VMIA 13

இசை 13

மாலை நேரம் அந்த விளையாட்டு உள் அரங்கம் ஆராவாரமாய் காட்சியளித்தது. ஸ்வரனோடு 30 நாட்கள் நிகழ்ச்சியின் இறுதி பாகத்திற்காக அந்த அரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க, பார்வையாளர்களாக ஒருபக்கம் வானம் தொலைக்காட்சியில் பணிபுரிபவர்கள், அந்த தொலைக்காட்சியின் மற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருப்பவர்கள், அந்த தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பவர்கள், அந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள் கூட்டமென்று அந்த அரங்கமே முழுக்க நிறைந்திருந்தது.

தொகுப்பாளர்கள் ஆண், பெண் என இருவர் அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்க, முதலில் மேடையில் சாய்ஸ்வரனின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. வானம் தொலைக்காட்சி மூலம் இசைக்கான ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டவர்கள் சிலர் சாய்ஸ்வரனின் இசைக்கு அவர்கள் பாடினார்கள். வானம் தொலைக்காட்சியின் சீரியல் நடிகர்கள் நடிகைகள் சிலர் திரைப்பட பாடல்களுக்கு நடனம் ஆடினர்.

இப்படியே மகிழ்ச்சியும் ஆரவாரமாமுமாய் அந்த நிகழ்ச்சி நேரடியாக வானம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அடுத்து தன் கிட்டாருடன் சாய்ஸ்வரன் தனியே மேடைக்கு வரவும் அனைவரும் கைத்தட்டி விசிலடித்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேடையேறியவனோ தனது மியூஸிக் ஆல்பத்திலிருந்து சில பாடல்களை பாடி மக்களை உற்சாகப்படுத்தினான். அவன் பாடி முடித்து மேடையை விட்டு இறங்கலாம் என முயன்ற போது, ரசிகர்களோ சப்தமி சப்தமி என்று குரலெழுப்பிக் கொண்டிருக்க,

“என்ன அதுக்குள்ள இறங்க பார்க்கறீங்க, இந்த நிகழ்ச்சியோட ஸ்டார்ஸ் நீங்களும் சப்தமியும் தான், மேடையில் நீங்க மட்டும் இருக்கீங்க, சப்தமி இல்லன்னா ஃபேன்ஸ் ஒத்துப்பாங்களா? அதனால சப்தமியும் மேடைக்கு வரணும்,” என்று தொகுப்பாளர்கள் கூற, அத்தனை நேரம் பார்வையாளர்களில் ஒருவராக முன்னிருக்கையில் அமர்ந்து ஸ்வரனின் இசையை ரசித்துக் கொண்டிருந்த சப்தமியும் மேடைக்கு வந்தாள்.

அவள் மேடையேறியதும் விசில் சத்தமும் கைத்தட்டல்களும் என ஒரே ஆர்ப்பாட்டமாக இருந்தது. சாய்ஸ்வரன் கிட்டார் வாசிக்க சப்தமி பாட வேண்டுமென்று பார்வையாளர்கள் சொல்லிக் கொண்டிருக்க, அந்த கோரிக்கையை தொகுப்பாளர்கள் அவர்கள் இருவரிடமும் கூறவும்,

“அய்யோ, ஏன் இந்த விஷப் பரிட்சை. நான் பாடி உங்களை ஓட வைக்கணுமா? ப்ளீஸ் வேண்டாமே,” என்று சப்தமி மைக்கில் பேச, அப்போதும் பார்வையாளர்கள் அனைவரும் அவள் பாட வேண்டுமென்று கத்தினர்.

தொகுப்பாளர்களோ, “சாய்ஸ்வரன் கிட்டார் வாசிக்க நீங்க ஒரு எபிசோட்ல பாடினீங்களே, நாங்க கேட்டிருக்கோம், ஒன்னும் மோசம்னு சொல்ல முடியாது. அதனால நீங்க பாடித்தான் ஆகணும் சப்தமி, இது உங்க ரசிகர்களின் கோரிக்கை.” என்று கூறவும்,

“சரி அவங்களே ரிஸ்க் எடுக்க விரும்புறாங்க, அப்புறம் நான் என்ன சொல்லப் போறேன். இனி யார் தடுத்தும் நான் பாடாம இருக்கப் போறதில்ல, பாடியே தீருவேன். ஆனால் அதுக்குப்பிறகு ஏதாவது விபரீதம் நடந்தா அதுக்கு நான் பொறுப்பில்ல,” என்று விளையாட்டாய் கூறியவள், சாய்ஸ்வரன் காதருகே சென்று அவள் பாட போகும் பாடலை அவனிடம் கூறியதும், அவனும் கிட்டாரை தயாராக வைத்து இசைக்க தயாரானான். சில நொடிகளில்,

