VMIA 10

இசை 10
ஒரு துணி கடை திறப்பு விழாவிற்கு விருந்தினராக சாய்ஸ்வரன் மற்றும் சப்தமியை அழைத்திருந்தனர். அவர்கள் இருவரும் தான் அந்த கடையை திறந்து வைக்க வேண்டுமென்றும் அன்பான வேண்டுக்கோளும் விடுத்திருந்தனர்.
சப்தமிக்கு இதெல்லாம் புதிது. அவளது குடும்பத்திலேயே நெருக்கமான சொந்தங்களை தவிர்த்து தூரத்து உறவினர்களுக்கு இவளை யாரென்று கூட தெரியாது. ஏதாவது விஷேஷத்தில் பார்த்தால் கூட, “யாரிது புதுசா? யார் வீட்டு பொண்ணு,” என்று தான் கேட்பார்கள்.
பள்ளி, கல்லூரியிலும் கூட அப்படித்தான், நெருக்கமானவர்களை தவிர மற்றவர்களுக்கு அவளை அந்த அளவுக்கு தெரியாது. இப்போதானால் இத்தனை விரைவில் அனைவருக்கும் தெரிந்த பிரபலமாகிவிட்டிருந்தாள். வெளியில் சென்றாளோ இல்லை கல்லூரியிலோ அவளைப் பார்த்தால் போதும், தானாகவே அவர்களே வந்து பேசுவது. அவளுடன் நின்று செல்ஃபி எடுத்து கொள்வது என்ற செயல்களே அவளுக்கு ஒரு கர்வத்தையும் பெருமிதத்தையும் தர, இப்போதோ இப்படி ஒரு அழைப்பு அவளுக்கு நம்பவே முடியாத அதிசயமாக இருந்தது.
இருவரையும் தனித்தனியே வலைத்தளம் மூலம் அழைத்திருந்தனர். அதனால் அவர்களுக்கு சாய்ஸ்வரன் என்ன பதில் அளித்திருப்பான் என்று தெரியாததால் சப்தமி உடனே அவனை அலைபேசியில் அழைத்தாள்.
சில நொடியில் அழைப்பை ஏற்றவன், “சொல்லு சப்தமி,” என்று பேசவும்,
“ஸ்வரன், ஒரு பொட்டீக் திறப்பு விழாவிற்கு என்னை இன்வைட் செய்திருக்காங்க, கூட உங்களையும் இன்வைட் செய்திருப்பதாகவும் சொன்னாங்க, கண்டிப்பா நம்ம வந்து திறந்து வைக்கணும்னு ரெக்வெஸ்ட் கொடுத்திருக்காங்க, உங்களை இன்வைட் செய்தது உண்மை தானே?” என்று அவள் கேள்வியெழுப்ப,
“ம்ம் ஆமாம் இன்வைட் செய்திருக்காங்க தான், உன்னையும் இன்வைட் செய்யப் போறதா தான் சொன்னாங்க, ஆனா கட்டாயம் போகணுமான்னு தான் யோசனையா இருக்கு,” என்று அவன் கூறவும், அவளுக்கு ஏமாற்றமாகிவிட்டது.
“ஏன் போனா என்ன ஸ்வரன்?” என்று அவள் பாவமாய் கேட்க,
“இது தேவையில்லாததுன்னு தோனுது,” என்றான்.
“ஏன் தேவையில்லாதது, இப்போ நம்ம ஷோ டிவியில் டெலிகாஸ்ட் ஆகிட்டு இருக்க இந்த சமயத்தில் இந்த மாதிரியான ஈவன்ட்க்கு போனா அது நம்ம ஷோக்கு இன்னும் ரீச் கிடைக்கும்தானே,” என்று அவள் கூற,
“ஆமாம் தான், ஆனா சும்மாவே ஏதாவது வீடியோ, மீம்ஸ்னு போட்டுட்டு இருக்காங்க, இதில் இந்தமாதிரி நாம சேர்ந்து போனா அது இன்னும் அதிகமா பேச காரணமா ஆகிடாதா?” என்று அவன் கேட்டான்.
