VMIA 15

இசை 15
சாய்ஸ்வரன் அவர்களின் வலைத் தொடரில் நடிக்க சம்மதம் சொன்னதுமே உடனே படப்பிடிப்புக்கான வேலைகளை துரிதமாக ஆரம்பித்தவர்கள், படப்பிடிப்பு ஆரம்பிக்கும் தேதியையும் சொல்லி அவனை வர சொல்லிவிட்டார்கள். அவனும் சொன்ன நேரத்திற்கு வந்துவிட்டான்.
ஆனால் அந்த கதையில் நாயகியாக நடிக்கவிருப்பவளோ இன்னமும் வந்திருக்கவில்லை. “என்ன அனிதா, சாய்ஸ்வரனே சொன்ன நேரத்துக்கு வந்துட்டாரு, இந்த பொண்ணு ஏன் இன்னும் வரல?” என்று சப்தமி கேட்க,
“தெரியல மகா, நான் கரெக்ட் டைம்க்கு இங்க இருப்பேன்ன்னு நம்ம டீமிடம் சொல்லியிருக்கா, ஆனா ஏன் இன்னும் வரலன்னு தெரியலையே?” என்று அனிதா பதில் சொல்லிக் கொண்டிருக்கும்போதே,
அந்த நாயகியாக நடிப்பவளிடம் பேசியிருந்த அவர்களின் குழுவை சேர்ந்தவன் அவர்கள் அருகில் வந்து, “மகா, நம்ம சீரிஸ்ல ஹீரோயினா நடிக்க புக் செய்திருந்த பொண்ணு திடீர்னு வரமாட்டேன்னு சொல்றா,” என்று கூறினான்.
“என்னடா சொல்ற? ஏன் என்னவாம்? நாம கரெக்டா பேமன்ட் கொடுத்திட்றதா தானே சொல்லியிருந்தோம், எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டவ இப்போ ஏன் வரமாட்டேன்னு சொல்றா?” என்று அனிதா கேட்டாள்.
“அந்த பொண்ணுக்கு ஸ்கை மூன் டிவியில் மெகா சீரியலில் நடிக்க ஆஃபர் வந்திருக்காம், அதனால இதுக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டா, அதில்லாம நம்ம வெப் சீரிஸ் வேற அவங்களுக்கு எதிரான கான்சப்ட். இதில் நடிச்சது தெரிஞ்சா, அவளுக்கு அந்த டிவியோட சீரியல் வாய்ப்பு போயிடுமோன்னு பயப்பட்றா போல,” என்று அவன் கூறவும், மகா தலையில் கை வைத்தப்படி அமர்ந்துவிட்டாள்.
“எல்லாம் கரெக்டா போயிட்டிருக்குன்னு சந்தோஷபட்டா, இது என்ன அனி புதுசா? அந்த பொண்ணு ஏன் அப்படி செய்தா?” என்று அவள் அனிதாவிடம் சொல்லி வருத்தப்பட,
“இப்படி சொதப்புவான்னு யாரு கண்டா மகா, விடு இவளை விட வேற பெஸ்ட்டான ஆளா கூட்டிட்டு வரலாம்,” என்று அனிதா அவளை சமாதானப்படுத்த முயற்சிக்கவும்,
“எப்போ அனி, ஷூட்டிங் இன்னைக்கு ஆரம்பிக்க ரெடியா இருக்கோம், இந்த டிவி சேனல் செட்டை ரெண்டு நாளைக்கு வாடகைக்கு எடுத்திருக்கோம், அதுக்குள்ள சில சீன்ஸை எடுத்து முடிக்கணும், இல்லன்னா இது தண்ட செலவு. அதில்லாம இப்போ போய் புதுசா யாரை தேடுவது. அதிலும் அந்த பொண்ணு காலேஜ்ல படிக்கிற கேரக்டருக்கு சரியா பொருந்தியிருந்தா, இப்போ அப்படி ஒரு ஆளை எங்க போய் தேட,
சாய்ஸ்வரனை வேற இன்னைக்கு ஷூட்டிங்னு சொல்லி இங்க உட்கார வச்சிருக்கோம், நமக்காக அந்த ரியாலிட்டி ஷோவை வேண்டாம்னு சொல்லியிருக்காரு, கூட மியூஸிக் ஆல்பம் வேலையெல்லாம் அவருக்கு இருக்கும், இதில் நம்ம சிட்டுவேஷனை அவர்க்கிட்ட எப்படி சொல்றது? நான் முன்ன சொன்னது போல எனக்கு இதெல்லாம் செட் ஆகாது போல, நான்தான் இதை செய்தே தீருவேன்னு பிடிவாதமா இருக்கேன்.” என்று சொல்லி அவள் மீண்டும் தலையில கை வைக்க, அவளுக்கு என்ன சமாதானம் சொல்வது என்று அனிதாவிற்கு புரியவில்லை.
