அன்பின் ஆழம் – 23.2

நற்செய்தியாக இருக்க வேண்டும் என்று, கடவுள் மேடையிலும், மாமனார் நிழற்படம் முன்னும் வைத்து பிரார்தித்தாள். பொதுவாக, மற்றவர்களுக்கு வந்த கடிதத்தை பிரித்து பார்க்கும் பழக்கம் இல்லை. ஆனால், தன்னவன் இருந்த மனநிலையில், ஏதாவது எதிர்மறை கருத்து வந்து, அது அவனை பாதித்துவிடுமோ என்ற பதற்றம். அப்படி ஏதாவது இருந்தால், அதை, அவனிடம் பக்குவமாய் சொல்லவேண்டும் என்ற எண்ணத்தில் பிரித்து படித்தாள்.

முதல் கடிதம்…

உங்கள் புத்தகத்தை, நான் வழக்கமாக செல்லும் நூலகத்தில், புது வரவுகள் பிரிவிலிருந்து எடுத்து படித்தேன். மிகவும் அற்புதமான கதை. தெவிட்டாத நேர்மறை கதிர்கள் வீசியது என்று தான் சொல்ல வேண்டும். நான் இன்னும் பத்து நாட்களில், அமெரிக்கா செல்ல இருக்கிறேன். உங்களால் முடிந்தால், பத்து பிரதிகளை, இந்த விலாசத்திற்கு அனுப்ப முடியுமா.’ என்று கேட்டு, பணம் செலுத்துவதை பற்றிய விவரங்களை பேச, தொடர்புகொள்ள ஒரு கைப்பேசி எண்ணையும் கொடுத்திருந்தார்.

முதல் கடிதத்திலேயே, பத்து பிரதிகளுக்கான ஆர்டரா என்று பூரித்தவள், இரண்டாம் கடிதத்தையும் பிரித்து படித்தாள். அதில் கூடுதல் ஆர்டர் இல்லாத போதும், கதையை பற்றிய பாராட்டுகளுக்கு குறைவே இல்லை. அடுத்த கதைக்காக காத்திருக்கிறேன் என்று சொல்லும் அளவுக்கு, உற்சாகமாய் பதில் எழுதியிருந்தார், அந்த வாசகர்.

இறைவனுக்கும், மாமனாருக்கும் நன்றி செலுத்திவிட்டு, ஹரிக்கு சிறப்பு உணவு சமைக்க ஆயத்தமானாள். நிர்மலாவை அழைத்து, வீட்டிற்கு வர தாமதமாகும் என்று தகவல் சொல்லி, தன்னவனுக்காக காத்திருந்தாள். அவன் வரும் முன், அந்த நபருக்கு போன் செய்து, பிரதிகளை எடுத்து வருவதை பற்றியும் பேசி முடித்திருந்தாள்.

ஏழு மணியளவில் வீடு திரும்பியவனுக்கு, மீராவை கண்டதும் மகிழ்ச்சி. பல நாட்களாய், தன்னவளை நேரில் பார்க்காத ஏக்கம் அவனுக்கும் இருந்தது. இயல்பாக, குழந்தைகளுக்கு, கணக்கு பாடம் கற்றுக்கொடுக்கும் தன்னவளை, இரண்டு நிமிடம் மௌனமாய் நின்று இரசித்தவன், திடமான குரலில்,

“மீரா! இன்னும் வீட்டுக்கு கிளம்பாம, என்ன பண்ணிட்டு இருக்க?” என்றான்.

அவள் பதில் சொல்லும் முன், “மாமா! மாமா!” என்று அவன் காலைசுற்றி வந்த பிள்ளைகள், அவள் சமைத்த பதார்த்தங்களை பற்றியும், அதன் சுவையை பற்றியும் உற்சாகமாய் விளக்கினர். அவர்களை கொஞ்சிய படி, மீராவின் பதிலுக்காக காத்து நின்றான்.

அவனுடன் மாலை நேரத்தை கழிக்க வேண்டும் என்ற முடிவோடு இருந்தவள் கண்ணில், எந்த தயக்கமும் இல்லை. அவன் அருகில் வந்து, “இன்னைக்கு உன்னோட டின்னர் சாப்பிட்டு போகலாமுன்னு காத்துகிட்டு இருக்கேன்!” கண்பார்த்து, திடமாய் பதிலளித்தாள்.

