அன்பின் ஆழம் – 36.2

சனிக்கிழமை காலை, வழக்கம் போல ஹரி, அலுவலகம் புறப்பட தயாரானான். தன்னவளை பார்க்க, மனம் கடந்து தவித்தது. பத்திரத்தில் பெயர் மாற்றும் வரை பேசமாட்டேன் என்று சொன்னவளின் முகத்தையாவது பார்க்கலாம் என்று தோன்றியது அவனுக்கு.

அவனுக்கு பருக காபி கொண்டு வந்த வாசுகி, “மதியம் வரப்ப, மீராவ அழைச்சிட்டு வா!” அலட்டல் இல்லாமல் சொன்னவளின் முகத்தை பிரமிப்பாய் பார்த்தான் ஹரி.

“அம்மா!” கேட்டது சரியா என்று யோசித்தான்.

“நீ செஞ்ச தப்புக்கு, பாவம், அவ என்ன செய்வா… அது தெரியாம, நான் அவகிட்ட கடுமையா பேசிட்டேன். அதுக்கு மன்னிப்பு கேட்கணும்!” விளக்க,

அம்மா வீட்டுப்பத்திரத்தை பற்றி எதுவும் பேசாதது கொஞ்சம் வருத்தமாக இருந்த போதிலும், அவள் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுவதை எண்ணி, மகிழ்ந்தான். அழைத்து வருகிறேன் என்று சொல்லி, உற்சாகமாய் புறப்பட்டான்.

அன்று அரை நாள் என்பதால், மதியவுணவு இடைவேளை இல்லை. வரதனிடம் பேசியதை பற்றி, மீரா தானே முன் வந்து கேட்கும் வரை, எதுவும் சொல்லக்கூடாது என்று நினைத்த அரவிந்தன், மீட்டிங்க் என்று சாக்கு சொல்லி, அவளிடமிருந்து தள்ளியே இருந்தான். (தோழியிடம், அவ்வளவு பயம் அவனுக்கு…)

 கீதாவும், அன்று விடுப்பு எடுத்திருந்தாள். கோபத்தின் உச்சியில் இருக்கும் தன்னவளுடன் பேச, அது மிகவும் சாதமாக இருந்தது ஹரிக்கு.

“மீரா! மதியம் என்னோட வீட்டுக்கு வா!” திடமாய் சொன்னான் ஹரி.

“நான் சொன்னத செஞ்சியா?” கணினியிலிருந்து தலைத்திருப்பாமல், பதில் கேள்வி கேட்டாள்.

தழைந்து பேசினால், தலையில் ஏறி உட்காருவாள் என்று அவள் குணம் அறிந்தவன், வேகமாக, அருகில் இருந்த சுழல் நாற்காலியை இழுத்து, அவள் அருகில் அமர்ந்தான்.

“கண்டிப்பா செய்யறேன் டி. என்ன நம்பு மீரா. உன் வேதனை எனக்கு புரியாம இல்ல… ஆனா, இந்த மாதிரி நேரத்துல தான், நமக்குள்ள நல்ல ஒற்றுமை இருக்கணும்…அப்போதான் வெளியிலிருந்து வரும் பிரச்சனைகளுக்கு, சேர்ந்து தீர்வு கண்டுபிடிக்க முடியும்.” அவள் கைவிரல்களை கோர்த்தவன், அம்மாவிடம் பேசியதை பற்றி எல்லாம் சொல்லி,

“அவங்க பயத்த போக்க, அவங்க பேருலேயே, வீட்ட மாற்றி எழுத போறேன். அவங்களா விருப்பப்பட்டு, நமக்கு கொடுக்கறப்ப பார்த்துக்கலாம்..சரியா!” என்று, ஹரி மனதில் இருந்த திட்டத்தை, சொல்ல, அவள் பூரித்து போனாள்.

மீரா உடன்வர சம்மதம் சொன்னதும், அவன் முகத்தில் ஒரு குறும்பு புன்னகை.

“அப்போ, முதல்ல மாமியாரும் மருமகளும் சமரசம் ஆனவுடனே, நம்ம எல்லாம் சேர்ந்து போய், என் மாமனார பார்த்து பேசலாம்.” என்று கண்சிமிட்டினான்.

