VMIA 11

இசை 11

ஆரம்பித்த இடத்திலேயே மீண்டும் வந்து நிற்பது போல் தான் மகாவின் நிலை இருந்தது. ஆம் மீண்டும் தங்கள் வேலைக்கான நபரை தேர்ந்தெடுப்பது கடினமான செயலாக அவளுக்கு இருந்தது. இதுவரை நான்கைந்து பேரை பார்த்தும் மகாவிற்கு அந்த அளவு திருப்தியாக இல்லை. “இந்த வேலையை தன்னால் செய்ய முடியாதோ? தேவையில்லாமல் செய்தே தீருவதென அந்த வேலையை இழுத்து பிடித்து வைத்திருக்கிறேனோ? என்றெல்லாம் அவளுக்கு தோன்ற ஆரம்பித்துவிட்டது.

அனிதாவோ, “இதுக்கே சோர்ந்து போகலாமா மகா, நமக்கு தேவையான நபர் மட்டும் கிடைச்சிட்டா, அப்புறம் எத்தனை வேலைகள் இருக்குன்னு நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டியதில்லை. நீ என்னடான்னா வேலையை ஆரம்பிக்கும் முன்னமே இப்படி இருக்க,” என்று குறைபடிக்க,

“முதலில் நமக்கு சரியான நபர் கிடைக்கணுமே, அதுவே நமக்கு சரியா அமையலையே, அப்புறம் தானே மத்ததெல்லாம், எனக்கு என்னமோ இதெல்லாம் எனக்கு சரிவராதோன்னு தோனுது.” என்று மகா கவலையோடு கூறினாள்.

“லூசு மாதிரி பேசாத மகா, எங்க யாருக்கும் தோனாத விஷயம் உனக்கு தோனியிருக்கு, அதிலேயே உன்னோட மனசை எங்களால புரிஞ்சிக்க முடியுது. ஒருவிஷயம் நடந்து முடிஞ்சதுக்கு பிறகு அதுக்காக வருத்தப்படவும், ஆறுதல் சொல்லவும் என்பதோட முடிஞ்சு போகாம உன் தோழிக்காக ஏதாவது செய்யணும்னு நினைக்கிற உன்னோட மனசு இருக்கே, அதுக்கே எல்லாம் நல்லதாகவே நடந்து முடியும், அதனால எதுக்கும் கவலைப்படாம ரிலாக்ஸா இரு புரியுதா?

இத்தனை நாள் நடந்ததை நினைச்சு சோர்வடையாம, நாளைக்கு நாள் நமக்கு சாதகமா இருக்கும்னு நினைச்சு தூங்கு, எல்லாம் வெற்றியா தான் அமையும்,” என்று சொல்லிவிட்டு அனிதா அவளது அறைக்கு சென்றுவிட்டாள்.

ஆனாலும், என்னத்தான் அனிதா நம்பிக்கையாக பேசினாலும், மகாவின் நம்பிக்கை குறைய தான் செய்தது. இதில் அப்போது தேவையில்லாமல் சாய்ஸ்வரன் மீது வேறு அவளுக்கு கோபம் வந்ததது. அவன் மட்டும் அவள் கேட்டவுடனே ஒத்துக் கொண்டிருந்தால் எப்போதோ வேலையை ஆரம்பித்திருக்கலாம், ஆனால் அவனுக்கு தான் அந்த ரியாலிட்டி ஷோ முக்கியமாக போய்விட்டதே, இப்போதோ வேறு யாரும் கிடைக்கவும் இல்லை.

நல்லவேளை சாய்ஸ்வரனை திருமணம் செய்ய நான் சம்மதிக்கவில்லை. அவன் ஒரு சுயநலம் பிடித்தவன், அவனுடைய எதிர்காலத்தை மட்டும் முக்கியமென்று நினைப்பவன், அவனை வேண்டாமென்று மறுத்ததே நான் செய்த நல்ல காரியம். அவன் மறுத்ததற்காகவே நான் இந்த வேலையை வெற்றிகரமாக முடிக்க வேண்டும், என்று மீண்டும் மனதில் முடிவெடுத்துக் கொண்டாள்.