“வெள்ளிக்கிழமை ஒண்ணா டின்னர் சாப்பிடுறது தானே வழக்கம்! இன்னைக்கு என்ன புதுசா?” முகத்தை விரப்பாக வைத்துக்கொண்டு நிபந்தனைகளை நினைவூட்டினான்.

“வழக்கமாவா!” சொல்லி ஏளனமாக சிரித்தவள், “மூணு வாரமா, வேலைன்னு சொல்லி, என்கிட்டேந்து ஓடினத எல்லாம், எந்த கணக்குல வரும் ஹரி!” நேரில் பார்த்து எத்தனை நாட்களானது என்று மனம் நொந்தாள்.

அவள், தன்னை, அன்பாக, ‘எழுத்தாளரே’ என்று அழைக்காமல், அன்னியரை போன்று ஹரி என்று சொன்னதே, அவளின் மனவலியை எடுத்துரைத்தது. வெகு நாட்களுக்கு பிறகு நேரில் பார்க்கும், அவனுக்கும், வாதம் செய்ய மனமில்லை. உடை மாற்றி கொண்டு வருவதாக சொல்லி, நகர்ந்தான்.

அவர்கள் பேச்சு சத்தம் கேட்ட ராணி, இளஞ்சோடிகள், சந்தித்து பல நாட்களானதை அறிந்து, குழந்தைகளை அங்கிருந்து அழைத்துச் சென்றாள். உடைமாற்றி வந்தவனுக்கு, பருக டீ கொடுத்து, அவனையே கண்கொட்டாமல் பார்த்தாள். அவனும், ஏடாகூடமாய் ஏதாவது பேசிவிடுவோமோ என்ற பதற்றத்தில், மௌனமாய் டீயை குடித்தான்.

வேலயிலிருந்து களைப்பாய் திரும்பி வந்தவனிடம் சண்டையிட கூடாது என்று, அவன் குடித்து முடிக்கும் வரை பொறுமையாய் இருந்தாள்.

“என்னடா ஆச்சு உனக்கு? புத்தக விற்பனை பற்றி கவலையா இருப்பன்னு தான், இத்தன நாளா, உன் போக்குல விட்டேன். அரவிந்த் வந்து நற்செய்தி சொல்லியும், உனக்கு நம்பிக்கை வரலேன்னா, என்ன அர்த்தம்?” தேக்கிவைத்த ஆதங்கத்தை போட்டு உடைத்தாள்.

“அதான் சொன்னேனே மீரா!” என்று பெருமூச்சுவிட்டவன், “நண்பர்கள், நீங்க என் புத்தகத்த வாங்கி, தெரிஞ்சவங்க கிட்ட திணிக்கிறதுக்கும், அன்னியர்கள் தானா முன் வந்து வாங்குறதுக்கும், நிறைய வித்தியாசம் இருக்கு!” அன்று போனில் சொன்னதையே மீண்டும் சொல்லி புரியவைத்தான்.

ஆனால், அவளோ, அன்று போல் தலையாட்ட மட்டும் இன்று காத்திருக்கவில்லை. “எந்த ஒரு புது விஷயத்தையும், மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்க்கணுமுன்னா, விளம்பரம் தேவை! அதானே நாங்க செஞ்சோம். இதுல என்ன தப்பு இருக்கு?” தர்க்கம் செய்தாள்.

அவள் நியாயப்படுத்துவதை எண்ணி சிரித்தவன், “விளம்பரமுன்னா, என்ன பற்றியும், என் புத்தகத்த பற்றியும் எடுத்து சொல்றது. இப்படி, சொந்த காசு போட்டு வாங்கி, அத வரவங்க போறவங்களுக்கு எல்லாம் இலவசமா விநியோகம் செய்யறது இல்ல!” இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை விளக்கினான்.

மீரா, விடுவதாக இல்லை. “அப்படினா, மார்கெடிங்குன்னு சொல்லலாமே!” தொழில்ரீதியாகவே பேசி அவனை மடக்கினாள். அன்று அரவிந்தனும் இதே போல், அலுவலகத்தில் பேசியது நினைவில் வந்தது ஹரிக்கு.