“அப்போ, இன்னைக்கு, எழுத்தாளர் எனக்கு ஐலவ்யூ சொல்லிடுவாரு!” அவளும் பதிலுக்கு வம்பிழுக்க,

அவனுக்கும், உடனே சொல்ல வேண்டும் என்று தான் ஆசை. அம்மா மனதில் எதை நினைத்து அழைக்கிறாள் என்று புரியாதவனுக்கு, சிறு தயக்கம். இருந்தும் மீராவின் நம்பிக்கையை உடைக்க அவனுக்கு மனம் வரவில்லை.

“ம்ம்… கண்டிப்பா! ஆனா, ராஜகுமாரி கண்சிமிட்ட கூடாது; வெட்கப்படக்கூடாது!” நிபந்தனைகளை நினைவூட்ட, அத்தருணமே அவள் கன்னங்கள் சிவந்தது.

அலுவலகத்தில் இருப்பது நினைவுக்கு வர, “சரி! முதலாளி பொண்டாட்டியே! சொந்த கதை பேசுறேன்னு, என்ன பணி நீக்கம் செஞ்சிட போறீங்க!” கிண்டலாய் அவள் காதில் கிசுகிசுத்து எழுந்தான்.

அவன் கையை பிடித்து தடுத்தவள், “இந்த வேலை போச்சுன்னா என்ன எழுத்தாளர் கணவரே… எழுதி, எழுதியே, இந்த ராஜகுமாரிய பார்த்துக்க மாட்டீங்களா!” பதிலுக்கு கேட்டு கண்சிமிட்டினாள்.

அவனும் கன்னத்தில் குழிவிழ சிரித்து நகர, முதல் முறையாக, முகத்திற்கு நேராக காதல் வசனம் பேசிவிட்டு நகருபவனை, கண்கொட்டாமல் பார்த்து ரசித்தாள் மீரா.

கதவை திறந்தவள், மீராவை பார்த்தப்படி மௌனமாய் இருந்தாள். மீராவும், என்ன சொல்லி தொடங்குவது என்று தடுமாறிக்கொண்டே உள்ளே நுழைந்தாள். தான் தொடங்கிய பிரச்சனைக்கு, தானே தான் முடிவுகட்ட வேண்டும் என்று உணர்ந்தாள் வாசுகி.

“மன்னிச்சிரு மீரா! மென்மையாக பேசினாள் வாசுகி.

அவளை திடமாக பார்த்து, அருகில் நடந்தாள் மீரா. வாசுகியை வலிய சோஃபாவில் அமர வைத்து, அவள் விரல்களை தன்னுள் கோர்த்து,

“நான், உங்கள, என்னோட அம்மாவுக்கு நிகரா பார்க்குறேன். என் மேல கோபப்படறதுக்கும், என்ன திட்டுறத்துக்கும், உங்களுக்கு, எல்லா உரிமையும் இருக்கு… அம்மா மகள்கிட்ட மன்னிப்பு கேட்க கூடாது!” திடமாய் சொல்ல,

வாசுகியின் மனதில், பல எண்ணோட்டங்கள். இரவு உறங்க போகும் போதே, மகன், மீராவை பற்றி சொன்னதை எல்லாம் மனதில் அசைப்போட்டவள், மீராவின் நற்குணத்தை உணர்ந்தாள். இன்று அவள் பேச்சில்,அது மேலும் ஊர்ஜிதமானது.

“இவனும் இந்த அம்மாகிட்ட, ஒளிவுமறைவு இல்லாம, பேசி இருந்தா, இந்த அளவுக்கு பிரச்சனை வளர்ந்திருக்காதில்ல..” மகனை முறைத்தபடி, மருமகளுக்கு பதில் சொன்னாள் வாசுகி.

‘அப்படியே சொல்லி இருந்தாலும், வீட்டுப்பத்திரத்த எடுத்து, உன் மருமகள் கிட்ட கொடுத்திருப்பியா’ மனதில் எண்ணியவன், மௌனம் சாதித்தான்.

“நீ செஞ்சது தப்பு தான் ஹரி!” தன்னவனை கண்டித்தவள், வாசுகி பக்கம் திரும்பி, “நீங்க பேசினதும் தான் மா!” என்றாள், கராராக.

மன்னிப்பு கேட்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு, இப்படி கடிந்து கொள்கிறாளே இவள், என்று ஆழமாய் பார்த்தாள் வாசுகி.

