VMIA 8

இசை 8

“வாங்க மேடம், வாங்க,” என்று சாய்ஸ்வரன் சப்தமியை வரவேற்க, அது படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. படம்பிடிக்கும் இடமோ சாய்ஸ்வரனின் இல்லம்.

இசை கம்போஸிங் செய்வதற்காக அவனது வீட்டில் அதற்கான பிரத்யேக அறை அவன் வைத்திருக்க, அங்கு வைத்து நிகழ்ச்சிக்கான ஒரு பாகத்தை எடுக்கவே அவனது இல்லத்திற்கு வந்திருந்தார்கள். அவனது இல்லம் என்பதால் சாய்ஸ்வரன் சப்தமியை வரவேற்பது போல் இருக்க வேண்டுமென்பதால் அந்த காட்சியை படம்பிடித்துக் கொண்டிருந்தனர்.

ஹாய் மக்களே, இன்னைக்கு சப்தமி எங்க வீட்டுக்கு வந்திருக்கா,” ஆரம்பக் கட்ட பாகங்களில் சாய்ஸ்வரன் அவளை பன்மையில் பேசி அழைத்துக் கொண்டிருக்க, இப்போது அவர்கள் இருவருக்குமான நட்பின் உரிமையில் இப்போது ஒருமையில் மாறியிருந்தது.

அவ எதுக்காக இங்க வந்திருக்கான்னா,” என்று சாய்ஸ்வரன் சொல்லி முடிக்கவில்லை.

“நான் தான் சொல்வேன். நான் தான் சொல்வேன்.” என்று அவனை சொல்லவிடாமல் சப்தமி தடுத்தாள்.

“சரி சரி நீயே சொல்லு,” என்று அவன் சொல்லவும்,

“மக்களே, ஸ்வரன் அவரோட இசையென்னும் மேஜிக் மூலமா நம்மளை மயக்கி வச்சிருக்கார்னு நமக்கு தெரியும், அந்த மேஜிக் நடக்கும் இடம் எங்கன்னு நாம பார்க்க வேண்டாமா? ஒன்னு அவர் கம்போஸ் செய்த மியூஸிக் ஆல்பத்தை பார்த்திருப்போம், இல்லைன்னா எப்போதும் அவர் கிட்டாரோட அவர் பாடின பாட்டை கேட்டிருப்போம், ஆனா இன்னைக்கு அவரோட மேஜிக்கின் பிறப்பிடத்தை பாப்போம் வாங்க, என்ன புரியலையா? அவர் மியூஸிக் கம்போஸ் செய்ற இடத்தை தான் சொல்றேன்.” என்று அவள் சொல்லி முடிக்கவும், அது படமாக்கப்பட்டது.

அடுத்து அவர்கள் சாய்ஸ்வரனின் அந்த பிரத்யேக அறையில் இருக்க, அங்கிருந்த இசைக்கான உபகரணங்கள் ஒவ்வொன்றாய் படமாக்கப்பட்டுக் கொண்டிருக்க, சப்தமி அந்த உபகரணங்களை பார்த்து அசந்து போனாள். “வாவ் பார்க்கவே எனக்கு என்ன மாதிரி ஃபீல் கொடுக்குது தெரியுமா? உங்களுக்கும் அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன் மக்களே,” என்று கேமராவை பார்த்து கூறியவள்,

பின் ஒவ்வொன்றையும் அவளாக போய் இசைத்து பார்த்து அதில் வந்த சத்தத்தை கேட்டு சிரித்தப்படியே, “ஸ்வரன், இங்க இருக்க எல்லா இன்ஸ்ட்ருமென்ட்ஸும் நீங்க வாசிப்பீங்களா?” என்று கேட்க,

“நான் அவ்வளவு பெரிய ஜீனியஸ்லாம் இல்லம்மா, கீபோர்ட், கிட்டார், இன்னும் சிலது வாசிக்க தெரியும், மத்தப்படி மத்தததுக்கு எனக்கு தெரிஞ்ச சில ஃப்ரண்ட்ஸ் இருக்காங்க, அவங்க வாசிப்பாங்க, பலரோட கூட்டு முயற்சியில் தான் எங்க மியூஸிக் ஆல்பம் உருவாகும், ஆல்பம் முடிவில் யார் யார் என்ன இன்ஸ்ட்ருமென்ட் வாசிச்சாங்கன்னு பேர் போடுவோமே பார்த்ததில்லையா?” என்று அவன் கேட்க,

“எனக்கு உங்களை தவிர மத்தது எங்க கண்ணுக்கு தெரிஞ்சுது உங்க மியூஸிக் ஆல்பத்தில், எனக்கு மட்டுமா? இங்க நிறைய பொண்ணுங்களுக்கு அப்படித்தான் இருக்கும், என்ன கேர்ளஸ் நான் சொல்றது சரியா?” என்று கேமராவை பார்த்துக் கேட்டாள்.

