VMIA 4

இசை 4

தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் இப்போது நேரில் அந்த அரங்கில் இருப்பதற்குமான வித்தியாசத்தை சப்தமி நன்றாகவே உணர்ந்தாள். இது ஒரு புதுவித அனுபவமாக அவளுக்கு தெரிந்தது. ஒருவிதமான படபடப்பை அவள் உணர்ந்தாள். முகத்தில் போட்டிருந்த ஒப்பனையையும் மீறி அவளுக்கு வேர்ப்பது போல் தோன்ற, இது நிஜமா? கனவா? என்பது புரியாமல் பத்தாவது முறையாக தன் கையை கிள்ளிப் பார்த்துக் கொண்டாள்.

தன் தோழி சொன்னதற்காக மட்டுமே சாய்ஸ்வரனை பற்றி எழுதி அனுப்பியிருந்தாள். மற்றப்படி இப்படியொரு வாய்ப்பெல்லாம் தன்னை தேடி வருமென்று அவள் துளி கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அதனால் அதை மறந்து தன் வேலையில் மட்டுமே அவள் கவனம் செலுத்த, வானம் தொலைக்காட்சியிலிருந்து தன்னை தொடர்பு கொண்டு இந்நிகழ்ச்சிக்கு அவளை தேர்ந்தெடுத்ததாக சொன்னதும் அவளுக்கு துள்ளி குதிக்காத குறை தான்,

இன்னொருபக்கம் இதெல்லாம் சரி வருமா? என்ற தயக்கமும் உடன் சேர்ந்து கொண்டது. பெற்றோர்கள் இதற்கு சம்மதிப்பார்களா? 30 நாள் சாய்ஸவரனோடு என்றால் எப்படி? அங்கேயே தங்குவது போல் இருக்குமா? நிகழ்ச்சி எப்படி போகும்? ஒன்றும் புரியாத நிலை தான் அவளுக்கு, ஆனாலும் சாய்ஸ்வரனை நேரில் பார்க்க போகிறாள். அவனோடு பேச போகிறாள் என்பதில் மிகவுமே மகிழ்ச்சியடைந்தாள்.

தன் அன்னையிடம் இதைப்பற்றி கூறினாள். பொதுவாக அவரது அன்னைக்கு சுதந்திரமாக தன்னிச்சையாக செயல்பட வேண்டுமென்று ஆசை. ஆனால் அவர் பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி அதிக கட்டுப்பாடுகள். அதுவே கணவனை விட்டு பிரிய நினைக்க முக்கிய காரணம் என்பது இவளது எண்ணம்.

அதனால் இந்த விஷயத்தை பற்றி சொன்னபோது அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை தான், அதேநேரம் சம்மதிக்கவும் இல்லை. “ப்ரோகிராம் எப்படி இருக்கும்னு தெரியலையே கண்ணா. அதில்லாம நீ டிவில வருவதை நம்ம குடும்பத்தில் விரும்புவாங்களான்னும் தெரியலையே, ஏற்கனவே நான் விவாகரத்து வாங்கினது எங்க வீட்டில் யாருக்கும் பிடிக்கவேயில்லை. இதுவரை என்கிட்ட யாரும் பேசவும் இல்லை. ஏதோ உன்மேல இருக்க பாசத்தால பாட்டி உன்னை பார்த்திக்கிட்டாங்க, அதுக்கே என்னோட அண்ணா, தம்பியெல்லாம் ஓவரா சீன் போட்டாங்கன்னு உனக்கே தெரியும், இப்போ இதுக்கு என்ன சொல்வாங்களோ,” என்று அவளின் அன்னை வருத்தமாக பேச,

“அம்மா, அவங்க எல்லாத்துக்கும் பேச தான் செய்வாங்க, அதுக்காக பார்த்தா முடியுமா? உங்களுக்கு சம்மதமான்னு மட்டும் சொல்லுங்க,” என்று சப்தமி கேட்கவும்,

“ப்ரோகிராம் எப்படி போகும்னு தெரியாம நான் எப்படி சம்மதம் சொல்றது. அதைப்பத்தி கேட்டு சொல்லு,” என்று அவர் சொல்லியிருந்தார்.