மலர்களே மலர்களே இது என்ன கனவா

மலைகளே மலைகளே இது என்ன நினைவா

உருகியதே எனதுள்ளம்

பெருகியதே விழி வெள்ளம்

என்று பாட ஆரம்பித்தவள்,

உறங்காத நேரம் கூட

உந்தன் கனவே கனவே

உடலோடு உயிரை போலே

உறைந்து போனதுதான் உறவே

மறக்காது உன் ராகம்,

மரிக்காது என் தேகம்

உனக்காக உயிர் வாழ்வேன்

வா என் வாழ்வே வா

என்று பாடிக் கொண்டிருக்கும்போதே அவள் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் கன்னத்தை தாண்டி வழிந்தோட அவள் முகத்தை மட்டும் மிக மிக அருகில் தொலைக்காட்சி திரையில் காட்டினர்.

இதில் பாடல் முடியும் வரை அந்த அரங்கமே அமைதியாக இருந்தது. அத்தனையும் பாடி முடிக்கவும் பெரிய கைத்தட்டல்கள் சத்தங்களுடன் அந்த அரங்கம் அதிர்ந்தது.

“வாவ் வாவ் சப்தமி, பாடத் தெரியாதுன்னு சொல்லிட்டு என்னமா பாடிட்டீங்க, எவ்வளவு அருமையா பாடியிருக்கீங்க, அதுவும் பாடும்போதே உணர்ச்சி வசப்பட்டுடீங்க, அப்படி இந்த பாட்டு உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?” என்று தொகுப்பாளர்கள் கேள்வி கேட்க,

“ஆமாம் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும், அதிலும் கொஞ்சநாளா இந்த பாட்டை அடிக்கடி கேட்கணும்னு தோனுது. அதிலும் ஸ்வரன் கிட்டார் வாசிக்க இந்த பாட்டை பாடினது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு, பூவோடு சேர்ந்து நாரும் மணக்கும்னு சொல்வாங்களே அப்படித்தான் போல, அதான் நானும் பரவாயில்லையா பாடியிருக்கேன்.” என்று சப்தமி பதில் கூறினாள்.

“ஸ்வரன் நீங்க சொல்லுங்க, சப்தமி பரவாயில்லாம பாடினதா சொல்றாங்களே, உங்களுக்கு எப்படி தோனுச்சு,” என்று தொகுப்பாளர்கள் சாய்ஸ்வரனிடம் கேள்விகள் கேட்க,

“சப்தமி பாடி முடிச்சதும் இங்க இருக்கவங்க கைத்தட்டலே சொல்லலையா அவ எப்படி பாடியிருக்கான்னு, ரொம்பவே நல்லா பாடினா,” என்று அவன் பதில் கூறினான்.

“சாய்ஸ்வரனே சொல்லிட்டாரு நீங்க சூப்பரா பாடினதா, இது உங்களுக்கு எப்படி இருக்கு,” என்று தொகுப்பாளர்கள் கேட்க,

“இதைவிட ஸ்பெஷல் தருணம் இருக்குமான்னு கேட்டா எனக்கு சொல்ல தெரியல, எல்லாத்துக்கும் ஃபேன்ஸ் தான் காரணம். எல்லோருக்கும் நன்றி,” என்றவள், அனைவருக்கும் பறக்கும் முத்தம் ஒன்றை கொடுத்தாள்.

“அப்புறம் நீங்க ரெண்டுப்பேரும் பாடினா மட்டும் போதாது. ரெண்டுபேரும் சேர்ந்து எங்களுக்காக ஒரு டான்ஸ் பர்பாமன்ஸ் செய்யணும்,” என்று தொகுப்பாளர்கள் கூற, இருவரும் அதிர்ச்சியாக ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

தொகுப்பாளர்கள் சொல்வதை ஆமோதிப்பது போல அரங்கமே விசிலடித்தும் கைத்தட்டியும் ஒரே அமர்க்களப்படுத்த, இருவரும் ஏதோ ரகசியமாக பேசி சிரித்துக் கொண்டனர். அதுவும் மிக அருகில் அவர்களை காட்டி தொலைக்காட்சியில் ஒளரப்பாகிக் கொண்டிருந்தது.

