VMIA 9

இசை 9

மனதில் எழுந்த அந்த குற்ற உணர்வை நொடி நேரத்தில் அப்படியே தன்னில் புதைத்துக் கொண்டவன், ‘நான் பெரிதாக எந்த தவறும் செய்யவில்லை. பின் நான் ஏன் இப்படி நினைக்க வேண்டும்? எனக்கு என்னுடைய லட்சியம் தான் முக்கியம்? அதற்காக தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒத்துக் கொண்டேன். அந்த லட்சியத்தை அடைய நினைக்கும்போது இதுபோன்ற விஷயங்களை நினைத்து வருத்தப்படக் கூடாது.

சப்தமி தெளிவான பெண். புரிய வைத்தால் புரிந்து கொள்வாள். அப்படியிருக்கும்போது நான் ஏன் இதை நினைத்து வீணாக தவிக்கிறேன்.” என்று சாய்ஸ்வரன் மனதை தேற்றிக் கொண்டான்.

ஆனாலும் அவனால் படப்பிடிப்பின் இடையில் அவளிடம் இயல்பாக பேச முடியவில்லை. ஒருமாதிரி அவன் இறுக்கமாக இருக்க, சப்தமி அவனிடம் வித்தியாசத்தை உணர்ந்தவள், “என்ன ஸ்வரன், ஏன் ஒருமாதிரி இருக்கீங்க?” என்று அவனிடம் கேட்க,

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல, நான் நார்மலா தான் இருக்கேன்.” என்றான்.

“நிஜமா ஒன்னுமில்லையே,” என்று அவள் சந்தேகத்தோடு கேட்க,

“நிஜமா தான் சொல்றேன். எந்த பிரச்சனையுமில்லை.” என்று சொல்லிக் கொண்டான்.

“அப்போ ஏன் இன்னைக்கு உங்க சிரிப்பு மிஸ்ஸிங், எப்போதும் நீங்க சிரிச்சது போல இருப்பது தான் உங்க ஸ்பெஷலே, அதனால இப்படி முகத்தை வச்சிட்டு இருக்காதீங்க,” என்று அவள் சொல்லவும்,

‘தன்னை இந்த அளவு கவனித்து வைத்திருக்கிறாளா?’ என்று அவன் வியப்பானான்.

அன்றைய படப்பிடிப்பு கடற்கரையில் நடந்தது. “ஸ்வரன், இந்த கடற்கரையில் வந்து நின்னுக்கிட்டு கடல் அலையை பார்த்துட்டு இருந்தேன்னா, மனசு அப்படியே அமைதியாகிடும் தெரியுமா? இந்த கடற்கரை செய்ற மாயம் போலத்தான் உங்களோட இசையும் பாட்டும், மனசை அப்படியே அமைதியாக்கிடும், இன்னைக்கு ரெண்டுமே ஒரே இடத்தில் இருக்குல்ல, அப்போ இந்த சூழ்நிலை எப்படி இருக்கும், சும்மா அசத்தலா இருக்குமில்ல, என்ன மக்களே நான் சொல்றது சரிதானே,” சப்தமி பேச அது படமாக்கப்பட்டு கொண்டிருந்தது.

“சூப்பர் ம்மா, உனக்கு எழுதி தரவே வேண்டாம் நீயா செமயா பேசற,” என்று அந்த நிகழ்ச்சி குழுவினர் கூறவும்,

“பேசறது ஸ்வரன் சம்பந்தப்பட்டதாச்சே, அப்போ அதுபாட்டுக்கு தானே வரும்,” என்று சப்தமி மகிழ்ச்சியாக கூறவும், அந்த குழுவினர் அர்த்தத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, அவர்களின் பார்வை மாற்றங்களை சாய்ஸ்வரன் கவனித்துவிட, ‘இது எங்கு கொண்டு போய் விடப் போகிறதோ, இதில் என் பங்கு என்னவோ?” என்று யோசித்தவனுக்கு, அதற்கு மேல் அங்கு இயல்பாக இருக்க முடியாததால்,

“மீதி ஷூட்டிங்கை நாளைக்கு வச்சிக்கலாமா? காலையில் லேசாக இருந்த தலைவலி இப்போ அதிகமா ஆகிட்டா போல இருக்கு, வீட்டுக்கு போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா நல்லா இருக்கும்னு தோனுது,” என்றான்.