தந்தையிடம் சொல்ல நினைத்தாலோ அவரை அலைபேசியில் கூட பிடிக்க முடியவில்லை. அவர் தன் வேலை, தன் இரண்டாவது குடும்பம் என்று பிஸி போலும், பொதுவாகவே பண்டிகை, பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல மட்டும் தான் அவர் அழைப்பார். பரிசுகள் வாங்கி அனுப்புவார். மற்றப்படி அன்னையை போல் அடிக்கடி பேசமாட்டார். அதனால் அவராக அழைக்கும்போது சொல்லிக் கொள்ளலாம் என்று அவள் முடிவு செய்துக் கொண்டாள்.

பின் ஒப்பந்தம் போடுவதற்கு முன்பு நிகழ்ச்சி எப்படி போகுமென்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டி தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அவள் கோரிக்கை வைக்க, அவர்களும் அதைப்பற்றி அவளுக்கு விளக்கினார்கள்.

வாரத்தில் இருநாட்கள் சனி மற்றும் ஞாயிறு இந்நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகும், மொத்தம் 30 எபிசோட்ஸ், அதற்கான படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறாது. தேவையான சமயத்தில் அழைப்போம், படப்பிடிப்பு மொத்தமாக ஒரு பதினைந்து நாட்கள் தான் இருக்கும் என்ற தகவல்களை அவர்கள் அளிக்க,

சப்தமிக்கு அந்த செய்தி ஒருவகையில் ஏமாற்றத்தை கொடுத்தது. 30 நாட்கள் என்றால் தொடர்ந்து 30 நாட்களும் சாய்ஸ்வரனோடு இருப்பது போல் இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கும் என்று அவள் நினைத்துக் கொண்டாள். ஆனால் அப்படியில்லை என்பது தான் அந்த ஏமாற்றத்திற்கு காரணம். ஆனாலும் சாய்ஸ்வரனோடு இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதே அவளுக்கு பரவசத்தை கொடுத்தது.

நிகழ்ச்சியைப் பற்றி தன் அன்னையிடம் அவள் விளக்கவும் அவரும் அவள் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு சம்மதித்தார். ஆனால் அவளுக்கான எதிர்ப்பு கல்லூரி விடுதியில் இருந்து வந்தது. அது மிகவுமே கட்டுப்பாடுகள் நிறைந்த விடுதி. அப்படியிருக்க இப்படியான நிகழ்ச்சிகள் இரவில் கூட நடக்க வாய்ப்பிருக்கிறது. ஏதாவது பிரச்சனை ஆகிவிட்டால் நாங்கள் தான் பதில் கூற வேண்டும், அதனால் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் விடுதியில் தங்க முடியாது என்று விடுதியில் கூறிவிட, சப்தமிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

அன்னையிடம் இதைப்பற்றி அவள் பகிர்ந்து கொள்ள, அவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் அவள் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். அவள் அங்கே தனியாக தங்க முடியாது என்பதால் அவளின் தோழி சீமாவும் அவளுடன் தங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதில்லாமல் வீட்டு வேலைகளை செய்யவும் அவர்களின் பாதுக்காப்பிற்கும் ஒரு பெண்மணியும் அவர்களுக்கு துணையாக அங்கு தங்கினார்.

இது அனைத்துமே அவர்களின் உறவுக்காரர்களுக்கு தெரிந்தால் அவர்களிடம் அதிகம் பேச்சு வாங்க வேண்டியிருக்கும், இருந்தும் துணிந்து தன் மகளின் விருப்பத்திற்கு சப்தமியின் அன்னை துணை நின்றார்.

இத்தனையையும் கடந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டவள் இதோ இப்போது இந்த அரங்கில் நின்றுக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவள் ஆவலாக எதிர்பார்த்த தருணம் இன்னும் வரவில்லை. ஆம் சாய்ஸ்வரன் இன்னும் வந்திருக்கவில்லை. முதலில் இவளை வைத்து தான் படப்பிடிப்பை ஆரம்பிக்க போகிறார்களாம், அவன் வர தாமதமாகும் என்ற தகவல் அவளுக்கு கிடைத்ததும் மனதில் ஏமாற்றம் சூழ்ந்து கொண்டது.

அடுத்து அவளை வைத்து சில காட்சிகளை படம்பிடித்தனர். ஒவ்வொன்றிற்கும் இப்படி பேசுங்கள். அப்படி கூறுங்கள் என்று ஒரே காட்சியை இரண்டு மூன்று முறை படமாக்கினர். அதிலும் சாய்ஸ்வரனுக்காக எழுதிய கடிதத்தை திரும்ப இந்த நிகழ்ச்சியில் பேச வேண்டுமென்று கூறினர்.

