VMIA 6

இசை 6
சப்தமி உற்சாகம் தொலைந்து காணப்பட்டாள். அதற்கு முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததே காரணம். மொத்தம் 3 வாரத்திற்கான படப்பிடிப்பை முடித்தவர்கள், அடுத்த படப்பிடிப்பு எப்போது என்று சொல்லி அனுப்பிகிறோம் என்று கூறியிருந்தனர். அதுவரை சாய்ஸ்வரனை காணப்போவதில்லை என்பதே அவளுக்கு வருத்தமாக இருந்தது.
அதேநேரம் அவர்கள் நிகழ்ச்சியின் முதல் இரண்டு பாகங்கள் அந்த வார இறுதியில் வானம் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாக அது மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இதுவரையிலான நிகழ்ச்சியில் இது புதுமையாக இருந்ததால் மக்கள் இந்த நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்தனர். இந்த இரண்டு பாகங்களிலேயே சப்தமியும் ஓரளவிற்கு பிரபலம் ஆகியும் இருந்தாள். வெளியில் செல்லும்போது மக்கள் இவளை அடையாளம் கண்டு கொண்டது மட்டுமில்லாமல், இவளிடம் பேசவும் செய்தனர். அது சப்தமிக்கு ஒருமாதிரி பிரம்ம்பிப்பாக இருந்தது.
ஆனாலும் ஒருபக்கம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சப்தமியை பார்த்த உறவினர்கள் எதிர்மறையாக பேசவும் செய்தனர். அவளை தொலைக்காட்சியில் காணவும் தான் அவளின் தந்தையும் அலைபேசியில் அழைத்து அவளிடம் பேசினார். “எதுக்கு இதெல்லாம் உனக்கு? போகும் முன்ன ஏன் என்கிட்ட பர்மிஷன் கேட்கல?” என்று அவர் கேள்விகள் எழுப்ப?
“உங்களை கான்டாக்ட் செய்ய முயற்சி செஞ்சேன். ஆனா உங்களை பிடிக்க முடியல, அம்மா ஒத்துக்கவும் தான் அந்த ப்ரோகிராம்க்கு போனேன்.” என்று அவள் எடுத்துரைக்க,
“எல்லாம் உங்க அம்மா கொடுக்கும் இடம், என்ன ப்ரோகிராம்ல அப்படியெல்லாம் பேச சொல்லி உன்னோட அம்மா சொல்லி தந்தாளா? சிம்பதி கிரியேட் செய்து என்னை கெட்டவனா காட்ட முயற்சி செய்றீங்களா? எப்படியோ போங்க எனக்கென்ன?” என்று கோபமாக பேசியவர், அழைப்பை அணைக்க,
தன் அன்னை இவரை விவாகரத்து செய்தது தவறேயில்லை என்று தான் சப்தமிக்கு அப்போது தோன்றியது.
அவளின் அன்னை அழைத்து, “ப்ரோகிராம்ல உன்னை பார்க்க ரொம்ப அழகா இருக்கடா, அதுல நீ பேசினதையெல்லாம் கேட்டு ரொம்ப கஷ்டமா போச்சுடா, அப்போ அந்தநேரம் நீ எப்படி இருந்திருப்பன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது. தற்கொலை எண்ணம் உனக்கு வர நான் காரணம்னு நினைக்கும்போது கஷ்டமா இருக்கு,
ஆனா உனக்காக மட்டும் தான் அத்தனை வருஷம் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன். உன்னை எதையும் பாதிக்க கூடாதுன்னு நினைச்சேன். ஆனா என்னால ஒரு எல்லைக்கு மேல எதையும் பொறுத்துக்க முடியல, அதான் அந்த வாழ்க்கையிலிருந்து விடுதலை வேணும்னு தோனுச்சு, ஆனா அந்த விஷயம் உன்னை இந்த அளவுக்கு பாதிக்கும்னு நினைக்கல, அன்னைக்கு மட்டும் ஏதாவது நடந்திருந்தா நினைச்சு பார்க்கவே கஷ்டமா இருக்கு,” என்று அவர் வருத்தமாக பேச,
“விடுங்கம்மா, அன்னைக்கு எனக்கு இதெல்லாம் புரிஞ்சிக்கிற அளவுக்கு பக்குவம் இல்லை. ஆனா இப்போ உங்க நிலைமை எப்படி இருந்திருக்கும்னு எனக்கு புரியுது. கண்டிப்பா அன்னைக்கு ஸ்வரன் அவங்க ஆல்பம் பார்த்ததும் தான் ஒரு உறவில் கட்டாயமா நம்மளை திணிச்சிக்கணும்னு இல்லைன்னு எனக்கு புரிஞ்சுது ம்மா, ஆனாலும் மத்தவங்க மாதிரி ஏன் நம்ம வாழ்க்கை இல்லைன்னு கொஞ்சம் வருத்தமா இருந்துச்சு,
ஆனா இப்போ எனக்குள்ள எந்த வருத்தமும் இல்லம்மா, முடிஞ்சதை திரும்ப பேசவும் எனக்கு விருப்பமுமில்லை. ஆனா அதெல்லாம் ப்ரோகிராம்ல சொல்லணும்னு கொஞ்சம் ஃபோர்ஸ் செய்தாங்க, அதான் இதெல்லாம் சொல்ல வேண்டியதா போச்சு, நீங்க இதை நினைச்சு வருத்தப்படாதீங்க ம்மா, நான் இப்போ நார்மலா தான் இருக்கேன்.