சிறிது நேரத்தில் படப்பிடிப்பு ஆரம்பித்து விடுவதாக சொல்லி காத்திருக்க சொல்லிவிட்டு சென்றவர்கள் இவ்வளவு நேரம் என்ன செய்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தேடி வந்த சாய்ஸ்வரன், தலையில் கை வைத்தப்படி அமர்ந்திருந்த மகாசப்தமியை கண்டவன், “என்னாச்சு?” என்று கேட்டப்படி அவர்கள் அருகில் வர, சப்தமிக்கோ அவனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
அனிதா தான் தயங்கி தயங்கி அவனிடம் விஷயத்தை கூறினாள். அதற்கு அவனோ, “இப்போ என்ன செய்யலாம்னு இருக்கீங்க?” என்று அவர்களிடம் கேட்க,
“வேற யாரையாச்சும் புதுசா தான் தேடி கண்டுபிடிக்கணும், ஆனா அதுக்கான நேரம் ரொம்பவே குறைவு தான், பொறுமையா தேடிக்கலாம்னு இருந்தோம்னா, இன்னைக்கு ஷூட்டிங்க்கான செலவுகள் எல்லாம் தேவையில்லாத செலவுகள் தான், இதில்லாம உங்களை வர வச்சு உங்களுக்கும் கஷ்டத்தை கொடுக்கிறோம்,” என்று அனிதாவே பதில் கூறினாள்.
“ஓ,” என்று அனிதா சொன்னதை கேட்டுக் கொண்டவன்,
“இதுக்கு வேணும்னா நான் வேற ஒரு சொல்யூஷன் சொல்லவா?” என்று அவர்களிடம் கேட்க,
“என்னது அது?” என்று சப்தமி இப்போது அவனிடம் கேட்டாள்.
“பேசாம நீங்களே அந்த கேரக்டர்ல நடிச்சிடுங்களேன் மகா,” என்று அவன் கூறவும்,
“வாட், இது ஜோக்கடிக்கும் நேரமா?” என்று அவள் அவனிடம் கோபமாக கூறினாள்.
“ஜோக் இல்லை சீரியஸா தான் சொல்லிட்டு இருக்கேன். இது உங்க கதை தானே, அதனால கண்டிப்பா உங்களாலேயே நல்லா நடிக்க முடியும், உங்களுக்கு என்ன உங்களை முதலில் பார்க்கிறவங்க, நீங்க காலேஜ் படிக்கிற பொண்ணுன்னு தான் சொல்வாங்க, அதனால இந்த கேரக்டருக்கு சரியா பொருந்தி போவீங்க,” என்று அவன் கூறவும்,
“ஏதாச்சும் சாத்தியமா இருப்பதா பேசுங்க, உங்களுக்கு மியூஸிக் ஆல்பத்தில் நடிச்சு எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு, ஆனா எனக்கு அப்படியா? நான் இதுவரை ஸ்கூல், காலேஜ்ல நடத்தும் ட்ராமால கூட நடிச்சதில்ல, அப்புறம் எப்படி?” என்று அவள் கேட்டாள்.
