☔ மழை 9 ☔

கடவுளின் அவதாரங்களாக கொண்டாடப்படும் பல சாமியார்கள் பக்தர்களுக்கு ஆன்மீக வழிக்காட்டி, அவர்கள் குடும்பத்தின் நலம்விரும்பி, வணிகத்தில் ஆலோசகர் என பல அவதாரங்களை எடுக்கும் பட்சத்தில் Dependency syndrome என்ற சார்புத்தன்மையை பக்தர்கள் அவர்கள் மீது வளர்த்துக்கொள்கின்றனர். அதன் விளைவு தங்களது முழு நம்பிக்கையையும் அவர்கள் மீது வைக்க ஆரம்பிக்கின்றனர். நவீன சமுதாயத்தின் வேகமான வாழ்க்கைமுறையைக் காரணம் காட்டி அதிலிருந்து மனநிம்மதியைத் தரும் ஆலோசகராகவும் அந்தச் சாமியார்கள் மாறிப்போகின்றனர். அதன் விளைவு பக்தர்களின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்யும் வாய்ப்பு அதிகரித்து விடுகிறது. அந்தக் குருவால் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டால் கூட பாதிக்கப்பட்டவரை விட குருவின் வார்த்தைகளையே பக்தர்கள் நம்பும் நிலை பெரும்பாலான சமயங்களில் உண்டாகிறது”

                 -பவ்தீப் கங், the author of ‘Gurus: Stories of India’s Leading Babas’

சவி வில்லா…

சவிதாவின் முறைப்பில் பெட்டிப்பாம்பாக அடங்கி நின்றான் இந்திரஜித். சித்தார்த்தும் மாதவனும் அவருக்கு எதிரே கிடந்த சோபாவில் என்னடா இது என்பது போல அவனைப் பார்த்து வைத்தனர்.

“ப்ளீஸ் காப்பாத்துங்கண்ணா” கண்களால் இறைஞ்சினான் அவன். அவர்கள் தொண்டையைச் செருமவும்

“நீங்க ரெண்டு பேரும் எதுவும் பேசக்கூடாது… நீங்க குடுக்குற செல்லம் தான் இவன் இன்னைக்குப் பப்ளிக் ப்ளேஸ்ல ரவுடி மாதிரி பிஹேவ் பண்ணுனதுக்கு முக்கியக்காரணம்… நீங்க பாத்துப்பீங்கனு தானே நான் சாங் ஷூட்டிங், டான்ஸ் இன்ஸ்டிட்டியூட்னு வேலைய மட்டும் பாத்துட்டிருந்தேன்” என்றார் சவிதா கண்டிக்கும் குரலில்.

சித்தார்த்தும் மாதவனும் கையாலாகாதவர்களாக விழிக்க இந்திரஜித்துக்குச் சவிதாவால் அடுத்த சில நிமிடங்கள் பொறுப்பான மனிதனாக வெளியிடத்தில் நடந்துகொள்வது எப்படி என்ற வகுப்பு எடுக்கப்பட்டது.

அதன் முடிவில் இந்திரஜித் சலிப்படைந்தான். அவன் ஒன்றும் மூன்றாம் தர ரவுடி அல்லவே! அவனது தோழியை தரக்குறைவாகப் பேசிய கயவர்களுக்கு அவர்களுக்குப் புரியும் பாஷையில் அறிவுரை கூறியது ஒரு தவறா?

நல்லவேளை தந்தை வீட்டில் இல்லை. அவர் இருந்திருந்தால் சில நிமிட வகுப்பானது சில மணிநேரங்களுக்கு நீண்டிருக்கும்.

இந்திரஜித்தின் மனநிலை இவ்வாறிருக்க சித்தார்த் ஜெகன்மோகன் மூலம் அவனைப் பற்றிய செய்திகள் தொலைகாட்சி சேனல்களில் இடம்பெறாவண்ணம் தடுத்தவன் காவல்துறையையும் சரிகட்டி விட்டான்.

அவர்களும் பெரிய இடத்து பையன்களுக்கு இதெல்லாம் சகஜம் என்பதால் விசயத்தைப் பெரிதுபடுத்தவில்லை. மொத்தத்தில் இந்திரஜித் செய்த தகறாறு பெரிய பிரச்சனையாக மாறும் முன்னர் அவனது தமையன் தடுத்துவிட்டான்.

