VMIA 3

இசை 3

ஸ்வரனோடு 30 நாட்கள்

தன் இசையால் நம்மை மகிழ்விக்க சாய்ஸ்வரன் காத்திருக்கிறார். அவரோடு உடன் இணைந்து இந்நிகழ்ச்சியில் அவரின் இசையை ரசிக்க காத்திருக்கும் அந்த அதிர்ஷ்டசாலி யார்? யாருக்கு இந்த வாய்ப்பு கிடைக்க போகுது? அந்த அதிர்ஷ்டசாலியா நீங்க ஆக வேண்டுமா? அதற்கு நீங்க செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்,

நீங்க 25 வயதுக்குட்பட்ட திருமணம் ஆகாத பெண்ணா? சாய்ஸ்வரனின் இசையை கேட்டு இருக்கிறீர்களா? ரசித்திருக்கிறீர்களா? அவரைப்பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? அப்படியானால் உடனே இந்த வாட்ஸ் அப் எண்ணுக்கு சாய்ஸ்வரனை பற்றி உங்களுக்கு தெரிந்ததை எழுதி உங்களைப் பற்றியும் எழுதி இந்த தேதிக்குள் எங்களுக்கு அனுப்புங்கள். அதில் சாய்ஸ்வரனை எது கவர்ந்ததோ அவரே சாய்ஸ்வரனோடு இணைந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பிக்க போகிறவர்.

இப்படியான விளம்பரம் வானம் தொலைக்காட்சியில் நினைத்த நேரத்திலெல்லாம் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருக்க, அதற்கான நேர்மறை மற்றும் எதிர்மறை விமர்சனங்களும் மக்களிடம் வந்தப்படி தான் இருந்தது. ஆனால் அதையெதையும் பொருட்படுத்தாமல் அந்த தொலைக்காட்சி நிறுவனம் அந்த நிகழ்ச்சியை நடத்தும் வேலையில் தீவிரமாக இருந்தது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்புவது பத்தாதென்று சமூக வலைத்தளங்களிலும் இப்போதைய சமீப ட்ரெண்டாக இந்த விளம்பரம் தான் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்க, சப்தமி எத்தனைமுறை அந்த விளம்பரத்தை பார்த்திருந்திருப்பாள் என்பது கணக்கில் கிடையாது. சாய்ஸ்வரனை பற்றிய ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் அதை அவள் தவற விடுவதில்லை.

யூட்யூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், டிவிட்டர் என்று அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அவனை அவள் பின் தொடருகிறாள். அவனது இசையை, அவனை, அவன் அழகை என்று அவனை அவள் அனு அனுவாக ரசிக்கும் ரசிகை அவள்.

இப்போதும் தன் கல்லூரி விடுதியில் அமர்ந்து தன் அலைபேசியில் அந்த விளம்பரத்தை பார்த்துக் கொண்டிருக்கும் சப்தமி கல்லூரியின் இளநிலை படிப்பில் மூன்றாமண்டு மாணவி. அவளது பெற்றோர்கள் இருவரும் விவாகரத்து வாங்கி பிரிந்து வாழ்பவர்கள், இருவரும் இப்போது இந்தியா இல்லாமல் வெவ்வேறு நாட்டில் வேலை செய்துக் கொண்டிருக்க, அன்னை வழி பாட்டி வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்றுக் கொண்டிருந்த அவளோ அந்த சூழ்நிலையை விரும்பாதவள், கல்லூரி படிப்பை விடுதியில் தங்கி படிக்க விரும்பியவள் அதை செயல்படுத்தவும் செய்து, இப்போது விடுதியில் தங்கியிருக்கிறாள்.

சப்தமி அந்த விளம்பரத்தையே அடிக்கடி பார்த்தப்படி இருப்பதை பார்த்த அவளின் அறை தோழி சீமாவிற்கும் சய்ஸ்வரன் மீது தன் தோழிக்கு இருக்கும் அபிமானம் எத்தனை அதிகம் என்பதை அறிந்தவள் தான்,

அதனாலேயே, “சமி, நீயேன் இந்த ப்ரோகிராம்ல கலந்துக்க கூடாது. சாய்ஸ்வரனோட 30நாள் இருக்க போற சான்ஸ். ஹப்பா நினைச்சு பார்த்தாலே பிரம்மிப்பா இருக்கு, அந்த அதிர்ஷ்டசாலி நீயா இருந்தா எப்படி இருக்கும்?” என்று சீமா கூறவும், சப்தமி கண்களிலும் வெளிப்படையாகவே அந்த ஆசை பிரதிபலித்தது.

