Uyiril Meiyaga Vaa

உயிரில் மெய்யாக வா 1

“சில்ட்ரண், இன்னைக்கு ஹோம் வர்க், பேஜ் நம்பர் 76 – 79, ரீட் பண்ணி, ஹார்ட் வேர்ட்ஸ் அண்டர்லைன் பண்ணி மீனிங் எழுதிட்டு வரணும். புரிஞ்சதா?” என்று அதிராமல், சற்றே மெல்லமான குரலில் அந்த எட்டாம் வகுப்பு மாணவ மாணவிகளிடம் வினவினாள் ராகவி.

“எஸ் மிஸ்” என்று கோரஸாக பதில் வரவும், “விக்டோரியா, கலெக்ட் த க்ளாஸ் வர்கஸ் மா” என்று முன் இருக்கையிலிருந்த மாணவியிடம் சொல்லிவிட்டு, கரும்பலகையை அழிக்கத் துவங்கினாள்.

மடிப்பு கலையாத காட்டன் புடவையின் முந்தானை லேசாக காற்றில் பறக்க, அதை இடது கையால் இழுத்துப் பிடித்துக் கொண்டே கரும்பலகையை துடைக்க, அவள் வகுப்பறையின் வாயிலில் நிழலாடியது. வகுப்பறைக்குள் நுழையாமல், வராண்டாவின் கைப்பிடியை ஒட்டி நின்றிருந்த உருவத்தைக் கடைக் கண்ணால் நோட்டம் விட்டாள். அவள் எதிர்பார்த்தது போல அந்த வகுப்பறையை மெல்லமாகக் கடந்து சென்ற அவன் விழிகள், வகுப்பினுள் நின்றிருந்த ராகவியின் முகத்தை தழுவிச் சென்றன.

இளம் கற்று முட்டு மெல்ல மெல்ல மொட்டவிழும் அரும்பு போல, அவன் விழி வீச்சு, அவள் மனதைத் தட்டித் திறந்து ஒரு சிறிய ஆசுவாசத்தை ஏற்படுத்தியிருந்தது. அவள் நிம்மதி உதட்டில் மெல்லிய புன்னகைக் கீற்றை தோற்றுவித்திருக்க, மொட்டவிழந்த அரும்போ, அந்த இளம் காற்றைக் கண்டு கொள்ளாதது போல நடித்தது.

வகுப்பறையினைக் கடந்து சில அடிகள் சென்றிருந்த அவன், ஜன்னலைக் கடக்கும் போது, லேசாகத் தலையைத் திருப்பி, ராகவியின் கண்களைச் சிரிப்புடன் சந்தித்து விட்டே அகன்றான்.

அணு அணுவாகத் தான் ரசிக்கும் அவனது முகத்தை, ஜன்னல் வழியே தரிசித்த ராகவி, அவன் சிரிக்கும் கண்களை கண்மூடி நெஞ்செல்லாம் நிரப்பிக் கொண்டாள். மாணவர்கள் அமர்ந்திருந்ததைக் கருத்தில் கொண்டு படபடத்த இதயத்தை சமன்படுத்தி உதடுகளை அழுத்த மூடி, எண்ணவோட்டத்தை வெளியே காட்டாது தன்னைக் கட்டுக்குள் வைத்தாள்.

“நாளைக்கு டுவல்த்க்கு மேத்ஸ் ஹாஃப் யேர்லி எக்ஸாம்! ஆஃப்டர்நூன் முழுக்க ரிவிஷன் இருக்கும். சாயந்தரமும் அவனுக்கு ஸ்பெஷல் க்ளாஸ் முடிய ஆறாகிடும். ம்ம்ம்ம்ம். இன்னைக்கு இதுக்கு மேல பார்க்க முடியாது” என்று ஏக்கப் பெருமூச்சு விட்டவள், தன் வகுப்பில் கவனம் செலுத்தினாள்.

