VMIA 1

இசை 1

அப்போது தான் அவள் வேலை பார்க்கும் நிறுவனத்தின் கேப் வந்து மகாவை அவளது குடியிருப்பில் இறக்கி விட்டு போயிருக்க, அவள் கடிகாரத்தின் நேரமோ இரவு பத்து மணி என்று காட்டியது. தன்னிடம் இருக்கும் சாவி கொண்டு வீட்டை திறந்து உள்ளே நுழைந்து விளைக்குகளை உயிர்பித்தவள், குறிப்பிட்ட படுக்கையறையை திறந்து உள்ளே பார்க்க, அவளின் தோழி அனிதாவோ இழுத்து போர்த்தியப்படி உறங்கிக் கொண்டிருந்தாள்.

‘சரியான கும்பகர்ணி,’ என்று மனதில் நினைத்தப்படி தனக்கான அறையில் குளித்து உடைமாற்றிக் கொண்டு வந்தவள், தோழி சமைத்து வைத்திருக்கும் சாப்பாட்டை எடுத்து போட்டு சாப்பிடலாம் என்று மகா உணவு மேசையை நோக்கி செல்ல, அந்நேரம் அவளது அலைபேசி இசைத்தது.

உடனே அவள் அலைபேசி இருக்குமிடத்திற்கு வந்து பார்க்க அவள் அன்னை சந்தியா தான் அவளை அழைத்திருந்தார். உடன் அவள் தந்தை மகேந்திரனும் அவளிடம் பேச காத்திருப்பார்.

சரியாக அவள் வீட்டிற்கு வரும் நேரம் அறிந்து அவளை அழைக்கும் அவளின் பெற்றோர் வசிப்பது துபாயில், போன வருடம் வரை அவளும் அவர்களோடு தான் வசித்து வந்தாள். அவளின் சிறுவயதிலேயே மகேந்திரனின் வேலை நிமித்தமாக அங்கு தங்கள் இருப்பிடத்தை மாற்றிக் கொண்டனர்.

ஆனால் ஒரு இன்ஸ்டான்ட் லட்சியத்திற்காக தற்போது மகாவோ இங்கே சென்னை வந்தவள், அந்த லட்சியம் நிறைவேறும் வரை ஒன்றும் செய்யாமல் இருக்க முடியாது என்ற காரணத்தால் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை தேடிக் கொண்டாள். அவளின் விருப்பத்திற்கு தடை சொல்லாத பெற்றோரோ அவள் இங்கே தனியாக தங்குவதற்கு தடை விதித்தனர்.

பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமா, சித்தி என்று அவளுக்கு மகேந்திரன், சந்தியா வழி உறவினர்கள் இங்கு அதிகம் இருக்க, யார் வீட்டில் தங்க வைப்பது என்ற பெரும் குழப்பம் இருவருக்கும் இருந்தது. யார் வீட்டிலும் வேண்டாம் தனியாக மகளிர் விடுதியில் தங்கிக் கொள்கிறேன் என்று மகா அவர்களிடம் கெஞ்சி கூத்தாட, அவர்களுக்கோ அதில் விருப்பம் இல்லாமல் அவளின் பாதுகாப்பு குறித்த கவலையில் இருக்க, அவளின் லட்சியத்தில் அவளோடு துணை நிற்பவர்களில் அனிதாவும் ஒருத்தி. அவளும் துபாயில் வசித்தவள் தான், சில வருடங்களுக்கு முன்பு இங்கே சென்னையில் அவள் தன் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ள, அவளோடு கலந்தாலோசித்து இருவரும் இந்த அடுக்கு மாடி குடியிருப்பில் இந்த வீட்டை பகிர்ந்து கொள்ளலாம் என்று மகா முடிவெடுக்க, அவளின் பெற்றோர்களும் இதற்கு அரை மனதாக ஒத்துக் கொண்டனர்.