பின் மேடையை ஒரு நிமிடம் இருட்டாக்கி, பின் விளக்குகளை ஒளிர விட இருவரும் கைகோர்த்து ஆடுவதற்கு தயாராக,

இரவாக நீ

நிலவாக நான்

உறவாடும் நேரம்

சுகம் தானடா

தொலையும்

நொடி கிடைத்தேனடி

இதுதானோ காதல்

அறிந்தேனடி

என்ற பாடலை ஒளிபரப்ப இருவரும் அதற்கு அழகாக ஆடி முடித்ததும், மீண்டும் கைத்தட்டல் ஒலி அரங்கத்தை அதிர செய்தது.

இப்படியே இரண்டு மணி நேரம் ஆடலும் பாடலுமாக நேரங்கள் கரைந்து கொண்டிருக்க, அடுத்து ஸ்வரனோடு 30 நாட்கள் நிகழ்ச்சியின் கடைசி கட்டத்திற்கு வந்தனர்.

“29 எபிசோட்ஸ் சாய்ஸ்வரன், சப்தமி இந்த நிகழ்ச்சி மூலமா நம்மளை ரொம்பவே மகிழ்விச்சாங்க, இத்தனை நாள் கடந்து வந்த இந்த நிகழ்ச்சி மூலமா அவங்க எப்படி உணர்ந்தாங்க, இந்த நிகழ்ச்சி முடிய போகறதை அவங்க எப்படி உணருகிறாங்க, இதை நம்மக்கிட்ட ரெண்டுப்பேரும் பகிர்ந்துக்க வரப் போறாங்க,” என்று தொகுப்பாளர்கள் சொல்லி முடிக்கவும், இருவரும் மீண்டும் மேடையேறினார்கள்.

முதலில் சாய்ஸ்வரன் கையில் மைக் கொடுக்கப்பட, “எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, இப்படியான ஒரு ஆரவாரம், வரவேற்பை பார்க்கும்போது ரொம்ப எக்ஸைட்டா இருக்கு, என்னோட மியூஸிக் ஆல்பம் மூலம் நிறைய ஃபேன்ஸ் எனக்கு இருந்திருக்காங்க, ஆனா அவங்கல்லாம் சோஷியல் மீடியாவில் இருக்கவங்க தான், ஆனா இன்னைக்கு என்னை யாருன்னு கூட தெரியாதவங்களுக்கு கூட இப்போ நான் தெரிஞ்சவனா ஆயிட்டேன்.

என்னோட இசை வானம் தொலைக்காட்சி பார்க்கும் ஒவ்வொரு நபர் வீட்டுக்கும் போய் சேர்ந்திருக்குன்னு நினைக்கும்போது அதைவிட பெரிய சந்தோஷம் இல்லை. இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த வானம் தொலைக்காட்சிக்கு ஒரு பெரிய நன்றி சொல்லிக்கிறேன்.

அப்புறம் ஃபேன்ஸ் பத்தி சொல்லணும்னா என்ன சொல்ல இந்த ஷோ மூலமா இவ்வளவு பேர் என்மேல அபிமானம் வச்சிருக்காங்கன்னு தெரியும்போது எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, இது கடவுளோட அருள் என்று தான் சொல்லணும், என்னைக்கும் என்னோட ஃபேன்ஸ்க்கு நான் கடமை பட்டவனா இருப்பேன்.

அப்புறம் முக்கியமா சப்தமி பத்தி சொல்லணும்னா என்ன சொல்றது. இப்படியும் ஃபேன்ஸ் என்மேல அபிமானம் வச்சிருக்காங்கன்னு எனக்கு உணர்த்தியது சப்தமியோட அந்த லெட்டர் தான், நானும் உபயோகமா ஏதோ செய்றேன்னு அந்த லெட்டர் தான் எனக்கு உணர வச்சது.

அதுமட்டுமில்லாம என்னைப் பத்திய ஒவ்வொரு விஷயங்களையும் சப்தமி ரொம்ப ஆழமா தெரிஞ்சு வச்சிருக்காங்க என்பது, ஒவ்வொரு எபிசோட்லயும் சப்தமி வெளிப்படுத்திருந்தது நல்லா தெரிஞ்சது. சப்தமி மாதிரி ஒருத்தரை எனக்கு அறிமுகப்படுத்தி வச்சதுக்கு இந்த ஷோக்கு தான் நான் நன்றி சொல்லணும், இந்த ஷோ அதுக்குள்ள முடியப் போகுதுன்னு நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு, இந்த நிகழ்ச்சிக்காக நாங்க கடந்து வந்த நாட்கள் ஒரு இனிமையான பயணம். மறக்க முடியாத பயணமும் கூட, இந்த பயணம் மூலம் என்னோட வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நபரா, ஒரு ஃப்ரண்டா சப்தமி கண்டிப்பா இருப்பா, இதுக்கு மேல எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல, இப்படி ஒரு வாய்ப்பு, இப்படி ஒரு ரசிகையை ஒரு நல்ல தோழியை கொடுத்த இந்த ஷோக்கு மீண்டும் நன்றி சொல்லிக்கிறேன். என்று அவன் பேசி முடிக்கவும், கைத்தட்டல்களின் ஒலி அந்த அரங்கை நிறைத்தது.