“இந்த வெப் சீரிஸ் உங்களுக்கு முக்கியம் இல்லையா? இதில் நடிக்கறவங்க எப்படி நடிக்கணும்னு நீங்க எதிர்பார்ப்பீங்க இல்லையா? அப்போ அந்த எதிர்பார்ப்பை உங்களாலேயே சரியா செய்ய முடியும், நானும் மியூஸிக் ஆல்பம் செய்திருக்கேன். முதலில் அதில் நானே எப்படி நடிக்கிறதுன்னு யோசிச்சு, தயங்கி தயங்கி தான் நடிச்சேன். ஆனா நடிச்சு முடிச்சு அந்த வீடியோ போட்டு பார்த்த போது ரொம்ப திருப்தியா இருந்துச்சு, அதை வச்சு தான் சொல்றேன்.” என்று அவன் சொன்னபோது கூட, அவளுக்கு அது சரிவரும் என்று தோன்றவில்லை.
“எனக்கென்னமோ சாய்ஸ்வரன் சொல்றது சரின்னு தான் தோனுது மகா, பேசாம நீயே நடியேன்.” என்று அனிதாவும் அவனது யோசனையை ஆமோதிப்பது போல் கூற,
“அப்போ நீ இந்த கேரக்டர்ல நடிக்கலாமே?” என்று சப்தமி அவளிடம் கேட்டாள்.
“அதான் அந்த ஃப்ரண்ட் கேரக்டர் நான் நடிக்கறதா ஏற்கனவே ஒத்துக்கிட்டேனே, அப்புறம் அதுக்கு ஒரு ஆள் தேடணும் வேற, அதனால நீயே இந்த கேரக்டர்ல நடிப்பது தான் சரி.” என்று அவர்கள் இருவரும் பேசி பேசி சப்தமியை சம்மதிக்க வைத்தனர்.
அடுத்து அவள் தான் நடிக்க வேண்டுமென்று முடிவு செய்தபின் சொல்ல வேண்டிய வசனங்களை சப்தமி அவனுக்கு எழுதிக் கொடுக்க, “இன்னொரு சஜக்ஷன் சொல்லலாமா?” என்று சாய்ஸ்வரன் கேட்கவும்,
அவளோ என்ன என்பது போல் அவனை கேள்வியாக பார்க்க, “நீங்க தானே இந்த கேரக்டரில் நடிக்கிறீங்க, அப்போ பேசாம இந்த கேரக்டருக்கு சப்தமின்னு உங்க பேரையே வச்சிடலாமே, சாய்ஸ்வரன் சப்தமி சொல்லவே அழகா இல்ல,” என்று அவன் கேட்டான்.
“ஆமாம் ஆமாம்,” என்று அனிதாவும் கூறினாள்.
அவளை கோபமாக முறைத்த சப்தமி, “இங்கப்பாருங்க சாய்ஸ்வரன், உங்களை நாங்க நடிக்க கூப்பிட்டோம் என்பதற்காக எல்லாத்திலும் நீங்க மூக்கை நுழைப்பது சரியில்ல,” என்று அவனிடமும் கோபமாக பேசினாள்.
ஆனால் அதற்கு அவன் பதிலுக்கு கோபமாகவெல்லாம் பேசவில்லை. “ஏன் என்னோட சஜக்ஷன் தப்பா ஒன்னுமில்லையே, பாருங்க இந்த கேரக்டருக்காக ரெடியாகி வந்த நீங்க எவ்வளவு பொருந்தியிருக்கீங்க பாருங்க, அதேபோல பேர் அழகா மேட்ச்சா வச்சா அதுவும் நம்ம வெப் சீரிஸ் நல்லா ரீச் ஆகும்,” என்று சொல்லியவன்,
“நான் சொல்றதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க கைஸ்.” என்று மற்றவர்களிடமும் ஆலோசனை கேட்க, அவர்களும் அதை ஆமோதித்தனர். அதன்பின் சப்தமியால் அதை மறுக்க முடியவில்லை.
இப்படியாக சப்தமியை அந்த காதாப்பாத்திரத்தில் நடிக்கவும் வைத்து அவளின் பெயரையே அந்த காதாப்பாத்திரத்திற்கு அவன் வைக்கவும் செய்தான்.
