VMIA 2

இசை 2

வானம் தொலைக்காட்சி

அந்த பிரம்மாண்டமான கட்டிடமே ஒரு பிரம்மிப்பை ஏற்படுத்த, அங்கிருந்த பணியாளர்களும் தங்கள் பணிகளின் தீவிரமாக இருந்தனர். ஒருபக்கம் அங்கே தலைமை பணிகளில் இருப்பவர்களுக்கான சந்திப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

“கொஞ்சநாளா நம்ம சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் டி ஆர் பி ரேட் குறைவாகிட்டே வருது. இப்படியே போனா நம்ம சேனலும் பின்னுக்கு போக வாய்ப்பிருக்கு, இதுக்கு நாம ஏதாவது செய்தே ஆகணும்,” என்று தலைமை பொறுப்பில் இருக்கும் ஒருவர் சொல்ல,

“ரொம்பநாளா ஓடிட்டு இருக்க சீரியல்ஸ் எல்லாத்தையும் முடிக்கணும், புது புது சீரியல்ஸ் ஆரம்பிக்கணும், அப்போ கண்டிப்பா டி ஆர் பி ரேட் ஏற வாய்ப்பிருக்கு,” என்று மற்றொருவர் கூறினார்.

“ம்ம் இல்லை, சீரியல் அந்த அளவு ரீச் ஆகுமான்னு தெரியல, வேற ஏதாச்சும் சொல்லுங்க,” என்று முதலில் பேசியவர் கூற,

“நாம புதுவிதமான ரியாலிட்டி ஷோ நடத்தணும், அப்போ தான் நம்ம சேனல் எப்போதும் போல முதலில் இருக்கும், இப்போ இருக்க நிகழ்ச்சிகளை மக்கள் அவ்வளவு ஆர்வமா பார்க்கறதில்ல,” என்று இன்னொருவர் கூறினார்.

“ஆமாம் நீங்க சொல்றது சரிதான், நாம வித்தியாசம் வித்தியாசமா நிகழ்ச்சிகள் நடத்தணும், அதேசமயம் சுவாரசியமா இருக்கணும், அப்படி ஒரு நிகழ்ச்சி யோசிங்க,” என்று அதற்கு அவர் ஆமோதிக்க,

“நாம ஏற்கனவே வெற்றிகரமா நடத்தின நிகழ்ச்சிகளில் அடுத்த சீசன் ஆரம்பிச்சா என்ன?” என்று ஒருவர் கேட்க,

“அது ஒருபக்கம் ஆரம்பிக்கலாம், ஆனாலும் புதுவிதமா ஏதாவது செய்தா இன்னும் நல்லா இருக்கும், அதுக்கு ஐடியாஸ் கொடுங்க,” என்று அவர் கூறவும், ஆளுக்கு ஒரு யோசனைகள் கூற,

“சார் எனக்கொரு ஐடியா, அது பிடிக்குதா பாருங்க, இப்போ சோஷியல் மீடியால ட்ரண்டிங்க்ல இருக்க பாப்புலர் பர்சன். அவங்களுக்கு நிறைய ஃபாலோவரஸ் இருப்பாங்க, கிட்டத்தட்ட ரொம்ப வெறித்தனமா அவங்க என்ன வீடியோ போட்டாலும் அதை கொண்டாட்ற ஆள் இருப்பாங்க, அப்படி ஒரு ரசிகர். அவங்க ரெண்டுப்பேரையும் வச்சு நிகழ்ச்சி நடத்தலாம்,” என்று ஒருவர் யோசனை கூறினார்.

“எப்போதும் நாம தான யாரையாச்சும் ட்ரண்ட் ஆக்கி விடுவோம், அப்படியிருக்க ஏற்கனவே ட்ரண்ட்ல இருக்க நபர்னா அதால நம்ம சேனலுக்கு பெருசா என்ன பேர் கிடைக்கும்?” என்று ஒருவர் கேள்வியெழுப்ப,

“நாம நடத்த போற நிகழ்ச்சியில் நாம சேர்க்கும் சுவாரசியம் தான் நமக்கு நல்ல ரீச் கொடுக்கும், நான் சொல்ல வருவது என்னன்னா, நாம தேர்ந்தெடுக்கும் பாப்புலரான ஆள் ஒரு ஆண். அவரோட ரசிகை. இவங்களை வச்சு நாம நிகழ்ச்சி நடத்தலாம்,” என்றவர், அது எந்த மாதிரியான நிகழ்ச்சி என்பதையும் விரிவாக கூற,