இருந்தாலும், “இதெல்லாம் ஆல்ரெடி ஆள் செலக்ட் செஞ்சு வச்சிருப்பாங்க சீமா, நமக்கெல்லாம் இந்த சான்ஸ் கிடைக்காது.” என்று நம்பிக்கையில்லாமல் கூறினாள்.

“அப்படியெல்லாம் இருக்காது. அப்படியே இருந்தாலும் சாய்ஸ்வரனை பத்தி பக்கம் பக்கமா எழுத சொன்னாலும் நீ சலிக்காம எழுதுவ தான, அதனால நீயும் தான் முயற்சி செஞ்சு பாரேன்.” என்று சீமா கூறவும், சப்தமிக்கும் முயற்சி செய்து பார்த்தால் தான் என்ன? என்று தோன்றியது.

மகாவின் முகத்தில் தோல்வியின் சாயல் நன்றாகவே தெரிய, அதனால் அவள் உற்சாகம் இழந்து நடமாடிக் கொண்டிருந்தாள். அவளை அப்படி பார்க்க அனிதாவிற்கே பிடிக்கவில்லை. “இப்போ சாய்ஸ்வரன் இதுக்கு ஒத்துக்கலன்னா வேற ஆளே இல்லையா? நீயேன் இப்படி டல்லா இருக்க, இதைவிட பெஸ்ட்டான ஆளா நாம கண்டுப்பிடிக்கிறோம், நம்ம வேலையை பர்ஃபெக்டா செய்து முடிக்கிறோம், நீ இதையே நினைச்சுட்டு இருக்காத மகா,” என்று அனிதா அவளுக்கு ஆறுதல் கூற,

“சாய்ஸ்வரன் நம்ம வேலைக்காக ஒத்துக்கலங்கிறது கூட எனக்கு கஷ்டமாயில்லை அனி. ஆனா அவன் அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்துக்க போறதை நினைச்சா தான் எனக்கு கஷ்டமா இருக்கு,

சோஷியல் மீடியா மூலம் சாய்ஸ்வரனை பத்தி நான் சேகரிச்சதை வச்சு பார்த்தப்ப அவன் இந்த ரியாலிட்டி ஷோவில் கலந்துக்க மாட்டான்னு தான் நினைச்சேன். ஆனா மியூசிக் சான்ஸ், பேர், புகழ் இதுக்காக அவன் இப்படி ஒத்துக்கிட்டது கண்டிப்பா அவனைப்பத்தி மனசுல உருவாக்கி வச்சிருந்த பிம்பம் தூள் தூளா உடைஞ்சு போச்சு,” என்று மகா வருத்தத்தோடு கூறினாள்.

“அவனோட கனவு மியூசிக் டைரக்டர் ஆகறது தானே, அப்போ இப்படியான வாய்ப்புகளை அவன் ஒத்துக்க நினைக்கறது இயல்பு தான், எல்லாமே தங்களை பிரபலப்படுத்திக்க செய்றது தான், அதனால அதை உண்மைன்னு நினைச்சது நம்மளோட முட்டாள்தனம்.

நீ பேசறதை பார்த்தா சாய்ஸ்வரனை உனக்கு வரனா பார்த்ததால அவனை உனக்கு ரொம்ப பிடிச்சிருச்சு போல, அந்த பிடித்தம் காரணமா தான் சாய்ஸ்வரன் விஷயத்திலிருந்து உன்னால வெளியில் வர முடியலையன்னு நினைக்கிறேன்.” என்று அனிதா கூற,

“எப்படியிருந்தாலும் இப்போ சாய்ஸ்வரன் மேல எந்த பிடித்தமோ மரியாதையோ இல்லை அவ்வளவுதான், அதனால இனி அதைப்பத்தி பேசி எந்த பிரயோஜனுமுமில்லை.” என்று மகா அந்த பேச்சுக்கு முற்று புள்ளி வைக்கவும்,

மகா தனிப்பட்ட வாழ்க்கை, அவளின் லட்சியம் இரண்டையும் போட்டு குழப்பிக் கொண்டுவிட்டாள். அவளே சிறிது நாளில் தெளிந்து விடுவாள் என்று அனிதாவும் அமைதியாகிவிட்டாள். ஆனால் மகாவால் அத்தனை சீக்கிரம் தன் தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. தான் நினைத்ததை முடிக்க வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்று அப்போதும் அவள் யோசித்துக் கொண்டிருந்தது அனிதாவிற்கு தெரியவில்லை.