அதிலும் அதை உருக்கமாக அழுதுக் கொண்டே பேச வேண்டுமாம், ஆரம்பத்தில் அன்னை தந்தை பிரிய போவதை நினைத்து அவள் மனமுடைந்து போனது உண்மை தான், அப்போதெல்லாம் எத்தனை நாட்கள் தனிமையில் அழுதிருக்கிறாள் என்பது கணக்கில் கிடையாது. ஆனால் அவள் மாற்றத்திற்கான காரணம் சாய்ஸ்வரனின் இசை ஆல்பம் தான், அதை அவனுக்கு தெரியப்படுத்த வேண்டுமென்பதால் தான் அதைப்பற்றி அவனுக்கு எழுதி அனுப்பினாள்.

இப்போதோ முடிந்து போன விஷயத்திற்கு மீண்டும் அழுவது என்பது அவளுக்கு பிடிக்கவில்லை. அதிலும் பெற்றோர் இருவரும் தனி தனி பாதையை தேர்ந்தெடுத்த பின், மகளும் அதை புரிந்து கொண்டாள் என்று அவர்கள் நினைத்திருக்கும் வேளையில் மீண்டும் இதைப்பற்றி பேசினால் அதை அவர்கள் எவ்வாறு எடுத்துக் கொள்வார்கள். அதிலும் உறவுக்காரர்கள் இதைப் பார்த்தால் அதை வைத்து தன் அன்னையை மீண்டும் காயப்படுத்துவர்.

இதையெல்லாம் யோசித்தவளுக்கு இப்போதோ ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம் என்று தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதுவுமில்லாமல் இந்த தொலக்காட்சியை அவள் விடாமல் பார்த்திருக்கிறாள். அப்போதெல்லாம் அந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே உண்மை என்று தான் அவளுக்கு தோன்றும், ஆனால் இப்போதோ இப்படித்தான் அந்த நிகழ்ச்சிகளும் எடுக்கப்பட்டிருக்கும் என்ற உண்மை புரிய வர, எவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறோம் என்று நினைத்துக் கொண்டாள்.

“முடிஞ்சு போனதை திரும்ப ஏன் பேசணும், இதை தவிர்க்க முடியாதா?” என்று அவள் நிகழ்ச்சி தயாரிப்பு குழுவிடம் கோரிக்கை வைக்க,

“இதெல்லாம் சொன்னா தான் நிகழ்ச்சி விறுவிறுப்பா போகும் ம்மா, உன்னை இந்த நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுத்தது சாயஸ்வரன் தான், அவர் எதுக்காக உன்னை தேர்ந்தெடுத்தார்னு எல்லோருக்கும் தெரிய வேண்டாமா? இல்லன்னா நாங்களே எங்களுக்கு வேண்டிய ஆளை போட்டு நிகழ்ச்சி நடத்துறதா சொல்வாங்க, ஏற்கனவே இந்த நிகழ்ச்சிக்கு நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ் இருப்பது உனக்கே தெரியுமில்ல, அதனால இதெல்லாம் சொன்னா தான் ரியலா தெரியும்,” என்று அவர்கள் எடுத்து கூறவும்,

அவளுக்கும் அவர்கள் கூறுவது சரியென்றுபட்டது. ஆனாலும், “எனக்கு இந்தநேரம் அதை நினைச்சு அழுகை வரலையே, என்ன செய்ய?” என்று அவள் அறியாமல் கேள்வியெழுப்பினாள்.

“அதெல்லாம் ஒன்னும் பிரச்சனையில்லை கண்ணில் கிளிசரின் ஊத்திக்கிட்டு கொஞ்சம் உருக்கமா பேசுனா போதும்,” என்று சொல்ல, அவளும் அதற்கு சம்மதித்தாள்.

அப்படியும் இரண்டு மூன்று முறை அதை பேச சொல்லி பின்பு தான் சரியாக இருப்பதாக சொல்லி அதை படம்பிடித்தனர். அதனாலேயே இங்கு வந்தபோது இருந்த உற்சாகம் இப்போது அவளைவிட்டு முற்றிலும் தொலைந்து போயிருந்தது. அந்த இடத்தில் அவளால் பொருந்தி போக முடியவில்லை. எப்போது வீட்டுக்கு செல்வோம் என்று அவளுக்கு தோன்ற ஆரம்பித்துவிட்டது.