அதைக்கேட்டு அங்கிருந்த முக்கால்வாசி பேருக்கு அந்த யோசனை திருப்தியாக இருந்தது. “இதில் நாம நம்ம நிகழ்ச்சியை சுவாரசியமா ஆக்க நாம செய்ய வேண்டியது ஒன்னு இருக்கு,” என்று அவர் அதைப்பற்றியும் விரிவாக கூற,

“அதனால நமக்கு ஏதாச்சும் பிரச்சனை ஆகிட்டா? இல்லை நாம நினைச்சது போல அமையாம போயிட்டா?” என்று ஒருவர் கேட்கவும்,

“கண்டிப்பா நாம நினைச்ச மாதிரி நடக்கும், அப்படி நடக்காத மாதிரி இருந்தா, அப்ப நாம என்ன செய்யணுமோ செய்துக்கலாம்,” என்று அவர் நம்பிக்கையாக கூறினார்.

“எனக்கும் இது ஓகேவா இருக்கும்னு தான் தோனுது.” என்று தலைமை பொறுப்பில் இருப்பவர் அதை ஆமோதித்தவர்,

“சரி இதுக்கு எந்த பாப்புலரா இருக்க நபரை தேர்ந்தெடுக்கலாம், இதில் ஏதாவது ஐடியா இருக்கா?” என்று அவர் கேட்க,

இந்த நிகழ்ச்சியை பற்றி கூறியவரே நான்கு நபர்களின் பெயர்களை கூறி, “இந்த 4 பேரில் யாரா இருந்தாலும் ஓகே. ஆனா இதில் சாய்ஸ்வரன் பெஸ்ட் சாய்ஸ்னு எனக்கு தோனுது.” என்று கூறினார்.

“சாய்ஸ்வரன் வேற ஒரு சேனலில் ஜூனியர் லெவல் பாட்டு போட்டியில் 10 நபர்களில் ஒருத்தனா வந்தவன் தானே, அவனையா இந்த நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுப்பது?” என்று சிலர் கேள்வியெழுப்பினர்.

“அதனால என்ன? அந்த நிகழ்ச்சி நடந்து வருஷங்கள் ஆகிடுச்சு, இப்போ அதை நிறைய பேர் பெருசா ஞாபகம் வச்சு பேச மாட்டாங்க, அதில்லாம ஒரு சேனலில் இருந்து இன்னொரு சேனலுக்கு மாறிப் போவதும் பெரிய விஷயமில்லையே, இப்போ யூட்யூப்ல சாய்ஸ்வரன் தான் ரொம்ப பாப்புலர். நிறைய கேர்ள்ஸ் அவனோட ஃபாலோவர்ஸா இருக்காங்க, அவன்தான் ரைட் சாய்ஸ்னு எனக்கு தோனுது. கூட மியூசிக் என்ற ஒருவிஷயம் சேருவதால், அது நிகழ்ச்சி இன்னும் சூப்பரா அமைய வாய்ப்பிருக்கு, நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க விருப்பம்?” என்று அவர் உறுதியாக அவரது விருப்பத்தை வெளிப்படுத்த,

“நீங்க சொல்றதும் சரிதான், அப்போ சாய்ஸ்வரனை பார்த்து உடனே பேசுங்க, சீக்கிரம் நிகழ்ச்சி ஆரம்பிக்கறதுக்கான வேலையை ஆரம்பிங்க,” என்று இறுதியான முடிவை வெளிப்படுத்திய பின் அங்கிருந்தவர்கள் கலைந்து போயினர்.

அனிதாவிடம் தன் யோசனையை கூறியதும் அடுத்து மகா உடனே அவளின் பெற்றோரிடம் பேசியவள், சாய்ஸ்வரனை தனக்கு பிடிக்கவில்லை என்று அவளது விருப்பத்தைக் கூற, மகேந்திரன், சந்தியாவிற்கு மகளின் இந்த முடிவு வருத்தத்தை கொடுத்தாலும், அவளை அவர்கள் கட்டாயப்படுத்தவில்லை.

அவள் எந்த வேலையாக இங்கு வந்தாளோ, அந்த வேலையை ஆரம்பிக்க போவதாகவும், அது வெற்றிக்கரமாக முடியும்வரை திருமண பேச்சை எடுக்கக் கூடாதெனவும் பெற்றோரிடம் கண்டிப்பாக கூறியவள், தன் வேலையாக சாய்ஸ்வரனை அணுக இருப்பதை இப்போதைக்கு அவர்களிடம் கூற வேண்டாமென்று முடிவெடுத்துக் கொண்டாள்.

