US 9

உன்னில் சங்கமித்தேன் 9

இன்பா உரிமை எடுத்து கொண்டான் என்றால், அதற்காக அவளிடம் கண்ணியம் தவறி நடந்தான் என்றில்லை. ஆனால் அவன் காட்டிய நேசமும் பாசமுமே,  அதற்கு தான் தகுதியானவள் தானா? இதுபோன்ற நேசத்தை என்றாவது அவனிடம் காட்டும் சந்தர்ப்பம் வரும் வாய்ப்பு தன்னக்கு இருக்கிறதா?  தன் மனது மாறுமா? என்று நினைத்து மருகியவளுக்கு அவன் உரிமை எடுத்துக் கொள்வது சங்கடத்தை கொடுத்தது.

அவன் சொன்னது போல் பொறியியல் படிப்பிற்கு அவள் விண்ணப்பிக்க, கவுன்ஸ்லிங் முதல் அவள் கல்லூரியில் சேரப் போகும் ஒவ்வொன்றிற்கும் அவன் தான் அவளுக்கு துணையாக சென்றான். கல்லூரிக்கான கட்டணத்தை கட்டியது மட்டுமில்லாமல், போக வர போக்குவரத்திலிருந்து அவளின் வசதிகளை பார்த்து பார்த்து செய்தான்.

அவளை கல்லூரியில் சேர்த்தாகி விட்டது என்று அத்துடன் அவனது வேலை முடிந்தது என்றில்லாமல், ஒருநாள் அவளை தேடி வீட்டிற்கு வந்தவன், “நதி உடனே கிளம்பு, ஒரு இடத்துக்கு போகணும்,” என்றழைக்க,

“எங்க?” என்று அவள் பதில் கேள்வி எழுப்பினாள்.

“போனா தெரியத்தானே போகுது, சீக்கிரம் கிளம்பு,” என்று அவளை அவசரப்படுத்தினான்.

அதை கவனித்துக் கொண்டிருந்த சிந்தாமணியோ, “ஏன் டா, இங்க ஒருத்தி குத்துக்கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கேனே, என்கிட்ட சம்மதம் கேட்கணும்னு உனக்கு தோனுச்சா? என் பேத்தியை எங்கடா கூட்டிட்டு போற?” என்று அவனிடம் கேட்க,

“ஒரு சின்ன கரெக்‌ஷன் அத்தை, உன் பேத்தியில்ல, என்னோட பொண்டாட்டின்னு சொல்லு, என் பொண்டாட்டியை கூட்டிட்டு போக உன்கிட்ட எதுக்கு பர்மிஷன் கேட்கணும்,” என்று அவன் கேட்டான்.

“ம்ம் அதுக்கு நீ இன்னும் நாலு வருஷம் காத்திருக்கணும், இப்போ அவ என்னோட பேத்தி, அவளோட அம்மா வேலைக்கு போயிருக்கா, என்னை நம்பி தான் பிள்ளைங்களை வீட்டில் விட்டுட்டு போயிருக்கா, அதனால நீ என்கிட்ட அவளை எங்க கூட்டிட்டு போகறன்னு சொன்னா தான் நான் அவளை அனுப்பி வைப்பேன்.” என்று சிந்தாமணியும் விடாமல் பதில் பேச,

“அதெல்லாம் பரிசம் போட்டாலே, பாதி பொண்டாட்டி ஆனது போலத்தான், அதுக்காக நீ விபரீதமால்லாம் யோசிக்காத, அவளுக்கு சர்ஃப்ரைஸ் கொடுக்கணும்னு நினைக்கிறேன். என் செல்ல அத்தையில்லை, அவளை கூட அனுப்பு,” என்று அவன் செல்லம் கொஞ்சவும்,

“சரி சீக்கிரம் கூட்டிட்டு போயிட்டு வா, ரொம்ப நேரம் ஆனா அலமேலு அதுக்கும் ஏதாவது சொல்லுவா,” என்று சிந்தாமணி சம்மதம் தெரிவித்தார்.

இவர்களின் பேச்சுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்பது போல் நதி தயாராகி வந்தவள், “எங்க போகப் போறோம்,” என்று மீண்டும் அவனிடம் கேட்டாள்.