“ஷோ நடந்துட்டு இருக்கும்போது தானே போகிறோம், ஷோ முடிஞ்சதுக்கு பிறகு இப்படி ஒன்னா சுத்தினா தான் நிறைய காசிப் வரும், இப்போ நம்ம ஷோக்கு ரீச் தான் கிடைக்கும்,” என்று அவள் கூறவும்,
“ம்ம் பரவாயில்லை உனக்கும் மூளை இருக்கு,” என்று அவன் சொல்ல,
“ஹலோ அப்போ இதுக்கு முன்ன எனக்கு மூளை இல்லைன்னு நீங்க சொல்றது போல அர்த்தம் ஆகுது.” என்று செல்ல கோபத்தோடு கூறினாள்.
“இல்லை இப்போ ரொம்ப பவர்ஃபுல் மூளைன்னு சொல்ல வந்தேன்.” என்று அவன் சமாளிக்கவும்,
அதை ரசித்தவள், “அப்போ நாம அந்த ஈவன்ட்க்கு போகிறோம் தானே,” என்று ஆவலோடு கேட்டாள்.
“சரி போகலாம், யாருக்கோ நம்மளை வச்சு அவர் கடையை திறக்கணும்னு ஆசை வந்திருக்கு, அதை ஏன் கெடுப்பானேன். அதனால போகலாம்,” என்று அவன் சொல்லவும்,
“தேங்க் யூ, தேங்க் யூ சோ மச்,” என்று சொல்லியவள், அவனுடன் சிறிது நேரம் பேசிவிட்டு, இன்னும் ஒரு வாரம் கழித்து நடக்கும் திறப்பு விழாவிற்கு இப்போதே என்ன உடை உடுத்தலாம் என்று அவளது வார்ட்ரோபை ஆராய தொடங்கினாள்.
இதுவரை ஒளிப்பரப்பான பாகங்களை வைத்து இந்த நிகழ்ச்சி தான் இப்போதைக்கு எல்லா நிகழ்ச்சிகளிலும் முன்னனியில் இருக்க, வானம் தொலைக்காட்சியின் தலைமை பொறுப்பில் இருப்பவருக்கு மிக்க மகிழ்ச்சியாகிவிட்டது.
அந்த நிகழ்ச்சிக்கான யோசனை கூறியவரும் உடனிருக்க, “உங்க ஐடியா வீண் போகல, நம்ம ஷோக்கு நல்ல ரீச் கிடைச்சிருக்கு, ஆனா இன்னும் நீங்க சொன்னதுபோல இந்த ஷோவில் லவ் ட்ராக்ல வரலையே?
இப்பவே அவங்க ரெண்டுப்பேரையும் வச்சு மீம்ஸ், வீடியோன்னு போட்டாலும், அவங்களுக்குள்ள என்ன? வெறும் ஃப்ரண்ட்ஷிப்பா? இல்லை அதையும் தாண்டி ஏதாவதான்னு மக்களுக்கு கேள்வி வரணும், அதான் இந்த ஷோவோட சக்ஸஸ். நீங்க இந்த ஷோ பத்தி ஐடியா கொடுக்கும்போது என்ன சொன்னீங்க? இது கண்டிப்பா லவ் ட்ராக்ல போகும்னு தானே சொன்னீங்க, அப்படியில்லன்னா அந்த ட்ராக்ல அதை நாமளே கொண்டு போகலாம்னு சொன்னீங்களே, ஆனா ஷோ பாதி அளவு வந்தாச்சு, ஆனா இதுவரையில் அப்படி எதுவும் நடப்பது போல தெரியல, அதனால நாம தான் ஏதாவது செய்யணும்னு போலயே,” என்று அந்த தலைமை பொறுப்பில் இருப்பவர் கூறவும்,
“நீங்க தேவையில்லாம டென்ஷன் ஆகாதீங்க சார், கண்டிப்பா நாம நினைச்சது போல இந்த ப்ரோகிராம் லவ் ட்ராக்ல போகும், ஷோ பார்க்கறவங்களுக்கு கண்டிப்பா இவங்களுக்குள்ள என்ன? அப்படிங்கிற கேள்வி வரும், சப்தமியோட வயசுக்கு கண்டிப்பா சாய்ஸ்வரன் மீது ஒரு ஈர்ப்பு கண்டிப்பா உண்டு. ஆனா சாய்ஸ்வரன் தான் அப்படி ஏதும் ஆகிடக் கூடாதுன்னு கவனமா இருக்கார்.
