VMIA 12

இசை 12

பழச்சாறை குடித்துக் கொண்டிருந்த மகாவிற்கோ, அவன் சொன்னதை கேட்டு குடித்தது புறையேறவும், சாய்ஸ்வரனே அவளது தலையை தட்டிவிட, அவனது கையை தட்டிவிட்டு அவனை முறைத்தாள்.

அவனோ அதை கண்டுக் கொள்ளாமல் தண்ணீரை எடுத்து அவளுக்கு பருக கொடுக்க, அதை வாங்கி குடித்தவள், பின்பு சிறிதுநேரம் இருமியபடி இருந்தவளுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி இயல்பு நிலைக்கு வந்ததும், “நீங்க சொன்னது எனக்கு சரியா தான் காதில் விழுந்துச்சா?” என்று அவனிடம் அவள் கேட்க,

“அது எனக்கு எப்படி தெரியும்? வேணும்னா டெஸ்ட் செய்து பார்த்திடலாமா?” என்றவன்,

“உங்க வேலைக்காக என்னை கேட்டீங்கல்ல, அதுக்கு நான் ஒத்துக்கிறேன். இப்பயாச்சும் சரியா கேட்டுதா?” என்று கேட்டு அவன் சிரித்தான்.

“திடீர்னு என்ன? அப்போ உங்க ரியாலிட்டி ஷோ என்னாகும்?” என்று அவள் கேட்க,

“அது என்னோட கவலை. உங்களுக்கு தேவை நீங்க சொன்ன வேலையை நான் முடிச்சுக் கொடுக்கணும் அதானே, அதுக்கு நான் தயாரா தான் இருக்கேன்.” என்றான்.

“உங்க கனவு, லட்சியம் மியூஸிக் டைரக்டர் ஆகறது தானே, இந்த வேலையை நீங்க ஒத்துக்கறதால அதுக்கு ஏதாவது பாதிப்பு வரலாம்னு நீங்க நினைக்கலையா? நினைக்காம எப்படி இருப்பீங்க, கண்டிப்பா நினைச்சிருப்பீங்க, அதனால தானே முதலில் மறுத்தீங்க, இப்போ மட்டும் எப்படி?” என்று அவள் இன்னுமே நம்ப முடியாமல் கேட்கவும்,

“அதான் சொன்னேனே அது என்னோட கவலை. அப்புறம் என்னோட மியூஸிக் ஆல்பங்கள் இருக்கே, அதுவும் என் முன்னேற்றத்திற்கான படிகள் தான், அதில்லாம எந்த லாபமும் இல்லாம உங்க வேலையை செய்து முடிக்கணும்னு எனக்கு அவசியமுமில்ல, புரியுது இல்ல?” என்று அவன் கூற,

“என்ன சொல்ல வர்றீங்க?” என்று புரியாமல் கேட்டவள், “ஓ அதுக்கான சம்பளம் தானே, கண்டிப்பா அது நாங்க தந்திடுவோம்,” என்றாள் அவள்,

“சம்பளமெல்லாம் எனக்கு பெரிய விஷயமில்ல, நான் கேட்கறது வேற, அது எனக்கு கிடைக்கும்னா நான் உங்க வேலையை ஒத்துக்கிறேன்.” என்று அவன் பீடிகையாய் கூறினான்.

உடனே கோபமாக எழுந்தவள், “மிஸ்டர் சாய்ஸ்வரன், உங்களை சுயநலம் பிடிச்சவர்னு தான் நினைச்சேன். ஆனா நீங்க இவ்வளவு மோசமானவர்னு எதிர்பார்க்கல, எவ்வளவு கீழ்த்தரமான எண்ணம் உங்களுக்கு?” என்று அவள் கோபப்பட, ரெஸ்ட்டாரன்டில் அமர்ந்திருந்த மற்றவர்கள் அனைவரும் அவளின் சத்தத்தில் திரும்பி அவர்கள் இருவரையும் பார்த்தனர்.

“மகா என்ன செய்றீங்க? உட்காருங்க முதலில், எல்லாம் நம்ம ரெண்டுப்பேரை தான் பார்க்கிறாங்க, இப்போ நான் என்ன அப்படி தப்பா கேட்டுட்டேன்.” என்று அவன் கேட்க,

“என்னவா?” என்று நின்றபடியே சத்தமாக கேட்டவள், அனைவரும் பார்க்கிறார்கள் என்பதால் மீண்டும் இருக்கையில் அமர்ந்தவள்,

“சம்பளம் வேண்டாம், நான் எதிர்பார்ப்பது வேறன்னா என்ன அர்த்தம்? ஒரு பொண்ணுக்கிட்ட இப்படி பேசினா அது என்ன அர்த்தம் ஆகும்னு உங்களுக்கு தெரியாதா?” என்று அவள் கேட்டாள்.