அதில்லாமல் மகா என்று அழைத்துக் கொண்டிருந்தவன், சப்தமி என்று அழைக்க ஆரம்பித்தான். கேட்டால் மகாவை விட எனக்கு சப்தமி தான் பிடிச்சிருக்கு என்றான். பன்மையில் அழைத்து பேசிக் கொண்டிருந்தவன், ஒருமைக்கு தாவினான். வாங்க போங்கன்னு பேசுவது ரொம்ப தள்ளிப் போறது போல இருக்கு என்றான்.
தொலைக்காட்சி சேனலில் இருவரும் சந்திக்கும் முதல் காட்சியை படம்பிடிக்கும்போது சப்தமி கதாப்பாத்திரம் வியப்பாவது போல் பாட கூறினால் அவன் விழி மூடி யோசித்தால் பாட்டை பாடுவான் என்று அவளே எதிர்பார்க்கவில்லை. அருகிலிருந்த அனிதா கூட, “இது எந்த சப்தமிக்கு பாடும் பாட்டுன்னு தெரியலையே,” என்று கேலியாக சப்தமியின் காதில் கூற,
“இப்போ இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியமா?” என்று சப்தமி அவளிடம் கோபமாக கேட்டாள்.
மறுநாள் கோவிலில் படப்பிடிப்பு முடிந்து காருக்கு காத்திருந்த வேளையில் அவளிடம் வந்து அவன் பேசும்போது, எனக்காக ஏதாவது பாட்டு பாடச் சொன்னா ஏன் அந்த பாட்டை பாடினீங்கன்னு கேட்டால், அவன் ஏதேதோ பேசியவன், மீண்டும் அவளைப் பார்த்து பாட்டு பாட அவர்கள் குழுவினர் பார்த்து சிரித்துவிட்டு போனது இல்லாமல், இந்த வெப் சீரீஸ் எடுத்து முடியறதுக்குள் இது வேற ரூட்ல போகும் போல என்று மற்றவர்களிடம் சொல்லியிருக்கின்றனர்.
மறுநாள் இவளை அலைபேசியில் அழைத்திருந்தான். அவனது தனிப்பட்ட எண்ணை கண்டுபிடித்து இவள் பேசியிருக்கிறாளே தவிர, இவள் அவனிடம் அவளது தனிப்பட்ட எண்ணிலிருந்து பேசியதில்லை.
ஏற்கனவே அவன் மீது ஒரு ஈர்ப்பு அவளுக்கு உண்டாகியிருக்க, அவன் வேறு அவளிடம் உரிமையாய் பேசவும் பழகவும் செய்யவே அதை நினைத்து உறக்கம் வராமல் புரண்டு படுத்தப்படி இருந்தாள். அப்போது அவளின் தனிப்பட்ட அலைபேசியில் எண்ணிலிருந்து அழைப்பு வரவும், ஸ்வரன் எண் மாதிரி இருக்கிறதே, அவனுக்கு இந்த எண் தெரியாதே என்று குழம்பியப்படியே அழைப்பை ஏற்று பேசியவளுக்கு, அவன் தான் தெரிந்தது வியப்பாகி போனாள். அதை அவனை அழைத்ததிலேயே வெளிப்படுத்தவும் செய்தாள். அதன்பிறகு அவன் பேசியது அவன் பாடவும் அதை கேட்டப்படியே உறங்கியது எல்லாம் இனிமையான தருணங்கள் என்று தான் சொல்ல வேண்டும்,
அடுத்து ஆதரவற்றோர் இல்லத்திலிருந்து அன்று அவனே வீட்டிற்கு அழைத்து சென்றபோது பேபி என்று அழைத்து பேசும்போது அவளுக்கும் அது பிடித்திருந்ததால் அப்படி அழைக்க வேண்டாமென கண்டிப்போடு அவளால் சொல்ல முடியவில்லை. கடற்கரையில் பேசும்போது கூட அவனது உரிமையான பேச்சில் அவள் உணர்ந்தது என்ன? அது காதல் என்று புரிந்து கொள்ள முடியாத அளவு இவள் ஒன்றும் மக்கு இல்லை.