வராண்டாவில் இவளது வகுப்பைக் கடந்து சென்ற அவனுமே தனக்குள்ளாக மெல்லமாகச் சிரித்து வண்ணம் தன் தலையைக் கோதிக் கொண்டான். இரண்டு நாட்கள் வளர்ந்திருந்த முள் தாடியை வருடியபடிக்கு நடந்தவனின் கவனம், ராகவியின் சிரித்த கண்களிலேயே சிக்குண்டிருந்தது. “குட் மார்னிங்க் சார்” என்று வழியில் எதிர்பட்ட மாணவர்களின் முகமன்களைத் தலையசைத்து ஏற்றுக் கொண்டபடிக்கு தன் வகுப்பறை நோக்கி விரைந்தான்.

அவன் விழிகள் நொடிப் பொழுதே ஆயினும், அவளது கண்களோட தன்னைக் கலந்துவிட்ட உவப்பில் மிதந்தன. அவள் பார்வை இது போல இவனைக் கொய்வது இன்று நேற்றல்ல. அந்த கருவிழிகள் கத்தி போல, அவன் நெஞ்சைக் குத்திக் கிழிப்பது ஒரு வருடமாகவே நடந்தேறும் ஒன்று. கண்டவுடன் காதல் என்றில்லாவிடினும், பார்த்த அடுத்த நொடியே அவள் மீது ஈர்ப்பு உருவாகியிருந்தது அவனுக்கு. நாளாக நாளாக ஈர்ப்பு காதல் விருட்சமாக விஷ்வரூமெடுத்து வளர்ந்திருந்தது. முதல் தடவை அவளைக் கண்ட நிமிடத்தை நினைத்துப் பார்த்தான் அவன்.

“எக்ஸ்கியூஸ் மீ சார். பிரின்சிபல் ரூம் எங்க இருக்கு?” என்று பள்ளி வராண்டாவில் இருந்து படிகளில் தாவி ஏறியவனைத் தடுத்து நிறுத்தியது அவள் மெல்லிய குரல். கண்களில் சின்னத் தயக்கத்துடன் வினவிய அவளது முகமும், கண்களும் மந்திரமிட்டது போல அவன் மனதில் அடுத்த நொடியே குடியேறியிருந்தன.

“நான் அங்க தான் போறேன். என் கூட வாங்க” என்று கூறியவன், அவள் நடைக்கு ஈடாகத் தன் வேகத்தைக் குறைத்துக் கொண்டான். சேலை கட்டி அவ்வளவாக அவள் பழக்கப்படாதவள் என்பதை, நொடிக்கொரு தரம் சேலையைத் தடவிக் கொண்டே நடந்த விதத்திலிருந்து யூகித்தான்.

இவனது படபடப்பையோ, மெச்சும் பார்வையோ, அவள் கண்களைக் காணத் தவிக்கும் அவன் எண்ணத்தையோ அவள் சட்டை செய்யவில்லை கையில் பிடித்திருந்த சான்றிதழ் கோப்பையை நெஞ்சுடன் இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, அவனுடன் நடந்தாள்.

“இந்த ரூம் தான். வெளிய வெயிட் பண்ணுங்க. கூப்பிடுவாங்க.” என்று அவன் கூற, அவள் தலையை மட்டும் அசைத்தாள். அவனிடம் நன்றி சொல்வாள் எனப் பெரிதும் எதிர்பாத்தவனுக்குச் சற்றே ஏமாற்றம் தான். அறையின் வாயிலில் போடப்பட்டிருந்த நாற்காலியில் அவள் அமர்ந்ததும் உள்ளிருந்து பியூன் வந்துவிட, அவள் பியூனின் பின்னால் தலைமை ஆசிரியையின் அறையினுள் மறைந்திருந்தாள்.

சில நொடி அவ்விடம் நின்றவன், “டே வேலையைப் பாருடா போ” என்று தலையைத் சிலுப்பிக் கொண்டு, தன் வகுப்பறைக்கு விரைந்தான். அவன் மனமோ, “இந்தப் பொண்ணு இண்டர்வியூல செலக்ட் ஆகி, இங்கையே வேலைக்கு வந்திடணும் ஏசுவே.” என்று ஒரு சிறிய பிராத்தனையைத் தவறாமல் சொல்லிக் கொண்டது.

