வெண்தாமரைப் பதி மெல்லியலே

தாமரை ஓட்டமில்லாத நீர் நிலைகளில் மட்டுமே வளரும். பெரும்பாலும், கோயில் குளங்களில் காணலாம். தாமரை மலர்கள், வழிபாடு மற்றும் பூசைகளுக்குரியவை, தாமரை பூ, விதை, கிழங்கு ஆகியவை அதிகமான மருத்துவப் பயன் கொண்டவை.

அத்தியாயம் – இரண்டு

அந்தப் பெண் பாரதியின் ரசிகை என்று கூறியதும்

“வாட் ? இதுவரை பாரதி தன்னை எங்குமே வெளிப்படுத்திக் கொண்டது இல்லையே? உங்களுக்கு எப்படி அவனைத் தெரியும்?” என்றான் சூர்யா.

“நீங்க எந்த பாரதிய சொல்றீங்க?”

“என் ப்ரதர் ரவிபாரதி ரசிகைன்னு தானே சொன்னீங்க?”

“ஓ. மிஸ்டர். பெண்களிடம் மரியாதை இல்லாமல் நடக்கும் உங்களைப் போன்றவர்களை காலில் போட்டு மிதி என்று பாடம் எடுத்த அந்த மகாகவியின் ரசிகை. “ என்றாள்.

“அது சரி. எங்களைப் போட்டு மிதிக்கும் முன் அந்த போனில் உள்ள போட்டோஸ் டெலீட் பண்ணிட்டு மிதிங்க” , என்றான் சூர்யா.

“உங்க பெயரில் ஆரம்பித்து, பார்க்கும் இடம் எல்லாம் அந்த மகாகவியின் பெயரை வைத்துக் கொண்டு, பெண்களிடம் இப்படித் தான் பிஹேவ் செய்வீங்களா மிஸ்டர் சூர்யா ?’

“இந்த இடத்தில் ஆண் , பெண் எல்லாம் பிரிச்சுப் பார்க்க மாட்டேன். எங்கள் அனுமதியில்லாமல் இங்கே எடுக்கப்பட்ட போட்டோஸ் வெளியில் போகக்கூடாது. அவ்வளவு தான் “

“இங்கே பாருங்க மிஸ்டர் சூர்யா. என்னோட வேலையை நான் செய்தேன். இதில் என்ன தப்பு இருக்கு?”

“அழைப்பு இல்லாமல் வந்துவிட்டு, என்ன தப்புன்னு கேக்கறீங்க ?” என்று சூர்யா கூறும்போதே தன் ஹேண்ட்பாக்கில் வைத்து இருந்த அழைப்பிதழைக் காட்டினாள். அதன் மேல் கவர் எடுத்து விட்டு , வெறும் அழைப்பிதழ் மட்டும் காண்பிக்க, அவளின் சாமர்த்தியத்தில் லேசாக சிரித்தவன்,

“புரோகிராமிற்கு தானே அழைப்பு. நீங்க ஒரு ரிப்போர்ட்டராக இங்கே அழைக்கப்படவில்லையே?” என்றான் சூர்யா.

சூர்யா கூறியதில் உண்மை இருந்தாலும், அதைக் கண்டுகொள்ளாமல் ,

“எப்படியோ அழைப்பின் பேரில் தானே வந்து இருக்கிறேன். ஆனால் நீங்க செய்வது அழைத்தவரை அவமானபடுத்தும் செயல்” என்றாள்.

“ஹோஸ்ட்டை சங்கடப்படுத்தாமல் இருப்பதும் கெஸ்ட்டின் பொறுப்பு தானே” என்று சூர்யா மடக்கவும் , தன் போனில் எடுத்தப் போட்டோக்களை அழித்து விட்டாள்.

அப்போதும் விடாமல் சூர்யா, அவளின் போனை வாங்கி செக் செய்த பிறகே அவளிடம் திருப்பிக் கொடுத்தான்.

“எதற்கு இத்தனை பில்ட்டப் ? “ என்று முறைத்தபடி கூற,

“காரணங்கள் உங்களுக்கு அவசியமில்லை மிஸ் ? என்று கேள்வியாக நிறுத்தினான் சூர்யா.

