VMIA FINAL

இசை 16
வீட்டில் சாய்ஸ்வரனுக்கு வரன் பார்க்க ஆரம்பிக்க வேண்டுமென்று சாய்ஸ்வரனின் அன்னை ஜனனி கூறிய போது, “எனக்கு எதுக்கும்மா இப்போ கல்யாணம். இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்,” என்று தான் சாய்ஸ்வரன் முதலில் அவன் அன்னையிடம் கூறினான்.
“இப்பவே 26 முடிஞ்சிடுச்சு உனக்கு, இப்ப பார்க்க ஆரம்பிச்சா தான் வரன் கூடி வந்து கல்யாணம் முடிய ஒரு வருஷமாவது ஆகும், நாமளே தள்ளி போட்டுட்டு போனோம்னோ அப்புறம் நாம கல்யாணத்தை முடிக்கணும்னு நினைக்கும்போது அதுவா தள்ளிப் போயிட்டே இருக்கும், அதனால தரகர்க்கிட்ட சொல்லி கல்யாணத்துக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சிடலாம்,” என்று ஜனனி கூறினார். அதன்பின் சாய்ஸ்வரனும் மறுப்பேதும் சொல்லவில்லை.
அதேபோல் மகளின் விருப்பத்திற்காக அவள் வலைத் தொடர் எடுக்கட்டும் என்று அவளை சென்னைக்கு அனுப்பி வைத்துவிட்டாலும், அவளின் பாதுகாப்பு குறித்து சந்தியாவிற்கு கொஞ்சம் கவலையாக தான் இருந்தது. அதனால் சென்னையிலேயே ஒரு நல்ல வரனாக பார்த்து அவளுக்கு மணம் முடித்து வைத்தால், அவளும் திருமணம் செய்துக் கொண்டு அவளது வேலையை பார்க்கட்டும் என்ற எண்ணத்தில் சென்னையில் உள்ள உறவுக்காரர்கள் மூலமாக சந்தியா சப்தமிக்கு வரன் பார்க்க ஆரம்பித்தார்.
அப்படித்தான் சப்தமியின் புகைப்படமும் ஜாதகமும் சாய்ஸ்வரன் வீட்டிற்கு தரகர் மூலமாக சென்றது. வரன் என்று கொண்டு வந்த முதல் ஜாதகமே சப்தமியின் ஜாதகம் தான், அவளை புகைப்படத்தில் பார்த்ததுமே சாய்ஸ்வரனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. அவளது ஜாதகமும் அவன் ஜாதகத்துடன் பொருந்திவிட்டது.
அதனால் சாய்ஸ்வரனின் புகைப்படத்தையும் ஜாதகத்தையும் சப்தமி வீட்டில் காண்பித்து அவர்களுக்கும் சரியென்றால் மேற்கொண்டு பேசலாம் என்று ஜனனி தரகரிடம் சொல்ல, தனக்கு முதல் பார்வையிலேயே மகாசப்தமியை பிடித்துவிட்டது போல் அவளுக்கும் தன்னை அப்படி பிடிக்கிறதா? என்று பார்க்க விருப்பம் கொண்டவனாக சாய்ஸ்வரன் இவர்களிடம் சப்தமி புகைப்படத்தை காட்டியதையோ, ஜாதகம் பொருந்தி போனதையோ சொல்லாமல், முதலில் அவர்களுக்கு அவனது புகைப்படத்தை காட்டுவது போல் செய்ய சொல்லி அவன் தரகரிடம் கூற,
“எதுக்கு தேவையில்லாம இதெல்லாம்?” என்று ஜனனி கேட்டார்.
“ப்ளீஸ் எனக்காக ம்மா,” என்று அன்னையை சம்மதிக்க வைத்தவன், தரகரிடம் தான் சொன்னதுபோல் சொல்ல சொல்லி அனுப்பிவிட்டவன், அங்கிருந்து எப்போது பதில் வரும் என்று ஆவலாக காத்திருக்க ஆரம்பித்தான்.
சந்தியாவிற்கு சாய்ஸ்வரனின் பயோடேட்டாவை பார்த்ததும் வெகு திருப்தி. மகள் வலைத் தொடர் எடுக்கும் முயற்சியில் இருக்க, சாய்ஸ்வரனும் மியூஸிக் ஆல்பம் எடுப்பது, அதில்லாமல் சினிமாவில் இசையமைக்க முயற்சிகள் எடுப்பது என்பதெல்லாம் அறிந்து, இப்படி ஒருவனை மகள் மணம் முடித்தால் அவனும் மகளின் லட்சியத்திற்கு துணை நிற்பான் என்று நினைத்து தான் சாய்ஸ்வரனின் தகவல்களை மகளுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவள் வேறு காரணத்திற்கு அவனை அணுகுவாள் என்பது அவருக்கு தெரியாதே, அவளுக்கு பிடித்தமில்லை என்று சொன்னதும் அவரும் அவளை கட்டாயப்படுத்த நினைக்கவில்லை.
