VMIA 14

இசை 14

வலைத் தொடரின் (வெப் சீரிஸ்) இறுதி பாகத்தை சரி பார்த்து அதை வலைதளத்தில் பதிவேற்றும்போது, திரையில் தன் பெயரை கண்டதும் மகாசப்தமி எப்படி உணர்ந்தாள் என்பதை வார்த்தையால் சொல்ல முடியாது. அனைவரும் அவளை சூழ்ந்திருக்க, அவளை மீறி அவளது கண்கள் கண்ணீர் துளியை வெளியிட காத்திருக்கவும், அவளுக்கு தனியாக சென்று அழ வேண்டுமென்று தோன்றியது.

“மகா நாம சாதிச்சிட்டோம்,” என்று அனிதா அவளை அணைக்க வர,

“ப்ளீஸ் நான் கொஞ்சநேரம் தனியா இருக்கணும்,” என்று சொல்லியப்படி அனிதாவின் செயலை தடுத்த மகா அங்கிருந்து தனியறைக்கு செல்லவும்,

“என்ன ஆச்சு?” என்று கேட்டப்படி அவளின் குழுவினர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ள,

“சப்தமி கொஞ்சம் எமோஷனாயிட்டான்னு நினைக்கிறேன். அவளை கொஞ்சநேரம் தனியா விடுங்க,” என்று சாய்ஸ்வரன் அவர்களுக்கு பதில் கூறினான்.

“ம்ம் ஆமாம், நம்ம எல்லோரையும் விட, இந்த வெப் சீரிஸ் எடுக்க அவ எவ்வளவு ஆர்வமா இருந்தான்னு நமக்கு தெரியாதா? அது ஆர்வம்னு சொல்றதை விட தவம்னு கூட சொல்லலாம், சந்தனாவோட இழப்பு அவளை ரொம்ப பாதிச்சிருக்கு, இப்போயாச்சும் மகா இதிலிருந்து வெளிய வராளான்னு பார்ப்போம்,” என்று அனிதா சொல்லவும், மற்றவர்களும் சரியென்று தலையாட்டி அங்கிருந்து விலகிச் செல்ல, சப்தமியை தன் நெஞ்சில் சாய்த்து அணைத்தப்படி அவளுக்கு ஆறுதல் சொல்ல துடித்த ஆசையை சாய்ஸ்வரன் அடக்கிக் கொண்டான்.

அறைக்குள் வந்த மகாவோ சிறிது நேரம் வாய்விட்டு அழுது தீர்த்தாள். இந்த அழுகை எதனாலென்று அவளுக்கு தெரியவில்லை. நினைத்ததை சாதித்துவிட்ட மகிழ்ச்சியா? இல்லை இப்படி ஒரு கிளைமாக்ஸ் தன் தோழியின் வாழ்வில் வந்திருந்தால் அவள் உயிருடன் இருந்திருப்பாளே என்று நினைத்து வருத்தமா? இதன்பின் சாய்ஸ்வரனுக்கும் இவளுக்கும் என்ன? என்ற கலக்கமா? அவளுக்கே தெரியவில்லை.

அழுது முடித்ததும் மனம் அமைதியை நாடியது. மனமோ கடந்த காலத்தை நோக்கி பயணித்தது. துபாயில் அதிகம் தமிழர்கள் வசிக்கும் இடத்தில் தான் மகாசப்தமியின் குடும்பமும் வசிக்க, அங்கே அவளின் பள்ளி தோழி தான் சந்தனா. அவளின் நெருக்கமான தோழியும் கூட,

சந்தனாவின் பெற்றோர் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்த நிலையில் சந்தனா தன் அன்னையுடன் துபாயில் வசித்தாள். அவர் அங்கே ஒரு நிறுவனத்தில் தலைமை பணியில் இருக்க, சந்தனாவுடன் அவர் கழிக்கும் நேரம் குறைவு என்பதால், சந்தனா தன் அதிக நேரத்தை சப்தமியின் வீட்டில் தான் கழித்து வந்தாள். இவர்கள் படித்த பள்ளியில் தான் அனிதாவும் உடன் படித்தவள், பின் அவளின் தந்தைக்கு பணிக்காலம் முடிந்ததால் அனிதா இந்தியாவிற்கே சென்றுவிட்டாள்.