“அதை போனதும் தெரிஞ்சிக்க தானே போற,” என்று அவளை தனது வண்டியில் அழைத்துச் சென்றவன், நேராக கொண்டு போய் நிறுத்திய இடம், அலைபேசிகள் விற்கும் கடைக்கு,

“இங்க எதுக்கு வந்திருக்கோம்,” என்று அப்போதும் அவள் எதுவும் புரியாமல் கேட்க,

“இந்த மொபைல் ஷாப் சேல்க்கு வருதாம், அதான் வாங்க வந்திருக்கோம்,” என்று அவன் கேலியாக கூறவும்,

அதுவும் புரியாதவளாக, ‘அதுக்கு எதுக்கு என்னை கூட்டிட்டு வந்தான்?’ என்று மனதிற்குள்ளே கேட்டுக் கொண்டாள்.

அவளது முகமே அவளின் கேள்வியை வெளிப்படுத்த, அதை புரிந்தவனாக, ” மொபைல் ஷாப்க்கு எதுக்கு வருவாங்க, மொபைல் வாங்க தான்,” என்றான்.

அப்போதும் ‘இவனுக்கு மொபைல் வாங்க, நான் எதுக்கு?” என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொள்ள,

“அடுத்த வாரத்திலிருந்து காலேஜ் போற, உனக்கு ஒரு மொபைல் வாங்க வேண்டாமா? அதுக்கு தான் வந்திருக்கோம், போன வாரம் கண்மணியை கூட்டிட்டு போய் அப்பா மொபைல் வாங்கினாரே, அப்பவே உன்னையும் கூப்பிடணும்னு சொன்னாரு, நான்தான் காலேஜ் திறக்கற நேரம் வாங்கிக்கலாம்னு சொல்லிட்டேன்.

அதுக்கும் காரணம் இருக்கு, இப்படி நாம தனியா வர சான்ஸ் கிடைச்சுது, இன்னொன்னு என்னோட பணத்தில் உனக்கு வாங்கி தரணும்னு நினைச்சேன்.” என்றவன்,

“சரி சொல்லு, உனக்கு எந்தமாதிரி மாடல் வேணும், அப்பா கண்மணிக்கு வாங்கி கொடுத்த போன் பார்த்தீயா? அது லேட்டஸ்ட் மாடல் தான், இல்லை இதோ என்னோடதும் நல்ல கம்பெனி தான், இதிலும் லேட்டஸ்ட் மாடல் வந்திருக்கும், எது வேணும்?” என்று கேட்டான்.

“எனக்கு அதிக விலையில் எல்லாம் வேண்டாம், சிம்பிளா ஏதாவது பட்டன் போன் வாங்கி தாங்க போதும்,” என்று அவள் பதில் கூற,

“காலேஜ் போகப் போற, அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. ஸ்மார்ட் போன் வாங்கினா அது உன்னோட படிப்புக்கும் உபயோகமா இருக்கும், ரொம்ப விலையெல்லாம் இல்லை, இருபதாயிரத்திலிருந்து இருபத்தைந்தாயிரத்துக்குள்ள தான் பார்க்க போறோம்,” என்றவன்,

“அண்ணா லேட்டஸ் மாடல், எந்த போன் இப்போ ரொம்ப நல்லா சேல் ஆகுதுன்னு சொல்லுங்க,” என்று கடைக்காரரிடம் பேச ஆரம்பித்துவிட்டான்.

அவன் சொன்னது அவளுக்கு மிக அதிக விலையாக தெரிய, “ஸ்மார்ட் போனே ஆறாயிரம் ஏழாயிரத்துக்கெல்லாம் கிடைக்குதே, பத்தாயிரம்னா கூட பரவாயில்லை. இது ரொம்ப அதிகம்,” என்று அவனிடம் கூறினாள். ஆனால் இன்பா அதை காதில் வாங்கினால் தானே, இப்படி பேசுபவள் அவளுக்கு எது பிடித்திருக்கிறது என்று வெளிப்படையாக கூற மாட்டாள் என்பதால் அவனே ஒரு அலைபேசியை தேர்ந்தெடுத்து அதை அவளுக்கு வாங்கிக் கொடுத்தான்.

அதுமட்டுமில்லை இன்னொருநாள் கண்மணியையும் அவளையும் துணி கடைக்கு அழைத்துச் சென்றவன், கல்லூரிக்கு போடுவதற்கு ஏற்றது போல் உடைகள் வாங்க கூறினான்.  அதற்கும் நதி மறுப்பு தெரிவிக்க, இன்பா, கண்மணி இருவருமே அவள் மறுப்பை காதில் வாங்காமல் அவளுக்கு உடைகளாக வாங்கி குவித்தனர்.

