வெண்தாமரைப் பதி மெல்லியலே

அத்தியாயம் – ஆறு

பாரதி ந்ருத்தியாலயா டான்ஸ் ஸ்கூல் இரண்டு, மூன்று அறைகளில் என்று இல்லாமல், கிட்டத்தட்ட ஒரு சில ஏக்கர் கணக்கில் இடத்தில் பள்ளிக்கூடம் போல அமைந்து இருந்தது. சிறு சிறு குடில்கள் போன்று அமைக்கப்பட்டு இருந்தததை வரும்போதே கவனித்தாள். அங்கே விசிட்டராக  வரும் யாரையும் வாட்ச்மேன் தடுப்பதில்லை.

எப்படி இத்தனை எளிதாக அனைவரையும் அனுமதிக்கிறார்கள் என்று யோசிக்கும் போதே, உள்ளே நேராக அவர்கள் அலுவலகப் பகுதிக்குச் செல்ல மட்டும் தான் பாதை இருந்தது.

பார்க்கிங் ஏரியா தாண்டியவுடனே செயற்கை குளத்தின் நடுவில் வெள்ளைத் தாமரைப் பூப் போல மார்பிள் கற்களால் அமைக்கப்பட்டு இருந்தது. அதன் மீது  கலைகளின் நாயகி அன்னை சரஸ்வதியின் சிலை வைக்கப்பட்டு இருந்தது. 

அந்த இடத்தைத் தாண்டியவுடன் அலுவலக கட்டிடம் அமைந்து இருக்க, வரவேற்பறையில் உயரமும், கணமும் நிறைந்த நடராஜர் சிலை நடுவில் வைக்கப்பட்டு , அதன் அருகில் மலையாள விளக்குகள் ஏற்றப்பட்டு , கீழே பூஜை செய்வதற்கான பொருட்களும் இருந்தது.

அதனைச் சுற்றிலும் மூங்கில் இருக்கைகளும் , அதன் மேல் சிறு குஷன்களும் போடப்பட்டு இருந்தது. சுவர்களில் பளிச்சிடும் வண்ணங்களில் மகாகவி பாரதியாரின் வரிகளும் அது சம்பந்தமான ஓவியங்களும் வரையப்பட்டு இருந்தது.

ரவிபாரதியைப் பார்க்க வேண்டும் எனக் கேட்க, அவளை பிரின்சிபால்  அறைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கே

“ஹலோ மிஸ்டர் ரவிபாரதி “ என்றபடி உள்ளே செல்ல,

அங்கே அமர்ந்து இருந்ததோ வேறு ஒருவர். மாதங்கி யோசனையோடு அவரை நோக்க,

“எஸ். மேடம். சொல்லுங்க” என்றார்.

“மிஸ்டர். ரவி பாரதியைப் பார்க்க வந்தேன்” எனக் கூற,

“என்ன விஷயமா மேடம்?”  என வினவினார். .

“டான்ஸ் ஸ்கூல் பற்றி ஒரு ஆர்டிகிள் எழுதப் போறேன். அது விஷயமா உங்க சர் கிட்டே பேசலாம்ன்னு வந்தேன்.  “

“நீங்க யாருன்னு சொல்லலையே?”

“சாரி. நான் மாதங்கி. பாரதி என்ற பெயரில் ஆர்டிகிள் ரைட்டரா இருக்கேன்’

“ஓ. அப்பாய்ண்ட்மென்ட் வாங்கி இருக்கீங்களா மேடம்?” எனக் கேட்க,

“இல்லை. நெட்லே சர்ச் பண்ணியதில், இப்போ ஸ்கூல் ஓபனிங் டைம் தான் போட்டு இருந்தது. அதனால் இங்கே தான் இருப்பார்ன்னு நினைச்சு வந்தேன்” என்றாள்.

“சாரி மேடம். சர் இங்கே வரது ரொம்பக் குறைவு தான். எப்போத் தேவைன்னு தோணுதோ அப்போ அவரைக் கூப்பிடுவோம். சர் வருவாங்க”

“ஓ அப்போ இங்கே டைரக்ட்டா அவர் டான்ஸ் கத்துக் கொடுக்கிறது இல்லையா?

“இங்கே உள்ள டான்ஸ் டீச்சர்ஸ் எல்லாம் அவரோட ஸ்டூடண்ட்ஸ் தான்.”

“அப்போ அட்மினிஸ்ட்ரேஷன் எல்லாம் யார் பார்த்துக்கறது?”

“சாரோட அம்மா தான் “

“உங்க சாரப் பார்க்கிறதுக்கு எப்போ வரலாம்?’

