VMIA 7

இசை 7

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இப்போது ஆரம்பித்திருந்தது. இதில் அடுத்த இரண்டு பாகங்கள் அந்த வார இறுதியில் தொலைக்காட்சியில் வேறு ஒளிப்பரப்பாக, சாய்ஸ்வரன் சப்தமி ஜோடி வெகுவாக மக்களிடையே பிரபலமாகியிருக்க இதுவே சப்தமியின் உற்சாகத்திற்கு போதுமானது.

ஆனாலும் அவள் அதிக உற்சாகத்தோடு வலம் வந்ததற்கு சாய்ஸ்வரன் இன்றி வேறு எந்த காரணம் இருக்கக் கூடும், இப்போதெல்லாம் அவன் சகஜமாக அவளிடம் பேசிக் கொண்டிருப்பதே அவள் சிறகின்றி பறந்து கொண்டிருந்தாள்.

இன்றைய படப்பிடிப்பு ஆதரவற்றவர்கள் இருக்கும் ஒரு இல்லத்தில் நடைப்பெற்றது. இந்த இல்லத்திற்கு சாய்ஸ்வரன் வழக்கமாக வந்து போவான். அவர்கள் வீட்டில் யாருடைய பிறந்தநாள், திருமண நாள் மற்ற எந்த விசேஷம் என்றாலும் அங்கு வந்து கொண்டாடுவதை அவர்கள் வழக்கமாக வைத்திருக்க, இன்னும் சில நாட்களில் அவன் பிறந்தநாள் வரவிருப்பதால், அன்று ஒளிபரப்புவதற்காக, அதை முன்னிட்டு அந்த இல்லத்தில் அவர்களை வைத்து படம்பிடிக்க திட்டம் போட்டிருந்தனர்.

சப்தமி அவளே வருவதாக சொல்லி ஒரு வாடகை காரில் வந்தவள், காரை விட்டு இறங்கும்போது சாய்ஸவரனும் அவனது காரில் வந்து இறங்கினான். அவனை கண்டவள், “ஹாய் ஸ்வரன்,” என்ற உற்சாக குரலோடு அவள் அருகில் வந்தவள்,

“ஸ்வரன், இன்னைக்கு ஷூட்டிங் இங்கன்னு தெரிஞ்சு எனக்கு எவ்வளவு ஆச்சர்யமா போச்சு தெரியுமா? உங்களைப்பத்தி ஒவ்வொன்னும் கேள்விப்படும்போதும் பிரம்மிப்பா இருக்கு, இப்படி ஒரு இடத்தில் நீங்க உங்க பிறந்தநாளை கொண்டாட்றீங்க, வாவ். இதை கேள்விப்பட்டதும் இனி நானும் என்னோட பிறந்தநாளை இங்க தான் கொண்டாடணும்னு எனக்கு ஆசையா இருக்கு,” என்று கூறினாள்.

“நல்ல விஷயம் தான், தொடர்ந்து செய்.” என்று அவனும் அவளை ஊக்கப்படுத்தினான்.

அடுத்து இல்லத்தின் உள்ளே இருவரும் சென்றனர். வழக்கம்போல் முதலில் சப்தமியை வைத்தே படப்பிடிப்பு தொடங்கினர். சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அந்த இல்லத்தில் இருந்தவர்கள் அவள் பின்னால் இருக்க, கேமரா அனைவரையும் போகஸ் செய்ய, “மக்களே இன்னைக்கு என்ன நாள் தெரியுமா? நான் ஸ்வரனோட வந்திருப்பது எந்த இடம் தெரியுமா? இதோ இந்த இல்லம் தான், எனக்கும் உங்களுக்கும் தான் இது புது இடம். ஆனால் ஸ்வரனுக்கு இது பழகின இடம் தான்,

இவ என்ன சொல்ல வரான்னு புரியாம பார்க்கறீங்களா? இந்த விஷயத்தை நான் கேள்விப்பட்டப்போ ஸ்வரனை நினைச்சு அப்படியே பிரமிப்பா ஆயிடுச்சு தெரியுமா? ஸ்வரனும் அவங்க வீட்டில் இருப்பவர்களும் அவங்க வீட்டில் எந்த செலப்ரேஷனா இருந்தாலும் இங்க வந்து இந்த இல்லத்தில் தான் கொண்டாடுவாங்களாம், கேட்கவே ஸ்வீட்டா இருக்குல்ல, எனக்கும் அப்படித்தான் இருந்துச்சு, சிம்ப்ளி சூப்பர்.