அடுத்து சப்தமியிடம் மைக் கொடுக்கப்பட, “முதலில் இங்க இந்த இடத்தில் என்னை நிக்க வச்ச கடவுளுக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன். சில மாதங்களுக்கு முன்ன வரை இதோ தூரத்தில் அமர்ந்து பார்த்துட்டு இருக்க மக்கள் கூட்டத்தில் ஒரு ஆளா கூட நான் இருந்திருப்பேனா என்பதே சந்தேகம் தான், வீட்டிலோ இல்லை ஹாஸ்டலிலோ உட்கார்ந்துக்கிட்டு இதுபோல ஒரு நிகழ்ச்சியை டிவியில் பார்க்கும் ஒரு ஆளா தான் நான் இருந்திருப்பேன்.

அப்படிப்பட்ட எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்குன்னா அதுக்கு முதல் காரணம் ஸ்வரன் தான், அவருக்கு நன்றி சொல்லி அவரை யாரோவா நான் தள்ளி நிறுத்த மாட்டேன்.” என்று அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே அவளின் அந்த பேச்சுக்கு மக்கள் ஓ என்று கத்தியும் விசிலடித்தும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அந்த சத்தங்கள் அடங்கும்வரை அவள் பேசாமல் பொறுமை காத்தாள். பின், “அடுத்து ஸ்வரன் சொல்லி என்னை இந்த நிகழ்ச்சிக்காக செலக்ட் செய்த வானம் தொலைக்காட்சிக்கு என் நன்றிகள். உண்மையா இந்த நிகழ்ச்சிக்காக நாங்க கடந்து வந்த பயணத்தில் ஒவ்வொன்னும் என்னால வாழ்நாள் முழுதும் மறக்கவே முடியாது. என்னோட வாழ்க்கையில் இந்த நாட்கள் ரொம்பவே ஸ்பெஷலா முக்கியமானதா இருக்கும்,

என்னோட மொபைல் மூலமா சோஷியல் மீடியால நான் ரசிச்சு பார்த்து இசையில் மெய்மறந்த ஒருத்தரை ரொம்ப பக்கத்தில் இந்த நிகழ்ச்சி மூலமா அவரோட கழித்த நேரங்கள் எனக்கு கிடைச்ச ஸ்பெஷல் கிஃப்ட்னு தான் சொல்வேன். இந்த நிகழ்ச்சி இப்போ இறுதி பாகத்தில் இருக்குன்னு நினைக்கும்போது ரொம்பவே கஷ்டமா இருக்கு, இது இன்னமும் தொடரணும்னு ஆசையா இருக்கு, அந்த ஆசை நிறைவேறினா எனக்கு அதைவிட பெருசு ஒன்னும் கிடையாது.

நான் இந்த ஷோவை, ஸ்வரனுடனான இந்த இசை பயணத்தை ரொம்பவே மிஸ் செய்வேன்.” என்று பேசிக் கொண்டிருக்கும்போதே அவள் அழுதுவிட, ஸ்வரன் அவளை சமாதானப்படுத்தினான். அந்த நேரங்கள் அப்படியே ஒரு அமைதியான சூழலாய் இருந்தது.

சில நிமிடங்களில் அவள் தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ள, “நீங்க நினைச்சது போலத்தான் சப்தமி, இந்த ஷோ இவ்வளவு சீக்கிரமா முடியுதேன்னு எங்களுக்கும் கஷ்டமா இருக்கு, இதுக்காகவே இந்த ஷோவோட ரெண்டாவது சீசனை நாங்க வெகு விரைவில் எதிர்பார்க்கிறோம், என்ன ரெண்டாவது சீசன் உண்டு தானே,” என்று தொகுப்பாளர்கள் கேட்கவும்,

“தெரியலையே அது இந்த ஷோவோட டைரக்டர் தான் முடிவு செய்யணும், திரும்ப இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது பார்ப்போம்,” என்று சாய்ஸ்வரன் கூற, சப்தமியும் அதை ஆமோதிப்பது போல் நின்றிருந்தாள்.