“மேடம்! நீங்க செய்யறது மார்கெடிங்கும் மேல! ஒரு வாழைப்பழத்தின் அருமை பெருமைகளை விளக்கி விற்க சொன்னா, நீங்க அதோட தோல உரிச்சு எல்லாருடைய வாயிலும் ஊட்டிவிடுறீங்க!” அவர்களின் கண்மூடி தனமான அன்பை, உவமையாய் விளக்கி, அவள் கன்னத்தில் தட்டினான்.

தட்டும் அவன் கைகளை தன்னுள் அடைத்து, “ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்!” பதிலுக்கு பழமொழி சொல்லி, உதட்டை சுழித்தவள், “தெரிஞ்சவங்கனாலும், படிச்சு, பிடிச்சாதானே கருத்து சொல்லுவாங்க!” என்று அவன் கைகளை வருடியவள், “யோசிச்சு பாரு ஹரி! அலுவலகத்துல, அரவிந்த் இலவசமா எடுத்துட்டு போன்னு சொன்னதுக்கு அப்புறமும், எவ்வளவு பேரு விருப்பப்பட்டு வாங்கியிருக்காங்க!” நிதர்சனத்தை சுட்டிக்காட்டினாள்.

பணம் என்றதும், அரவிந்தன் செய்தது, நினைவுக்கு வர, “அதையும், ஏதேதோ காரணம் சொல்லி, என்கிட்ட திருப்பி கொடுத்துட்டானே!” சொல்லும் போதே, அவன் குரல் வலுவிழந்தது.

அவன் முகத்தை கையிலேந்தி, கண்பார்க்க, பேசினாள் மீரா. “புரிஞ்சுக்கோ டா! அவன் நமக்காக தான் அப்படி செஞ்சிருப்பான். அப்பாகிட்ட, நீ பணத்த திருப்பி கொடுத்துட்டா, அவரு மனசு மாறிடுவாருன்னு நெனச்சிருப்பான்!” தாழ்ந்த குரலில் பேச,

‘இவளுக்கா அரவிந்த் மனதில் என்ன நினைக்கிறான் என்று சொல்லி புரியவைக்க வேண்டும்’ என்று மனதில் எண்ணினான். அதே சமயம், நண்பர்கள் தனக்காக பரிதாப படுவதாய் தோன்றியது அவனுக்கு.

 “ஒரு நண்பர் கிட்ட வாங்கின பணத்த திருப்பி கொடுக்க, இன்னொரு நண்பன் உதவி செய்யறான்!” விரக்தியில் பேசி, துக்கத்தை மறைக்க, டீ கப்பை எடுத்துக்கொண்டு, சமையலறைக்குள் நுழைந்தான்.

எப்படி பேசினாலும், இவன் எண்ணத்தை மாற்றிகொள்ள மாட்டான் என்று புரிந்துகொண்டாள் மீரா. மனம்நொந்து நடக்கும் தன்னவனையே உற்றுப்பார்த்தவள், அவனிடம் கடிதங்களை காட்ட திட்டமிட்டாள்.

ஹாலுக்கு திரும்பியவனிடம், “இந்தா பிடி! உன்ன பேசி ஜெயிக்க முடியாது!” பொய்கோபத்துடன், அந்த கடிதங்களை அவன் கையில் திணித்து, தன்னவனையே இமைக்காமல் பார்த்தாள்.

படிக்கும் அவன் முகத்திலிருந்த பயம், தவிப்பாய், கேள்வியாய், வியப்பாய், மகிழ்ச்சியாய் மாறும் சின்ன சின்ன முக அசைவுகளை கண்டு நெகிழ்ந்தாள்.

 “இப்ப உங்களுக்கு நம்பிக்கை வந்துதா எழுத்தாளரே!” குறும்பாய் அவள் வினவ, அவள் காதை திருகியவன், “இத முதல்ல சொல்லாம, ஏண்டி, எதை எதையோ பேசி, வெறுப்பேத்தின!” செல்லமாக கடிந்தான்.

“உன் திறமைய நம்பிதான் நாங்களும், இதெல்லாம் செஞ்சோமுன்னு, உனக்கு புரிய வைக்க பார்த்தேன் டா! ஆனா, நீ ரொம்ப பிடிவாதகாரன்!” என்று சொல்லிக்கொண்டே, சமையலறைக்குள் புகுந்தாள்.