மதியம் இவன் ஆசிரியர்களின் ஓய்வறையில் தன் இருக்கையில் அமர்ந்து தேர்வுத் தாள்களைத் திருத்திக் கொண்டிருக்க, அந்த அறையினுள் மெல்லியத் தென்றல் போல அவள் மீண்டுமாய் பிரவேசித்தாள். அவளுடன் நின்றிருந்த சமூகஅறிவியல் ஆசிரியை, “இந்த டெஸ்கில உட்காருங்க” என்று இவன் எதிர்சாரியில் இருந்த பென்சைக் காட்டினார்.

அறையில் இருந்த மற்ற ஆசிரியர்களிடம், “புதுசா ஜாயின் பண்ணியிருக்காங்க. 6த் 7த் இங்கிலீஷ் எடுக்கப் போறாங்க.” என்று பொதுப்படியாக அறிமுகம் செய்து வைத்துவிட்டு தன் பணியில் கவனமானார். அருகே அமர்ந்திருந்த ஆசிரியர்களின் சம்பிரதாய கேள்விகளுக்குப் பதிலளித்தபடிக்கு இருந்தவள், இவன் பக்கம் திரும்பக் கூட இல்லை.

இவனை அடையாளம் கண்டு சிரிக்கவேணும் செய்வாள் என்று இவனெதிர்பார்த்து அமர்ந்திருக்க, அவளோ பக்கத்து இருக்கையிலிருந்த ஆசிரியையுடன் பேசிக் கொண்டிருந்தாள். ஒரு கண்ணைத் தேர்வுத் தாளில் பதித்திருந்தாலும், அவள் அசைவுகளைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தான்.

“கிர்ர்ர்ர்ர்ர்ர்” என்று அதற்குள் அடுத்த வகுப்புக்கான மணி அடிக்க,  “அடுத்த ரெண்டு ஹவரும் க்ளாஸ் இருக்கு. அது முடிச்சு, 10த் ஈவினிங் க்ளாஸ் இருக்கு. இன்னைக்கு பேச முடியாதா இவகிட்ட? ம்ம்ம்ம்…” என்று பெருமூச்சுடன் எழுந்து அவன் சென்றுவிட்டான்.

10த்தாம் வகுப்பிற்கு ஸ்பெஷல் கோச்சிங் முடித்து இவன் திரும்ப ஆசிரியர்களின் அறைக்குள் வந்த போது, மணி ஆறாகியிருந்தது. வழக்கம் போல ஆசிரியர்கள் அறை காலியாக இருந்தது. சயின்ஸ் வாத்தியாரும் இவனும் மட்டுமே இருந்தனர். தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு இவன் கிளம்பி கீழே வந்து தலைமை ஆசிரியரின் அறையைக் கடக்கும் சமயம், தலைமை ஆசிரியரின் அறையிலிருந்து அவள் வெளிபட்டாள்.

“அவள் அவனுடன் பேசவில்லையே. அவள் பெயர் கூடத் தெரியவில்லையே. அன்று அவளை மீண்டும் சந்திக்க மாட்டோமா?” என்று அந்த மூன்று மணித்திலாயத்தில அவன் நிறைய தடவை மனதாற நினைத்திருந்தான். அவன் எண்ணம் கைகூடுவது போல, அவளைக் காணவும் அவன் உதடுகளுடன் சேர்ந்து மனதும் புன்னகை பூத்தது.

எதிரில் வந்த இவனைக் கண்டதும் சினேகமாக அவளும் சிரிக்க, “இன்னும் கிளம்பலையா நீங்க?” என்று வினவினான். பேசிக் கொண்டே கட்டிடத்தில் இருந்து வெளிப்பட்டு, வாயிலை நோக்கி நடந்தனர் இருவரும். அவள் வியர்வையுடன் கலந்து அவன் நாசியில் இறங்கிய மெல்லிய பூவின் நறுமணத்தை ஆழ சுவாசித்து நெஞ்செல்லாம் நிரப்பிக் கொண்டான்.

