வெண்தாமரைப் பதி மெல்லியலே

அத்தியாயம் – ஒன்பது

ரவி பாரதியின் தந்தை ராமநாதன் தன் நண்பரிடம் ஃபோன் பேசி வைக்கவும், லோகநாதன் தன் எடிட்டர் நண்பருக்கு ஃபோன் செய்தார். அந்தப் பக்கம் ஃபோன் எடுக்கப்பட்டு 

“சர், பத்திரிகைப் படிச்சுப் பார்த்தீங்களா?” என்று எடிட்டர் வினவினார்.

“என்ன எழுதி வச்சு இருக்கீங்க? நீங்க போட்ட ஆர்டிகிள் அவங்க ஸ்கூலுக்கு விளம்பரம் மாதிரி தான் இருக்கு. இதுக்கு சும்மாவே இருந்து இருக்கலாம்” என லோகநாதன் ஆத்திரமாகப் பேசினார்.

“சர், நீங்க சொல்ற மாதிரி நேரடியா அவரைப் பிளேம் பண்ணி எழுதணும்னா ஆதாரங்கள் வேணும். அப்படி இல்லைனா, பத்திரிகை மேலே மான நஷ்ட வழக்குப் போட்டுடுவாங்க”

“போட்டா என்னயா ? நான் அந்த நஷ்டத்தைக் கொடுத்துட்டுப் போறேன்”

“சர், அது பத்திரிகையோட நல்ல பேரைக் கெடுத்திடும். “

“எனக்கு அதைப் பத்திக் கவலை இல்லை. பணம் எவ்வளவு வேணும்னாலும் கொடுக்கிறேன். ஆனால் அவன் அவமானப்படனும்”

“சாரி சர். நீங்க சொல்ற அளவிற்கு என்னால் இறங்க முடியாது. ஆனால் உங்க மேலே இருக்கிற குட்வில்க்காக இதைச் செய்திருக்கேன்.  இந்த ஆர்டிகிள் ஒரு சென்ஷேசன் கொடுக்கும். அதில் உங்களால் எதுவும் செய்ய முடிஞ்சாப் பாருங்க. இல்லைனா என்னை இதோட விட்டுடுங்க”  என்று விட்டு போனை வைத்து விட்டார்.

லோகநாதனிடம் பேசி வைத்த எடிட்டருக்குத் தலை வலித்தது. அந்த நேரம் மாதங்கி அனுமதி கேட்டுக் கொண்டு உள்ளே வந்தாள்.

“சர், இன்னிக்கு ஆர்டிகிள் பப்ளிஷ் ஆகியிருக்கு. ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு சர்?”

‘நான் உங்க கட்டுரைய குறை சொல்ல முடியாது. ஆனால்vநான் எதிர்பார்த்த விஷயம் இது இல்லை. எனக்கு அந்த ரவி பாரதி வெளியில் வரனும்”

“அது அவர் இஷ்டம் சர். அதில் உங்களுக்கு என்ன பிரச்சினை ?”

“இந்த ஒரு மேட்டருக்காக நம் பத்திரிகைக்கு ஒரு வருஷத்திற்கு விளம்பரம் கொடுத்து இருக்காங்க. ஆனால் அவங்களுக்கு இதில் திருப்தி இல்லை”

“விளம்பரம் கொடுத்தவங்க யாரு சர்?”

“அதை நான் சொல்ல முடியாது”

“அவங்க மிஸ்டர் ரவிபாரதிக்கு வேண்டியவங்களா?”

“இல்லை. “ என்று தயக்கத்தோடு கூறினார்.

“ சர், அவங்களுக்காக  உண்மைக்கு மாறா நாம எழுத முடியாதே?”

“சரி தான். ஆனால் அவரும் ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டவர் என்பதால் தான் நான் சரி என்று சொன்னேன்”

மாதங்கி யோசனையுடன் அவரைப் பார்க்க,

“உங்களிடம் நான் இப்போது சொல்வது வெளியில் யாருக்கும் தெரியக் கூடாது.” என, அவள் சரி எனத் தலையசைத்தாள்.