“இது வேறயா? முடியலடா சாமி,” என்று சாய்ஸ்வரன் புன்னகைத்தான்.

பின் அவனது கிட்டாரை கையில் எடுத்தவள், இசைத்து பார்க்க அவளுக்கு வித்தியாசமான சத்தம் தான் வந்தது. “ஸ்வரன், இந்த கிட்டார் உங்க பேச்சை மட்டும் தான் கேட்குமா? நான் வாசிச்சா இப்படி சத்தம் வருது வை?” என்று அவள் முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு கேட்க,

அவள் தலையில் செல்லமாக அடித்தவன், “வாசிக்க தெரிஞ்சவங்க யார் வாசிச்சாலும் நல்ல மியூஸிக் தான் வரும், உனக்கு வாசிக்க தெரியலன்னு சொல்லு,” என்றான்.

“எனக்கெல்லாம் கேள்வி ஞானம் மட்டும் தான், ஆனா இப்போ இதைப் பார்த்ததும் வாசிக்கணும் போல இருக்கே,” என்றவள்,

“மக்களே கேட்க கொஞ்சம் மோசமா தான் இருக்கும், கொஞ்சம் பொறுத்துக்கோங்க, இல்ல கொஞ்ச நேரத்துக்கு டிவியை மியூட்ல வச்சிடுங்க,” என்று சொல்லி சிரித்தவள், கிட்டாரை மீட்ட அந்த சத்தத்தில் அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

“உங்களுக்கு மட்டும் தனியா சொல்லணுமா? கொஞ்ச நேரத்துக்கு காதை மூடிக்கோங்க, நான் வாசிக்கணும்னு முடிவு செய்துட்டேன்.” என்றவள், அவள் பாட்டுக்கு விரல் போன போக்கிற்கு கம்பிகளை மீட்டி வாசித்துக் கொண்டிருந்தாள்.

அதைப்பார்த்து அவனுக்கு சிரிப்பு அதிகமாக வாய்விட்டு சிரித்தவன், “உனக்கு வாசிக்கணும் அதானே, ஒருநிமிஷம் பொறு,” என்றவன், அவளின் பின்னால் நின்று, அவளின் கையோடு தன் கை சேர்த்து, அவள் விரல்கள் மீது தன் விரல்களை வைத்தவன், அந்த கிட்டாரை மீட்ட, அவளுக்கோ அவனது அருகாமை உள்ளுக்குள் என்னவோ செய்துக் கொண்டிருந்தது.

அதை உணராத அவனோ, “இப்படித்தான் வாசிக்கணும்,” என்று சொல்லியப்படி அவள் விரல்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து கொண்டிருக்க, இந்த நேரம் நீளாதா? என்று அவளின் மனம் பேராசைக் கொண்டது.

பின் கீபோர்டை இசைத்துப் பார்க்க வேண்டுமென்று அவளுக்கு ஆசை வர, அவளை உட்கார வைத்து, அதேபோல் அவளின் பின்னால் நின்று அவளுக்கு இசைத்து பழக அவன் கற்றுக் கொடுக்க, அவள் ஏதோ புது உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அவையாவும் அங்கு படமாகிக் கொண்டிருந்தது.

மதியத்திற்கு மேலும் படப்பிடிப்பு நீண்டதால் அனைவருக்கும் தன் வீட்டிலேயே சாய்ஸ்வரன் மதிய உணவு ஏற்பாடு செய்திருந்தான். அனைவரைக்கும் உணவு மேசையில் வைத்து பரிமாற முடியாது என்பதால், அவர்களுக்கு மாடியில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க, அவர்களெல்லாம் அங்கு செல்ல, சப்தமியும் அவர்களோடு போகவும், அவளின் கைப்பிடித்து நிறுத்திய சாய்ஸ்வரன், “எங்க போற, நாம இங்கேயே சாப்பிடலாம் பேபி,” என்று அவளிடம் கூறினான்.

“இல்ல பரவாயில்லை, நான் அவங்களோடவே சாப்பிட்றேன். நான் மட்டும் இங்க சாப்பிட்டா அவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க,” என்று அவள் கேட்க,

“என்ன நினைப்பாங்க, நீ என்னோட சாப்பிட்றன்னு நினைப்பாங்க, அதனால எதுவும் மறுப்பு சொல்லாம ஒழுங்கா வா, என்னோட அம்மாவும் தங்கையும் உன்னைப் பார்க்க ஆவலா இருக்காங்க,” என்று அவளது கையைப் பிடித்தப்படி இருந்தவன், அவளை இழுத்துச் சென்றான்.