அவள் பொறியியல் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஒருமுறை அவர்கள் கல்லூரியில் சுற்றுலா அழைத்து கொண்டு போவதாக சொல்ல, எதற்கு வீண் செலவு என சுற்றுலாவிற்கு செல்ல மறுத்து பேர் கொடுக்காமல் விட்டு விட்டாள். வீட்டிலும் அவள் அதைப்பற்றி பேச கூட இல்லை.

ஆனால் எப்போதும் போல் கண்மணியிடம் அதைப்பற்றி அவள் பகிர்ந்துக் கொள்ள, கண்மணியோ அதை இன்பாவிடம் சொல்லாமல் இருப்பாளா? பணத்திற்காக யோசித்து நதி சுற்றுலா செல்ல பேர் கொடுக்கவில்லை என்று சொல்லிவிட, உடனே இன்பா அவளை காண வீட்டிற்கு வந்தவன்,

“காலேஜ்ல டூர் கூட்டிட்டு போறாங்காளாமே, பணத்துக்காக யோசிச்சி நீ பேர் கொடுக்கலையா? என்கிட்ட கேட்க ஏன் தயக்கம்? நான்தான் எதுக்கா இருந்தாலும் உடனே என்கிட்ட கேளுன்னு சொல்லியிருக்கேனில்ல, ஆனாலும் ஏன் தான் இப்படி தயங்குறன்னு எனக்கு புரியல, 

இங்கப்பாரு நதி, காலேஜ்ல இப்படியான தருணமெல்லாம் ஸ்வீட் மெமரீஸ். பணத்துக்காக யோசிச்சு இதையெல்லாம் இழந்துடக் கூடாது. நாளைக்கே போய் பேர் கொடுத்து பணத்தை கட்டிடு,” என்று சொல்லி சட்டை பையிலிருந்து அவன் பணத்தை எடுத்து கொடுக்க, அவன் எவ்வளவு தான் கூறினாலும் அதை வாங்குவதற்கு அவளுக்கு தயக்கமாக தான் இருந்தது. 

ஆனால் சுற்றுலா சென்று நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நாட்களை கடத்திய போது, இந்த மகிழ்ச்சியை இழக்க இருந்தோமே, இன்பா சொன்னது போல் இதெல்லாம் ஸ்வீட் மெமரிஸ் தான், இதெல்லாம் இன்பாவினால் தான் நடந்ததென்று அவனுக்கு மனதில் நன்றி கூறிக் கொண்டாள்.

ஒருமுறை கண்மணி தன் கல்லூரி தோழிகளுக்கு ஹோட்டலுக்கு அழைத்து சென்று ட்ரீட் வைக்க வேண்டுமென்று அகத்தியனிடம் பணம் கேட்க, பிள்ளைகளுக்காக கணக்கு பார்க்காமல் அவர் செலவு செய்தாலும், சிலதை அனாவசிய செலவு என்று வேண்டாமென்று மறுப்பார்.

அதனால் கண்மணி பணம் கேட்டதற்கும், “பெண் பிள்ளைங்க தனியா ஹோட்டலுக்கு போய் சாப்பிட்றதெல்லாம் வேண்டாம், காலம் கெட்டு போய் கிடக்கு, வேணும்னா அவங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வா, சைவமோ அசைவமோ பெரிய விருந்தே வச்சு அனுப்பலாம்,” என்று அவளுக்கு அவர் பணம் தர மறுத்துவிட,

இன்பாவிடம் கேட்டால் கொடுப்பான் தான், ஆனால் அதுவும் அகத்தியனுக்கு தெரிந்தால், பணம் கொடுத்ததற்காக அவனையும் திட்டுவார் என்பதால், “அண்ணா, நதிக்கு ஏதோ புக்ஸ் வாங்கணுமாம், அவளுக்கு உன்கிட்ட கேட்க தயக்கமா இருக்குன்னு என்கிட்ட கேட்டா,” என்று பொய் கூறி, பணம் கேட்டு வாங்கி கொண்டாள்.