செய்த குழப்பம் வரை போதும் என்று நினைத்தவன், பெண்கள் பேச்சில் தலையிடாமல் நின்று வேடிக்கை பார்த்தான்.

மீரா மென்மையாக பேசினாள். “இந்த மாதிரி ஆயிரம் விஷயம், உங்க கவனத்திற்கு வரும். தெரிஞ்சவங்க, தெரியாதவங்கன்னு யார் வேணும்னாலும் எங்கள பற்றி, உங்ககிட்ட சொல்லலாம்; அது உண்மையாவும் இருக்கலாம், பொய்யாவும் இருக்கலாம்… அதனால, நம்ம சண்டை போடுறதும், சமாதானமாகுறதும் கூட நம்ம நடைமுறை வாழ்க்கையில நடக்குற எதார்த்தமான விஷயம் தான்… ஆனா அதெல்லாம் மீறி, உங்களுக்கு என் மேல அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கணும்…

இந்த வீட்டிற்கும், வீட்டோட உறுப்பினர்களின் நன்மைக்கும் மட்டும் தான் நான் எப்பவும் பாடுபடுவேன்னு, என்ன பற்றி, நீங்க உறுதியா நினைக்கணும்… எதுக்காகவும், யாருக்காகவும், என்ன விட்டுக்கொடுத்து பேசிடவே கூடாது…” சொன்னவளின் தொண்டை அடைத்தது;

கேட்டவள், பேச்சற்று போனாள். மனதில் உள்ள அனைத்தையும் தெளிவாய் பேசிவிட வேண்டும் என்று நினைத்தவள், சுதாரித்துக்கொண்டு,

“அதே மாதிரி, நமக்குள்ள ஏற்படுற, கருத்து வேறுபாடுகளுக்கு, நாமாளே தான் பேசி தீர்த்துக்கணும்; ஒவ்வொரு முறையும், ஹரி வந்து பரிசல் செய்யணும்னு எதிர்ப்பார்க்ககூடாது… சரியா!” என்று பெருமூச்சுவிட்டாள் மீரா.

இத்தனை பக்குவமாகவும், வெளிப்படையாகவும் பேசுபவளிடம் தானும், தன் மனதில் இருப்பதை தயக்கமின்றி சொல்லிவிட வேண்டும் என்று நினைத்தாள் வாசுகி.

“புரியுது மீரா! நீ சொல்ற அத்தனையும் சரி தான் மா! நானும் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும் மா!” என்றாள்.

மீராவும் மென்மையாக தலையசைக்க, ”நீ அடிக்கடி கேட்பியே… ஹரி எழுதின கதையில வர மாமியார் மாதிரி என்ன பார்த்துப்பீங்களான்னு… அந்த ஒற்றுமைக்கான ரகசியம் என்னன்னு உனக்கு தெரியுமா?” கேள்வியாய் தொடங்கினாள்.

அதை கேட்டதும், மீராவிற்கு, ஹரி புத்தக வெளியீட்டில் சொன்ன பதில் தான் நினைவுக்கு வந்தது.

“அது… நீங்க பாட்டியோட சண்டை போட்டு…ஹரி அத கட்டுரையா எழுதி… டீச்சர், உங்கள கூப்பிட்டு…” விட்டுவிட்டு பேசினாள் மீரா.

அதை கேட்டு சிரித்தவள், “அதெல்லாம் சரி! ஆனா, அதுக்கு அப்புறம் சண்டையே போடாம இருந்தது எப்படி?” மீண்டும் கேட்டாள்.

“எங்க, ஹரி எல்லாத்தையும் எழுதி டீச்சர்கிட்ட கொடுத்திடுவானோன்னு பயந்து….” சந்தேகமாக கேட்க, வாசுகி இன்னும் உரக்க சிரித்தாள்.

“அது, அவன் அப்பா சொன்ன கட்டுக்கதை…உண்மை என்னன்னா…” தொடங்கியவளை ஆழமாய் பார்த்தனர் காதல் ஜோடிகள்.

