வெண்தாமரைப் பதி மெல்லியலே

அத்தியாயம் – எட்டு

ரவி, சூர்யா இருவரும் அந்த கட்டுரையைப் படித்து விட்டு மௌனமாக அமர்ந்து இருக்க, அனுராதா ராமநாதனிடம் அவர்கள் அறையில் பேசிக் கொண்டு இருந்தார்.

“ஏன் டென்ஷனா இருக்கீங்க?”

“மறுபடியும் மீடியாவால் ரவி நம்மை விட்டுச் சென்று விடுவானோன்னு பயமா இருக்கு ராதா”

“அப்படி எல்லாம் ஆகாதுங்க. அன்னிக்கு ரவிக்கு இருந்த மெச்சூரிட்டி வேறே. இன்னிக்கு அவன் அப்படி இல்லை. அதோட அந்த ஆர்டிகிள் எழுதற பொண்ணு பற்றி நானும் விசாரிச்சேன். தேவையில்லாமல் எதுவும் எழுதறது இல்லைன்னு சொல்றாங்க”

“எனக்கு ரவிப் பற்றித் தான் கவலை. யார் என்ன சொன்னால் என்ன ? நம்ம செயலில் நாமக் கரெக்ட்டா இருந்தாப் போதும்னு நினைக்கணும். யாரோ ஒருத்தரோட வார்த்தைக்கு பயந்து தன் முகத்தை வெளியில் காட்டாமல் இருக்கான். அதையே இன்னும் நம்மால் மாற்ற முடியலை. மறுபடியும் ஒரு பிரச்சினைனா எனக்குத் தெம்பு இல்லை. இதில் அவனைப் பாரதியார் கொள்கைப் பிடிப்போடு வளரத்துருக்கேன்னு பெருமையா வேறே சொல்ற “

“இந்த அளவிற்கு நீங்க பயப்பட ஒண்ணும் இல்லை. இப்போ ரவி எல்லா விஷயத்திலும் கவனமா தான் இருக்கான்.  எந்தப் பிரச்சினையும் ஆகாமல் பார்த்துக்கறேன். “ என அனுராதா கூறவும்

“என்னமோ சொல்ற. நானும் கேட்டுக்கறேன். ஜாக்கிரதையாப் பார்த்துக்கோ.” என்றபடி அலுவலகம் செல்லக் கிளம்ப ஆரம்பித்தார் ராமநாதன்.

ஒரு பெருமூச்சோடு வெளியில் வந்த அனுராதா தன் மகன்கள் இருவரையும் பார்த்துத் திகைத்தார்.

சூர்யா சோபாவில் இருந்து கீழேக் கிடக்க, அவன் மேல் ஏறி உட்கார்ந்து ரவி அவன் தலையைப் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தான்.

“டேய் ரெண்டு பேரும் என்னடாப் பண்றீங்க ?” என அனுராதா சத்தம் போட, , ரவி

“மா,  அவன் என்னை கிண்டல் பண்றான்” என சிறு பிள்ளைப் போல் கோள் சொல்ல,

சூர்யாவோ “உன் செல்லப் புள்ள உண்மைய சொன்னா என்கிட்ட சண்டைக்கு வரான்.” என்றான்.

“ஏண்டா , நீங்க ரெண்டு பேரும் நர்சரிப் போற பிள்ளைகளா ? ஒருத்தன் நேஷனல் அவார்ட் வாங்குற அளவு பிரபலமானவன். இன்னொருத்தன் இந்த கடைப் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமான்னு அவங்க அப்பாகிட்டே சவால் விட்டு இருக்கிறவன். இப்படிக் கம்ப்ளைண்ட் பண்ணிட்டு இருக்கீங்க?” என்ற அனுராதா,

“அப்படி என்னடா உண்மை சொன்ன?” என்று சூர்யாவைப் பார்த்து வினவினார்.