அவனுக்கு மட்டுமா? அன்று அவர்கள் வீட்டில் படப்பிடிப்பிற்கு சென்றபோது அவனது அன்னையும் தங்கையும் இவளை விழுந்து விழுந்து கவனித்ததும், புடவையும் தாம்பூலமும் கொடுத்து அனுப்பும்போதே அவர்களுக்கும் இவள் அந்த வீட்டு மருமகளாக வர வேண்டுமென்ற எண்ணம் இருப்பது அவளுக்கு புரியாதா என்ன?
அதை அனைத்தையும் அவள் வெளிப்படையாக தெரிந்து கொள்ளாதது போல் இருக்க தான் முயற்சிக்கிறாள். ஆனாலும் அவன் பக்கம் சாயும் மனதை கட்டுப்படுத்த முடியவில்லையே, இதில் இவர்களுக்குள் நடந்ததை எல்லாம் கொஞ்சம் மாற்றியமைத்து அவர்களது வலைத் தொடரின் கதாப்பத்திரத்திற்கு அந்த காட்சிகளை சேர்த்து விட்டாள். அதைப்பற்றி சாய்ஸ்வரன் ஏதாவது கேட்பான் என்று அவள் எதிர்பார்த்தாள். ஆனால் அவன் அதுபற்றி எதுவும் கேட்கவில்லை. அது ஒருவகையில் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
எப்படியும் இந்த வலைத் தொடர் முடிந்ததும் அவன் இவளிடம் தன் காதலை சொல்லி திருமணம் செய்துக் கொள்ள சொல்லி கேட்க போகிறான். அது நன்றாகவே இவளுக்கு தெரிந்துவிட்டது. ஆனால் அதற்கு இவள் என்ன பதில் சொல்ல போகிறாள்? அதை நினைத்து அவளுக்கே குழப்பமாக இருந்தது.
இப்படியே சிந்தனையிலேயே இரண்டு நாட்கள் கழிந்து விட்டது. அன்று ஒரு முக்கியமான வேலையாக சாய்ஸ்வரனும் கிளம்பிவிட, அதன்பின் அவனை அவள் பார்க்கவில்லை. சொல்லபோனால் அவனை வேண்டுமென்றே தவிர்க்கிறாள் என்று தான் சொல்ல வேண்டும்,
ஞாயிறு இருவருக்குமே அலுவலகம் விடுமுறை என்பதால், அனிதாவும் சப்தமியும் அவர்களின் வலைத் தொடரை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தனர்.
“நம்ம சீரிஸ்ல சாய்ஸ்வரன் சப்தமியை நாம சேர்த்து வைக்கலயாம், அதைப்பத்தி தான் பெருசா பேசறாங்க, மத்தப்படி நம்ம கதையோட கான்சப்ட் போய் நிறைய பேரிடம் ரீச் ஆச்சான்னு கேட்டா, ம்ம் பெருசா அப்படி எதுவுமில்ல, ஆனா சில பேர் சரியா இது ஸ்கை மூன் சேனலை தாக்கி எடுக்கப்பட்டிருக்கு, சந்தனாக்கு கூட இப்படி தானே நடந்துச்சு, ஆனா பாவம் அவ இறந்துட்டா, இந்த சீரிஸ்ல நல்ல முடிவா காட்டியிருக்காங்க, அப்படின்னு பேசிக்கிறாங்க, அதில்லாம முன்ன இதுபோல நடந்த சம்பவங்களை கூட இப்போ ஞாபகப்படுத்தியும் பேசறாங்க தான், ஆனா அதெல்லாம் கொஞ்சம் தான்,” என்று அனிதா கவலையோடு கூற,
“இதெல்லாம் எதிர்பார்த்தது தானே அனி, நல்ல விஷயம் கொஞ்சம் மெதுவா தான் நிறைய பேரை போய் சேரும், நாம சொன்னதுமே எல்லாம் அதை புரிஞ்சிக்கணும்னு எதிர்பார்ப்பது நம்ம முட்டாள்தனம், இந்த அவசர உலகத்தில் நிறைய பேருக்கு நின்னு பேசவே நேரம் இருக்க மாட்டேங்குது. அப்புறம் எப்படி இந்த கான்சப்ட்டை எல்லாம் சரியா புரிஞ்சிப்பாங்கன்னு எதிர்பார்க்க முடியும்? கொஞ்ச பேருக்காவது நம்ம மெசெஜ் போய் சேருதா அதுதான் நமக்கு வேணும்,” என்று சப்தமி அதற்கு பதில் கூறினாள்.