அன்னையின் அழைப்பை ஏற்றவள், அன்னை, தந்தை இருவரிடமும் நலம் விசாரித்தவள், அவர்களின் நலம் விசாரிப்பிற்கும் பதில் கூறிய பின், “இது நீங்க டின்னர் செய்யும் நேரமாச்சே ம்மா, அதை விட்டுட்டு நான் வர நேரம்னு தெரிஞ்சு கால் செய்திருக்கீங்க, என்ன ஏதாச்சும் முக்கியமான விஷயமா ம்மா?” என்று தன் அன்னையிடம் மகா கேட்க,

“நல்லவேளை சரியா பாயிண்டை பிடிச்சிட்டியே, நாங்க எதைப்பத்தி பேசப் போறோம்னு தெரியாதா? எல்லாம் உன் கல்யாண விஷயமா தான், ஒரு நல்ல வரன் வந்திருக்கு, உன்னோட வாட்ஸ் அப்க்கு எல்லா தகவல்களும் அனுப்பியிருக்கேன். பார்த்துட்டு சொல்லு,” என்று சந்தியா பேச்சை முடிக்கவில்லை.

அதற்குள் குறுக்கிட்ட மகாவோ, “அம்மா நான் எதுக்காக இங்க வந்திருக்கேன்னு தெரிஞ்சும் இப்போ இந்த பேச்சு அவசியம் தானா? நான் நினைச்சது நடக்கற வரை என்னோட கல்யாண பேச்சை எடுக்காதீங்கன்னு சொன்னேனா இல்லையா?” என்று கேட்டாள்.

“ஒரு நல்ல வரன் வந்திருக்கப்போ அதை சும்மாவே வேண்டாம்னு சொல்ல எனக்கு மனசு வரல, அதில்லாம இந்த வரன் சென்னையில் தான் இருக்காங்க, நல்ல குடும்பமா தெரியுது. 3 தலைமுறையா சொந்த பிஸ்னஸ் தான், சென்னைன்னா உனக்கும் அது வசதி தானே, எங்களுக்கும் உன்னை தனியா அங்க விட்ருக்கோம்னு கவலை இருக்காது.

அதில்லாம மாப்பிள்ளை பத்திய தகவல்கள் பாரு, எனக்கென்னமோ உன்னோட எண்ணத்துக்கு அந்த பையனும் உறுதுணையா இருக்கலாம்னு தோனுது,” என்று சந்தியா கூறவும்,

“அப்போ என்னைப்பத்தி எல்லாமே மாப்பிள்ளை வீட்டில் சொல்லிட்டீங்களா?” என்று மகா அதிர்ச்சியோடு கேட்க,

“இல்லடா, முதலில் உனக்கு மாப்பிள்ளையை பிடிக்கணும், அப்புறம் தான் மேற்கொண்டு அவங்கக்கிட்ட பேசணும், இது தரகர் மூலமா வந்த வரன், பார்த்ததும் எங்களுக்கு பிடிச்சிடுச்சு, நீயும் ஒருமுறை மாப்பிள்ளையோட ப்ரொஃபைலை பாரு, உனக்கும் பிடிக்கும்னு எனக்கு தோனுது,” என்று சந்தியா கூறினார்.

“நான் நினைச்சது நடக்கற வரைக்கும் என்னோட கவனம் வேற எதிலும் போகாது. முக்கால்வாசி என் திட்டத்துக்கான வேலையை முடிச்சிட்டேன். மீதி கால்வாசி வேலை தான் பாக்கி இருக்கு, அது சரியா அமைஞ்சிட்டா, என் வேலைக்கான சரியான ஆள் கிடைச்சிட்டா, அப்புறம் நான் என்னோட வேலையை ஆரம்பிச்சுடுவேன். அதுவரை நீங்க பொறுமையா இருந்தா போதும்,” என்றவள்,

“அப்பாக்கிட்ட போன் கொடுங்க,” என்று சொல்ல, சந்தியாவும் மகேந்திரனிடம் அலைபேசியை கொடுத்தார்.