“என் நண்பர் ஒருவரின் மகள் பாரதி நடத்தும் நடனப் பள்ளியில் தான் டான்ஸ் மாஸ்டராக இருக்கிறாள். என் நண்பரும் , ரவிபாரதியின் தந்தையும் தொழில் முறை நண்பர்கள். அவர்கள் குடும்பத்திற்குள்ளும் நல்ல பரிச்சயம் உண்டு அதனால் தான் அந்தப் பள்ளியில் அவர் மகள் வேலை செய்ததும் கூட. இரண்டு மாதத்திற்கு முன்பு ரவிபாரதியின் தந்தையிடம் என் ஃப்ரெண்ட் அவர் மகளைத் திருமணம் செய்துக் கொடுக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறார். அவரும் மறுத்து எதுவும் கூறவில்லை போல். பெரியவர்கள் நிச்சயம் வைக்கலாம் என்பது வரைப் பேசி வைத்து இருக்கின்றனர். அந்த சமயம்  ரவி டான்ஸ் சூட்டிங்கிற்கு வெளிநாடு சென்று இருக்க, திரும்பி வந்தவர் திருமணத்தில் இஷ்டம் இல்லை என்பது போல கூறி இருக்கிறார். இருவரும் ஒன்றாகத் தான் வெளிநாடு சென்று இருக்கின்றனர். திருமணம் நின்ற பதட்டத்தில் அங்கே என்ன நடந்ததோ என லோகநாதன் தவறான பொருள் படும் விதத்தில் கேட்டார். அந்தப் பேச்சில் ரவியின் வீட்டில் ஆத்திரமடைந்து ரவிக்கும் இதில் இஷ்டமில்லை என்பதால்  திருமணத்தை நிறுத்தி விட்டனர். இதில் அந்தப் பெண் தற்கொலை வரை செல்ல, கஷ்டப்பட்டு காப்பாற்றி இருக்கிறார் லோகநாதன். மேலும் அவளுக்கு வேறு வரன் பார்க்க, அவை எதுவும் கை கூடவில்லை. இதற்கு காரணம் ரவி என்று நினைக்கிறார். அதோட ஃபாரீன்லே அவர் மகளுக்கு என்ன ஆச்சுன்னும் தெரிஞ்சிக்க இப்படி செய்யச் சொல்றார்” என்று நீண்ட விளக்கம் கொடுத்தார் எடிட்டர்.

அவர் மாதங்கியிடம் இதை வெளியிட வேண்டிய அவசியம் இல்லைதான். அவளை அவர் தான் இந்த வேலையில் ஈடுபடுத்தியது. எனவே நடந்த விஷயங்களைக் கூறினார். வேறு எந்த ரிப்போர்ட்டர் அனுப்பி இருந்தாலும், இவர் எதிர்பார்ப்பதை அப்படியே கொடுத்து இருப்பார்கள். ஆனால் அவருக்கும் உள்ளூர உண்மைக்குப் புறம்பாக எழுதுவதில் விருப்பம் இல்லை. அதனால் தான் மாதங்கியை அனுப்பி வைத்தார்.

இப்போதும், லோகநாதன் பேச்சில் இதில் தேவையில்லாமல் தலையைக் கொடுத்து விட்டோமோ என்று தான் சிந்தித்துக் கொண்டு இருந்தார்.

அப்போதுதான் மாதங்கி வந்துப் பேச, தன் மனதில் உள்ளத்தைக் கொட்டி விட்டார். எடிட்டர் பேசி முடிக்கும் வரை குறுக்கிடாமல் கேட்டுவிட்டு,

“சர், இது ஒரு ஸைட் தானே. மிஸ்டர் ரவி பாரதிக்கும் எதுவும் காரணம் இருக்கலாம் அல்லவா?” என்றாள்.

“ஆனால் அவர் அப்பா, அம்மா எல்லாம் சம்மதித்துத் தானே நிச்சயம் வரை திட்டமிட்டு இருக்கிறார்கள். அவர்கள் ரவிபரதியிடம் கேட்காமல் இதைச் செய்து இருப்பார்களா?”

“சர், அதை அவர்கள் தான் சொல்ல வேண்டும். அத்தோடு உங்கள் நண்பரின் பெண்ணை மறுப்பதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. நிச்சயம் என்ற ஒன்று நடக்கவில்லை. பெரியவர்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தை தானே. அத்தோடு உங்கள் நண்பரின் மகளும் அதே சமயத்தில் வெளிநாடு சென்று இருக்கிறார் எனும் போது தவறு யார் பக்கம் வேண்டும் என்றாலும் இருக்கலாம் தானே. “

“ஏற்கனவே ஒருமுறை பெயர் கெட்டுவிட்ட ஒருவரின் மேல் தான் எல்லோரின் சந்தேகமும் திரும்பும்”

“ஆனால் அப்படி ஒருவருக்குத் தன் பெண்ணைத் திருமணம் செய்துக் கொடுக்கும் முடிவிற்கு வர உங்கள் நண்பருக்கு என்ன காரணம் இருக்கிறது என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம்தானே ?”