“ம்ம் நீ சொல்றதும் சரிதான் மகா, ஆனா ஒன்னு நம்ம வெப் சீரிஸ்ல வந்தது போல இப்போதும் நீயும் ஸ்வரனும் செமயா ட்ரண்ட் ஆகிட்டீங்க, நீங்க தான் பக்கா ஜோடியாம், உங்களுக்குள்ள செம கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுதாம், சீரிஸ்ல தான் நீங்க ஜோடி சேரலையாம், அதனால நீங்க நிஜத்தில் ஜோடி சேரணுமாம், இல்ல அட்லீஸ்ட் நீங்க சேருவது போல ஏதாச்சும் இன்னொரு சீரிஸ்ல நடிக்கணுமாம், இதுதான் இப்போதைக்கு நிறைய பேர் பேச்சு, உங்களோட வீடியோஸ் மீம்ஸ் தான் நிறைய ட்ரண்ட் ஆகிட்டு இருக்கு,” என்று அனிதா பேசிக் கொண்டிருக்க, சப்தமியோ அதற்கு அமைதி காத்தாள்.
“என்ன மகா, என்ன எதுவும் சொல்ல மாட்டேங்குற, இதைப்பத்தி நீ என்ன நினைக்கிற? இது கண்டிப்பா உனக்கு சந்தோஷமா தான் இருக்குமில்லையா? ஏன்னா சாய்ஸ்வரனை உனக்கு பிடிக்கும் தானே, இல்லைன்னு மட்டும் சொல்லிடாத, நம்ம சீரிஸ் ஷூட்டிங் முழுவதும் உங்களுக்குள்ள காதல் கன்ணாமூச்சி ஆடினதை நாங்க தான் பார்த்துட்டு இருந்தோமே,” என்று அனிதா சொல்ல,
“இருக்கலாம் அதுக்கு இப்போ என்ன செய்ய சொல்ற?” என்று சப்தமி கேட்டாள்.
“என்ன இப்படி கேட்கிற? சீரிஸும் முடிஞ்சு போச்சு, இதுக்கு மேல நீங்க முன்ன மாதிரி பார்த்துக்க முடியாது வேற, அதனால அடுத்து என்ன பிளான்.” என்று அனிதா கேட்க,
“நம்ம சீரிஸோட கான்சப்ட் என்ன? இப்படி ஒன்னா வேலை பார்க்கும்போது ஒருத்தர் மேல ஒருத்தருக்கு ஈர்ப்பு வருவது நடக்க கூடியது தான், இப்போ எல்லாம் இதை ட்ரண்ட் ஆக்கறாங்க என்பதற்காக கல்யாணம் செய்துக்க முடியுமா? அப்படி கல்யாணம் செய்துக்கிட்டா அப்புறம் இப்படி ஒரு வெப் சீரிஸ் எடுத்ததுக்கு அர்த்தம் இல்லாமலே போயிடுமே,” என்று சப்தமி கூறினாள்.
‘இவள் என்ன இப்படி பேசுகிறாள்?’ என்பது போல் அனிதா பார்த்து கொண்டிருக்கும்போதே,
“ஏதாச்சும் சீரியஸா பேசிட்டு இருக்கீங்களா? நான் டிஸ்டர்ப் செய்துட்டேனா?” என்று கேட்டப்படி சாய்ஸ்வரன் அங்கு வந்தான்.
