வெண்தாமரைப் பதி மெல்லியலே

தாமரை மலர்  இனிப்பு, துவர்ப்புச் சுவைகளும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. தாது வெப்பத்தைக் குறைக்கும்; குளிர்ச்சியுண்டாக்கும்; கோழையகற்றும்.தாமரை விதை, உடலை பலமாக்கும். தாமரை கிழங்கு  உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும்.

அத்தியாயம் – மூன்று

அனுராதா சிறு வயதில் இருந்தே மகாகவியின் கவிதையில் பிடிப்புக் கொண்டவர். பள்ளி, கல்லூரிகளில் கவிதைப் போட்டியில் கலந்துக் கொண்டு கவிதைகள் சொல்வதோடு , இறுதியில் மகாகவியின் வரிகளைக் கொண்டு அதை நிறைவு செய்பவர்.

ராமநாதன் அப்படி ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்ட போதுதான் அனுராதா மகாகவியின் வரிகளை உணர்ச்சிப் பொங்கக் கூறியதைக் கண்டு அவரை திருமணம் செய்ய விருப்பம் கொண்டார். அவரின் அழகும் ஒரு காரணம் என்றாலும் கூட, அவரின் கவிதை சொல்லும் போது வெளிப்படும் முகப் பாவமும் அவரை வெகுவாகக் கவர்ந்தது.

“காதல் ஒருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவிலும் கைக்கொடுத்து”

என்ற வரிகளை அனுராதா ஆழ்ந்து , அனுபவித்துக் கூறிய அழகில் விழுந்தவர், அனுராதவைத் தன் காரியம் யாவிலும் கைக்கொடுக்கும் காதலியாய் அடையும் வரை ஓயவில்லை.

அவர்களின் காதலுக்குப் பரிசாய்ப் பிறந்த இரட்டைகளில், அனுராதாவின் ஆண் பிம்பமாக ரவிபாரதி இருந்தான். அவன்  செயல்களில் ஆரம்பத்தில் மனது பூரித்தாலும்.  தற்போது நடக்கும் பிரச்சினைகளுக்கு இதுதான் காரணம் என்ற கோபமே அதிகம்.

அனுராதாவோ தன் மகனின் செயல்களில் எந்தத் தவறும் காணாதவர். அவருக்கு தன் மகனைக் குறித்துப் பெருமையே.

அவரை விரும்பி மணந்த இராமநாதன் , இன்று வரை அனுராதாவின் செயல்பாடுகளில் அதிகம் தலையிட்டதில்லை. ஆரம்பத்தில் தன் கவிதைகளைப் புத்தகமாக வெளியீட்டுக் கொண்டிருந்த அனுராதா, தற்போது அறிவியல் வளர்ச்சியில் இணையம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தன் அடையாளம் இழக்காமல் இருக்கிறார்.

அதே சமயம் தன் குடும்ப வாழ்விலும் யாருக்கும் எந்த குறையும் வைத்தது இல்லை. அதனால் தான் ராமநாதன் சில சமயங்களில் கோபப்படும்போது, வருத்தப்பட்டாலும் அதைப் பெரிதுபடுத்த மாட்டார். அவர் கோபப்படுவதும் பெரும்பாலும் ரவிபாரதி குறித்தே என்பதால் ஒரு தகப்பானாக அவரின் உணர்வுகளையும் புரிந்துக் கொண்டார்.

ஆனால் தன் மகனின் விருப்பமும் நியாயமே என்பதால் , கணவரைச் சமாதானப்படுத்தி , இருவருக்கும் இடையில் பாலமாக இருப்பார். அதில் தற்போது அவரின் இன்னொரு மகன் சூர்யாவும் பாலத்திற்கு வலு சேர்த்துக் கொண்டிருக்கிறான்.

மியூசிக் அகாடமியில் விழாவை முடித்து விட்டு இரட்டைகள் இருவரும் வீடு திரும்பும்போது, அனுராதா காத்து இருந்தார். இருவரும் விழா சம்பந்தப்பட்ட விஷயங்கள் பேசிவிட்டு உறங்கச் சென்றனர்.

அப்போது நினைவு வந்தார் போல சூர்யா “அம்மா, உங்களை மாதிரி பாரதிக் கிறுக்கு ஒருவரை இன்றைக்குப் பார்த்தேன் “ எனக் கூற, ரவி அந்த இடத்திலேயே நின்றான்.

அனுராதா “ யாருடா அது?” என வினவ,

“இன்னிக்கு உன் பையன மலை ஏத்த வந்த ஒரு ரிப்போர்ட்டர். ஆனால் யாரோட நல்ல நேரமோ, அவங்களும் எஸ்கேப். நானும் எஸ்கேப்” “ என்றான்.