“என் பெயர் உங்களுக்கு எதற்கு ?” என்று அதற்கும் முறைத்தாள்.

அதில் லேசாகச் சிரித்த சூர்யா “ ரொம்ப சூடா இருக்கீங்க. சில்லுன்னு ஐஸ் கிரீம் சாப்பிடலாம் வாங்க” என்றான்.

“இது என்ன கழுத்தை அறுத்து விட்டு விருந்து படைப்பது போல இருக்கு “

“ஏன் இவ்வளவு பெரிய வார்த்தைகள்? எங்களோட சூழ்நிலை அந்த புகைப்படங்கள் வெளியில் போகக்கூடாது. அதற்காக உங்களிடம் கொஞ்சம் ஹார்ஷா நடந்துட்டோம். பிளீஸ் அதை மறந்துட்டு , எங்க கெஸ்ட்டா உங்களைக் கவனிக்க வேண்டியதும் என் பொறுப்பு தான் “

“இப்போ தானே சர் , அழைப்பிதழ் எனக்கு அனுப்பினது இல்லைன்னு சொன்னீங்க?”

“பிளீஸ் மிஸ் .. “ என்று மீண்டும் நிறுத்தியவன், “உங்க பேர் சொல்லுங்க பிளீஸ். “ என்றான்.

கொஞ்சம் மனம் சிணுங்கினாலும்  , அவளுக்குக் கொடுத்த அசைன்மெண்ட் நினைவில் வர தானும் இறங்கி வந்தாள்.

“என் பெயர் மாதங்கி. பெண்கள் பத்திரிகையில் பாரதி என்ற பெயரில்  ஜெர்னலிஸ்ட்டா இருக்கேன். “ என்றாள்.

“மாதங்கி. நல்ல பெயர். “ என்றவன் , “எங்கே போனாலும் பாரதி என்னை விடாது போலவே” என்றான்.

பின் “பிரெண்ட்ஸ் “ என்று கையை நீட்ட, மெலிதாக கை குலுக்கினாள்.

இதை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த ரவிபாரதியின் புருவங்கள் நெரிந்தது. பின் ஏதோ நினைத்தவனாக , தோள்களைக் குலுக்கி விட்டுச் சென்று விட்டான்.

சூர்யா நட்பு கரம் நீட்டிய பின்,

“மிஸ்டர் பாரதி “ என ,

“பிளீஸ். கால் மீ சூர்யா. எல்லா இடத்திலும் இந்த பெயர் சொன்னால் எனக்கு டென்ஷன் ஏறுது “ என்றான்.

“ஹலோ. பாரதியார் ரசிகை கிட்ட அவர் பேரால் டென்ஷன்னு சொல்றது எல்லாம் நல்லா இல்லை”

“அம்மா தாயே. நான் மகாகவி பாரதிய சொல்லலை. என் கூடப் பிறந்த படுபாவியப் பற்றி சொல்றேன். “

“ஏன் சூர்யா? “ என்று மாதங்கி வினவவும், அன்று தான் அறிமுகமான பெண்ணிடம் தன் இரட்டையைப் பற்றி குறை கூற விரும்பாமல்,

“ஒன்றுமில்லை மாதங்கி. உங்கள் மனசு சங்கடப்படும்படி நடந்துகிட்டதுக்கு ரொம்ப சாரி. மறுபடி சந்திப்போம்” என்றான்.

மாதங்கியும் அதற்கு மேல் நிற்காமல் “சூர் மிஸ்டர் சூர்யா. அடுத்த புரோகிராம்க்கு என் பெயர் போட்டு இன்விடேஷன் வருமா? “ என்று கேட்டாள்.

“கண்டிப்பா. என்னோட ஃப்ரெண்ட்டா உங்களுக்கு அழைப்பு வரும். நீங்களும் வரும்போது உங்கள் பாரதியை மறந்துட்டு மாதங்கியா மட்டுமே வரணும்” என,

“பா . காரியத்தில் கெட்டி தான். நான் ஃபங்சன் ஆரம்பிக்கும் போது உங்களை ஃப்ரெண்ட் பிடிச்சு சில போட்டோஸ் வாங்கிக்கலாம்ன்னு பிளான் பண்னினேன். நல்லவேளை கேட்கலை. கேட்டு இருந்தா அப்போவே என்னைக் கழுத்தைப் பிடிச்சு வெளிலே தள்ளிருப்பீங்க போல் இருக்கே  ” என்றாள்.