அத்தனை உணர்வுகளும் சாய்ஸ்வரனை நேரில் பார்த்ததும் அப்படியே மாயமாகிவிட்டது. ஆம் அவன் அரங்கிற்கு வந்துவிட்டிருந்தான். ஆனால் அவளை அவன் கண்டுக் கொள்ளவேயில்லை. அதில் மீண்டும் அவளை ஏமாற்றம் சூழ்ந்து கொண்டது.
ஆனால் அவன் தான் அவளை பார்த்ததில்லையே, அவளது கடிதத்தை மட்டும் தானே படித்திருக்கிறான். இங்கு வந்ததும் பார்த்துக் கொள்ளலாம் என்றிருந்தவனுக்கு சொன்ன நேரத்தை விட சற்று தாமதமாக வந்ததால் அதுகுறித்து மன்னிப்பு கோர அந்நிகழ்ச்சி குழுவினரிடம் சென்றுவிட்டான்.

அவன் தன்னைப் பார்ப்பானா? என்று சப்தமி அவனை ஆவலாக பார்த்தப்படி இருக்க, அவனோ வெகுநேரமாக அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான். அதாவது ஐந்து நிமிடமே அவளுக்கு அப்படி தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதன்பின்பு அந்த குழுவில் இருக்கும் ஒருவர் அவளை கைகாட்டி ஏதோ சொல்லவும் அப்போது தான் சாய்ஸ்வரன் அவளைப் பார்த்து புன்னகைத்தான்.

அப்போது தான் அவளுக்குமே அவனுக்கு இதுவரை தன்னை யாரென்று தெரியாது. இப்போது தான் தெரிந்து கொண்டான் என்ற உண்மை உரைக்கவும் தான் தவறாக அவனை புரிந்து கொண்டதை நினைத்து தன் தலையில் அடித்துக் கொண்டாள்.

அடுத்து அவனிடம் சென்று பேசலாம் என்றால் அது முடியவில்லை. படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று குழுவினர் சொல்லவும், மீண்டும் அவளுக்கு ஒப்பனைகள் செய்யப்பட்டது. முன்பே பேச வைக்காமல் சாய்ஸ்வரனிடம் சப்தமி முதன்முதலில் பேசுவதை அப்படியே படம் பிடிக்க வேண்டுமென்பதால் குழுவினர் இந்த ஏற்பாடை செய்தனர்.

இருவரும் எதிரெதிரில் அந்த அரங்கில் நிற்க அவர்களுடன் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினியும் உடனிருந்தார்.

“சப்தமி, இப்போ உங்க முன்னாடி சாய்ஸ்வரன் இருக்காரு. அவரை இப்போ தான் நீங்க முதன்முதலா பார்க்கறீங்க இல்லையா? இதை நீங்க எப்படி ஃபீல் செய்றீங்க?” என்று அந்த தொகுப்பாளினி சப்தமியிடம் கேட்கவும்,

“இன்னுமே என்னால இத நம்ப முடியல, அப்பப்போ என்னோட கையை கிள்ளிப் பார்த்துட்டு இருக்கேன். இது எப்படி சாத்தியமாச்சுன்னு ஆச்சர்யமா இருக்கு, ஸ்வரனை இப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்பது, அதுவும் அவரோட சேர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துப்பது. எல்லாமே என்னோட அதிர்ஷ்டம்னு தான் நான் சொல்லுவேன்.” என்று அவள் உண்மையிலேயே அப்போதைய உற்சாகத்தோடு பேசினாள்.

அடுத்து சாய்ஸ்வரனிடம், “ஸ்வரன், இப்படி ஒரு ரசிகையை நேரில் சந்திக்கறதில் நீங்க எப்படி ஃபீல் செய்றீங்க?” என்று அந்த தொகுப்பாளினி கேட்கவும்,

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, என்னோட இசையை எல்லாம் ரசிக்கிறாங்கன்னா அதைவிட எனக்கு பெரிய சந்தோஷமே இல்லை. ஆனா அந்த இசை அதிலிருந்த கான்சப்ட் சப்தமிக்கு ஒரு மாற்றத்தை உண்டாக்கியிருக்ககுன்னு அவங்க எழுதியிருந்தப்போ, அவங்களை ஸ்பெஷலா உணர வச்சிட்டாங்க, இப்படியான ஒருவிஷயம் நடந்திருக்குன்னு நினைக்கும்போது என்னை நானே பெருமையா உணர்ந்தேன்னு கூட சொல்லலாம்,” என்று அவனும் சிலாகித்து பேசினான்.

