US 8

உன்னில் சங்கமித்தேன் 8

நிச்சயம் நடக்கவிருக்கும் நாளும் வந்தது. எளிமையாக பெண் வீட்டிலேயே பரிசம் போட்டுக் கொள்ளலாம் என்று தீர்மானித்து, முக்கிய சில சொந்தங்களையும் அக்கம்பக்கத்தினரையும் மாப்பிள்ளை வீட்டு சார்பாக அழைத்து வந்திருந்தனர். 

அலமேலு, சிந்தாமணி, சுதர்மன் மூவரும் விசேஷத்திற்கு வந்திருப்பவர்களை வரவேற்று உபசரிப்பதில் மும்முரமாக இருக்க, நதியோ அறையில் புடவையும் வாடகைக்கு வாங்கியிருந்த சில கவரிங் நகைகளையும் அணிந்து வாடிய முகத்துடன் பொம்மை போல் அமர்ந்திருந்தாள்.

கண்மணி அவளை தேடி வந்தவள், “நதி ரொம்ப அழகா இருக்க டீ, என்னதான் வீட்டில் அடிக்கடி உங்க கல்யாணத்தை பத்தி பேசினாலும் அப்போ ஒன்னும் தெரியல, ஆனா இப்போ நீதான் என்னோட அண்ணியா வரப்போறன்னு தெரிஞ்சு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?” என்று மகிழ்ச்சியுடன் கூற, நதி அதற்கு கட்டாயமாக ஒரு புன்னகையை உதித்தாள்.

“சரி பொண்ணை கூட்டிட்டு வரச் சொல்லுவாங்கல்ல, அப்போ வரேன்.” என்று சொல்லிவிட்டு கண்மணி வெளியே ஓடிவிட்டாள்.

வீடு என்பதால் வெளியில் நடக்கும் பேச்சு சத்தங்கள் நதிக்கு கேட்டுக் கொண்டுதானிருந்தது. பரிசம் மாற்றிக் கொள்ளும்போது, திருமணம் நடக்கும் தேதியை அறிவித்து அதற்கான சுப முகூர்த்த பத்திரிக்கையை எழுதி அதை சபையில் வாசிக்க வேண்டும், அதற்காக புரோகிதர் வரவழைக்கப்பட்டு இருக்க,

“என்ன கல்யாணம் தேதியை முடிவு செய்துட்டீங்களா?” என்று முகூர்த்த பத்திரிக்கை எழுத அவர் தயாராக,

“இல்லை புரோகிதரே, இப்போ வெறும் பரிசம் தான் போடப் போறோம், கல்யாணம் 4 வருஷத்துக்குப் பிறகு தான்,” என்று இன்பா கூற, அனைவரும் அதைக் கேட்டு அதிர்ந்தனர்.

“என்ன இன்பா, வீட்டில் கெஞ்சாத குறையா பேசி உன்னை சம்மதிக்க வச்சா, இங்க திரும்ப வந்து பிரச்சனை செய்ற, அப்பாவை பத்தி உனக்கு கவலையில்லையா?” என்று சரஸ்வதி கேட்க,

“இதைப்பத்தி நேத்தே அப்பாக்கிட்ட பேசிட்டேன் ம்மா, அப்பாக்கு நல்லப்படியா ட்ரீட்மென்ட் கொடுத்தா அவருக்கு எந்த பிரச்சனையுமில்ல ம்மா, அதுக்காக நதியோட படிப்புக்கு பாதிப்பு வர வேண்டாம், நதிக்கு இஞ்சினியரிங் படிக்கணும்னு ஆசை. அவ ஆசைப்பட்டது போல படிக்கட்டும்,  அவ இஞ்சினியரிங் படிக்க ஆகும் செலவு நம்மளோடது தான், என் மனைவி ஒரு இஞ்சினியர்னா அது எனக்கும் பெருமையான விஷயம் இல்லையா?” என்று இன்பா சொல்லிக் கொண்டிருக்க, 

அதைக் கேட்டு நதிக்கு வியப்பாக இருந்தாலும், ‘இஞ்சினியரிங் படிச்ச மனைவி வேணும்னா எத்தனை பேர் படிச்சு முடிச்சு இருப்பாங்க, அப்படி ஒரு பெண்ணை கல்யாணம் செஞ்சுக்க வேண்டியது தானே, இனி படிக்க போற பொண்ணு தான் வேணுமா?’ என்ற கேள்வியும் அவளுக்கு தோன்றாமல் இல்லை.