மகேந்திரன் அலைபேசியை காதுக்கு வைத்தவர், “மகா ம்மா,” என்று கூப்பிட்டதுமே,
“என்ன ப்பா இந்த அம்மா கல்யாணம் பத்தி பேசறாங்க, நீங்களும் அமைதியா இருக்கீங்க, நான் எதுக்காக இங்க வந்திருக்கேன். அது முடிஞ்சா திரும்ப துபாய் வந்துடுவேன். ஆனா என்னை முழுசா அங்க இருந்து விரட்டறதுக்கான வேலையை பார்க்கறீங்களா?” என்று அவள் செல்லமாக கோபித்துக் கொண்டாள்.

“அய்யோ இல்லடா ம்மா, அம்மாக்கு இந்த வரன் பார்த்ததுமே பிடிச்சிருச்சு, எனக்கும் ஓகேவா தான் இருந்துச்சு, நீ மட்டும் நீ நினைச்ச வேலையா சென்னை போகலன்னா, இந்நேரம் உன்னோட அம்மா உனக்கு கல்யாணத்தையே முடிச்சிருப்பா, அப்போதும் இங்க துபாயில் வரன் தேடியிருக்க மாட்டோம் தானே, நீ எங்களுக்காக மாப்பிள்ளை போட்டோவும் தகவல்களையும் பாரு, ஒருவேளை உனக்கு பிடிச்சா மேற்கொண்டு பேசலாம், இல்லை வேண்டாம்னா விட்டுடலாம்,” என்று மகேந்திரன் சொல்லவும்,

“சரி நான் பார்த்துட்டு சொல்றேன். ஆனா இப்பவே சொல்றேன் எனக்கு கண்டிப்பா பிடிக்காது. பார்த்துட்டு வேணாம்னு தான் சொல்லுவேன். நான் பதில் சொல்றதுக்குள்ள அவசரமா மாப்பிள்ளை வீட்டில் நீங்க எதுவும் பேசிடக் கூடாது. என்னோட தகவல்களையும் அவங்கக்கிட்ட கொடுக்க கூடாது. அப்புறம் அவங்களுக்கு பிடிச்சிடுச்சாம், நீ மனசு வை. கொஞ்சம் யோசிச்சு சொல்லுன்னால்லாம் என்னை கட்டாயப்படுத்தக் கூடாது சரியா?” என்று அவள் கண்டிப்பாக கூறவும்,

“சரிடா ம்மா, உன்னோட பதிலை பொறுத்து தான் நாங்க மேல முடிவெடுப்போம், நீ அந்த வரனோட தகவலை முதலில் பாரு,” என்று சொல்லி அவர் அலைபேசி அழைப்பை அணைத்துவிட்டார்.

பெற்றோர்கள் கூறியதற்காக சாப்பிட்டு முடித்ததும் தன் அலைபேசியில் வாட்ஸ் அப் செயலிக்கு சென்றவள், பெற்றவர்கள் அனுப்பிய மாப்பிள்ளையின் புகைப்படங்களை பார்த்தாள். மொத்த மூன்று புகைப்படங்கள் இருந்தது. அதில் அவன் கையில் கிட்டாருடன் இருந்த ஒரு புகைப்படமே மகாவை ஈர்த்தது. அதை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கோ, ‘இவனை எங்கேயோ பார்த்திருக்கோமே,’ என்ற சிந்தனையும் ஓட, உடனே அவனது பயோடேட்டாவை திறந்து பார்த்தாள்.

பெயர் சாய்ஸ்வரன் என்பதை அறிந்து கொண்டவளுக்கு மற்ற தகவல்களையெல்லாம் கவனிக்க தோன்றவில்லை. ஆனால் அவனது ஆர்வம், இலட்சியம் இரண்டுமே இசை என்று குறிப்பிட்டு இருந்தது மட்டும் அவள் கண்களுக்கு நன்றாக தெரிந்தது.

