US 7

உன்னில் சங்கமித்தேன் 7

சிந்தாமணி நதியை அழைத்துக் கொண்டு சென்றதும், “என்னம்மா இப்படி செய்துட்ட? இந்த வீட்டில் பிறந்த பொண்ணை வருத்தப்பட வச்சு அனுப்பக் கூடாதுன்னு அப்பா அடிக்கடி சொல்லுவாரு, இப்படி செஞ்சதை சொல்லி காமிக்கிறதுக்கு செய்யாமலே இருக்கலாம்,

அப்பா உன்னோட விருப்பமில்லாமலா அத்தைக்கு எல்லாம் செய்தாரு, அத்தையும் அவ்வளவு மோசமானவங்க இல்லையே ம்மா,  அப்புறம் ஏன் இப்படி பேசின?” என்று சரஸ்வதியை பார்த்து கண்மணி கேட்க,

“நான் என்ன வேணும்னே அவங்களை கஷ்டப்படுத்தணும்னு பேசினது போல சொல்லுற, நதியை பார்க்கவும் என் மகனை வேண்டாம்னு சொல்லிட்டாளே அப்படிங்கிற ஆத்திரம். அதோட விடாம திரும்ப ஏன் அவள் என் மகன் வாழ்க்கையில் வரா என்கிற எரிச்சல். அது என்னை மீறி இப்படி வார்த்தையா வந்துடுச்சு, சித்தி இதெல்லாம் கேட்பாங்கன்னா நான் நினைச்சேன்.” என்று அவர் பதிலுக்கு தன் நியாயத்தை கூற,

“அவங்க கேட்கலன்னா, அவங்களுக்கு விஷயம் தெரியாமலே போயிடுமா? இப்போ அண்ணன் வந்து அவங்க எங்கன்னு கேட்டா என்ன பதில் சொல்ல போற?” என்று கண்மணி கேட்க, சரஸ்வதிக்கும் அதற்கு பதில் தெரியவில்லை.

கண்மணி பேசி முடிக்கவில்லை. அதற்குள் அங்கு வந்த இன்பா, “ஆமாம் இங்க என்ன நடந்துச்சு, அத்தை சுதர்மனுக்கு போன் செஞ்சு, அங்க போகாத நேரா வீட்டுக்கு வான்னு சொல்றாங்க, இங்க வந்து பார்த்தா அத்தையையும் நதியையும் காணல,” என்று வரிசையால கேள்விகள் எழுப்ப,

“அது, அதுவந்து, அம்மா நதியை ஏன் இங்க வந்தன்னு கேட்டு கொஞ்சம் அதிகமாகவே பேசிட்டாங்க, அதை அத்தையும் கேட்டுட்டு, கோபமா பேசிட்டு நதியை கூட்டிட்டு போயிட்டாங்க,” என்று தயங்கி தயங்கி கண்மணி விஷயத்தை கூற,

அதைகேட்டு அவனுக்கு மிகுந்த கோபம் எழுந்தது. ஆனால் விசேஷம் நடக்கும் வீடு என்பதால், கோபத்தை வெளியில் காண்பிக்க முடியாதவனாக அங்கிருந்து சென்றுவிட்டான்.

அலமேலு அன்று வேலைக்கு போகாமல் வீட்டில் தான் இருந்தார். சிந்தாமணி இன்னொருமுறை வற்புறுத்தி கூப்பிட்டும் வர மறுத்தவர், வீட்டிலேயே இருந்துக் கொண்டார். இப்போது பார்த்தால் விசேஷத்திற்கு சென்றவர்கள் போன வேகத்திலேயே திரும்பி வரவும் முதலில் ஒன்றும் புரியாமல் அவர்களை பார்த்தவர், அடுத்த நொடி சிந்தாமணி அங்கு நடந்ததை சொல்லி புலம்ப ஆரம்பிக்கவும், அவருக்கு அங்கு நடந்தது தெரிய வந்தது.

“இதுக்கு தான், நான் அங்க போக வேண்டாம்னு தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன். யாராச்சும் கேட்டீங்களா? மரியாதை இருக்காதுன்னு சொன்னேனே என் பேச்சை கேட்டா தானே, இத்தனைநாள் ஜாடை பேசினவங்க, இப்போ நேரடியாவே செஞ்சதை சொல்லி காண்பிச்சிட்டாங்கல்ல, இந்த அசிங்கம் நமக்கு தேவையா?” என்று அவர் பங்கிற்கு அலமேலுவும் புலம்பியவர்,

“கண்மணி தானே உன்னை கூப்பிட்டது, அவங்க அம்மா பேசினதை அவ அமைதியா வேடிக்கை பார்த்துக்கிட்டா இருந்தா,” என்று கேட்க,

“அவ எங்க வேடிக்கை பார்த்தா, அவ பங்குக்கு அவளும் தான் ஏன் இங்க வந்தன்னு கேட்டு இவளை அவமானப்படுத்தினா,” என்று சிந்தாமணி கூறினார்.