“சரி இன்னைக்கு வந்த நேரத்துக்கே நாளைக்கும் வந்திடுங்க,” என்று குழுவினர் கூறவும்,

“பை சப்தமி,” என்று அவளிடமும் அவன் விடைபெற,

“தலைவலி அதிகமா இருக்கா, பேசாம டாக்டர்க்கிட்ட போங்க ஸ்வரன்,” என்று அவள் கூறவும்,

“இல்லை நான்தான் சொன்னேனே, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும், சரி நாளைக்கு பார்க்கலாம்,” என்று சொல்லி கிளம்பியவனை சப்தமி சிந்தனையோடு பார்த்திருந்தாள்.

மறுநாள் மகாவும் அவளது குழுவினரும் ஒன்று கூடினர். அவள் குழுவினர் தேர்ந்தெடுத்து வைத்திருந்த நபரிடம் பேசி அவர் தங்கள் வேலைக்கு சரி வருவாரா? என்று மகா பார்த்து முடிவை சொல்ல வேண்டும், அதற்காக தான் அந்த சந்திப்பு.

ஆனால் அந்த நபரோ வர முடியாது என்று அலைபேசியிலேயே சொல்லிவிட, அதை அவள் குழுவினர் அவளிடம் தெரியப்படுத்த, மகாவோ ஏன் என்பது புரியாமல் அவர்களை பார்க்கவும்,

“முதலில் முழுசா விஷயத்தை சொல்லல, அதனால ஓகே சொன்னாரு, இப்போ எல்லாம் விவராமா சொன்னதும் அவருக்கு இது சரி வாராதுன்னு தோனிடுச்சு போல, வேண்டாம்னு சொல்லிட்டாரு,” என்றவர்கள், அவளை தயக்கத்தோடு பார்த்தனர்.

“இது தெரிஞ்சது தானே, செலப்ரிட்டினா அவங்க முன்னேற்றம் இதால தடைபடுமோன்னு கண்டிப்பா கொஞ்சம் யோசிக்க தான் செய்வாங்க, எனக்கு என்னமோ நார்மலா யாரையாச்சும் வச்சு நம்ம வேலையை முடிக்கறது தான் பெஸ்ட்னு தோனுது. நாம செய்யப் போற வேலைக்கு என்ன ரிசல்ட் வரும்னு நாம முன்னமே யோசிச்சது தானே, என்ன செலப்ரிட்டினா கொஞ்சம் அதிகமா ரீச் கிடைக்கும்னு நினைச்சேன். ஆனா இதுக்கு மேலேயும் இப்படியே இருக்க வேண்டாம், நாம ஏதாச்சும் ஒரு ஆளைப் போட்டு நாம வேலையை ஆரம்பிக்கணும்,” என்று மகா கூறவும்,

“மகா நீயா இப்படி பேசற?” என்று அனிதா வியப்பாய் கேட்டாள்.

“என்ன ஆச்சர்யமா இருக்கா, நேத்து உன்கிட்ட பேசிட்டு போனப்பிறகு நல்லா யோசிச்சேன் அனி. யாருக்காகவோ ஏன் நம்ம வேலையை தள்ளிப் போடணும், என்னவோ பழசையெல்லாம் நினைச்சு மனசு உறுத்தலா இருந்துச்சு, நாம இந்த வேலையை தள்ளி போட போட ஏனோ என் ஃப்ரண்ட்க்கு நான் அநியாயம் செய்றேனோன்னு தோனுது. அதான் சீக்கிரம் வேலையை ஆரம்பிக்கலாம்னு நினைச்சேன்.” என்று மகா கூறவும்,

“எதுக்கு அப்படியெல்லாம் நினைக்கிற, நாம நம்ம எண்ணத்தை கைவிட நினைக்கலையே, கொஞ்சம் தாமதமாக தான் ஆரம்பிக்கப் போகிறோம், அதனால நீ தேவையில்லாம சங்கடப்படாத, இன்னும் ரெண்டு நாளில் நல்ல ஆளா நாம செலக்ட் செய்துடலாம்,” என்று அனிதா நம்பிக்கையோடு கூறினாள்.