அவள் சொல்வதின் அர்த்தம் புரிந்தவனோ, “ஓ அதுக்கு தான் நீங்க அவ்வளவு கோபமா பேசினீங்களா? நிறைய சினிமா படம் பார்ப்பீங்க போல, அதான் உங்க கற்பனை தாறுமாறா போகுது. நீங்க நினைக்கிற அளவுக்கு நான் அவ்வளவு பெரிய வில்லனல்லாம் கிடையாது.” என்றவன்,

“ஒரு நல்ல மியூஸிக் டைரக்டர் ஆகறதுக்கு எனக்கு நல்ல ஒரு பிளாட்ஃபார்ம் வேணும் தான், நீங்க செய்றதும் நல்ல விஷயம் தான், அதுக்காக இதுக்கு ஒத்துக்கிறேன். ஆனாலும் இந்த வேலையை ஒத்துப்பதால் அப்புறம் என்னோட கரியர் எந்தமாதிரி ஆகும்னு குறிப்பிட்டு சொல்ல முடியாதில்லையா? ஆனாலும் இதுக்கு நான் ஒத்துக்கிறேன்னா எனக்கு என்னோட கனவு, லட்சியத்துக்கு இணையான இன்னொன்னும் இருக்கு, அதுமட்டும் எனக்கு கிடைக்கும்னா நான் இந்த ரிஸ்க்கை எடுக்கலாம்னு முடிவு செய்துட்டேன்.” என்றான்.

ஆனால் அவன் பேசியது எதுவும் மகாவிற்கு புரியவில்லை. “உங்களுக்கு அப்படி என்னதான் வேணும்? அதை நேரடியா கேளுங்க, அதைவிட்டுட்டு இப்படி குழப்பினா எப்படி?” என்று அவள் கேட்க,

“முதலில் இந்த வேலை முடியட்டும், அதுக்குப்பிறகு அது என்னன்னு சொல்றேன்.” என்ற அவனது பதிலை கேட்டு,

“ஒருவேளை நீங்க கேட்டதை என்னால தரமுடியலன்னா, அப்படி ஒரு சங்கடமான நிலை எனக்கு வர வேண்டாம், அது என்னன்னு நீங்க தெளிவா சொல்லிட்டா, நானும் முடியுமா? முடியாதான்னு தெளிவா சொல்லிடுவேன்.” என்றாள்.

“கண்டிப்பா உங்களால தர முடியும், அதனால் அதைப்பத்தி இப்பவே நினைச்சு டென்ஷன் ஆக வேண்டாம்,” என்று அவன் கூறவும்,

“ஒருவேளை பாதி வேலை முடிஞ்சதும் பின் வாங்கிட்டீங்கன்னா,” என்று அவள் சந்தேகமாக கேட்டாள்.

“முடிவு செய்ததுக்குப் பிறகு தான் உங்கக்கிட்ட பேச வந்தேன். அதனால கண்டிப்பா பின் வாங்கமாட்டேன். வேணும்னா ஒரு அக்ரிமென்ட் கூட போட்டுக்கலாம், எனக்கு ஒரு பிரச்சனையுமில்ல,” என்று அவன் கூறவும்,

‘நேற்று அனிதா கூறியது போல் இன்னைக்கு இந்த நாள் எனக்கு சாதகமா தான் இருக்கு போல,’ என்று மனதிற்கு சொல்லிக் கொண்டாள். ஆனாலும் அவன் எதிர்பார்ப்பது என்னவென்பதும் புரியாமல் அவனிடம் உடனே சரியென்றும் அவளால் கூற முடியவில்லை.

“இது நான் மட்டும் முடிவு செய்ற விஷயமில்ல, என் டீமோட நான் இதைப்பத்தி டிஸ்கஸ் செய்து எல்லோருக்கும் ஓகேவான்னு கேட்கணும், அதுக்குப்பிறகு தான் என்னால முடிவை சொல்லமுடியும்,” என்று அவனிடம் கூறினாள்.