“இல்லைங்க. ஈவினிங் அப்பாயிண்மெண்ட் ஆடர் தர்றேன்னு சொன்னாங்க. அதுக்காக வெயிட் பண்ணேன் லேட்டாயிடுச்சு.”

“எப்படிப் போவீங்க. ஸ்கூல் பஸ் போயிருக்குமே. டவுன் பஸ் ஏற மெயின் ரோட்டுக்குப் போகணும்?” என்று அக்கறையுடன் அவன் கேட்க, “இல்லைங்க. கூட்டிட்டுப் போக அப்பா வந்திருக்கார்” என்று பைக்குகள் நிறுத்தியிருந்த பார்க்கிங்கின் அருகே கைகாட்டிக் கூறினாள் அவள். தன் பைக்கை எடுக்க அவனும் அங்கே தான் செல்ல வேண்டும்.

இருவரும் வேறெதுவும் பேசாமல் பார்கிங் நோக்கி நடக்க, தூரத்திலிருந்து இவளைக் கண்டதும் ஸ்விஃப்ட் காரிலிருந்து இறங்கி வெளியே வந்து நின்றார் வெள்ளை வேட்டி சட்டை அணிந்திருந்த மனிதர். கையில் பெரிய நவரத்தின மோதிரம் மின்ன, மடிப்பு கலையாத அவர் உடையும், காரின் மேல் கைவைத்து நின்ற  தோரனையே சற்று அதிகாரத்துவமாகத் தோன்றியது அவனுக்கு

காரின் அருகில் செல்லவும், “போலாமாடா?” என்று கைகடிகாரத்தை ஒரு பார்வையும், இவனை ஒரு பார்வையும் மதிப்பிடுவது போலப் பார்த்துவிட்டு வாஞ்சையுடன் மகளிடம் வினவினார் அவர். தந்தையைக் கண்டதும் அவனொருவன் இருப்பதை மறந்து அவர் அருகில் சென்று நின்று கொண்ட விதத்திலேயே அவனுக்கு அவள் சுபாவம் புரிந்து போயிற்று.

அந்த மனிதரும், கடமைக்காக இவன் பக்கம் தலையசைத்தவர்,” நீங்க இங்க டீச்சரா வேலை பார்க்கறீங்களா தம்பி?”

“ஆமாங்க”

“ஸ்கூல் டைமிங்லாம் எப்படி தம்பி, அதிகம் வேலை இருக்குமோ? தினமும் ஆறு மணி ஆகிடுமோ ஸ்கூல் முடிய?” என்று வினவினார்.

“இல்லைங்க சார். நான் 10த் எடுக்கறதால, ஈவினிங் க்ளாஸ் இருக்கும். அதனால இந்த நேரம் ஆகும். சின்ன க்ளாஸ் எடுக்கறவங்களுக்கு 4.30 முடிஞ்சிரும்” என்றான். அவன் குரலில் “10த்” எடுக்கிறேன் என்பதில் நிறைய பெருமிதம் பொங்கிவழிந்தது.

“அப்பா, இன்னைக்கு அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் வாங்கிட்டு போயிடுங்கன்னு சொன்னாங்க. அதான் லேட் ஆகிடுச்சு. எனக்கு 6த், 7த் தான் குடுத்திருக்காங்க. தினமும்லாம் லேட் ஆகாதுப்பா” என்று சற்றே கொஞ்சலுடன் அவள் தன் தந்தைக்கு விளக்கமளித்தாள்.

“ இந்த வேலையெல்லாம் எதுக்கு? நான் சொன்னா நீ கேட்கவா போற? ஒரே பிடிவாதம் பிடிக்கற! வீட்டில சந்தோஷமா இருக்கறதை விட்டுட்டு எதுக்கு இவளோ கஷ்டப்பட்டு வேலைக்கு போகணும்?” என்று சடைந்து கொண்ட பெரியவர், “சரி, நேரமாச்சு பாப்பா வண்டில ஏறு” என்று கூறிவிட்டு, இவனிடம் தலையசைத்து விடைபெற்றார்.