“யாரோட நல்ல நேரமோ? அப்போ மட்டும் கேட்டு இருந்தால் கண்டிப்பா நீங்க சொன்னது தான் நடந்து இருக்கும். எனிவே எகைன் சாரி மாதங்கி. “

மாதங்கி “இட்ஸ் ஓகே. பை” என்று கூறி விட்டுக் கிளம்பிட்டாள்.

மாதங்கி கிளம்பிச் சென்றதும் , சூர்யா சிறு புன்னகையோடு தன் இரட்டை ரவியின் அருகில் சென்றான்.

சூர்யாவைக் கண்டதும் ரவி ,

“என்னடா அந்த ரிப்போர்ட்டர் பொண்ணு போட்டோஸ் டெலீட் செஞ்சாளா?” என்று கேட்டான். இன்னுமே அவன் பேச்சில் சூடு இருக்கவும்,

“சில் ப்ரோ. எந்த பிரச்சினையும் இல்லை” என்றான் சூர்யா.

“ம். ஏதாவது போட்டோஸ் வெளிலே வந்தா, என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது சொல்லிட்டேன். “

“ஏண்டா இவ்ளோ டென்ஷன்? இந்த இம்சைக்குத் தான் இது எல்லாம் வேண்டாம். நம்ம பிசினஸ் மட்டும் பாருன்னு சொன்னாக் கேக்கறியா? அட்லீஸ்ட் கோரியோகிராபி மட்டும் பண்ணுன்னு சொல்றேன். அதுவும் கேக்கறது இல்லை”

“ என்னாச்சு? மிஸ்டர் ராமநாதன் உன்னையும் கடிக்க ஆரம்பிகச்சிட்டாரா ?”

“அவர் நம்ம அப்பா. நியாபகம் இருக்கா? “

“அது அவருக்கும் தெரியணும்ல ?”

“ஆயிரத்தெட்டு கண்டிஷன் போட்டு ஒவ்வொரு விஷயமும் செய்யற. இது எல்லாம் வேண்டாம்ன்னு தானே அவர் சொல்றாரு. நீயும் அதைக் கேட்டாதான் என்ன?”

“என்னாலே முடியாது. அவர் பிசினஸ் பார்க்க நீ இருக்கியே? என்னை என் போக்கில் விட்டுடு”

“உங்க ரெண்டு பேர் நடுவில் மாட்டிக்கிட்டு முழிக்கிறதே எனக்குப் பொழைப்பாப் போச்சு. போ . உன் சமூக சேவை எல்லாம் முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து சேரு”.

“சரி. அந்த ரிப்போர்ட்டர் எப்படி வந்தா? யார் இன்விடேஷன் கொடுத்து இருக்காங்க?’

“அது எல்லாம் தெரியலை. கவர் இல்லாமல் இருந்தது. ‘

“ஏன் ? ரொம்ப நேரம் பேசிட்டு இருந்த? இதைக் கேக்கலையா ?’

அவனின் கேள்வியில் சற்று யோசித்தவன், “இல்ல. நான் கேக்கலை. கெஸ்ட்டா வந்தவங்களை இதுக்கு மேல் பேசினால், நம்ம மேலே உள்ள ரெஸ்பெக்ட் போயிடும்” என்றான்.

“ம். ஆனால் எனக்கு அவ மேலே நம்பிக்கை இல்லை. எதுக்கும் வாட்ச் பண்ணிட்டு இரு”

“சரி. அனுராதா மேடம் வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. போகலாமா?”

“இருடா. இதோ எல்லோரையும் சென்ட்ஆஃப் பண்ணிட்டு வந்துடறேன்” என்று ரவி கிளம்ப, அவனையேப் பார்த்துக் கொண்டிருந்த சூர்யாவிற்குள் பல வித யோசனைகள். இவன் இப்படியே இருப்பது சரியா? என்றைக்கு மாறுவான் ? என்ற சிந்தனைகள் ஓடியது.