சந்தனா இசை, நடனம் இரண்டிலும் ஆர்வம் மிகுந்தவள், அப்போது இருவருமே பள்ளி படிப்பின் இறுதியில் இருந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான ஸ்கை மூன் தொலைக்காட்சியில் தனது தமிழ் சேனலில் சிறந்த பாடகரை தேர்ந்தெடுக்கும் ரியாலிட்டி ஷோ ஒன்று நடக்கவிருக்க, அது பெரிய அளவில் விளம்பரமாக ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.

சந்தனாவோ அதில் கலந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டினாள். அவளது அன்னைக்கு அவள் மிகவும் செல்ல மகள் என்பதால் அவளின் ஆசையை அவர் என்றும் மறுத்ததில்லை. அதனால் அவள் அந்த போட்டியில் கலந்து கொள்ள வைப்பதற்காக தனது வேலையில் விடுப்பு எடுத்துக் கொண்டு சந்தனாவை அழைத்துக் கொண்டு அவர் இந்தியா செல்ல முடிவெடுத்தார்.

சந்தனா இந்தியா செல்வதற்கு முன்னர் சப்தமியையும் அந்த போட்டிக்கு அழைத்தாள். ஆனால் சப்தமிக்கோ அதில் பெரிதாக ஆர்வமுமில்லை. தன் படிப்பு அதனால் பாதிக்கப்படுவதையும் அவள் விரும்பவில்லை என்பதால் சந்தனாவின் அழைப்பை சப்தமி மறுத்துவிட, சந்தனா மட்டும் தனியாக தன் அன்னையோடு சென்றாள்.

அங்கு சென்று அந்த தொலைக்காட்சி நடத்திய போட்டியில் கலந்து கொண்ட சந்தனா படிப்படியாக வெற்றிப்பெற்று கிட்டத்தட்ட பத்து பேரில் ஒருத்தியாக வந்தவள், இறுதிக் கட்டத்திற்கு செல்ல முடியாமல் தோல்வியை தழுவினாள். அது சந்தனாவிற்கு வருத்தத்தை கொடுத்தாலும், அந்த நிகழ்ச்சி மூலமாக அவள் பிரபலமாகியும் இருந்தாள். இது முழுக்க முழுக்க அவள் திறமையால் மட்டும் என்று சொல்ல முடியாது. அவளின் வசதியான நிலையும் அவள் அந்த இடத்திற்கு வர ஒரு காரணம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

அதன்பின் சந்தனா பிஸியாகிவிட்டாள் என்றுகூட சொல்லலாம், ஆமாம் அதன்பின் அடிக்கடி அந்த தொலைக்காட்சி நடத்தும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் அவள் கலந்து கொள்ளும் சூழல் வந்தது. அதிலும் அவள் பள்ளிக்காலம் முடிந்து கல்லூரி காலத்தில் அடியெடுத்து வைக்க, அவள் இந்தியாவிலேயே தனது மேற்படிப்பை படிக்க விரும்பினாள்.

சந்தனாவின் அன்னை தலைமை பொறுப்பில் இருப்பதால், அவரால் தனது வேலையை விட்டுவிட்டு மகளோடு செல்ல முடியவில்லை. அதேசமயம் மகளின் விருப்பத்தையும் மறுக்க முடியவில்லை. என்னவிருந்தாலும் புகழ் எனும் போதை சந்தனா மற்றும் அவளது அன்னையிடம் சிறிய மாற்றத்தை கொண்டு வந்தது என்று கூட சொல்லலாம், அதனால் மகளை அங்கே தனியே தங்க வைக்கவும் அவர் முடிவு செய்தார். தன் உற்றார் உறவுக்காரர்களுக்கு இதிலெல்லாம் விருப்பம் இல்லையென்றாலும் மகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதை அவர் பெருமையாக உணர்ந்தார்.

அதேசமயம் அனிதா தமிழ்நாட்டில் வேறொரு ஊரில் செட்டில் ஆகியிருந்தவள், சென்னையில் பொறியியல் கல்லூரியில் சேர முடிவெடுக்கவே, அவர்கள் இருவரையும் ஒன்றாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்க வைக்க, அனிதாவின் பெற்றோரிடம் சம்மதம் வாங்கி அவர்களை ஒரே வீட்டில் தங்க வைத்தார்.