இதை அவள் நதியிடமே கூற, “ஹே என்ன மனசுல நினைச்சிட்டு இருக்க நீ, என் பேரை சொல்லி ஏன் பணம் வாங்கின, உன்னோட அப்பா தான் வேண்டாம்னு சொல்லிட்டாரே, அதையும் மீறி நீ ஃப்ரண்ட்ஸோட வெளியில் போக நினைச்சா அவரை ஒத்துக்க வைக்க முயற்சி செய்யணும், இல்லையா உன்னோட அண்ணாக்கிட்டேயாவது விஷயத்தை சொல்லணும், அதைவிட்டு பொய் சொன்னதும் இல்லாமல், இதில் என்னோட பேரை வேற கோர்த்து விட்டிருக்க,” என்று தோழியிடம் கோபப்பட்ட நதிக்கு, கண்மணியை விட இன்பா மீது தான் அதிக கோபம் வந்தது. 

‘அவள் என் பேரை சொல்லி பணம் கேட்டால், இவனும் உடனே கொடுத்து விடுவானா? என்னிடம் வந்து கேட்க மாட்டானா? கண்மணி இதையே காரணமாக வைத்து இப்படி பணம் கேட்டால் அது நல்லதில்லையே, அதில்லாமல் இதில் அடிக்கடி பணம் கேட்கிறேன் என்று என்னைப் பற்றி அவன் இறக்கமாக நினைக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் அமைதியாக இருக்கக் கூடாது.’ என்று அவள் மனதில் நினைக்க,

கண்மணிக்கும் அவள் என்ன யோசிக்கிறாள் என்று புரிந்ததோ என்னவோ? “அப்பா பணம் கொடுப்பார்னு ஃபரண்ட்ஸ்க்கிட்ட ட்ரீட் கொடுக்கறதா சொல்லிட்டேன். ட்ரீட் கொடுக்கலன்னா அவங்க என்னை தப்பா நினைப்பாங்க, அதான் அண்ணன்க்கிட்ட உன் பேரை சொல்லி பணம் கேட்டேன். இதுதான் முதலும் கடைசியும் நான் இப்படி பணம் கேட்பது, ட்ரீட் கொடுத்து முடிச்சதும் அண்ணாக்கிட்ட சொல்லிடுவேன் நதி, ப்ளீஸ் கோபிச்சுக்காத,” என்று சமாதானம் கூறினாள்.

“நம்ம வீட்டில் இருப்பவங்க நம்ம நல்லதுக்காக தான் சொல்வாங்க, அவங்க பழைமையில் ஊறி போனவங்க, சில விஷயங்களில் அதை மீறக் கூடாதுன்னு நினைப்பாங்க, உனக்கு உங்க அப்பாவை தெரிஞ்சும் ஃப்ரண்ட்ஸ்க்கிட்ட சொல்லியிருக்க கூடாது. சீக்கிரம் உன் அண்ணன்க்கிட்ட விஷயத்தை சொல்லிடு, அதேபோல இன்னொருமுறை இந்த தப்பை செய்யாத,” என்று நதி அறிவுரை கூறினாள்.

ஆனாலும் தான் பணம் கேட்டதாக இன்பாவிடம் கண்மணி சொல்லியிருப்பதால், அதைப்பற்றி அவனிடம் தெளிவு படுத்த வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்த நேரம், அவள் வீட்டிற்கு மளிகை சாமான்கள் வாங்கிக் கொண்டு அவன் வந்திருந்தான்.

அதெல்லாம் வீட்டினுள் கொண்டு வந்து வைத்துவிட்டு அவனுக்கு அதிக வேலை இருப்பதால் உடனே கிளம்ப நினைக்க, “உங்கக்கிட்ட ஒரு விஷயம் பேசணும்,” என்று நதி அவனை தடுத்து நிறுத்தினாள்.

அவளாக வந்து அவனிடம் அவள் பேசியதே இல்லை. இப்போது அவள் நிறுத்தி அவனிடம் பேசவும் இன்பா வியப்பானவன், “என்ன சொல்லு நதி,” என்றான்.