“அவர் கிட்டே தான் மேடம் கேட்கணும்”

“மிஸ்டர். ரவிபாரதி நம்பர் இருந்தாக் கொஞ்சம் கொடுங்க”

“சாரி மேடம். நம்பர் கொடுக்கிறதக்கு எனக்குப் பர்மிஷன் இல்லை. வேணும்னா, அவங்க அம்மா வரும்போது வந்து பாருங்க”

“ஓ. சரி. வந்ததற்கு இங்கே கொஞ்சம் சுற்றிப் பார்க்கலாமா?”

“யார் வேணும்னா பார்க்கலாம். ஆனால் போட்டோஸ் நாட் அலோவ்ட் “

“இங்கேயுமா?”

“எஸ் மேடம். சில விஷமிகள் செய்யற வேலைகளால் ஸ்கூலுக்குக் கெட்டப் பெயர் வருதுன்னு போட்டோஸ் எல்லாம் பர்மிஷன் இல்லை. ஸ்டூடண்ட்ஸ் கூட மொபைல் ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு தான் வரணும். பெட்டர் அவாய்ட் மொபைல்ன்னு நாங்க சொல்லிடுவோம்”

“ஏன் சர், டெக்னாலஜி யுகத்தில் இருந்துட்டு , மொபைல் இல்லாமல் சாத்தியமா? ஸ்டூடண்ட்ஸ் பாதுகாப்புக்கு இப்போ மொபைல் கூட அவசியம் தானே”

“நீங்க சொல்றது சரிதான். ஆனால் சாரப் பொறுத்தவரை இப்படித் தான் ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ பண்ணச் சொல்லிருக்காங்க”

“சரி. நான் ஒரு ரவுண்ட் பார்த்துட்டு வரேன். “ என,

“வாங்க. என்று அவரே அழைத்துக் கொண்டு சென்றார். செல்லும்போது அவரைப் பற்றி விசாரிக்க, ஸ்கூல் ஆரம்பித்தத்தில் இருந்து இங்கே மேனேஜராக இருக்கிறார் என்று தெரிந்துக் கொண்டாள்.

மாதங்கி அங்கே சென்ற போது சிறு பிள்ளைகளுக்கான நடன வகுப்புகள் நடந்துக் கொண்டிருந்தன. வாசல் கேட்டில் அருகே காத்திருப்போர் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்ததைக் கவனித்து இருந்தாள்.

அலுவலகக் கட்டிடம் அருகே மற்றுமொரு சிறிய கதவு இருக்க , அதன் வழியே தான் நடன வகுப்புகளுக்குச் செல்லுமாறு அமைக்கப்பட்டு இருந்தது. வாட்ச்மேன் ஷெட், வெயிட்டிங் ஏரியா, வரவேற்பறை என எல்லா இடங்களிலும் சிசிடிவி காமிராக்கள் பொறிக்கப்பட்டு இருந்தது.

உள்ளே அந்தக் குடில் போன்ற அமைப்புக்களில் நடன வகுப்புகள் நடந்துக் கொண்டிருக்க , சுற்றிலும் மரங்களும், செடிகளும் அந்த இடத்தையே குளுமையாக்கிக் கொண்டு இருந்தன.

அந்த இடத்திலும் சோலார் பேனல் கொண்டு சி.சி. காமிராக்கள் வைக்கப்பட்டு இருந்தது. அங்கே சுத்தம் செய்பவர்களும் , மேற்பார்வை செய்பவர்கள் இரண்டு பேர் என பலர் சுற்றிக் கொண்டிருந்தனர்.

அத்தனை எளிதில் வெளியாட்கள் உள்ளே செல்ல முடியாது என்று புரிந்துக் கொண்டாள்.

மேனேஜரிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தாள்.

“சர், கிட்டதட்ட ஒரு மெட்ரிகுலேஷன் ஸ்கூல் அளவிற்கு இடமும் இருக்கு. பாதுகாப்பு ஏற்பாடுகளும் இருக்கு. இது பசங்களுக்கு எக்ஸ்ட்ரா அக்டிவிட்டீஸ்க்கான இடம் தானே. இத்தனை மெனக்கிடல்கள் அவசியமா?”

“ரவி பாரதி சர் பொறுத்தவரை , படிப்போ, மற்ற வகுப்புகளோ குழந்தைகளோட பெற்றோர் நம்மளை நம்பி தானே அனுப்பி வைக்கிறாங்க. கிளாஸ் முடிஞ்சு அவங்கக் கிட்டேத் திரும்ப ஒப்படைக்கிற வரை அது நம்மளோடப் பொறுப்பு என்று தான் கூறுவார்.  “

“நல்ல விஷயம் தான். “ என்றவளுக்கு , தன் சந்தேகங்களை எப்படிக் கேட்க என்று யோசித்தாள்.

அப்போது அவளின் நல்ல நேரமோ அல்லது கெட்ட நேரமோ சூர்யா அங்கே வர, மேனேஜர் அவரைப் பார்த்து விட்டு மாதங்கியை அழைத்துச் சென்றார்.