தோழியை தொலைக்காட்சியில் பார்த்தாலே சப்தமிக்கு பெருமை தாங்காது. தோழி வரும் நிகழ்ச்சி என்றாலே தனக்கு தெரிந்த அனைவரிடமும் அந்த நிகழ்ச்சியை பார்க்கச் சொல்லி தூண்டுவாள். வீட்டிலிருந்தப்படி தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியை பார்ப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் தான், ஆனால் அந்த ஒரு நிகழ்ச்சியை ஒளிப்பரப்புவது எவ்வளவு கடினம். அந்த நிகழ்ச்சியை வெற்றியடைய அவர்கள் செய்வது தான் எத்தனை எத்தனை. அது அனைத்துமே நன்மை என்றும் எடுத்துக் கொள்ள முடியாது. ஆனால் அது அரைகுறையாய் அறிந்தும் அறியாமலும் நம் பொழுதுபோக்கிற்காக அந்த நிகழ்ச்சியை பார்த்து, அதைப்பற்றி நல்லது, கெட்டது அனைத்தையும் பேசி அந்த நிகழ்ச்சியை பரபரப்பாக்கி விடுகிறோம், அதைவைத்து அந்த தொலைக்காட்சி நிறுவனம் லாபம் பார்த்துவிடுகிறது.

அப்படித்தான் சந்தனாவின் கதையும் ஆனது. அவள் புதிதாக கலந்து கொண்ட நிகழ்ச்சி எப்போதும் போல இசை நிகழ்ச்சியாக இல்லாமல் வேறொன்றாக இருந்தது. அதில் அவளுடன் இணைந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நபருக்கும் அவளுக்குமான கெமிஸ்ட்ரி அந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் சுவாரசியத்தை கூட்ட, மக்கள் அந்த ஜோடியை ரசிக்க ஆரம்பித்தனர். அதனால் அவர்களுக்கான காட்சியமைப்புகள் இன்னும் அதிகம் சேர்க்கப்பட, அதனாலேயே அந்த நிகழ்ச்சி அனைவராலும் பார்க்கப்பட்டது. டி ஆர் பி ரேட்டிலும் அந்த நிகழ்ச்சி முதலிடத்தில் இருந்தது.

அதன்பின்னும் அவர்களை வைத்து வேறு நிகழ்ச்சிகளும் அந்த தொலைக்காட்சி மூலம் உருவாக்கப்பட, அந்த ஜோடி காதலிக்கிறார்கள். திருமணம் செய்யப் போகிறார்கள் என்ற அளவில் மக்களால் பேசப்பட்டது. அவர்களை வீடியோ, மீம்ஸ் என போட்டு ட்ரண்ட் ஆக்கிக் கொண்டிருந்தார்கள்.

இவையாவுமே தங்கள் சேனலை முதலிடத்தில் கொண்டு வருவதற்கான ஸ்கை மூன் தொலைக்காட்சியின் வியாபர தந்திரம் என்பது சந்தனாவிற்கு புரிந்திருந்தாலும் அதையும் தாண்டி அந்த நபர் மீது அவளுக்கு ஒரு ஈர்ப்பு உருவாகி அது காதலாக மாறிப்போனது. ஆனால் தன் முன்னேற்றத்திற்கான வழியாக மட்டுமே இந்த வாய்ப்பை படுத்திக் கொண்டு அந்த நபர் தெளிவாக இருந்தார். அதனால் அவர் சந்தனாவின் காதலை மறுத்துவிட்டார்.

ஆனால் சந்தனாவால் தொழில் வேறு தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்று பிரித்து பார்க்க முடியவில்லை. இரண்டையும் போட்டு குழப்பிக் கொண்டாள். நிகழ்ச்சிகள் மூலமாக இருவரும் மக்களிடையே கொண்டாடப்பட, அவர்கள் இருவருக்குமிடையே யாருக்கும் தெரியாமல் பிரச்சனைகள் நடந்து கொண்டிருந்தது.

சந்தனாவின் காதலை அந்த நபர் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட, இவளோ அவரை ஒத்துக் கொள்ள வைக்க அமைதியாக போராடியிருக்கிறாள். ஆனால் அவனோ அவனது முன்னேற்றம், எதிர்காலம் இதில் மட்டுமே இப்போதைக்கு கவனம் செலுத்துவதாக கூறி அவளது காதலை அடியோடு மறுத்திறுக்கிறான். அதில் மனமுடைந்தவளாக சந்தனா ஒருநாள் யாரும் எதிர்பார்க்காத முடிவாக தனதறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து இறந்துவிட்டாள்.