“நான் கேட்டதா கண்மணி உங்கக்கிட்ட பணம் கேட்டால்ல, அது நான் கேட்கல, அவளே தான் அவளுக்கு தேவைன்னு கேட்ருக்கா, என் பேரை சொல்லி அவ கேட்டா உடனே கொடுத்திடுவீங்களா? ஏன் எதுக்காகன்னு என்கிட்ட ஒருமுறை கன்ஃபார்ம் செய்துக்க மாட்டீங்களா?” என்று அவனிடம் அவள் கேட்க,

“எனக்கு நீ அந்த பணத்தை கேட்கலன்னு முன்னமே தெரியும், என்னைக்காவது நீயா இதுக்கு பணம் வேணும் அதுக்கு பணம் வேணும்னு என்கிட்டேயோ இல்லை எங்க வீட்டில் இருக்கவங்கக்கிட்டேயோ பணம் கேட்ருக்கீயா? ஏன் உங்க வீட்டில் கூட நீ கேட்டதில்ல, நானா தான் ஏதாவது உனக்கு பண தேவை இருக்கான்னு கேட்டு தருவேன். அப்படியிருக்க நீ கண்மணிக்கிட்ட சொல்லி என்கிட்ட பணம் கேட்பீயா என்ன? 

நீ அதுமாதிரி உரிமையா என்கிட்ட எது வேணும்னாலும் கேட்கணும்னு என் மனசு எதிர்பார்க்குது. ஆனா நீ கேட்க மாட்டேன்னு தெரியும், அதேசமயம் அப்பாக்கிட்ட கண்மணி பணம் கேட்டதும் எனக்கு முன்னமே தெரியும், அவ ஒன்னும் தப்பான காரியம் எதுவும் செய்யலையே, ஃப்ரண்ட்ஸோட ஹோட்டல் போய் சாப்பிடணும்னு தானே நினைச்சா, அதான் கொடுத்தேன்.” என்று பதில் கூறினான்.

தன்னை இத்தனைதூரம் தெரிந்து வைத்திருக்கிறான் என்று கேட்டு அவளுக்கு வியப்பாக இருந்தது. ஆனாலும் அதை காட்டிக் கொள்ளாமல், “நீங்க தெரிஞ்சு தான் கொடுத்தீங்க சரி. ஆனா அது கண்மணிக்கு தெரியாதே, கண்மணி நல்ல பொண்ணு தான், ஆனா நாளைக்கே ஏதாவது தப்பான விஷயத்துக்கு இதுபோல திரும்ப செய்யணும்னு அவளுக்கு தோனிடக் கூடாது. அவ உண்மையா எதுக்கு பணம் வாங்கினான்னு உங்கக்கிட்ட சொல்றதா சொல்லியிருக்கா, ஆனாலும் நீங்களும் கொஞ்சம் கண்டிச்சு பேசுங்க,” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்க, உரிமையோடு தன்னிடம் பேசும் அவளின் பேச்சை அவனோ  ரசனையுடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

இப்படியே மூன்று வருடங்கள் கடந்து நதிவதனா பொறியியல் படிப்பின் இறுதி வருடத்தில் இருந்தாள். என்னத்தான் திருமணம் ஆகப் போகிறது என்றாலும் எப்படியாவது கேம்பஸ் தேர்வில் கண்டிப்பாக அவளுக்கு வேலை கிடைக்க வேண்டுமென்று அதற்கும் தயாராகி கொண்டிருந்தாள்.

அந்தநேரத்தில் தான் அகத்தியனுக்கு உடல்நிலை மோசமாகி சிகிச்சைகள் கொடுத்தும் பலனின்றி உயிரிழந்தார். “மகனோட கல்யாணத்தை பார்க்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டாரு, இப்போ அது நிராசையா போயிடுச்சு, அதனால 3 மாசத்துக்குள்ள அவங்க கல்யாணத்தை நடத்துங்க,” என்று சில பெரியவர்கள் கூறிக் கொண்டிருந்தனர்.

அதைக்கேட்ட சரஸ்வதியும் அதையே பிடித்துக் கொண்டவர், 3 மாதத்திற்குள் அவர்களின் திருமணத்தை நடத்த வேண்டுமென்று கூறிக் கொண்டிருந்தார்.

“நதி படிப்பு முடிய இன்னும் இந்த ஒரு வருஷம் தானே ம்மா இருக்கு, அப்பாவும் அதைதானே சொன்னாரு, அதனால கொஞ்சம் பொறுமையா இருங்க,” என்று இன்பாவும் அவரிடம் பேசி பார்க்க,

“கடைசி வருஷம் தானே இன்பா, அவர் அப்போதிலிருந்தே நீ சொன்னன்னு தான் கல்யாணத்தை தள்ளிப் போட்டாரு, ஆனா கடைசி வரைக்கும் பிள்ளைங்களுக்கு நடக்கும் நல்லதை பார்க்காம போயிடுவேனோன்னு அவர் பயந்தது போலவே நடந்திடுச்சு, இப்போயாவது அவர் ஆசையை நிறைவேத்தணும் இன்பா, அப்பாக்காக டா, எனக்காக டா,” என்று சரஸ்வதி நெகிழ்வாக பேசவும் அவனால் அதற்கு மேல் அதுகுறித்து அவரிடம் மறுத்து பேச முடியவில்லை.

