அன்பின் ஆழம் – 35.2

மகள் சிந்தையிலேயே மிதந்தவர், வணங்காமல் குளித்துவிட்டு வந்தார். அலுவலகம் சென்றால், வேலையில் கவனம் செலுத்த முடியாது என்று நினைத்தவர், வீட்டிலேயே இருக்க தீர்மானித்தார். தான் கையொப்பமிட்ட காசோலை ஒன்று உடனடியாக வேண்டும் என்று, ஊழியர் ஒருவர் தொடர்புகொள்ள, அதை வீட்டிற்கு வந்து வாங்கிக்கொள்ளும் படி, வரதன் கேட்டுக்கொண்டார்.

அவரிடம் கொடுத்து அனுப்ப வேண்டிய படிவங்களை எடுத்துவைக்க, அந்த அலமாரியில், ஹரி தந்த வீட்டுப்பத்திரம், அவன் தனக்காக எழுதிய கடிதம் எல்லாம் தென்பட்டது.

உங்களுக்கு, எப்போ, எங்க காதல ஏத்தக்கணும்னு தோணுதோ, அப்போ, இந்த கடிதத்த பிரிச்சு படிங்க’ ஹரி அன்று சொன்னது நினைவுக்கு வர, இதழோர சிரிப்புடன், அதை கையில் எடுத்தார்.

சோஃபாவில் அமர்ந்து படித்தவர் கண்களில், தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தோட, தொண்டையும் அடைத்தது.

“நிர்… நிர்ம… நிர்மலா!” மனைவியின் பெயரைக்கூட முழுமையாக உச்சரிக்க முடியாத அளவிற்கு, மூச்சடைத்தது. அதை கண்டு பதறி ஓடி வந்தவள், பருக தண்ணீர் கொடுத்து,

“பொறுமையா பேசுங்க… இழுத்து மூச்சு விடுங்க….” நிதானமாக இருக்கும் படி சொல்லிக்கொண்டே, அவர் நெஞ்சை நீவி விட்டாள்.

அவள் கையை பற்றிக்கொண்டவர், “பயப்படாத மா! இத படிச்சு பாரு… உனக்கும், பூரிப்புல அப்படி தான் பண்ணும்…” சொல்லி, ஹரி எழுதிய கடிதத்தை கொடுத்தார்.

அதை படித்தவள் கண்ணிலும் ஈரம்.

அன்புள்ள மாமா!

எங்க காதலுக்கு சம்மதம் சொல்ல நெனச்சதுக்கு அப்புறம் தான் இந்த கடிதத்த பிரிச்சு படிக்கறீங்கன்னு நம்பறேன். அதனால, ‘அங்கிள்”ன்னு கூப்பிடாம, உரிமையா உங்கள மாமான்னு கூப்பிடறேன். ஒருவேள கோபத்துல பிரிச்சு இருந்தாலும் பரவாயில்ல. கிழிச்சு போடறதுக்கு முன்னால, ஒரு தடவ முழுசா படிங்க. ரொம்ப முக்கியமான விஷயங்கள் எழுதிருக்கேன்.

மீரா, என்ன விரும்புறேன்னு சொல்றப்ப அவ உணர்ச்சிவசப்பட்டு பேசுறான்னு தான் நெனச்சேன். நீங்க என்ன பிடிக்கலன்னு சொன்ன அப்பவும், எனக்கு எந்தவித வருத்தமும் இல்ல. காரணம், ஒரு அப்பாவா, உங்க பொண்ணுக்கு சிறப்பான வாழ்க்கை அமைச்சு கொடுக்கணும்னு நெனச்சீங்க… எனக்கு மீராவ ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தும், உங்க எதிர்ப்பார்ப்பு நியாயமானதுன்னு தான் நான் ஒதுங்கிக்க முடிவு செஞ்சேன்.