இறப்பதற்கு முன்பு என் தற்கொலைக்கு யாரும் காரணம் கிடையாது. சில நிறைவேறாத ஆசைகளால் மனமுடைந்து தற்கொலை செய்துக் கொண்டேன் என்று அவள் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்திருக்கிறாள். ஆனால் சமூக வலைத்தளங்களிலும் ஊடகத்தினரும் ஒவ்வொரு மாதிரி அவளின் மரணத்தை கதை கட்டிவிட்டனர்.

அதில் அந்த நபருடனான காதல் தான் சந்தனாவின் தற்கொலைக்கு காரணம் என்ற உண்மையும் பேசப்பட்டது தான், ஆனால் யாரையும் சந்தனாவின் மரணத்திற்கு முழு பொறுப்பாக குற்றம் சாட்ட முடியாதே, ஸ்கை மூன் தொலைக்காட்சி நிறுவனம் அவர்களின் சேனலின் வளர்ச்சிக்கும் அந்த நபரோ அவரின் முனேற்றத்திற்காக மட்டுமே சந்தனாவின் உணர்வுகளை பயன்படுத்திக் கொண்டனர். அவளுக்குமே அந்த உண்மை புரிந்தும் புரியாமலும் பேர், புகழுக்காக அதை அவள் முழுவதுமாக ஏற்றிருக்க, யாரை இதில் குற்றம் சாட்ட முடியும்?

சந்தனாவின் அத்தியாயம் அத்துடன் முடிவடைந்துவிட்டது. சில காலத்திற்கு அவளது மரணம் வலைதளங்களுக்கும் ஊடகத்திற்கும் தீனியாக அமைந்தது. பின் அதன் தாக்கமும் மெல்ல அடங்கிப் போனது. தன் வாழ்வின் ஆதாரம் தன் மகள் மட்டும் தான் என்று நினைத்திருந்த சந்தனாவின் அன்னை முற்றிலும் தளர்ந்து போனார். “இப்படி அவ ஒரு முடிவெடுக்க துணிஞ்சிருப்பான்னு தெரிஞ்சிருந்தா, அவளை இந்த பாதைக்கு நான் கூட்டிட்டு போயிருக்க மாட்டேனே,” என்று புலம்பி தீர்த்தவர், இப்போது நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

சந்தனா ஒருதலையாய் காதலித்த அந்த நபருக்கு அவளின் மரணத்திற்கான காரணம் புரியும், அவர் மட்டும் அவள் இப்படி செய்துக் கொள்வாள் என்று நினைத்திருப்பாரா? அவள் மரணத்திற்கு தான் காரணம் ஆகிவிட்டோமே என்று கண்டிப்பாக அவரது மனம் குற்ற உணர்வில் தவித்திருக்கும், ஆனால் அதை தாண்டி அவரால் என்ன செய்திருக்க முடியும்? இப்படி ஒரு பிரச்சனை எங்களுக்குள் என்று அவரால் வெளியில் சொல்ல முடியாது. சொன்னால் அவருக்கு இன்னும் பிரச்சனை கூடுதலாக தான் ஆகும், அதனால் அதை மறைத்து அவளின் மரணத்திற்காக வருந்துவதாக ஒரு அறிக்கையோடு அவர் முடித்துக் கொண்டார்.

சந்தனா தற்கொலை செய்துக் கொண்டதற்கான உண்மையான காரணம் என்ன? யாருக்கும் தெரியாது. ஒருவரை தவிர, அவள் தான் மகாசப்தமி. தன் காதலைப்பற்றி சந்தனா தன் தோழியிடம் சில முறை மேலோட்டமாக பகிர்ந்திருக்கிறாள். இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அந்த நபர் தன் காதலை ஏற்காததை குறித்து வருத்தமாக சப்தமியிடம் பேசியிருக்கிறாள்.

சப்தமி எவ்வளவோ ஆறுதல் வார்த்தைகள் பேசியும் சந்தனா இப்படி ஒரு முடிவிற்கு செல்வாள் என்று அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. சந்தனாவோடு தான் உடனிருந்திருந்தால் இந்த விபரீதத்தை தடுத்திருக்கலாமே என்று சப்தமி எண்ணி எண்ணி துடித்தாள். சந்தனாவின் இழப்பு அவளை வேறு எதைப்பற்றியும் யோசிக்க விடாமல் தோழியின் மரணத்தை நினைத்து அந்த சோகத்திலேயே அவள் சிலநாட்களை கழித்தாள்.