அப்போ இன்னைக்கு என்ன செலப்ரேஷன்க்காக இங்க நாங்க வந்திருக்கோம் அப்படின்னு தானே யோசிக்கிறீங்க, என்னவா இருக்கும்னு நினைக்கறீங்க, சொல்லுங்க பார்க்கலாம், ம்ம் கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க, இன்னைக்கு நம்ம ஸ்வரனோட பிறந்தநாள் தான், அதை கொண்டாட தான் நாம இங்க வந்திருக்கோம், வாங்க நான், நீங்க, இந்த இல்லத்தில் இருக்கவங்க எல்லாம் சேர்ந்து ஸ்வரனோட பிறந்தநாளை ஜாலியா கொண்டாடலாம்,” என்று அவள் பேசி முடிக்கவும்,

“சூப்பரா பேசினம்மா, ஷாட் ஓகே,” என்று ஒளிப்பதிவாளர் பாராட்டவும், அடுத்த காட்சி படமாக்கப்பட்டது.

அடுத்து சாய்ஸ்வரனும் சப்தமியும் உடனிருக்க, “ஹாய் ஸ்வரன், இன்னைக்கு இந்த இல்லத்துக்கு எதுக்கு வந்திருக்கோம் தெரியுமா?” என்று சப்தமி அவனிடம் கேட்க,

“எதுக்கு வந்திருக்கோம், எனக்கு தெரியலையே,” என்று அவன் அப்பாவியாக கேட்கவும்,

“ஹே நீங்க சும்மா சொல்றீங்க, இன்னைக்கு உங்க பிறந்தநாள். அது உங்களுக்கு தெரியும், இங்க உங்க பிறந்தநாளை கொண்டாட வந்திருக்கோம், தெரிஞ்சுக்கிட்டே நடிக்கிறீங்க, அப்படித்தானே?” என்று அவள் பதில் கேள்விக் கேட்டாள்.

“எனக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைக்கிறீங்க, கொஞ்சமாச்சும் நானும் அது தெரியாத மாதிரி இருக்க வேண்டாமா?” என்று அவன் கேலியாக கூறவும்,

“சப்தமி உனக்கு இந்த அவமானம் தேவையா?” என்று அவளே அவளுக்கு கூறிக் கொள்ள, அவன் சிரித்தான்.

“சரி ஸ்வரன் கொஞ்சம் சீரியஸா பேசுவோம், எத்தனை வருஷமா இப்படி இந்த இல்லத்தில் வந்து உங்க பிறந்தநாளை கொண்டாட்றீங்க, இப்படி இங்க வந்து கொண்டாடணும்னு உங்களுக்கு தோனுச்சா, இல்லை உங்க வீட்டில் வேற யாருக்காச்சும் இப்படி தோனுச்சா,” என்று சப்தமி கேட்க,

“அப்போ நான் 8த்படிச்சிட்டு இருந்தேன். அப்போ ஸ்கூலில் கேம்ப் மூலமா வேற ஒரு ஆதரவற்றோர் இல்லத்துக்கு கூட்டிட்டு போனாங்க, பொதுவா இதுபோல இல்லங்கள் எப்படி செயல்படுது. நாம எப்படியெல்லாம் அந்த இல்லங்களுக்கு உதவலாம், இதைப்பத்தியெல்லாம் விளக்கினாங்க, கூட உங்க அம்மா, அப்பா மூலமா இதுபோல இல்லங்களுக்கு உதவுங்கன்னு மாணவர்கள் எங்களுக்கும் சொன்னாங்க, அப்போ உடனே வீட்டுக்கு வந்து இதைப்பத்தி அப்பாக்கிட்ட பேசினேன். டொனேஷன் கொடுக்கணும்னு சொன்னேன். அப்புறம் என்னோட பிறந்தநாளை அதுபோல ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் கொண்டாடணும்னு சொன்னேன். அப்பா, அம்மாவும் இதுக்கு ஒத்துக்கிட்டாங்க, அன்னையிலிருந்து எங்களுக்கு தெரிஞ்ச சில இல்லங்களுக்கு உதவிக்கிட்டு இருக்கோம், அடிக்கடி இங்க வந்து எங்க மகிழ்ச்சியான நாட்களை இவங்களோட சேர்ந்து கொண்டாட்றோம்,” என்று அவன் சொல்லவும்,

“சூப்பர்,” என்று சொல்லி சப்தமி கைத்தட்டினாள்.