படப்பிடிப்பு நடக்கப் போகிறது என்று சாய்ஸ்வரன் கூறியதால் அவர்கள் வரும்போது அவனது அன்னை ஜனனி வந்து வரவேற்றதோடு பின் அவரின் வேலையை பார்த்துக் கொண்டிருந்தவர், இப்போது உணவு மேசையில் சப்தமியை இன்முகத்தோடு வரவேற்றார். உடன் அவனது தங்கையும் நின்றிருந்தாள்.

“சப்தமி, இது என்னோட அம்மா, பேர் ஜனனி, கர்நாடக சங்கீதம் முறையா கத்துக்கிட்டவங்க, அவங்க ஆர்வம் தான், எனக்கும் இசையில் அவ்வளவு ஆர்வம்.” என்று அவரையும்,

“இது என்னோட தங்கை, பேர் சாய்கீர்த்தனா, சுருக்கமா கீர்த்தி, பி.ஈ செகண்ட் இயர் படிச்சிட்டு இருக்கா, இவ வீணை நல்லா வாசிப்பா, கூட நல்லா பாடுவா, என்னோட சில ஆல்பத்தில் கூட இவ பாடியிருக்கா, அம்மாவையும் பாட வைக்க முயற்சி செய்துட்டு இருக்கேன். ஆனா அவங்க பிடி கொடுக்க மாட்றாங்க, அப்பா ஆஃபிஸ் போயிருக்கார். அவருக்கு எங்க 3 பேரையும் பாட வச்சு வாசிக்க வச்சு கேட்டு ரசிப்பார். மத்தப்படி அவருக்கு தெரிஞ்சதெல்லாம் பிஸ்னஸை எப்படி டெவலப் செய்றது என்பது தான், இதுதான் என்னோட குடும்பம்.” என்று அவர்களை அறிமுகப்படுத்தியவன்,

“அம்மா இது சப்தமி,” என்று அவளை அவருக்கு அவன் அறிமுகப்படுத்த,

“எங்களுக்கு தெரியாது பாரு, அறிமுகப்படுத்த வந்துட்டான்.” என்றவர்,

“எப்படி இருக்க ம்மா, அம்மா, அப்பா நல்லா இருக்காங்களா?” என்று விசாரித்தார்.

“ம்ம் எல்லாம் நல்லா இருக்காங்க ஆன்ட்டி,” என்று அவள் அவருக்கு பதில் கூற,

“சப்தமி, உங்க பேர் அழகா இருக்கு, அண்ணனோட பேச்சில் அடிக்கடி உங்க பேர் தான் வந்திட்டு இருக்கும், நேத்து கூட நீங்க இங்க வரப் போறீங்கன்னு சொல்லிட்டு இருந்தாங்க, உங்களை நேரில் பார்க்கணும்னு நான் இன்னைக்கு காலேஜ் கூட போகல தெரியுமா?” என்று கீர்த்தனா கூறவும், வியப்பாக சப்தமி சாய்ஸ்வரனை பார்க்கவும், அவன் இரண்டு கண்ணையும் சிமிட்டி அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

“விட்டா ரெண்டுப்பேரும் பேசிட்டே இருப்பாங்க, நீ கைகழுவிட்டு வந்து உட்காரும்மா,” என்று ஜனனி கூறவும், அவளும் அவருக்கு தலையாட்டிவிட்டு கையை கழுவி விட்டு வந்து சாப்பிட அமர, இயல்பாய் சாய்ஸ்வரன் அவளின் அருகில் வந்து அமர்ந்தான்.

அதில் கொஞ்சம் அதிர்ச்சியாகி அவனது அன்னை நினைப்பாரோ? என்று அவள் ஜனனியை பார்க்க, அவரோ அதைப்பற்றி அவருக்கு ஒன்றுமில்லை என்பது போல் பரிமாற ஆரம்பித்தார்.

“நீங்களும் எங்களோட சாப்பிட உட்காருங்க ஆன்ட்டி, அப்படியே எல்லோரும் பரிமாறிக்கலாம்,” என்று அவள் சொல்ல,

“இருக்கட்டும்மா நீ சாப்பிடு,” என்றவர், அவளுக்கு பார்த்து பார்த்து பரிமாறினார். கீரத்தனாவும் சாய்ஸ்வரனும் உடன் சேர்ந்து “அம்மா இதை வைங்க, அதை வைங்க,” என்று வேறு சொல்லிக் கொண்டிருந்தனர்.