அதன்பின் அதிலிருந்து மீண்டு வரும்போது கூட தோழியின் ஒருதலை காதலைப்பற்றி வெளியில் சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை. இதை சொல்வதால் என்ன ஆகப் போகிறது. அதுகுறித்து சிறிதுநாட்கள் ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் பரப்பரப்பாக இருக்கும் அவ்வளவுதான், மற்றப்படி இதில் இவர் தான் குற்றவாளி என்று யாரையும் கைக்காட்ட முடியாது. அதுதான் உண்மை என்பது சப்தமிக்கு புரிந்ததால் அவள் அப்படியே அமைதியாகிவிட்டாள்.

ஆனால் தோழியின் மரணம் அவளுக்கு நிறைய மனக்காயங்களை ஏற்படுத்தியிருந்தது. அதிலிருந்தே தொலைக்காட்சி பார்ப்பதை விட்டுவிட்டாள். அரை மணிநேரம் இல்லை ஒருமணிநேர நிகழ்ச்சிக்கு பின்னால் எத்தனை இருக்கிறது. அதில் எத்தனை விஷயங்கள் கசப்பானவை. எத்தனை உண்மைகள் மறைத்து போலியாக காட்டப்படுகின்றன, அவர்கள் பணம் சம்பாதிப்பதற்கு அடுத்தவர்களின் உணர்வுகளை பணயம் வைக்கின்றனர். அவர்களும் பணம், புகழுக்காக ஆசைப்பட்டு அதற்கு ஒத்துக் கொள்கின்றனர். மக்களும் சில நாட்களுக்கு அதிலிருக்கும் நிறை, குறைகளை பேசிவிட்டு அடுத்து வேறொன்றை தேடி சென்றுவிடுகின்றனர். அதுவே அந்த தொலைக்காட்சி சேனலுக்கு போதுமானதாக இருப்பதால் இப்படியான நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி தங்கள் சேனலுக்கு புகழ் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இப்படியான சிந்தனைகள் தொடர்ந்து சப்தமியின் மனதில் ஓடிக் கொண்டிருந்ததின் விளைவு தான் அதுகுறித்து ஏதாவது செய்ய வேண்டுமென்று அவளுக்கு தோன்றி கொண்டே இருந்தது. என்ன செய்யலாம் என்ற பலத்த யோசனைக்கு பிறகு வலைத் தொடர் (வெப் சீரிஸ்) எடுக்க வேண்டுமென்ற எண்ணம் சப்தமிக்கு உருவானது.

ஒன்றுக்கு பல முறை யோசித்து இந்த எண்ணத்தை நிறைவேற்ற வேண்டுமென்று அவள் முடிவெடுத்தாள். சந்தனாவின் கதையை தழுவி ஒரு கதைக்களத்தை யோசித்தாள். ஆனால் தன் கதை நாயகி தற்கொலை செய்யக் கூடாது என்பது போல் கிளைமாக்ஸை மட்டும் மாற்றியமைத்தாள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் திரைக்கு பின்னால் நடக்கும் நிஜங்களை காட்ட வேண்டுமென்று நினைத்தாள். இதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை தான், ஆனால் கண்மூடித்தனமாக இந்த நிகழ்ச்சிகள் 100% உண்மை என்று நினைத்து பார்ப்பவர்களில் சில பேருக்காவது இதில் உள்ள உண்மைகள் தெரிய வந்தாலே அது அவளுக்கான வெற்றி தானே, அதை நினைத்து தான் இந்த வலைத் தொடர் (வெப் சீரிஸ்) எடுக்கும் எண்ணம் அவளுக்கு வந்தது.

அவள் கணினி சம்பந்தமான பொறியியல் படிப்பு தான் படித்திருக்கிறாள். ஆனாலும் இந்த வலைத் தொடர் பற்றி அவளுக்கு முழுக்க விஷயங்கள் தெரியாது. அப்போது அவளது இந்த எண்ணத்திற்கு உறுதுணையாக இருந்தது அனிதா தான், அனிதாவிற்கும் சந்தனாவின் காதல் விஷயம் மேலோட்டமாக தெரியும், படிப்பு முடிந்தாலும் அனிதா சென்னையிலேயே வேலை பார்த்ததால் இருவரும் அப்போதும் ஒரே வீட்டில் தான் தங்கியிருந்தனர்.