ஆனா இனி அதைப்பத்தி யோசிக்க வேண்டாம், நான் சாய்ஸ்வரன் கிட்ட பேசிட்டேன். அவரும் கண்டிப்பா இதைப்பத்தி யோசிப்பாருன்னு தான் நினைக்கிறேன். அதனால இந்த ஷோ கண்டிப்பா நாம நினைச்சது போல போகும்,” என்று அவர் கூறவும், தலைமை பொறுப்பில் இருப்பவரும் அதை ஏற்றுக் கொண்டார்.
திறப்பு விழா நாளும் வந்தது. சாய்ஸ்வரனும் சப்தமியும் வருவது அறிந்து ஒரு யூட்யூப் சேனல் அந்த நிகழ்ச்சியை லைவ்வாக தங்களது சேனலில் ஒளிப்பரப்ப தயாராகிக் கொண்டிருந்தது. அதில்லாமல் இரண்டு மூன்று புகைப்பட நிபுணர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, சாய்ஸ்வரனும் சப்தமியும் வந்து இறங்கியதில் இருந்து அவர்களை புகைப்படமாக எடுத்து கொண்டிருந்தனர்.
சப்தமிக்கு இதெல்லாம் புதுவித அனுபவமாக இருக்க, ஒருவித பதட்டமும் அவளை சூழ்ந்து கொள்ள, சாய்ஸ்வரனோ அதை உணர்ந்து அவளின் கைகளை இதமாக அழுத்தி, “ரிலாக்ஸ்,” என்று சொல்ல, அது கேமராவின் கண்களுக்கு தப்பாமல் பதிவானது.
அந்த கடையின் உரிமையாளர் அவர்களை வந்து வரவேற்றவர், “நான் அழைத்ததும் மறுக்காம இந்த திறப்பு விழாவிற்கு வந்ததில் ரொம்ப சந்தோஷம்.” என்றவர்,
ஒரு பெண்ணை அருகே அழைத்து, “இவ என்னோட பொண்ணு அஞ்சலி. +1 படிக்கிறா, இவ பேரில் தான் இந்த பொட்டீக் திறக்கிறேன். இவ உங்க ஷோவை விடாம பார்ப்பா, உங்க ஷோ இவளுக்கு ரொம்ப பிடிக்கும், உங்க ரெண்டுப்பேரையும் கூட இவளுக்கு ரொம்ப பிடிக்கும், இவ தான் நீங்க ரெண்டுப்பேரும் வந்து இந்த பொட்டீக்கை திறக்கணும்னு ஆசைப்பட்டா,” என்று கடை உரிமையாளர் சொல்லவும், இருவருக்கும் அது பெருமையாக இருந்தது.
“நாம செல்ஃபி எடுத்துக்கலாமா?” என்று அந்த பெண் இருவரிடமும் கேட்கவும், அவர்களும் ஒத்துக் கொள்ள அந்த பெண் அவர்களோடு செல்ஃபி எடுத்துக் கொண்டாள்.
அடுத்து கத்தரிக்கோலை கொடுத்து அவர்களிடம் கடையின் நுழைவு வாயிலில் ரிப்பன் கட்டியிருக்க, அதை கத்தரித்து அந்த கடையை திறக்க சொல்லி கூற, சப்தமியோ சாய்ஸ்வரன் காதருகே சென்று, “இந்த அஞ்சலி மாதிரி தான் நானும் செலப்ரிட்டிஸ்னா வாயைப்பிளந்துக்கிட்டு செல்ஃபி எடுக்கணும்னு நினைப்பேன். ஆனா இப்போ என்னோட செல்ஃபி எடுக்க எத்தனைபேர் விரும்பறாங்க, நினைச்சாலே வியப்பா இருக்கு,” என்று சொல்லி சிலிர்த்தாள்.
“அடுத்து வாங்க ரிப்பன் கட் பண்ணலாம்,” என்று அவனை அழைக்க,
“நீயே கட் பண்ணு, நான் கூட இருக்கேன்.” என்று அவன் கூறவும்,
“நம்ம ரெண்டுப்பேரும் தானே திறந்து வைக்கணும்னு சொன்னாங்க, அப்புறம் என்ன?” என்றாள் அவள்,
அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த உரிமையாளரோ, “இன்னொரு கத்தரிக்கோல் கொடுக்கவா?” என்று அவர்களிடம் கேட்க,
“இல்லை ஒன்னே போதும்,” என்ற சப்தமி,
“நீங்களும் பிடிங்க, நாமே சேர்ந்தே கட் பண்ணலாம்,” என்று அவனிடம் கூற, அவன் அவளது கைப்பிடிக்கவும், இருவரும் சேர்ந்தே ரிப்பன் கத்தரித்து அந்த துணி கடையை திறந்து வைத்தனர்.