விட்டுடலாம், இதெல்லாம் சரியா வராதுன்னு, நான் சொன்னதுக்கு அப்புறம், அவ செஞ்சதெல்லாம் பார்த்து தான், அவ என்ன எந்த அளவுக்கு விரும்புறான்னு நான் புரிஞ்சுகிட்டேன்.

என் எழுத்து திறன் மேல, எனக்கே நம்பிக்கை இல்லாத போது, ‘உன்னால முடியும் ஹரி’ன்னு என்ன முழு நேரமும் எழுத சொல்றா. எங்க அப்பா என் மேல வெச்ச அதே நம்பிக்கைய, மீரா பிடிவாதத்துல பாக்குறேன். எனக்காக பிடிச்ச வேலைய விடக்கூட துணிஞ்சிட்டா. இவ்வளவு ஏன், உங்க கிட்டையே பேசாம இருக்கா.

என்மேல கண்மூடித்தனமான அன்பும், நம்பிக்கையும் கொண்டவளுக்காக எழுதணும்னு தோணுது; அதே சமயத்துல, நீங்க எதிர்ப்பார்க்குறா மாதிரி நிச்சயமா உங்க பொண்ண நல்லா பார்த்துப்பேன்னு சொல்லணும்னு தோணுது.

இன்னைய தேதியில, சொல்லத்தான் முடியும். இன்னும் சரியா ஒரு வருஷத்துல, நிச்சயமா, மீராவுக்கு ஏத்தவனா, நான் என்ன உயர்த்திப்பேன். ஆனா, இன்னைக்கே, அவ மேல எனக்கு இருக்குற அன்பு ஆழமானதுன்னு, நிரூபிக்கணும்னு நினைக்கறேன். அதுக்காக தான் இந்த கடிதத்தோட ஒரு பத்திரம் இணச்சிருக்கேன்.

என் அப்பா, எனக்காக கொடுத்த வீட, மீரா பேருல மாற்றி எழுதிருக்கேன். கடன் தொகைக்காக தான் நான் வீட்டு பத்திரம் கொடுத்திருக்கறதா, மீரா நெனச்சிட்டு இருக்கா; ஆனா, அந்த வீடு அவளுக்கு தான்; அவளுக்கு மட்டும் தான். அது, அவ என் மனைவியா வந்தாலும் சரி, இல்ல தோழியாவே இருந்தாலும் சரி. என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல.

அவ என் மேல வெச்சிருக்கற அதீத அன்புக்கு, எத கொடுத்தும் ஈடுகட்ட முடியாது தான். ஆனா, என்னால முடிஞ்ச வழியில, என் அன்ப வெளிப்படுத்தி இருக்கேன். இது வெறும் ஆரம்பம் தான். அள்ள அள்ள குறையாத அன்ப அவளுக்கு வாழ்நாள் முழுக்க கொடுக்கணும்னு ஆசையா இருக்கு; பதிலுக்கு அவளோட அன்புக்கு அடிமையான மனசு, அது கிடைக்காதான்னு கடந்து தவிக்குது. இதெல்லாம், உங்க சம்மதம் இல்லாம சாத்தியமே இல்ல.

நம்பி உங்க பொண்ண எனக்கு கல்யாணம் செய்து கொடுங்க மாமா, ப்ளீஸ்….

உங்கள் சம்மதம் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும்,

ஹரி.

கடிதத்தை படித்து மடித்தவள், இறுக கண்மூடி பெருமூச்சுவிட்டு, “இத்தனை நற்குணம் படைத்தவனை போய், வரதட்சனைன்ற பேருல, நம்ம பொண்ணோட சேமிப்பு எல்லாம் கேட்குறான்னு சொல்லிட்டீங்களே!” மென்மையாக, அவர் பேசியதை நினைவூட்டினாள்.

