வெண்தாமரைப் பதி மெல்லியலே

நிழலில் உலர்த்திய வெண் தாமரை இதழ்கள் ஒரு கிலோ அளவு, மூன்று லிட்டர் நீரில் இட்டு, ஓரளவு ஊறவைத்து, மறுநாள் ஒரு லிட்டர் அளவாக காய்ச்சி, வடிகட்டி, ஒரு கிலோ சர்க்கரை கலந்து, தேன் பதமாகக் காய்ச்சி வைத்துக்கொண்டு, 2 தேக்கரண்டி, சிறிதளவு நீருடன் கலந்து சாப்பிட்டுவர வேண்டும். உடல் சூடு, தாகம் ஆகியவை குறையும். கண்கள் குளிர்ச்சியடையும்.

அத்தியாயம் – 5

மாதங்கி சந்திக்கச் சென்ற அந்த நடிகை சில வருடங்கள் முன் கதாநாயகியாக நடித்தவர், தற்போது சில குணசித்திரப் பாத்திரங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அவர் வீட்டிற்கு சென்றதும்,

“ஹாய் மாதங்கி. வா. வா  எப்படி இருக்க ? “ என்று வரவேற்க,

“ஹலோ மேடம். நல்லா இருக்கேன்.” எனவும், அவர் அமரச் சொன்னார்.

“என்ன விஷயம் ? சும்மா எங்க பக்கம் எல்லாம் உன் பார்வை திரும்பாதே” என்று வினவினார்.

உண்மைதான். சாதனையாளர்களைத் தான் பேட்டி எடுக்க விரும்புவாளேத் தவிர, அனாவசியமாக யாரிடமும் பேட்டி என்று வலிந்துக் கேட்க மாட்டாள்.

இப்போதும் இந்த நடிகையை காரணமில்லாமல் சந்திக்க வரவில்லை. சமீபத்தில் அவர் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது வாங்கி இருந்தார். சேனல்கள் நடத்தும் விருது விழாக்களில் மாதங்கிக்கு அத்தனை நம்பகத் தன்மை கிடையாது. அதனால் அதற்கு அத்தனை முக்கியத்துவம் கொடுக்க மாட்டாள். இவள் வேலை செய்யும் பத்திரிகையும் அந்த மாதிரி நேரங்களில் வேறு ஒருவரை அனுப்பி விட்டுவிடுவார்கள்.

இவர் சிறந்த நடிகை என்பதோடு, சொந்த வாழ்விலும் சில கோட்பாடுகள் கொண்டவர் என்பதால், மாதங்கிக்கு அவர் மேல் மதிப்பு உண்டு.

அவர் கேள்விக்குப் பதிலாக

“முதலில் தேசிய விருது வாங்கியதற்கு வாழ்த்துக்கள் மேடம். “ என்றாள்.

“நன்றி மா.” எனவும், அவர் விருது வாங்கிய கேரக்டர் பற்றி சற்று நேரம் பேசியவள், முதல் நாள் விழா பற்றிப் பேச ஆரம்பித்தாள்.

“உங்களுக்கும் பாரதி ஸ்கூலுக்கும் என்ன சம்பந்தம் மேடம்?”

“என்ன திடீரென்று?”

“நேற்று உங்களை நான் அங்கே பார்த்தேன்”

“ஓ. உனக்கும் பாரதி அழைப்பு விடுத்தாரா?

“அது” என்று சற்று தயங்கிய மாதங்கி உண்மையும் , பொய்யும் இல்லாது “எங்கள் ஆபீஸ்க்கு வந்தது மேடம். ஆபீஸ் சார்பில் நான் வந்தேன்” என்றாள்.  

“ஓ. நான் உன்னைப் பார்க்கவில்லை. நான் இந்தப் படத்தில் விருது வாங்கக் காரணமே பாரதி தான்”

“உங்கள் நடிப்புக்குத் தானே விருது” என மாதங்கி வினவினாள்.

“இந்தப் படத்தில் என் கேரக்டர் என்னன்னு உனக்குத் தெரியும் தானே”

“உங்கள் நிறைவேறாத கனவுகளை மகள் மூலம் நிறைவேற்றிக் கொள்வதாக இருக்கும்.”

“ம். அந்த நிறைவேறாத கனவு பரத நாட்டிய அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்பதே. அதை என் மகள் வளர்ந்து அவள் அரங்கேற்றத்தின் போது என் அரங்கேற்றமும் நடக்கும். அந்த மொத்தப் படத்திற்கும் கோரியோகிராப் பாரதி தான்”

“அப்படியானால் சிறந்த நடன இயக்குனர் விருது வாங்கிய ரவிபாரதி இவர் தானா?”

“‘ஆமாம். அவரோடு சேர்த்து ஐந்து விருதுகள் அந்தப் படத்திற்கு கிடைத்தது.”

ஓ. அதனால் தான் படத்தின் கதாநாயகியும் இந்த விழாவிற்கு வந்தாங்களா?”