அடுத்து அந்த இல்லத்தில் இருப்பவர்களிடம் சாய்ஸ்வரனை பற்றி கேட்க, அவர்களும் அவனையும் அவனது குடும்பத்தையும் பற்றி புகழ்ந்து பேசினர். அடுத்து அனைவரின் முன்னிலையில் சாய்ஸ்வரன் கேக் வெட்டி அவனது வரவிருக்கும் பிறந்தநாளை கொண்டாடினான். அனைவருக்கும் அவன் செலவில் அன்று விருந்து பரிமாறப்பட்டது.

“அப்புறம் ஸ்வரன் உங்க பிறந்தநாளை எல்லோரடவும் சேர்ந்து சூப்பரா கொண்டாடியாச்சு, அடுத்து நீங்க எங்களுக்கு ட்ரீட் தர வேண்டமா?” என்று சப்தமி கேட்க,

“ட்ரீட்டா?” என்று சாய்ஸ்வரன் புரியாமல் கேட்க,

“நாங்க உங்கக்கிட்ட என்ன ட்ரீட் கேட்க போறோம், எல்லாம் உங்க இசையும் நீங்க பாடும் பாட்டும் தான், இன்னைக்கு இங்க ஒரு கூட்டமே இருக்கோம், நேயர் விருப்பமா நீங்க நிறைய பாட்டு பாடணும்,” என்று சப்தமி சொல்ல, அங்கிருந்தவர்களும் அவளின் பேச்சை ஆமோதித்தனர்.

பின்பு என்ன ஸ்வரனின் ஒரு இன்னிசை கச்சேரியே அங்கு நடைபெற, அனைத்துமே தொலைக்காட்சி குழு மூலம் படமாக்கப்பட்டது.

அந்த நாள் முழுதும் அங்கேயே கழிந்துவிட, அனைவரும் கிளம்புநேரம் இருள் சூழ்ந்துவிட்டது. சப்தமி வாடகை காரில் வந்ததால் மிண்டும் செல்வதற்கு காரை அழைக்க அவள் அலைபேசியில் முயற்சித்துக் கொண்டிருக்க, “ஹாய் பேபி, என்ன இன்னும் நீ கிளம்பலையா?” என்று கேட்டப்படி சாய்ஸ்வரன் அவள் அருகில் வந்தான்.

அவன் பேபி என்று அழைத்தது அவளுக்கு பிடித்து இருந்தாலும், மற்றவர்கள் முன்பு அப்படி அவன் அழைப்பது அவளுக்கு ஒருமாதிரி இருக்க, அதுவுமில்லாமல் அந்த அழைப்பில் ஒரு உரிமை உணர்வு கலந்திருப்பது போல் தோன்றவும், அதை அதிகம் வளரவிடக் கூடாது என்று நினைத்தவள்,

“நான் அன்னைக்கே சொல்லணும்னு நினைச்சேன். அது என்ன பேபின்னு கூப்பிட்றீங்க, என்னோட பேர் சொல்லியே கூப்பிடுங்க,” என்று அவள் அவனிடம் கூற,

“ஏன் உனக்கு நான் அப்படி கூப்பிட்றது பிடிக்கலையா?” என்று கேட்டான்.
அதற்குள் அவர்களை கடந்து சென்ற அவர்கள் குழுவினர் சேர்ந்த இரண்டுபேர் அவர்களை சுவாரசியாமாக பார்த்தப்படி போகவும், ” மத்தவங்க அதை கேட்டா என்ன நினைப்பாங்க,” என்று சப்தமி அவனிடம் கேட்க,

“அப்போ மத்தவங்க கேட்கிறது தான் உன்னோட பிரச்சனை. மத்தப்படி நான் கூப்பிடுவது பிடிச்சிருக்குல்ல, அப்புறம் என்ன? இனி யாராச்சும் இருக்கும்போது அப்படி கூப்பிடாம இருக்கேன்.” என்று அவன் கூறினான்.

அதற்கு அவள் அவனை முறைத்து பார்க்க, “நீ இன்னும் கிளம்பலையான்னு கேட்டதுக்கு எந்த பதிலும் சொல்லல,” என்று அவன் கேள்வியை நினைவுப்படுத்த,

“அதுக்கு தான் கார் புக் செஞ்சுட்டு இருக்கேன்.” என்ற அவளது பதிலை கேட்டு,

“இருட்டிடுச்சு, இந்த டைம் இந்த ஏரியால இருந்து நீ தனியா கார்ல போறது சேஃப்டி இல்லை. வா நான் உன்னை ட்ராப் செய்றேன்.” என்றான்.