“வாங்க ஸ்வரன், சும்மா நீங்களும் மகாவும் தான் இப்போ சோஷியல் மீடியால ட்ரண்ட் ஆகிட்டிருக்க ஜோடி. அதைப்பத்தி தான் பேசிட்டு இருந்தோம்,” என்று அனிதா சொல்ல,
“ம்ம் நானும் பார்த்தேன். பார்க்கிறவங்களுக்கு எங்க ஜோடி சூப்பர்னு தெரியுது. ஆனா தெரிய வேண்டியவங்களுக்கு தெரியலையே,” என்று சொல்லியவன், சப்தமியை பார்க்க, அவளோ அமைதியாக நின்றிருந்தாள்.
“சரி நீங்க பேசிட்டு இருங்க, எனக்கு வெளிய ஒரு முக்கியமான வேலை இருக்கு, போயிட்டு வந்துட்றேன்.” என்று சொல்லி அனிதா அங்கிருந்து கிளம்பினாள்.
அவள் சென்றதும், “திரும்ப உங்களுக்கு நன்றி சொல்ல நான் கடமைப்படிருக்கேன் ஸ்வரன், நாங்க கேட்டதுக்காக நீங்க கலந்துக்க இருந்த ரியாலிட்டி ஷோவை கூட விட்டுட்டு இந்த சீரிஸ்ல நடிச்சு கொடுத்தீங்க, உங்க உதவியை எப்போதும் மறக்க மாட்டேன்.” என்று சப்தமி கூற,
“நான் நன்றியை எதிர்பார்த்து இதெல்லாம் செய்யல சப்தமி.” என்று அவன் பதில் கூறினான்.
“அப்புறம் இன்னொரு விஷயம், நம்ம சீரிஸ்ல இன்னொரு ஸ்பெஷல் சொல்லணும்னா அது உங்க பின்னணி இசை தான், ரொம்ப நல்லா போட்டிருந்தீங்க, அதிலும் கிளைமாக்ஸ்ல அந்த பின்னணி இசை ரொம்ப நல்லா இருந்துச்சு,” என்று அவள் சொல்ல,
“இதுக்கு நான்தான் உனக்கு நன்றி சொல்லணும் சப்தமி. வெறும் நடிக்க மட்டும் கூப்பிட்டிட்டு அப்புறம் பின்னணி இசையும் நான்தான் செய்யணும்னு எனக்கு ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்ததுக்கு ரொம்ப தேங்கஸ்,” என்றான்.
அதன்பின் என்ன பேசுவதென்று தெரியாமல் இருவருமே சில நொடிகள் அமைதியாக இருக்க, “என்னமோ என்னை நீ அவாய்ட் செய்றது போல தெரியுது சப்தமி. நான் வருவதற்கு முன்ன நீ அனிதாவிடம் பேசிட்டு இருந்ததை நான் கேட்டேன்.
உன் ஷோவோட கான்சப்ட் வேற, ஆனா ஒரே இடத்தில் வேலை பார்க்கறவங்க ஒரு புரிதலில் காதலிச்சு கல்யாணம் செய்றது வேற, ஆனா இது ரெண்டுமே நமக்கு பொருத்தி பார்க்க கூடாது. வெப் சீரிஸ் விஷயமா நீ முதலில் என்னை பார்க்க வந்தியே அதுக்கு முன்னமே எனக்கு உன்னை தெரியும் சப்தமி.” என்று அவன் கூற,
“எனக்கு தெரியும், எனக்கு எங்க வீட்டில் உங்களை வரனா பார்த்தது உங்களுக்கு தெரியும் தானே,” என்று அவள் கேட்க,
“இல்லை அதுக்கு முன்னமே நான்தான் உன்னை முதலில் பார்த்து பிடிச்சு அப்புறம் தான் என்னோட பயோடேட்டாவை உனக்கு அனுப்பினதே,” என்று அவன் சொல்ல, அவளோ அதிர்ச்சியும் வியப்புமாக அவனை பார்த்தாள்.
தொடர்ந்து இசைக்கும்..