“எஸ். அந்த படக் குழு அனைவருமே கலந்து கொண்டோம். அவரின் நடனங்கள் தான் படத்தின் மிகப்பெரிய பலம். அதனால் நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழாவில் கலந்துக் கொண்டோம்”

“ஆனால் இப்போது எல்லாம் பார்ட்டி வைப்பது தானே ஃபேமஸ். இது என்ன ?’

“எங்களுக்கு எல்லாம் ப்ரொடக்ஷன் தரப்பில் போனஸ் அமெளண்ட் கொடுத்தார்கள். ரவி பாரதி அவரின் சம்பளம் தவிர எதுவும் வேண்டாம் என்று கூறிவிட்டார். அதனால் அவர் நடத்தும் இந்த நிகழ்ச்சிக்கு மொத்த டிக்கெட்ஸ் வாங்கி, எங்களை எல்லாம் கலந்துக் கொள்ளக் கூறி ப்ரொடியூசர் அனுப்பி வைத்தார்.”

“நல்ல ஐடியா தான். ஆனால் இதுதான் நிகழ்ச்சி என்று எல்லோருக்கும் தெரியுமா?”

“இல்லைமா. நாங்கள் அவர் நடத்தும் பள்ளிக் குழந்தைகள் நிகழ்ச்சியாக இருக்கும் என்று தான் சென்றோம். ஆனால் இப்படி எதிர்பார்க்கவில்லை. எங்கள் நேரத்தை உருப்படியாக செலவழித்தோம் என்ற திருப்தி தோன்றியது”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”

“இந்த நிகழ்ச்சி செலவு முழுக்க ரவி பாரதி குடும்பத்தார் செய்வது. இதில் வரும் கலெக்ஷன் முழுக்க இந்த ட்ரான்ஸ் ஜெண்டர் டிரஸ்ட்டுக்கு செல்கிறது என்று கூறினார்கள். நாம் நேரடியாக உதவ முடியாத சில வேளைகளில் இது போன்ற விஷயங்களில் பங்கெடுப்பது கூட மனத் திருப்தி தரும் தானே”

“உண்மைதான் மேடம். இது போன்ற நிகழ்ச்சிக்கு பப்ளிசிட்டி தேவை தானே. ஏன் மீடியாக்காரர்கள் யாரும் அழைக்கப்படவில்லை?”

“ரவி பாரதிக்கும், மீடியாவிற்கும் செட் ஆகாதுமா. ஏற்கனவே சில விரும்பாத அனுபவங்கள் அவருக்கு மீடியாவால் நடந்து இருக்கிறது”

“அப்படி என்ன அனுபவங்கள்?”

“அது எனக்கு முழுதாகத் தெரியாது. “

“எப்போ நடந்தது?”

“நான்கு , ஐந்து வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன்”

“இதற்கு முன்னும் அவர் நடன இயக்குனராக இருந்து இருக்கிறாரா?”

“அவருடைய இருபதாவது வயதில் இருந்தே கோரியோகிராப் செய்துக் கொண்டிருக்கிறார். கிட்டதட்ட எட்டு வருடங்களாக இந்த ஃபீல்ட்டில் இருக்கிறார் “

“ஓ. எப்படி வெளியில் தெரியாமல் போனது?’

“அவர் படத்திற்கு வொர்க் செய்வதோடு நிறுத்திக் கொள்வார். அதற்கு பின் ப்ரமோஷன், வெற்றி விழா எதிலும் கலந்துக் கொள்ள மாட்டார். விருதுகள் கூட அவரின் சார்பில் அவரின் அசிஸ்டண்ட் யாராவது தான் வாங்கிக் கொள்வார்கள்.”

“இத்தனைப் பெரிய திறமைசாலி எப்படி என் பேட்டி லிஸ்ட்ல மிஸ் பண்னினேன் தெரியலையே?”

“நீதான் சினிமா பக்கம் அதிகம் வர மாட்டாயே. அதனால் உன் கவனம் அங்கே சென்று இருக்காது “

“உண்மைதான்” என்றவள் , அதற்கு மேல் அவரிடத்தில் வேறு எதுவும் கேட்பதற்கு இருக்காது என்று உணர்ந்தவளாக, அந்த நடிகையைப் பற்றி சிலவற்றை கேட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டாள்.     

மேலும் இரண்டு முக்கியப் பிரமுகர்களிடம் அவர்களுக்கேத் தெரியாமல் விசாரித்தப் போதும் , பெரிதாக விவரங்கள் கிடைக்கவில்லை.

அலுவலகத்திலோ எடிட்டர் கட்டுரை தயாரா என்று தினமும் விசாரிக்க, என்ன செய்யலாம் என்று யோசித்தாள். கிடைத்தத் தகவல்கள் அனைத்தும் ரவிபாரதி இந்தப் பள்ளி நடத்துகிறார் என்பதற்கு மேல் எதுவும் அறிய முடியவில்லை.