சூர்யா மாதங்கியைப் பார்த்ததும்

“ஹலோ மாதங்கி, என்ன இந்தப் பக்கம் ?” என்று வினவினான்.

“ஹலோ பாரதி” என்று வேண்டுமென்றே கூறியவள், அவன் முறைக்கவும்,

“சாரி. சாரி. ஹலோ சூர்யா” என்றாள்.

“இது வேணும்னு தானே செய்யறீங்க?” என சூர்யா கேட்க,

“இல்லை. இல்லை.” என்று வேகமாகக் கூறியவள் பின் “சும்மா உங்களைக் கொஞ்சம் டென்ஷன் ஏத்தலாமேன்னு தான். சாரி” எனவும்

“இட்ஸ் ஓகே.” என்றவன் “சொல்லுங்க மாதங்கி . என்ன விஷயம் ? இங்கேயும் பாரதியா நோட்டம் விட வந்து இருக்கீங்களா? ”  என்று கேட்டான்.

அவன் கேள்வியில் லேசாக அதிர்ந்தாலும்

“இல்லை. அன்னிக்கு அந்த புரோகிராம் பார்த்தப் பின் , இந்த ஸ்கூல் பற்றி அடிக்கடிக் கேள்விப்படறேன். அது ஒரு கியுரியாசிட்டி கொடுத்து , சரி இங்கே என்ன தான் இருக்குன்னு பார்க்க வந்தேன்” என்றாள்.

“ஸ்கூல் ஒண்ணும் மியூசியம் இல்லை மாதங்கி. ஜஸ்ட் பசங்கக் கத்துக்கிற இடம் அவ்வளவு தான்”

“ஆனால் இந்த இடத்தோட அமைப்பு ரொம்ப நல்லா இருக்கு சூர்யா. மனசுக்கு அமைதியா இருக்கிற மாதிரி பிளான் பண்ணிக் கட்டியிருக்கீங்க “

“இதில் எல்லாம் என்னோட பங்கு எதுவுமே கிடையாது. எங்க வீட்டு பிரைம் மினிஸ்டரும் , அவங்களோட செல்லப் புள்ளயும் சேர்ந்து தான் கட்டினாங்க. நானும் எங்க அப்பாவும் விசிட்டிங் மட்டும் தான்.”

“ஓ. பிரைம் மினிஸ்டர்னா?” என்று கேள்வியாக இழுக்க,

“எங்க அம்மா அனுராதா மேடம் தான். தன் பிள்ளைக்கு சப்போர்ட் பண்ணி அவன் இஷ்டத்துக்கு வளைஞ்சுக் கொடுத்து இந்த ஸ்கூல் ஆரம்பிச்சாங்க “

“ஓ. ஆரம்பிக்கும் போதே இவ்ளோ பெரிசா தான் இருந்ததா?”

“இல்லை. முதலில் நார்மலா ஒரு பிளாட்டில் கிளாஸ் நடத்திட்டு இருந்தான். அது ஒத்து வராமல், இதைக் கட்டினான் “

“ஓகே. எனக்கு உங்க ப்ரதர் கூட ஒரு இன்டர்வியூ வேணுமே. ஏற்பாடு பண்ண முடியுமா?”

“சாரி மாதங்கி. அவன் எங்கேயும் மீடியா முன்னாடி வரமாட்டான். ஃப்ரெண்ட்டா ரவி கிட்டேப் பேசிப் பழகலாம். அது கூட எல்லோர் கிட்டேயும் கிடையாது”

“ஏன் சர்? சினி இண்டஸ்ட்ரிலே அவார்ட் வாங்கற அளவிற்கு திறமையான பெர்சன். மாஸ் மீடியா வேறே. ஆனால் பிரஸ் மீட் பண்ண மாட்டேன்னு  சொல்றது எங்களை மாதிரி மீடியா பீப்பிள இன்சல்ட் பண்ணற மாதிரி இருக்கே. “

“இதில் இன்சல்ட் என்ன இருக்கு மேடம்? அவனோட பிரைவேட் லைப் பாதிக்கப்படக் கூடாதுன்னு தன்னை வெளிப்படுத்திக்கலை. அவனுக்கு மீடியா பப்ளிசிட்டி தேவையும் படலை. “

“இது ஆட்டிட்யூட் காமிக்கிற மாதிரி படலையா உங்களுக்கு?”

“அதனால் யாருக்கு என்ன நஷ்டம்?”

“ம். ரெண்டு பேருக்கும் ரொம்பத் துணிச்சல் தான். நீங்க சொன்ன வோரட்ஸ நான் வெளியில் சொன்னால் , அதுவே எவ்ளோ பெரிய வைரல் ஆகும் தெரியுமா?”