இங்கு சாய்ஸ்வரனோ சப்தமியின் பதிலுக்கு வெகு ஆவலாக காத்திருக்க, இரண்டு நாட்கள் கழித்து சப்தமிக்கு அவனை பிடிக்கவில்லையாம் என்ற தகவல் தரகர் மூலமாக வந்தததும், அவனுக்கு மிகவும் வருத்தமாக போய்விட்டது. ‘எனக்கு அவளை பார்த்ததும் பிடித்ததே, அவளுக்கு அப்படி ஏதும் இல்லையா? ஏன் அவளுக்கு என்னை பிடிக்கவில்லை. என்ன காரணமா இருக்கும்? என்கிட்ட என்ன குறை? ஒருவேளை நான் மியூஸிக் லைன்ல இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லையா? இல்லை சினிமாவில் மியூஸிக் போடணும்னு நினைச்சது பிடிக்கலையா? இப்படியெல்லாம் தனிமையில் சிந்தித்து கவலைப்பட்டு கொண்டிருந்தான். ஆனாலும் பிடிக்கவேயில்லை என்றவளை மீண்டும் கட்டாயப்படுத்தக் கூடாது என்பதால், தனது வருத்தத்தை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு அவன் நடமாடிக் கொண்டிருந்தான்.
அந்த நேரத்தில் தான் சப்தமி அவனது தனிப்பட்ட எண்ணுக்கு அழைத்து, “நான் மகாசப்தமி பேசறேன்.” என்று தன்னை அவள் அறிமுகப்படுத்திக் கொள்ள,
அவனுக்கோ அதை நம்பவே முடியவில்லை. சப்தமியே அலைபேசியில் அழைக்கிறாள் என்றால், ஒருவேளை திருமணம் சம்பந்தமாக இருக்குமோ? முதலில் குழப்பத்தில் அவனை வேண்டாமென்று நிராகதித்தவள், பின் அவனிடம் நேரடியாக பேசி குழப்பத்தை தீர்த்துக் கொள்ள நினைக்கிறாளோ? என்றெல்லாம் கற்பனை செய்துக் கொண்டவன், அவள் என்ன பேசப் போகிறாள் என்று ஆர்வமாக எதிர்பார்த்தான். அதற்கேற்றார் போல் அவனிடம் நேரில் பேச வேண்டுமென்று வேறு அவள் கூற, அவனும் பர்சனலா? என்று அவளிடம் கேட்டான்.
ஆனால் அவள் அஃபிஷியல் என்று சொன்னதும், அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னவாக இருக்குமென்ற குழப்பத்தில் அவளை சந்திக்க வீட்டிற்கு வரச் சொல்லிவிட்டான்.
அதுவும் ஜனனி கோவிலுக்கும் கீர்த்தனா கல்லூரிக்கும் சென்றிருக்கும் நேரம் அவளை வரச் சொல்லி கூறினான். அவர்களிடமும் அவளை சந்திக்கவிருப்பதை சொல்லவுமில்லை. என்ன விஷயமாக இருக்குமென்ற சிந்தனையில் அவன் நேரங்கள் கரைந்திருக்க, வந்தவள் அவளின் வலைத் தொடரில் அவனை நடிக்க சொல்லி கேட்டதும், அவளை தனக்கு பிடித்தது போல் அவளுக்கு ஏன் தன்னை பிடிக்கவில்லை என்று நினைத்து மீண்டும் அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.
இதில் ஸ்கை மூன் தொலைக்காட்சியிலிருந்து அவனுக்கு ரியாலிட்டி ஷோவிற்கு அழைப்பு விடப்பட்டிருக்க, அங்கு அவர்களோடு நடந்த சந்திப்பில் பேசிவிட்டு வந்திருந்தவனுக்கு அதில் கலந்து கொண்டால் அது தனது முன்னேற்றத்திற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று வேறு நினைத்திருந்தான். அதனால் அப்போதைக்கு அவளுக்கு மறுப்பு சொல்லி அனுப்பிவிட்டான்.
ஆனால் அதற்கு பிறகு நிதானாமாக யோசித்து பார்க்கும்போது, அவள் வலைத் தொடர் எடுக்கும் வேலைப் பற்றிய சிந்தனையில் இருப்பதால், திருமணத்தை பற்றி யோசித்து இருக்கமாட்டாள். ஆனால் இவன் மீது ஏதோ ஒரு விதத்தில் நம்பிக்கை வைக்க போய் தானே, இவனை அந்த வலைத் தொடரில் நடிக்கச் சொல்லி கேட்கிறாள்.