“என்னங்க இவன் என்னன்னமோ சொல்றான். நீங்க அமைதியா இருக்கீங்க, இவன் சொன்னது போல  உங்களுக்கு முன்னமே விஷயம் தெரியுமா?” என்று சரஸ்வதி அகத்தியனிடம் கேட்க,

“ஆமாம் சரஸ்வதி, இன்பா இது விஷயமா நேத்தே பேசிட்டான். நதிக்கு இஞ்சினியரிங் படிக்கணுமாம், அந்த படிப்பெல்லாம் கல்யாணம் முடிச்சிட்டு படிக்கறது கஷ்டம். எனக்குமே படிக்கிற பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வைக்க பார்க்கிறோமேன்னு யோசனையா தான் இருந்துச்சு, பரிசம் போடப் போறதா சொல்லிட்டு அதை நிறுத்த வேண்டாமேன்னு தான் நான் முன்னமே எதுவும் பேசிக்கல, 

எனக்கு உடம்புக்கு சுகமில்லைன்னு இப்பவே இவங்க தலையில் பாரத்தை ஏத்த வேண்டாம், நதி அதோட நாலு வருஷ படிப்பை முடிக்கட்டும், அதுக்குள்ள இன்பாவும் இந்த தொழிலோட நேக்கு தெரிஞ்சு வச்சிப்பான். அதுவரைக்கும் எனக்கு ஒன்னும் ஆகாது. அப்படியே எது நடந்தாலும் அது நம்மக்கிட்டேயா இருக்கு கடவுள்க்கிட்ட இருக்கு,” என்றவர்,

“என்ன அக்கா, நீ என்ன சொல்ற, அலமேலு உனக்கு இதில் சம்மதம் தானே,” என்று அகத்தியன் இருவரிடமும் சம்மதம் கேட்க,

“என்னை கேட்டா கல்யாணம் செய்துக்கிட்டு வீட்டை பார்த்துக்கிட்டு இருக்காம, எதுக்கு படிச்சிக்கிட்டுன்னு தான் சொல்லுவேன்.” என்று சிந்தாமணி கூற,

“கல்யாணம் முடிவான பிறகு எதுக்கு பெரிய படிப்பெல்லாம், ஏதாச்சும் சாதாரண படிப்பு படிக்கட்டுமே ப்பா,” என்று அலமேலு கூறினார். அவர்களின் பேச்சை கேட்டு நதிக்கு கடுப்பானது.

“இன்பாக்கு அவன் மனைவி நல்ல பெரிய படிச்சிருக்கணும்னு ஆசை. அவன் இஷ்டப்படியே நதியை படிக்க வைக்கட்டுமே, நாங்க அதுக்கு எதுவும் மறுப்பு சொல்லுவோம்னு நினைச்சுக்காத அலமேலு, இந்த கல்யாண பேச்சு வரலன்னாலும் நதியோட படிப்பு செலவை நான்தான் பார்த்திருப்பேன். அதனால நீ எதுக்கும் தயங்காத,” என்றவர்,

“என்ன சரஸ்வதி, நீ எதுவும் பேசாம அமைதியா இருக்க,” என்று மனைவியிடம் கேட்க,

“அதான் அப்பாவும் மகனும் சேர்ந்து முடிவு செஞ்சுட்டீங்களே, அப்புறம் நான் என்னத்த சொல்றது. நீங்க சந்தோஷமா இருக்கீங்கன்னா அதுவே போதும், நான் மட்டும் நதி படிக்க கூடாதுன்னா நினைக்கிறேன்.” என்று சரஸ்வதி பதில் கூற, அவர் என்ன நினைப்பாரோ என்று அலமேலுவிற்கு கொஞ்சம் கவலையாக இருக்க, இப்போது அவரின் பேச்சில் அந்த கவலை தீர்ந்தது.

“இதெல்லாம் பார்க்கறப்போ, இனி இவங்களை நினைச்சு எனக்கு எந்த கவலையுமில்ல, நம்ம காலத்துக்கு பிறகும், இன்பா எல்லாம் பார்த்துப்பான்.” என்று கூறி சிந்தாமணி ஆனந்த கண்ணீர் வடித்தார்.