அடுத்து ஒரு இரண்டு நாட்கள் கடந்த நிலையில் மகா அலுவலகத்திற்கு கிளம்பிக் கொண்டிருக்க, கொஞ்சம் பதட்டத்தோடு வந்த அனிதாவோ, “மகா இந்த நியூஸ் பார்த்தியா?” என்று தன் அலைபேசியை மகாவிடம் காட்ட, அவளும் ஒன்றும் புரியாமல் அதை வாங்கி படித்தவளுக்கும் அதிர்ச்சி தான்,

புகழ்பெற்ற தொலைக்காட்சி சேனல் தங்களது ரியாலிட்டி ஷோ ஒன்றிற்கு சாய்ஸ்வரனை அனுகியிருப்பதாக அந்த செய்தியில் போட்டிருக்க, “இப்படி ஒரு சான்ஸ் சாய்ஸ்வரனுக்கு கிடைச்சிருக்கு, அப்படியிருக்கும்போது சாய்ஸ்வரன் நமக்காக வேலை செய்ய ஒத்துப்பானா? கண்டிப்பா இப்படி ஒரு சான்ஸை தவற விட்டுட்டு நம்ம வேலையை செய்ய ஒத்துக்கிட்டா அவனோட கரியரே ஸ்பாயில் ஆக கூட வாய்ப்பிருக்கு, அதனால அவன் ஒத்துக்கவே மாட்டான். பேசாம நாம சாதாரண யாரையாச்சும் நம்ம வேலைக்கு யூஸ் செஞ்சுக்கறது பெட்டர்.” என்று அனிதா சொல்லவும்,

“இரு அனி, எதையும் முயற்சி செய்து பார்க்காம நாமளா ஒரு முடிவுக்கு வரக் கூடாது. இந்த ரியாலிட்டி ஷோக்கு சாய்ஸ்வரனை கேட்ருக்காங்கன்னு தானே போட்ருக்கு, அதுக்கு சாய்ஸ்வரன் ஒத்துக்கிட்டதா போடலையே, நாமளும் முயற்சி செஞ்சு பார்ப்போமே, ஒருவேளை சாய்ஸ்வரன் நம்ம வேலைக்காக ஒத்துக்கிட்டா?” என்று மகா கேட்டாள்.

“ம்ம் எனக்கு நம்பிக்கையே இல்லை. ஒருவேளை அவனை கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்டு அப்புறம் இதுப்பத்தி சாய்ஸ்வரனிடம் நீ பேசியிருக்கலாம், அதுக்காச்சும் கொஞ்சம் பலன் இருக்கும், ஆனா யாரோ தெரியாத ஒரு ஆளா நாம அவனைப்பார்த்து இதைப்பத்தி பேசறதே வேஸ்ட்னு தான் தோனுது.” என்று அனிதா கூறவும்,

நான் முதலில் சொன்னது தான், முதலில் முயற்சி செய்து பார்க்காமலே இப்படி நம்பிக்கையை தளர விடக் கூடாது. எனக்கென்னமோ சாய்ஸ்வரனை வச்சு நம்ம வேலையை முடிக்க முடியும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, உன்னோட வேலை என்னன்னா நம்ம டீம்க்கிட்ட சொல்லி சாய்ஸ்வரனோட பர்சனல் நம்பர் வாங்கு, நானே அவனிடம் பேசறேன்.” என்று மகா கூறிவிட்டு அலுவலகம் கிளம்பினாள்.

வானம் தொலைக்காட்சியிலிருந்து சாய்ஸ்வரனை அழைத்ததை இன்னும் கூட அவனாலேயே நம்ப முடியவில்லை. தன்னை வைத்து ஒரு ரியாலிட்டி ஷோ நடத்துவதாக அவர்கள் கூறியது அவனுக்கு அப்போதைக்கு உண்மையிலேயே இன்ப அதிர்ச்சியாக இருந்தது. சிறு வயதிலேயே பாட்டு போட்டி மூலமாக ஊடகங்களில் அவன் தெரிந்தவனாக மாறிவிட்டாலும், அவன் நினைத்தது போல், ஒரு இசையமைப்பளாரக மாறும் அவனது லட்சியத்தை அவன் அடைய மிகவுமே போராட வேண்டியுள்ளது.

