VMIA 5

இசை 5

அன்று இரவு சப்தமி ஒரு மாதிரி பரவசமான மனநிலையில் இருந்தாள். மனம் முழுவதும் அன்றைய பொழுதின் படப்பிடிப்பை சுற்றியே இருந்தது. சாய்ஸ்வரன் தனக்காக இப்படி ஒரு பாடலை பாடுவான் என அவள் எதிர்பார்க்கவே இல்லை. அப்படியே உறைந்து போன மனநிலையில் இருந்தாள். அடுத்து படப்பிடிப்பில் தொகுப்பாளினி என்னென்ன கேட்டார்கள் இவள் அதற்கு என்ன பதில் பேசினாள் என்பது கூட அவளது நினைவில் இல்லை. அப்படியே வானத்தில் பறப்பது போன்ற நிலை தான் அப்போதும்,

அடுத்து படப்பிடிப்பு முடிந்ததும் சாய்ஸ்வரன் அவளோடு தனியாக பேசினான். “என்ன சப்தமி, இந்த எக்பிரீயன்ஸ் எப்படி இருக்கு? ரொம்ப மகிழ்ச்சியா ஃபீல் செய்றீயா?” என்று கேட்க,

அவன் அவளோடு தனிப்பட்ட முறையில் பேசியது அவளுக்கு அத்தனை மகிழ்ச்சியை கொடுத்தது. “ஆரம்பம் கொஞ்சம் டென்ஷனா தான் இருந்துச்சு, ஆனா இப்போ அப்படியில்லை. நார்மலா ஆகிட்டேன். ரொம்ப சந்தோஷமாகவும் இருக்கு,” என்று பதிலளித்தாள்.

“ம்ம் இதெல்லாம் உனக்கு முதல் அனுபவம் இல்லையா? அப்படித்தான் இருக்கும், ஆனாலும் திக்கி திணறாம போல்ட்டா பேசின, எதுக்கும் டென்ஷன் வேணாம் ரிலாக்ஸா இரு,” என்று கூறினான்.

அன்றைய பொழுது இருவரும் அவ்வளவுதான் பேசினார்கள். அதுவே சப்தமிக்கு போதுமானதாக தான் இருந்தது. இதில் வீட்டிற்கு வந்ததும் இவளின் தோழி வேறு, சாய்ஸ்வரன் எதுக்காக அந்த பாடலை பாடணும்? எதுவோ சம்திங் இருக்கு? ஸ்வரன் உன்னைப்பார்த்து ரொம்பவே இம்ப்ரஸ் ஆகிட்டாருன்னு நினைக்கிறேன்.” என்று வேறு அவளிடம் பேசிக் கொண்டிருந்தாள்.

“ச்சே அப்படியெல்லாம் இருக்காது.” என்று சப்தமி சொல்லிக் கொண்டாலும், ‘ஒருவேளை அப்படித்தானோ’ என்றும் அவளால் நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை. அந்த பரவசித்திலேயே அவளுக்கு உறக்கம் வர மறுத்தது.

மகா அவளுக்கான அறையில் தனது மடிக்கணினியில் தீவிரமாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்க, அனிதா அவளை தேடி வந்தவள், “சாய்ஸ்வரன் நம்ம வேலைக்கு ஒத்துக்கல, அதுக்காக நாம அப்படியே இருக்க முடியாதில்லையா? நாம வேற ஆளை பார்க்கணும், நம்ம டீம் ரெண்டு மூனு பேரை தேர்ந்தெடுத்து வச்சிருக்காங்க, யாருன்னு நீதான் முடிவு செய்யணும், அப்போ தான் நாம உடனே வேலையை ஆரம்பிக்க முடியும், இன்னும் எவ்வளவு ஏற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கு, அதனால சீக்கிரமா ஒரு ஆளை தேர்ந்தெடுக்க வேண்டாமா? என்ன நான் சொல்றது சரிதானே,” என்று மகாவிடம் கேட்க,

“எந்த ஆளையும் போட வேண்டாம், நான் முன்ன சொன்னது போல இந்த வேலைக்கு சாய்ஸ்வரன் தான் கரெக்ட் சாய்ஸ். அதனால இதுக்கு பதிலா அந்த இடத்துக்கு வேற யாரையும் என்னால நினைச்சு பார்க்க முடியாது.” என்ற மாகவின் பதிலை கேட்ட அனிதாவோ,

“அன்னைக்கு தான் சாய்ஸ்வரன் மேல கோபமா பேசின, இன்னைக்கு இப்படி பேசற, உனக்கு ஏதாச்சும் ஆகிடுச்சா மகா,” என்று கோபமாக கேட்டாள்.