அந்தநேரம் அவளின் அலைபேசி இசைத்தது. வெறும் எண் மட்டுமே திரையில் தெரிந்ததால் யாரென்று தெரியாமல் அவள் அழைப்பை ஏற்று, “ஹலோ,” என்று சொல்ல,

“ஹலோ மகா எப்படி இருக்கீங்க?” என்று மறுமுனையிலிருந்து யாரோ ஆண்குரல் கேட்கவும்,

மனதில் யாரென்ற சந்தேகம் இருந்தாலும், “ஹலோ நீங்க யாருன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்று மகா கேட்டாள்.

“நான்தான் சாய்ஸ்வரன் பேசறேன். என்ன என்னோட நம்பர் உங்களுக்கு தெரியலையா? இந்த நம்பர் மூலமா தானே முதலில் என்கிட்ட பேசினீங்க? ஏன் என்னோட நம்பரை சேவ் செய்து வைக்கலையா?” என்று அவன் கேட்டதற்கு,

அவள் சந்தேகப்பட்டது போல சாய்ஸ்வரன் தான் பேசுகிறான். ஆனால் எதற்காக? என்ற கேள்வி மனதில் இருக்க, “எனக்கு முக்கியமில்லாத, தேவையில்லாதவங்களோட நம்பர்லாம் நான் சேவ் செய்து வைப்பதில்லை. ஆமாம் நீங்க எதுக்கு இப்போ எனக்கு போன் செய்தீங்கன்னு சொல்றீங்களா? எனக்கு நிறைய வேலையிருக்கு,” என்று அவள் படப்படத்தாள்.

“நிறைய வேலையிருக்கா? அப்படின்னா உங்க வேலையை நீங்க ஆரம்பிச்சிட்டீங்க போலயே, என்னைவிட நல்ல ஆளா உங்களுக்கு கிடைச்சிட்டாங்களா?” என்று அவன் கேட்க,

“அதான் உங்களால செய்ய முடியாதுன்னு சொல்லிட்டீங்களே, அப்புறம் அது உங்களுக்கு தேவையில்லாதது. இப்போ நீங்க எதுக்கு போன் செய்தீங்க, அதை சொல்றீங்களா?” என்று அவனை அவசரப்படுத்தினாள்.

“ரிலாக்ஸ் மகா மேடம், இது போன்ல சொல்ற விஷயமில்ல, நான் உங்களை நேரில் பார்க்கணும்,” என்று அவன் சொல்லவும்,

“நேரில் பார்த்து தான் சொல்லணும் என்கிற அளவுக்கு அப்படியென்ன முக்கியம்? எதுவா இருந்தாலும் இப்பவே சொல்லுங்க, உங்களை நேரில் சந்திக்க எனக்கு விருப்பம் இல்லை.” என்று அவள் விருப்பமின்மையை தெரிவிக்க,

“என்ன மகா மேடம், நீங்க ஒரு முக்கியமான விஷயமா நேரில் பார்த்து பேசணும்னு சொன்னபோது நான் உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பை கொடுக்கலையா? இப்போ நீங்க இப்படி சொல்லலாமா? போன்லயே பேசறதுன்னா நான் சொல்லியிருக்க மாட்டேனா?” என்று அவன் கேட்டான்.

அவன் சொல்வதில் இருந்த உண்மை புரிந்ததால், “சரி எப்போ எங்க பார்க்கணும்னு சொல்லுங்க?” என்று அவள் கேட்க,

“அதுக்கு முன்ன, நீங்க உங்க வேலையை ஆரம்பிச்சாச்சா? அதுக்கான ஆள் கிடைச்சுட்டாங்களான்னு நான் முதலில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க,” என்றான்.

“இன்னும் இல்ல, உங்களைவிட ஒரு பெட்டர் சாய்ஸா தேடிட்டு இருக்கேன். கூடிய சீக்கிரம் கிடைச்சிடுவாங்க,” என்று அவள் கூறவும்,

“என்னைவிட பெட்டர் சாய்ஸா? அப்போ ரொம்ப கஷ்டம் தான்,” என்ற அவனது பதிலை கேட்டு,

‘ரொம்ப திமிர் தான் இவனுக்கு, நான் இவனை வேண்டாம்னு சொன்னது சரிதான்,’ என்று இரண்டாவது முறையாக மனதில் சொல்லிக் கொண்டவள்,

“ரொம்பவே தன்னடக்கம் உங்களுக்கு, சரி எங்க வரணும்னு சீக்கிரம் சொல்லுங்க,” என்று கேலியும் கோபமுமாக அவள் கேட்க, அவனோ அவள் வர வேண்டிய இடத்தை சொல்லிவிட்டு அலைபேசி அழைப்பை அணைத்தான்.