“அவளும் அவமானப்படுத்தினாளா? அவமானப்படுத்த தான் விசேஷத்துக்கு கூப்பிட்டாளா? எதுக்கு கூப்பிடணும்? எதுக்கு அவமானப்படுத்தணும்?” என்று அலமேலு கேட்க,

இதற்கு மேல் அன்னையிடம் மறைப்பது சரியில்லை என்பதை நதி உணர்ந்தவள், “கண்மணி என்னை கூப்பிடல, அப்படி சொன்னா தான் எங்களை அனுப்புவிங்கன்னு பாட்டி தான் அப்படி சொல்ல சொன்னாங்க, என்னை விசேஷத்துக்கு கூப்பிட்டது இன்பா தான்,” என்று அவனுடன் வண்டியில் பயணித்ததையும், அப்போது அவன் விசேஷத்திற்கு அழைத்ததையும் நதி சொல்லிவிட,

“இது வேறயா?” என்று அலமேலு தலையில் கை வைத்தப்படி அமர்ந்துவிட்டார்.

“வேண்டாம்னு சொல்லி கல்யாணம் நின்னு போனவன் கூட திரும்ப வண்டியில் ஜோடி போட்டுட்டு போனா யாருக்கு தான் பிடிக்கும், பேச தான் செய்வாங்க, உன் மனசுல என்னத்தான் நினைச்சிட்டு இருக்க, நீ எதுவும் சொல்லாமலா அவன் கல்யாணத்தை நிறுத்தியிருப்பான். அப்படி இருக்க திரும்ப அவன் கூட எதுக்கு வண்டியில் போன, அவன் கூப்பிட்டான்னு எதுக்கு அவங்க வீட்டுக்கு போன, இப்போ அதனால தானே இத்தனை அவமானமும், இன்னும் என்னல்லாம் செய்ய காத்திருக்கியோ,”/என்று இன்னும் என்னென்னமோ பேசி அலமேலு அவளை திட்டி தீர்த்தார்.

பொதுவாக அவர் பேசினால் அவளுக்கு கோபம் வந்துவிடும், ஆனால் இந்தமுறை அவள் மீது தவறு இருக்கிறது. இன்பாவுடன் வண்டியில் சென்றிருக்க கூடாது. அவன் அழைத்தானென்று அவ வீட்டிற்கும் சென்றிருக்க கூடாது என்பதை  நினைத்து அவளே வருந்தினாள் என்பதால், அலமேலு பேசிய பேச்சை அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டவள், அடுத்து அறையில் சென்று ஒடுங்கிக் கொண்டாள்.

இங்கு இன்பா வீட்டிலோ விசேஷம் முடிந்து கண்மணியின் புகுந்த வீட்டினர்கள் அனைவரும் கிளம்பியிருக்க, அதுவரை பொறுமை காத்திருந்தவனோ, அடுத்து தன்  கோபத்தினால் பொங்கி விட்டான்.

“நீங்க ரெண்டுப்பேரும் இப்படி செய்வீங்கன்னு கொஞ்சம் கூட நான் எதிர்பார்க்கல, வீடு தேடி வந்தவங்கக்கிட்ட இப்படித்தான் நடந்துப்பீங்களா?

எல்லாம் என் தப்பு, நதி மேல உங்களுக்கு இருக்க கோபம் தெரிஞ்சும், அவளை கூப்பிட்டது என்னோட தப்பு தான், ஆனா இவங்களை பத்தி எனக்கு தெரியும்,” என்று தன் அன்னையை கை காட்டியவன்,

“இவங்க சூழ்நிலையை புரிஞ்சுக்காம நடந்துக்கிறாங்க, ஆனா நல்லா படிச்சிருக்க உனக்கு என்ன ஆச்சு கண்மணி. உன்னைப்பத்தி நதி எவ்வளவு ஆசையா விசாரிச்சா தெரியுமா? நீ கன்சீவ் ஆகியிருக்கேன்னு சொன்னதும் ரொம்ப சந்தோஷப்பட்டா, நான் கூப்பிட்டதும் உடனே அவ வருவாளா? ஆனா வந்தான்னா எதுக்காக? உன்னை பார்க்கணும்னு ஆசையால, நீ கோபமா இருப்பேன்னு தெரிஞ்சும் வந்தா, 

என்னத்தான் நீ கோபமா இருந்தாலும், வீடு தேடி வந்தவக்கிட்ட மோசமா நடந்துக்க மாட்டேன்னு நினைச்சேன். ஆனா அத்தையே கோபிச்சிக்கிட்டு போற அளவுக்கு நடந்திருக்கு, அதை நீயும் பார்த்துட்டு இருந்திருக்க, பார்த்துட்டு தான் இருந்தீயா? இல்லை நீயும் அம்மாவோட சேர்ந்து ஏதாவது பேசினியா?” என்று தங்கையிடமும் அவன் கேள்வி எழுப்பினான்.