“இதை விடப் பெரிய வைரல் எல்லாம் நாங்கப் பார்த்துட்டோம். அதோட நாங்க எதுவும் தப்பா சொல்லலையே. எங்களுக்குத் தேவையில்லை. அதனால் ஒதுங்கி இருக்கோம். அவ்வளவு தானே”

“சரி. உங்கள் பிடியில் இருந்து நீங்கள் மாறப்போவதில்லை. வந்ததற்கு உங்கள் அம்மாவையாவதுப் பார்க்கலாமா?”

“இன்றைக்கு அம்மா, அப்பா இருவரும் சொந்தத்தில் ஒரு விஷேசத்திற்கு போயிருக்காங்க. “

“சரி. நான் கிளம்பறேன் சூர்யா” என,

“வெயிட். ஸ்கூல் சுற்றிப் பார்க்கத் தானே வந்தீங்க. முடிச்சிட்டீங்களா?

“வெளியில் இருந்து எல்லாம் பார்த்துட்டேன். கிளாஸ் எதுவும் டிஸ்டர்ப் பண்ண வேணாம்”

 “ஓகே. டீ, காப்பி ஏதும் சாப்பிடறீங்களா?

“வேண்டாம் சூர்யா. “ என்றவள், “உங்களுக்கு ஏன் பாரதி பேர் சொன்னால் பிடிக்கலை. ஜஸ்ட் ஒரு கியுரியாசிட்டி கொஸ்டீன் தான்”

“நாங்க ரெண்டு பேரும் படிச்சது எல்லாமே ஒரே ஸ்கூல், ஒரே கிளாஸ். காலேஜ் தான் வேறே. ஸ்கூலில் எங்க அம்மா ஆரம்பத்தில் ரெண்டு பேருக்கும் பாரதின்னே பேர் கொடுத்து இருக்காங்க. அது எல்லோருக்கும் கன்ப்யூஸ் ஆக, வீட்டில் சூர்யா, ரவின்னு சேர்த்து வச்சிட்டாங்க.  பாரதின்னுக் கூப்பிட்டா, ரவிக்கு ரொம்பப் பிடிக்கும். எனக்கு என்னவோ அது பொண்ணு பெயர் மாதிரி அப்போ தோணுச்சு. அதனால் நான் சூர்யா ஆகிட்டேன். அத்தோட பாரதி அவன் பீல்ட்லே ஒரு பொசிஷன் வந்தாலும் நிறையக் கஷ்டப்பட்டான். அவன் ஒரு விஷயத்தில் மாட்டிக்கிட்டப்போ எல்லாரும் எல்லா பக்கமும் பாரதி அப்படி, இப்படின்னு வரும்போது என் பேரும் அதுதானேன்னு கோபம் வரும். அதனால் நான் சூர்யான்னு தான் எல்லோர் கிட்டேயும் சொல்லுவேன்”

மாதங்கி “ஓகே. பை” எனவும், சூர்யாவும் விடைக் கொடுத்தான். அதற்கு முன் போட்டோஸ் எதுவும் எடுக்கவில்லையே என்று தெளிவுப்படுத்தியே அனுப்பி வைத்தான்.

அவள் சென்றதும் இதை ரவியிடம் கூறலமா என்று யோசித்தவன், பின் வேண்டாம் என்று விட்டு விட்டான். ஸ்கூல் முழுதும் கண்காணிப்பு காமிரா பொருத்தியது சூர்யா தான். அதனால் அங்கே நடப்பது முழுதும் அவனின் பெர்சனல் மொபைலிலும் ஸ்டோர் ஆகி விடும். தேவைப் பட்டால் அவன் செக் செய்துக் கொள்வான்.

சற்று நேரம் முன் ஏதோ தோன்ற ஸ்கூல் காமிரா ஆன் செய்துப் பார்த்தவன் மாதங்கி மேனேஜரோடு சுற்றி பார்ப்பத்தைக் கண்டான். அன்றைக்கு ரவி சொன்னது சரியோ என்று எண்ணியவன், வேகமாகக் கிளம்பிப் பள்ளிக்கு வர, மாதங்கி சாதாரணமாகப் பேசவே அவனும் தன்மையாகப் பேசி அனுப்பி வைத்தான்.

சூர்யா மறந்த ஒன்று, இதே சிசி டிவிக் காட்சிகள் ரவியின் மொபைலிலும் ஸ்டோர் ஆகும் என்பதோடு சூர்யா அதைப் பார்த்த நேரத்தில், ரவியும் தன் மொபைலில் பார்த்துவிட்டான். ரவி மேனேஜரிடம் பேச நினைத்தப் போது சூர்யா அங்கே செல்வதைப் பார்த்துவிட்டு நிறுத்தினான் என்பதும் சூர்யா அறியவில்லை.

-தொடரும் –