அவளுக்கோ அவன் எதற்காக தன்னை வரச் சொல்லியிருப்பான் என்பது புரியாமல் குழம்பியவள், ‘ஒருவேளை அவனை தான் தனக்காக வரன் பார்த்திருந்தார்கள் என்பது அவனுக்கு தெரிய வந்திருக்குமோ, அதைகுறித்து பேசதான் தன்னை அழைக்கிறானோ?’ என்ற எண்ணம் மனதில் தோன்ற,

“ச்சே இருக்காது, அதான் அம்மா, அப்பாவிடம் வெளிப்படையாக தனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டோமே, அப்படி சொன்னபிறகும் அவர்கள் சாய்ஸ்வரன் வீட்டில் எப்படி பேசியிருப்பார்கள். அதனால் அது விஷயமாக இருக்காது.” என்ற தீர்மானத்திற்கு வந்தாள்.

ஆனாலும் பின் வேறு என்ன காரணத்திற்காக சாய்ஸ்வரன் தன்னை அழைக்க கூடும்? என்பது புரியாததால், உடனே விஷயத்தை தன் தோழியிடம் கூற அவளது அறைக்கு விரைந்து சென்றாள்.

அனிதா அப்போது தான் உறங்குவதற்கு தயாராக, ‘அனிதா, அனி,” என்று தோழி படப்படப்போடு வரவும்,

“என்னாச்சு மகா,” என்று எழுந்து அமர்ந்தபடி அவள் கேட்க,

“சாய்ஸ்வரன் இப்போ தான் போன்ல பேசினான். நாளைக்கு என்னை நேரில் சந்திக்கணும்னு சொல்றான்.” என்று மகா விஷயத்தை கூறினாள்.

அனிதாவிற்கோ தோழி சொன்னதை நம்பமுடியாமல், “என்ன சொல்ற மகா, சாய்ஸ்வரன் உன்னை பார்க்கணும்னு சொன்னானா? என்ன விஷயம்னு கேட்டீயா?” என்று கேட்க,

“அதை நேரில் தான் சொல்வானாம், நான் அவனை சந்திக்க விருப்பம் இல்லன்னு சொன்னதுக்குப்பிறகும் கூட, நீங்க கூப்பிட்டப்போ நான் வந்தேனே, அதேபோல நீங்களும் வரலாமேன்னு கேட்டான். சரின்னு ஒத்துக்கிட்டேன்.” என்று மகா கூறவும்,

“எதுக்கா இருக்கும், ஒருவேளை உங்க கல்யாண விஷயமா பேசவோ?” என்று அனிதா கேட்டாள்.

“கல்யாணமா? விட்டா எங்களுக்கு கல்யாணம் நடத்தி வச்சிட்டு தான் மறுவேலை பார்ப்ப போல, என்னோட அப்பா, அம்மா கண்டிப்பா எனக்கு பிடிக்கலன்னு தெரிஞ்சதுக்கு பிறகு அதோட விட்டுவிடுவாங்க, அதனால சாய்ஸ்வரன் பர்சனலா பேச கூப்பிடலன்னு தான் தோனுது.” என்று மகா சொல்ல,

“அப்போ வேற எதுக்காம்?” என்று அனிதா கேட்க,

“அதான் எனக்கும் தெரியல, எதுவா இருந்தாலும் நாளைக்கு தெரிஞ்சிட போகுது. பார்க்கலாம் என்னன்னு?” என்று மகா கூறினாள்.

“நான் வேணும்னா உன்னோட வரவா மகா,” என்று அனிதா கேட்டதற்கு,

“தேவையில்லை அனிதா, சாய்ஸ்வரன் என்ன சிங்கமா? இல்லை புலியா? நானே தனியா போய் சந்திக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு மகா தனதறைக்கு வந்தவளுக்கு, என்னதான் அனிதாவிடம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு வந்தாலும், சாய்ஸ்வரன் எதற்கு தன்னை அழைத்திருப்பான் என்ற கேள்வியே அந்த இரவு அவளுக்கு உறங்கா இரவாக அமைந்தது.