“ஒன்னும் பிரச்சனையில்லை. நீங்க எல்லோரோடவும் டிஸ்கஸ் செய்துட்டு பொறுமையாகவே உங்க முடிவை சொல்லலாம், அதுக்குள்ள நான் மனசெல்லாம் மாறமாட்டேன்.” என்று சாய்ஸ்வரனும் கூற,

“சரி நான் சீக்கிரமா டீம்ல இருக்கவங்களோட பேசிட்டு முடிவை சொல்றேன்.” என்று சொல்லிவிட்டு மகா அவனிடமிருந்து விடைப்பெற்றவள், நேராக அவளது குழுவினரை வழக்கமாக சந்திக்கும் இடத்தில் சந்திக்க சென்றாள்.

அவர்களுக்கும் அங்கே வரும்படி தகவல் தெரிவித்துவிட்டே அவள் அங்கு செல்ல, அவர்களும் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அவர்கள் அனைவரும் அங்கு வந்ததும் அவள் சாய்ஸ்வரனை சந்தித்த விஷயத்தையும், அவன் அவர்களின் வேலை குறித்து சம்மதம் சொன்னதையும் அவள் கூற, யாராலும் அதை நம்பமுடியவில்லை.

“நிஜமாகவே இதைப்பத்தி பேசத்தான் உன்னை சாய்ஸ்வரன் வரச் சொன்னானா மகா?” என்று அனிதாவும் நம்ப முடியாமல் கேட்க,

“எனக்கே இன்னும் நம்ப முடியல தான், ஆனா அதான் நிஜம். அவன் நம்ம வேலைக்கு ஒத்துக்கிட்டான்.” என்று மகா கூற,

“அப்போ அவனோட ரியாலிட்டி ஷோ?” என்று அனிதா கேட்டாள்.

“அது அவனோட பிரச்சனை. அதைப்பத்தி நாம கவலைப்பட வேண்டாம்னு சொல்லிட்டான். ஆனா என்னன்னா,” என்று இழுத்தவள், அவன் பேசியது அனைத்தையும் மற்றவர்களுக்கு கூற,

“அப்படி என்ன அவனுக்கு தேவையா இருக்கும் மகா,” என்று அனிதா கேட்டாள்.

“தெரியலையே, கண்டிப்பா அவன் கேட்டதை என்னால கொடுக்க முடியும்னு சொல்றான். ஆனா அது என்னன்னு தான் எனக்கு தெரியல, அது தெரியாம நாம அவனை எப்படி நம்ம வேலையில் சேர்த்துக்கிறது?” என்று மகா கேட்க,

“அதான் உன்னால தர முடிஞ்சதுன்னு சொல்றானே, அப்புறம் எதுக்கு தயங்கணும், அவனுக்கு நம்மளோட வேலை செய்வதில் சம்மதம்னா உடனே ஒத்துக்கிறது தான் நல்லது. சீக்கிரம் அவனை வச்சு நம்ம வேலையை முடிச்சுடணும், அதைவிட்டுட்டு யோசிக்க கூடாது மகா.

ஒருவேளை அவன் கேட்கிறது உன்னால தர முடியலன்னாலும், நீங்க என்கிட்ட முதலிலேயே சொல்லியிருக்கணும், அப்போ ஏன் நீங்க சொல்லல, இப்போ என்னால நீங்க கேட்பதை தர முடியாதுன்னு அப்போ பிளேட்டை திருப்பி போட்டிடு,” என்று அனிதா கூறியதற்கு,

“அது தப்பில்லையா? வாக்கு கொடுத்துட்டு தவறலாமா?” என்று மகா கேட்டாள்.

“இங்கப்பாரு, சாய்ஸ்வரன் இதுக்கு எப்படியாவது சம்மதிக்கணும்னு நீ எத்தனைநாள் காத்திருந்த, இப்போ வாக்கை நிறைவேத்த முடியுமா? முடியாதான்னு கவலைப்பட்டா எப்படி? இதுன்னு சாய்ஸ்வரன் தெளிவா பேசியிருந்தா பரவாயில்லை. என்னன்னே தெரியாத விஷயத்துக்கு இவ்வளவு ஆழமா ஏன் நீ யோசிக்கணும், அப்போ என்ன வருதோ அதை எப்படி ஹாண்டில் செய்றதுன்னு பார்த்துக்கலாம், இப்போஅவன் ஓகே சொன்னதுக்கு பிறகும் இந்த வாய்ப்பை விடுவது சுத்த முட்டாள்தனம், அதை முதலில் புரிஞ்சிக்கோ,” என்று அனிதா சொல்லவும், மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.