அவள் நினைத்தவன் இவன் தானா? என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் உடனே கூகுளின் உதவியோடு சாய்ஸ்வரன் என்ற பெயரை போட்டு அவள் தேடவும், அவள் எதிர்பார்த்த தகவல் கிடைக்க, அவள் நினைத்தவன் இவன் தான் என்று அறிந்து கொண்டவளுக்கோ, தான் நினைத்த வேலையை முடிக்க இவன் தான் சரியான ஆளாக இருப்பான் என்றும் மனதில் முடிவெடுத்துக் கொண்டாள்.
இத்தனைநாள் தான் லட்சியம் நிறைவேறுவதற்கான சரியான ஆள் கிடைக்காததால் வேலை தாமதமாகிக் கொண்டிருக்க, இப்போதோ சாய்ஸ்வரன் சரியாக இருப்பான் என்று முடிவிற்கு வந்தபின் அவளால் அதற்கு மேலும் பொறுமையாக இருக்க முடியாததால் உடனே தன் தோழியை எழுப்ப சென்றாள்.

“அனிதா, அனி, எழுந்திரு,” என்று கஷ்டப்பட்டு தான் அனிதாவை எழுப்ப முடிந்தது.

“உன்கூட தூக்கத்தில் கும்பகர்ணன் கூட தோத்துருவான், இப்படியா தூங்குவாங்க,” என்று மகா கூற,

அனிதாவோ கடிகாரத்தை பார்த்தவள், “மணி என்னன்னு பாரு, 12 ஆகுது, இது தூங்கற நேரம் தானே, இப்போ வந்து எழுப்பிட்டு நான் தூங்கனதுக்கு என்னை திட்றீயா?” என்று கேட்டாள்.

“இதை வெளியில் சொல்லாத, இந்த நேரத்துக்கு நம்ம வயசு பசங்க தூங்கிட்டோம்னு தெரிஞ்சா அதைவிட அசிங்கம் வேற இல்ல அனி,” என்று மகா கூற,

“எனக்கெல்லாம் கிடைக்கற நேரம் தூங்கணும், இதுக்கு மத்தவங்க எப்படி நினைச்சா என்ன?” என்றவள்,

“சரி எதுக்கு என்னை எழுப்பின? அதை முதலில் சொல்லு,” என்று பாதி உறக்கத்தில் எழுந்த எரிச்சலோடு அனிதா கேட்டாள்.

உடனே தன் அலைபேசியில் சாய்ஸ்வரனது புகைப்படத்தை காட்டி “இவன் யாருன்னு தெரியுதா?” என்று கேட்க,

தூக்க கலக்கத்தில் இருந்த கண்களுக்கு அந்த முகம் சரியாக தெரியாததால் கண்களை கசக்கி உற்றுப் பார்த்தவளுக்கு, இப்போது அந்த முகம் நன்றாக தெரியவே, “அட இவன் சாய்ஸ்வரன், இவனை தெரியாம இருக்குமா? சோஷியல் மீடியால இவனுக்கு எத்தனை ஃபாலோவர்ஸ் தெரியுமா? அதிலும் நிறைய பொண்ணுங்க தான், இவன் கிட்டாரோட பாட்டு பாட ஆரம்பிச்சா அப்படியே எல்லாம் உருகிடுவாங்க தெரியுமா? அதுவும் அவன் குரலுக்குன்னு சொல்றதை விட அவன் அழகுக்கு தான் எல்லாம் உருகுவாங்க, ஹௌ ஸ்வீட் இல்ல,” என்று சொல்லி அனிதா புகைப்படத்தை தொட்டு அந்த கைகளை தன் உதட்டில் வைத்து முத்தம் வைக்க,

மகாவோ அந்த கைகளை தட்டிவிட்டாள். அனிதா அளவிற்கு கூட தனக்கு சாய்ஸ்வரனை தெரியவில்லையே என்று நினைத்து அவளுக்கு லேசாக பொறாமையும் எழுந்தது.

அவளின் மனநிலை அறியாத அனிதாவோ, இப்போ எதுக்கு இவன் போட்டோவை காட்டி தெரியுமான்னு கேட்ட?” என்று கேட்க,

“இவனை தான் எனக்கு எங்க வீட்டில் மாப்பிள்ளை பார்த்திருக்காங்க,” என்று மகா பதில் கூறினாள்.