பின்னர் சாப்பிட்டு முடித்ததும் மீண்டும் படப்பிடிப்பு மாலை நேரம் வரை தொடர்ந்தது. அடுத்து அனைவரும் கிளம்பும் நேரம் சப்தமியோ ஜனனி, கீர்த்தனாவிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப,

ஜனனியோ “கொஞ்சம் இரும்மா,” என்றவர், அறைக்குள் சென்று வெளியே வரும்போது, ஒரு தட்டில் ஒரு புது புடவையும் தாம்புலமும் வைத்துக் கொண்டு வந்தார்.

அதைப்பார்த்ததும் சப்தமியோ, “அய்யோ இதெல்லாம் எதுக்கு ஆன்ட்டி,” என்று மறுக்க பார்க்க, வீடு வரை வந்த உன்னை வெறுமனே அனுப்பறதா? இந்தா வாங்கிக்கோ,” என்றவர், அவள் நெற்றியில் திருநீரும் குங்குமமும் இட்டுவிட,

இதற்கு மேல் மறுத்தால் அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கும் என்பதால் அதை வாங்க நினைத்தவள், அதற்கு முன் அவரின் காலை வணங்கி ஆசிர்வாதம் வாங்க, ஜனனியும் அதில் மகிழ்ந்தவராக அவளை மனதார ஆசிர்வதித்தார். பின் அந்த தாம்பூலத்தை பெற்றுக் கொண்டு அவர்கள் மூவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள்.

போகும் அவளையே பார்த்தப்படி நின்றிருந்த மகனிடம், “அவக்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிட்டீயா சாய்,” என்று ஜனனி கேட்க,

அவனோ, “இன்னும் இல்லம்மா,” என்று தயக்கத்தோடு கூற,

“சீக்கிரம் விஷயத்தை சொல்லு ப்பா, இப்படி சொல்லாம இருக்கறது ரொம்ப தப்பு, அப்புறம் ஏதாவது விரும்பதகாதது நடந்தா அதை ஏத்துக்கும் மனபக்குவம் இருக்கணுமே,” என்று அவர் கூறினார்.

“அப்படி எதுவும் நடக்காம பார்த்துக்கிறேன் ம்மா,” என்று சொன்னவனுக்கோ மனம் முழுதும் பல சிந்தனைகள்.

அலுவலகக்தில் இருந்து வரும்போதே மகா, “அனிதா, அனி,” என்று கோபமாக கூப்பிட்டப்படியே வந்தாள்.

அவளது கோபத்திற்கான காரணம் என்னவென்ற யூகம் அனிதாவிற்கு இருந்தாலும், “என்னாச்சு மகா, ஏதோ டென்ஷனா இருக்கா மாதிரி இருக்கு, என்ன பிரச்சனை.” என்று கேட்டப்படியே அவளின் அருகில் வர,

“என்னன்னு தெரியாது பாரு, அதான் எல்லாம் சேர்ந்து முடிவெடுத்துட்டீங்களே, இனி நான் உங்களுக்கு முக்கியம் இல்லைதானே, அதுக்குப்பிறகும் நான் ஏன் இங்க இருக்கணும், பேசாம நான் துபாய்க்கே போறேன்.” என்று மகா கூறினாள்.

“லூசு மாதிரி பேசாத மகா, இது நீ செய்யணும்னு நினைச்சது. அதுக்கு நாங்க உறுதுணையா இருக்கோம், அவ்வளவுதான், நீ இல்லாம நாங்க இதை எப்படி செயல்படுத்துவோம், நீ எங்களை புரிஞ்சு வச்சுக்கிட்டது அவ்வளவுதானா?” என்று அனிதா கேட்க,

“அதான் எனக்கு தெரியாமலே சாய்ஸ்வரன்க்கு பதில் வேற ஒரு ஆளை செலக்ட் செய்துட்டீங்களே, அப்புறம் இதை நான் எப்படின்னு நினைக்கிறதாம்? என்கிட்ட கேட்கணும்னு கூட உங்களுக்கு தோனல இல்ல,” என்று என்று மகா வருத்தமாக கூறினாள்.