சற்று நேரம் முன் ரவி, சூர்யா இருவரும் மாதங்கி எழுதிய ஆர்டிகிள் கடைசியில்

“இந்த டான்ஸ் ஸ்கூல் நிறுவனர் திரு. ரவிபாரதியும் திரைப்பட நடன இயக்குனர் ரவி பாரதியும் ஒருவரே என்று தெரிந்துக் கொண்டோம். அத்தோடு இவர் சமீபத்தில் தேசிய விருது வாங்கிய நடன இயக்குனர் என்பதும் தெரிந்தது. அவரை இதுவரை எந்த மீடியாவிலும் பார்த்தது இல்லை. நம் பத்திரிகைக்கு ஒரு பேட்டிக்கு அணுகினோம். அவர் பிடி கொடுக்கவில்லை வாசகர்களே உங்களுக்கும் அவரை அறிந்துக் கொள்ள ஆர்வமிருந்தால், நம்ம மேகஸினுக்கு ஈமெயில் அனுப்பி விடுங்க. உங்கள் கடிதங்களை பிரிண்ட் அவுட் எடுத்து அவரிடம் சேர்த்து விடுகிறோம். அதற்கு பிறகாவது உங்களைச் சந்திக்க வருகிறாரா என்று பார்க்கலாம். என்ன ஃபிரண்ட்ஸ் தெறிக்க விடலாமா ? ஸ்டார்ட் “

என்று முடித்து இருந்ததைப் படித்து விட்டு ரவி சூர்யாவை முறைத்தான்.

“என்னை ஏண்டா முறைக்கிற?”

“அன்னைக்கே மாதங்கி மேலே ஒரு கண்ணை வச்சுக்கோன்னு சொன்னேன். நீதான் அவங்க அப்படி எல்லாம் இல்லைன்னு சப்பக் கட்டு கட்டின. இப்போ இப்படித் தேரை இழுத்து விட்டு இருக்கா”

“ஹலோ. என்னை ஒரு கண்ணை வைக்கச் சொல்லிட்டு, நீ ரெண்டு கண்ணும் அவங்க மேலே தான் வச்சுருப்பப் போல் இருக்கு. உனக்கேத் தண்ணிக் காட்டிருக்காங்க “

“சும்மா இருடா. நார்மல் மீடியாவைச் சமாளிக்கறதேப் பெரிய கஷ்டம். இதில் ரசிகர்களை வேறே உசுப்பி விட்டு இருக்காங்க. இது இன்னும் பெரிய இம்சை. அதோட என்னைப் பற்றி இவங்களுக்கு என்ன அக்கறை ?”

“ம். எனக்கு என்னவோ ரசிகர்கள் உன்னைப் பற்றி தெரிஞ்சிக்கணும்னு நினைக்கிறத விட மாதங்கிக்குத் தான் அந்த இண்டரெஸ்ட் இருக்கிற மாதிரி தெரியுது”

அந்த வார்த்தைகள் ரவியை என்னவோ செய்ய “சும்மா உளறாத “ என்று கூறினான்.

ரவியைப் பார்த்த சூர்யாவோ “கன்பர்ம் “ என்றான்.

“என்னடா ?”

“இப்போ என்ன தோணுதுனா, உனக்கும் இண்டரெஸ்ட் இருக்கும் போல் இருக்கு” என, அதற்கு தான் சூர்யாவிடம் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்தான் ரவி.

இதை சூர்யா அனுராதவிடம் கூறி முடிக்க, அவர் ரவி முகத்தைப் பார்த்தார்.

“மா, அவன் சொல்றது எல்லாம் கணக்கில் எடுக்காதீங்க. எனக்கு இப்போ பிரஷர்தான் ஆகுது” என்று அவன் வாய் கூறினாலும், லேசாக முகம் சிவந்து இருந்தது.

அனுராதாவிற்கு வெகு காலம் கழித்துத் தன் மகன் சந்தோஷமாக இருப்பதுப் போல தோன்றியது. ரவிபாரதி சில வருடங்களுக்கு முன் சந்தித்த சிலப் பிரச்சினைகள் அவனை கூட்டுக்குள் சுருங்க வைத்து விட்டது. அனுராதா, சூர்யா இருவரும் பெரும் முயற்சி செய்து தான் அவனை வெளிக் கொணரந்து இருந்தார்கள்.