சப்தமியிடம் சொன்ன அளவு இல்லையென்றாலும் ஓர் அளவிற்கு அனிதாவிடம் இந்த விஷயத்தை பற்றி சந்தனா சொல்லியிருக்கிறாள். அதனுடன் அவளின் நடவடிக்கைகளும் அந்த நபர் குறித்து சந்தனா அடிக்கடி பேசுவது. காதலைப் பற்றி விரக்தியாக பேசுவதை வைத்து அனிதாவே சந்தனாவின் காதலைப் பற்றி ஒரு முடிவு செய்து வைத்திருந்தாள்.

அப்போது கூட தற்கொலை என்ற முடிவை எடுக்கும் அளவிற்கு சந்தனா கோழையான பெண் என்று அனிதா நினைத்து பார்க்கவில்லை. பெற்றோர்களை பார்க்க அனிதா ஊருக்கு சென்றிருந்த நேரம் இப்படி ஒரு விபரீதம் நடந்திருக்க, அனிதாவிற்குமே தோழியுடன் உடனிருந்திருந்தால் இந்த விபரீதத்தை தடுத்திருக்கலாமோ என்ற குற்ற உணர்வு இருந்தது.

அதனாலேயே மகாசப்தமியின் அந்த வலை தொடர் யோசனைக்கு அனிதாவும் உதவுவதாக கூறினாள். அவர்களுடன் தொலைக்காட்சி சேனலில் வேலை செய்துக் கொண்டிருந்த சந்தனாவின் சில நண்பர்களும் சப்தமியின் யோசனையை செயலாற்ற உதவுவதாக கூறினார்கள். அவரவரின் நண்பர்கள் என்று ஒரு குழுவாக இணைந்து இந்த யோசனையை செயலாற்ற முடிவு செய்தார்கள்.

அதுகுறித்தே சப்தமி இந்தியாவிற்கு ஒரு வேலையை தேடிக் கொண்டு வந்தாள். அவளின் பெற்றோர்களும் அதற்கு அனுமதி தந்தனர். பின் அனிதாவோடு சந்தனா இருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வேலை பார்த்தப்படியே இந்த வலைத் தொடர் உருவாக்கத்திற்கு அவர்கள் குழு தயாராகிக் கொண்டிருந்தது.

கதை திரைக்கதை சப்தமியின் ஆக்கத்தில் தயாராக இருக்க, குழுவில் மற்ற நண்பர்கள் ஒவ்வொரு பொறுப்பினை ஏற்றுக் கொண்டனர். அடுத்து அந்த வலைத்தொடருக்கான நடிகர்களை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்க, அந்த கதைக்கான நாயகன் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் மகாசப்தமிக்கு யாரை பார்த்தாலும் திருப்தி வரவில்லை.

அப்போது பெற்றோர் அனுப்பிய வரனான சாய்ஸ்வரனை பார்த்ததும், ஏற்கனவே அவனது சில மியூஸிக் ஆல்பங்களை அவள் பார்த்திருக்கிறாள். சாய்ஸ்வரன் அவனது காதாப்பாத்திரத்தையே ஏற்று நடித்தால்? அவன் அவனது சில மியூஸிக் ஆலபங்களில் நடித்திருக்கிறான் தானே, அவனுக்கு ஏற்கனவே ரசிகர்கள் அதிகம் இருக்க, அதனால் இந்த வலைத் தொடர் மீது மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாகலாம் என்பது தான் சப்தமியின் எண்ணம்.

அதைப்பற்றி அனிதா மற்றும் தங்கள் குழுவோடு கலந்தாலோசித்ததில் அவர்களும் அதை ஆமோதிக்க, அவனைப்பற்றி இன்னும் இன்னும் அதிகமாக வலைத்தளம் மூலம் தெரிந்து கொண்டவள், அவனை நேரில் சந்தித்து அவர்களது வெப் சீரிஸில் நடிக்க கேட்டாள்.

ஆனால் அந்தநேரம் பார்த்து ஸ்கை மூன் தொலைக்காட்சி அவனை ஒரு ரியாலிட்டி ஷோவிற்காக அனுகியிருந்தது. இவர்களது வலைத்தொடரும் ஒரு ரியாலிட்டி ஷோ குறித்து தான், அதுவும் ஸ்கை மூன் தொலைக்காட்சிக்கு எதிராக தான் இந்த கதைகளம் இருக்கிறது.