“அப்போ நமக்கு சம்மதம்னு சொல்லலாம்னு சொல்றீயா?” என்று மகா அரை மனதாக கேட்க,

“இப்பவே சம்மதம்னு சொல்லு,” என்று அனிதா அவளை அவசரப்படுத்தினாள்.

மகா உடனே சாய்ஸ்வரனை அலைபேசியில் அழைக்க, உடனே அவள் அழைப்பு ஏற்கப்பட்டு, “ம்ம் சொல்லுங்க மகா,” என்று அவனது குரல் கேட்டது.

“சாய்ஸ்வரன், எங்க டீமிடம் பேசிட்டேன். எல்லோருக்கும் இதில் சம்மதம் தான்,” என்று அவள் கூற,

“உங்களுக்கு சம்மதமா? அதை முதலில் சொல்லுங்க மகா,” என்று அவன் கேட்டான்.

“எனக்கு நீங்க இந்த வேலைக்கு சரியா இருப்பீங்கன்னு தோனி தானே உங்களை வந்து கேட்டேன்.” என்ற அவளது பதிலை கேட்டு,

“ஆமாம் தான், ஆனா இப்போதும் அதே எண்ணம் தானா? அதை சொல்லுங்க,” என்று அவன் கேட்க,

“ரொம்பநாள் பிளான். அதனால நாங்க சீக்கிரம் வேலையை ஆரம்பிக்கணும், அதனால என்னோட முதல் சாய்ஸே ஓகே ஆகுதுன்னா நான் ஏன் வேண்டாம்னு சொல்லப் போறேன்.” என்றாள்.

“எங்க இன்னொருமுறை நீங்க சொன்னதை சொல்லுங்க,” என்று அவன் கேட்க,

“எதுக்கு?” என்று அவள் புரியாமல் கேட்டாள்.

“ப்ளீஸ் சொல்லுங்களேன்.” என்று அவன் கெஞ்சவும், முதலில் சொன்ன வாக்கியத்தை அவள் திரும்ப சொல்ல,

“தேங்க் யூ மகா,” என்றவன், “சரி எப்போயிருந்து வேலை ஆரம்பிக்கும்,” என்று அவளிடம் கேட்டான்.

“அதான் சொன்னேனே சீக்கிரம் ஆரம்பிச்சடலாம், மத்த விஷயங்களும் தயாரானதும் உங்களுக்கு எப்போ வரணும்னு சொல்றேன்.” என்றவள்,

“நீங்க இதுக்கு ஒத்துப்பீங்கன்னு இப்போ கூட என்னால நம்ப முடியல, உண்மையா சொல்லணும்னா நீங்க இந்த வேலைக்கு நோ சொன்னப்போ உங்களை மனசுக்குள்ள, இல்லை இல்லை வாய்விட்டே நல்லா திட்டியிருக்கேன். அந்த மியூஸிக் ஆல்பம் கான்சப்ட்லாம் சும்மா வெளி வேஷத்துக்கு தான்னு கூட நினைச்சேன். புகழ், பணம் மட்டும் தான் முக்கியமா நினைக்கறீங்கன்னு உங்களைப்பத்தி ஒரு முடிவுக்கே வந்துட்டேன். ஆனா இப்போ உங்களை தப்பா நினைச்சதுக்கு சாரி சொல்லிக்கிறேன்.” என்று அவள் மன்னிப்பு கேட்க,

“நீங்க இப்படி வெளிப்படையா பேசறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நான் இந்த வேலைக்கு ஒத்துக்கிட்டதுக்கு காரணம் உங்களுக்கே தெரியுமில்ல, வேலை முடிஞ்சதும் கேட்பேன். மறுக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.” என்று சொல்லி அவன் அலைபேசி அழைப்பை அணைத்திட, அவளுக்கோ அது என்னவாக இருக்கும் என்பதே அவள் சிந்தனை முழுவதையும் ஆக்கிரமித்திருந்தது.