இந்த நிகழ்ச்சி முடிய போகிறது என்பதை உணர்ந்த பார்வையாளர்கள். “இந்த ஷோக்கு பிறகு உங்களுக்கும் சப்தமிக்கும் என்ன ரிலேஷன் ஷிப்?” என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

அதற்கு சாய்ஸ்வரனோ, எப்போதும் ஒரு நல்ல ஃப்ரண்ட்ஸா நாங்க இருப்போம்,” என்று அந்த கேள்விக்கு பதில் கூறினான்.

அதற்கு சப்தமியின் பதிலையும் அவர்கள் எதிர்பார்க்க, “அதான் ஸ்வரன் சொல்லிட்டாரே, எப்போதும் நாங்க நல்ல ஃப்ரண்ட்ஸ் தான்,” என்று அவளும் பதில் கூறிய பின் இருவரும் மேடையை விட்டு இறங்கினர்.

நிகழ்ச்சிகள் முடிந்து அரங்கத்தில் கூடியிருந்த பார்வையாளர்களும் கொஞ்சம் கொஞ்சமாக கலைந்து சென்று கூட்டங்கள் குறைந்திருந்தது. அப்போது சப்தமியிடம் வந்த சாய்ஸவரன், “சப்தமி நீ எப்படி வீட்டுக்கு போகப் போற,” என்று அவளிடம் கேட்க,

“என் ஃப்ரண்டோட ரிலேடிவ் அவங்க கார் எடுத்துட்டு வர்றதா சொல்லியிருக்காங்க, அதில் தான் நான் போகப் போறேன்.” என்று அவள் பதில் கூறவும்,

“இல்லை அவங்களை வர வேண்டாம்னு சொல்லிடு, நானே உன்னை வீட்டில் ட்ராப் செய்றேன்.” என்று சாய்ஸ்வரன் சொல்ல, அவளும் மறுப்பின்றி மகிழ்ச்சியாக அவனது காரில் ஏறினாள்.

அவள் குடியிருப்பின் அருகே ஒரு பூங்கா போன்ற அமைப்பு இருக்க அங்கு தனது காரை நிறுத்தியவன், “நான் உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு சப்தமி, பேசலாம் தானே,” என்று கேட்க,

அவன் என்ன பேசவிருக்கிறான் என்பது தெரியவில்லையென்றாலும் அது எது குறித்து இருக்கலாம் என்ற யூகத்தில் அவனுக்கு ஆர்வமாக தலையசைத்து தன் சம்மதத்தை தெரிவித்தாள்.

“இது உங்க அப்பார்ட்மென்ட்க்கு சொந்தமான பார்க் தானே, இங்க இந்த நேரத்தில் பேசலாமா? யாராச்சும் ஏதாவது சொல்வாங்களா?” என்று அவன் கேட்க,

“இல்லை அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்க,” என்று அவள் சொன்னதும், இருவரும் காரை விட்டு இறங்கினார்கள்.

பின், “ஷோவில் பேசும்போது ஏன் அவ்வளவு எமோஷன் ஆன சப்தமி,” என்று சாய்ஸ்வரன் கேட்க,

“எமோஷன் ஆகக் கூடாதுன்னு தான் நினைச்சேன். ஆனா என்னால முடியல, இந்த ஷோ முடிய போகுது. உங்களை இனி அடிக்கடி பார்க்க முடியாதுன்னு நினைக்கும்போதே என்னால என்னை கன்ட்ரோல் செய்ய முடியல, நான் என்ன செய்யட்டும்?” என்று சப்தமி கேட்டாள்.

“இந்த காலத்தில் இப்படியெல்லாம் யோசிக்கலாமா? நாம அதுக்குப்பிறகு சந்திக்க வாய்ப்பே கிடைக்காமலா போகப் போகுது. ஏற்கனவே இதைப்பத்தி நாம பேசினோம் தானே, ஆனாலும் நீ அதை நினைச்சு எமோஷன் ஆகற, ஏன் இப்படி?” என்று அவன் கேட்கவும்,

“இப்படி பேசறீங்க, ஆனாலும் உங்கக்கிட்ட ஒரு விலகலை உணர முடியுது. அது ஏன்னு தான் தெரியல, ஆரம்பத்தில் நல்லா பேசிட்டு இருந்தீங்க, ஆனா இப்போ அப்படியில்ல, நாம அடுத்து சந்திக்காம இருப்போமா? பேசாம இருப்போமான்னு கேள்வி கேட்கறீங்க, இந்த ஷூட்டிங் முடிஞ்சதால நமக்குள்ள எதுவும் மாறாதுன்னு நம்பிக்கையா சொல்ல மாட்டேங்கறீங்க, அதைப்பத்தி யோசனை தான் எப்போதும், அதான் ஸ்டேஜ்ல பேசும்போது கொஞ்சம் எமோஷன் ஆகிட்டேன். இதில் என்ன தப்பு இருக்கு?” என்று அவள் கேட்டாள்.