சாய்ஸ்வரன் ஸ்கை மூன் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டால், கண்டிப்பாக அவனது முன்னேற்றத்திற்கு அது வாய்ப்பாக அமையும், அந்த நேரத்தில் அந்த தொலைக்காட்சிக்கு எதிராக எடுக்கும் இவர்களது வலைத்தொடரில் நடித்தால் அவனது முன்னேற்றத்திற்கு அது தடையாக கூட இருக்கலாம்,

அதனால் தான் சாய்ஸ்வரன் முதலில் அவர்களது வேலையை ஏற்றுக் கொள்ள மறுத்தான். தனது மியூஸிக் ஆல்பம் மூலமாக நல்ல கருத்துகளை படைப்பாக கொடுக்கும் சாய்ஸ்வரன் கண்டிப்பாக இந்த வேலையை ஏற்றுக் கொள்வான் என்ற நம்பிக்கை சப்தமிக்கு இருக்க, அவனோ முடியாது என்று மறுக்கவும், சப்தமிக்கு அது பெரும் ஏமாற்றமாக இருந்தது.

அதிலும் அவனைப்பற்றி அவள் ஆர்வமாக தெரிந்து கொண்டவளுக்கு அவன்பால் அவளையும் மீறி ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. ஒருவேளை அவனை பெற்றோர் தனக்கு வரனாக பார்த்ததாலோ என்னவோ, அதனால் அவனது மறுப்பில் அவளுக்கு கோபம் கூட வந்தது. அவனைப்பற்றி தான் நினைத்ததற்கு மாறாக அவன் இருந்ததை அவளது மனம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. அதற்காகவே அவன் அந்த ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளாமல் தனக்காக இந்த வலைத்தொடரில் நடிக்க வேண்டுமென்று அவளது மனம் எதிர்பார்க்க ஆரம்பிக்கவும், அந்த தருணத்திற்காக அவள் காத்திருக்க ஆரம்பித்தாள்.

ஒருபக்கம் தனக்காக ஏன் அவன் வர வேண்டுமென்ற உண்மை அவளுக்கு உரைத்தாலும், மனம் அந்த உண்மையை புரிந்து கொள்ள மறுத்தது. ஆனால் தன் தோழிக்காக ஏதோ செய்ய வேண்டும் என்ற எண்ணம் தானே இந்த வலைத் தொடர் யோசனை. அதை சாய்ஸ்வரனுக்காக ஏன் தள்ளி போட வேண்டுமென்று அவள் நினைத்து தான் பின் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு வேறொருவரை நடிக்க வைக்க அவள் முடிவு செய்தாள்.

சாய்ஸ்வரன் மீது முற்றிலும் நம்பிக்கை தொலைந்து போனவளாக வேறொருவரை அந்த தொடரில் நடிக்க தேடிக் கொண்டிருந்தபோது சாய்ஸ்வரன் அவனே முன்வந்து அந்த வலைத் தொடரில் நடிப்பதாக கூறினான். அதுவும் அந்த ரியாலிட்டி ஷோவை அதற்காக நிராகரித்தான். அதில்லாமல் தொடரில் நடிக்க ஒரு நிபந்தனையும் விதித்தான்.

ஆரம்பத்தில் அது என்ன என்பது அவளுக்கு தெரியவில்லை. அது என்னவென்பது தெரியாமல் குழம்பி போனாள். ஆனால் இப்போது அவன் என்ன கேட்கப் போகிறான்? என்பது அவன் கேட்காமலேயே அவளால் தெரிந்து கொள்ள முடிந்தது. அதை நினைத்து முகத்தில் தானாகவே புன்னகை அரும்பியது. இந்த தொடருக்கான படப்பிடிப்பின் போது அவன் நடந்து கொண்டதையெல்லாம் நினைத்துப் பார்த்த போது அந்த புன்னகை சிரிப்பாக மாறியது. ஆனால் அவனது நிபந்தனை படி அவன் கேட்பதை தன்னால் தர முடியுமா? என்று நினைக்கும்போது அந்த சிரிப்பு அப்படியே மாயமாக மறைந்து போனது.

தொடர்ந்து இசைக்கும்..