வானம் தொலைக்காட்சியின் விளம்பரத்திற்கு அடுத்து தன் ரசிகைகளிடம் இத்தனை விண்ணப்பங்கள் வந்திருக்கும் என்று சாய்ஸ்வரன் எதிர்பார்க்கவேயில்லை. தொலைக்காட்சியில் தன்னை அனுகும்போதே இந்த நிகழ்ச்சி எப்படி நடக்க வேண்டுமென்று எல்லாமே அவர்களே திட்டமிட்டு வடிவமைத்திருப்பார்கள் என்று தான் அவன் நினைத்தான். அதன்படி யார் இவனோடு இணைந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது என்பதையும் அவர்களே முடிவெடுத்திருப்பார்கள் என்று அவன் நினைத்திருக்க,

அவர்களோ இவனையே தேர்ந்தெடுக்க சொல்லி கூறவும், அது உண்மையிலேயே பெரிய வேலையாக இருந்தது. தான் அத்தனை பெரிய ஆளா? என்று நினைத்து அவனுக்கே வியப்பாகவும் இருந்தது.

ஏராளமான விண்ணப்பங்கள் அதில் இவனைப்பற்றி நிறைய எழுதியிருந்தனர். அனைத்தையும் படித்து முடிக்கவே ஒருமாதம் ஆகும்போல் தெரிகிறது. ஆனால் அவனுக்கான அவகாசம் 3 நாட்கள் தான், அதற்குள் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும், அப்போது தான் அந்த நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பை ஆரம்பிக்க முடியும் அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

ஆனாலும் அதிக விண்ணப்பஙகளில் சிலது மொழி புரியாமல், சிலது ஆபாசமாய், சிலது கட்டுரை போல், சிலது இவனது புறத்தோற்றத்தை பற்றி, இவனுக்கே சிரிப்பு வரும் அளவிற்கு இவனை புகழ்ந்து தள்ளி என்று இருந்த விண்ணப்பங்களையெல்லாம் நிராகரித்தவனுக்கு இதெல்லாம் வேலைக்கு ஆகுமா? என்று கூட ஒருகட்டத்தில் தோன்றிவிட, அப்போதுதான் அவன் கண்ணில் பட்ட ஒரு விண்ணப்பம் அவனை மெய் சிலிர்க்க வைத்தது.

சாய்ஸ்வரனுக்கு சப்தமி எழுதிக் கொள்வது என்று அந்த விண்ணப்பம் ஒரு கடிதம் போல் ஆரம்பித்தது.

சாய்ஸ்வரனை யாருக்கும் பிடிக்காமல் இருக்குமா? உங்களுக்கு மியூசிக் டைரக்டர் ஆகணும்னு ஆசை. அதுக்காக தான் நீங்க செய்யும் முயற்சிகள் எத்தனை எத்தனையோ, ஆனால் நீங்க சினிமாக்கு மியூசிக் போட்டு தான் மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டுமென்று இல்லை. அதற்கு முன்னரே நீங்க அதிகம் பேர் மனதில் இடம் பிடித்துவிட்டீர்கள். அதுவும் உங்கள் இசையால் தான் நீங்கள் அந்த இடத்தை பிடித்திருக்கிறீர்கள்.

வெளிப்படையா பார்க்க நீங்க அழகு, க்யூட், சார்மிங் அப்படியெல்லாம் நிறைய பெண்கள் சொல்லலாம், ஆனா அதையும் தாண்டி அவர்கள் உங்களை ரசிக்கிறார்கள் என்றால் அது உங்கள் இசையாக தான் இருக்கும். உங்களை பார்க்கவென உங்கள் பாடல்களை பார்த்தாலும் அவர்களை அறியாமலே அவர்கள் மனதை அந்த இசை தொட்டிருக்கும், அதைவிட நீங்கள் தேர்ந்தெடுக்கும் கான்சப்ட் உங்களை வேறு கோணத்தில் பார்க்க வைக்கும், எல்லோருக்கும் எப்படியோ எனக்கு அது எவ்வளவு பெரிய மாற்றத்தை கொடுத்திருக்கு என்று உங்களுக்கு தெரியாது.