வீட்டிற்கு வந்த பின்பு கூட அனிதாவிடம், “சாய்ஸ்வரன் அப்படி என்னதான் என்கிட்ட எதிர்பார்க்கிறான். உனக்கு ஏதாவது கெஸ் இருக்கா?” என்று மகா கேட்டுக் கொண்டிருக்க,

அனிதாவிற்கு பொறுமை தாங்காமல், “உன்னை கல்யாணம் செய்ய கேட்கறதா இருக்கானோ என்னவோ? எப்படி கெஸ் செய்தாலும் இதைத்தவிர வேற எதுவும் எனக்கு தோன மாட்டேங்குது.” என்று கூறவும்,

“கல்யாணமா? இந்த ஜோக்குக்கு கண்டிப்பா சிரிக்கிறேன்.” என்று பல்லை காட்டி சும்மா சிரித்து விட்டு சென்றாலும், மகாவிற்கு அந்த பேச்சு இனிக்க தான் செய்தது.

ஸ்வரனோடு 30 நாட்கள் நிகழ்ச்சியின் கடைசி படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சியின் கடைசி பாகத்தை சாய்ஸ்வரனின் இசை கச்சேரியோடு நேரடியாக ஒளிப்பரப்புவதென வானம் தொலைக்காட்சி நிறுவனம் முடிவு செய்திருக்க, இறுதி பாகத்திற்கு முந்தைய பாகத்தை இப்போது கடைசியாக படம்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அதற்காக ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்கு அனைவரும் வந்திருந்தனர். இதுபோல் ஷாப்பிங் மாலுக்கு வந்தாலே சப்தமிக்கு தானாகவே உற்சாகம் சேர்ந்து கொள்ளும், ஆனால் இன்றோ அவளது மனம் பாரமாய் கணத்தது.

அதற்கான காரணம் அவள் அறிந்ததே, இதுதான் கடைசி படப்பிடிப்பு, இதற்கு பின் அவள் சாய்ஸ்வரனை இப்படி அடிக்கடி பார்க்க முடியாதே என்பது தான் அவள் உள்ள தவிப்பிற்கு காரணம். இதற்கு பிறகு இவர்கள் சந்தித்துக் கொள்ள போவதேயில்லையா என்றால்? அப்படியில்லை தான், ஆனால் ஒரு நாளின் முக்கால்வாசி பொழுது படப்பிடிப்பு என்ற காரணத்தால் அவனுடனே கழிய, இப்படியே எப்போதும் இருக்க வேண்டுமென்று அவள் மனம் தவிப்பதை என்னவென்று சொல்வது?

எப்போதும் அவன் நட்பு தனக்கு கிடைக்க வேண்டுமென்று ஆரம்ப நாட்களில் அவள் நினைத்ததுண்டு. ஆனால் தற்போதோ எந்த நிமிடமும் அவனை விட்டு பிரியாமல் இருக்க வேண்டுமென்று மனம் ஏங்குகிறதே, அவளின் ஏக்கம் தீருமா?

“ஹேய் இங்க வந்து உட்கார்ந்துட்டு என்ன யோசிச்சிட்டு இருக்க?” சாய்ஸ்வரனின் கேள்வியில் சப்தமி நடப்புக்கு வந்தாள்.

“என்னாச்சு இன்னைக்கு உடம்பு ஏதாவது சரியில்லையா? டல்லா தெரியற? அப்படி ஏதாச்சும்னா சொல்லு, ஷூட்டிங் கேன்சல் செய்துடலாம்,” என்று அவன் கேட்கவும்,

“இல்லை நான் நல்லா தான் இருக்கேன்.” என்று அவள் பதில் கூறினாள்.

“நிஜமாவா? பார்த்தா அப்படி தெரியலையே,” என்று அவன் கூறவும்,

இதேபோல் ஒருநாள் அவன் உடல்நலம் சரியில்லாதபோது அவள் அவனிடம் இப்படி கேட்டது அவளுக்கு நினைவிற்கு வந்தது. அதில் புன்னகைத்துக் கொண்டவள்,

“என் முகத்தை வச்சே, நான் எப்படி இருக்கேன்னு உங்களால கண்டுபிடிக்க முடியுதா ஸ்வரன்?” என்று கேட்டாள்.