ஆனால் அவனது தோழியின் நிலை லோட்டஸ் ரெசிடென்சியில் பரிதாபகரமாக மாறியிருந்தது. ஆம்! தொலைகாட்சி செய்தியைப் பார்த்த கோபத்தில் ஹேமலதாவின் பூங்கரம் சாருலதாவின் கன்னத்தைப் பதம் பார்த்திருந்தது.

“அவ சின்னப்பொண்ணு ஹேமா” என்ற சாந்தநாயகியின் சமாதானமும், “இப்போ அவ என்ன பண்ணிட்டானு கை நீட்டுற ஹேமா?” என்ற கௌதமின் பரிவும் ஹேமலதாவின் கோபத்திற்கு முன்னே வெயிலில் வைத்த பனிக்கட்டியைப் போல காணாமல் போனது.

இது வரை ஹேமலதாவின் கோபத்தைப் பார்த்திடாத சாருலதா அரண்டுவிட அவளை ஆதரவாக அணைத்துக்கொண்டார் சாந்தநாயகி. ஹேமலதா இவ்வளவு சினம் கொள்ள காரணம் தொலைகாட்சியில் வந்த செய்தியும் அதில் அவளது தங்கை சித்தரிக்கப்பட்ட விதமும் தான்.

அதில் இந்திரஜித் என்னவோ பணக்காரத்திமிரில் இப்படி அடாவடியாக நடந்துகொண்டதாகவும் சாருலதா இந்திரஜித்தின் பெண்தோழி, காதலி எனவும் இஷ்டத்திற்கு அவர்களைப் பற்றிய தகவல் திரித்துக் கூறப்பட அதில் தான் ஹேமலதா ஆத்திரமுற்றாள்.

சாந்தயநாயகியின் தோளில் சாய்ந்து கண்ணீர் விட்ட தங்கையை கோபத்துடன் ஏறிட்டவள்

“சும்மா இருந்த பையனை சண்டை போடுனு தூண்டிவிட்டது நீ… ஆனா நியூஸ்ல என்ன சொல்லுறாங்கனு பாத்தியா? ஜித்து பணக்காரவீட்டுப்பையன்ங்கிறதால பப்ளிக்ல இவ்ளோ மோசமா பிஹேவ் பண்ணுறான்னு சொல்லுறாங்க… அவனுக்கு இந்தப் பேர் தேவை தானா?” என்று கேட்க சாருலதா தலையைக் குனிந்துகொண்டாள்.

கௌதம் ஹேமலதாவைச் சமாதானப்படுத்தியவன் சாருலதாவையும் கண்டித்தான்.

“பொது இடங்கள்ல அந்தப் பசங்க சல்லித்தனமா நடந்துக்கிட்டா அதுக்கு அவனுங்களை போட்டு அடிக்கிறது தீர்வு இல்ல சாரு… நீ ஷாப் மேனேஜர் கிட்ட சொல்லிருக்கணும், அவங்க அந்தப் பசங்களை கவனிச்சிருப்பாங்க… அதை விட்டுட்டு ஜித்து கிட்ட சொல்லி அடிக்க வச்சதுலாம் ரொம்ப சைல்டிஷ்சா இருக்குடா… இதால இப்போ ஜித்துவோட நேம் தானே மீடியால டேமேஜ் ஆச்சு… இனியாச்சும் உன்னால உன் ஃப்ரெண்டுக்கு எந்தக் கஷ்டமும் வந்துடக்கூடாது… போய் ஃபேஸ் வாஷ் பண்ணு… இப்பிடி அழுமூஞ்சியா இருந்தா பாக்க நல்லா இல்ல” என்று அறிவுரையாக ஆரம்பித்து இலகுவாக பேசி அவளை முகம் கழுவ அனுப்பிவைத்தான்.

சாருலதாவும் தலையாட்டிவிட்டு குளியலறையை நோக்கிச் செல்ல இப்போது கண்ணீர் உற்பத்தியானது ஹேமலதாவின் விழிகளில். அழுதபடியே அவளது அறைக்குள் சென்றுவிட்டாள். மெத்தையில் அமர்ந்து கண்ணீர் பெருக்கியவளை சமாதானம் செய்யும் வழியறியாது கௌதமும் சாந்தநாயகியும் திகைத்து விழித்தனர்.