இப்போதெல்லாம் எந்த வலைத்தளங்களில் எடுத்தாலும் சாய்ஸ்வரன் சப்தமியை பார்க்காமல் இருக்க முடியாது. அந்த அளவு இருவரும் வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்க, சப்தமியின் குடும்பத்தார்களோ சப்தமியின் அன்னையிடம் தான் கேள்விகள் கேட்டு பிரச்சனை செய்துக் கொண்டிருந்தனர்.

“ஏதோ ரியாலிட்டி ஷோன்னு தானே சொன்ன, இப்போ என்ன அதில் இல்லாத கூத்தெல்லாம் நடக்குது. நம்ம உறவுக்காரங்க என்னல்லாம் பேசறாங்க தெரியுமா? ஏற்கனவே நீ டைவர்ஸ் வாங்கிட்டு வந்ததை பத்தி பேசின பேச்சுக்களே இப்போதான் சுத்தமா நின்னு போயிருந்தது. இப்போ திரும்ப உன் பொண்ணால பேச்சு வாங்க வேண்டியிருக்கு, இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ?” என்று அவரின் பெற்றோரர் மற்றும் சகோதரர்களின் பேச்சு இருந்தது.

இதில் சப்தமியின் தந்தையோ, “என்னமோ நான் உன்னை அடிமை மாதிரி நடத்துவதா பேசுவ, இப்போ உன்னோட சுதந்திரத்தை இப்படி தான் கீழ்த்தரமா பயன்படுத்துவியா? உன் பொண்ணை வச்சு இப்படி சம்பாதிச்சு பெரிய ஆளா ஆக பார்க்கிறீயா? இதுக்கு தான் டைவர்ஸ் வேணும்னு கேட்டீயா? இது உனக்கே கேவலமா இல்லை.” என்று மிகவும் மோசமாக பேச,

“அதுதான் அவ என்னோட பொண்ணுன்னு சொல்லிட்டீங்களே, நாங்க என்ன வேணும்னாலும் செய்துட்டு போறோம், அதில் உங்களுக்கு என்ன கவலை? உங்க ரெண்டாவது மனைவி உங்க குடும்பம்னு உங்க வேலையை மட்டும் பாருங்க,” என்று சப்தமியின் அன்னையும் பதிலுக்கு திமிராகவே பேசினார்.

“உன்னோட உறவும் முறிச்சிக்கிட்டாலும் என் பொண்ணோட உறவு வேணும்னு நினைச்சேன். ஆனா அவளும் எனக்கு என்ன அவமானத்தை தேடி வருவாளோ? அதனால பொண்ணு என்கிற உறவு எனக்கு தேவையே இல்லை.” என்று சப்தமியின் தந்தை தீர்மானமாக சொல்லிவிட்டார்.

இதற்காகவெல்லாம் சப்தமியின் அன்னை வருத்தப்படவில்லையென்றாலும், இந்நிகழ்ச்சி செல்லும் திசை குறித்து அவருக்கும் கொஞ்சம் கவலையாக தான் இருந்தது. அதனால் மகளை உடனே அலைபேசியில் அழைத்தவர், “சாய்ஸ்வரனோட ரசிகையா இந்த ப்ரோகிராம்ல கலந்துக்க போறதா நீ சொன்ன தானடா? இப்போ இந்த ப்ரோகிராம் என்ன இப்படி போயிட்டு இருக்கு,

என்னென்னமோ மீம்ஸ், வீடியோன்னு போட்டுட்டு இருக்காங்க, இதில் ஏதோ அந்த பையனோட போய் பொட்டீக் வேற திறந்து வச்சிருக்க, அதைப்பத்தி என்கிட்ட நீ எதுவும் சொல்லலையே?” என்று கேட்க,

முதலிலேயே சொன்னால் அன்னை தடுத்து விடுவாரோ என்று பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று சாய்ஸ்வரனோடு இருக்க நேரத்தை நினைத்து அதை விட்டுவிடக் கூடாது என்று அவரிடம் சொல்லாமல் விட்டுவிட்டாள். அடுத்தோ அந்த விழா வேறு வலைத்தளங்களில் அனைவராலும் பார்க்கப்பட்டதும், இப்போது எப்படி அன்னையிடம் இதற்கு விளக்கம் கொடுப்பது என்று புரியாமல் குழம்பியவள், அவரே கேட்டால் சொல்லிக் கொள்ளலாம் என்று பேசாமல் இருந்துவிட்டாள்.