“பின்ன உன்னை வச்சு ஷூட்டிங் எடுக்கிறோம் என்ற நினைப்பே வராது. நீ பாட்டுக்கு உற்சாகமா ஆகி, நீ நினைப்பதை அப்படியே பேசிட்டே போவ, இப்போ என்னடான்னா ஒவ்வொன்னுக்கும் என்ன செய்யணும்னு கேட்டுட்டு இருக்க, அதிலேயே தெரியலையா? உனக்கு ஏதோ பிரச்சனைன்னு, அப்படி என்ன பிரச்சினை உனக்கு? உண்மையாகவே உடம்பு சரியில்லையா? இல்ல மூட் அப்சட்டா இருக்கியா?” என்று அவன் கேட்க,

“ரெண்டுமே இல்ல, மனசு தான் கஷ்டமா இருக்கு, இன்னைக்கு பிறகு இதுபோல ஷூட்டிங் நடக்காது இல்ல, உங்களை இப்படி அடிக்கடி சந்திக்க முடியாது தானே, இப்படியே இந்த ஷோ மெகா சீரியல் மாதிரி தொடர்ந்துக்கிட்டே இருந்தா எப்படி இருக்கும்னு தோனுது ஸ்வரன். இந்த ஷூட்டிங் முடிஞ்சு வீட்டுக்கு போக மனசேயில்லை. இப்படியே இங்கேயே இருந்துடலாமான்னு இருக்கு, இப்படியெல்லாம் உங்களுக்கு தோனவேயில்லையா?” என்ற அவளது கேள்வியில் சாய்ஸ்வரனுக்கு ஒருநிமிடம் திக்கென்று ஆனது.

ஆனாலும் அதை மறைத்து சிரித்தான். அதை பார்த்து அவளுக்கு கோபம் வர, “நான் எவ்வளவு ஃபீல் செய்து பேசிட்டு இருக்கேன். நீங்க சிரிக்கிறீங்க? உங்களுக்கு இப்படி எந்த ஃபீலும் இல்லையா ஸ்வரன்.” என்று அவள் கேட்க,

“இங்கப்பாரு சப்தமி. ஆரம்பம்னு ஒன்னு இருந்தா அதுக்கு முடிவும் இருக்கும், இந்த ஷோக்கு இவ்வளவுநாள் தான் கால அளவுன்னு இருக்கு, அந்த கால அளவு முடிஞ்சா ஷோவும் முடியத்தானே வேணும்,” என்றான் அவன்,

“நான் இந்த ஷோ முடியறத பத்தி பேசல ஸ்வரன். இந்த ஷோவோட நம்ம ரிலேஷன்ஷிப்பும் முடிஞ்சிடக் கூடாதுன்னு நினைக்கிறேன். அது உங்களுக்கு புரியலையா?” என்று வருத்தத்தோடு அவள் கேட்க,

“இப்போ இதோட நம்ம உறவு முடிஞ்சிடும்னு உனக்கு ஏன் தோனுது?” என்று அவன் கேட்டான்.

“தோனல, அப்படி ஆகிடக் கூடாதுன்னு நினைக்கிறேன்.” என்று அவள் சொல்ல,

“அப்படி ஆகும்னு ஏன் நினைக்கிற, நீ எந்த காலத்தில் இருக்க, இந்த ஷூட்டிங் முடிஞ்சா நாம பேசவோ பழகவோ மாட்டோமா என்ன? நம்ம நட்பு அதுக்குப்பிறகும் தொடரணும்னு நீதான முன்ன சொன்ன, இப்போ நாம பார்த்துக்கவே போறதில்ல என்பது போல ஏன் நினைச்சு ஃபீல் செய்யணும்?” என்று அவன் கேட்கவும்,

“எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியல ஸ்வரன், நம்ம நட்பு இதோட முடிஞ்சிடாது தான், ஆனா இப்போ போல நாம அடிக்கடி சந்திச்சிக்க முடியுமா? அதுதான் என்னோட யோசனையே,” என்று அவள் சொல்ல,

“மனமிருந்தா எல்லாம் நடக்கும்? தேவையில்லாம குழப்பிக்காத,” என்று அவன் சமாதான வார்த்தைகள் பேச,

“நீங்க மனசு வைப்பீங்களா ஸ்வரன்?” என்று அவள் கேட்டாள்.

அவனால் அதற்கு சட்டென்று பதில் கூற முடியாமல் அவன் திணற, அந்தநேரம் “என்ன அடுத்த சீன்ஸ் ஷூட் செய்யலாமா?” என்று படப்பிடிப்பு குழுவினர் கேட்கவும், இருவருக்குமே அதன்பிறகு அதைப்பற்றி பேசும் சந்தர்ப்பம் வராமலே போனது.

தொடர்ந்து இசைக்கும்..