“கணவன்-மனைவி, உங்களுக்குள்ள நடக்குற எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லணும்னு அவசியம் இல்ல… ஆனா, எந்த ஒரு விஷயம், மூணாவது மனுஷங்க, மூலமா என் காதுக்கு வந்தா, அது நமக்குள்ள மனஸ்தாபத்துல போய் முடியும்னு நினைக்கறீங்களோ, அது எப்பேர்ப்பட்ட விஷயமா இருந்தாலும், தயவு செய்து யோசிக்காம எங்கிட்ட பகிர்ந்துக்கோங்க.

அப்படி நீங்க முன்னாடியே சொல்லிட்டா, அந்த விஷயம் வேறு யாராவது மூலமா, நான் கேள்விபட்டா கூட, அவங்க கிட்ட, ‘ஓ..அது எனக்கு தெரியுமே… ஹரி எங்கிட்ட சொல்லிட்டானே….மீரா எங்கிட்ட எப்பவோ சொல்லிட்டாளே’ அப்படின்னு கம்பீரமா தலை நிமிர்த்தி சொல்லுவேன்.” என்று பெருமூச்சுவிட்டவள்,

“இனி எதையும் என்கிட்டேந்து மறைக்க மாட்டீங்களே!” மென்மையாக கேட்க, ஹரி அவள் இடது பக்கம் வந்து அமர்ந்து, “மன்னிச்சிரு மா” என்று சொல்லி அவள் தோளில் சாய்ந்தான்.

அவள் சொன்ன அறிவுரையில், மீரா, தன் தந்தையிடம் பிடிவாதமாய் வீடு வாங்கியதை பற்றி கூறாமல் இருந்தது நினைவுக்கு வர, வருந்தினாள். அவள் வாசுகியின் வலது தோளில், சாய, அவர்களை இரு புறமும் சேர்த்து அணைத்தவள்,

‘இவர்களா, என்னை முதியோர் இல்லத்தில் சேர்ப்பார்கள் என்று பயந்தேன்’, மனதில் நினைத்து வருந்த, அவள் கண்ணிலும் நீர் கசிந்தது.

இருபது நிமிடங்கள், அவரவர் சிந்தையில் கரைய, முதலில் சுயத்திற்கு வந்த வாசுகி, மீராவை டீ தயாரிக்க சொல்லி, தன் அறைக்குள் நகர்ந்தாள்.

பத்து நிமிடத்தில் வெளியே வந்தவள், மீராவிடம் பத்திரங்களை நீட்டி, “தெரிஞ்சோ, தெரியாமலையோ, இந்த வீட்டுப்பத்திரத்த தாலிகயிறுக்கு சமமா பாதுகாப்பேன்னு அன்னைக்கு சொன்ன… அதனால, நம்ம வீடு, உன் பேருலேயே இருக்கட்டும் மா!” என்று விளக்கினாள்.

“ஆனா ஹரி…இதுக்கு…” அவன் திட்டத்தை வாசுகியிடம் சொல்ல வர, ஹரி அவள் கையை அழுந்த பிடித்து, எதுவும் சொல்ல வேண்டாம் என்று தன்னவளுக்கு ஜாடை காட்டினான்.

அவனுக்கு, அம்மாவின், இந்த மனமாற்றத்தை கண்டு ஈடில்லா மகிழ்ச்சி. ஆனால், மீரா சொல்பேச்சு கேட்பவளா.

தன் கையை விலக்கிகொண்டவள், பேசத் தொடங்கினாள். “தாலி கயிறுனா, அது எங்க ரெண்டு பேரோட பந்தத்தின் அடையாளத்தை குறிக்கும்…” தொடங்கியவள், அவன் கையிடுக்கில், தன் கையை வளைத்து, “அப்படி இருக்க, இது என் பேருல மட்டும் இருந்தா, அது எப்படி நியாயமாகும்… ஹரி-மீரா, அப்படின்னு, எங்க ரெண்டு பேர் பேருலையும் மாற்றி கொடுங்க… அது கூட, நாங்க, எங்க கல்யாணத்துக்கு அப்புறம், தம்பதியரா, உங்க கையால வாங்கிக்கறோம்!” அழகாய் மறுத்தது, தன்னவனை பார்த்து கண்சிமிட்டினாள்.

அவனும், மென்மையாய், அவள் தலையில் முட்டி சம்மதம் சொன்னான்.

வாசுகியும், அவர்கள் இதே ஒற்றுமையுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்று வாழ்த்த,

“சரி! கிளம்புங்க! கிளம்புங்க! நேரமாகுது… என் மாமனார பார்த்து பேசி, கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட்டு வரலாம்.” என்றான் ஹரி.