அதுவுமில்லாமல் அந்த வலைத் தொடரில் நடிக்கும் காலங்களில் அடிக்கடி அவளை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம் அமையும், அந்தநேரம் அவளுக்கும் தன்னை பிடிக்கிறதா? இல்லையா? என்று தெரிந்து கொள்ளலாமே, என்று நினைத்ததால் தான், ஸ்கை மூன் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியை மறுத்துவிட்டு அவன் அவளது வலைத் தொடரில் நடிக்க சென்றான்.
அந்தநேரம் முதலில் வேண்டாமென்று சொல்லிவிட்டு, திரும்ப நடிப்பதாக சொல்லும்போது அவள் கேட்கும் கேள்விகளுக்கு என்ன காரணம் சொல்வது என்ற குழப்பம் வேறு, இதில் அவனை தான் அவளுக்கு வரனாக அவளின் பெற்றோர் பார்த்து புகைப்படம், ஜாதகம் அனுப்பியதெல்லாம் அவளுக்கு தெரியாதது போல, யாரோ ஒருவரிடம் பேசுவது போல் அவள் பேசவும், நிபந்தனைகள் இருப்பது போல் அவளிடம் காட்டிக் கொண்டான். அந்த நிபந்தனை விதித்தது கூட அவளை சும்மா சீண்டுவதற்காக தான்,
மற்றப்படி அவளிடம் நிபந்தனை விதித்து அவளை கட்டாயமாக மணம் முடிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் அவனுக்கு சுத்தமாக இல்லை. அவளுடன் பணிபுரியும் அந்த காலங்களில் அவள் மனதை அறிந்து கொள்ள மட்டுமே நினைத்தான். அவளுக்கு அவனை பிடிக்க வேண்டுமென்று விரும்பினான்.
அதை முழுக்க அவளிடம் சொல்லி முடித்தவன், “எனக்கு உன்மேல உண்டான பிடித்தம், நாம சந்திக்கறதுக்கு முன்னமே உண்டானது. அதேபோல உனக்குமே என்னை முன்னமே தெரியும், நீ என்னை சந்திக்க வந்தபோதே என்மேல உனக்கு ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. நான் சீரிஸ்ல நடிக்க மாட்டேன்னு சொன்னதும், உனக்கு ஏற்பட்ட ஏமாற்றம் உன்னோட முகத்தில் நல்லாவே தெரிஞ்சுது, அது நான் நடிக்கமாட்டேன்னு சொன்னதால வந்த ஏமாற்றம்னு மட்டும் சொல்ல முடியாது. நான் இப்படி இருக்கணும்னு நினைச்ச உன்னோட எதிர்பார்ப்பு பொய்யா போன ஏமாற்றம் தான் உனக்கு உண்டானது. அப்போ அதுக்கு பேர் என்ன?
அதுவுமில்லாம சீரிஸ்ல சாய்ஸ்வரனுக்கு சப்தமி எழுதும் கடிதத்தில் நீ எழுதி இருந்தியே, அது என்ன? உன் மனதில் நீ நினைச்சதை அப்படியே சப்தமி எழுதுவது போல எழுதியிருந்த அப்படித்தானே, நீங்க சினிமாக்கு மியூஸிக் போட்டு தான் உங்க திறமையை காட்டணும்னு இல்லை. அதுக்கு முன்னமே உங்களை நிறைய பேருக்கு பிடிக்குதுன்னா அது உங்க இசையால தான்னு நீ சொன்னதிலேயே நான் அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கணும்னு நினைச்சது தப்புன்னு எனக்கு புரிய வைக்க முயற்சி செய்ததா அர்த்தம் ஆகலையா? அது என்மேல நீ வச்சிருக்க அன்பின் உரிமையால வந்தது தானே,
அப்படியிருக்கும்போது நமக்குள்ள இருப்பது ஜஸ்ட் நாம ஒரே இடத்தில் வேலை செய்ததால வந்த ஈர்ப்புன்னு மட்டும் எப்படி சொல்லுவ, ஒருவேளை அப்படியே இருந்திருந்தாலும், சினி ஃபீல்டிலோ சீரியல் ஃபீல்டிலோ இப்படி காதலிச்சு கல்யாணம் செய்துக்கிட்டவங்க சந்தோஷமா வாழ்ந்ததில்லையா? சொல்லு, அப்புறம் ஏன் சப்தமி நீ இப்படி யோசிக்கிற?” என்று அவன் கேட்டான்.