அப்படியிருக்க இப்போதையை இந்த ரியாலிட்டி ஷோ அவனுக்கு ஒரு பெரிய வாய்ப்பு தான், ஆனால் அந்த நிகழ்ச்சியின் கான்சப்ட் தான் அவனுக்கு திருப்தியாக இல்லை. இப்படி ஒரு நிகழ்ச்சி மக்களிடம் அவனுக்கு எப்படியான பெயரை வாங்கித் தருமோ தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக இன்னும் அனைவருக்கும் தெரிந்தவன் ஆகலாம், தனது இசையை அனைவரும் ரசிக்கும் ஒரு வாய்ப்பு கண்டிப்பாக இந்த நிகழ்ச்சி மூலம் அவனுக்கு கிடைக்கும். கண்டிப்பாக இந்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்றே அவன் நினைத்தான்.

சாய்ஸ்வரனின் அலைபேசி எண்ணை அனிதா அவர்களின் குழு மூலமாக கண்டுபிடித்து அதை மகாவிடம் கொடுக்கவும், அவள் அந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ள, “ஹலோ,” என்று சாய்ஸ்வரனின் இனிமையான குரல் கேட்டது.

அவளோ தன் பேரைச் சொல்லி அவனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவள், “ஒரு முக்கியமான விஷயமா உங்களை நேரில் பார்த்து பேசணும், முடியுமா?” என்று கேட்டாள்.

“எதுக்காகன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று அவன் பதில் கேள்விக் கேட்க,

“அது நேரில் பார்த்து தான் சொல்ல முடியும் ப்ளீஸ்,” என்று அவள் கூறவும்,

“ஏதாச்சும் பர்சனல்?” என்று அவன் கேட்டான்.

“இல்லை அஃபிஷியலா?” என்ற அவளது பதிலுக்கு சில நொடிகள் அமைதியாக இருந்தவன்,

“நாளைக்கு டிவி சேனலுக்கு ஒரு மீட்டீங்காக போக வேண்டியிருக்கு, அதனால அதுக்கு மறுநாள் சந்திப்போமா?” என்று அவன் கேட்க,

‘அய்யோ ஒருவேளை அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்துக விருப்பம்னு சொல்லத்தான் அந்த மீட்டிங்கோ? அவன் அதற்கு ஒத்துக் கொள்வதற்குள் அவனிடம் பேசிட வேண்டுமே’ என்று நினைத்தவள்,

“ப்ளீஸ் நான் பேச வேண்டியது ரொம்ப முக்கியம். அதனால இன்னைக்கே உங்களை சந்திக்க முடியுமா?” என்று அவள் கேட்கவும்,

மீண்டும் சில நொடிகள் அமைதியாக இருந்தவன், “சரி நான் வீட்டில் தான் இருப்பேன். பேசலாம் வாங்க,” என்று அழைத்தான்.

அன்று மாலையே மகா அவனை சந்திக்கச் சென்றாள். சாய்ஸ்வரனோ அவளை புன்னகையோடு வரவேற்க, அந்த புன்னகையை மகாவும் சில நொடிகள் மெய்மறந்து பார்த்தப்படி இருந்தாள்.

“உட்காருங்க மகா, என்னை சந்திச்சு ஏதோ முக்கியமா பேசணும்னு சொன்னீங்க? என்ன விஷயம்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று அவன் கேட்க,

“அது என்னன்னா?” என்று அவள் பேச ஆரம்பிக்கவும்,

“வீடு வரைக்கும் வந்திருக்கீங்க, நீங்க முதலில் ஏதாவது சாப்பிடுங்க, அப்புறம் பேசலாம்,” என்று அவன் கூறினான்.

பின் அவளுக்கு குடிக்க குளிர்பானம் கொடுக்கப்பட, அதை வாங்கி குடித்தவள், பின் தன் வேலைப்பற்றி விரிவாக அவனிடம் கூற, அவனும் அதை முழுதாக உள்வாங்கிக் கொண்டவன்,

“எப்படி நான் இதுக்கு சம்மதிப்பேன்னு நீங்க நினைச்சீங்க? இதனால எனக்கு என்ன நல்லது நடக்கும்னு நினைக்கறீங்க? இப்போ எனக்கு ஒரு டிவி சேனலிலிருந்து எவ்வளவு பெரிய ஆஃபர் வந்திருக்கு தெரியுமா? அதை நான் ஒத்துக்கிட்டா அதனால என்னோட லெவலே மாறிடும், அப்படியிருக்க, இந்தமாதிரி நேரத்தில் நீங்க சொல்றதை நான் எப்படி செய்ய முடியும்?” என்று கேட்டான்.