ஹேமலதா அறைக்குள் செல்வதைப் பார்த்த நந்தன் “மம்மி” என்றபடி அவளது அறைக்குள் ஓடினான்.

தங்கையை அடித்துவிட்டோமே என்ற வருத்தம் மேலிட கண்ணீர் விட்டவளை மற்ற இருவரும் சமாதானம் செய்யும் முன்னர் அவளருகே சென்று அமர்ந்த நந்தன் அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டான்.

“அழாதிங்க மம்மி” என்று சொன்னபடி அவளது தோளில் சாய்ந்து கொண்ட அச்சிறுவனின் பேச்சில் ஹேமலதாவின் கண்ணீர் நிற்க சாந்தநாயகியும் கௌதமும் தங்களுக்கு முன்னர் ஹேமலதாவைச் சமாதானம் செய்துவிட்ட நந்தனை வாஞ்சையுடன் பார்த்தபடி அமர்ந்திருந்தனர்.

அதே நேரம் முகம் கழுவிவிட்டு குளியலறையை விட்டு வெளியே வந்த சாருலதாவோ ஹாலில் அமர்ந்திருந்த இருவரிடமும் தான் பூங்காவிற்கு செல்வதாகச் சொல்லிவிட்டு வெளியேறினாள்.

பொதுவாக அங்கே இரவு நேரத்தில் அப்பார்ட்மெண்ட்வாசிகளின் நடமாட்டம் குறைவாகவே இருக்கும். இப்போது அவளுக்கு வேண்டிய தனிமை அங்கே தானே கிடைக்கும்.

பூங்காவிற்கு சென்று காற்றாட அமர்ந்த போது மனக்கிலேசங்கள் மறைவது போன்ற பிரமை சாருலதாவிற்கு. கையோடு எடுத்து வந்திருந்த மொபைலில் யூடியூபை ஓடவிட்டவள் செய்தி சேனல்களைத் தேடி இந்திரஜித்தைப் பற்றிய செய்தி இருக்கிறதா என ஆராய்ந்தாள்.

சித்தார்த் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்திகளை நீக்கவைத்ததை அவள் அறியமாட்டாள் அல்லவா! இருப்பினும் சில ட்ரால் செய்யும் யூடிப் சேனல்களில் இந்திரஜித் அந்த வாலிபர்களைத் தாக்கும் வீடியோ இருந்தது.

அவற்றை நடத்துபவர்களும் இளரத்தங்கள் என்பதாலோ என்னவோ அந்தச் சேனல்கள் அவனை ஹீராவாகவே காட்டின.

‘தோழிக்காக சண்டையிட்ட கார்பந்தய வீரன்’ என்ற பட்டம் மட்டும் தான் கொடுக்கப்படவில்லை. கூடவே ‘பெண்கள் மீது கைவைத்தால் வெட்ட வேண்டியது விரல்களை அல்ல; தலையை’ என்ற பாகுபலி வசனம் வேறு!

இவ்வளவு நேரம் இருந்த வருத்தம் அகல இதழ்களில் சிரிப்பு கூட முகிழ்த்தது. அப்போது யாரோ வந்து அருகே அமரவும் திடுக்கிட்டவள் அமர்ந்தவன் இந்திரஜித் என்றதும் நிம்மதியானாள்.

“எங்க வீட்டுல எனக்கு பயங்கர அட்வைஸ் சாரு… அதோட ஆரா என்னைத் தாக்குறத தாக்குப்பிடிக்க முடியாம இங்க ஓடிவந்துட்டேன்” வந்ததும் படபடவென பொரிந்தான் இந்திரஜித்.

கூடவே உன்னைத் திட்டினார்களா என்ற கேள்வி வேறு!

“திட்டுதறதா? ஹேமுக்கா என்னை அடிச்சிட்டா தெரியுமா?” சொல்லும் போதே மீண்டும் சாருலதாவின் கண்களில் நீர் நிரம்பியது.