“ஆமா சாய்ஸ்வரன் அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்துகிட்டது எனக்கு பிடிக்கல பேசினேன். இப்போதும் அவன் நமக்காக வேலை செய்யணும்னு மனசு நினைக்குது. அதுக்கு என்ன செய்ய?” என்று அவள் கேட்க,

“ஆனா அது நடக்காது மகா, டிவியில் விளம்பரம் போட ஆரம்பிச்சிட்டாங்க, இந்நேரம் ஷூட்டிங் ஆரம்பிச்சிருப்பாங்க, கொஞ்சநாளில் ஷோவையும் டெலிகாஸ்ட் செய்வாங்க, இவ்வளவு தூரம் போனதுக்கு பிறகும் சாய்ஸ்வரன் நமக்காக வேலை செய்வான்னு நினைக்கறது முட்டாள்தனம்” என்று அனிதா கூறினாள்.

“இன்னும் ஷோ டெலிகாஸ்ட் செய்ய ஆரம்பிக்கலையே, அதுவரைக்கும் நமக்கு ஒரு சான்ஸ் இருக்கு தானே,” என்று மகா கேட்கவும்,

“அதுக்கு முன்னாடியே நாம முயற்சி செய்து நடக்கலையாம், இப்போ மட்டும் எப்படி நடக்கும்? சாய்ஸ்வரன் எப்படி சம்மதிப்பான்? உனக்கு என்னாச்சு மகா, எல்லாத்திலும் தெளிவா இருப்ப, இப்போ மட்டும் என்ன ஆச்சு? நாம நம்ம கனவை நனவாக்க முயற்சிக்கல மகா, நாம நம்ம லட்சியத்தை நிறைவேற்ற காத்திருக்கோம்,

சாய்ஸ்வரானால நாம அப்படியே தேங்கி நின்னுடக் கூடாது. இதனால பாதிக்கப்பட போறது நம்ம லட்சியம் தான், இந்த லட்சியத்தை நாம செய்து முடிக்கறது எவ்வளவு அவசியம்? இதில் எங்களை விட தீவிரமா இருந்தது நீதான், இப்போ அந்த தீவிரம் உனக்கு இல்லையோன்னு எனக்கு தோனுது மகா,” என்று அனிதா பேச,

“அந்த தீவிரம் இருப்பதால் தான் எனக்கு வந்த வரனை கூட கல்யாணத்துக்காக யோசிக்காம, நம்ம லட்சியத்துக்காக இல்லை என்னோட லட்சியத்துக்காக யோசிச்சேன். இப்போதும் யோசிக்கிறேன். அது தப்பா? நான் சும்மா ஒன்னும் சொல்லல அனி, எனக்கு என்னமோ நான் நினைக்கறது நடக்கும்னு உள்மனசு சொல்லுது. அதனால கொஞ்சநாள் பார்ப்போம், அதாவது அந்த ரியாலிட்டி ஷோ ஆரம்பிக்கும் வரை. ஒருவேளை அந்த நிகழ்ச்சியிலிருந்து சாய்ஸ்வரன் விலகவும் வாய்ப்பிருக்கலாம் இல்லையா?”

“அப்படி ஒரு விஷயம் நடக்கும்னு நீ நம்பறீயா? எனக்கென்னமோ அந்த நம்பிக்கை சுத்தமா இல்லை. இருந்தாலும் இன்னும் கொஞ்சநாள் தானே, பார்ப்போம் உன் நம்பிக்கை ஜெயிக்குதான்னு,” என்று சொல்லிவிட்டு அனிதா சென்றுவிட்டாள்.

மனதில் இன்னுமே ஒரு நம்பிக்கை இருக்கவே அனிதாவிடம் மகா அப்படி பேசினாள். ஆனால் அவளின் நம்பிக்கை ஜெயிக்குமா? என்பது கேள்விகுறி தான், அதை எப்படி செயலாற்ற போகிறோம் என்பதும் அவளுக்கு தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று இவள் நினைத்ததை நடத்திவிடும் என்ற நம்பிக்கையை மட்டும் மனது கைவிட மாட்டேன் என்கிறது. அப்படி அதிர்ஷ்டத்தையோ அதிசயத்தையோ நம்பி காலத்தை கடத்துபவள் இல்லை அவள், ஆனால் இந்த விஷயத்தில் இப்படி இருக்க சொல்லி மூளை சொல்கிறது. அதனால் அதன் வழியில் சென்றுதான் பார்ப்போமே என்று இவளும் அமைதியாக இருக்கிறாள். அவளின் நம்பிக்கை ஜெயிக்குமா?