பின் அந்த துணி கடையை இருவரும் அப்படியே பார்வையிட்டுக் கொண்டு வர, “துணி கடையை மட்டும் நாம திறந்து வச்சா போதாது. நாமளும் இங்க ஏதாவது ஷாப்பிங் செய்யணும், அப்போ தான் நமக்கும் மதிப்பா இருக்கும்,” என்று சாய்ஸ்வரன் சப்தமியிடம் கூற,
“அய்யோ நான் அந்த அளவு பணம் கொண்டு வரலையே, கார்டும் வீட்டிலேயே வச்சிட்டு வந்துட்டேன்.” என்று அவள் பதட்டத்தோடு கூற,
“கவலைப்படாத என்கிட்ட பணம் இருக்கு, உனக்கு என்ன வேணுமோ எடுத்துக்கோ,” என்று அவன் சொல்லவும்,
“நிஜமாவா,” என்று கண்கள் மின்ன கேட்டவள், உடனே பெண்களின் ஆடைப்பகுதி எங்கேயென கேட்டு அங்கே விரைய, அவளை அவன் புன்னகையோடு பார்த்திருக்க, அவையாவும் யூட்யூப் சேனலில் நேரடியாக ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது.
தனியாக ஷாப்பிங் சென்று பழக்கமில்லாததால் அவளுக்கு எந்த ஆடையை தேர்ந்தெடுப்பது என்று குழப்பமாக, அவனை அருகே அழைத்து, “இதில் எந்த ட்ரஸ் எனக்கு நல்லா இருக்கும்னு சொல்லுங்களேன்.” என்று அவள் கேட்க,
“எனக்கு என்ன தெரியும், உனக்கு பிடிச்சதை எடு,” என்று அவன் கூறவும்,
“பளீஸ், எனக்கு எதை எடுக்கன்னே புரியல, எல்லாம் நல்லா இருக்க மாதிரியும் இருக்கு, நல்லா இல்லாத மாதிரியும் இருக்கு, அதனால உங்களுக்கு பிடிச்ச ஏதாவது ஒன்னை சொல்லுங்க, அதையே நான் எடுத்துக்கிறேன்.” என்று அவள் கெஞ்சலோடு கேட்டாள்.
அவள் அவ்வளவுதூரம் கேட்கவும் மறுக்க தோன்றாமல், அவள் எடுத்து வைத்திருந்த அனைத்தையும் எடுத்து பார்த்தவன், சில நிமிட யோசனைக்கு பின் ஒன்றை எடுத்தவன், “இந்த கலர் உனக்கு சூப்பரா இருக்கும்,” என்று சொல்லி அவள் கையில் கொடுக்க,
“வாவ் செம கலர், இப்போ பார்த்தா இது ரொம்ப பிடிக்குது. தேங்க் யூ,” என்றவளுக்கு அது சாய்ஸ்வரன் தேர்ந்தெடுத்தது மட்டுமில்லாமல், அவனே அவனது பணத்தில் வாங்கிக் கொடுப்பதால், அதுவே அவளிடம் உள்ள ஆடைகளில் சிறந்தது என்பது போல் உணர்ந்தாள். அதனால் அதை ஆசையோடு பில் போட கொடுக்க, சாய்ஸ்வரன் அதற்கான பணத்தை கொடுத்தான்.
பின் அந்த கடை உரிமையாளர் கேட்டுக் கொண்டதற்காக,”அஞ்சலி பொட்டீக், ட்ரஸ் கலெக்ஷன்லாம் ரொம்ப நல்லா இருக்கு, இங்க உங்களுக்கு திருப்தியான ஷாப்பிங் அனுபவம் கிடைக்கும்,” என்று வாயில் வந்ததையெல்லாம் சொல்லி இருவரும் அவர்களுக்கு இலவசமாக மார்க்கெட்டிங் செய்து கொடுத்தார்கள்.