“இல்லை கார் சேஃப்டி தான், ஒன்னும் பிரச்சனை ஆகாது. நான் பார்த்துக்கிறேன். நீங்க போங்க,” என்று அவள் மறுக்க,

“கால் டாக்ஸிக்காரனை நம்பி தனியா போவ, என்னோட வர மாட்டீயா?” என்று அவன் கோபமாக கேட்க, அவளும் மறுபேச்சு பேசாமல் அவனது காரில் சென்று அமர்ந்து கொண்டாள்.

கார் கிளம்பி சிறிது தூரம் சென்றுக் கொண்டிருக்க, சப்தமி மௌனமாக வரவே, “என்னாச்சு என்மேல கோபமா?” என்று சாய்ஸ்வரன் கேட்க,

“எனக்கு என்ன கோபம்? அபபடியெல்லாம் ஒன்னுமில்லையே,” என்று அவள் பதில் கூறினாள்.

“அப்புறன் ஏன் அமைதியா வர, இது உன்னோட கேர்க்டர் இல்லையே,” என்று அவன் கூற,

“என்னோட கேரக்டர் பத்தி முழுசா உங்களுக்கு தெரியுமா?” என்று அவள் கேட்டாள்.

“ஒருத்தரை தொடர்ந்து கவனிச்சிட்டே வந்தா அவங்க கேரக்டரை சரியா கணிச்சிட முடியும்,”

“அப்போ என்னை அந்த அளவு கவனிக்கிறீங்களா?” என்று சாதாரணமாக கேட்டவள், அப்போது தான் அதன் அர்த்தம் புரிந்து அமைதியாகிவிட்டாள்.

“ஏன் நான் கவனிக்க கூடாதா?” என்று அவன் கேட்க,

“இடக்குமடக்கான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.” என்றவள், அதன்பின் காரின் வெளிப்பக்கம் வேடிக்கை பார்ப்பது போல் இருக்க, சாய்ஸ்வரனும் அதன்பின் அவளை தொந்தரவு செய்யவில்லை. பின் சிறிது நேரத்தில் அவளின் அடுக்குமாடி குடியிருப்பின் முன் அவன் காரை நிறுத்தவும் தான், அவனிடம் தன் வீட்டின் முகவரியை தான் சொல்லவுமில்லை. அவன் கேட்கவுமில்லை என்பதை உணர்ந்தவள்,

“உங்களுக்கு எப்படி என்னோட வீடு தெரியும்?” என்று கேள்வியெழுப்ப,

“உனக்கு வேணும்னா என்னைப்பத்தி அதிகம் தெரியாமல் இருக்கலாம், ஆனால் எனக்கு உன்னைப்பத்தி எல்லாம் தெரியும்,” என்ற அவனது பதிலில் அவளால் கலவரப்படாமல் இருக்க முடியவில்லை.

அது அவளது முகத்தில் நன்றாகவே தெரிய, “என்னோட பதிலுக்கு இது ரியாக்ஷனா இருக்கக் கூடாதே, கூல் பேபி, நான் உன்னைப்பத்தி தெரிஞ்சிக்க கூடாதா?” என்று அவன் கேட்கவும்,

“முதலிலேயே இதுக்கு பதில் சொன்னதா ஞாபகம்,” என்றாள் அவள்,

“முதலிலேயே பதில் சொன்னீயா?” என்று அவன் புரியாமல் கேட்க,

“இடக்கு மடக்கான கேள்விக்கு பதில் சொல்ல முடியாதுன்னு சொன்னனே, ஞாபகம் இல்லையா?” என்று அவள் கூறவும்,

“ஹாஹா காமெடி. இதுக்கு கண்டிப்பா நான் சிரிப்பேன்.” என்று அவன் அதற்கு வேண்டுமென்றே சிரித்தான்.

“போதும் ரொம்ப சிரிச்சா யாராச்சும் பைத்தியம்னு சொல்ல போறாங்க,” என்று அவள் கேலி செய்ய,

“இதுக்கு என்கிட்ட பதில் இருக்கு, சொன்னா அதையும் இடக்கு மடக்குன்னு சொல்லுவ, என்ன பதில் சொல்லட்டுமா?” என்று அவன் கேட்கவும்,

அவன் “உன்மேலே பைத்தியம்,” என்று சொன்னாலும் சொல்வான். என்பதை யூகித்தவள்,

“போதும் சாமி, வீட்டில் கூட்டிட்டு வந்து விட்டதுக்கு, ரொம்ப நன்றி.” என்றவள், காரை விட்டு இறங்கினாள்.