“நீங்க சொல்றது போல இருக்கலாம், நான் இல்லன்னு சொல்லல, ஆனா நம்ம சீரிஸ்ல இது ஜஸ்ட் அந்த நிகழ்ச்சியை முதலிடத்திற்கு கொண்டு வர செய்யும் திட்டம்னு சொல்லிட்டு, இப்போ நாம கல்யாணம் செய்துக்க போறதா சொன்னா, மக்கள் இதையும் அப்படித்தானே பார்ப்பாங்க,” என்று அவள் கேட்டாள்.
“சாரி ஒட்டு கேட்டதா தப்பா நினைக்காத, உன்னோட மனசில் என்ன இருக்குன்னு தெரிஞ்சிக்க தான் நான் அனிதாவும் நீயும் பேசுவதை கேட்க வேண்டியதா போச்சு, அனிதா கிட்ட நீ என்ன சொல்லியிருந்த, இந்த அவசர உலகத்தில் நாம செய்ற விஷயத்தை அவங்க சரியா புரிஞ்சிக்கணும்னு எதிர்பார்ப்பது முட்டாள்தனம்னு தானே சொன்ன, இப்போ அந்த முட்டாள்தனத்தை நீயே செய்ய போறீயா சப்தமி. நமக்குள்ள என்ன இருக்குன்னு மத்தவங்க சரியா புரிஞ்சிக்கணும்னு எதிர்பார்ப்பது முட்டாள்தனம் இல்லையா? நம்ம மனசுக்கு சரின்னு தெரியற விஷயத்தை மத்தவங்க தப்புன்னு சொன்னா விட்டுடணுமா சொல்லு, மத்தவங்க பேசுவாங்க என்பதற்காக நமக்கு பிடிச்ச வாழ்க்கையை விட்டுட்டு பிடிக்காத வாழ்க்கையை தேர்ந்தெடுக்கணுமா?
ஜஸ்ட் நமக்குள்ள இருந்தது ஈர்ப்பு இல்லன்னு உனக்கே தெரியும், ஒருவேளை இந்த சீரிஸ் எடுக்கும் முயற்சியில் நீ இல்லன்னா என்னை கல்யாணம் செய்ய ஒத்துட்டு இருந்திருப்பன்னு எனக்கு தெரியும், அதுதான் உண்மையும் கூட, அப்படி ஒருவேளை நடந்திருந்தா அது நம்ம பேரன்ட்ஸா பார்த்து நமக்கு செய்து வச்ச அரேஞ்ச் மேரேஜா தானே ஆகும், இப்போதும் நாம இதை இப்படியே சொல்லலாமே,
உனக்கு ஒன்னு தெரியுமா? நான் உன்னோட வெப் சீரிஸ்ல நடிக்க ஓகே சொல்றதுக்கு முன்ன அம்மா, அப்பாக்கிட்ட நான் மனசில் முடிவு செய்தது எல்லாத்தையும் சொல்லிட்டு தான் வந்தேன்.
அம்மா கூட உன்கிட்ட வெளிப்படையா எல்லாத்தையும் பேசிட்டு அப்புறம் சீரிஸ்ல நடிக்க ஒத்துக்க சொன்னாங்க, ஏன்னா கடைசியா நான் சொல்லும்போது நீ அதை தப்பா எடுத்துக்க கூடாது இல்லையா, ஒருவேளை உனக்கு என்னை பிடிச்சிருந்தாலும் இந்த விஷயம் உனக்கு தெரிஞ்சு நான் உன்னை ஏமாத்திட்டதா நீ நினைக்க கூடாது. இந்த விஷயம் தெரிஞ்சு நீ என்னை மறுத்தா அது எனக்கு ஏமாற்றாமாகிடக் கூடாது. அதனால எதுவா இருந்தாலும் வெளிப்படையா பேசிடுன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாங்க, அன்னைக்கு நீ வீட்டுக்கு வந்தியே, அப்போ கூட சீக்கிரம் பேசிடுன்னு தான் சொன்னாங்க,
ஆனா அதெல்லாம் பேச வேண்டிய அவசியம் இல்லங்கறது போல நீ எல்லாம் புரிஞ்சு வச்சிருக்க, ஆனாலும் இது வெறும் ஈர்ப்பால உண்டான உறவுன்னு உன்னால எப்படி சொல்ல முடியுது சப்தமி. இப்படி சொல்லி விலகிட்டு அடுத்து என்ன செய்யப் போற, உன்னோட அப்பா, அம்மா பார்க்கும் வேறொரு மாப்பிள்ளையை கல்யாணம் செய்துக்க போறீயா?” என்று அவன் கேட்க,
“போதும் ஸ்வரன், ரொம்பவே அதிகமா பேசிட்டு போறீங்க நீங்க, நான் சொல்ற விதத்தில் யோசிச்சு பாருங்க, நான் சொல்றது சரின்னு புரியும்,” என்றாள்.