எனக்கென்ன இப்போ வருத்தம்னா இந்த ப்ரோகிராம்ல நான் கலந்து இதெல்லாம் பேசினதால உங்களுக்கு தான் பிரச்சனை. நம்ம ரிலேஷன்லாம் உங்களை பேசுவாங்க, அப்பா கூட ஒருமாதிரி தான் பேசினார்.” என்று பதிலுக்கு அவளும் வருத்தமாக பேசினாள்.
“ஆமாம் இவங்களுக்கு இது இல்லன்னா இன்னொரு காரணம் கிடைக்காமலா இருக்கும், நம்ம செய்றதை குறை சொல்லிட்டு இருக்கணும், அதுமட்டும் தான் அவங்களுக்கு தெரியும், இப்படி எத்தனை பார்த்தாச்சு, நான் பட்டது போல நீ படக் கூடாதுன்னு எப்போதும் நினைப்பேன். உன்னோட அப்பாவோட இருந்தா கண்டிப்பா நான் என் வீட்டில் பட்ட கஷ்டமெல்லாம் நீயும் படணும், அது கூட ஒரு காரணம் நான் உன்னோட அப்பாவை விட்டு பிரிஞ்சதுக்கு, அதனால அதை நினைச்சு வருத்தப்படாத, சந்தோஷமா இரு, கூடவே ஜாக்கிரதையாகவும் இரு, நமக்கு இந்த மீடியால்லாம் என்னைக்கும் பழக்கமில்ல, அதில் நிறைய நெகடிவ்ஸும் இருக்கும்னு நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியதில்லை. அதனால கவனமா இரு,” என்று அவளுக்கு அறிவுரை கூறியிருந்தார்.
இவள் கல்லூரி தோழிகளோ அவர்களிடம் இதைப்பற்றி சொல்லவில்லை என்று கோபித்துக் கொண்டனர். ஆனாலும் அவளை கொண்டாடவும் செய்தனர். இப்படி கலவையான உணர்வுகளில் அவள் இருந்தாலும், சாய்ஸ்வரனின் பாதிப்பு தான் அவளிடம் அதிகம் இருந்தது. படப்பிடிப்பை தவிர மற்ற நேரங்களில் அவன் அவளிடம் பேசுவதே அரிது. சிறப்பாக உணர வைத்ததாக கூறினான். பார்த்தால் புன்னகைப்பான். இவளுக்காக பாட்டு பாடினான். ஆனால் சாதாரணமாக இவளோடு பேசுவல்லை.