இப்போது அவள் நினைத்தது போல் அன்னையே தன்னிடம் கேட்கவும், “அம்மா இதெல்லாம் ஷோ எல்லோரிடமும் ரீச் ஆக செய்றது ம்மா, முதலிலேயே உங்கக்கிட்ட பர்மிஷன் கேட்க நினைச்சேன் தான், ஆனா நீங்க இதுக்கெல்லாம் போக வேண்டாம்னு சொல்லிட்டீங்கன்னா என்ன செய்றது? அதான் உங்கக்கிட்ட அப்புறம் சொல்லிக்கிலாமனு நினைச்சு கிளம்பி போயிட்டேன்.

அதில்லாம இப்போ சாதாரண ஆளுங்களே சின்னதா ஒரு விஷயம் செஞ்சா அதை சோஷியல் மீடியால போட்டு பேமஸ் ஆக்கப் பார்க்கிறாங்க, அப்படியிருக்க இந்த ஷோ முன்னனி சேனலில் டெலிகாஸ்ட் ஆகுது. அப்போ அதை ட்ரண்ட் ஆக்க மாட்டாஙகளா? இதுக்கெல்லாம் பயந்துக்காதீங்க ம்மா,” என்று அவரை சமாதானப்படுத்தினாள்.

“இதிலெல்லாம் நீ சொல்றது சரி டா. ஆனா இதை உன்கிட்ட கேட்கறதுக்கே எனக்கு தயக்கமா இருக்கு, அம்மாவா நான் உன்னை தப்பா நினைக்கல, ஆனா எல்லாம் சொல்றதும் ஏன் நானே அந்த ப்ரோகிராமை பார்க்கும் போதும், உங்களுக்குள்ள நட்பை தாண்டி ஏதோ இருக்கறது போல இருக்கே, இது உண்மையா? இல்லை இதுவும் ஷோ ரீச் ஆகணும்னு அவங்களா சொல்லிக் கொடுத்து செய்றீங்களா?” என்று அவர் கேட்கவும்,

‘இது உண்மை தான் ம்மா, உண்மையா ஆகணும்னு தான் நான் ஆசைப்பட்றேன். என் வாழ்க்கையில் சாய்ஸ்வரன் எப்போதும் இருக்கணும்னு மனசு சொல்லுது. ஆனா அதை இப்போ உங்கக்கிட்ட சொன்னா நீங்க எப்படி புரிஞ்சிப்பீங்கன்னு தெரியல,’ என்று மனதில் சொல்லிக் கொண்டவள்,

“இதுவும் ஷோ ரீச் ஆக செய்றது தான் ம்மா, மத்தப்படி இது உண்மையெல்லாம் கிடையாது. நீங்க எதுக்கும் கவலைப்படாதீங்க,” என்று சொல்லி தன் அன்னையை சமாதானப்படுத்த, அவரும் அரை மனதாக அதை ஏற்றுக் கொண்டவர், அலைபேசி அழைப்பை அணைத்தார்.

சப்தமி தன் அன்னையிடம் ஒரு பேச்சுக்காக இப்படி சொல்லியிருந்தாலும், உண்மையிலேயே இது இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்காக மறைமுகமாக நடத்தப்படும் நாடகம் தான் என்ற நிஜம் அவளுக்கு தெரிய வரும்போது அவளால் அதை தாங்கிக் கொள்ள முடியுமா?

மறுநாள் சாய்ஸ்வரன் சொன்ன ரெஸ்ட்டாரன்ட்டிற்கு வந்த மகா, சாய்ஸ்வரனும் வந்துவிட்டானா? என்று பார்வையால் அவனை தேட, ஒரு ஓரமாக இருக்கையில் அமர்ந்திருந்தவன், அவளை கைக்காட்டி கூப்பிட, அவளும் அவனை கண்டுக் கொண்டவளோ, அவனை நோக்கிச் சென்றவள், அவனது இருக்கைக்கு எதிரே அமர்ந்து, “சொல்லுங்க, எதுக்கு என்னை நேரில் பார்க்கணும்னு சொன்னீங்க?” என்று கேட்க,

“இருங்க மகா, ஏன் இவ்வளவு அவசரப்பட்றீங்க, ரெஸ்ட்டாரன்ட்க்கு வந்திட்டு எதுவும் சாப்பிடாம உடனே இந்த விஷயத்தை பேசணும்னு சொன்னா எப்படி? முதலில் ஏதாவது சாப்பிடுங்க, அப்புறம் பேசலாம்,” என்று அவன் கூறினான்.