“எந்த தப்புமில்ல, சொல்லப்போனா உன்னோட இந்த எமோஷன் டிவி சேனல்க்கு டி.ஆர்.பி ல இந்த ஷோ முதலில் இருக்க ரீஸனா இருக்கும், வானம் தொலைக்காட்சிக்கு பாப்புலாரிட்டி கிடைக்கும், முதல் எபிசோட்ல கிளிசரின் ஊத்தி அழுத, ஆனா இப்போ அதெல்லாம் தேவையே இல்லைன்னு இயல்பாகவே அழ ஆரம்பிச்சு, அந்த ப்ரோகிராம்க்கு பெரிய ரீச் கிடைப்பது போல செஞ்சிட்ட, ஆனால் இதனால உனக்கு நன்மை என்னன்னு சொல்லு?” என்று அவன் கேட்க, அவளோ அவனை புரியாத பார்வை பார்த்தாள்.

“உன்கிட்ட பலமுறை பேசணும்னு நினைச்சிருக்கேன். ஆனா முடியல, ஏன்னா இந்த நிகழ்ச்சிக்கு இதனால எந்த பாதிப்பும் வந்துடக் கூடாது. என் விருப்பத்தோட அக்ரிமென்ட்ல கையெழுத்து போட்டு தானே இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கிட்டேன். அப்புறம் நானே எப்படி அதை ஸ்பாயில் செய்ய முடியும்? அதான் என்னால எதுவும் அப்போ உன்கிட்ட பேச முடியல,

பொதுவா இதுபோல ரியாலிட்டி ஷோவெல்லாம் ஸ்கிர்ப்ட் அடிப்படையில் தான் நடக்கும், யார் என்ன செய்யணும், என்ன பேசணும், எப்படி நடந்துக்கணும்? எப்போ சிரிக்கணும்? எப்போ அழணும்? எல்லாம் அவங்க சொல்வாங்க, முதல் எபிசோட்லயே அதை நீ ஃபீல் செஞ்சிருப்பியே, ஆனா அடுத்தடுத்து எல்லாம் இதில் ஸ்கிர்ப்ட் அடிப்படையில் நடக்கல, இந்த ஷோ உன்னை வச்சு, உன்னோட ரியாக்‌ஷன் இதெல்லாம் வச்சு தான் ஹிட் ஆச்சு, கிட்டத்தட்ட உன்னை ஒருவகையில் எல்லாம் ஏமாத்தியிருக்காங்க, அதில் என் பங்கும் இருக்கு,” என்று அவன் கூற,

“நீங்க சொல்றது இன்னும் கூட எனக்கு புரியல ஸ்வரன், நீங்க சொல்ல வருவது என்ன?” என்று கேட்டாள்.

“இன்னுமா புரியல, நீ என்மேல வச்சிருக்க அபிமானத்தை அவங்க யூஸ் செஞ்சுக்கிட்டாங்க, அதுதான் உண்மை. நீ என்மேல வச்சிருக்கும் அபிமானம் அடுத்த கட்டம் அடுத்த கட்டம்னு போய் நமக்குள்ள என்ன? அப்படிங்கிற கேள்வி வரணும், அதுதான் அவங்களுக்கு வேணும், அதை எந்த ஸ்கிரிப்ட்டும் இல்லாம நீ செஞ்சுட்ட, அதைதான் சொல்றேன். இப்போவாச்சும் உனக்கு புரியுதா இல்லையா?” என்று அவன் கேட்டதற்கு,

“இருக்கலாம், நீங்க சொல்றது போல இதுதான் அவங்க நோக்கமா இருக்கலாம், கண்டிப்பா புதுசா ஒரு ஷோ நடத்தறாங்கன்னா அதை எல்லோரிடமும் ரீச் ஆக்க நினைப்பது நடப்பது தானே, இதில் என்னை என்ன ஏமாத்தினாங்க எனக்கு புரியல, நமக்குள்ள என்னன்னு இந்த ஷோ பார்ப்பவர்களுக்கு கேள்வி வரணும் ஓகே. அத்தோட அது முடிஞ்சு போச்சு அவ்வளவுதான், ஆனா நமக்குள்ள என்ன? அவங்க நினைப்பது போல ஆமாம் என்பதா? இல்லை என்பதா? இது நாம எடுக்கும் முடிவு தானே,” என்று அவள் பதில் கூற,

“ஆனா உன்னோட ரியாக்‌ஷன் ஆமாம்னு சொல்லுதே,” என்று அவன் கேட்டான்.

