வெண்தாமரைப் பதி மெல்லியலே

கர்ப்பிணிகளுக்குப் பசி எடுக்க வெண்தாமரைப்பூவை அரைத்து, எலுமிச்சம்பழ அளவு, பசும்பாலில் கரைத்து உள்ளுக்குச் சாப்பிட வேண்டும்.

அத்தியாயம் – நான்கு

மறு நாள்  காலையில் மாதங்கி தன் தாய், தந்தையோடு அரட்டை அடித்துவிட்டு பத்திரிகை அலுவலகம் கிளம்பிச் சென்றாள். அவள் உள்ளே வந்தவுடன் எடிட்டரை பார்க்கச் சொல்லி அலுவலக உதவியாளர் கூற, நேராக அவர் அறைக்குச் சென்றாள்.

எடிட்டர் “மிஸ். மாதங்கி, நேற்றைய ப்ரோகரம் போய்ட்டு வந்தீங்களா? அந்த போட்டோஸ் எல்லாம் காட்டுங்க. எதை கவர் பேஜ்க்கு கொடுக்கலாம்ன்னு பார்க்கறேன் “என்றார்.

“புரோகிராம் போயிட்டு வந்துட்டேன் சர். ஆனால் போட்டோஸ் எடுக்கலை.”   

 “மிஸ். மாதங்கி உங்களுக்கு இந்த அசைன்மெண்ட் கொடுக்கக் காரணமே அந்த பாரதி நாட்டியப் பள்ளி நிகழ்ச்சி கவர் அப் தி பெஸ்ட்டா நீங்க பண்ணுவீங்க என்ற நம்பிக்கையில்தான். நீங்க ரொம்ப ஈசியா ஒரு போட்டோ கூட எடுக்கலைன்னு கூலா சொல்றீங்க?”

“எடிட்டர் சர் , அவங்க அழைப்பிதழிலே தெளிவா போட்டோஸ், வீடியோஸ் ஸ்ட்ரிக்ட்லி நாட் அலோவ்ட்ன்னு போட்டுருக்காங்க”

“அது தெரிஞ்சு தான் உங்க கூட போட்டோகிராபர் அனுப்பலை. நீங்க உங்க ஃபோன் அல்லது வேறே ஏதாவது சோர்ஸ்லே எடுத்துட்டு வருவீங்க என்று நம்பினேன்”

“சர் , நான் ஃபீல்ட் ரிப்போர்ட்டரோ , இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட்டோ இல்லை. ஆர்டிகிள் ரைட்டிங் தான் என்னோட வேலையே. உங்களுக்கு இந்த விஷயம் தெரியும்னா, என்கிட்ட முன்னாடியே சொல்லி , தயாரா அனுப்பி இருக்கலாமே”

“இப்போ என்ன இந்த ஆர்டிகிள்  நீங்க பண்ண முடியாதுன்னு சொல்றீங்களா?’

“முடியாது என்பது இந்த மாதங்கியின் அகராதியில் கிடையாது. ஆனால் வழக்கமான பாணியில் இருக்காது. வேறு மாதிரி கொடுக்கிறேன். “ என்றாள்.

“எப்படிக் கொடுத்தலும் சரி. அந்த பாரதி நாட்டியப்பள்ளி பவுண்டர் வைரல் ஆகணும். அதை மைண்ட்லே பிக்ஸ் பண்ணிட்டு ஆர்டிகிள் முடிச்சுக் கொடுங்க.”

எடிட்டரின் பேச்சில், ஏதோ வன்மம் அல்லது யாருக்கோப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதைப் போல மாதங்கிக்குத் தோன்றியது. ஆனால் உறுதியாகத் தெரியவில்லை.

எடிட்டரிடம் எதுவும் சொல்லாமல்,

“சரி சர். இந்த ஆர்டிகிள் முடிச்சுட்டு உங்களுக்கு அனுப்பறேன்” என்றாள்.