அப்போது தான் இந்திரஜித் சாருலதாவின் கன்னம் சிவந்திருப்பதைப் பார்த்தான்.

பின்னர் வருத்தத்துடன் “என்னால தான ஹேமுக்கா உன்னை அடிச்சாங்க” என்று கூறி தலையைக் கவிழ்ந்தான் அவன்.

குனிந்த வேகத்தில் நிமிர்ந்தவன் “ஆனா நான் அவனுங்களை அடிச்சதுக்காக கொஞ்சம் கூட வருத்தப்படல தெரியுமா?” என்று கூற சாருலதா கண்களை விரித்தாள்.

“ஆனா நான் உன்னைத் தூண்டிவிட்டதும் நீ சண்டை போட்டதும் தப்புனு பெரியவங்க சொல்லுறாங்களே!” சோகமாகக் கூறினாள் சாருலதா.

“அதுலாம் ஒன்னும் தப்பில்ல… ஜெனரேசன் கேப் சாரு… அவங்க சொல்லுறத யார் கேக்கப்போறாங்க?” அலட்சியமாகத் தோளைக் குலுக்கினான் இந்திரஜித்.

அதற்கும் சாருலதா விழிக்க அவளது தலையில் தட்டியவன் “இப்போ சைனாக்காரன் ஒருத்தன் உன் கிட்ட பேசுறான்… அவனுக்கு இங்க்லீஸ் தெரியாது… ஆனா உனக்கு சைனீஷ் தெரியும்… அப்போ நீ அவன் கிட்ட எப்பிடி பேசுவ?” என்று கேட்க

“சைனீஷ்ல தான் பேசுவேன்” என்றாள் அவள்.

“அதே மாதிரி தான் நானும் அந்த அசிங்கம்பிடிச்ச சனியனுங்களுக்குப் புரியுற பாஷைல பதிலடி குடுத்தேன்… இது தப்பே இல்ல” என்று அழுத்தமாக உரைத்தான் இந்திரஜித்.

“ஆனா நியூஸ் சேனல்ல உன் நேம் வந்துடுச்சே?”

“அதுல வருத்தப்பட என்ன இருக்கு? இன்னைல இருந்து நானும் ஒரு செலிப்ரிட்டி தான்” கவலை சிறிதுமின்றி டீசர்ட்டின் ஹீடியை தூக்கிவிட்டவனுக்குத் தான் எவ்வளவு சந்தோசம்!

அதே சந்தோசம் அவனிடமிருந்து அவனது தோழிக்கும் பரவியது. அவள் கண்கள் ஜொலிக்க “அப்போ நான் செலிப்ரிட்டியோட ஃப்ரெண்ட்” என்று சொல்ல இருவரும் மடக்கிய கைகளை மோதி சியர்ஸ் சொல்லிக்கொண்டனர்.

“நீ நியூஸ் சேனல் பத்தி கவலைப்படாத சாரு…. சித்து அண்ணா அந்த விசயத்தை ஷாட் அவுட் பண்ணிட்டார்” என்று இந்திரஜித் கூறும்போதே

“உங்கண்ணா ஷாட் அவுட் பண்ணுவார்ங்கிற நம்பிக்கைல தான் நீ அடிதடி சண்டைல இறங்குனியா மை டியர் கொழுந்தனாரே?” என்று கேலியுடன் ஒலித்தது யசோதராவின் குரல்.

அவளது குரலைக் கேட்டதும் இருவரும் திருதிருவென விழித்தனர். யசோதராவோ நிதானமாக வந்து அமர்ந்திருக்கும் இருவரின் எதிரே நின்றாள்.

“அண்ணி உங்களுக்கு எப்பிடி இந்த நியூஸ் தெரிஞ்சுது?”

யசோதரா நகைப்புடன் “எனக்கு எப்பிடி இந்த நியூஸ் தெரியாம இருக்கும்? எங்க சேனலுக்கும் ஜே.எம் சார் கால் பண்ணுனாரே” என்று தலை சரித்து வேடிக்கை போல கூறவும் இந்திரஜித் செய்வதறியாது திகைத்தான்.