“ஆமாம் என்பதா இருக்கணும்னு நான் விருப்பப்பட்றேன் ஸ்வரன், என்னோட மனசு அதைதான் எதிர்பார்க்குது,” என்று அவள் கூற,

“ஆனா நான் இல்லை என்பதா இருக்கணும்னு தான் நினைக்கிறேன்.” என்று சொல்லி அவளை அதிர வைத்தான்.

“என்மேல உனக்கு ஒரு அபிமானம் இருக்கு சப்தமி. அதை நான் ஒத்துக்கிறேன். ஆனா அதை காதலா நீ புரிஞ்சிக்கிட்டு இருக்க, ஏற்கனவே என்மீது உனக்கு இருக்க அபிமானம், தினம் என்னை நீ பார்த்து, பேசி, சிரிச்சு பழகறதால அந்த அபிமானத்தையும் தாண்டி உன்னோட மனசு வேற எதிர்பார்ப்பது இயல்பு தான், ஆனா அது நிறைவேறாது.

ஏன்னா எனக்குன்னு தனிப்பட்ட கனவுகள் இருக்கு, ஒரு நல்ல மியூஸிக் டைரக்டரா ஆகும் வரை என்னால காதல், கல்யாணம் இதிலெல்லாம் கவனம் செலுத்த முடியாது. ஆரம்பமே இந்த நிகழ்ச்சியை ஒத்துக்கிட்டதுக்கு காரணம் என்னோட கனவுக்கு இது ஒரு நல்ல பிளாட்ஃபார்மா அமையும் என்பதால் தான், ஆனாலும் இது ஸ்கிரிப்ட் அடிப்படையில் இல்லைன்னு தெரிஞ்சதுமே எனக்கு இதை ஏன் ஒத்துக்கிட்டோம்னு இருந்தது. கண்டிப்பா உன்னோட மனதில் நான் எந்த சலனத்தையும் ஏற்படுத்தக் கூடாதுன்னு தான் நினைச்சேன். அதுக்காகவே உன்கிட்ட பேசாம ஒதுங்கியிருந்தேன்.

ஆனா அதனால இந்த ஷோ சுவாரசியம் குறைய வாய்ப்பு இருக்கும் என்பதால் தான் உன்கிட்ட கொஞ்சம் நெருக்கமா பழக ஆரம்பிச்சேன். அப்போ கூட இது காதல் தான் அப்படி என்பது போல பேசியிருக்கேனா சொல்லு, ஆனா கொஞ்சம் நெருக்கமா நட்பா பழகினதையே நீ காதல் என்பது போல நினைச்சிக்கிட்ட, அப்படி இல்லன்னு சொல்லணும்னு நினைப்பேன். ஆனா முன்னாடியே சொன்னா அதனால நீ அப்சட் ஆகிட்டா, இந்த நிகழ்ச்சியில் அது பிரதிபலிக்கும், அதுக்கு தான் நான் இதைப்பத்தி முதலிலேயே உன்கிட்ட பேச முடியல,

ஆனா இதுக்கு மேலேயும் பேசலன்னா அது தப்பா போயிடும், நீ படிக்கிற பொண்ணு, இப்போதைக்கு உன்னோட கவனம் படிப்பில் தான் இருக்கணும், இதுக்கு மேல என்ன படிக்கணும் எதிர்காலம் எப்படி இருக்கணும் இதெல்லாம் தான் உன்னோட அடுத்தடுத்த சிந்தனையா இருக்கணுமே தவிர, இந்த காதல் இதெல்லாம் வேண்டாமே சப்தமி. இதை நோக்கி உன்னோட மனசு போக வேண்டாமே, எல்லோருக்கும் முன்ன மேடையில் நாங்க நல்ல ஃப்ரண்ட்ஸா இருப்போம்னு சொன்னேன் தான், ஆனா அது கூட நமக்குள்ள வேண்டாம், அதுதான் நம்ம எதிர்காலத்துக்கு நல்லது.” என்று அவன் கூற அவளும் அமைதியாகவே இருந்தாள்.