“நீங்க மனசு வச்சா முடியும்? உங்களுக்கு வந்திருப்பது நல்ல வாய்ப்பு தான் நான் ஒத்துக்கிறேன். அதனால நீங்க இன்னும் பிரபலம் ஆவீங்க அவ்வளவு தான், குறிப்பா அந்த சேனலோட டி. ஆர். பி ரேட் ஏறும், மத்தப்படி அதனால பெருசா என்ன நடக்கும்னு கண்டிப்பா எனக்கு தெரியல, அவங்க டி. ஆர்.பி ரேட் ஏத்தறதுக்காக உங்களை பயன்படுத்திக்கிறாங்க அவ்வளவு தான்,

ஆனா நான் சொன்ன வேலையில் உங்களுக்கு பெருசா ஒன்னும் லாபம் கிடைக்காது தான், ஆனா ஒரு நல்ல விஷயம் செய்த திருப்தி கிடைக்குமில்ல,” என்று அவள் சொல்லவும்,

“இருக்கலாம், ஆனா என்னோட லட்சியம் ஒரு மியூசிக் டைரக்டர் ஆகறது தான், இப்போ எனக்கு கிடைச்சிருக்க வாய்ப்பு என்னோட லட்சியத்தில் முன்னேற எனக்கு உபயோகமா இருக்கும், ஆனா நீங்க சொல்றதை செய்யும்போது என்னோட லட்சியத்தில் என்னால எப்படி வெற்றியடைய முடியும்?” என்று அவன் கேட்டான்.

“நீங்க வசதியானவர் தானே, நீங்க நினைச்சா சொந்தமா ஒரு படம் எடுத்து அதுக்கு நீங்களே கூட மியூசிக் போடலாமே?” அவள் சொல்லவும்,

“நீங்க சொல்றது போல நான் நினைச்சா ஒரு படம் என்ன? 4 படத்துக்கு கூட மியூசிக் போடலாம், திறமைக்கு பலன் கிடைச்சது ஒரு காலம். இப்போ திறமையை விட நாம முன்னேற இப்போ ஒரு நல்ல ஃப்ளாட்ஃபார்ம் கிடைப்பது தான் பெரிய விஷயம். என்னத்தான் என்னோட யூட்யூப் சேனல் மூலம் ஓரளவுக்கு நான் எல்லோருக்கும் தெரிஞ்ச ஆளா இருந்தாலும், இப்போ எனக்கு கிடைச்சிருக்கறது ரொம்பவே பெரிய வாய்ப்பு. அப்படியிருக்க அதை எப்படி நான் விட்டுக் கொடுப்பேன்னு நீங்க எதிர்பார்க்கறீங்க?” என்று அவன் பதில் கேள்விக் கேட்டான்.

அதற்கு மகாவிடம் பதில் இல்லாததால் அவள் மௌனமாக இருக்க, “நீங்க செய்ய நினைக்கறது நல்ல விஷயம் தான், அதை நான் இல்லைன்னு சொல்லல, ஆனா என்னால தான் அதுக்கு எந்தவிதத்திலும் உதவ முடியாது. நீங்க இதுக்கு வேற ஒரு ஆளை தேர்ந்தெடுங்க,” என்று அவன் கூறவும்,

“இப்படி அவசரமா பதில் சொல்லாம கொஞ்சம் நிதானாமா யோசிச்சு பாருங்க, நான் உங்க மியூசிக் ஆல்பமெல்லாம் பார்த்திருக்கேன். சாதாரணமா காதல் என்ற ஒரு விஷயத்தை வச்சு மட்டுமில்லாம அதை தாண்டி நீங்க வேற மாதிரியும் சிந்திக்கறீங்க, அதுதான் உங்களை வச்சு இதை செய்யணும்னு என்க்கு தோனுச்சு, ரொம்ப நம்பிக்கையோடு வந்தேன். அதுக்காகவது யோசிச்சு உங்க பதிலை சொல்லுங்க, நான் உங்க பதிலுக்காக காத்துக்கிட்டு இருப்பேன்.” என்று சொல்லிவிட்டு அவள் கிளம்பி விட, சாய்ஸ்வரனோ போகும் அவளை பார்த்தப்படி நின்றிருந்தான்.

தொடர்ந்து இசைக்கும்..