அவர் தோரனையும், பவிசும் கண்டவனுக்கு, “பொண்ணோட ஆசைக்காக வேலைக்கு அனுப்பறாரு. ஆனா வேலைக்குப் போகணும்னு அவசியமில்லாத குடும்பம் போல” என்ற எண்ணம் உருவாகியது.

அவள் காரிலேறி சென்ற பின்னர், தன் ஹோண்டா ஷைன் பைக்கை உயிர்பித்தவன், அவளைப் பற்றிய எண்ணங்களுடனேயே தன் வீட்டிற்கு விரைந்தான். அவள் பிம்பம் மனதில் எழும் போது, அவனுள் தோன்றிய இனம்புரியா மகிழ்ச்சியை எண்ணி வியந்து போனது அவன் உள்ளம்.

அன்றிலிருந்து இன்று வரையிலும், அவளைப் பற்றி நினைக்கும் நொடியெல்லாம், இதயத்தில் உவப்பு கூடுவதும், அவனையுமறியாமல் கண்களில் சிரிப்பு ஒட்டிக் கொள்வதும் இயல்பாக நடந்தேறும் விஷயம்.  தன் மனது இன்னதென்று புரிந்து போன பின்னால், தன் மனதை அவளுக்கு வெளிப்படுத்த நிறைய முயற்சிகள் மேற்கொண்டான் அவன்.

இதோ, இப்போது போன்று, அவள் வகுப்பறைக்குள் இருக்கும் சமயம், வேண்டுமென்றே கடப்பான். தினமும் ஒருமுறையாவது அவளைச் சிரிக்க வைத்துவிட முனைவான். அவள் எதார்த்தமாக பார்க்கும் சமயங்களில் விழி அகற்றாமல் அவள் கண்களைக் கொக்கி போட்டு நிறுத்திவிடுவான். அவன் முயற்சிகள் எல்லாம் ராகவிக்கும் தெரிந்தவை தான்.

“ஏ ராகவி! என்ன கணக்கு வாத்தி தன் கணக்கை உன் கிட்ட போடறான் போல இருக்கு! ஜாக்கிரதை ராகவி மிஸ்” என்று இவளுடன் வேலை பார்க்கும் மற்ற சில ஆசிரியைகள் சொல்லி கிண்டல் செய்வர்.

“ஏன் திவாகருக்கு என்ன குறைச்சல். எம்.எஸ்.ஸி, பி.எட் முடிச்சிருக்கான். சின்ன வயசுலையே 12த் வரைக்கும் க்ளாஸ் எடுக்கும் திறமையானவன். பார்க்கவும் கண்ணுக்கு லட்சணமா கம்பீரமா இருக்கான். அவனுக்கு என்னவாம் குறை?” என்று மற்றொரு ஆசிரியை தூபம் போட, ராகவி எதற்கும் பதிலளிக்காமல் கடந்து போய்விடுவாள்.

அவன் மீது தோன்றியிருந்த ஆர்வமும், ஈர்ப்பும் அவள் மனதிற்கு தெளிவாக விளங்கியது. அவன் பார்க்கும் வேளையில் மனம் பட்டாம்பூச்சியாக மாறி சிறகடிப்பதும், அவன் இல்லாத நேரத்தில் தீயிலிட்ட புழு போலத் துடிப்பதும், அவன் எங்கிருக்கிறான் என்று ஏங்கி அவனைத் தேடுவதும், அவனைப் பார்த்த பின்னர் கண்டு கொள்ளதவள் போல நடிப்பதும் அவளுக்கு வாடிக்கை தான். ஆனால், அவள் வீட்டினரின் குணம் பற்றி ராகவி நன்றாக அறிந்திருந்த காரணத்தினால் தன் மனதிற்குப் பெரிய பூட்டைப் போட்டு சாவியை தொலைத்து விட்டிருந்தாள்.