“அது சரியாகவே கூட இருக்கட்டும், அதுக்காக அந்த முடிவை எடுத்து நம்ம வாழ்க்கையை தப்பாக்கிக்க சொல்றீயா?” என்று அவன் கேட்க, அவளோ அதற்கு பதில் கூற முடியாமல் மௌனமாக இருந்தாள்.
அதில் அவனுக்கு சிறு கோபம் வெளிப்பட, “ம்ம் இவ்வளவு பேசியும் உன்னோட மைண்ட் செட்ல இருந்து நீ மாற மாட்டல்ல, என்னை பிடிக்கலன்னு உன்னோட பேரன்ட்ஸ்க்கிட்ட சொன்னியே அதோட நான் அப்படியே விட்ருக்கணும், அதைவிட்டுட்டு கூட இருந்து உன்னோட மனசில் இடம் பிடிக்கணும்னு நினைச்சது தப்பு போல,
பேசாம ஸ்கை மூன் சேனலோட ரியாலிட்டி ஷோக்கு போயிருந்தா, என்னோட அழகுக்கும் பர்சானாலிட்டிக்கும் எனக்கு ஒரு ஜோடியை அவங்க கண்டிப்பா செட் பண்ணி கொடுத்திருப்பாங்க, நாங்களும் சோஷியல் மீடியால நல்லா ட்ரண்ட் ஆகி இருந்திருப்போம், ஒருவேளை அந்த பொண்ணை அந்த ப்ரோகிராம்க்கு அப்புறமும் பிடிச்சிருந்தா பேசி கல்யாணமும் செய்திருக்கலாம், இதெல்லாம் விட்டுட்டு நீ வேணும்னு வந்தேன் பாரு, என்னை சொல்லணும்,” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை.
“ஓ இந்த ஆசை வேற உங்களுக்கு இருக்கா, போயிருக்க வேண்டியது தானே ரியாலிட்டி ஷோக்கு, நீங்க வேண்டாம்னு சொன்னதும் நானா வந்து உங்களை திரும்ப கட்டாயப்படுத்தினேனா? நீங்களா தானே வந்தீங்க, ஏன் வந்தீங்க? வராம இருந்திருந்தாலே நல்லா இருந்திருக்கும், இப்போ இப்படியும் முடிவெடுக்க முடியாம அப்படியும் முடிவெடுக்க முடியாம தவிக்கிற எனக்கு தானே என்னோட கஷ்டம் தெரியும்,” என்று கோபமாக பேச ஆரம்பித்தவள், வருத்தத்தோடு பேசி முடித்தாள்.
“இப்படி தவிக்கணும்னு என்ன அவசியம் இருக்கு சொல்லு, இங்கப்பாரு இப்படி குழப்பிக்காம தெளிவா ஒரு முடிவெடு.” என்று அவன் கூற,
“ஆமாம் தெளிவா உங்களை வேண்டாம்னு தான் முடிவெடுக்கணும், போங்க இப்போ தான் இன்னும் பாப்புலர் ஆகிட்டீங்களே, அப்படியே திரும்ப ஏதாவது ரியாலிட்டி ஷோக்கு கூப்பிடுவாங்க, அதில் கலந்துக்கோங்க, கண்டிப்பா ஏதாவது பொண்ணு செட்டாகும், நீங்க சொன்ன மாதிரி அவளையே கல்யாணம் செய்துக்கோங்க,” என்று அவள் பதில் கூறினாள்.
“அய்யோ உன்னோட பொறாமையை தூண்டுவதற்காக அப்படி சும்மா பேசினேன் பேபி. மத்தப்படி உன்னை விட்டு நான் வேறொரு பெண்ணை நினைப்பேனா? நீ சரின்னு சொல்லும்வரை நான் காத்திட்டு இருப்பேன்.” என்றவன்,
என்னோடு வா வா என்று சொல்லமாட்டேன்
உன்னைவிட்டு வேறு எங்கும் போக மாட்டேன்
என்ற பாடலை பாட,
“போய் தான் பாருங்களேன். அப்புறம் இருக்கு உங்களுக்கு,” என்று சொல்லியவள், அவனை வேகமாக சென்று அணைத்துக் கொண்டாள்.
“அப்போ கல்யாணம் செய்துக்கலாம்னு சொல்லு,” என்று அவள் காதில் அவன் கேட்க,
“இன்னுமா நான் சொல்லணும்னு காத்திருக்கீங்க, அப்போ இப்போதைக்கு சொல்ல மாட்டேன் போங்க,” என்று அவள் கூறிவிட்டு சிரிக்க,
“உன்னோட வாய்மொழியால் சம்மதம் சொல்லணும்னு எதிர்பார்க்கிறேன். ப்ளீஸ் எனக்காக சொல்லேன்.” என்று அவன் கெஞ்ச,
“ம்ம் கல்யாணம் செய்துக்கலாம்,” என்று அவளின் வாய்மொழியால் அவள் சம்மதம் கூறினாள்.