சாருலதாவையும் அவனையும் மாறி மாறி பார்த்த யசோதரா “வன்முறைய கையில எடுக்குறது ஈசி தான்… ஆனா அதோட விளைவு சம்பந்தப்பட்ட மனுசங்களை மட்டுமில்ல, அவங்கள சார்ந்திருக்குறவங்களையும் பாதிக்கும்… எந்தப் பிரச்சனையையும் சட்டப்படி அணுகுறது தான் நல்லது… இது இப்போ உங்களுக்குப் புரியாது” என்றாள்.

இருவரின் முகமும் சோர்ந்து போக “அடடா! ஆல்ரெடி போதும் போதும்ங்கிற அளவுக்கு உங்களுக்கு அட்வைஸ் கிடைச்சிருக்கும்… அது தெரியாம நானும் ஒரு டோஸ் குடுத்துட்டேனோ? சரி அதை விடுங்க… எனி ஹவ், ஜித்து உன்னோட பஞ்ச் ஒவ்வொன்னும் தெறி… நீ கார் ரேசிங்ல கலந்துக்குறதுக்குப் பதிலா பாக்சிங்ல கலந்துக்கலாம்னு என் கொலீக் ரகுவே சொல்லுறான்டா” என்று கேலி பேசி அவர்களை சகஜமாக்க முயன்றாள்.

அதன் விளைவு இருவரும் வருத்தம் அகன்று முறுவலித்தனர்.

“ரெண்டு பேரும் டின்னர் சாப்பிட்டாச்சா?”

இல்லையென பதில் வரவும் “சரி வாங்க.. இன்னைக்கு வெஜிடபிள் உப்புமா பண்ணப்போறேன்… எல்லாருமா சேர்ந்து சாப்பிடுவோம்” என்று வேண்டுக்கோள் வைத்து இருவரையும் அதிர வைத்தாள் யசோதரா.

“உப்புமாவா? ஐயோ அண்ணி இன்னைக்கு டின்னருக்கு வீட்டுக்கு வந்துடணும்னு மாம் ஸ்ட்ரிக்டா ஆர்டர் போட்டுருக்காங்க… நான் கிளம்புறேன்… எனக்குப் பதிலா சாரு உங்களோட க்ரேட் ரெசிபிய டேஸ்ட் பண்ணுவா” என்று கூறிவிட்டு தலை தெறிக்க ஓட

“டேய் என்னை மட்டும் மாட்டிவிட்டுட்டு ஓடுறீயே! நீ உருப்படவே மாட்ட” என்று சபித்த சாருலதாவின் காது யசோதராவின் கரங்களில் சிக்கிக்கொண்டது.

“என்னோட உப்புமாவ கிண்டலா பண்ணுற? வா இன்னைக்கு நீ ரெண்டு ப்ளேட் சாப்பிடுற வரைக்கும் உன்னை வீட்டுக்கு அனுப்புறதா இல்ல” என்று மிரட்டியபடி சாருலதாவைத் தன்னுடன் அழைத்துச் சென்றாள் அவள்.

சொன்னபடி உப்புமா தண்டனையை நிறைவேற்றி சாருலதாவை அவளது ஃப்ளாட்டிற்கு வழியனுப்பிவிட்டு வந்தவள் மயூரியுடன் சேர்ந்து பாத்திரங்களை ஒழுங்குப்படுத்திவிட்டு உறங்க செல்லும் முன்னர் சித்தார்த்தை மொபைலில் அழைத்தாள்.

“சொல்லு யசோ… இந்த நேரத்துல கால் பண்ணிருக்க? எதுவும் எமர்ஜென்சியா?”

“எமர்ஜென்சி எதுவுமில்ல… இன்னிக்கு நீ செஞ்சு முடிச்ச அற்புதமான காரியங்களை ஒரு ஆடியன்சா பாத்து வியந்து போய் கால் பண்ணுனேன்”

“என் கிட்டவே உயர்வுநவிற்சியா? இன்னைக்கு நடந்த இன்சிடெண்ட்ல ஜித்துவோட தப்பு எதுவுமில்ல… அவன் இடத்துல யார் இருந்திருந்தாலும் இப்பிடி தான் நடந்திருப்பாங்க”

“ஓகே ஓகே! அவன் பண்ணுன எல்லாமே தப்புனு நான் சொல்லலயே… அண்ட் அவன் தப்பே பண்ணுனாலும் அவனோட ப்ரதர் இருக்குறப்ப ஜித்துவ யாரால என்ன பண்ண முடியும்? நான் பேச நினைச்சது இப்போவும் நீ வழக்கம் போல சட்டத்தை வளைச்சதை பத்தி தான்”

சித்தார்த் மறுமுனையில் நிதானித்தான். யசோதராவின் குரலில் கோபம் இல்லை. வருத்தமும் இல்லை. ஆனால் ஒருவித ஆச்சரியம் மட்டும் ஒட்டியிருந்தது.