“என்னிக்கு ப்ரூஃப் ரீடிங்க்கு கொடுக்கறீங்க? .” என எடிட்டர் வினவ ,

“முதலில் யோசித்த மாதிரி என்றால் இரண்டு நாட்களில் எழுதி விடுவேன். இனி யோசித்து எழுதணும். அதனால் கொஞ்சம் டைம் எடுக்கும். அடுத்த எடிஷனுக்குக் கொடுத்தடறேன்.” என்றாள் மாதங்கி.

“சரி. நீங்க போகலாம்” என, மாதங்கியும் கிளம்பினாள். அவர் அறையை விட்டு வெளியே செல்லும் முன் , எடிட்டர் போனில் யாருக்கோ அழைத்துப் பேசுவது காதில் விழுந்தது.

“ஹலோ சர். நீங்க சொன்ன வேலை அடுத்த எடிஷன்லே நிச்சயம் நடக்கும். டோன்ட் வொர்ரி” என்று கூறியதைக் கேட்டுக் கொண்டே வெளியே சென்றாள்.

இதைப் பற்றி சிந்திக்கும் போதே , அன்றைக்கு சூர்யா தன் போனில் உள்ள படங்களை டெலீட் செய்தது நினைவு வந்தது. அந்த போட்டோக்கள் டெலீட் செய்வதில் அவர்கள் செய்த ஆர்ப்பாட்டம் சரிதானோ என்றும் தோன்றியது.

தன் இடத்தில் அமர்ந்து , எங்கிருந்து ஆரம்பிப்பது என்று யோசித்தவளுக்கு, அந்த விழாவிற்கு வந்து இருந்த பிரபலங்கள் நினைவு வந்தது. அதில் சிலர் அவளுக்கு நல்ல நெருக்கமே. அவள் மீது நல்ல அபிப்ராயம் உள்ளவர்கள். அதையே லீட் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தவள், அவர்களில் சிலரரைச் சந்திக்க அவுட்பாஸ் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே சென்றாள்.

வெளியில் வந்தவள் நேராகச் சென்றது விழாவிற்கு தலைமை தாங்கிய நர்த்தகி நடராஜ் அவர்களின் இடத்திற்கு தான். அவரிடம் சென்றவள் நேரடியாக முதல் நாள் நிகழ்ச்சிப் பற்றி விவரங்கள் கேட்காமல், அவரின் தற்போதைய ப்ராஜக்ட் பற்றிய விவரங்கள் , அவரின் சொந்த  வாழ்வின் சில தகவல்கள் என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

பின் சற்று நேரம் கழித்து,  முதல் நாள் நிகழ்ச்சியில் நிறையப் பிரபலங்கள் கலந்துக் கொண்டதைப் பற்றி வினவினாள்.

“அவர்களின் பிள்ளைகள் எல்லாம் அந்த டான்ஸ் ஸ்கூலில் படித்தவர்கள் “

“சில திரைக் கலைஞர்கள் கூடப் பார்த்தேனே ?”

“ரவி டான்ஸ் வொர்க் பண்ணும் படத்தில் அவனோடு வேலை செய்தவர்கள் தான் மா”

“ஓ .அத்தனை பிரபலங்கள் கூடும் இடத்தில் மீடியாக்கள் வட்டமிடுவார்களே.  ஆனால் அங்கே ஒருவரையும் காணவில்லையே?”

“அங்கே வரும் பிரபலங்களின் வசதிக்காக மீடியாவை அனுமதிப்பதில்லை ரவி. தேவைப்பட்டால் அவன் எடுக்கும் வீடியோக்கள் மீடியாவிற்குக் கொடுத்து விடுவான்”

“இத்தனை உரிமையோடு பேசுகிறீர்கள் ?அவர் உங்கள் ஸ்டூடண்ட்டா ?”

“நான் மட்டுமல்ல. பல நடன வித்வான்களிடம் நடனம் பயின்றவன். அத்தனை பேரோடும் எப்போதும் தொடர்பிலும் இருப்பான் என்பதால் , நாங்கள் அவனைப் பேதம் பிரித்துப் பார்ப்பதில்லை”

“ஓ. ஆனால் அவர்கள் மற்றவர்களை மதிப்பதில்லைப் போல தெரிகிறதே”

“எப்படிச் சொல்கிறாய்?”