அவளை பின்தொடர்ந்தவன், “பிடிவாதம் எல்லாம் இல்ல டி; உங்க கண்மூடித்தனமான பாசத்த பார்த்து பயம்!” என்றான்.

அதை கொஞ்சம்கூட பொருட்படுத்தாதவளாய், ஆர்டர் கொடுத்த நபரிடம், பேசியதை பற்றி சொல்லி, அவனை இருபது பிரதிகள் எடுத்து வைக்க சொன்னாள்.

சரி என்று சொன்னவன், பாதி வழியில் திரும்பி, “பத்து பிரதிகள் தானே கேட்டிருக்காரு!” குழம்பி நின்றான். அதற்குள், அரவிந்தன் அன்று வாங்கி வந்த குலாப்ஜாமுனை கிண்ணத்தில் கொண்டுவந்தவள், அவனுக்கு ஒரு சிறு துண்டை ஊட்டி, “மார்கெடிங்க் எழுத்தாளரே!” என்று கண்சிமிட்டி, தன் யூகத்தை விளக்கினாள்.

சந்திக்க போகும் நபருடன் வேறுயாராவது இருந்தாலோ, இல்லை, அவரே, மனம் மாறி, கூடுதல் பிரதிகள் கேட்டாலோ, இல்லை என்று சொல்லாமல், கொடுக்க வேண்டும் என்று விளக்கியவளை பார்த்து நெகிழ்ந்தான்.

“சரி! நாளைக்கு நானும் உன்னோட வரேன்! இல்ல, சனிக்கிழமை சந்திக்கலாமா கேட்டு சொல்லு! சேர்ந்து போலாம் என்று யோசனை சொல்ல,

“என்ன ஹரி! இத்தன நாளா, எனக்காக நேரம் ஒதுக்காததுக்கு ஈடுகட்ட பாக்குறியா!” தெளிவாய் சிந்தித்து கேட்டாள்.

உண்மை என்ற போதும், அவனால் அதை ஏற்க முடியவில்லை. “அதுக்கு இல்ல மீரா… நீ… தனியா… எனக்காக எதுக்கு அவ்வளவு தூரம் போய்…. சிரமப்பட்டு…” காரணம் சொல்ல, வார்த்தைகளை தேடினான்.

இதுவே பேச வேண்டிய சரியான தருணம் என்று அறிந்தாள் மீரா. “நான் சொன்னத மறந்துட்டியா ஹரி! உன்னோட சுக துக்கங்கள் ரெண்டுத்தலையும் எனக்கு பங்கு வேணும். நீ கவலையா இருந்தத, நான் தப்பு சொல்லல. ஆனா, என்கிட்டேந்து ஒதுங்கி இருந்தியே… அதுதான் டா மனசுக்கு கஷ்டமா இருந்துது!” சொன்னவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.

அவனை எதிர்கொள்ள முடியாமல், பால்கனியை நோக்கி நடந்தாள். கவலையை மறைத்து, எவ்வளவு இயல்பாக நடந்து கொண்ட போதிலும், தன்னை முழுமையாக புரிந்துகொண்டு பொறுமை காத்தவளிடம் மன்னிப்பு கேட்க, அவன் மனம் பதறியது. அவள் பாதி உண்டு, வைத்த குலாப் ஜாமுனை எடுத்துக்கொண்டு, பால்கனிக்கு நடந்தான்.

“ஐ ஆம் சாரி மீரா! இனி அப்படி நடந்துக்கமாட்டேன்!” சொல்லி, அவள் வாயில் குலாப்ஜாமுனை ஊட்டினான்.

கண்களை துடைத்து கொண்டவள், “யாருக்கு வேணும் உங்க சாரி! ஐலவ்யூ சொல்லுங்க எழுத்தாளரே!” சீண்டியவள், “அதான் உங்க மாமியார் சம்மதம் சொல்லிட்டாங்களே!” நினைவூட்டி, இன்னும் ஏன் தயக்கம் என்றாள்.