“தப்பு தான் மா! அவன்கிட்ட மன்னிப்பு கேட்கவாவது பேசணும். காலம் தாழ்த்தாம பேசிடலாம்!” தன் தவறை ஒப்புக்கொள்ள, நிர்மலா உடனே தலையசைத்து சம்மதம் தெரிவித்தாள்.

வரதன் கைப்பேசியில் மீராவை அழைக்க,

“என்ன செய்யறீங்க!” பதறியவள், கைப்பேசியை பிடுங்கி, அணைத்து, “நான் உங்கள மன்னிப்பு கேட்க சொன்னது, ஹரி கிட்ட… உங்க பொண்ணு கிட்ட இல்ல!” திடமாய் சொன்னாள்.

அவள் திட்டம் புரியாமல், குழப்பமாய் பார்த்தார் வரதன். நிர்மலாவே மேலும் பேசினாள். “நாம முதல்ல, ஹரி அம்மாவ போய் சந்திக்கலாம். இப்படிபட்ட நற்குணம் கொண்ட பிள்ளைய பெற்றதுக்கு நன்றி சொல்லி, அவங்ககிட்ட மன்னிப்பு கேட்டு சம்மதம் பேசலாம். எப்படியும் உங்க பொண்ணு, அங்க போயிட்டு தான் வருவா… அவங்க வாயால நம்ம முடிவ தெரிஞ்சுண்டா, ரொம்ப சந்தோஷப்படுவா.” திட்டத்தை சொல்ல,

“நீ சொல்றத எல்லாம் பார்த்தா, பொண்ணுக்கு தண்டனை கொடுக்கறா மாதிரி இல்லையே… பரிசு கொடுக்கறா மாதிரி தானே இருக்கு!” குறும்பாய் கேட்க,

கணவனை பார்த்து மென்மையாய் சிரித்தவள், “இத்தன நாளா பொறுமையா காத்துக்கிட்டு இருந்தவளுக்கு, நம்ம சொல்ற சம்மதம் பரிசு… ஆனா, அவ வாய்விட்டு உங்ககிட்ட மன்னிப்பு கேட்டதுக்கு அப்புறம் தான், நீங்க அவகிட்ட முகம் கொடுத்து பேசணும்!” கறாராக சொன்னாள்.

“இது வேறையா!” வரதன் சலித்து கொள்ள,

“நிச்சயம் மன்னிப்பு கேட்பா… நீங்க சம்மதம் சொல்லிட்டீங்கன்னு தெரிஞ்ச அடுத்த கணமே, அவ பேசினதுக்கு எல்லாம் வருந்துவா பாருங்களேன்!” தாய்க்கே உள்ள உள்ளுணர்வில் அவளே அறியாமல் பேசினாள்.

தனிமையில் வீட்டை வலம் வந்தவளின் சிந்தனை எல்லாம், ஹரி-மீரா காலையில் வாக்கு வாதம் செய்ததை பற்றியே இருந்தது. ஒரு வாரமாய் நீடிக்கும் இந்த பிரச்சனைக்கு, தன்னாலான உதவியை செய்ய வேண்டும் என்று நினைத்தாள் வாசுகி.

‘மீரா சண்டை போடுறதே, ஹரி அவ அப்பாகிட்ட அவமானப்பட்டு நிற்க கூடாதூன்னு தானே… இப்பேர்பட்ட பொண்ணுக்காக, நான் போய் அவங்க அம்மாகிட்ட பேசினா என்ன…” மனதில் நினைத்தவள், அடுத்த கணமே, மீரா வீட்டிற்கு புறப்பட தயாரானாள்.

தடைகள் நீங்கி, பிள்ளைகள், விரைவில் திருமண பந்தத்தில் இணைய வேண்டும் என்று வாசுகி, கணவர் நிழற்படம் முன் நின்று மனதார வேண்ட, வாயிற்கதவு மணி ஒலித்தது.