சப்தமியை மறுநாளும் படப்பிடிப்பிற்கு அழைத்திருந்தார்கள். அதுவும் இந்தமுறை கோவிலில், அதிக மக்கள் இல்லாத நேரமாக படப்பிடிப்பு நடத்த வேண்டுமென்று புறநகர் பகுதியிலுள்ள ஒரு கோவிலில் மதிய நேரம் படப்பிடிப்பை வைக்க முடிவு செய்தனர். கார் அனுப்பி அவள் வரவைக்கப்பட, சாய்ஸ்வரன் அதற்கே முன்பே வந்துவிட்டான்.
அவனை பார்த்து அவள் புன்னகைக்கவும், பதிலுக்கு ஒரு புன்னகையை சிந்தியவன் அதன்பின் தன் அலைபேசியில் மூழ்கிவிட்டான். நேற்று போல் தானாக வந்து பேசுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்க, அது நடக்காதது அவளுக்கு ஏனோ ஏமாற்றமாக இருந்தது.
அதற்குமாறாக சாய்ஸ்வரனோ படப்பிடிப்பு நேரம் தவிர சப்தமியிடமிருந்து முடிந்த அளவு ஒதுங்கி இருக்க வேண்டுமென்று முடிவு செய்துக் கொண்டான். இது ஸ்கிரிப்ட் அடிப்படையில் நடக்கும் நிகழ்ச்சியென்றால் பரவாயில்லை. ஆனால் அப்படியில்லாது இருக்க, தேவையில்லாத நிகழ்வுகள் எதுவும் நடக்கக் கூடாதென்பதே அவனது எண்ணமாக இருந்தது.

சப்தமியோ அவளாக சென்று ஸ்வரனிடம் பேசலாம் என்று நினைத்தால், அதற்கான நேரம் அமையவில்லை. உடனே படப்பிடிப்பை ஆரம்பிக்க வேண்டுமென்று அவளை அவசரப்படுத்தினர்.

முதல் அறிமுக பகுதிக்கு தான் தொகுப்பாளினி தேவைப்பட்டார். அடுத்தடுத்த பகுதிகளுக்கு அவரின் தேவையில்லை என்பதால் இவர்கள் இருவரையும் வைத்து தான் இன்றைய படப்பிடிப்பு இருக்கும், கோவிலில் என்பதால் சப்தமியை பாவாடை தாவணி அணிய கூறியவர்கள், சாய்ஸ்வரனை வேட்டி சட்டை அணிய கூறினர். ஒப்பனைகள் போட்டு முடித்ததும் முதலில் சப்தமியை வைத்து படப்பிடிப்பை ஆரம்பித்தனர்.

இன்றைய நிகழ்ச்சி எந்த மாதிரி இருக்கப் போகிறது என்பதை மட்டும் சொல்லி அவளை பேச சொல்ல, “ஹாய் மக்களே, எல்லாம் எப்படி இருக்கீங்க? இன்னைக்கு ஸ்வரனோட எனக்கு இரண்டாவது நாள். இப்போ நாங்க எங்க இருக்கோம் தெரியுமா?” என்று அவள் கோவிலை காட்டவும், அதையெல்லாம் அப்படியே படம்பிடித்தனர்.

“ஆமாம் மக்களே இப்போ நாங்க கோவிலில் இருக்கோம், இன்னைக்கு பக்தி மயமான ஸ்வரனை நாம பார்க்க போறோம், அப்படியே அவரோட பாடலை கேட்டு மெய்மறக்க போகிறோம், சரி வாங்க நாம ஸ்வரனை சந்திக்கலாம்,” என்று சொல்லியப்படி அவள் கோவிலுக்குள் நுழைவதை போல் படம்பிடித்தனர்.

சப்தமி பச்சை நிற பாவாடை சட்டையும் வெள்ளை நிற தாவணியும் அணிந்திருக்க, சாய்ஸ்வரனோ வெள்ளை வேட்டியோடு பச்சை நிற சட்டை அணிந்திருந்தான். அவனை நோக்கி சப்தமி செல்லவும், அவன் புன்னகையோடு அவளை பார்த்திருக்க, அவள் வணக்கம் வைத்ததும், பதிலுக்கு அவனும் வணக்கம் வைக்க, அதை அப்படியே படம்பிடித்தனர்.