நேராக நதியை சந்தித்தவன்,  “அப்பாவோட ஆன்மா சாந்தியடையணும்னு உடனே கல்யாணம்னு சொல்றாங்க, அம்மா சென்டிமென்ட்டா பேசும்போது எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல,

அடுத்த வருஷம் நடக்கப் போற கல்யாணம் இப்போ நடக்க போகுது அவ்வளவு தான், மத்தப்படி உன்னை எந்தவிதத்திலும் டிஸ்டர்ப் செய்ய மாட்டேன். நீ நல்லப்படியா எக்ஸாம் எழுதி முடிக்கற வரை நமக்கு கல்யாணம் ஆகியும் ஆகாத மாதிரி தான், நான் சொல்ல வருவது புரியுதுல்ல, இதில் உன்னோட சம்மதம் எனக்கு ரொம்ப முக்கியம் நதி,” என்று விஷயத்தை கூறி, அவளின் சம்மத்தை வேண்டி நின்றான்.

படிப்பு முடிவதற்குள் திருமணமா என்று அவளுக்கும் உள்ளுக்குள் கொஞ்சம் கலக்கமாக இருந்தாலும், அவனுடைய சூழ்நிலையையும் பார்க்க வேண்டி தான் இருந்தது. அதில்லாமல் அகத்தியனின் ஆசையும் எதிர்பார்ப்பும் அவளுக்கும் தெரிந்தது தானே, அவர் மீது அவளுக்கு எப்போதும் மரியாதை உண்டு. 

அதனால் எப்போதும் போல் எப்படியோ இவனுடன் தான் என் வாழ்க்கை என்று முடிவாகிவிட்டது. அப்படியிருக்க எப்போது திருமணம் நடந்தால் என்ன? என்று யோசித்து அவள் ஒத்துக் கொண்டாள்.

ஆனால் மனதார விரும்பி இந்த திருமணத்தை அவள் ஏற்கவில்லை தானே, அதுமட்டுமில்லாமல் மனதிற்குள்ளேயே போட்டு மருகி கொண்டிருக்கும் விஷயங்கள் என்றாவது ஒருநாள் வெளிவர தானே வேண்டும், அப்படி தான் நதிவதனாவிற்கும் நடந்தது.

ஒருபக்கம் திருமணத்திற்கான தேதி குறித்து பத்திரிக்கை அடித்து உறவினர்களுக்கு கொடுக்க ஆரம்பித்திருந்தனர். இன்னொருபக்கம் நதி தீவிரமாக கேம்பஸ் தேர்விற்கு படித்து கொண்டிருக்க, கல்லூரியில் அவளுக்கு திருமணம் நிச்சயமானது அவளுடன் ஒரே வகுப்பில் படிக்கும் சிலருக்கு தெரியும், இதில் இப்போது கல்யாண தேதி முடிவானதும் அவர்களுக்கு தெரிந்தது.

அவள் தீவிரமாக படித்து கொண்டிருப்பதை பார்த்த உடன் படிக்கும் ஒருத்தியோ, “அதான் கல்யாணம் ஆகப் போகுதே, இப்போ எதுக்கு காம்பஸ் இண்டர்வியூக்கு இவ்வளவு சீரியஸா ப்ரிப்பேர் ஆகிட்டு இருக்க நதி,” என்று கேட்க,

“ஏன் கல்யாணம் ஆனா வேலைக்கு போகக் கூடாதா என்ன?” என்று நதி பதில் கேள்வி கேட்டாள்.