ராமநாதன் , அனுராதா தம்பதியருக்கு இரட்டைக் குழந்தைகள் ரவி பாரதி, சூர்யபாரதி. வயது இருபத்தி எட்டு. இருவரும் ஐடென்டிகல் இரட்டைகள் என்றும் கூறலாம். ஆனால் எளிதில் கண்டுபிடிக்கக் கூடிய வகையில் தான் இருப்பார்கள். அதற்கு அவர்களின் பழக்க வழக்கங்கள் காரணம். நடை, உடை, பாவனை இவற்றில் இருவரும் எதிர் துருவங்கள். வெளியிலும் தங்கள் ஒரிஜினலாட்டி அப்படியே மெயின்டய்ன் செய்வதால், அவர்கள் இருவரோடு பேச ஆரம்பித்தால் எதிரில் இருப்பவர் கண்டு கொள்ளுவார்கள்.

ரவி பெரும்பாலும் இலகுவான ஜீன்ஸ் பாண்ட் , குர்தா வகையில் ஆன உடைகளே அணிவான். வெளியில் முக்கியமான மீட்டிங், விழாக்களுக்கு மட்டுமே கோட் சூட்.

சூர்யாவோ எப்போதும் ஃபுல் பார்மல் சூட் தான். அது விழாவானாலும், தினப்படி அலுவலகம் செல்வதானாலும் சரி.

இவர்களின் தந்தை ராமநாதன் சென்னை டிநகரில் எலக்டிரிக்கல் அப்ளையன்ஸ் ஷோரூம் ஆரம்பித்து நடத்தி வந்தவர், தற்போது அதன் கிளைகள் மாநிலம் முழுதும் திறந்து நடத்தி வருகிறார்.  அவரின் வாரிசாக சூர்யா எலக்டிரானிக் லாக் , சிசி டிவி இன்ஸ்டாலேஷன் போன்ற எலக்டிரானிக்ஸ் சம்பந்தப்பட்ட ஏஜென்ஸி ஒன்றை நடத்தி வருகிறான். அத்தோடு தந்தையின் தொழிலுக்கும் உதவி வருகிறான்.

ஆனால் ரவி அவர்களிடமிருந்து வேறுபட்டு இந்த நாட்டியப் பள்ளி நடத்தி வருகிறான். அதில் அவன் தந்தைக்கு மிகுந்த மனவருத்தம். கலையில் அவர் ஆண் , பெண் பேதம் பார்க்கவில்லை. சிறு வயதில் அவன் ஆசைக்காகக் கற்றுக் கொள்கிறான் என்று நினைத்த விஷயத்தையே தன் தொழிலாக மாற்றிக் கொள்வான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

ஆரம்பத்தில் நாட்டியப் பள்ளி என்ற போது கூட சிறு மன வருத்தம் இருந்தாலும், ரவியின் போக்கில் விட்டவர், சில வருடங்களாக அவன் நடந்து கொள்ளும் முறையில் மிகவும் உடைந்தே விட்டார். அவனின் செயல்கள் வெளியுலகில் மற்றவர்களின் பார்வையில் எத்தனை தூரம் கேலி செய்யப்படுகிறது என்று அறிந்து கொண்டவர், அந்தப் பள்ளியை விட்டுவிட்டு தன் பிசினஸ் பார்க்க அழைத்து கொண்டே இருக்கிறார்.

திட்டி, சண்டை போட்டு, கெஞ்சி, இத்தனை வயதுக்குப் பிறகு கொஞ்சியும் கூட அவன் வரவில்லை என்பதில் அவருக்கு மிகவும் வருத்தம். அதிலும் தற்போது எல்லாம் தன் இன்னொரு மகனையும் அந்த நாட்டியப் பள்ளி சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு என்று இழுத்துக் கொள்ளவும், இன்னும் கோபம் ஏறியது. ஆனால் அவரின் கோபம் செல்லுபடியாகும் இடம் தான் அவரின் மகனிடத்தில் இல்லை.

இதற்கு எல்லாம் மூல காரணம் அவரின் அருமை மனைவி அனுராதா என்பது தான் இன்னும் சினத்தைத் தூண்டியது.

-தொடரும் –