“நாம இந்த விஷயத்திலேயே கவனத்தை வச்சு, மத்த விஷயத்தில் கோட்டை விட்டுடக் கூடாது. மத்த எல்லாம் பக்காவா இருக்கா?” என்று மகா கேட்கவும்,

“அதெல்லாம் எல்லாம் தயாரா இருக்கு, இதுக்கு மட்டும் நாம நல்ல ஆளா பார்த்து போட்டுட்டோம்னா ஓகே,” என்று அனிதா கூற, மகாவும் அதை ஏற்று தலையசைத்துக் கொண்டாள்.

சாய்ஸ்வரனுக்கு உறக்கம் வரவில்லையென்றாலும் அவன் வெறும் கண்களை மூடியபடி படுத்திருக்க, அப்போது இசைத்த அலைபேசி அழைப்பை யாரென்று பார்க்காமலே அவன் ஏற்று பேச,

“ஸ்வரன், நான்தான்,” என்ற சப்தமியின் குரலை கேட்டவன், எழுந்து அமர்ந்தான்.

ஆனால் பதில் ஏதும் பேசாமல் அவன் அமைதியாக இருக்கவும், “ஹலோ, ஸ்வரன் கேட்குதா?” என்று சப்தமி கொஞ்சம் சத்தமாக பேசவும்,

“சொல்லு கேட்குது,” என்று அவன் பதில் கூறினான்.

“இப்போ தலைவலி எப்படி இருக்கு ஸ்வரன்? தூங்கிட்டு இருந்தீங்களா? டிஸ்டர்ப் செய்துட்டேனா?” என்று அவள் தயக்கமாக கேட்க,

“இல்லை, மதியம் ஷூட்டிங்ல இருந்து வந்ததும் கொஞ்சநேரம் தூங்கி எழுந்ததால இப்போ பரவாயில்லை. கொஞ்சம் பெட்டரா ஃபீல் செய்றேன். என்ன மதியம் தூங்கினதால இப்போ தூக்கம் வரல, சும்மா தான் படுத்துட்டு இருந்தேன். என்ற அவனது பதிலை கேட்டு ஆசுவாசமடைந்தவள்,

“இப்போ தான் எனக்கு நிம்மதியா இருக்கு ஸ்வரன், நீங்க காலையில் இருந்து ஒருமாதிரி இருக்கவும் எனக்கும் ஒருமாதிரி மூட் அவுட்டா இருந்துச்சு, சாய்ந்தரமே உங்களுக்கு போன் போட்டு பேச நினைச்சேன். ஆனா நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு இருப்பீங்கன்னு தான் அமைதியா இருந்தேன்.” என்று பேசி அவனை அதிரவைத்தாள்.

“எனக்கு ஜஸ்ட் தலைவலி தானே சப்தமி, அதுக்கு எதுக்கு நீ இப்படி ஃபீல் செய்ற, நாளைக்கு நானே நார்மலா ஆகிடப் போறேன். அப்புறம் என்ன?” என்று அவன் கேட்க,

“தெரியலையே, நான் ஏன் இப்படி இருக்கேன்னு தெரியல, ஆனா இப்படி இருப்பதும் எனக்கு பிடிச்சு தானிருக்கு,” என்று கூறி அவள் மகிழ்ச்சியடைய,

“இங்கப்பாரு சப்தமி, இப்போ நீ படிச்சிட்டு இருக்க, இப்போ உன்னோட கவனம் முழுவதும் அதில் தான் இருக்கணும், நாம சந்திக்கிறது பேசறது எல்லாம் இந்த ப்ரோகிராம் முடியற வரைக்கும் தான், அப்புறம் நாம நம்ம அடுத்த வேலையை பார்க்க போயிடுவோம், புரியுதா?” என்று அவன் கூறவும்,