“ஹாய் ஸ்வரன், எப்படி இருக்கீங்க?” என்ற சப்தமியின் கேள்விக்கு,

“நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க சப்தமி?” என்று பதிலுக்கு சாய்ஸ்வரனும் கேட்க, இருவரும் இப்போது தான் பார்ப்பது போல் நடிக்க அது படமாக்கப்பட்டது.

“நானும் நல்லா இருக்கேன். ஸ்வரன் உங்களை வேஷ்டி சட்டையில் பார்க்க மேன்லியா இருக்கீங்க? உங்க ரசிகைகள் கண்கள் இன்னைக்கு வேற எங்கேயும் நகராதுன்னு நினைக்கிறேன்.” என்று அவள் மனதில் தோன்றியதை அப்படியே கூற,

“அப்படியா சொல்றீங்க, நீங்களும் இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கீங்க சப்தமி,” என்று அவனுமே அவன் மனதில் தோன்றியதை அப்படியே கூறினான்.

“வாவ் நல்ல பெர்ஃபாமன்ஸ், அப்படியே கன்டினியூ செய்ங்க,” என்று ஒளிப்பதிவாளர் பாராட்டினார். அடுத்து கோவிலின் மண்டபத்தில் இருவரும் நிற்க, அடுத்த காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது.

“ஸ்வரனோட நிறைய மியூஸிக் ஆல்பம் நாங்க பார்த்திருக்கோம், ஆனா நீங்க தெய்வீக சம்பந்தமா இதுவரை எந்த மியூஸிக் ஆல்பமோ இல்லை தனியா எந்த பாட்டும் பாடி கேட்டதில்லையே ஏன்? உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லையா?” என்ற சப்தமியின் கேள்விக்கு,

“அப்படியெல்லாம் ஒன்னுமில்லையே, நான் தினமும் கோவிலுக்கு போற ஆள். நிறையவே கடவுள் மேல நம்பிக்கை இருக்கு, அதே சமயம் இந்த மூடநம்பிக்கையெல்லாம் நான் நம்பறதில்ல,” என்று அவன் பதில் கூறினான்.

“அப்போ ஏன் இதுவரை எந்த ஆல்பமும் நீங்க போட்டதில்ல,”

“அது போடணும்னு நினைச்சதில்லை. அப்படியொரு வாய்ப்பும் கிடைச்சதில்லை. அதுவுமில்லாம பொதுவா தெய்வ நம்பிக்கை தானா மனசுல உருவாகற ஒன்னு, நம்ம பாடல்கள் கொண்டு தான் நாம உருவாக்கணும்னு இல்லை. அதையும் விட நிறைய முக்கியாமன விஷயங்களை மக்கள் உணருவதில்லை. அதனால் அதெல்லாம் என்னோட மியூசிக் ஆல்பம்ல கொண்டு வரணும்னு நினைப்பேன்.

மத்தப்படி வாய்ப்பு கிடைக்கும்போது கண்டிப்பா தெய்வீக சம்பந்தமான ஆல்பமும் போட்றேன். சின்ன வயசுல ஒரு ரியாலிட்டி ஷோவில் சிங்கிங் காம்படிஷன்ல கலந்திருக்கும்போது நிறைய சாமி பாட்டெல்லாம் பாடியிருக்கேன்.”

“வாவ் அப்படியா? அப்போ எங்களுக்காக, ஸ்பெஷலா எனக்காக அதில் ஒரு பாட்டு பாடுங்களேன். எனக்கு கேட்கணும் போல இருக்கு,” என்று சப்தமி கேட்கவும், சாய்ஸ்வரன் அவனது இனிமையான குரலில்,

ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி நீ

ஜகத் காரணி நீ பரிபூரணி

என்ற பாட்டை பாடவும் அப்படியே அதில் உருகிப் போனாள். அத்துடன் இல்லாமல் இன்னும் சில பாடல்களை அவனை பாடச்சொல்லி அவள் கேட்கவும், அவனும் பாட, அதெல்லாம் அப்படியே படம்பிடிக்கப்பட்டது.