இதில் என்னத்தான் படப்பிடிப்புகளில் நாலைந்து முறை திக்கி திணறி ஆறாவது டேக் ஓகே ஆனாலும், தொலைக்காட்சியில் இருவரையும் ஒன்றாக பார்த்த போது அது புதுவிதமாக அவளுக்கு தெரிந்தது. வழக்கம்போல் அந்த நிகழ்ச்சியை திரும்ப திரும்ப பார்த்து ரசித்தாள். அப்போதே அவனிடம் பேச வேண்டுமென்று இருந்தது. ஆனால் அவனது அலைபேசி எண் அவளுக்கு தெரியவில்லை. அவனிடமிருந்து வாங்க நினைத்தவள் பின் தயக்கத்தில் வேண்டாமென்று விட்டுவிட்டாள். அதனால் அடுத்தமுறை படப்பிடிப்பின் போது கண்டிப்பாக அவனிடம் அலைபேசி எண் வாங்க வேண்டுமென்று முடிவு செய்துக் கொண்டவள், மீண்டும் எப்போது சாய்ஸ்வரனை பார்க்க போகிறோம் என்று எதிர்பார்க்க தொடங்கிவிட்டாள்.
நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதும் அதுகுறித்து பேச வானம் தொலைக்காட்சியில் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் அந்த நிகழ்ச்சி குறித்து யோசனை கூறியவரும் கலந்து கொள்ள, அந்த தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவர், “நீங்க சொன்னது போல இந்த ப்ரோகிராம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கு, ஒருபக்கம் எதிர்மறை கருத்துகள் வந்தாலும், அதையும் தாண்டி மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்கவும் செய்றாங்க, ஆனாலும் இந்த மூன்று வார எபிசோட்ல நீங்க எதிர்பார்த்தது எதுவும் இன்னும் வரலையே, ப்ரோகிராம் இப்படியே போயிட்டு இருந்தா அப்புறம் மக்களுக்கு இந்த நிகழ்ச்சி போர் அடிக்க ஆரம்பிச்சிடும், அதனால அதில் கவனமா இருங்க,” என்று கூற,
“கண்டிப்பா சார், நான் சொன்னது கண்டிப்பா நடக்க வாய்ப்பிருக்கு, முதல் எபிசோட்ல சாய்ஸ்வரன் பாடினதிலேயே இந்த ப்ரோகிராம் நாம நினைச்சது போல போக வாய்ப்பிருக்கு, மொத்தம் 30 எபிசோட்ஸ் இருக்கு இல்லையா? இப்போ 6 எபிசோட் தானே ஷூட் செஞ்சிருக்கோம், கொஞ்சம் கொஞ்சமா தான் நிகழ்ச்சியில் இன்ட்ரஸ்ட் கூட்டணும், முதலிலேயே கொஞ்சம் அதிகப்படியா போனா மக்கள் இதை ஈஸியா ஸ்கிரிப்ட்னு கண்டுப்பிடிச்சிடுவாங்க, அதனால எந்த டென்ஷனும் வேண்டாம், ப்ரோகிராம் நல்லா போகும்,” என்று இந்த நிகழ்ச்சிக்கான யோசனை கூறியவர் எடுத்து சொன்னதும், மற்றவர்களுக்கும் அவர் சொல்வது சரியென்று படவும், இன்னும் அந்த நிகழ்ச்சி பற்றி பேசிவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
நெடுநேரம் உறக்கம் வராமல் சப்தமி புரண்டு படுத்தப்படி இருக்க, அலைபேசி இசைக்கவும், இந்த நேரத்தில் யார்? ஒருவேளை அன்னையோ என்று நினைத்தப்படி அலைபேசியை எடுத்தவள் அதில் வந்த எண்ணை பார்த்து குழம்பியவாறு அழைப்பை ஏற்க, “ஹாய் பேபி,” என்ற குரலில் அதிர்ச்சியாக எழுந்து அமர்ந்தவள்,
“ஸ்வரன் நீங்களா?” என்று வியப்போடு அவள் கேட்க,
“நானே தான், என்ன என்னோட நம்பரை நீ சேவ் செஞ்சு வைக்கலையா?” என்று ஸ்வரன் கேட்டான்.
“ம்ம் உங்க நம்பரே எனக்கு தெரியாதே, அப்புறம் எப்படி சேவ் செய்ய முடியும்?’ என்று அவள் கேட்க,
“ம்ம் ஆமால்ல, எப்படி சேவ் செய்து வைக்க முடியும்?” என்று அவனும் பதிலுக்கு கேட்டான்.