நான் கிட்டத்தட்ட உங்கள் மீது பைத்தியமாகியிருக்கேன் என்று உடனிருப்பவர்கள் கூறுவார்கள். அதற்கு காரணம் உங்க இசை, உங்க அழகு இதையெல்லாம் தாண்டி நீங்க என்னோட மனதிற்கு நெருக்கமாக இருக்க முக்கிய காரணம் ஒன்று இருக்கு,

நான் அப்போது 10வது படித்துக் கொண்டிருந்தேன். எப்போதும் சண்டையும் சச்சரவுமா இருக்க அப்பா, அம்மா விவாகரத்து வாங்க போவதாக முடிவு செய்திருப்பதை என்னிடம் கூறினார்கள். அதைகேட்டு எவ்வளவு வருத்தமா இருந்தது தெரியுமா? என்னைப்பற்றிய கவலை அவர்களுக்கு இல்லை. அப்படி கவலைபட்டிருந்தால் இப்படி சுயநலமான முடிவு எடுத்திருப்பார்களா? இப்படி தான் என்னோட சிந்தனை இருந்தது. அதிலிருந்து நான் நானாகவே இல்லை. பேசாமல் தற்கொலை செய்துக்கலாமா என்று கூட ஒருகட்டத்தில் தோன்றியது.

அந்தநேரம் தான் என்னோட ஃப்ரண்ட் உங்க ஆல்பம் வீடியோ ஒன்று என் அலைபேசிக்கு அனுப்பியிருந்தாள். அதற்கு முன்னமே உங்க வீடியோ பார்த்திருக்கேன். உங்களோட இசை கேட்டிருக்கேன். பிடிக்கும், அதனால் தான் நான் அந்த வீடியோ பார்த்தேன். அதில் கல்லூரியில் படிக்கும் இளைஞன் இளவயதில் தன் தந்தையால் கைவிடப்பட்ட தன் அன்னைக்கு மறுமணம் செய்து வைக்கிறான்.

தன்னை வேண்டாமென்று சொல்லிவிட்டு போன கணவனை நினைத்து காலம் முழுவதும் தன் அன்னை ஏன் தன் உணர்வுகளை அடக்கிக் கொண்டு தன் மகனுக்காக தியாக வாழ்க்கை வாழ வேண்டும்? அவர்களுக்கும் ஒரு வாழ்க்கை இருக்கிறது. என்பது போல் அந்த கான்சப்ட் இருந்தது.

அதை பார்க்கவும் எனக்குள்ளும் மாற்றங்கள். எனக்கு கருத்து தெரிந்ததிலிருந்து என் பெற்றோர்கள் சண்டை போட்டு தான் அதிகம் பார்த்திருக்கிறேன். இரண்டு பேருக்கும் ஒத்துவரவில்லை. இருந்தும் எனக்காக பார்த்து தான் இத்தனை வருடத்தை கடந்திருக்க வேண்டும், இனியாவது நான் புரிந்து கொள்வேன் என்று அவர்கள் நினைத்திருக்கலாம், அதனால் அவர்கள் பிரிவை விரும்பியிருக்கலாம் என்பதை புரிந்து கொண்டேன்.

இப்போது அவர்கள் இருவரும் அவர்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ்கிறார்கள். அப்பா வேறொரு திருமணம் செய்துக் கொண்டார். அன்னை அவர்கள் விரும்பிய வேலையை செய்கிறார்கள். அவர்களை நான் புரிந்து கொண்டாலும் மற்றவர்களை போல் பெற்றவர்களுடனான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மனம் ஏங்குகிறது.

அப்படியான தனிமையான நேரங்களில் உங்கள் இசை தான் எனக்கு துணை. எத்தனையோ இசை மேதையெல்லாம் இருக்கிறார்கள். அப்படி என்ன சாய்ஸ்வரன் ஸ்பெஷல் என்று தோழிகள் கேட்கும்போது, மத்தவங்க இசை கேட்கும்போது ஒருவித பரவசம் சந்தோஷம் கிடைக்கும், ஆனா சாய்ஸ்வரன் இசை கேட்கும்போது என் மனதிற்கு நெருக்கமாக உணர்வேன் என்று சொல்வேன். அதுதான் உண்மையும் கூட,

உங்களோட இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுவேனா என்று தெரியாது. ஆனால் இதை நீங்கள் படித்து பார்த்தாலே கூட போதும் அதுவே எனக்கு மகிழ்ச்சி என்றதுடன் அந்த கடிதம் முடிந்திருந்தது.