மறுநாள் காலையில் சப்தமி நல்ல உறக்கத்தில் இருக்க தொடர்ந்து அழைப்பு மணி சத்தம் கேட்கவே, “யார் இப்படி விடாம காலிங் பெல் அடிக்கிறது?” என்று வாய்விட்டு சொல்லியப்படி அறையிலிருந்து வெளியே வந்தவள் அனிதாவின் அறையை பார்க்க, அவளது கதவு சாத்தப்பட்டு இருந்தது.
“கும்பகர்ணி நல்ல தூங்கறா போல,” என்று அவளையும் திட்டியபடியே, வந்து வாசல் கதவை திறந்தவளுக்கு வியப்பு. காரணம் அவளின் பெற்றோர் இருவரும் நின்றிருந்தனர்.
“அம்மா, அப்பா,” என்று அந்த வியப்பு குறையாமல் கூறியப்படி அவர்களை அணைக்க போக,
“இவளை அப்படியே நிக்க சொல்லுங்க, நேரில் பார்த்தா தான் பாசம் பொங்கும், இல்ல நம்மளை மதிச்சு எதுவும் சொல்லணும்னு அவளுக்கு தோனாது.” என்று கோபமாக சொல்லியப்படி சந்தியா வீட்டுக்குள் போக,
“என்னப்பா ஆச்சு, என்ன கோபம்? சொல்லாம கொள்ளாம திடீர்னு வந்து நிக்கறீங்க, முன்னாடியே வருவதா என்கிட்ட சொல்லவே இல்லையே?” என்று மகேந்திரனிடம் சப்தமி கேள்விகள் எழுப்ப,
“இவ மட்டும் நம்மக்கிட்ட எல்லாம் சொன்னாளா?” என்று சந்தியா மீண்டும் கோபமாக கூறினார்.
“என்னம்மா என்னாச்சு? ஏன் இப்படி பேசறீங்க?” என்று சந்தியாவிடமே அவள் கேட்க,
“இப்போதும் என்ன என்னன்னு கேட்கிற? என்னன்னு உனக்கு தெரியாதா? வெப் சீரிஸ் எடுக்கப் போறன்னு வந்த, கல்யாணம் செய்துக்கோன்னு சொன்னா வேண்டாம்னு சொல்லிட்டு வரனா பார்த்த ஸ்வரனையே வச்சு சீரிஸ் எடுத்திருக்க, கூட ஸ்வரனை கல்யாணம் செய்யவும் ஓகே சொல்லியிருக்க, ஆனா சீரிஸ் எடுக்க ஆரம்பிச்சாச்சுன்னு மட்டும் தான் சொன்ன, மத்த எதுவும் எங்கக்கிட்ட சொல்லணும்னு உனக்கு தோனவே இல்லல்ல,” என்று அவர் கேட்க,
“ஸ்வரனை வச்சு வெப் சீரிஸ் எடுக்கறதை உங்கக்கிட்ட சொன்னா, அப்போ அவரையே கல்யாணம் செய்துக்க சொல்லி நீங்க சொல்வீங்கன்னு தான் முதலில் சொல்லல, சரி வெப் சீரிஸ் முடியட்டும் அப்புறம் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்.” என்று அவள் பதில் கூறினாள்.
“நீ சொல்லலன்னா எங்களுக்கு தெரியாதா? சோஷியல் மீடியா முழுவதும் நீங்க ட்ரண்ட் ஆகியிருக்கீங்க, அப்புறம் எங்களுக்கு எப்படி தெரியாம போகும், அதை பார்த்ததும், நம்ம பொண்ணு நம்மக்கிட்ட இதை சொன்னாளா பாருன்னு கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?” என்று சந்தியா சொல்ல,
“சொல்ல ஒருமாதிரி தயக்கமா இருந்துச்சு ம்மா, மத்தப்படி சொல்லக் கூடாதுன்னு இல்ல, சாரிம்மா,” என்று சப்தமி மன்னிப்பு கேட்டாள்.
“மகா, அம்மாக்கு உன்மேல கோபமெல்லாம் இல்லை. அப்படியே கோபமிருந்தாலும் நடக்க போகிற விசேஷத்தில் அவளுக்கு அதெல்லாம் பின்னாடி போயிடும்,” என்று மகேந்திரன் கூறினார்.