கதவை திறந்தவள், பட்டு சேலையிலும், மயில்கண் வேட்டி சட்டையிலும், ஜோடியாய் நிற்கும் தம்பதியரை பார்த்து ஸ்தம்பித்து போய் நின்றாள். நிர்மலாவை அன்று பார்த்தவளுக்கு, அவளுடன் வந்திருப்பது யார் என்று அறிமுகம் செய்ய தேவை இருக்கவில்லை.

“வாங்க! வாங்க! உள்ள வாங்க!” வாயார அழைத்தாள் வாசுகி.

மென்சிரிப்புடன் உள்ளே நுழைந்தவள், கொண்டுவந்த பூ, பழம், வெற்றிலை, பாக்கு, முதலிய பொருட்களை ஒரு தாம்பாளத்தில் வைத்து, கணவரிடம், அதை சேர்த்து பிடிக்கும் படி ஜாடை காட்டினாள். இருவரும் அதை வாசுகி பக்கம் நீட்ட,

“எங்க பொண்ண, உங்க மருமகளா ஏத்துப்பீங்களா?” வரதன் பணிவாக கேட்டார்.

அதை கேட்டவள் விழியில் கண்ணீர் பெருக்கெடுத்தது. “நீங்க இத சொல்லணும்னு தானே, இத்தன நாளா காத்துக்கிட்டு இருக்கேன்!” நெகிழ்ந்தவள், தாம்பூலத்தை பெற்றுகொண்டு, அவர்களை உட்காரச்சொன்னாள்.

உட்கார்ந்தவர் கண்கள் வீட்டை அலசியது.

‘காதலிக்கு, தன்னிடம் இருந்த ஒரே வீட்டையும் எழுதிக்கொடுத்து, மற்றொரு வீட்டை தன் சொந்த உழைப்பில் வாங்கி தர நினைப்பவனை என்னவென்று சொல்ல’ மனதில் நினைத்தார். கண்கள், எதிரில் இருந்த ஷோகேஸில் வந்து நிற்க, அதில் ஹரி, வாங்கிய எண்ணற்ற கோப்பைகளுக்கும், விருதுகளுக்கும் நடுவில் தாரகையாய் மின்னியது அந்த மீரா சிலை. மையப்பகுதியில் இருந்த அந்த சிலையே, ஹரி, தன் மகளுக்கு, அவன் வாழ்க்கையில் கொடுக்கும் ஸ்தானத்தை எடுத்துரைத்தது.

வாசுகிக்கு பதில் சொல்ல திரும்பியவர், “தவறு தான் மா! இத்தன நாளா, அவங்க அன்ப புரிஞ்சிக்காம இருந்துட்டேன்!” என்றார்.

மனம்திறந்து பேசும் வரதன் குணத்தை மெச்சியவள், “தவறு, உங்க மேல மட்டும் இல்ல… என் மேலையும் தான்!” சொன்ன வாசுகியை இருவரும் ஆழமாய் பார்த்தனர். அவர்களை பார்த்து விரக்தியாக சிரித்தவள், “உங்களுக்கு ஒரு வாரம் முன்னாடி சம்மதம் சொன்னதுனால, நான் செஞ்சது எல்லாம் சரின்னு ஆகாது!” என்றாள்.

இப்படியே விட்டால், ஹரி-மீரா வரும் வரை, இவர்கள், இப்படியே புலம்பிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்த நிர்மலா, குறுக்கிட்டாள்.

“எல்லாத்துக்கும் காலம் வரணும். நம்ம பசங்களுக்கு இப்போ தான் அது வந்திருக்கு. இதுல அவங்க பொறுமையும், நம்பிக்கையும் தான் நம்ம பாராட்டணும்.” என்றதும், இருவரும் தலையசைத்தனர்.

சிறிது நேரம், பிள்ளைகளின் அருமை, பெருமைகளை பற்றி அளவளாவி கொண்டிருந்தனர். நிர்மலா புறப்படலாம் என்று ஜாடை காட்ட, வரதன் தான் கொண்டு வந்த பையிலிருந்து, பத்திரங்களை எடுத்தார். அதை வாசுகி பக்கம் நீட்டினார்.