அந்த ஆச்சரியம் இந்திரஜித்தை அவன் ஒவ்வொரு முறையும் பிரச்சனைகளிலிருந்து காப்பதால் உண்டாகியிருக்கலாம்.

“உனக்கு அதால பெருசா கோவம் எதுவும் வந்த மாதிரி தெரியலயே?”

“எனக்கு கோவம் வரலனு உனக்கு எப்பிடி தெரியும்? என்னமோ சி.சி.டி.வி கேமரா வச்சு பாத்த மாதிரி சொல்லுற?”

மறுமுறையில் நமட்டுச்சிரிப்பு சிரித்தவன் “அப்பிடியே கேமரா வச்சாலும் உன் கிட்ட சொல்லுவேன்னு நீ எப்பிடி எதிர்பாக்குற யசோ?” என்று கேட்டான்.

அதற்கு அவள் பதிலளிக்கும் முன்னர் இடைமறித்தவன் “மேடியோட அப்பா யூ.எஸ்ல இருந்து வர்றார்… அவரோட அப்பாவி மகனை ஒரு நல்லப்பொண்ணோட கையில பிடிச்சுக் குடுத்தா தான் அவருக்கு நிம்மதியாம்” என்று தகவல் கூற

“வாவ்! நல்ல ஐடியா தான்… போன வாரம் சித்தி பேசுறப்போ கூட சொன்னாங்க, மய்யூக்கு வியாழநோக்கம் வந்துடுச்சாம்… அங்கிள் வர்ற டேட் மட்டும் கன்ஃபார்ம் பண்ணு… நான் அம்மா அப்பா சித்தி சித்தப்பாவ சென்னைக்கு வரச் சொல்லிடுறேன்… சட்டுப்புட்டுனு கல்யாணத்தைப் பேசிமுடிச்சிடுவோம்” என்றாள் யசோதரா உற்சாகக்குரலில்.

“எல்லாரோட கல்யாணத்தைப் பத்தியும் விலாவரியா பேசு… நம்ம கல்யாணம் எப்போனு கேட்டா மட்டும் கமிட் ஆன மூவிய முடினு செக் வச்சிடு… இன்னைக்கு இண்டர்வியூல அந்த ஹாரி கலாய்க்குறான்டி” என்று குறைபட்டான் சித்தார்த்.

அதைக் கேட்டு யசோதரா சத்தமாக சிரித்தாள். அதைக் கேட்க அவனுக்கு இன்பமாகவே இருந்தாலும் அவர்களின் திருமண நிகழ்வு கொடுக்கவிருக்கும் இன்பம் அலாதி அல்லவா!

யசோதரா அவனது எண்ணம் புரிந்தவளாக “எதுக்கு கமிட் ஆன மூவிய முடிச்சப்புறம் மேரேஜ் பண்ணிக்கலாம்னு சொல்லுறேன்னு உன் மரமண்டைக்கு உறைக்கலயா ஹீரோ? நீ உன்னோட ஷூட்டிங் ஷெட்யூல் முடிஞ்சதும் ஹப்பாடானு உக்கார்ற ஆள் இல்ல… அதுக்கு அப்புறம் மூவிய மார்க்கெட் பண்ணுறதுக்கு இண்டர்வியூ குடுக்குறது, ஆடியோ லாஞ்ச்ல கலந்துக்குறதுனு இன்னும் சில சர்வீசையும் சேர்த்தே செய்யுற… அதேல்லாம் முடிஞ்சு மேரேஜ் பண்ணிக்கிட்டா நம்ம கொஞ்சநாளுக்கு இந்த மீடியா வெளிச்சத்துல இருந்து தனியா போய் லைஃபை என்ஜாய் பண்ணலாமேனு யோசிச்சேன்” என்றாள்.