“மிஸ்ஸர்ஸ்.வரதன், சம்மதம் எல்லாம், மிஸ்டர்.வரதன் சம்மதத்துக்கு ஈடாகுமா?” என்று கண்சிமிட்டினான்.

“தெளிவா இருக்குறதா நெனப்பு……!” இழுத்தவள், “மறந்து போய் ஊட்டிவிடுறீங்ளே!” அவன் மூன்றாவது முறையாக வாயிலிட்ட ஜாமுனை விழுங்கியவள் சொல்லி, மடக்கினாள்.

“ஸ்பூன்ல தானே ஊட்டுறேன்; கையில இல்லையே; காதல் கரண்ட் பாஸ் ஆகாது!” அவனும் விடாமல் தர்க்கம் பேச,

வெடுக்கென்று அவன் விரலை பற்றிகொண்டவள், “இப்படியே பேசி வெறுப்பேத்தின, அப்புறம் விரல கடிச்சிடுவேன்” பற்களை நறநறத்தாள்.

அவள் முகபாவனையை கண்டவன் கன்னத்தில் குழிவிழ சிரித்து, “விரல் இல்லாம எப்படி எழுதுறது; அப்புறம், வெற்றி, தோல்விய பற்றி, கவலை படுறது போயி, எழுதவே முடியலன்னு கவலை பட வேண்டியதுதான்.” கிண்டல் செய்தான்.

அவன் விளையாட்டாக சொன்ன போதும், அதை அவளால் ஏற்க முடியவில்லை. இருபுறமும், அவன் கன்னத்தை பற்றி கொண்டவள்,

“நீ எழுதணும் ஹரி! வெற்றி தோல்வியை பற்றி கவலைப்படாம, எனக்காக எழுதணும் டா! இந்த உலகத்துல ஒருத்தர் கூட உன் கதைய விரும்பி படிக்கலேனாலும் பரவாயில்ல; நான் ஒருத்தி, உன் கதைகள படிக்க இருக்கேன்றத எப்பவும் மறந்துடாத! உன் மேல காதல் வந்ததும் நீ எழுதின கதைய படிச்சு தான்; இனி வரும் வாழ்க்கைய உன்னோட பயணம் செய்ய ஏங்குறதும், நீ எழுத போற கதையெல்லாம் உன்னோட சேர்ந்து படிக்கணுமுன்ற ஆசையில தான்.”

அவள் பேச, பேச, அவன் விழிகளிலிருந்து நீரருவி. தன் தந்தைக்கு பிறகு, அவன் மேல் யாரும் இவ்வளவு நம்பிக்கை வைத்து பேசியதில்லை அவனிடம்.

அந்த நீர்துளிகள், மெல்ல மெல்ல அவள் விரல் இடுக்கில் புகுந்துகொள்ள, தன்னையும் அறியாமல் மனதில் இருப்பதை எல்லாம் பேசுவதை உணர்ந்தவள் சுதாரித்து கொண்டாள்.

“எழுத்தாளரே!” அவன் கண்களை துடைத்துவிட்டு, “கண்ணுல கொஞ்சம் காதல் எட்டிப்பாக்குறா மாதிரி இருக்கே!” என்று சொல்லி கண்சிமிட்டினாள்.

அவனும் மெல்லிய சிரிப்புடன், “காதல் எட்டிப்பார்த்தாலும், நீ தெளிவா இருக்கியே! ரெண்டு பேரும், சேர்ந்து போய் புத்தகங்கள கொடுக்கலாமுன்னு சொல்லியும், தனியாதான் போவேன்னு அடம்பிடிக்குறியே!” சொன்னவன் குரலில் ஏக்கம் வழிந்தோடியது.

அவன் அன்பை மெச்சியவள், “எழுத்தாளரே! நீங்களே நேருல போய் வியாபாரம் செஞ்சா, அவ்வளவு கெத்தா இருக்காது! கதைய படிக்குறவங்க, ஆட்டோகிராப் கேட்டு உங்கள தேடி வரணும்.” என்றாள்.

‘இவளுக்கு என் மேல்தான் எத்தனை நம்பிக்கை’ என்று வியந்தவன், அவளை தோளோடு வளைத்து அணைத்தான்.

மூன்று வாரங்களுக்கு பிறகு….