“ஹரி உண்மையிலேயே நற்குணம் படைத்தவர். எந்த நம்பிக்கையில என் பொண்ண, உனக்கு நான் கட்டி தரதுன்னு கேட்டதுக்கு, உங்க வீட்டு பத்திரத்தையே கொடுத்துட்டாரு. பணம் திரும்ப கொடுத்ததுக்கு அப்புறமும் கூட, என் கையால தான் வாங்கிப்பேன்னு அடம்பிடிச்சாரு.” சொல்லி பெருமூச்சுவிட்டவர்,

  “இந்தாங்க மா! என் கையாலேயே பத்திரத்த திருப்பி கொடுத்துட்டேன்னு சொல்லுங்க!” என்றார்.

அதை வாங்க மறுத்தவள், சிரித்த முகத்துடன், “எல்லாம் எனக்கு தெரியும்! அது உங்க பாடு, உங்க மருமகன் பாடு!” உரிமையோடு சொல்ல,

தாயிடம், ஹரி வீட்டை மீரா பெயரில் மாற்றி எழுதியது வரை, எல்லாவற்றையும் சொல்லிவிட்டான் என்று தவறாக புரிந்துகொண்டார். பத்திரத்தை மறுபடியும், அவள் பக்கம் நீட்டியவர்,

“இல்லம்மா! மீரா உங்க வீட்டுக்கு மருமகளா வருவதற்கு, முன்னரே, இந்த வீட்ட அவளுக்கு கொடுக்க நினைக்கறது உங்க பெருந்தன்மையை காட்டறது. இத செஞ்சு தான், நீங்க உங்க அன்ப வெளிப்படுத்தணும்னு இல்ல…இந்த பத்திரம் உங்க கிட்டையே இருக்கட்டும்… இது உங்க குடும்ப விஷயம்.” விளக்கியவர்,

“சுருக்கமா சொல்லணும்னா… உங்களுக்கு ஆச்சு; உங்க மருமகளுக்கு ஆச்சு!” கோர்வையாய் பேசியவர், வாசுகியின் குழம்பிய முகத்தை கவனிக்க மறந்தார்.

அவள் மௌனத்தை சம்மதம் என்று புரிந்துகொண்டவர், பத்திரத்தை அவள் கையில் நுழைத்துவிட்டு, புறப்பட எழுந்தார். நிர்மலாவும், வாசுகியிடம் நன்றி கூறி, பிள்ளைகளுடன், அவளையும் வீட்டிற்கு வரும்படி அன்பாய் அழைத்தாள்.

முழுவிவரம் தெரியாமல், எதுவும் பேசக்கூடாது என்று பொறுமையாக அவர்களை வழியனுப்பிவிட்டு வந்தாள் வாசுகி. கவரில் இருந்த பத்திரங்களை அலசியவள், ’மீரா பேருல இந்த வீட்ட மாத்திட்டானா!” அதிர்ந்து போனவள், சிலையாய் உட்கார்ந்தாள்.

மாலை, வீட்டின் வாயில் அருகில் வரும் வரை, ஹரி, மீராவிடம் கோபமாக இருந்தான். சன்னியில் இருந்து இறங்கியவள்,

“எதுக்காக, இங்க வண்டிய ஓட்டிட்டு வந்த… உன் மாமனார பார்க்க போக வேண்டியது தானே!” உதட்டை சுழித்தாள்.

அவள் பயத்தை புரிந்துகொண்டவன், விட்டுக்கொடுக்க நினைத்தான். அவள் தோள் சுற்றி வளைத்து, முகமருகே  தலை தாழ்த்தியவன், “எப்படியும் , உங்க அப்பாவ பார்த்து பேசினதுக்கு அப்புறம், என்னோட சண்டை போட்டு பேசாம இருப்ப… அதுக்குள்ள, உன் கையால ஒரு கப் ஏலக்காய் டீ குடிக்கலாமேன்னு தான்…” நமுட்டு சிரிப்புடன் சொல்லி சிரித்தான்.