“அப்படியெல்லாம் இல்ல மகா, நம்ம ஆளுங்க அந்த நபர் சரியா வருவாங்கன்னு நினைச்சு செலக்ட் செய்திருக்காங்க, ஆனா இறுதி முடிவு உன்னோடது தான், நீதான் ஓகேவான்னு சொல்லணும், முதலில் மாதிரி யாரையோ நம்ம டீம் தேர்ந்தெடுக்கல, சாய்ஸ்வரன் மாதிரி இவரும் ஒரு செலப்ரட்டி தான், நீதானே சொன்ன நம்ம வேலைக்கு ஒரு செலப்ரட்டியை வச்சு செய்தா நல்லா இருக்கும்னு,

இங்கப்பாரு இதுக்கு மேலேயும் சாய்ஸ்வரனை எதிர்பார்த்துட்டு இருப்பது நாம வேஸ்ட்டா நம்ம நேரத்தை வீணாக்கறதுக்கு சமம்னு தான் சொல்லணும், நம்ம டீமும் எத்தனை நாள் நமக்காக காத்திட்டு இருப்பாங்க, அவங்களும் அவங்களோட எதிர்காலத்தை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றனும்னு தானே பார்ப்பாங்க, அதனால நாம உடனே வேலையை ஆரம்பிச்சு தான் ஆகணும், அதுவும் நீதான் அதை செய்யணும்,

நாளைக்கு அந்த நபரை நேரில் பார்த்து ஓகேவான்னு சொல்லு, ஓகேன்னா உடனே வேலையை ஆரம்பிக்கலாம், என்ன சொல்ற மகா?” என்று அனிதா கேட்கவும்,

“சரி நாளைக்கு முடிவு செய்யலாம்,” என்று அரை மனதாக சொல்லிவிட்டு மகா தனதறைக்கு வந்தவளுக்கோ, ‘தான் எதற்காக வந்தோம், வந்த வேலையை பார்க்காமல் ஏன் சாய்ஸ்வரனை காரணம் காட்டி வேலையை தள்ளிப் போட்டு கொண்டிருக்கிறோம்,’ என்று நினைத்து மனம் முழுவதும் குற்ற உணர்வால் நிறைந்திருந்தது.

தனதறையில் உள்ள வார்ட்ரோபை திறந்து அங்கே துணிகளின் இடுக்கில் வைத்த புகைப்படம் ஒன்றை எடுத்து பார்த்தாள். அதில் புன்னகையோடு இருந்த அந்த அப்பாவி முகத்தை பார்த்ததும் அவளுக்கு தன்னை மீறி கண்கள் கலங்க,

“சாரி டா, உன்னை மனசில் வைத்தாவது நான் சீக்கிரமா என்னோட வேலையை ஆரம்பிச்சுருக்கணும், தப்பு செய்துட்டேன். இனி யாருக்காகவும் நான் காத்திருக்க போறதில்லை, உனக்கு நடந்த விஷயத்துக்கு நீதி கிடைச்சுதோ இல்லையோ, இதால யாராச்சும் ஒருத்தர் உண்மையை புரிஞ்சிக்கிட்டா கூட அதுவே எனக்கு வெற்றி தான்,” என்று புகைப்படத்தை பார்த்து சொல்லிக் கொண்டாள்.

அன்று இரவு தனது அடுத்த மியூஸிக் ஆல்பத்திற்கான புது ட்யூனை கம்போஸிங் செய்யும் முயற்சியில் சாய்ஸ்வரன் ஈடுப்பட்டிருக்க, என்ன முயன்றும் மனம் அதில் லயிக்கவில்லை. அவன் சிந்தனை முழுவதும் மாலை சப்தமி அனுப்பியிருந்த சில புகைப்படம் மற்றும் காணொளி பற்றியதாக இருந்தது.

அது அவர்கள் சம்பந்தப்பட்ட காணொளி தான், அவர்களின் நிகழ்ச்சி தொடர்ந்து வானம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, இப்போது இருவரும் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஜோடியாக மாறிவிட்டனர்.
அவர்களை இணைத்து மீம்ஸுகளும், எடிட் செய்த காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வந்த வண்ணம் இருக்க, சப்தமி அதை தவற விடுவதேயில்லை. ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து ரசிப்பாள். அன்றோ அதை சாய்ஸ்வரனுக்கும் அனுப்ப வேண்டும் என்று அவள் நினைத்ததால் அவனது வாட்ஸ் அப் எண்ணிற்கு அந்த புகைப்படங்களையும் காணொளிகளையும் அனுப்பி வைத்தாள்.

அதனுடன், “அழகா இருக்குல்ல,” என்றும் ஒரு செய்தியை அவனுக்கு அனுப்பியிருந்தாள்.

அதை படித்ததில் இருந்து தான் அவனது மனம் ஒருநிலையில் இல்லை. ஏனோ அந்த சின்ன பெண்ணை ஏமாற்றுகிறோமோ என்ற குற்ற உணர்வு அவனை பெரிதாக தாக்கியது.

தொடர்ந்து இசைக்கும்..