அந்த விருது வாங்கிய நடிகைப் பேசும் போது ரவிபாரதி மீடியாவால் சில பிரச்சினைகள் சந்தித்ததாகக் கூறியது நினைவில் வர, அதில் இருந்து ஏதாவதுக் கிடைக்குமா என்று சிந்தித்தாள்.

சினிமா கிசுகிசுக்களை அவள் அதிகம் நம்புவதில்லை என்பதால் அதை எந்தப் பத்திரிகையிலும் படிக்க மாட்டாள் மாதங்கி. இந்த ரவி பாரதி பற்றி எப்படி அறிய என்று யோசித்தவள் , தங்கள் பத்தரிகைகளில் அந்த மாதிரி செய்திகளைத் தேடினாள் .

சமீபத்திய செய்திகள் எதுவும் அவனைப் பற்றி இல்லை. கொஞ்ச வருடங்கள் முன்னோக்கி தேடிப் பார்த்தாள்.

மாதங்கி வேலைக்குச் சேரும் முன் ஒன்று , இரண்டு செய்திகள் வந்து இருந்தன. அதில் நேரடியாகப் பெயர் போடப்படாமல் பிரபல நடன இயக்குனர் நடத்தும் நடனப் பள்ளியில் பாலியல் அத்து மீறல்கள் என வந்து இருக்க, மாதங்கி திகைத்து நின்றாள்.

மாதங்கியால் தவறுகளைப் பொறுக்க முடியாது. அதிலும் குறிப்பாக இது போன்ற செயல்களுக்கு அவளைப் பொறுத்தவரை மௌரியர் காலத்துத் தண்டனை முறைகளே சரி என்ற எண்ணம் கொண்டவள்.

ஆனால் பாரதி சகோதரர்களை இந்த விஷயத்தில் அவளால் சம்பந்தப் படுத்திப் பார்க்க முடியவில்லை. அதே சமயம் மீடியா மீதான அவர்களின் வெறுப்பைப் பார்க்கும்போது உண்மையோ என்ற எண்ணமும் தோன்றியது.  (இப்போது அது வெறுப்பு என்று தான் தோன்றியது)

மாதங்கி  இந்தப் பத்திரிகையில் ஐம்பது சதவீதமாவது உண்மை இருக்கும் என்பதால் தான் வேலைக்குச் சேரந்ததே. அதனால் இது முழுக்கப் பொய் என்று தோன்றவில்லை.

அதே சமயம் மாதங்கி சந்தித்த இரண்டு பிரபலங்களும் பொது வாழ்க்கையில் நேர்மையானவர்கள் என்ற பெயர் பெற்றவர்கள். இப்படிப் பட்ட ஒருவனை அவர்கள் பாராட்டிப் பேச வாய்ப்பில்லை. ஒருவேளை அவன் திருந்தி இருப்பதால் என்று வைத்துக் கொண்டாலும், இத்தனை தூரம் இழையக் கூடியவர்கள் இல்லை.

ஆரம்பத்தில் எடிட்டர் கூறியதற்காக அந்த நடன விழாவிற்கு சென்ற மாதங்கிக்கு , அங்கே ஏற்பட்ட அனுபவமும், எடிட்டர் நடவடிக்கைகளிலும், அவள் சந்தித்த நபர்களின் எண்ணங்களிலுமாக தற்போது ரவிபாரதிப் பற்றி தெரிந்துக் கொண்டாக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.

இந்த செய்தி வந்து இருந்த அதே நேரத்தில் மற்றப் பத்திரிகைகளில் வெளியாகி இருந்த செய்திகளையும் தன் லேப்டாப்பில் சேகரித்துக் கொண்டாள்.

பின் அவற்றை ஒவ்வொன்றாகப் படித்துப் பார்த்ததில் நிறைய முரண்பாடுகள் தோன்றியது. அத்தோடு எந்தப் பத்திரிகையிலும் ரவி பாரதி பெயர் வெளியிடப்படவில்லை.

அப்படி என்றால் மிகப்பெரிய தொடர்புகள் இருந்தால் மட்டும்தான் இது சாத்தியாமாகும் என்று அவளுக்குப் புரிந்தது.

ரவிபாரதி பற்றிய விவரங்கள் கூகிள் சர்ச் செய்ததில் , அவன் நடத்தும் பள்ளியின் விவரமும், நடன இயக்குனராகப் பணியாற்றியப் படங்கள் பற்றிய விவரங்கள் மட்டுமே இருந்தன. போட்டோ கூட இல்லை. இந்த குற்றச்சாட்டுப் பற்றிய விவரங்கள் எதுவும் லிங்க் கூட கொடுக்கப்படவில்லை.

வேறு எப்படி விவரங்கள் எடுக்கலாம் என்று யோசித்தவளுக்கு எந்த வழியும் தெரியவில்லை. அரை நாள் வரை இந்த யோசனையிலே இருந்த  பின், மாதங்கி ரவி பாரதி நடத்தும் நடனப் பள்ளிக்குச் சென்றாள்.

-தொடரும்-