அப்போதும் அவனின் பேச்சுக்கள் பெரிதும் இவர்கள் இருவரிடம் மட்டும் தான். வெளியில் மற்றவர்களிடத்தில் தேவையான சொற்கள் மட்டும் தான். திரைத் துறைக்கு அவன் சென்ற போதிலும், அனாவசியமாக சில வார்த்தைகள் கூட பேசமாட்டான். அதிலும் இந்த மாதிரி கேலி, கிண்டல் எதுவும் கிடையாது.

சூர்யா, அனுராதாவிடத்தில் மட்டும் கொஞ்சம் சிரிப்பான். அப்படி இருந்தவன் இன்றைக்கு விளையாட்டாக  சண்டை போடுகின்றான் எனில், அவனின் மாற்றம் எதனால் என்று சிந்திக்கத் தோன்றியது.

அத்தோடு இதற்கு முன் இப்படிபட்ட சூழ்நிலைகளில் கோபத்தை மட்டுமே வெளிப்படுத்தியவன், இந்த முறை கோபம் இருந்தாலும், இதை எப்படிச் சமாளிப்பது என்றே சிந்திப்பதைப் பார்க்க முடிந்தது. அந்தப் பெண் மாதங்கியின் மேல் பெரிய அளவில் அவனின் கோபமும் தெரியவில்லை.

அனுராதாவிற்கு இந்த சிந்தனைகள் மனதில் இருந்தாலும், எதையும் வெளிக்காட்டமல்

“உங்க ரெண்டு பேர் சண்டையும் நிப்பாட்டுங்க. அப்பா இப்போ கிளம்பி வந்துருவார் “ எனவும், இருவரும் இரட்டை சோபாவில் அமர்ந்தனர்.

“சூர்யா, ஆபீஸ் போகலையா?”

அவனிற்கு பதில் ரவி “அவன் இருக்கட்டும்மா, இந்த விஷயம் பற்றி டிசைட் பண்ணிட்டு அவன் கிளம்புவான்” என்றான்.

“அப்போ நீயும் போகலையா ?’

“ம். இன்னிக்கு எனக்கு ஷூட் இல்லை. ஸ்கூல் வொர்க் தான் பார்க்கணும். அங்கே வேறே ஏற்பாடு பண்ணிட்டேன்”

“சரி. சாப்பிட வறீங்களா/”

“அப்பா வரட்டும் “ எனக் கூறும் போதே, ராமநாதன் வர, மூவரும் டைனிங் ரூம் சென்றனர்.

அனுராதா பரிமாற , மூவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

ராமநாதன் “அந்தப் பொண்ணுக்கு நம்ம புரோகிராம் இன்விடேஷன் எப்படிக் கிடைச்சது?” என கேட்க,

சூர்யா “அவங்க பத்திரிகை ஆபீஸ் மூலம் கிடைச்சு இருக்கு” என்றான்.

“எந்தப் பத்திரிகை?”

சூர்யா கூறவும் “லோகநாதன் ஃப்ரெண்ட் தானே அங்கே எடிட்டர் ?” எனக் கேட்டார்.

இரண்டே நிமிடத்தில் அவர் நூலைப் பிடிக்கவும், சூர்யா என்ன சொல்வது என்பது போல்  ரவியைப் பார்த்தான். இருவரும் பதில் கூறமால் இருக்க, ராமநாதன் நிமிர்ந்து பார்த்து “என்ன?” என வினவினார்.

ரவி “நீங்க சொன்னது கரெக்ட் தான் பா. ஆனால் நீங்க அவங்கக் கிட்டே நேரடியாப் பேசினால் தேவையில்லாமல் பிரச்சினை வரும். அதனால் நானே அதை ஹாண்டில் பன்னிக்கறேன்” என்றான்.