அவளது பள்ளி அல்லது கல்லூரித் தோழிகள் வீட்டிற்கு வரும் போதே, “அப்பா யாரு? என்ன பண்ணறாங்க? எந்த ஊரு? குலசாமி கோவில் எங்க இருக்கு?” என்று சாடை மாடையாக வினவி, வந்தவர்கள் என்ன ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்று அறிந்து கொண்டுவிடும் திறமை மிக்கவர் இவளது பாட்டி அன்னம். அதன் பின்னரே வந்திருக்கும் நபருக்கு தண்ணீர் கூடக் கிடைக்கும்.

“பாப்பாக்கு இது பிடிக்கும். அவ சொல்லிட்டா அப்பீலே கிடையாது” என்று “ராகவி பாப்பா, ராகவிகுட்டி” என்று மூச்சுக்கு முன்னூறு தரம் அவளைச் செல்லம் கொஞ்சும் தந்தை ரத்தினம். அவ்வப்போது சண்டையிட்டாலும் அக்காவிற்காக எல்லாமே விட்டுக் கொடுக்கும் தம்பி ரமேஷ், பிள்ளைகள் மட்டுமே உலகம் என்று வாழும் அன்னை புவனா என ராகவியின் வீட்டாரின் உலகத்தில் ராகவி மையப்புள்ளியானவள்.

“ஜாதிகள் இல்லையடி பாப்பா!” என்று பாடபுத்தகங்கள் கூவினாலும், “ஊரில் ஜாதிகள் மட்டுமே உள்ளதடி பெண்ணே” என்று பரைசாற்றும் படியான நடுத்தர டவுனான ஆலங்குடியில் சற்றே செல்வாக்கான குடும்பத்தில் பிறந்த ராகவிக்கு, தன் தோழமை விஷயத்திலேயே ஜாதி பார்ப்பவர்கள், காதல் என்று வந்து நின்றால் என்ன செய்வார்கள் என்று தெரியாதா என்ன?

அதிலும், வேறு ஜாதி மட்டுமல்ல, அவன் வேற்று மதத்தைச் சேர்ந்தவன் என்னும் போது என்னவெல்லாம் செய்யத் துணிவார்கள் என்று ராகவி அறியாததா?

திவாகர் ஆண்டனிராஜை அவள் கண்டு கொள்ளாமல் நாட்களைக் கடத்தியதற்குக் காரணம் இதெல்லாம் கனவிலும் நடக்கப் போவது இல்லை என்று தெரிந்திருந்தபடியால் தான். திவாகரின் பார்வைகள் பல அர்த்தங்கள் கற்பிக்கும் போதெல்லாம், தன் வீட்டினரை மனத்திரையில் கொணர்ந்து நிறுத்திவிடுவாள் ராகவி.

“இது என் மனசு சம்பந்தபட்ட விஷயம் மட்டுமில்ல. உன் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம்.” என்ற எச்சரிக்கை உணர்வு அவனைப் பார்க்கும் போதெல்லாம் மேலோங்கும் அவளுக்கு.

தனக்குப் பிடித்த மனம் தன்னிடம் வந்தடைந்தாள் அதன் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்னும் போது, அந்த ஜீவன் எங்கேணும் நல்லபடியாக இருந்தால் போதுமானது, தன்னிடம் தான் இருந்தாக வேண்டும் என்ற அவசியமில்லை என்ற முடிவில் ராகவி உறுதியாக இருந்தாள்.

“மனசுக்குள்ள என் மேல அவ்வளவு காதலை வச்சுகிட்டு, எதுக்காக இல்லை இல்லைன்னு நடிக்கற ராகவி? உன் மனசைப் உனக்கு வெளிக்காட்டாம இருக்க மாட்டேன். உன் காதலை உனக்கு உணர்த்தி உன்னை கல்யாணம் பண்ணிக்குவேன் ராகவி” என்பது திவாகரின் எண்ணம்.

*****

இவ்விருவரில் எவரின் எண்ணம் நிறைவேறும்? ஏது கனவாக மாறி காந்திப் போகும்?

தொடருவோம்.