அவள் கூறுவது உண்மை தானா? என்று புரியாமல், “என்ன சொன்ன மறுபடியும் சொல்லு,” என்று அனிதா கேட்க,

“சாய்ஸ்வரனை தான் எனக்கு கல்யாணத்துக்கு வரன் பார்த்திருக்காங்க,” என்று மகா மீண்டும் தெளிவாக சொல்லவும்,

“அப்புறம் என்னடி, நீ என்ன சொன்ன, ஓகே தானே சொன்ன, செம லக்கி மகா நீ. சாய்ஸ்வரனை கல்யாணம் செய்துக்க போற, நினைச்சா எனக்கே எக்ஸைட்டா இருக்கு,” என்று அனிதா உற்சாகமாக பேச,

“அய்யோ அனிதா இப்படி எக்ஸைட் ஆகறத நிறுத்து. நான் சாய்ஸ்வரனை கல்யாணம் செய்துக்க போறதில்ல, முதலில் இப்போதைக்கு நான் கல்யாணம் செய்துக்கவே போறதில்ல, நான் சாய்ஸ்வரனை பத்தி கேட்டது நம்ம வேலைக்காக, நம்ம வேலைக்கு சாய்ஸ்வரன் சரியா இருக்க மாட்டான். நிறைய பேருக்கு தெரிஞ்ச பாப்புலர் பர்சன். இவனை வச்சு நம்ம வேலையை முடிச்சா, பக்காவா இருக்காது.” என்று மகா கேட்க,

அவள் சொல்வதை உள்வாங்கி கொள்ளவே அனிதாவிற்கு சில நிமிடங்கள் தேவைப்பட்டது. பின்பு தான் மகா என்ன சொல்ல வருகிறாள் என்பது புரிந்தவளாக, “என்ன சொல்ற மகா, சாய்ஸ்வரனை வச்சா நம்ம வேலையை முடிக்க சொல்ற, இதுக்கு அவன் ஒத்துப்பான்னு நீ நினைக்கிறியா?” என்று அனிதா கேட்டாள்.

“எதுவுமே நடக்காதுன்னு நாமளா ஒரு முடிவுக்கு வருவதை விட, முயற்சி செஞ்சு பார்க்கணும் அனி. யாரோ தெரியாத ஆளை வச்சு செய்றதை விட, எல்லோருக்கும் தெரிஞ்ச பாப்புலரான ஆள்னா வேலை ஈஸியா முடிஞ்சிடாது. நம்ம எதை நினைச்சு இதை செய்றோமோ அது நல்லப்படியா முடிய வேண்டாமா?” என்று மகா கேட்க, அனிதாவிற்கும் அது சரியென்று பட்டது.

“அப்போ இந்த கல்யாண பேச்சு?” என்று அனிதா கேட்க,

“என்னோட விருப்பம் தெரிஞ்சா தான் வீட்டில் மேற்கொண்டு முடிவெடுப்பாங்க, இப்போதைக்கு நான் நோ தான் சொல்லப் போறேன். அதேபோல சாய்ஸ்வரனை அஃபிஷியலா தான் சந்திக்கணுமே தவிர, கல்யாண விஷயமா இல்லை. இதில் நான் தெளிவா இருக்கேன்.” என்று மகா தீர்மானமாக கூற,

“அப்போ சரி. நீ சொல்றது போல சாய்ஸ்வரன் இதுக்கு சம்மதிக்கணும், அப்படி மட்டும் சம்மதிச்சிட்டா நம்ம நினைச்சது வெற்றிக்கரமா முடியும்,” என்று அனிதாவும் நம்பிக்கையாக கூறியவள்,

“சரி அடுத்து என்ன செய்யலாம்னு நாளைக்கு பேசிக்கலாம், இப்போ என்னை தூங்க விடு,” என்று படுத்தவள், உடனே உறங்கியும் விட்டாள். ஆனால் நினைத்ததை நடத்தி முடிக்கும்வரை மகாவிற்கும் உறக்கம் வருமா என்பது தான் தெரியவில்லை.

தொடர்ந்து இசைக்கும்..