முதல் நாள் நடந்ததை அவள் கூறவும்,

“ஆமாம். அவர்கள் சில காரணங்களுக்காக போட்டோஸ் , வீடியோஸ் எதுவும் மற்றவரை எடுக்க விடுவதில்லை. ஏன்? சீஃப் கெஸ்ட் என்னைக் கூட அங்கே வைத்து எந்த போட்டோசும் எடுக்க வேண்டாம் என்று கூறி விடுவார்கள். விழா போட்டோஸ் எல்லாம் தனி பென் டிரைவ் போட்டுக் கேட்பவர்களுக்குக் கொடுத்து அனுப்புவார்கள். “ என்றார்.

“அதற்காக அப்படி நடந்துக் கொள்வதும் சரியில்லையே”

“அது என் மேல் தான் தவறுமா. உன்னிடம் பேசிவிட்டு வந்ததும் பாரதி யார் நீ என்று விசாரித்தான். நான் தான் உன்னைப் பற்றி சொன்னதோடு, நீ ஜர்னலிஸ்ட் என்றும் கூறினேன். அவர்கள் அறியாமல் நீ வந்திருப்பாய் என்று நான் நினைக்கவில்லை. மற்றவர்கள் போல நீயும் நடனம் பார்க்க வந்திருப்பாய் என்று நினைத்து விட்டேன். “

“அவர்கள் எதனால் மீடியா மேல் கோபமாக இருக்கிறார்கள் என்று தெரியுமா?”

“அது விவரமாகத் தெரியாது. ஆனால் நாட்டியப்பள்ளியோடு சேர்த்து ரவியையும் தனிப்பட விமர்சித்து முன்பொருமுறை பத்திரிகைகளில் செய்திகள் வந்தது. அதற்கு பின் தான் இந்த கெடுபிடிகள் “ 

இதற்கு மேல் அந்த ரவியின் சொந்த விஷயங்களைக் கேட்டால் அவர் உஷாராகி விடக் கூடும் என்று எண்ணியவள், பேச்சை முதல் நாள் நடனம் ஆடிய திருநங்கைகள் குறித்தும் , அவர்களின் முயற்சி குறித்தும் பேசி விவரங்கள் தெரிந்துக் கொண்டாள்.

“நேற்றைய நடன நிகழ்ச்சியில் திருநங்கைகள் தவிர வேறு யாரும் கலந்துக் கொள்ளவில்லையே? அந்த பாரதி ஸ்கூலில் அவர்களுக்கு மட்டும் தான் கற்றுக் கொடுக்கப் படுகிறதாமா ?”

“இல்லைமா. பாரதியின் ஸ்டூடண்ட்சில் இவர்களும் உண்டு. ஆனால் இந்த நிகழ்ச்சி இவர்களுக்கு மட்டுமாக ஏற்பாடு செய்யப்பட்டது. பத்தோடு, பதினொன்றாக அவர்களை அடையாளப்படுத்தாமல், தனியாக அடையாளப்படுத்தும் முயற்சி. அதனால் தான் தனி நிகழ்ச்சியாக நடந்தது.”

“ஆனால் அவர்களையும் மற்றவர்கள் போல நடத்த வேண்டும் என்று தான் நீங்கள் கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன்”

“நிச்சயமாக. ஆனால் சில நேரங்களில் அவர்களுக்கான தனி அடையாளங்களும் அவசியம் தான்மா. “

“நீங்களே சொல்கிறீர்கள் என்றால் ஒத்துக் கொள்ள வேண்டியது தான்.”

அதற்கு பின் அந்த திருநங்கைகள் எப்படி இதற்கு ஒத்துக் கொண்டார்கள் என்பது போன்ற சில கேள்விகள் கேட்டுப் பதில் பெற்றுக் கொண்டாள்.

மாதங்கியின் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதில் சொன்ன அவருக்கு நன்றிகளைக் கூறிவிட்டுக் கிளம்பினாள்.