“இன்னைக்கு ஷூட்டிங் சூப்பரா போச்சு, நாங்களா சொல்லிக் கொடுக்காம நீயா சூப்பரா பேசினம்மா, நேத்து நீ கொஞ்சம் எமோஷனா பேசினப்போ திணறவே எப்படி இந்த ப்ரோகிராம் போகப் போகுதோன்னு நினைச்சேன். ஆனா அசத்திட்ட, சாய்ஸ்வரன் உன்னை கரெக்டா தான் செலக்ட் செய்திருக்காரு,” என்று படப்பிடிப்பு குழு சொல்லவும், சப்தமி அகமகிழ்ந்து போனாள்.

இன்னும் சிறிதுநேரம் இருவரையும் பேசவிட்டு அதை படம்பிடித்ததும், படப்பிடிப்பு முடிந்து அனைவரும் கிளம்ப தயாராகிக் கொண்டிருக்க, சப்தமி காருக்காக காத்துக் கொண்டிருந்த இடைவேளையில் அங்கு வந்த சாய்ஸ்வரன், “எப்படி சப்தமி, என்னோட அப்டேட்ஸை கைவிரலில் வச்சிருக்க போல, நான் என்னென்ன மியூஸிக் ஆல்பம் போட்ருக்கேன். என்னென்ன பாட்டெல்லாம் பாடியிருக்கேன் எல்லாம் சரியா சொல்ற, என்னைப்பத்தி நிறைய தெரிஞ்சு வச்சிருக்க, இந்த அளவு இருக்கும்னு நான் நினச்சே பார்க்கல,” என்று அவன் வியப்பும் பரவசமுமாய் கூற,

“பின்ன இதெல்லாம் தெரிஞ்சு வச்சுக்காம நான் இந்த இடத்தில் இருக்க முடியுமா?” என்று அவள் பதில் கூறினாள்.

“அதுக்கு நான்தான் காரணம் அதை மறந்துடாத,” என்று அவன் சொல்லவும்,

“ம்ம் கண்டிப்பா அதை நான் மறுக்க மாட்டேன்” என்றாள் அவள்,

பின் ஏதோ அவனிடம் கேட்க நினைத்து பின் அவள் தயங்குவதை சாய் ஸ்வரனால் புரிந்து கொள்ள முடிந்தது. “ என்ன ஏதாச்சு என்கிட்டகேட்கணுமா சப்தமி,” என்று அவன் அவளிடம் கேட்க,

“ஆமாம்,” என்று தலையாட்டியவள், “எனக்காக ஒரு பாட்டு பாட சொன்னதும், எதுக்காக நேத்து அந்த பாட்டை பாடுனீங்க?” என்று அவள் கேட்டாள்.

“எனக்கே தெரியலையே, நீ பாட சொன்னதும் ஆட்டோமேடிக்கா அந்த பாட்டு தான் பாட தோனுச்சு, நீ என்னை அந்த அளவுக்கு டிஸ்டர்ப செய்திருக்கன்னு நினைக்கிறேன்.” என்ற அவனது பதிலை கேட்டு வியப்பில் அவள் கண்களை அகல விரித்தாள். உடன் தானாகவே அவளை வெட்கம் சூழ, அதை அவனிடமிருந்து மறைக்க அவள் பெரும்பாடு பட்டாள்.

ஆனால் அந்த வெட்கத்தை கண்டு கொண்டவனோ, “இந்த பாவாடை தாவணியில் ஏற்கனவே நீ அழகு. இதில் இந்த வெட்கம் உனக்கு இன்னும் அழகு சேர்க்குது. ம்ம் இந்த நேரம் ஒரு பாட்டு பாட தோனுதே என்றவன்,

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்

என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய், போததென

சின்ன சிரிப்பில் ஒரு கள்ள சிரிப்பில்

என்னை தள்ளிவிட்டு தள்ளிவிட்டு மூடி மறைத்தாய்
என்ற பாடலை பாடியபடி அந்த இடத்தை விட்டு நகர, அவளுக்கோ அவன் பேசியதும், பாடியதையும் நினைத்து இன்னுமே வியப்பு தான், அதில் தானாகவே அவள் முகத்தில் புன்னகை தோன்ற,

இதில் பட குழுவினரில் இரண்டு பேர் வேறு, “என்னடா இது வேற ரூட்ல போகும் போல,” என்று சொல்லியப்படி இவளை தாண்டி போகவும், அதை கேட்டவளின் புன்னகை அப்படியே மாயமாய் மறைந்து போக, முகத்தில் கலக்கம் வந்து குடி கொண்டது.

தொடர்ந்து இசைக்கும்..