அவன் கைகளை உதறியவள், “வா! டீயில உப்ப அள்ளி கொட்டறேன். அப்போவாது உனக்கு சூடு சொரணை ஏதாவது வருதான்னு பார்க்கலாம்!” கடுகடுத்து, நகர்ந்தாள்.

அவள் கையை பிடித்து தடுத்து, தன் பக்கம் திருப்பினான். அவள் வாடிய முகத்தை கையிலேந்தி, “உனக்காக எத்தன அவமானங்கள் வேணும்னாலும் தாங்குவேன் மீரா!” சொல்லி, அவளை பிள்ளையார் சிலை பார்க்க, செய்தான். “ஆனா அப்படி எதுவும் நடக்காம இருக்க, ஏதாவது மேஜிக் செய்ய சொல்லி, உன் பிள்ளையார் கிட்ட வேண்டிக்கோ!” மென்மையாக சொல்லி, “ப்ளீஸ் மீரா! என்னோட சண்டை போடாம இரு டி!” கெஞ்சினான்.

அவன் முகம் பார்க்க முடியாமல் மாடியேறினாள் மீரா. வாயிற்கதவு திறந்திருக்க, உரிமையோடு உள்ளே நுழைந்தவள் கண்ணில் தென்பட்டது, அந்த தாம்பூலம். அதில் பிடித்து வைத்திருந்த மஞ்சள் பிள்ளையாரை பார்த்தவுடன் நொடியில் அறிந்தாள், அது நிர்மாலாவின் வேலை என்று. அருகில் இருந்த வீட்டுப்பத்திரத்தை பார்த்தவள், பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டனர் என்று குதூகலமானாள்.

“ஹரி! நீ சொன்ன மேஜிக் நடந்திருத்து டா! நீ சொன்ன மேஜிக் நடந்திருத்து!” அவன் சட்டையை போட்டு உலுக்கினாள். அவனும் அவற்றை எல்லாம் கவனித்து மகிழ,

அத்தனை நேரம், அவர்கள் ஆரவாரத்தை மறைவில் இருந்து கவனித்த வாசுகி, “நான் எப்போ வீட்ட காலி செஞ்சி கொடுக்கணும்னு சொல்லுமா!” கேட்டு முகத்தை திருப்பி கொண்டாள்.

“என்ன அத்த சொல்றீங்க?” குழம்பிய மீரா, அருகில் சென்று, அவளை தோள் சுற்றி வளைத்து அணைக்க,

“என்ன தொடாதே!” விலகி நின்று கர்ஜித்தாள். “இப்படி தேனொழுக பேசித்தானே, எங்க வீட்ட உன் பேருக்கு மாத்தி எழுதிக்கிட்ட!” ஒரு மணி நேரமாய் தேக்கி வைத்த துக்கத்தை கொட்டினாள்.

“என்ன அத்த சொல்றீங்க… எனக்கு ஒண்ணும் புரியல!” மீரா கெஞ்ச,

“நீ வீட்டுக்குள்ள நுழைஞ்சதும், பேசினத எல்லாம் நான் கேட்கலேன்னு நெனச்சியா!” சாட்சி இருக்கு என்று வாதாடினாள்.

“நான் தாம்பூலத்துல இருக்க மஞ்சள் பிள்ளையார காட்டி பேசினேன்… அப்பா ஏதாவது சொன்னாரா அத்த… அவர் சார்புல நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்…” மீரா அப்பாவியாய் மன்றாட,

இவர்கள் வாக்குவாதத்திற்கு இடையில், மேஜையில் உள்ள பொருட்களை அலசியவன், நிலமையை புரிந்து கொண்டான்.