“என்ன அவ்வளவுதானா? வீட்டுக்குள்ள கூப்பிட்டு ஜஸ்ட் ஒரு காஃபி இல்லையா? என்னை கால் டாக்ஸி டிரைவராகவே நினைச்சிட்டீயா?” என்று சாய்ஸ்வரன் கேட்க,

அவன் கேட்பதற்கு முன்னரே அவளே அவனை வீட்டிற்குள் அழைக்க தான் நினைத்தாள். ஆனாலும் அவனை உள்ளே அழைக்க அவளுக்கு ஒருவித தயக்கம் இருந்தது. இப்போது அவனே கேட்கவும் அப்போதும் அவனை அழைக்க அவள் தயங்க,

“விருப்பம் இல்லன்னா பரவாயில்லை. அப்போ நான் கிளம்பறேன்.” என்று அவன் காரை இயக்க போக,

“அப்படியெல்லாம் இல்லை வீட்டுக்கு வாங்க,” என்று அவள் அவனை அழைத்தாள்.

“பரவாயில்லை நீ அரை மனசா கூப்பிட்ற, அப்படியொன்னும் கூப்பிடணும்னு அவசியமில்ல, இன்னொரு நாள் வரேன்.” என்று அவன் கூறவும்,

“ஒழுங்கா முதல்முறை கூப்பிடும்போதே வந்துடுங்க, நீங்க சீன் காட்டவும், நான் திரும்ப திரும்ப கூப்பிடுவேன்னு எதிர்பார்க்காதீங்க,” என்று அவள் சொல்ல,

“ஓ ஓ அப்படியா? நீ இப்படியெல்லாம் பேசினா கோபப்பட்டுக்கிட்டு வர மாட்டேன்னு நினைக்காத, கண்டிப்பா வருவேன்.” என்று அவன் சொன்னதும் சப்தமிக்கு சிரிப்பு வந்துவிடவே சிரித்துவிட்டாள்.

“சிரிக்கும்போது நீ அழகா இருக்க,” என்று சாய்ஸ்வரன் அவளை ரசித்தப்படி கூற,

“அப்போ மத்த நேரத்தில் நான் அசிங்கமா இருக்கேனா?” என்று அவள் கேட்க,

“அதை நான் எப்படி வெளிப்படையா சொல்றது?” என்று அவன் சொல்ல, அவனை முறைத்துப் பார்த்து தன் கோபத்தை வெளிப்படுத்தினாள்.

பின் இருவரும் பேசியப்படி அவளின் வீட்டு வாசலுக்கு வந்துவிட்டனர். அவள் வீடு பூட்டியிருக்க, சப்தமி தன்னிடமிருந்த சாவி கொண்டு திறக்கவும், “என்ன வீட்டில் யாரும் இல்லையா? ஓ அதான் என்னை கூப்பிட தயங்கினியா? அப்போ பரவாயில்லை நான் இன்னொரு நாள் வரேன்.” என்று அவன் சொல்லவும்,

“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல ஸ்வரன், வீட்டில் என்னோட ஃப்ரண்ட் இருப்பான்னு தான் நினைச்சேன். அவ வெளிய போயிருக்கா போல, இப்படியெல்லாம் நான் துளி கூட யோசிக்கல, உங்க மேல அந்த அளவுக்கு கூடவா எனக்கு நம்பிக்கையில்லை. சரி உள்ள வாங்க,” என்று அழைத்தாள்.

அவளது பேச்சில் நெகிழ்ந்தவனாக அவளோடு உள்ளே நுழைந்தவன், வீட்டை சுற்றிப் பார்த்துக் கொண்டான். “இப்படி உட்காருங்க ஸ்வரன், நான் உங்களுக்கு காஃபி எடுத்துட்டு வரேன்.” என்று சப்தமி சொல்லவும்,

“இல்லை வேண்டாம் பேபி, நான் சும்மா ஒரு பேச்சுக்கு தான் உன்கிட்ட கேட்டேன். நான் அடிக்கடில்லாம் காஃபி டீ சாப்பிட்றதில்ல, அப்போ நான் கிளம்பறேன்.” என்றான்.