அதை படித்து சாய்ஸ்வரன் எப்படி உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சியில் அவனோடு பங்குபெற இந்த பெண்ணை விட வேறு யாரும் பொருத்தமாக இருக்கமாட்டார்கள் என்பதே அவனது எண்ணம். இந்த விண்ணப்பத்தை படித்து முடித்ததும் மற்றவைகளை படிக்கவும் அவனுக்கு தோன்றவில்லை என்பதே உண்மை.

எனவே இந்த நிகழ்ச்சியில் அவனோடு இணைந்து பங்குபெற சப்தமி தான் சரியானவள் என்று அவன் உறுதியான முடிவெடுத்தபின் அதை தொலைக்காட்சி நிறுவனத்திற்கு தெரியப்படுத்த, அவர்களும் சப்தமியின் விண்ணப்பத்தில் அவளைப்பற்றிய தகவல்களை அலசி ஆராயந்ததில்,

அவர்கள் இந்த நிகழ்ச்சியை குறித்து போட்டிருக்கும் திட்டத்திற்கு சப்தமி சரியாக இருப்பாள் என்றே அவர்களும் முடிவு செய்தனர். பெற்றவர்கள் விவாகரத்தில் பிரிந்திருக்க, அதுவும் வெவ்வேறு நாட்டில் வசிக்க, இந்நிகழ்ச்சி மூலமாக ஏதாவது பிரச்சனை வந்தாலும் சப்தமி பக்கத்தில் இருந்து பெரிதாக பிரச்சனை இருக்காது என்பதே அவளை இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வைப்பதற்கான முக்கிய காரணம்.

அடுத்து அந்நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பை தொடங்க வேண்டும், இன்னும் ஒருவாரத்தில் அதற்கான வேலைகள் ஆரம்பித்துவிடும் என்று அந்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம் அந்நிகழ்ச்சி தயாரிப்பு குழு சாய்ஸ்வரனிடம் தெரியப்படுத்த,

“ப்ரோகிராம் எப்படி போகும்னு முன்னமே ஸ்கிரிப்ட் தயார் செய்து வச்சிருப்பீங்கல்ல, அதை சொன்னா அதுக்கேத்த போல நானும் தயாராகிப்பேன்.” என்று அவன் கூறினான்.

“பெருசா எதுவுமில்ல, நீங்க உங்க ரசிகையை பார்த்தா அவங்களோட எப்படி பேசுவீங்க? எப்படி பழகுவீங்க? அவங்களோட ஒருநாள் முழுக்க இருப்பது போல இருந்தா எப்படி நடந்துப்பீங்க? அப்படி இருந்தா போதும்,” என்று அந்நிகழ்ச்சி குழு கூறவும்,

“அப்போ ஸ்கிரிப்ட் இல்லையா? ஏதாச்சும் சொதப்பினா என்ன செய்றது?” என்று அவன் குழப்பத்தோடு கேட்க,

“அப்படியெல்லாம் எதுவும் பிரச்சனை வந்துடாது. இது நேரடியா ஒளிபரப்பும் நிகழ்ச்சி இல்லையே, ஷூட் தானே செய்யப் போறோம், ஏதாச்சும் சொதப்பினா அப்போ பார்த்துக்கலாம், ஸ்கிர்ப்ட்னா இயற்கையா இருக்காது. அதுக்கு தான்,

மத்தப்படி இந்த நிகழ்ச்சி எப்படி போகும்னு மட்டும் மேலோட்டமா சொல்றோம், அதுக்கு மட்டும் தயார் ஆகிக்கோங்க,” என்று அந்த குழு சொல்லவும், சாய்ஸ்வரன் தலையாட்டிக் கொண்டாலும், ஏற்கனவே இந்த நிகழ்ச்சி குறித்து அதிக எதிர்மறை விமர்சனங்கள் வந்திருக்க, இந்த ரியாலிட்டி ஷோவிற்கு ஒத்துக் கொண்டதால் ரசிகர்களின் மனதில் தன்னைப்பற்றி தவறான அபிமானம் உண்டாகுமோ என்ற அச்சமும் அவனுக்கு இருந்தது.

தொடர்ந்து இசைக்கும்..