“ஆமா, இப்படித்தான் வீரமா உன்னை போல பேசுவாங்க, அப்புறம் என்னோட புகுந்த வீட்டில் நான் வேலைக்கு போறது பிடிக்கல, என்னோட ஹஸ்பண்ட்க்கு பிடிக்கல, கன்சீவ் ஆயிட்டேன். குழந்தைங்களை பார்த்துக்கணும், அதனால இந்த வேலையை தொடர முடியாதுன்னு எத்தனை காரணங்கள் சொல்லி வேலையை விட்றவங்க இருக்காங்க, 

அவங்களாவது கல்யாணத்துக்கு முன்ன ஒன்னு ரெண்டு வருஷமாவது வேலைக்கு போவாங்க, உன் விஷயம் அப்படி கூட இல்லை. உடனே கல்யாணம்.  அப்புறம் எதுக்கு சீரியஸா ப்ரிப்பேர் செய்துக்கிட்டு, உனக்கு பதிலா இந்த வேலை தேவையா இருக்கவங்களுக்கு கிடைச்சா எத்தனை உபயோகமா இருக்கும்,” என்று அந்த பெண் கூற, நதி மனதார காயப்பட்டு போனாள்.

“ஹே நீ சொல்றதை பார்த்தா, கல்யாணத்துக்கு பிறகு எந்த பொண்ணுங்களும் வேலைக்கு போகாத மாதிரி சொல்ற, நாம மனசு வச்சா எதுவும் நடக்காதுன்னு இல்ல, அவளுக்கு பிளேஸ்மென்ட் கிடைச்சா அதனால உனக்கு என்ன ஆச்சாம்,” என்று நதிக்கு சார்பாக இன்னொரு பெண் பேசினாலும், நதிக்கு முதலில் பேசிய பெண்ணின் பேச்சு மனதிற்கு நெருடலாகவே இருந்தது.

அதை இன்னும் அதிகப்படுத்துவது போல், இரண்டுநாள் கழித்து தன்னுடன் பள்ளியில் படித்த ஒரு தோழியை நதி சந்தித்தாள். கையில்  ஒரு குழந்தை இருக்க, அவள் அடுத்து வேறு கர்ப்பமாக இருந்தாள். அந்த தோழிக்கும் திருமணத்திற்கு பிறகு படிக்கட்டும் என்று சொல்லி, பள்ளி படிப்பு முடிக்கும்போதே திருமணம் முடித்து வைத்தார்கள். இப்போதோ குழந்தையோடு இருப்பதை பார்த்து அவள் படிப்பு என்னானது? என்று எப்படி கேட்பது என்று நதி தடுமாற,

பேச்சுவாக்கில் அந்த பெண்ணே, “கல்யாணத்துக்கு பிறகு படிக்க வைக்கிறோம்னு சொல்லி தான் பொண்ணு கேட்டாங்க, ஆனா சொன்ன மாதிரி எங்க மாமியார் வீட்டில் நடந்துக்கல, வீட்டில் எந்த வேலையும் செய்யாம எப்போதும் காலேஜுக்கு போகணும் படிக்கணும்னு சாக்கு சொல்லிட்டிருக்கன்னு பிரச்சனை ஆரம்பிச்சு, அடுத்த மாசத்திலிருந்து நான் எப்போ கன்சீவ் ஆவேன் என்கிற வரை நிறைய பிரச்சனை.

என்னோட ஹஸ்பண்ட்டோ அம்மாவை மீறி ஏதும் செய்ய மாட்டார். அவங்க தொல்லையிலிருந்து விடுபடணும்னு உடனே குழந்தை பெத்துக்கிட்டேன். அதனால என்னோட படிப்பு தான் பாதிச்சுது, இன்னும் அந்த ஒரு டிகிரியை முடிக்க நான் படும் பாடு இருக்கே, என்னை கேட்டா படிக்கணும், நமக்கு பிடிச்ச வேலைக்கு போகணும், அம்மா, அப்பாவை நல்லா பார்த்துக்கணும்னு நினைக்கிறவங்க சீக்கிரம் கல்யாணம் செய்துக்க கூடாது. 

கல்யாணம் செய்றதுக்கு முன்ன உன்னை பெத்த பொண்ணு மாதிரி பார்த்துக்கிறோம்னு தான் சொல்வாங்க, ஆனா அதெல்லாம் வெறும் பேச்சுக்கு தான்னு அப்புறம் தான் தெரியும், நம்ம அப்பா, அம்மாவை பொறுத்த வரை ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் முடிக்கறது தான் பெரிய கடமையா நினைப்பாங்க, இப்படி நினைக்கிற பெத்தவங்க இருக்க வரை பொண்ணுங்க நம்ம பாடு திண்டாட்டம் தான்,” என்று தன் நிலையை நினைத்து புலம்பிய தோழியின் பேச்சில் நதிவதனா கலவரமானாள்.

சங்கமிக்கும்..