மகன் உற்சாகத்தை கண்ட வாசுகி, “அப்புறம், மீரா…கல்யாணத்துக்கு, டெல்லியில நீ பார்த்த, அந்த செம்மஞ்சள் நிற புடவையும், தாமரை பூ நிற புடவையும் வாங்கிக்க மா!” வாசுகி சொல்ல, அன்று கடையில், அவள் ஏக்கமாய் பார்த்த அத்தனையும், வாசுகி கவனித்து இருக்கிறாள் என்று நெகிழ்ந்தாள் மீரா.

“அதெல்லாம் வேண்டாம் மா!” தாயிடம் சொன்னவன், தன்னவள் பக்கம் திரும்பி, “டெல்லிக்கு நாம ஹனிமூனுக்கு போலாம், சரியா!” என்று அப்பாவியாக கண்சிமிட்டி, “கல்யாணத்துக்கு நீ மயில் கழுத்து நிற புடவையில மிதமான அலங்காரத்துல இருந்தா போதும் மீரா… தலைக்கு மட்டும், தழைய தழைய முல்லை சரம் வெச்சுக்கோ, சரியா…” பேசியவனை கண்கொட்டாமல் பார்த்தாள் மீரா. அரவிந்தன் கல்யாணத்தில் திருவிழா பொம்மை என்று கிண்டல் செய்துவிட்டு, இவ்வளவு துல்லியமாக இரசித்து இருக்கானே என்று பேச்சற்று நின்றாள். அதை கண்டுகொள்ளாதவன் போல, “சரி… சீக்கிரம் ஏலக்காய் டீ போடு…குடிச்சிட்டு கிளம்பலாம்” என்றான்.

மகன் ஓயாமல் ஜாடை பேச்சில், காதல் வசனங்கள் பேசுவதை கவனித்த வாசுகி, அவர்களுக்கு தனிமயை கொடுக்க நினைத்து, உடை மாற்றி கொண்டு வருவதாய் சொல்லி நகர்ந்தாள்.

தன்னவனின் மார்க்கமான பேச்சில், மெல்ல மெல்ல சிவக்கும், முகத்தை மறைத்து டீ தயாரிக்க நகர்ந்தாள் மீரா. அவனும் தன் அறையை நோக்கி, நகர, தப்பித்துவிட்டோம் என்று நினைத்து பெருமூச்சுவிட்டாள்.

ஆனால், போன வேகத்தில் திரும்பினான் ஹரி. அவனிடமிருந்து, தப்பித்து செல்ல எத்தனித்தவளை, கைப்பிடித்து தடுத்தான் ஹரி.

“எங்க டி ஓடுற? வாய்விட்டு கேட்கமாட்டியா?” பார்வையில் குறும்பு வழிந்தோட கேட்டான்.

“எழுத்தாளரே! கேட்கணும்னு தான் ஆசை… அப்புறம் மிஸ்டர்.வரதன் நேருல பார்த்து பேசினதுக்கு அப்புறம் தான் சொல்லுவேன்னு நிபந்தனை போடுவீங்க…எதுக்கு உங்ககிட்ட மொக்க வாங்குவானே…”உதட்டை சுழித்து சலித்து கொண்டாள் மீரா.

“வாய்தான் டி உனக்கு… சொல்றதுக்கு முன்னாடியே, முகத்துல எவ்வளவு வெட்கம் பாரு…” சொன்னவன், அவள் கன்னங்களை வருடி, கொண்டுவந்த நாட்குறிப்பு ஒன்றை அவளிடம் நீட்டினான்.

“என்னது டா இது?” கண்கள் அகல பார்த்தாள்.

“ம்ம்… பிரிச்சு பாரு…” மென்மையாக சொல்லி, அவள் முகத்தை இமைக்காமல் பார்த்தான் ஹரி.

ஐ லவ் யூ மீரா! (சொல்ல நினைத்த காதல்; சொல்லமுடியாத தருணங்கள்;) என்று முதல் பக்கத்தில் கண்டவளின் கண்ணோரம் மழைச் சாரல்.