அவன் சொன்ன தோரணையை கேட்டு புன்னகைத்தவள், “ஆமாம் என்னோட நம்பர் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்க,
“உனக்கு வேணும்னா என்னோட நம்பரை தெரிஞ்சிக்கறதில் இன்ட்ரஸ்ட் இல்லாம இருக்கலாம், ஆனா எனக்கு அப்படியில்லை. உன்கிட்ட பேசணும்னு தோனுச்சு எப்படியோ நம்பரை கண்டுபிடிச்சிட்டேன்.” என்று சாய்ஸ்வரன் சொல்லவும்,
‘என்னது எனக்கு உங்க போன் நம்பர் தெரிஞ்சிக்கிறதில் இன்ட்ரஸ்ட் இல்லையா? ஏன் சொல்ல மாட்டீங்க, உங்கக்கிட்ட பேச எதிர்பார்த்துட்டு இருந்தது உங்களுக்கு எப்படி தெரியுமாம், என்னோட அவஸ்தை புரிஞ்சிக்காம எப்படி சாதாராணமா சொல்லிட்டீங்க,’ என்று மனதில் புலம்பிக் கொண்டவள்,
“ஆமாம் இந்த நேரத்துக்கு எதுக்கு போன் செய்திருக்கீங்க?” என்று கேட்க,
“சும்மா தூக்கம் வரல, அதான் உன்கிட்ட பேசணும்னு நினைச்சேன்.” என்று பதில் கூறினான்.
“உங்களுக்கு தூக்கம் வரல சரி. நான் தூங்க வேண்டாமா? இந்த நேரத்தில் போன் செஞ்சு என்னை தொந்தரவு செய்றீங்க?” என்று அவள் பொய் கோபம் காட்ட,
“ஓ நான் போன் செய்றது உனக்கு தொந்தரவா தெரியுதா? அப்போ காலை கட் செஞ்சுடவா?” என்று அவன் கேட்கவும்,
“அதான் தொந்தரவு செய்திட்டீங்களே, பரவாயில்லை பேசுங்க,” என்று அவள் சொல்லவும்,
அவளுக்கும் தன்னிடம் பேச ஆசை இருக்கிறது. ஆனால் அதை வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாதென்று நினைக்கிறாள் என்பது புரிந்து புன்னகைத்தவன்,
“எனக்கு திரும்ப ஷூட்டீங் எப்போ ஆரம்பிக்குமோன்னு இருக்கு, ஷூட்டீங் இல்லாத நேரம் ரொம்ப போர் அடிக்குது,” என்று கூறினான்.
அதைக்கேட்டு மகிழ்ந்தவளாக, “ம்ம் போர் அடிக்குதா, ஷூட்டிங் இல்லன்னா என்ன? உங்களுக்கு வேற வேலையா இல்லை. புதுசா ஏதாவது ஆல்பம் போடுங்க,” என்று சொல்ல,
“ம்ம் போடணும், அதைப்பத்தியும் யோசிச்சிட்டு தான் இருக்கேன்.” என்று அவனும் கூறினான்.
“ம்ம் உங்க அடுத்த மியூஸிக் ஆல்பத்தோட தீம் என்ன?” அவள் கேட்க,
“இந்த முறை முழுக்க முழுக்க காதலை மையமா வச்சு தான் மியூஸிக் ஆல்பம் இருக்க போகுது.” என்று அவன் கூறவும்,
“சூப்பர், உங்க ரசிகர்களுக்கு இந்த முறை ரொம்பவே கொண்டாட்டமா இருக்க போகுது. ஆல் தி பெஸ்ட்.” என்று வாழ்த்தினாள்.
“ஏன் உனக்கு இதில் கொண்டாட்டம் இல்லையா?” என்று அவன் கேட்க,
“நானும் உங்க ரசிகர்களில் ஒருத்தி தானே,” என்று அவள் கூறவும்,
“ஓ அப்படியா? ஆனா நான் அப்படி நினைக்கல, என்னமோ எல்லோரையும் விட உன்னை ஸ்பெஷலா நினைக்க தோனுது.” என்றான்.
அதில் மகிழ்ந்தவளாக அவள் புன்னகைத்து கொள்ள, அது அவனுக்கு தெரிய வாய்ப்பில்லையே, அதனால் அவள் பதில் பேசமுடியாமல் அமைதியாக இருக்கவும், தான் சொன்னதை தவறாக எடுத்துக் கொண்டாளோ? என்று நினைத்து, “என்ன அமைதியாகிட்ட?” என்று அவன் கேட்க,
“இதுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலையே,” என்று அப்பாவியாக கேட்டாள்.