இதில் வெகுநேரமாக அந்த யூட்யூப் சேனல் தொகுப்பாளர் வேறு அவர்களை பேட்டி எடுக்க காத்துக் கொண்டிருக்க, இருவரும் அவரின் அருகே சென்றனர்.
“உங்க ஷோ எந்த அளவில் போயிட்டு இருக்கு,” என்று அவர் இருவரிடமும் பொதுவாக கேட்க,
“மொத்தம் 30 நாட்கள் தானே, அதில் பாதி தானே போயிருக்கு, அதுவும் நல்லாவே மக்களிடம் ரீச் ஆகியிருக்கு, மீதியும் சூப்பரா போகும்,” என்று இருவருமே சேர்ந்தே பதிலளித்தனர்.
“சப்தமி, இந்த ஷோவில் நீங்க கலந்துக்கிட்டது எப்படி ஃபீல் செய்றீங்க,” என்று அந்த தொகுப்பாளர் சப்தமியிடம் கேள்விக் கேட்க,
“நிஜமா இது நினைச்சே பார்க்க முடியாத வாய்ப்பு. அதோட மக்களும் என்னை இந்த அளவு ஏத்துப்பாங்க, கொண்டாடுவாங்கன்னு நிஜமா எதிர்பார்க்கல, ரொம்ப சந்தோஷமா, எக்ஸைட்டா இருக்கு,” என்றாள்.
“இந்த ஷோ இவ்வளவு சக்ஸ்ஸ் ஆகும்னு நீங்க இரண்டுபேரும் எதிர்பார்த்தீங்களா?” என்று தொகுப்பாளர் இருவரிடமும் பொதுவாக கேட்க,
“எதை ஒன்னையும் ஆரம்பிக்கும்போது அது மக்களிடம் எவ்வளவு அளவு ரீச் ஆகும்னு முதலிலேயே யூகிச்சு சொல்ல முடியாதே, இப்போ எங்க ஷோ சக்ஸஸ்னு தெரிஞ்சு எங்களுக்கு ரொம்பவே சந்தோஷம் தான்,” என்று சாய்ஸ்வரன் பதில் கூறினான்.
“இந்த ஷோ ஒருபக்கம் சக்ஸஸ் ஆனாலும் இன்னொருபக்கம் நெகட்டிவ் கமென்ட்ஸ், ரிவ்யூஸ் வந்துட்டே இருக்கே, அதைப்பத்தி என்ன நினைக்கறீங்க?” என்ற அடுத்த கேள்விக்கு,
“பாஸிட்டிவ், நெகட்டிவ் இரண்டுமே கலந்து வரத்தான் செய்யும், பாஸிட்டிவை நினைச்சு கொண்டாடும்போது நெகட்டிவையும் கூட பேலன்ஸ் செய்து தானே ஆகணும்,” என்று இந்தமுறையும் சாய்ஸ்வரனே பதில் கூறினான்.
“இந்த ஷோ பொறுத்தவரைக்கும் சப்தமி உங்களோட ரசிகை. இப்போதும் அதானா? இல்லை உங்களுக்குள்ள வேறெதுவுமா?” என்று அந்த தொகுப்பாளர் இம்முறை சாய்ஸ்வரனிடம் கேள்விக் கேட்கவும்,
“இப்போதும் அவங்க என்னோட ரசிகை தான், கூட இப்போ எங்களுக்குள்ள நல்ல நட்பு இருக்கு,” என்று அவன் பதில் கூறினான்.
“வருங்காலத்தில் இதில் ஏதாவது மாற்றம் வருமா?” என்று தொகுப்பாளர் விடாமல் அடுத்த கேள்விக் கேட்க,
“அதுக்கான பதில் வருங்காலத்தில் தான் சொல்ல முடியும்,” என்றான் அவன்,
“இதுக்கு உங்க பதில் என்ன?” என்று அவர் சப்தமியிடம் கேட்க,
“ஸ்வரன் பதில் என்னவோ அதான் என்னோட பதிலும்,” என்று அவளும் கூறினாள்.
பிறகு இருவரும் அனைவரும் இருவரிடமும் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்ப தயாராக இருக்க, கடை உரிமையாளர் அவர்களுக்கு பரிசுகள் கொடுத்து நன்றி கூறி அனுப்பி வைத்தார்.
சாய்ஸ்வரனே தன்னுடைய காரில் அவளை இந்த விழாவிற்கு அழைத்து வந்தவன், இப்போது அங்கிருந்து கிளம்பும்போதும் அவளை தன்னுடன் காரில் அழைத்துச் சென்றான்.