“என்னடா விஷயம்?”

“அவங்க பேர் மாதங்கி. பெண்கள் பத்திரிகையில் பாரதி என்ற பெயரில் ரிப்போர்ட்டரா இருக்காங்க. பேசினால் சும்மா அனல் அடிக்குது”

“என்ன நடந்தது?”

“உன் புள்ள நாளைக்குத் தலைப்புச் செய்திலே வந்திருக்க வேண்டியவன். அவன் மன்னிப்புக் கேட்டதால் விட்டுட்டாங்க” எனவும், அனுராதா சட்டென்று தன் மகன் ரவியின் பக்கம் பார்வையைத் திருப்பினார்.

அவர் பார்வையை உணர்ந்தவன், அவர் அருகில் வந்து நிற்க,

“என்ன பண்ணின பாரதி?” என்றார்.

“மா. ஒண்ணும்  பண்ணலை. “

சூர்யா “என்னது ஒண்ணும் பண்ணலையா?” எனவும்

“நீ சும்மா இரு. அவங்கள மரியாதை இல்லாமல் பேசிட்டேன். அப்புறம் சாரியும் கேட்டுட்டேன்” என்றான்.

“என்ன பழக்கம் இது பாரதி? உன் பேச்சு, செயல் எதிலும் பெண்களுக்கான மரியாதை குறையக் கூடாதுன்னு சொல்லிருக்கேன் தானே?’

“இல்லை மா. அவங்க சும்மா போட்டோ எடுத்தாக் கூட இவ்ளோ ரியாக்ட் பண்ணியிருக்க மாட்டேன். ரிப்போர்ட்டர்ன்னு தெரிஞ்சவுடனே , கோபம் வந்தருச்சு”

“அதுக்கு? ரௌத்ரம் பழகுன்னு சொன்னால், அது தீமைகளைத் தட்டிக் கேட்பதற்காக சொன்னது. ஆனால் மற்றவர்களிடத்தில் மரியாதை குறைவா நடக்கிறது தப்பு. அந்தப் பொண்ணு மனசில் இவனை அவங்க அம்மா எப்படி வளரத்துருக்காங்க பாருன்னு தானே தோணியிருக்கும் ?

“அம்மா, அந்தளவிற்கு எல்லாம் நான் எதுவும் பேசலைமா. கொஞ்சம் கோபமா பேசினேன். அவங்களை ஓருமையில் பேசினேன். அவ்வளவு தான்”

“இதுதான் இன்னும் மோசம். பெண் குழந்தைகளை விட, ஆண் பிள்ளைகளை சரியாக வளர்த்தாலே சமூகத்தில் பாதிக்கும் மேல் குற்றங்கள் குறையும் என்பது என் எண்ணம். அப்படித்தான் உங்களை வளர்த்து இருக்கிறேன் என்று பெருமையாக நினைத்து இருந்தேன். இரண்டு பேரும் என்னை ஏமாற்றி விட்டீர்கள்”

சூர்யா “அம்மா, நான் என்ன பண்னினேன்?” என்றான்.

“அவன் விஷயம் உனக்குத் தெரியும் தானே. அந்தப் பெண்ணிடம் அமைதியாகப் பேசுவதை விட்டுவிட்டு, இப்படி முரடன் போல் நடந்துக் கொண்டிருக்கிறாய். அவனோ வார்த்தைகளை விட்டுவிட்டு வந்திருக்கிறான். இதை விட வேறு என்ன நடக்கணும்?”

ரவி “அம்மா, சாரி, பிளீஸ் இனிமேல் இப்படி நடந்துக்க மாட்டேன். இந்த ஒரு தடவை விட்டுடுங்க. அவங்கக் கிட்டேயும் நான் சாரி கேட்டுட்டுதான் வந்தேன்” என,

சூர்யாவோ “அம்மா, நான் சாரி கேட்டத்தோட அவங்கக் கிட்டே ஃப்ரெண்ட்டும் ஆயிட்டேன். சோ உங்க செல்லப் புள்ளைக் கிட்டே மட்டும் உங்க கோபத்தைக் காமிங்க. என்னை விட்டுடுங்க” என்றான்.

அப்போது ராமநாதன் “ராதா” என்று அழைக்கும் குரல் கேட்க,

ரவி “அம்மா, நான் பிராமிஸ் செய்யறேன். இனிமேல் இந்த மாதிரி நடக்காது.  இதைப் பற்றி உங்க காதல் கணவர் கிட்டே எதுவும் சொல்லாதீங்க. அப்புறம் அவரோட பிசினஸ் பாருனு ராமாயணம் ஸ்டார்ட் பண்ணிடுவாரு. மீ பாவம் . பிளீஸ்” எனவும்,

“போடா.” என்றவர் “சரி ரெண்டு பேரும் சாப்பிட்டீங்க தானே? இல்லை எதுவும் லைட்டா தரட்டுமா?” எனக் கேட்க, இருவரும் வேண்டாம் எனவும், தங்கள் அறைக்குச் சென்றார்.

