நீயே போட்டு வச்சிருக்கியே ஒரு முகமூடி… அதை எல்லாம் கழட்டி வைச்சுட்டு உணர்வுகளையும், உள்ளத்தையும் வெளிப்படுத்துற ஜனாவா மட்டும் இப்போ பேசு. நீ என்னை லவ் பண்றது உண்மை தானே?” என்று கேட்டான்.

அவனின் கண்களையே பார்த்துக் கொண்டு அவள் அமைதியாக இருக்க, “நீ மௌனமா இருந்தது எல்லாம் போதும் ஜனா. ப்ளீஸ் பேசு…” என்றான்.

அதற்கு மேலும் அமைதியாக இருக்க முடியாமல் ஆழ்ந்த மூச்சொன்றை எடுத்துவிட்டவள், “உண்மை தான்!” என்றாள்.

அதில் ஜெகனின் முகம் பிரகாசமாக மாறியது.

“ஆனா காதல் மட்டும் வாழ்க்கைக்குப் போதாது ஜெகா…” என்று சொல்லி அவனின் முகப் பிரகாசத்தை ஒளி இழக்க செய்தாள்.

“நீ என்ன சொல்ல வர்ற ஜனா?” புரியாமல் கேட்டான்.

“எனக்கு உங்களைப் பிடிச்சுருக்கு. ஆனா அதுக்கு மேலே யோசிக்க ஒண்ணுமில்ல ஜெகா. அதாவது கல்யாணம் எல்லாம் சரிப்பட்டு வராதுன்னு சொல்றேன்…” என்றாள்.

“ஏன்? ஏன்? சரிப்பட்டு வராது ஜனா? என்ன காரணம்?” என்று கேட்டான்.

“சரிப்பட்டு வராதுன்னா வராது தான்.. அதுக்கு மேல என்னால் எதுவும் சொல்ல முடியாது. சொல்ற மனநிலையிலும் நான் இல்லை…” என்றாள்.

“என்ன ஜனா இது? காதல் உண்டு. ஆனா கல்யாணம் மட்டும் வேண்டாம்னா என்ன அர்த்தம்? காதலிக்கிறதே கல்யாணம் பண்ணிக்கத்தானே?”

“இதோ இதுக்குத் தான். இதுக்குத் தான் இத்தனை நாளா என் மனசை சொல்லாமல் இருந்தேன். காதலை வெளிப்படுத்தினால், அடுத்துக் கல்யாணப் பேச்சுத்தான் வரும். அது வேண்டாம்னு அவாய்ட் பண்ணத்தான் நமக்குள் ஒண்ணுமே இல்லைன்னு சொல்லிச் சாதிச்சேன். ஆனா வலிக்குதுன்னு சொல்லி என் மனசை இளக்கி என்னைப் பேச வச்சுட்டீங்க…” என்று சொன்ன போது அவளின் முகம் வேதனையில் முத்துக்குளித்திருந்தது.

“ஜனா…” என்று அவளின் கையை அவன் அழுத்திப் பிடிக்க, அவனை விட இறுக்கமாக அவனின் கையைப் பற்றிக் கொண்டாள்.

அந்த இறுக்கம் அவள் உள்ளுக்குள் பட்டுக் கொண்டிருக்கும் வலியை அவனுக்குக் காட்டிக் கொடுத்தது.

“ஜனா… என்னமா? உனக்குள்ள என்ன வலி இருக்கு? ஏன் இப்படி?” என்று தவிப்புடன் கேட்டான்.

“வலியா? ம்ப்ச்… அதெல்லாம் ஒண்ணுமில்ல ஜெகா. நீங்க கிளம்புங்க. இனி நாம பார்த்துக்கவே வேண்டாம். பார்க்க எனக்கு விருப்பமும் இல்லை…” என்றவள் எழுந்து அங்கிருந்து செல்ல முயல, அவளின் கையைப் பிடித்து நிறுத்திச் செல்ல விடாமல் தடுத்தான் ஜெகவீரன்.

“பேசிட்டு இருக்கும் போதே போனால் என்ன அர்த்தம் ஜனா? காதல் இருக்கு. ஆனா கல்யாணம் வேண்டாம்னு சொன்னவள் அதுக்கான காரணத்தையும் சொல்லிட்டுப் போ. அதை விட்டு இனி பார்க்கவே வேண்டாம்னு சொன்னால் நான் அமைதியா போவேன்னு நீ எப்படிப் எதிர்பார்க்கலாம்?” என்று கேட்டான்.

“கையை விடுங்க ஜெகா. என்னை டார்ச்சர் பண்ணாதீங்க…” என்று எரிச்சல் பட்டாள் ஜனார்த்தனி.

“டார்ச்சர்? யார்? நான் உன்னைப் பண்றேனா? இல்லை நீயா?” என்று கேட்டான்.

அவள் முறைத்துப் பார்க்க, “நீ தான் என்னை டார்ச்சர் பண்ற ஜனா. இவன் என்னை விரும்புறவன் தானே… ஊசிக்குத்துற மாதிரி வலிக்க இரண்டு வார்த்தை பேசிக் காயப்படுத்தினால் ரோஷப்பட்டுப் போயிடுவான்னு நீ தான் என்னை வார்த்தையாலயே டார்ச்சர் பண்ற…” என்று குற்றம் சாட்டியவனைக் கண்ணில் தோன்றிய வலியுடன் பார்த்தாள்.

அவளின் வலியை உணர்ந்தாலும் சற்றும் இளகாமல் குற்றச்சாட்டும் பார்வையுடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதைத் தாங்க முடியாதவள் இவ்விஷயத்திற்கு இப்போதே முடிவு கட்டிவிடும் நோக்குடன் கைகளைக் கட்டிக் கொண்டு அழுத்தமாக நின்றாள்.

“இப்போ உங்களுக்கு என்ன தெரியணும்? ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்றேன்னு தானே? சொல்றேன்…” என்றவள் கண்களை மூடி மூச்சை இழுத்துவிட்டாள்.

பின் கண்களைப் பட்டென்று திறந்தவள் அவனின் முகத்தைப் பார்த்து, “கல்யாணம் என்றாலே ஒரு பையன் அந்தப் பொண்ணுக்கிட்ட முக்கியமா உடலளவில் அவள் அப்பழுக்கற்றவளாக இருக்கணும் என்று தான் எதிர்பார்ப்பான். ஆனா நான் அப்பழுக்கற்றவள் இல்லை ஜெகா! என்னை எப்படி நீங்க கல்யாணம் பண்ணிக்க முடியும்?” என்றவளை அவன் கேள்வியுடன் பார்க்க,

“என்ன புரியலையா? ஐயம் நாட் எ வெர்ஜின் ஜெகா…” என்று பட்டென்று சொன்னாள் ஜனார்த்தனி.