“ஏன் இப்படி சொல்றீங்க ஸ்வரன், ஏன் அதுக்குப்பிறகும் நம்ம நட்பு தொடரக் கூடாதா? நாம சந்திக்க கூடாதா? அதில் ஏதாவது தப்பு இருக்கா? நான் நல்லா தான் படிக்கிறேன். இந்த செமஸ்டரும் டிஸ்டிங்ஷன் லெவலில் தான் மார்க் எடுத்திருக்கேன். நான் படிப்பையும் இதையும் போட்டு குழப்பிக்கல, உங்க நட்பு எனக்கு எப்போதும் வேணும்னு நான் நினைக்கிறேன். அது தப்பா?” என்று அவள் கேட்டாள்.

“இல்லை நான் அப்படி சொல்லலை, நீ எமோஷன் ஆகற அளவுக்கு ஒன்னுமில்லையே, இந்த ஷோ முடிஞ்சாலும் நாம பார்க்க, பேசத்தான் போகிறோம், எல்லாத்தையும் சாதாரணமா எடுத்துக்கன்னு தான் சொல்றேன். எதுவுமே நம்ம வாழ்க்கையில் நிரந்தரம் இல்லை. நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாத பட்சத்தில் எதிலும் ஆழமா போக வேண்டாம்னு தான் சொல்றேன்.” என்று அவன் சொல்ல,

“நீங்க என்ன சொல்ல வரீங்கன்னே புரியலையே?” என்று அவள் கேட்டாள்.

‘அவ சாதாராணமா கூட இருக்கலாம், நான் தேவையில்லாம அவளை குழப்பக் கூடாது. இந்த ஷோ முடியவும் அவளே எல்லாம் புரிஞ்சிப்பா,’ என்று மனதில் சொல்லிக் கொண்டவன்,

“எல்லாம் உனக்கு தானாகவே புரிய வரும், நீ எப்போதும் போல இரு, நாளைக்கு ஷூட்டிங்ல சந்திக்கலாம்,” என்று சொல்லவும்,

“ம்ம் நாளைக்கு உங்களை பார்க்க ஆவலா இருக்கேன்.” என்று உற்சாகமாக கூறியவள், அலைபேசி அழைப்பை அணைத்தாள்.

அவள் பேசி முடித்த பின் அவனது உறக்கம் முற்றிலும் தொலைந்து போக விட்டத்தை வெறித்துப் பார்த்தப்படி சிந்தனையில் ஆழ்ந்தான்.

நிகழ்ச்சி ஸ்கிர்ப்ட் அடிப்படையில் நடக்காததே அவனுக்கு உறுத்தலாக இருக்க, சப்தமியிடம் ஒரு அளவோடு பழக வேண்டுமென்று தான் முதலில் ஒதுங்கி இருந்தான். ஆனால் நிகழ்ச்சி குழுவினரோ, “ப்ரோகிராம் நல்லா தான் மக்களிடம் ரீச் ஆகியிருக்கு, ஆனா உங்களுக்குள்ள ஒரு நெருக்கம் இல்லை. ஏதோ இடைவெளி இருக்கறது போல இருக்கு, இப்படியே இருந்தா மக்களுக்கு இந்த ப்ரோகிராம் போர் அடிக்க ஆரம்பிச்சிடும், அதனால சப்தமியிடம் ஃப்ரண்ட்லியா மூவ் பண்ணுங்க, அப்போ தான் இந்த ப்ரோகிராம் கொஞ்சம் சுவாரசியமா இருக்கும்,” என்று அவனுக்கு அறிவுறுத்த,

“எதுக்கு இதெல்லாம், என்னென்ன பேசணும்? என்னென்ன செய்யணும், இதெல்லாம் எழுதி கொடுத்திட்டா, வேலை ஈஸியா முடிஞ்சிடுமே,” என்று அவன் பதிலுக்கு கூற,

“அப்படியில்ல ஸ்வரன், இப்போல்லாம் மக்கள் ப்ரோகிராம் ஸ்கிரிப்ட் பேஸ்ல போகுதுன்னு ஈஸியா கண்டுபிடிச்சிட்றாங்க, அதுக்காக தான் நாங்க புதுமையா ஏதாச்சும் செய்யணும்னு நினைச்சு இந்த ப்ரோகிராம் ஆரம்பிச்சிருக்கோம், இதிலும் ஸ்கிர்ப்ட்னா அப்புறம் நாங்க இதை யோசிச்சதில் என்ன பிரயோஜனம்னு சொல்லுங்க,” என்று அவர்கள் கேட்கவும்,