“நீ பதில் சொல்லாட்டியும் பரவாயில்லை. நான் சொன்னதை தப்பா புரிஞ்சிக்காம இருந்தா போதும்,” என்று அவன் சொல்லவும்,
“இதில் தப்பா எடுத்துக்க என்ன இருக்கு? நீங்க சொன்னதை கேட்டு எனக்கு ரொம்ப,” என்று சொல்ல வந்தவள்,
‘என்ன மனதில் தோன்றியதை அப்படியே பேசுகிறோம், இது சரியில்லையே என்று நினைத்து அத்துடன் அவள் அமைதியாகிவிட,
“என்ன என்னமோ சொல்லிட்டு நிறுத்திட்ட, நான் சொன்னதை கேட்டு உனக்கு ரொம்ப என்னாச்சு?” என்று அவன் ஆர்வமாக கேட்டான்.
“நீங்க ரொம்ப மொக்கை போட்றீங்கன்னு தோனுச்சு அதைதான் சொன்னேன். இப்படியே பேசுனீங்க எனக்கு வர இருந்த தூக்கம் கூட ஓடி போயிடும்,” என்று சொல்லிவிட்டு அவள் சிரிக்க,
“நான் பேசறது பிடிக்கலையா? அப்போ உனக்கு தூங்கணுமா?” என்று கேட்டவனின் குரலில் உற்சாகம் குறைந்திருந்தது.
‘கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டோமோ?’ என்று சப்தமி நினைக்க,
“வேணும்னா பேசறதை நிறுத்திட்டு பாட்டு பாட்றேன். கேட்டுக்கிட்டே தூங்கிடு,” என்று அவன் கூறவும்,
“நிஜமாவா சொல்றீங்க?” என்று வியப்பாய் கேட்டாள்.
“ஏன் நான் பாடினா அதுவும் மொக்கையா இருக்குமா?” என்று அவன் கேட்க,
“அப்படி நான் சொன்னா சாமி என் கண்ணை குத்திடும்,” என்று அவள் சொல்லவும்,
“இப்படி சொன்னா, நான் அதை எப்படி எடுத்துக்கறது?” என்று அவன் கேட்டான்.
“அதாவது செம சூப்பரா பாடும் உங்களை குறை சொல்லக் கூடாதுன்னு அர்த்தம். சரி பாட்றேன்னு சொல்லிட்டு திரும்ப மொக்கை போடாம, ஒரு நல்ல மெலோடியா பாடுங்க, நான் கேட்டுட்டு அப்படியே தூங்கிட்றேன்.” என்று அவள் சொல்லவும்,
“அப்படியே செய்கிறேன் தேவி,” என்றப்படி பாடத் தயாராகியவன்,
தேனே தென்பாண்டி மீனே
இசை தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமாரை
ஆரீராரோ
நெற்றி மூன்றாம் பிறை
தாலே லே லோ
என்ற பாடலை முழுமையாக பாடி முடித்தப்பின், “சப்தமி,” என்று அவளை கூப்பிட, மறுமுனையில் சத்தம் இல்லாது போகவே அவள் உறங்கிவிட்டதை அறிந்து கொண்டவன்,
“தூங்கிட்டீயா? எப்போ அடுத்த ஷூட்டீங் ஆரம்பிக்கும், எப்போ திரும்ப உன்னை பார்ப்போம்னு இருக்கு பேபி. ஐ ரியலி மிஸ் யூ.” என்று மெல்லிய குரலில் அவன் கூற,
அந்த உறக்கத்திலும் அவனது வார்த்தைகள் அவளை சென்றடைந்தது போலும்,
அதற்கு, “நானும் தான்,” என்றாள்.
அவளின் அந்த பதிலைக் கேட்டு அவள் உறங்கவிக்லையோ என்று நினைத்து, “சப்தமி, சப்தமி,” என்று அவன் திரும்ப அழைக்க, அவளிடமிருந்து எந்த பதிலும் வராமல் போகவே,
“தூக்கத்திலேயே பதில் சொல்றீயா?” என்று சொல்லி சிரித்துக் கொண்டவன், “ஸ்வீட் ட்ரீம்ஸ் பேபி,” என்று சொல்லி அழைப்பை அணைத்தான்.
தொடர்ந்து இசைக்கும்..