“நல்ல காரியம் நடக்கும்போது எதுக்கு க்கா அழற, நம்ம பிள்ளைங்களுக்கு விசேஷம் நடக்கப் போறத நினைச்சு சந்தோஷப்படு,” என்று அகத்தியன் அவரை சமாதானப்படுத்தினார்.

பின் நதிக்கு பெரியப்பா முறை இருப்பவரை முன் வைத்து இரண்டு குடும்பமும் தாம்பூலம் மாற்றி பரிசம் போட்டுக் கொள்ள, அடுத்து பெண்ணை வரச் சொல்லி புரோகிதர் சொல்லவும், கண்மணி ஆர்வமாக அழைத்து வரச் சென்றவள், “என்ன நதி, இந்த ட்விஸ்ட்டை நீ எதிர்பார்க்கல இல்ல, உனக்கு இஞ்சினியரிங் படிக்கணும்னு ஆசைன்னு எனக்கு தெரியாதா? அதுவுமில்லாம அப்பாவும் அம்மாவும் உன்னை பொண்ணு கேட்டு வந்ததிலிருந்து நீ அழுதுக்கிட்டு இருக்கன்னு சுதர்மன் வந்து சொன்னான். 

அப்புறம் நான்தான் அண்ணனிடம் உன்னோட ஆசையை பத்தி சொன்னேன். அண்ணனும் கல்யாணத்தை தள்ளி போட்டுடிச்சு, இப்போ உனக்கு சந்தோஷமா?” என்று நதியிடம் அவள் விஷயத்தை கூற, நதி தன் தோழியை நன்றியுடன் பார்த்தாள்.

அடுத்து நதிவதனாவை கண்மணி சபைக்கு அழைத்து வர, அகத்தியனும் சரஸ்வதியும் அவளிடம் நிச்சய புடவையை கொடுத்தனர். பின் நதி அதை உடுத்துக் கொண்டு வர, மாப்பிள்ளை பெண் இருவரையும் ஒன்றாக அமர்த்தி நலங்கு வைக்க, “இப்போ உனக்கு சந்தோஷமா?” என்று இன்பா அவளிடம் கேட்க, அவளுக்கு அதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் தலை குனிந்துக் கொண்டாள். அதை அவனும் வெட்கம் என்று நினைத்துக் கொண்டான்.

அப்புறம் நலங்கு வைத்து முடித்ததும், இருவரும் சபையினர் முன் விழுந்து கும்பிட அனைவரும் அவர்களுக்கு அட்சதை தூவி ஆசிர்வதித்தனர். பின் நதியை அறைக்கு போக சொல்லி சொல்லவும், “ஒரு நிமிஷம்,” என்று நதியை இன்பா போக விடாமல் தடுத்தவன்,

“நதிக்காக நான் இந்த மோதிரம் வாங்கிட்டு வந்திருக்கேன். அதை அவளோட கையில் நானே போட்டு விடணும்னு நினைக்கிறேன். போடட்டுமா?” என்று அவன் பெரியவர்களிடம் அனுமதி கேட்க, 

“தாராளமா போட்டு விடு இன்பா,” என்று அகத்தியன் சம்மதம் தெரிவித்தார்.

அடுத்து நதியும் அவனும் எதிரெதிரில் நிற்க அவளின் விரல் பிடித்து அதில் தங்க மோதிரத்தை அணிவித்தவன், “இது பிடிச்சிருக்கா?” என்று அவளிடம் கேட்டான். அவள் அந்த மோதிரம் எப்படி இருக்கிறது என்று கூட பார்க்கவில்லை. அவன் கேட்டானே என்று பிடிக்கிறது என்பது போல் தலையசைத்தாள்.

மோதிரம் பிடித்திருக்கிறதா? என்று கேட்டவனுக்கு, என்னை பிடித்திருக்கிறதா? என்று கேட்க தோன்றவில்லை. அவளுக்கும் விருப்பம்  என்று தான் அவன் அப்போது நினைத்தான்.

ஆனால் இப்போதைக்கு திருமணத்தையே வெறுப்பவளுக்கு, அதன் கொண்டு காதலோடு வருங்கால கணவனாக அவனை நினைத்து பார்க்க நதியால் முடியவில்லை. 