சாய்ஸ்வரன் காரை இயக்கிக் கொண்டு வர, சப்தமியோ தன்னுடைய அலைபேசியை பார்த்தப்படி வந்தவள், “ஸ்வரன் இங்க பார்த்தீங்களா? நம்ம பொட்டீக் திறந்து வச்சதை லைவ்வா டெலிகாஸ்ட் செய்தாங்களே, அதுக்கு எத்தனை வியூஸ் வந்திருக்கு பாருங்க, ஏகப்பட்ட கமென்ட்ஸ் வேற,” என்று அந்த கணொளியை அவனிடம் காட்டினாள்.
அதை அவன் சாதாரணமாக பார்த்து வைக்க, “என்ன ஸ்வரன் எந்த ரியாக்ஷனும் கொடுக்க மாட்றீங்க?” என்று சப்தமி கேட்க,
“இவ்வளவு வியூஸ் வரணும்னு தானே அந்த யூட்யூப் சேனல் அவ்வளவு நேரம் பொறுமையா இருந்து அந்த ஈவன்ட்டை ஷூட் செய்தாங்க, இதில் என்ன ஆச்சர்யம்,” என்று அவன் கூறினான்.
“உண்மை தான், ஆனாலும் இதெல்லாம் எனக்கு புதுசு இல்லையா? அதான் ஒரே எக்ஸைட்டிங்கா இருக்கு, அந்த விஜே எப்படியெல்லாம் கேட்டார். எல்லாத்துக்கும் நீங்க சூப்பரா பதில் சொன்னீங்க? நானா இருந்தா நிறையவே திணறியிருப்பேன்.” என்று அவள் கூற,
“இதுக்கு எதுக்கு திணறனும், அவர் எந்த நோக்கத்துக்கு வேணும்னாலும் கேட்டிருக்கலாம், ஆனா என்னோட பதில் உண்மை தானே,” என்று அவன் சொன்னதற்கு,
“ஆனா இதிலும் மக்கள் புதுசா ஒன்னை கண்டுப்பிடிச்சிருக்காங்க பாருங்க, வருங்காலத்தில் நமக்குள்ள என்னன்னு கேட்டதுக்கு, அதுக்கு வருங்காலத்தில் தான் விடை தெரியும்னு சொல்லியிருக்கீங்க, அப்போ வருங்காலத்தில் ஏதோ சம்திங் இருக்கு, என்பது போல எல்லாம் கமென்ட்ல சொல்லியிருக்காங்க,
நீங்க ஏன் அப்படி பதில் சொன்னீங்க ஸ்வரன், அப்போதும் நாங்க நல்லா ஃப்ரண்ட்ஸா இருப்போம்னு கூட பதில் சொல்லியிருக்கலாமே?” என்று அவள் கேட்டாள்.
“சொல்லியிருக்கலாம் தான், ஆனா வருங்காலத்தில் என்ன நடக்கும்னு இப்பவே எப்படி தெரியும்? நாம இதேபோலவே இருப்போம்னு சொல்ல முடியுமா?” என்று அவன் கேட்கவும்,
“அப்போ நமக்குள்ள இருக்க ரிலேஷன்ஷிப் மாற வாய்ப்பிருக்குன்னு சொல்றீங்களா? இதுக்கு என்ன அர்த்தம்?” என்று அவள் ஆவலாக கேட்க,
“இதுக்கு என்ன அர்த்தமா இருக்கும்னு நீயே கண்டுபிடி.” என்று அவன் சொல்லவும்,
“இதுக்கு எனக்கு ஒரே அர்த்தம் மட்டும் தான் தெரியுது. ஆனா அதை நான் சொல்ல மாட்டேன்.” என்று வெட்கத்தோடு அவள் மறைமுகமாய் தன் மனதை வெளிப்படுத்தினாள்.
ஆனால் அதை கண்டு காணாமல் போல காரை இயக்கிக் கொண்டிருந்தவனோ, ‘இதுக்கு இன்னொரு அர்த்தமும் இருக்கு, வருங்காலத்தில் நாம ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்காம கூட போக வாய்ப்பிருக்கே?’ என்று மனதில் சொல்லிக் கொண்டான்.
தொடர்ந்து இசைக்கும்..