“சப்தமி இதுக்கு முன்ன ஸ்வரனை நீங்க நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் அமையும்னு நினைச்சிருக்கீங்களா?” என்று தொகுப்பாளினி கேட்க,

“சந்தர்ப்பங்கள் தேடி வரணும்னு இல்லை. நாமளே உருவாக்கிக்கலாம், ஸ்வரனை பார்க்கணும்னு நினைச்சா பார்த்திருக்கலாம், ஆனா அதுக்கான முயற்சியை நான் எடுக்கல, இப்போ கூட என்னோட ஃப்ரண்ட் சொன்னதால தான் நான் இந்த நிகழ்ச்சிக்கு அப்ளை செய்தேன். இந்த நிகழ்ச்சியில் நான் செலக்ட் ஆகலன்னாலும் இந்த விஷயம் ஸ்வ்ரனுக்கு தெரியணும்னு நினைச்சேன்.

ஆனா நானே இந்த நிகழ்ச்சியில் செலக்ட் ஆவேன்னு நினைச்சு கூட பார்க்கல, இப்போ கூட என்னோட மனநிலை எப்படி இருக்குன்னு சொல்ல வார்த்தையே இல்லை.” என்று பேசும்போதே உணர்ச்சிவசப்பட்டு அவள் கண்கள் லேசாக கலங்கியது.
“சரி சரி எமோஷன் ஆகாதீங்க சப்தமி,” என்று தொகுப்பாளினி சொல்லிக் கொண்டிருக்க, சப்தமியோ சாய்ஸ்வரனை பார்க்க, அவன் மெலிதான புன்னகையோடு அவளை பார்த்திருந்தான்.

“சரி ஸ்வரனை பார்க்கணும்னு நீங்க முயற்சிக்கல, ஒருவேளை எதிர்பாராத விதமா அவரை பார்க்கும் சந்தர்ப்பம் உங்களுக்கு அமைஞ்சிருந்தா அப்போ அவர்க்கிட்ட நீங்க என்ன கேட்டிருப்பீங்க?” என்று தொகுப்பாளினி கேட்கவும்,

“என்ன கேட்பேன். ஸ்வரன் எனக்கே எனக்காக ஒரு பாட்டு பாடணும், அதுவும் கிட்டாரை ப்ளே செஞ்சுக்கிட்டே பாடணும், அதுதான் என்னோட ஆசை.” என்று அவள் கூறினாள்.

“இந்த நிகழ்ச்சி முழுக்க உங்க ஆசை நிறைவேறிக்கிட்டே தான் இருக்க போகுது சப்தமி.” என்று கூறிய தொகுப்பாளினி,

“ஸ்வரன், சப்தமியோட ஆசையை கேட்டீங்கல்ல, அவங்களுக்காக என்ன பாட்டு பாடப் போறீங்க,” என்று சாய்ஸ்வரனை பார்த்து கேட்க,

“சொல்லப் போறதில்ல, பாடப் போறேன்.” என்றவன், தன் கிட்டாரை எடுத்துக் கொண்டு அமர்ந்தவன்,

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே

தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே

அடி இதுபோல் மழைக்காலம் என் வாழ்வில் வருமா?

மழைகிளியே மழைகிளியே உன் கண்ணைக் கண்டேனே

விழி வழியே விழி வழியே நான் என்னைக் கண்டேனே

செந்தேனே

என்ற பாடலை அவன் கண்களை மூடியப்படி மெய்மறந்து பாடிக் கொண்டிருக்க,

அவன் தனக்காக இந்த பாடலை பாடுவான் என்று சப்தமி கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. அப்படியே அந்த பாடலைக் கேட்டு உறைந்து போயிருந்தாள்.

அவள் மட்டுமல்ல அந்த அரங்கத்தில் இருந்தவர்கள் யாருமே இதை எதிர்பார்க்கவில்லை என்றே சொல்லலாம், அவனது இந்த பாடலை கேட்டு வியப்படைந்தவர்கள், “நாம எப்படி இந்த ப்ரோகிராம் போகணும்னு நினைச்சோமோ, அது ஈஸியா முடிஞ்சிடும் போலயே,” என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

தொடர்ந்து இசைக்கும்..