அவள் மேல் உள்ள காதலினால் அவளுக்காக யோசித்து தான் அவன் இப்போது இந்த திருமணத்தை கூட ஒத்தி வைத்திருக்கிறான். அவளின் படிப்புக்கான செலவை அவனே ஏற்றுக் கொள்கிறேன் என்று சொல்கிறான். நியாயப்படி பார்த்தால் இதற்கெல்லாம் அவள் அவனை கொண்டாட வேண்டும், ஆனால் அவளால் அது முடியவில்லை. 

அடுத்தவர் தயவில்லாமல் சொந்த காலில் நிற்க வேண்டும் அதற்காக நன்றாக படிக்க வேண்டும் என்று அதைப்பற்றியே நினைத்து நினைத்து மனம் வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க மறுக்கிறது. இப்போது கூட அவளால் நல்ல மதிப்பெண்கள் எடுக்க முடியும், குறைந்த கட்டணத்தில் கல்லூரியில் சேர முடியும் என்ற நினைப்பு தான் அவனது உதவியை கூட வேண்டாமென்று மறுக்க காரணமாக இருக்கிறது.

இதை ஒருவேளை திமிர் என்று மற்றவர்கள் சொல்லலாம், ஆனால் இதை சுயமரியாதையாக தான் அவள் நினைக்கிறாள். அதனால் அவர்கள் உதவியையோ இந்த திருமணத்தையோ அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்து விடுமா? பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் அவள் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. வெளியில் பெருமையாக சொல்லிக் கொள்ளும் அளவில் அவள் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும், இஞ்சினியரிங் சேர்வ்தற்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் அவள் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை.

இதனால் அரசு கல்லூரிகளில் சேர முடியாது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் கிடைக்கும், ஆனால் அதற்கு கட்டணம் அவள் நினைத்ததை விட அதிகமாகும், அவள் போட்டு வைத்த கணக்கு படி அவளால் இன்பாவின் உதவியில்லாமல் படிப்பது கஷ்டம். அவன் படிக்க வைப்பதாக தான் சொல்கிறான். அதற்காக எவ்வளவானாலும் அவன் செலவு செய்யட்டும் என்று அவளால் அமைதியாக இருக்க முடியவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் குழம்பினாள்.

அவளின் பிரச்சனை புரியாமல் அவளை தேடி வந்த கண்மணி, “சூப்பர் மார்க் எடுத்திருக்க நதி, நீ விழுந்து விழுந்து படிச்சதுக்கு நல்ல பலன் கிடைச்சிடுச்சு,”  என்று மகிழ்ச்சியோடு கூற,

“என்ன எடுத்து என்ன? நான் நினைச்ச அளவு கட் ஆஃப் மார்க் வரலையே, பேசாம நானும் ஏதாவது 3 வருஷ டிகிரி சேர்ந்து படிக்கலாம்னு இருக்கேன்.” என்று நதி விரக்தியாக கூற, அதை அலமேலுவும் கேட்டுக் கொண்டிருந்தவர்,

அவருக்கும் இன்னொருவர் செலவு செய்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு அதிக செலவு வைக்கக் கூடாதென்பது தான் எண்ணம். அதனால், “அதை தான் நான் முதலிலேயே சொன்னேன். எப்படியோ படிச்சு முடிச்ச பிறகு கல்யாணம் தானே ஆகப் போகுது. அப்புறம் எதுக்கு பெரிய படிப்பு, இப்போ சொன்ன பாரு அதுதான் சரி.” என்றார்.

“ஏன் நதி, உன்னோட கட் ஆஃப் மார்க்க்கு கிடைக்காதா? அதெப்படி கிடைக்காம போகும்?” என்று கண்மணி கேட்க,

“கிடைக்கும், ஆனா கொஞ்சம் ஃபீஸ் அதிகமா ஆகலாம், அதனால நான் சாதாரண டிகிரியே படிக்கிறேன்.” என்று திரும்ப அதையே கூறினாள்.