“இங்கப்பாருங்க, எனக்கு எதுவும் சாப்பிட்ற மூட் இல்ல, எனக்கு பசிக்கவும் இல்ல, அதனால எனக்கு எதுவும் வேண்டாம்,” என்று அவள் கூறவும்,

“ஆனா எனக்கு பசிக்குதே, ரெஸ்ட்டாரன்ட்க்கு தானே போறோம்னு எதுவும் சாப்பிடாம வந்துட்டேன். அதனால எனக்கு ஏதாவது ஆர்டர் செய்யணும், எனக்கு மட்டும் ஆர்டர் செய்துட்டு, உங்களை பார்க்க வச்சு சாப்பிட்றதா? அது நல்லா இருக்குமா சொல்லுங்க?” என்று அவன் கேட்டதற்கு கடுப்பானவள்,

“சரி எனக்கு ஒரு ஃப்ரூட் ஜூஸ் மட்டும் போதும், உங்களுக்கு என்ன வேணுமோ ஆர்டர் செய்துக்கோங்க,” என்று கூறினாள்.

அவனும் அதன்பின் தனக்கு தேவையானதையும் அவளுக்கான பழச்சாறையும் ஆர்டர் கொடுத்ததும், அதான் ஆர்டர் கொடுத்தாச்சே, அதெல்லாம் கொண்டு வர கொஞ்சநேரம் ஆகும், அதுவரை நீங்க எதுக்காக வரச் சொன்னீங்க என்ற விஷயத்தை சொல்லலாமே?” என்று மகா கேட்க,

“இருங்க ஆர்டர் கொடுத்தது வரட்டும் சாப்பிட்டுக்கிட்டே பேசலாம், ஒருவேளை இப்பவே நான் விஷயத்தை சொன்னதும், கோபப்பட்டு சாப்பிடாம போயிட்டீங்கன்னா?” என்றான்.

‘அப்படி கோபப்படும் அளவுக்கு என்ன பேசப் போகிறான்?’ என்று அவள் மனதில் நினைத்து குழம்பியவள்,

“அப்போ சாப்பிட்டு முடிச்சதும் சொல்லுங்க, சாப்பிட்டுட்டு இருக்கும்போது சொல்லி, அப்போ கோபத்தில் நான் ஜூஸை உங்க முகத்தில் ஊத்திட்டா என்ன செய்றது?” என்று அவனிடம் கேட்டாள்.

“நல்லவேளை ஜூஸ் ஆர்டர் செய்தீங்க, இதுவே டீ, காஃபின்னு ஹாட்டா ஏதாச்சும் ஆர்டர் செய்திருந்தா என்னோட நிலை என்னாகியிருக்கும்?” என்று அவன் கேட்க,

“எதுக்கு இதெல்லாம்? அதுக்கு நீங்க போன்லயே இந்த விஷயத்திலேயே சொல்லியிருக்கலாம்,” என்று அவள் கடுப்போடு கூறினாள்.

“இப்படி கோபப்படும் அளவுக்கு என்ன விஷயம்னு கேட்க மாட்டீங்களா?” என்று அவன் கேட்க,

“எப்படியோ சாப்பிடும்போது சொல்றேன்னு சொல்லப் போறீங்க, அப்புறம் திரும்ப திரும்ப அதையேன் கேட்பானேன்.” என்று அவள் கூறவும், “பரவாயில்லை கொஞ்ச நேரத்திலேயே என்னை புரிஞ்சிக்கிட்டீங்க,” என்று சொல்லி அவன் புன்னகைத்துக் கொண்டான்.

அவளோ அதற்கு மனதிலேயே அவனை திட்டி தீர்த்தாள். இப்படி அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே, அவன் ஆர்டர் செய்த உணவு வரவும், அவளுக்கான பழச்சாறை அவனே அவளிடம் எடுத்துக் கொடுத்தவன், அவள் குடிக்கும் நேரமாய், “நான் உங்க வேலையை ஒத்துக்கலாம்னு இருக்கேன்.” என்று சொல்லி அவளை அதிரவைத்தான்.

தொடர்ந்து இசைக்கும்..