மாதங்கியின் கேள்விக்கு எடிட்டரால் பதில் கூற முடியவில்லை. மாதங்கி அத்தோடு விடாமல்

“சர், என் கட்டுரையைப் படித்தீர்கள் தானே? மிஸ்டர் ரவிபாரதி நல்லவர் இல்லை என்றால் அந்தப் பள்ளிக்கு இத்தனை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து இருப்பார்களா? அங்கே எதுவும் தவறு நடக்கிறது என்றால் அதை முடிந்தவரை தடயம் இல்லாமல் செய்யத் தானே நினைப்பார்கள்?”

“கண்காணிப்புக் காமிரா எல்லாம் இப்போது கட்டாயமாகி விட்டது மாதங்கி. அதிலும் எத்தனையோ சித்து விளையாட்டுக்களை செய்துக் கொடுக்க ஆட்களும் இருக்கிறார்கள்”

“உண்மைதான் சர். ஆனால் அப்படிப் பட்டவர்களிடத்தில் உணரும் திமிரான உடல்மொழி அவர்களிடத்தில் தெரியவில்லை.  

“ம். இதை ஒரு சந்திப்பில் தெரிந்துக் கொள்ள முடியாது மாதங்கி. இப்போது இந்தக் கட்டுரைக்கு அவர்களின் எதிர்வினை என்ன என்று பார்க்கலாம்” என, அது சரிதானே என்று மாதங்கியும் அவரிடமிருந்து விடை பெற்று வெளியே வந்தாள்.

மாதங்கியின் எண்ணம் முழுதும் ரவி, சூர்யா இருவரும் என்ன செய்வார்களோ என்பதே ஓடிக் கொண்டிருந்தது. அவளை அதிக நேரம் காக்க வைக்காமல் , அலுவலக மெயில் ஐடிக்கு மெசேஜ் வந்திருக்க திறந்து பார்த்தவள் “கிளேவர் “ என்று வாய் விட்டுப் பாராட்டினாள்.

மாதங்கி, எடிட்டர் இருவரும் பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில், ரவியின் அறையில், சூர்யா அமர்ந்து இருக்க, ரவி அங்குமிங்கும் நடை பயின்று கொண்டிருந்தான்.

“ரவி எனக்கு ஒரு டவுட் “ என சூர்யா வினவ,

“என்ன ?” என்று ரவி கேட்டான்.

“இல்லை. நாம உன்னோட ரூம்லே தானே இருக்கோம். டெலிவெரி வார்ட் வாசலில் இல்லையே?”

“என்ன உளறிட்டு இருக்க ?

“என்னவோ உன் வொய்ஃப் டெலிவெரிக்கு அட்மிட் பண்ணி இருக்க  மாதிரி நடந்துட்டு இருக்க?”

“ஏய் . வந்தேன்னு வை. “ என அடிப்பது போல அவன் அருகில் வந்தான் ரவி.

சூர்யா அவன் அடிக்கப் போகிறான் என முகத்தைக் குனிய, அருகில் மெத்தை அமுங்கும் அரவம் கேட்டது. நிமிர்ந்து பார்க்க, ரவி சிந்தனையோடு அமர்ந்து இருந்தான்.

“ரவி, என்ன பிரச்சினை உனக்கு?”

“அந்த பாரதி விஷயத்திற்கு என்ன செய்யறதுன்னு புரியலை?”

“ அவங்கப் பேர் பாரதி இல்லை. மாதங்கி. “

“ம். எனக்கு பாரதின்னு தான் வருது. அதை விடு. நான் கேட்டதுக்குப் பதில் சொல்லு. “

“இந்த புக் படிக்கிறவங்கதானே உன்னைப் பார்க்கணும்னு நினைப்பாங்க. அதிலும் இது பெண்கள் பத்திரிகை. அப்படி எல்லாம் அவங்க மெயில் பண்ணிட மாட்டாங்க. அப்படியே செய்தாலும் உன்னைப் பார்க்கணும்னு எல்லாம் சொல்ல மாட்டாங்க. சப்போஸ் உன்னை ஏதாவது மீடியாவில் இன்டர்வியூ கொடுங்கன்னு கேட்பாங்க. அதை நீ ஆடியோ மெசேஜ் கூடப் போட்டு சமாளிக்கலாம்.”

“நீ சொல்றது நல்ல ஐடியா. ஆடியோ மெசேஜ் போட்டு சோசியல் மீடியாவில் ஷேர் பண்ணிடறேன். கூடவே அந்த மேகஸினையும் டாக் பண்ணிட்டா பிரச்சனை சால்வ்ட் . ஆனால்” என்று நிறுத்தினான் ரவி.