அவளிடம் பேசினால் வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்த கண்மணி, இந்த விஷயத்தை இன்பாவிடம் கூறினாள். உடனே இன்பா நதியை காண வந்தவன், “ஆமாம் கண்மணி சொன்னது உண்மையா? இஞ்சினியரிங் படிக்க போறதில்லைன்னு சொன்னீயாமே, ஏன் என்னாச்சு?” என்று கேட்டான்.

“எதிர்பார்த்த அளவு கட் ஆஃப் மார்க் வரல, கவர்மெண்ட் எய்டட் காலேஜ்ல தான் படிக்க முடியும், அங்க ஃபீஸ் வருஷத்துக்கு ஐம்பாதியத்திரத்திலிருந்து ஒரு லட்சம் ஏன் ஒன்றரை லட்சம் கூட ஆகலாம்,” என்று அவள் பதில் கூற,

“இவ்வளவு தானா? இதுக்கா யோசிச்ச, உனக்கு சீட் கிடைக்கலன்னா பிரைவேட்ல கூட சேர்த்து விடலாம், நீ என்னடான்னா இதுக்கே இப்படி சொல்ற, இங்கப்பாரு நான் +2 முடிச்சப்ப அப்பா என்னை இஞ்சினியரிங் தான் சேர சொன்னாரு, ஆனா எனக்கு தான் அதில் இன்ட்ரஸ்ட் இல்ல, இப்போ கண்மணி கிட்ட கேடதுக்கு கூட அவளுக்கும் இன்ட்ரஸ்ட் இல்லன்னு சொல்லிட்டா,

ஆனா உனக்கு இஞ்சினியரிங் படிக்க ஆர்வம் இருக்கு, அப்படி இருக்கப்போ பணத்துக்காக யோசிச்சு அதை விடப் போறீயா? இப்போ எங்கக்கிட்ட பணம் இல்லன்னா அப்போ யோசிக்கறதில் அர்த்தம் இருக்கு, இப்போ எதுக்கு தயங்கற, இனி அது எங்க பணம்னு நீ யோசிக்க கூடாது. இது நம்ம பணம். இதை உனக்காக உரிமையா  செலவு செய்றதில் தப்பில்லை புரியுதா?

நீ இப்படி தேவையில்லாம யோசிக்கறதை விட்டுட்டு இஞ்சினியரிங் படிக்க அப்ளிகேஷன் போடு, எந்த காலேஜ் பெஸ்ட்னு லிஸ்ட் போட்டு வச்சிக்க, தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்காத புரியுதா?” என்று  கூறியவன், அவள் தலையை ஆறுதலாய் கோதி விட்டான்.

அவன் சொன்னது போல், அவனுடைய செலவில் படித்தால் தான் என்ன? எப்படியோ அரசு மற்றும் ஏதாவது தொண்டு நிறுவனம் கொடுக்கும் உதவித் தொகையை பயன்படுத்திக் கொள்ள தானே நினைத்தேன். அதுபோல் இதையும் ஏன் எடுத்துக் கொள்ள கூடாது. 

மனதிற்கு பிடித்தோ பிடிக்காமலோ அவனுடன் தான் என் வாழ்க்கை என்று முடிவாகி இதோ எங்களுக்கு நிச்சயமும் முடிவாகிவிட்டது. அதில் எப்போதும் மாற்றம் ஏற்பட போவதில்லை. பிறகு அவன் பணத்தில் படிக்க நான் ஏன் தயக்கம் காட்ட வேண்டும், 

எப்படியோ என் படிப்பை தொடர ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதை நான் விட்டு விடக் கூடாது. என்று மனதில் உறுதியாக சொல்லி கொண்டாள். ஆனால் அவனுடன் தான் தன் வாழ்க்கை என்பதை ஆசையாகவோ காதலோடு அவள் ஏற்றுக் கொள்ளவில்லையே, ஒரு கட்டாயத்தின் பேரில் அதை ஏற்றுக் கொண்டவளுக்கு அதை நடைமுறை படுத்துவது என்பது கடினமாக இருந்தது.

இன்பா வருங்கால மனைவி என்று உரிமை எடுத்துக் கொள்ளும் போதெல்லாம் அது அவளுக்கு மகிழ்ச்சியை தருவதற்கு பதில் சங்கடைத்தையே கொடுத்தது.  அதுதான் அங்கே அவளுக்கு பிரச்சனையாகி போனது.

சங்கமிக்கும்..