அதில் சில பக்கங்களை புரட்டினாள் மீரா. ஒவ்வொரு பக்கத்திலும் அவன் கைப்பட எழுதிய குட்டி கதைகள்; இல்லை, உண்மை சம்பவங்கள்;

முதல் புத்தகம் வாங்கிய போது, அவன் பிறந்த நாள் அன்று, அவளுக்கு பணிமாற்றமான போது, என்று சில குறிப்பிட்ட நேரங்களிலும், வழியனுப்ப வந்து கேட்டில் நின்ற, எண்ணிலடங்கா பல நேரங்களிலும் என, அவன் ‘ஐலவ்யூ’ சொல்ல நினைத்த ஒவ்வொரு தருணத்தை பற்றியும் , அழகாய் வர்ணித்து எழுதியிருந்தான்.

“அப்போ, இது தான் நீ எனக்கு எழுதின கதையா?” பக்கங்களை புரட்டிய படி, அவள் வினவ,

“ம்ஹூம்!” என்று மென்மையாய் தலையசைத்தவன், அவள் முகத்தை கையிலேந்தி, “இது சிறுகதை… அது முடிவே இல்லாத தொடர்கதை!” என்று மென்மையாக விளக்கி, தலைப்பை யூகிக்க சொன்னான்.

“ம்ம்…ம்ம்….” ஆழமாய் யோசித்தவள், “அன்பின் ஆரம்பமே…இல்ல அழகே ஆதாரமே” என்று யூகிக்க, இல்லை என்று தலையசைத்தவன், வாய்விட்டு சிரித்து,

இன்னும் அழுத்தமாய், அவள் முகத்தை கையில் பிடித்தான். “இப்போ நான் அந்த மூணு வார்த்தைய சொல்ல போறேன். கண்சிமிட்டாம, வெட்கபடாம இரு… நானே, அந்த தலைப்ப சொல்றேன்… சரியா?” ரகசியமாய் சொல்ல,

அவளும், கண்சிமிட்டி விட கூடாது என்று மிகவும் கவனமாய் இருந்தாள்.

“மீரா…. ஐ… லவ்… யூ….” ஒவ்வொரு வார்த்தையும் நிதானமாய் அவன் உதடுகள் மென்மையிலும் மென்மையாய் உச்சரிக்க, அதை பார்த்த கண்ணின் இமைகள், பட்டாம்பூச்சியின் சிறகுகளை காட்டிலும் வேகமாய் படபடத்தது.

‘எத்தனை நாள் தவம்? சொல்ல நினைத்தவனுக்கும்; கேட்க நினைத்தவளுக்கும்;’

சொன்னவன் விழியில், காதல் பெருக்கெடுத்து வழிய, அதில் நாணம் கொண்டவள், முகத்தை தன்னவனின் மார்பில் சாய்த்து, அவனை இறுக அணைத்தாள். பதிலுக்கு காற்று புகாத அளவிற்கு, இன்னும் இறுக்கமாய் அணைத்தவனின் மனம், அவளை தன்னுடனே வைத்துக்கொள்ள வேண்டும் என்று பேராசை கொண்டது.

ஔகம் என இசைத்த பெற்றோரின் எதிர்ப்புகளிலும்

ஓதனம் கொண்டு கம்பீரமாய் கானம் பாடி உணர்த்தினர்,

ஒற்றுமையே, காதலின் வலிமை என்று-தன்னுடன்

ஐக்கியமானவளி(னி)ன் கரம் பிடித்து,

ஏகசமனை சிந்தனைகளோடு, வழியில் வந்த,

எண்ணிலடங்கா சவால்களையும் எதிர்கொண்டாள்(ன்)-பிறர்

ஊசிக்குத்தல் பேச்சால் மனம் தளரவும் இல்லை-மனஸ்தாபங்களால்

உள்ளத்தில் அன்பும் குறையவில்லை;

ஈண்டுநீர் ஆழமும் குறைவு தான் – இவர்கள்

இதயத்தில் சுமந்த வலிகளை கரைக்க;

ஆழ்மனதில் தேக்கி வைத்த ஆசைகளை எல்லாம் நிறைவேற்றியது,

அவர்களின் அசைக்க முடியாத அன்பின் ஆழம்…

பின்குறிப்பு:

ஔகம்- இடைப்பாட்டு

ஓதனம் – பெருமை

ஏகசமனை – ஒரு நிகர்

ஈண்டுநீர் – கடல்