“மழையில நனையாத… இரு டி… குடை எடுத்துட்டு வரேன்…” பரபரவென்று,படிகட்டுகளை இறங்கி கொண்டிருக்கும் தன்னவள் பின் அழைத்து கொண்டே ஓடினான் ஹரி.

“இட்ஸ் ஓகே… லேட் ஆயிடுச்சு டா!” சொல்வதை கேட்காமல் பறந்தவளின் கையை பிடித்து தடுத்தான்.

“அதுக்கு தான், வந்தோமா, சாவிய கொடுத்தோமான்னு இருக்கணும். அந்த இட்லி, நான் வெச்சா வேகாதா?” காலையில் கிடைக்கும் பத்து நிமிடங்களை கூட வீணாக்காமல், அவனுக்காக, காலை உணவு எதையாவது செய்யும் அவள் பழக்கத்தை சுட்டிக்காட்டி, குடையை விரித்தான்.

சுருங்கிய முகத்துடன், எதுவும் பேசாமல் நடந்தாள். ஆனால், தன்னவனுடன் குடைக்குள் உரசிக்கொண்டு வந்த பத்தடி தூரம் நீளாதா என்ற நப்பாசை அவளுக்கு.

” எழுத்தாளரே! லீவு போடவா! இப்படியே ஜாலியா மழையில நடக்கலாமா?” கேட்டு, கண்சிமிட்டினாள். அதற்குள் இருவரும் கார் அருகில் வர,

“ஸாரி மீரா! மழை வரும்னு தெரிஞ்சிருந்தா, பார்க்கிங்கிலேயே வெயிட் பன்ணிருப்பேன்!” மகேஷ், மழை வரும் அறிகுறியே இல்லை என்று சொல்ல,

“நல்லது செஞ்ச டா! இல்லேன்னா, இதான் சாக்குன்னு இவ லீவு போட்டிருப்பா.” நண்பனிடம் பேசி, தன்னவளுக்கும் பதில் அளித்தான், ஹரி.

“முசுடு எழுத்தாளர்!” சிடுசிடுத்து, அவன் கன்னத்தை இடித்தவள், மனமில்லாமல் காரில் ஏறினாள். ‘இவங்களும் இவங்க காதலும்!’ மனதில் சலித்து கொண்டு, காரை செலுத்தினான் மகேஷ்.

‘நடக்கலாம் டி! ஜுரம் வர அளவுக்கு மழையில நனஞ்சுகிட்டே நடக்கலாம் மீரா!’ ஆசைகளை மறைத்து ஏங்கி நிற்க, அவன் முன் வேறொரு கார் வந்து நின்றது.

“அம்மா… ” அதிலிருந்து இறங்கும் வாசுகியை பார்த்தவன், கனவா நனவா என்று புரியாமல் அழைத்தான்.

“ஹரி… ” அவளும், அவனை வாசலில் பார்த்த வியப்பில் அழைத்து, உடன் வந்த அண்ணன் பக்கம் திரும்பி, ”அவன்கிட்ட சொல்லாதன்னு சொன்னேனே!” செல்லமாக கண்டிக்க, அவர்,

“நான் எதுவும் அவன்கிட்ட சொல்லல… நீ, மழையில நனையாம முதல்ல உள்ள போ! நானும் ஹரியும், பெட்டிகள எடுத்துட்டு வரோம்.” தங்கையிடம் பேசியபடி ஹரிக்கு ஜாடை காட்டினார்.

அன்று காலி வீட்டை பார்த்ததற்கே, மீரா தன்னுடன் குடும்பம் நடத்துகிறாள் என்று அவதூறாக பேசியவள், இன்று என்னவெல்லாம் சொல்வாளோ என்று பதறியவன் சிலை போல நின்றான்.

வானிலையில் வந்த மாற்றம், அவன் வாழ்க்கையிலும் வந்தது;

இயற்க்கை அன்னை மிதமாக பொழிந்த மழை, பூமியை குளிர வைத்தது;

ஈன்றெடுத்தவளின் சொல் மழையின் தீவிரம் என்ன?

பதில் சொல்லும்,

அவள் அவன் மீது வைத்த அன்பின் ஆழம்;

அவன் ‘அவனவள்’ மீது வைத்த அன்பின் ஆழம்…