இருவரும் தங்கள் அறைக்குச் செல்ல, சூர்யாவை நிறுத்திய ரவி

“சூர்யா, அவங்க ரிப்போர்ட்டரா இருக்கிற பத்திரிகை எதுன்னு சொன்ன?” எனக் கேட்டான்.

“பெண்கள் பத்திரிகை”

“அதோட எடிட்டர் யார்?” எனவும், சட்டென்று இருவரும் தங்கள் மொபைலில் கூகிள் சர்ச் செய்தனர்.

அதில் வந்த பெயரைப் பார்த்து சூர்யா “இவர் நம்ம அப்பாவோட கிளப் ஃப்ரெண்ட் லோகநாதனுக்கு ஃப்ரெண்ட் தானே.” என்றான்.

“எஸ். அதோட அப்பா லோகநாதனுக்குக் கொடுத்த இன்விடேஷன் தான் அந்த எடிட்டர் கைக்குப் போய் இந்தப் பொண்ணு மாதங்கிக் கையில் வந்திருக்கு”

“ரவி அப்பா என்னிக்கும் இல்லாமல், என் ஃப்ரெண்ட் ஒருத்தர் பரோக்ராம் பார்க்கணும்ன்னு சொல்லி இன்விடேஷன் கேட்டார். நான் தான் கொடுத்தேன். அதைத் தான் அவர் வாங்கிருக்கணும்”   

“ம். ஆனால் லோகநாதன் மோடிவ் என்னன்னு தெரியலை. சோ அவர் மேலே ஒரு கண் வச்சுக்கோ” என்றான் ரவி.

“ஓகே டா. நான் பார்த்துக்கறேன். & கொஞ்சம் கோபத்தைக் குறைக்கப் பாரு” என்று சூர்யா கூறவும்,

“சரி” எனவும், இருவரும் குட் நைட் கூறிவிட்டு தங்கள் உறக்கத்திற்கு சென்றனர்.

ரவியின் முகத்தில் சூர்யா கூறிய “பாரதிக் கிறுக்கு” என்ற வார்த்தை புன்னகை மலர வைக்க, மனமோ “எந்த பாரதியின் மீது கிறுக்கு ஆனாய் பெண்ணே?” என்ற கேள்வி தோன்றியது.

சூர்யாவும் அதே நேரத்தில் கிட்டத் தட்ட அதே எண்ணத்தில் தான் இருந்தான்,

“அம்மாவைப் போல் இந்த மாதங்கியும் இருக்கிறாளே. இரண்டு பேரும் ஒரே இடத்தில் இருந்தால் , அந்த வீடு என்னாகும்? “ என்று எண்ணும் போதே “அம்மாடியோ. ஆண்டவா” என்று நினைத்தான்.

ப்ரோக்ராம் முடிந்து மாதங்கி தன் வீட்டிற்கு சென்ற போது அவள் அம்மா மகேஷ்வரி

“வா மது. ஏண்டா இவ்ளோ லேட்? டிராஃபிக்கா?” சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?’ எனக் கேட்டார்.

“மா, ஒவ்வொண்ணாக் கேளு. ஃபங்சன் முடிஞ்சு தானே கிளம்ப முடியும். டிராஃபிக் கொஞ்சம் அதிகம் தான். நான் பரோக்ராம்லேயே சாப்ட்டுட்டேன். அவ்ளோதானே. கேள்வி பதில் செஷன் முடிஞ்சுதா?”

“அடியே. ஊர் சுத்திட்டு நீ வர்ற வரைக்கும் வெயிட் பண்ணி அக்கறையாக் கேட்டா, உனக்கு நக்கலா இருக்கோ?’

“மா, நான் ஊர் சுத்தப் போகலை.  என் வேலை தானே பார்த்துட்டு வரேன்”

“இல்லைன்னு சொல்லலை. அப்போ உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கிற என் கேள்விக்கு ஒழுங்கப் பதில் சொல்லனும். “

“சரி. சரி. விடு. சண்டையில் கிழியாத சட்டைக் கிடையாது. “

“அப்படின்னா என்ன?’