“விசேஷமா? என்ன விசேஷம்? ரெண்டுப்பேரும் என்கிட்ட சொல்லாமலே வந்திருக்கீங்க, அப்படி அவ்வளவு முக்கியமா என்ன விசேஷம்?” என்று அவள் கேட்க,
“எங்க பொண்ணோட நிச்சயதார்த்தம் எங்களுக்கு முக்கியமில்லையா? அதான் உடனே கிளம்பிட்டோம், அதுவுமில்லாம உனக்கு ஒரு சர்ஃப்ரைஸ் கொடுக்கலாம்னு தான்,” என்று சந்தியா சொல்ல,
“என்னம்மா சொல்றீங்க, நேத்து தான் நான் ஸ்வரனுக்கு ஓகே சொன்னேன். அதுக்குள்ள உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது? இன்னைக்கே நிச்சயதார்த்தமா? இவ்வளவு அவசரமா எதுக்கு ம்மா இதெல்லாம்?” என்று அவள் கூற,
“நீ என்ன சொன்ன? வெப் சீரிஸ் எடுத்து முடிச்சதும் கல்யாணம் செய்துக்கறதா சொன்னீயா இல்லையா? இப்போ மாப்பிள்ளையும் ரெடியா இருக்கும்போது எதுக்கு இன்னும் தள்ளிப் போடணும், மாப்பிள்ளையே இன்னைக்கு போன் போட்டு நிச்சயத்தை வச்சிக்கலாமான்னு கேட்டாரு, நாங்களும் ஓகே சொல்லிட்டோம், எங்களுக்கு டிக்கெட்ஸ் அரேஞ்ச் செய்து கொடுத்ததும் அவர் தான், எல்லாம் உனக்கு சர்ப்ரைஸா இருக்கட்டும்னு செய்தார். நீ இப்படி சொன்னா அவருக்கு மனசுக்கு கஷ்டமா இருக்காதா?” என்று சந்தியா கேட்க, அவளும் அமைதியகிவிட்டாள்.
அடுத்து அனிதா எழுந்து வந்தவள் மகேந்திரன், சந்தியாவை பார்த்து அவள் வியப்பாகி போனாள். பின் சப்தமியின் நிச்சயதார்த்த செய்தியை கேட்டதும், “சப்தமி” என்று அவளை அணைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள்.
அப்போது சாய்ஸ்வரனிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. “அம்மா, ஸ்வரன் தான் பேசறார். பேசிட்டு வந்துட்றேன்,” என்று சொல்லிவிட்டு வந்து சற்று தள்ளி வந்து அவள் அழைப்பை ஏற்க,
“என்ன பேபி கோபமா இருக்கியா?” என்று அவன் கேட்க,
“அப்போ நான் கோபமா இருக்கேன்னு உங்களுக்கே தெரியுது. அப்படித்தானே?” என்று அவள் பதில் கேள்வி கேட்டாள்.
“சாரி பேபி, நீ ஓகே சொன்னதும், எனக்கு நம்ம கல்யாணத்தை ரொம்ப நாள் தள்ளிப் போட விருப்பமில்லை. அதான் உடனே எங்கேஜ்மெண்ட் வைக்கலாம்னு எல்லாம் ஏற்பாடு செய்துட்டேன். உனக்கு சர்ப்ரைஸா செய்றதா சொன்னாலும், நீ எங்க இப்போ வேண்டாம்னு சொல்லிடுவியோன்னு எனக்கு பயம். ஆனா இப்போ உன்கிட்ட கேட்காம இப்படி செய்துட்டோமோன்னு கொஞ்சம் கில்டி ஃபீல்.” என்று அவன் சொல்ல,
“கில்டி ஃபீலெல்லாம் வேண்டாம், இந்த நிச்சயதார்த்தம் நடக்கறதில் அம்மா, அப்பா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க, அவங்க ஆசையை கெடுக்க வேண்டாம், உங்க வீட்டிலும் அப்படித்தானே, அதனால இன்னைக்கே நடக்கட்டும்,” என்று அவள் சொல்ல,
“ஓ தேங்க்ஸ் பேபி, இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு, தேங்க் யூ சோ மச்,” என்று மகிழ்ச்சியோடு பேசியவன்,
“அப்புறம் உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஒரு சினிமா ப்ரொடக்ஷன்ல இருந்து எனக்கு ஒரு ஆஃபர் வந்திருக்கு, நான் அவங்க படத்தில் ஹீரோவா நடிக்கணுமாம்,” என்று அவன் சொல்ல,
“அய்யோ நீங்க ஓகே சொல்லிட்டீங்களா?” என்று அவள் அதிர்ச்சியாக கேட்டாள்.