“உண்மையை சொல்லுங்க, அடிக்கடி காஃபி, டீ சாப்பிடுவதில்லையா? இல்லை நான் போடும் காஃபிக்கு பயந்து வேண்டாம்னு சொல்றீங்களா?”

“பரவாயில்லையே கண்டுப்பிடிச்சிட்டியே, நிறைய விஷயங்களை உனக்கு புரிய வைக்க கஷ்டப்படணும்னு இல்லை. நீயாகவே சரியா புரிஞ்சிக்கிற, சோ எனக்கு எதிர்காலத்தில் ஈஸி கூட,” என்று அவன் சொல்லவும், அவள் முகம் மாறிவிட்டது.

“நீங்க என்ன சொல்ல வரீங்க, எனக்கு புரியல,” என்று அவள் குழப்பத்தோடு கேட்க,

“அது புரிய நேரத்தில் புரிய வரும்,” என்று அவன் சொல்லவும், அது என்ன மாதிரியாக இருக்கப் போகிறதோ என்று இப்போதே யோசிக்க ஆரம்பித்துவிட்டாள். ஆனாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல்,

“உங்களுக்கு காஃபி எடுத்துட்டு வரேன். இங்க உட்காருங்க,” என்றவள், சமையலறைக்குள் நுழைந்தாள்.

சாய்ஸ்வரனும் அதைப்பற்றி தான் தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்க, சில நிமிடங்களில் ஆவி பறக்க இரு கோப்பைகளில் காஃபியோடு வந்தாள் சப்தமி.

அவளை பார்த்ததும் சிந்தனையை பின்னுக்கு தள்ளியவன், அவள் கொடுத்த காஃபியை வாங்கி பருகியவனோ, “அழையா விருந்தாளியா வந்தாலும் உன்னோட காஃபி என்னை ஏமாத்தல, சூப்பரா இருக்கு, அதைவிட இப்படி உன்னோட தனிமையில் இருப்பது என்னோட இந்தநாளை சிறப்பாக்குது.” என்று அவன் கூறவும்,

அதற்கு பதிலுக்கு பதில் இடக்குமடக்காக சொல்ல முடியாமல் அவள் அமைதியாக இருந்தாள். காரணம் அவளுமே அவன் சொன்னதை தான் நினைத்து மனதிற்குள் மகிழ்ந்தாள். அதை அவன் வாய் வார்த்தையாக சொன்னதை கேட்டதும் சில்லென்ற ஒரு உணர்வு வந்து அவளை தாக்கியது.

அவளின் அமைதியை கண்டு அவளின் மனநிலையை புரிந்து கொள்ள முடியாமல் “என்ன சப்தமி எதுவும் பேச மாட்டேங்குற, இந்த நேரம் நீ எப்படி ஃபீல் செய்ற? என்கிட்ட சொல்ல மாட்டீயா?” என்று அவன் கேட்க,

“என்ன சொல்றது, எனக்கு ஏதோ ஒன்னு மிஸ் ஆகறது போல இருக்கு,” என்று அவள் கூறினாள்.

“என்ன மிஸ்ஸாகுது?” அவன் புரியாமல் கேட்க,

“வேறென்ன உங்க பாட்டு தான், நீங்க பாடி அதை கேட்டா தான் இந்த நாள் ஃபுல்ஃபில் ஆனது போல இருக்கும்,” என்று அவள் சொல்லவும், அவன் புன்னகைத்தவன்,

பூவே செம்பூவே உன் வாசம் வரும்

வாசல் என் வாசல் உன் பூங்காவனம்

வாய் பேசிடும் புல்லாங்குழல்

நீதானொரு பூவின் மடல்

என்ற பாடலை பாட, அவளோ கண்களை மூடி அதை மெய்மறந்து ரசித்தாள்.

“அப்போ நான் கிளம்பட்டுமா?” என்று அவன் கேட்கவும், நடப்பிற்கு வந்தவள், அரை மனதாய் தலையாட்டினாள்.

“இன்னும் கொஞ்சநேரம் இருக்கணும் போல இருக்கு, ஆனா இந்த தனிமையை நினைச்சா கொஞ்சம் பயமாகவும் இருக்கு,” என்று கூறி பெருமூச்சு விட்டவன்,

“அப்போ சரி நாளைக்கு ஷூட்டிங்ல பார்ப்போம், பை பேபி,” என்று கூறி அவன் விடைபெற, அவள் மனதையும் அவனோடு சேர்த்து கொண்டு போனதை அவன் அறிய வாய்ப்பில்லை.

தொடர்ந்து இசைக்கும்..