ராமநாதன் அவன் கூறியதை நம்ப முடியாமல் பார்க்க, ரவி திரு திருவென்று முழித்தான். சூர்யாவோ ரவியின் முழியைப் பார்த்து தலைக் குனிந்து சிரித்தான்.

ராமநாதன் கிளம்பவும் மீண்டும் ரவி, சூர்யா சண்டை சத்தம் கேட்க, அனுராதா வெகு நாட்கள் கழித்து மகிழ்ச்சியுடன் சிரித்தார்.

அலுவலகம் சென்ற ராமநாதன் அவர் நண்பர் லோகநாதனை அழைத்து

“லோகா, எதற்காக இந்தத் தேவை இல்லாத வேலை செய்தாய்?” என வினவினார்.

“நான் என்ன செய்தேன்?”

“உனக்குக் கொடுத்த அழைப்பை வேறு ஒருவரிடம் அதிலும் மீடியா ஆட்களிடம் கொடுத்து இருக்கிறாய்.”

“அது அன்றைக்கு அந்தப் புரோகிராம் போகணும் என்று தான் வாங்கினேன். ஆனால்  திடீர் என்று உடம்பு முடியாமல் போய் விட்டது. அதனால் என் நண்பர் ஒருவருக்குக் கொடுத்தேன். இதில் என்ன தப்பு ?”

“அதை என்னிடம் கூறி இருக்கலாம் அத்தோட அதன் பின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று தெரியும் தானே?”

“நான் வேண்டும் என்று எதுவும் செய்யவில்லை?”

“நீ என்ன நோக்கத்தில் இதைச் செய்தாய் என்று தெரியாது? ஆனால் இதனால் என் மகனுக்கோ இல்லை அவன் தொழிலுக்கோ எதுவும் பிரச்சினை என்றால், உன்னைச் சும்மா விட மாட்டேன். என்னைப் பற்றி உனக்கு தெரியும் தானே?”

“அப்படி எல்லாம் ஒன்றும் ஆகாது. “

“ஆகாமல் இருப்பது தான் உனக்கு நல்லது. நினைவில் வைத்துக் கொள்” என்றபடி போனை வைத்தார்.   

ராமநாதனும் அந்த நேரம் ரவியைப் பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருந்தார். தன் உதவியாளரை அழைத்து, இன்றைக்கு வந்த அந்த பத்திரிகையை வாங்கி வரச் சொன்னார்.

வெகுநாட்கள் கழித்து தமிழ் பத்திரிகைப் படிப்பதால், முதலில் கொஞ்சம் திணறினாலும், பின் அந்தக் கட்டுரையைப் படித்து முடித்தார்.

மாதங்கியின் எழுத்து நடையில் பாரதி ந்ருத்தியலயா பள்ளியின் அழகும், அங்கு படிக்கும் பிள்ளைகளின் ஆர்வமும், ரவிபாரதி நடத்தும் திருநங்கைகளுக்கான வகுப்புகள் பற்றிய விவரங்களும் சுவாரசியமாகக் கொடுக்கப்பட்டு இருந்தது. கடைசியில் ரவியின் ரசிகர்களைத் தூண்டி விடுவது போலச் செய்தது கொஞ்சம் நெருடினாலும், ரவி வெளியில் வர இது ஒரு வாய்ப்பாக இருக்கலாமோ என்றும் தோன்றியது. எதையும் உறுதியாகக் கூற முடியாது என்றாலும், அவரின் நம்பிக்கையான உதவியாளர் ஒருவரை ரவியின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க உத்தரவிட்டார்.

அதே சமயம் தனக்குத் தெரிந்தவர்கள் மூலம் மாதங்கி பற்றியும் தெரிந்துக் கொண்டார். கட்டுரையின் முடிவில் பாரதி என இருக்க அவரின் மனதிற்குள் “அடக் கடவுளே ! இங்கும் பாரதியா ! “ என பெருமூச்சு விட்டார்.

-தொடரும் –