“இல்லை நான் நோ சொல்லிட்டேன். சப்தமியோட வெப் சீரிஸ்ல மட்டும் தான் நான் நடிப்பேன்னு சொல்லிட்டேன் போதுமா?” என்று அவன் கூறவும்,
“நிஜமா அப்படியா சொன்னீங்க, ஆமாம் நீங்க என்னோட ஹீரோ. நீங்க படத்திலெல்லாம் நடிக்கக் கூடாது. புரியுதா?” என்றவள்,
“இது சும்மா விளையாட்டுக்கு, இது நல்ல ஆஃபரா இருந்தா ஒத்துக்கோங்க ஸ்வரன்.” என்று சொல்ல,
“இல்ல பேபி, எனக்கு நடிக்கறதில் இன்ட்ரஸ்ட் இல்ல, உனக்காக தான் நான் நம்ம சீரிஸ்ல நடிச்சேன். இதுக்கு மேலேயும் ஏதாவது இப்படி அவசியம் என்றால் தான் நடிப்பேன். அப்புறம் நான் அந்த ஆஃபரை மறுத்ததும், சரி இந்த படத்துக்கு நீங்க தான் மியூஸிக் போடணும்னு சொல்லிட்டாங்க, நடிக்க கேட்டதுக்கு மறுத்துட்டோமே இதுக்கு எப்படி ஒத்துகிறதுன்னு நான் யோசிச்சப்ப, நாங்க ரெண்டுக்குமே தான் உங்களை கேட்க வந்தோம், நடிக்க விருப்பமில்லன்னாலும் இதுக்காவது ஒத்துக்கணும்னு ரொம்பவும் ரெக்வஸ்ட் செய்தாங்க, நானும் ஓகே சொல்லிட்டேன்.” என்று அவன் கூற,
“வாவ் ஸ்வரன், இதை தான் நீங்க முதலில் சொல்லியிருக்கணும், உங்க லட்சியத்தில் நீங்க ஜெயிக்கப் போறீங்க, கேட்கவே சந்தோஷமா இருக்கு,” என்று அவள் பதில் கூறினாள்.
“இந்த புகழெல்லாம் உனக்கு தான், நீதானே முதலில் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த, இதுக்கு உனக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லணும்,” என்று அவன் கூற
“இல்லை, இது உங்க திறமைக்கு கிடைச்ச வாய்ப்பு. நான் முதலில் உங்க திறமையை தெரிஞ்சிக்கிட்டேன் அவ்வளவுதான், அதனால பெருசா பேச வேண்டாம், சரியா?” என்றாள். அடுத்து சிறிது நேரம் இருவரும் அவர்களின் நிச்சயதார்த்தம் குறித்து பேசிவிட்டு அழைப்பை அணைத்தனர்.
உடனே ஏற்பாடு செய்த விசேஷம் என்பதால் அன்று முழுவதும் அனைவருக்குமே பரபரப்பாக கழிய, மாலை நேரமும் வந்தது. ஒரு நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, முக்கிய சொந்தங்களும் நண்பர்களும் மட்டுமே கூடியிருந்தனர். பின் அவர்களின் சம்பிரதாயப்படி பெரியவர்கள் சூழ்ந்திருக்க நிச்சய பத்திரிக்கை எழுதி வாசிக்கப்பட, பின் பெரியவர்களால் தாம்பூலம் மாற்றிக் கொள்ளப்பட்டு திருமணம் உறுதியானது. பின் மாப்பிள்ளை பெண் மோதிரம் மாற்றிக் கொள்ளும் நிகழ்வு வந்ததும், மகாசப்தமி மேடையேற அந்த நேரம் விளக்குகள் அணைக்கப்பட்டது.
அதேநேரம் அந்த இடமே நிசப்தமாக சில நொடிகளில் ஒரு வெளிச்சம் விழ, அங்கு சாய்ஸ்வரன் கிட்டாரோடு நின்றிருந்தான். பின்னர்,
என் விரல் மீட்டும் இசையானாய்!
என் விழி மூடும் இமையானாய்!
என் இதழ் பேசும் மொழியானாய்!
என் இதயத்தின் துடிப்பானாய்!
என் காதலியே!’என் கண்மணியே!
என் அனைத்துமாய் நீயானாய்!
என்று அவனே எழுதி இசையமைத்த பாடலை கிட்டார் வாசித்தப்படியே பாடிக் கொண்டு மேடையேறி வந்தவன், அவள் முன் முழங்காலிட்டு, “வில் யூ மேரி மீ?” என்று கேட்க,
அவள் தலையசைத்து சரியென்று சொன்னதும், அவளது கையில் மோதிரம் போட்டு தங்கள் உறவை
உறுதிப்படுத்தினான்.
சுபம்