“அம்மா, பழமொழி சொன்னால், அனுபவிக்கணும். ஆராயக் கூடாது”

“கடவுளே. வர வர வீட்டில் பேசுவது என்றால் வடிவேலு காமெடி வசனம் இல்லாமல் இருக்கிறதே இல்லை போல். “ என்று அடிக்க வர ,

“மகேஷ்வரி மேடம், பேச்சு பேச்சா தான் இருக்கணும், கோட்டத் தாண்டி நீயும் வரக் கூடாது. நானும் வர மாட்டேன்” என்று மீண்டும் வடிவேலு வசனமே பேசினாள் மாதங்கி.

பின் “மா, அப்பா வந்தாச்சா?” என வினவ,

“இல்லைடா. இன்னிக்கு இன்டெர்னல் ஆடிட் இருக்கு. வர லேட் ஆகும்னு சொன்னார்.” என்றார்  

“சரிமா. நான் போய் படுக்கறேன். நீங்களும் தூங்கப் போங்க. அப்பா அவர் கிட்டே உள்ள சாவி வச்சுத் திறந்து வருவார்” என, சரிடா என்றபடி அவரும் உள்ளே செல்ல, மாதங்கி தன் அறைக்குச் சென்றாள்.

பரமேஸ்வரன் இயந்திர தொழிற்சாலையில் மேனேஜராக பணி புரிந்துக் கொண்டிருக்கிறார். மகேஷ்வரி அவரின் மனைவி. இல்லத்தரசி.

அவர்களின் ஒரே மகள் மாதங்கி. இருபத்தி ஆறு வயது யுவதி. படிக்கும் போது பத்திரிகைத் துறையில் ஆர்வமிருக்க, ஜர்னலிசம் படித்து அதிலேயே மாஸ்டர் டிகிரியும் முடித்தாள். தற்போது பெண்கள் பத்திரிகையில் பணியாற்றி வருகிறாள்.

ஒரே பெண் என்பதால் அவள் விரும்பியதைப் படிக்க வைத்ததோடு, அவள் விரும்பிய வேலையும் பார்க்க அனுமதித்தனர்.

எப்போதும் துறு துறு கண்கள், இதழில் தவழும் புன்னகை, மாநிறம் என பார்ப்பதற்கு நம் வீட்டுப் பெண்ணைப் போன்ற தோற்றம். எளிதில் அடுத்தவருடன் பழகும் தன்மை உடையவள். அதுவே அவளுடைய வேலைக்கு உதவியாக இருந்தது.

மாதங்கியின் மிகப்பெரிய உதாரண புருஷன் என்றால் அது மகாகவி பாரதியார் தான். அவரின் கவிதைகள் , வாழக்கை வரலாறு என்று தேடிப் படித்தவள் அவரின் கொள்கைகளை முடிந்த அளவில் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள்.

அதனால் தான் பத்திரிகைத் துறையில் ஆரம்பத்தில் ஃபீல்ட் ரிப்போர்ட் எடுத்து எழுதிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஆனால் அதில் இவள் எழுதிய வரிகளை பத்திரிகைக்குப் பாதகமில்லாதபடி மாற்றி அமைத்தனர் எடிட்டர் குழு. அதில் இவளுக்கு சம்மதம் இல்லாததால் தன் வேலையை சாதனையாளர்களைப் பேட்டி எடுப்பதாக மாற்றிக் கொண்டாள். அதிலேயே வித்தியாசமான முறைகள் கையாண்டதில் அவளின் கட்டுரைக்கு பெரும் வரவேற்பு இருந்தது.  

சிறு வயதிலேயே நடனம் , பாட்டு என்று கற்றதோடு , அதைப் பற்றி விரிவாகப் பேசவும் செய்வாள் என்பதால் , அந்த பத்திரிகை நிர்வாகத்தினர் மாதங்கியை அதுப் போன்ற நிகழ்வுகளுக்குப் பயன் படுத்திக் கொண்டனர்.

இன்றைய  நிகழ்வுகளை மனதில் ஒட்டிப் பார்த்தவளுக்கு, சூர்யா, ரவி இருவரின் செயல்பாடுகளிலும் பெரும் வியப்புத் தோன்றியது.

அவர்கள் மீடியாவினால் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டாள். ஆயினும் மாதங்கியிடத்தினில் நடந்து கொண்டது அதிகப்படியே என்று தான் நினைத்தாள். அதே நேரத்தில் ரவி பாரதி என்ற பெயர் அவளுக்கு எங்கோ கேள்விப்பட்டதாகத் தோன்றியது.

இவர்கள் இப்படி இருப்பதற்கான மர்மம் என்ன என்று விரைவில் கண்டுபிடிக்கிறேன் என்று தனக்குள் முடிவு செய்துக் கொண்டாள் மாதங்கி.

-தொடரும் –