“சொல்லு”

சற்றே தயங்கி “இதோடு பாரதி விட்டுடுவான்னு எனக்குத் தோணலை “

“எப்படிச் சொல்ற? அவங்க உன்கிட்ட நேராக் கூடப் பேசினது இல்லை. “

“அவங்க என்னை வெளிலே வரச் சொல்றது வேறே எதையோ எதிர்பார்த்துன்னு எனக்குத் தோணுது”

“நம்ம கிட்டே எதிர்பார்க்க என்ன இருக்கு?’

“என்னோட கெஸ் சரின்னா , பழைய விஷயத்தை எடுத்து என்னை டேமேஜ் செய்ற எண்ணம் இருக்கலாம்”

“சே சே . அது எல்லாம் இருக்காது. இவங்க வயசு, அனுபவம் எல்லாம் பார்த்தா அந்த சமயத்தில் இவங்க படிச்சே முடிச்சிருக்க மாட்டாங்க. முடிஞ்சு போன விஷயத்தை அவங்க ஏன் திரும்ப எடுக்கப் போறாங்க?”

“ என்னை யாரு டேமேஜ் பண்ணனும்னு நினைக்கிறாங்களோ அவங்களுக்கு இது லாபம் தானே?”

“நீ யாரை சொல்ற?

“அப்பா ஃப்ரெண்ட் லோகநாதன் “

“வாய்ப்பு இருக்கு தான். ஆனால் அவர் அப்பாவ எதிர்த்து எதுவும் செய்யமாட்டார்”

“அவர் நேரடியா இதில் வரலை. அதுக்குத் தான்  பாரதி வேலை பார்க்கிற பத்திரிகை மூலமா இதை ஆரம்பிச்சு இருக்கார்னு தோணுது”

“ம். நீ சொல்றதும் சரிதான். முதலில் உன் வாய்ஸ் மெசேஜ் ஒண்ணு ரெடி பண்ணு. அத்தோட ஒரு லெட்டர் ஒண்ணும் எழுது “ என சூர்யா கூறவும், ரவி அதைச் செய்ய ஆரம்பித்தான்.

ரவி எல்லாம் முடித்து விட்டு சூர்யாவிடம் காண்பிக்க, அவனும் “குட்” என்று விட்டு , அதை உடனடியாக பத்திரிகை மெயில் ஐடிக்கு அனுப்பி வைத்து விட்டான்.

பின் அதே மெசேஜ்ஜை ரவிபாரதி “வல்லமை தாராயோ” என்ற பெயரில் இருக்கும் தன் சோசியல் மீடியாவிலும் ஷேர் செய்து விட்டான். அதன் பின் ரவியின் ஃபோனில் நோட்டிபிகேஷன் மெசேஜ் வந்த வண்ணமே இருந்தது. கிட்டதட்ட அன்று மாலை வரை தொடர்ந்து கொண்டும் இருந்தது.

பின் மாலையில் ரவி தன் சூட்டிங் விஷயமாக வெளியே சென்று இருக்க, சூர்யா சீக்கிரம் வந்து இருந்தான்.

வந்தவனிடத்தில் அனுராதா “சூர்யா, எனக்கு அந்த பாரதியப் பார்க்கணும்டா“ என்றார்.

“எந்த பாரதி?”

“அந்த ரிப்போர்ட்டர் பொண்ணுடா “

“அம்மா, அவங்க பேர் மாதங்கி. பாரதி புனைப் பெயர் தான்”

“எனக்கு பாரதி தான் நினைவில் இருக்கு”

“சுத்தி , சுத்தி எல்லாப் பக்கமும் பாரதின்னு வச்சுட்டு, ஒருநாள் இல்லை ஒருநாள் வீடு பூரா பாரதி பேர் மட்டும் தான் கேட்டுட்டு இருக்கும். எல்லோரும் கண்ப்யூஸ் ஆகி நிக்கப் போறோம் பாருங்க”

“அதை விடு. நான் சொன்னது என்ன பண்ணப் போறே ?”

“என்ன செய்யறது? நீங்களும் உங்க பிள்ளையும் இழுத்து விடற இந்த வேலை எல்லாம் செய்யத் தானே என்னைப் பெத்துப் போட்டு இருக்கீங்க?

“சே சே. உங்க அப்பா சொல்றதையும் சேர்த்து நீதான் செய்யணும்” என அனுராதா கூற ,

“அம்மா “ எனக் கத்தினான்.

பின் ஒரு அழைப்பிதழை எடுத்துத் தன் உதவியாளர்கள் மூலம் வாங்கி வைத்து இருந்த மாதங்கியின் விலாசத்திற்கு “மாதங்கியாக மட்டும் உங்கள் வரவை எதிரபார்க்கிறேன் – சூர்யா” என்ற குறிப்போடு அனுப்பி வைத்தான்.  

-தொடரும் –