“எனக்கு இதுபத்தி ஒன்னுமில்ல, இந்த மீடீயா எனக்கு பழக்கமான ஒன்னு தான், ரியாலிட்டி ஷோ எப்படி நடக்கும்னு எனக்கு தெரியும், ஆனா சப்தமி இதில் துளி கூட சம்பந்தப்படாதவ, நாளைக்கு என்னோட நட்பை அவ வேற மாதிரி எடுத்துக்கிட்டா என்ன செய்றது?” என்று அவன் கேட்டான்.

“அப்படியெல்லாம் ஆகாது, நாங்க ஏற்கனவே சொன்னது தான், ஒரு ரசிகையா உங்கக்கிட்ட நல்லா பேசி பழகணும் என்ற ஆசை தான் அந்த பொண்ணுக்கிட்ட இருக்கு, நீங்க இந்த நிகழ்ச்சிக்குன்னு இல்லாம இப்படி ஒரு ரசிகையை அடிக்கடி பார்க்கவும் சந்திக்கவும் செய்த எப்படி பேசுவீங்க, அதை செய்ங்க, அதுவே இந்த ஷோக்கு போதுமானது.

அதைவிட்டு ஸ்கிரிப்ட்னா அதை நீங்க ரெண்டுப்பேருமே சொதப்ப வாய்ப்பிருக்கு,” என்று குழுவினர் கூறவும், அவனும் அரைகுறையாக தலையாட்டினான்.

அதிலிருந்து சப்தமியிடம் நட்பாக பழக ஆரம்பித்தான். ஆனால் அவனுக்கு இருக்கும் பயமோ சப்தமி இந்த நட்பை தவறாக புரிந்து கொள்ள கூடாதே என்பது தான், ஆனால் இப்போது என்ன நடக்கவிருக்கறதோ நடக்கட்டும், தானும் அதன் போக்கிலேயே செல்லலாம் என்ற முடிவை அவன் எடுத்துவிட, இப்போது மனம் தெளிவானதை உணர்ந்தான்.

மறுநாள் அதே கடற்கரையிலேயே படப்பிடிப்பு நடக்கவிருப்பதால் சப்தமி முன்னமே வந்துவிட்டவள், சாய்ஸ்வரன் வரவுக்காக காத்திருந்தாள். சிறிது நேரத்திலேயே அவனும் வந்துவிட, அவளைப் பார்த்து அவன் ஒரு புன்னகையை உதிக்கவும் தான் அவளுக்கு நிம்மதியானது.

“இப்போ நார்மலா இருக்கீங்களா?” என்று அவள் விசாரிக்கவும்,

“ம்ம் ஃபைன்,” என்று அவன் புன்னகைத்தப்படி கூற,

“இப்போ தான் நீங்க ஃபார்ம்க்கு வந்திருக்கீங்க,” என்று கூறி சப்தமி புன்னகைத்தாள்.

“அப்படியா? சும்மா சொல்லாத,” என்று அவன் கூற,

அப்போதோ, “ஸ்வரன், நீங்க நேத்து தலைவலின்னு டல்லா இருந்ததால நேத்து ஷூட் செய்ததும் சரியா இல்லை. அதனால அது வேண்டாம், இன்னைக்கு முதலிலிருந்து ஷூட் ஆரம்பிப்போம்,” என்று குழுவினர் சொல்லவும்,

“பாருங்க நான் சொன்னா நம்பனீங்களா? இப்போ இவங்க சொல்றதுக்கு என்ன சொல்றீங்க,” என்று அவள் கேட்கவும்,

“சரி சரி ஒத்துக்கிறேன்.” என்று தலையசைத்தான்.