“இத்தனை பேசறேன் நீயெதுவும் பேசாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம் சப்தமி,” என்று அவன் கேட்க,

“நீங்க சொன்னதெல்லாம் உண்மையா இருக்க கூடாதுன்னு மனசு எதிர்பார்க்குது ஸ்வரன், இது கனவா இருக்கக் கூடாதான்னு மனசு எதிர்பார்க்குது. நமக்குள்ள ஒன்னுமில்ல என்கிற வார்த்தை என் காதில் கேட்காமலே இருக்கக் கூடாதான்னு நினைக்க தோனுது,” என்று அவள் பதில் கூறினாள்.

“ஆனா இது உண்மை தான், இந்த நிதர்சனத்தை நீ புரிஞ்சிக்கணும் சப்தமி.” என்று அவன் சொன்னதற்கு,

“நீங்க சொல்றதெல்லாம் சரிதான் ஸ்வரன், நான் நல்லபடியா படிச்சு முடிக்கணும், நீங்க மியூஸிக் டைரக்டரா ஆகி சாதிக்கணும், அதுக்குப்பிறகு இந்த காதல் சாத்தியம் தானே ஸ்வரன், ஆனா சுத்தமா நமக்குள்ள எதுவும் இருக்கக் கூடாதுன்னு ஏன் சொல்றீங்க,” என்று அவள் கேட்டாள்.

“இல்லை இதுக்கு இப்பவே முற்றுபுள்ளி வைக்கணும், அதுதான் சரியா இருக்கும் சப்தமி, வரும்காலம் எப்படி இருக்கும்னு யாராலும் எதிர்பார்க்க முடியாது. அதனால இப்பவே உனக்கு நம்பிக்கை கொடுக்க நான் விரும்பல, ஏற்கனவே உன்னோட மனசில் ஏற்பட சலனத்துக்கு நான் காரணமாகிட்டதில் எனக்கு உண்டான குற்ற உணர்வை எப்படி போக்கிக்கறதுன்னு தெரியல, இதில் வேறெதுவும் தப்பா நடந்துடக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன்.

நீ ரொம்ப பக்குவமான பொண்ணு எல்லாம் புரிஞ்சு நடந்துப்பன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, ஆனா அந்த நம்பிக்கை பொய்யா போச்சுன்னா எனக்கு வேற என்ன செய்றதுன்னு தெரியல சப்தமி.” என்று அவன் சொல்லவும், அவளோ பேசாமல் அங்கிருந்து வெளியேற கிளம்பினாள்.

“சப்தமி,” என்று அவன் அவளை அழைக்க,

“நீங்க இவ்வளவு தெளிவா உங்க எண்ணம் என்னன்னு சொன்னதுக்கு பிறகும் நான் நீங்க எனக்கு வேணும், உங்க காதல் எனக்கு வேணும்னு சொல்றது எவ்வளவு கேவலமான விஷயம் தெரியுமா? இதுக்கு மேலேயும் நான் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன் ஸ்வரன், நான் இனி உங்களை சந்திக்கணும்னு கூட நினைக்க மாட்டேன் போதுமா?” என்று கூறியவள், அவனை விட்டு விலகி நடக்க,

“சப்தமி,” என்று மீண்டும் அழைத்தான்.
அவனது அழைப்பிற்கு நின்றவள், ஆனாலும் அவனை திரும்பி பார்க்கவில்லை. அவனோ, “நான் முன்ன சொன்னது போல நீ ரொம்ப பக்குவமான பொண்ணு, தைரியமான பொண்ணும் கூட, அதனால நீ எதுவும் தப்பா,” என்று அவன் சொல்லி முடிக்கவில்லை.

“என்ன தற்கொலை செய்துக்குவேன்னு பயப்பட்றீங்களா? முன்ன ஒருமுறை அந்த எண்ணம் வந்த போது என் மனதை மாற்ற உங்க மியூஸிக் ஆல்பம் இருந்துச்சு, இப்போ அதேபோல வேறெதாவது என்னோட மன மாற்றத்திற்கு காரணமா அமையும், கண்டிப்பா தற்கொலை என்ற எண்ணம் எனக்கு வராது போதுமா? இந்த ஷோ இன்னைக்கு முடிவுக்கு வந்தது போல, நமக்குள்ள இருந்த நட்புக்கும் கூட முற்றுபுள்ளி வச்சாச்சு, அதைதானே நீங்களும் எதிர்பார்த்தீங்க ஸ்வரன், குட்பை.” என்று அவள் சொல்லிவிட்டு செல்லவும், அத்துடன் அந்த வலைத்தொடர் (வெப் சீரீஸ்) முடிவுற்று,

ஆக்கம் – மகாசப்தமி என்ற பெயர் திரையில் மிளிர்ந்தது.

தொடர்ந்து இசைக்கும்..