“என்ன ஒரு தொலைநோக்கு பார்வை! நாட் பேட்… எனி ஹவ் மூவி வேலை எல்லாம் முடிஞ்சுது… இன்னும் ஒன் மன்த்ல மத்த டெக்னிக்கல் ஒர்க்கும் முடிஞ்சுடும்… அப்புறம் ஆடியோ லாஞ்ச், மூவி ரிலீஸ்னு நாள் வேகமா போயிடும்… இந்த தடவை ப்ரஸ் ஸ்க்ரீனிங்ல (Press screening) நீயும் என் கூட இருந்தா நான் ரொம்ப சந்தோசப்படுவேன்” என்றான் சித்தார்த்.

யசோதராவோ என்ன நடந்தாலும் அவனது படத்தின் பத்திரிக்கையாளர் காட்சியில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று மறுத்தாள். சித்தார்த் ஆச்சரியத்துடன் ஏன் என்று வினவ

“என்னால உன் மூவில வர்ற ரொமான்ஸ் சீன்சை பாக்கமுடியாது தெய்வமே…. நார்மல் மூவினா கூட பரவால்ல… இது லவ் அண்ட் லவ் ஒன்லினு சொல்லியே எடுத்த மூவி… அப்போ எப்பிடி என்னால பாக்கமுடியும்?” என்று குறைபட்டாள் யசோதரா.

“ஓ! பொறாமையாக்கும்?” என்று கேலி செய்த சித்தார்த் “அது வெறும் ஆக்டிங் யசோ” என்றான் தண்மையாக.

யசோதராவுக்கும் இது சிறுபிள்ளைத்தனம் என்பது புரிந்தாலும் சில விசயங்களை அவளால் எளிதாக எடுத்துக்கொள்ளமுடியாது. தனக்குச் சொந்தமானவன் இன்னொரு பெண்ணுடன் நெருக்கமாக நடித்தாலும், அது நடிப்பு தான் என்று அவளுக்குப் புரிந்தாலும் அவளது மனதால் ஏற்க முடியவில்லை.

மனித மனதின் விசித்திரமே அது தான். கூடவே அவர்கள் இருவரும் சேர்ந்து எங்கேயும் சென்றுவிட்டால் அது ஊடகங்களுக்குக் கொண்டாட்டமாகிவிடும். இதில் சித்தார்த் நடித்த படத்தின் பத்திரிக்கையாளர் காட்சிக்குச் சென்றுவிட்டாலோ கேட்கவே வேண்டாம்!

“ஆக்டிங்னு எனக்கும் தெரியும்… ஆனா என்னால அக்செப்ட் பண்ணிக்கமுடியாது… அதோட உன்னோட சைக்கோ ஃபேன்ஸ் உன்னையும் என்னையும் சேர்த்துப் பாத்துட்டா அந்தப் போட்டோவ வச்சே இன்னும் ஆறு மாசத்துக்கு இஷ்டத்துக்கு அடிச்சுவிடுவாங்க… இதுல்லாம் தேவையா?” என்று கூறி சித்தார்த்தின் ரசிகர்களுக்கும் ஒரு குட்டு வைத்தாள் யசோதரா.

யசோதராவின் மனதைப் புரிந்துகொண்ட சித்தார்த்தும் அதற்கு பின்னர் அவளை வற்புறுத்தவில்லை. ஆனால் தன் மீது அவள் கொண்ட நேசத்தை அந்த ஒற்றை உரையாடல் உறுதிபடுத்திவிட்டது என்பதை உணர்ந்தவன் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்ந்தான். ஒரு மாதத்திற்கு முந்தைய திடீர் மழை இரவில் அவள் அளித்த முத்தம் இன்றும் இதழில் தித்திப்பை பரவ வைப்பது போன்ற உணர்வு! அதை யசோதராவிடம் கூறி அவளது வெட்கச்சிரிப்புடன் கூடிய இரவு வணக்கத்தைக் கேட்டுவிட்டு அழைப்பை முடித்தவன் நிம்மதியான நித்திரையில் ஆழ்ந்தான்.

மழை வரும்☔☔☔