“அம்மா! மீராவுக்கு இத பற்றி எதுவுமே தெரியாது… நான் உனக்கு எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன்!” அவளை சோஃபாவில் உட்காரும்படி சொல்ல, அவனிடமிருந்து விலகி, “என்ன நம்ப வெச்சு கழுத்தறுத்துட்ட இல்ல டா!” மனம்நொந்தவள், மீரா முன் அழக்கூடாது என்று வைராக்கியமாய், “என்ன எப்போ கொண்டு போய் முதியோர் இல்லத்துல சேர்க்க போறேன்னு சொல்லு…” கேட்டுவிட்டு, அறைக்குள் சென்று கதவை சாற்றிக்கொண்டாள்.

“என்ன நடக்குது ஹரி!” அவள் சட்டையை பிடித்து உலுக்கினாள்.

“அது…அது… உங்க அப்பா, நான் எழுதின கடிதத்த படிச்சிட்டாரு!” தயங்க,

“அப்படி என்னதான் எழுதியிருந்த ஹரி!” பொறுமையிழந்தாள்.

“அது… அது… எங்க வீட்ட உன் பேருல மாற்றி எழுதிட்டேன்… உன் மேல எனக்கு இருக்குற அன்பின் ஆழத்த நிரூபிக்க, அப்படி செஞ்சேன் மீரா!” சொன்னவன் தலையை தொங்கப்போட்டான்.

“உனக்கு என்ன பைத்தியமா டா! அவங்ககிட்ட என் அன்ப, பணத்தால எடை போடாக்கூடாதூன்னு சொல்லிட்டு, இப்போ நீ என்ன செஞ்சி வெச்சிருக்க ஹரி!” வீட்டுப்பத்திரத்தை வாங்க மறுக்க, அவன் பேசிய வியாக்கியானங்களை நினைவூட்டி, “யாரோட உழைப்ப யாருக்கு தர?” பொங்கினாள்.

“அப்படியில்ல மீரா….” விளக்க முயன்றவனை தடுத்து,

“நீ எந்த விளக்கமும் தராத! வீட்ட உன் பேருக்கு மாத்திட்டு வந்து என்கிட்ட பேசு!” தீர்மானமாய் சொல்லி, நகர்ந்தாள்.

அவள் ஆதங்கத்தை புரிந்துகொண்டவன், அவளை மென்மையாய் அழைத்தான். “ஒரு நிமிஷம் மீரா! இங்க நடந்த எதையுமே, உங்க வீட்டுல சொல்லாத டி ப்ளீஸ்! இந்த பிரச்சனைய, நாளைக்கு சாயங்காலத்துக்குள்ள, தீர்த்து வெக்கறேன்… எனக்காக இத மட்டும் செய்வையா?” சூழ்நிலை கைதியாய் கெஞ்சினான்.

அவன் அருகே வந்தவள், “எதுவும் சொல்லமாட்டேன் ஹரி!” என்று, அவன் கைகளை இறுக பிடித்துக்கொண்டு, “ஏன்னா, இது நம்ம வீட்டு பிரச்சனை!” அழுத்தமாக சொல்லி, புறப்பட்டாள்.

பிடித்தவள் பெயரில் பத்திரத்தை மாற்றியது தான் சரியா -மருமகளை,

பெற்ற பிள்ளையாய் நேசித்தவளிடம் சொல்லாமல் விட்டது தான் தவறா?

பிறர் மனம் நோகடிக்க தெரியாதவன் செய்த பிழை தான் என்னவோ?

பத்து மாதம் கருவில் சுமந்தவளின் பயத்தை போக்குவானா-இல்லை

பக்கபலமாய் சுகதுக்கம் சுமப்பவளின் சொற்படி நடப்பானா-பதில் சொல்லும்

அவன், அவர்கள் மீது வைத்த அன்பின் ஆழம்….