அவள் கிளம்பிச் சென்றதும், ஏதோ யோசித்தவர், ஃபோன் செய்து பேச, எதிரில் இருந்தவர்

“இட்ஸ் ஓகே. நான் பார்த்துக்கறேன். நீங்க வேறே ஒண்ணும் சொல்லலை இல்லையா ?. “ என வினவ,

“இல்லைபா. ஆனால் நீங்கள் நேற்று நடந்துக் கொண்டதும் சரியில்லை. மாதங்கி நல்ல பெண். அத்தோடு தேவையில்லாமல் எதுவும் செய்ய மாட்டாள்” என்றார்.

“புரியுதுமா. ஆனால் என் நிலைமை உங்களுக்குத் தெரியும் தானே. அதில் சில நேரம் இந்த மாதிரி நடந்து கொண்டு விடுகிறேன்”

“கொஞ்சம் கோபத்தைக் குறைத்துக்கொள் பாரதி. “ என,

“நிச்சயம் முயற்சி செய்கிறேன் மா “ என்று விட்டுப் போனை வைத்தான். பின் சற்று நேரம் யோசித்தவன், மாதங்கி பற்றி தனக்கு வேண்டியவர்கள் சிலரிடம் விசாரிக்க, அனைவருமே நல்ல விதமாகவேக் கூறினார்கள்.

பின் தன் உதவியாளரை அழைத்து, பாரதி என்ற பெயரில் வந்த கட்டுரைகள் எல்லாம் எடுத்துத் தரக் கூறினான். அவன் எடுத்து பென் டிரைவ் போட்டு ரவியிடம் கொடுக்க, அதைத் தன் லேப்டாப்பில் போட்டுப் படித்துப் பார்த்தான்.

அதில் அவள் பேட்டி எடுத்து இருந்தவர்கள் வரிசையில், முதல் நாள் தங்கள் நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் லிஸ்ட் எடுத்தவன், அவர்கள் அனைவருக்கும் ஃபோன் செய்து நன்றி கூறி விட்டு, நிகழ்ச்சிப் பற்றி யாராவது விசாரித்தால், தன்னைப் பற்றி விட்டு விட்டு பள்ளியைப் பற்றியும், ஆடியவர்களைப் பற்றியும் மட்டும் சொல்லுமாறு கூறினான்.

பாரதி கூறினால் அதில் ஏதாவது நியாயமான காரணம் இருக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். எனவே அவர்களும் அவன் கூறியதற்கு அப்படியே ஒத்துக் கொண்டனர்.

மாதங்கி அந்த நாட்டியப்பள்ளியின் நிகழ்ச்சிக்குத் தலைமைத் தாங்கியவரிடம் பேசியதில் பெரிய விவரங்கள் கிடைக்கவில்லை என்றாலும், பேச்சின் இடையில் அவர் கூறிய விவரங்களைத் தொகுத்துப் பார்த்தாள். அதில் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் அந்தப் பள்ளி நிறுவனரோடு மிகவும் நட்புடன் இருப்பதாக உணர்ந்தாள்.

அந்த நண்பர்கள் மூலம் பெரிய தகவல்கள் கிடைக்காது என்றாலும், ஒருவருக்கொருவர் ஏதோ ஒரு மாறுபாடான விஷயங்கள் கூற வாய்ப்பு இருக்கிறது. அதனால் அவர்களைப் பிடிக்கலாம் என்று எண்ணி அங்கே வந்திருந்தப் பிரபலங்கள் யார் யார் என யோசித்தாள். அவர்களில் ஒரு நடிகையை இவளுக்கு நன்றாகத் தெரியும். அவரிடத்தில் பேசிப் பார்க்கலாம் என்று புறப்பட்டாள்.

மாதங்கி ரவிபாரதி பற்றிய விவரம் சேகரிக்க முயற்சிக்க, இங்கு பாரதியோ மாதங்கியின் முழு விவரம், அவளின் அடுத்த முயற்சி என்னவாக இருக்கும் என்பது வரை யூகித்து அதற்கு ஏற்ற ஏற்பாடும் செய்து விட்டான்.

-தொடரும் –