பின் மாலை வரை படப்பிடிப்பு தொடர்ந்தது. அதற்கேற்றார் போல் வானிலையும் மேகமூட்டத்துடன் காணப்பட, மழையும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் சில்லென்று இதமாய் வீசிய கடற்கறை காற்று என்று இருந்த அந்த வானிலையில் அவர்கள் படம்பிடித்ததில் பெரிதாக அவர்களுக்கு எந்த சிரமங்களும் இல்லை.

படப்பிடிப்பு முடியவும் சப்தமி சிறிது நேரம் கடல் அலை கால்களில் மோத அந்த சூழ்நிலையை ரசித்தப்படி தனியாக நின்றுக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த சாய்ஸ்வரனோ,

தனிமையிலே இனிமை காண முடியுமா?

நள்ளிரவினிலே சூரியனும் தெரியுமா?

என்ற பாடலை பாட,

“ஏன் தனிமையில் இனிமை காண முடியாது. அதுவும் இந்த கடற்கரையில், இப்படி அலைகள் வந்து பாதத்தை நனைச்சிக்கிட்டு, கடலை வெறித்து பார்க்கும்போது நம்ம மனம் லேசாகிடும், தெரியுமா? அதை உணர்ந்தவர்களால் தான் தனிமை இனிமைன்னு புரிஞ்சிக்க முடியும்,

அப்புறம் ஏன் நள்ளிரவில் சூரியன் தெரியாது. நமக்கு நள்ளிரவுன்னா இன்னொரு நாட்டுக்கு பகல் தானே, அப்போ சூரியன் தெரியும் தானே,” என்று அவள் கேட்டாள்.

அதற்கு அவனோ, “ம்ம் சூப்பர் சூப்பர்,” என்று கைத்தட்டி அவளை பாராட்டிவிட்டு,

“தனிமையில் இனிமை காண முடியும் தான், ஆனா நம்ம மனசுக்கு பிடிச்ச துணை நமக்கு கிடைச்சிட்டா, அப்போ தனிமை நரகமா தான் ஆகும்,” என்று கூறியவன்,

துணை இல்லாத வாழ்வினிலே சுகம் வருமா?

என்ற அடுத்த வரியை பாடினான்.

“அப்படியா?அப்போ அப்படி ஒரு துணை கிடைக்கும்போது நீங்க சொல்றதை ஒத்துக்க முடியுதான்னு பார்ப்போம், இப்போ தனிமை இனிமை தான்,” என்று அவள் கூற,

“அப்படி ஒரு துணை இன்னும் கிடைக்கலையா? இல்லை பக்கத்தில் இருந்தும் உணரலையா?” என்று அவன் கேட்க,

“என்ன உளருறீங்க?” என்று அவள் பதில் கேள்விக் கேட்டாள்.

“நான் உளருறேனா? இல்லை நீ புரியாம இருக்கீயான்னு தான் புரியல பேபி,” என்று அவன் கூறவும்,

“ரெண்டு நாளா நீங்க ஒருமாதிரி அமைதியா இருந்தீங்க, ஆனா இன்னைக்கு திரும்ப இப்படியெல்லாம் பேசறீங்க, நீங்க என்ன புரிய வைக்கப் பார்க்கறீங்கன்னு புரியல, எனக்கு எதுவும் புரிஞ்சிக்க வேண்டாம்,” என்று அவள் கூறிவிட்டு அங்கிருந்து செல்ல முயற்சிக்க,

அவளின் கைப்பிடித்து நிறுத்தியவன், “அப்போ உனக்கு நிஜமாகவே எதுவும் புரியல அப்படித்தானே? உண்மையா புரியாதவங்களுக்கு புரிய வைக்கலாம், ஆனா புரியாத மாதிரி நடிக்கறவங்களுக்கு எவ்வளவு புரிய வச்சாலும் அதில் எந்த பிரியஜோனமுமில்லை.” என்று சொல்லி பிடித்திருந்த அவளின் கையை விடவும்,

அவனை நேருக்கு நேராக ஆழ்ந்து பார்த்தவள், பின் அங்கிருந்து சென்றுவிட்டாள்.

மனமிருந்தால் வழியில்லாமல் போகுமா?

வெறும் மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

தொடர்ந்து இசைக்கும்..