“அம்மா பேசினது தப்பு தான், நானும் ஒத்துக்கிறேன். ஆனா எங்க கோபம் தெரிஞ்சும் அவ இங்க வந்திருக்க கூடாது ண்ணா, உன்னை பிடிக்கல, வேண்டாம்னு சொல்லிட்டு இங்க எந்த முகத்தை வச்சிக்கிட்டு அவளால வர முடியுது?” என்று கண்மணி கேட்க,

“அவ பிடிக்கலன்னு சொன்னா, அதுக்காக நான் இந்த கல்யாணத்தை நிறுத்திட்டேன். அதுதானே உங்க கோபம், ஏன் அவ விருப்பத்தை அவ சொல்ல கூடாதா? சொல்லத்தான் அவளுக்கு உரிமை இல்லையா?” என்று அவன் கேட்டான்.

“அவளுக்கு பிடிக்கலன்னா ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கலாமே, அப்போ ஏன் அவ சொல்லல?” என்று கண்மணி கேட்க,

“அப்படி ஒரு சந்தர்ப்பத்தை நாம அவளுக்கு கொடுத்தோமா? அவளோட வீட்டில் அவளோட சம்மதத்தை கேட்டாங்க, கேட்கல, அதுவேற, ஆனா நாம கேட்டோமோ? அப்பாவோ அம்மாவோ என் மகனை கட்டிக்க உனக்கு சம்மதமான்னு அவக்கிட்ட கேட்டாங்களா? இல்ல பெஸ்ட் ஃப்ரண்ட்னு அவளோடவே சுத்திட்டு இருந்தியே, என்னோட அண்ணனை உனக்கு பிடிச்சிருக்கா, அவனை கல்யாணம் செய்துக்க உனக்கு சம்மதமான்னு ஒருமுறையாவது நீ கேட்ருக்கியா?

உங்களை விடுங்க, வாழ்நாள் முழுதும் சேர்ந்து வாழப் போறோம்னு கனவு கண்டேனே, ஒருமுறையாவது என்னை உனக்கு பிடிச்சிருக்கான்னு நான் நதிக்கிட்ட கேட்டேனா? கேட்கல, நாம யாரும் கேட்கல, ஏன் கேட்கல?

எப்போதிலிருந்தோ இந்த கல்யாண பேச்சு ஓடிட்டிருக்கு அப்புறம் இதில் எதுக்கு சம்மதம் கேட்க வேண்டியிருக்குன்னு சொல்றதெல்லாம் சும்மா ஒரு காரணம். ஆனா உண்மையான காரணம் என்ன தெரியுமா?

நம்ம தயவில் தானே அவங்க இருக்காங்க, இதைவிட பெரிய சம்பந்தம் அவங்களுக்கு கிடைச்சிடுமா? இதை அவங்க வேண்டாம்னு சொல்லிடுவாங்களா? ஒத்துக்கிட்டு தானே ஆகணும், வேற வழி. அப்படியான நினைப்பு தான் நம்மக்கிட்ட இருந்துச்சு, நம்மன்னா என்னையும் சேர்த்து தான் சொல்றேன். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு நொடி பொழுதாவது நம்ம மனசுல இப்படி ஒரு எண்ணம் தோனியிருக்கும், அதுதான் உண்மையும் கூட, அப்படி ஒருபோதும் நான் நினைச்சதில்லன்னு உன்னால சொல்ல முடியுமா?” என்று இன்பா கண்மணியிடம் கேட்க,

அதற்கு அவளிடம் பதிலில்லை. ஏனென்றால் நதிக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லையென்று தெரிந்தபோது, அவள் மனதில் தோன்றிய முதல் கேள்வியே இதுதானே, அப்படியிருக்க அவளால் எப்படி இல்லை என்று கூறமுடியும், பதில் கூற முடியாமல் அவள் தலை குனிந்தாள்.

அதை புரிந்துக் கொண்டவனாக, “ஆனா நதிக்குன்னு ஒரு மனசு இருக்கும், அதில் சில எதிர்பார்ப்புகள் இருக்கும்னு நமக்கு நினைக்க தோனல, நாம தான் கேட்கணுமா? அவளுக்கு பிடிக்கலன்னா அதை அவ வெளிப்படையா சொல்லலாமேன்னு நாம நினைக்கலாம், ஆனா எல்லோராலும் எல்லா நேரமும் மனசில் நினைச்சதை வெளிப்படையா சொல்ல முடியாது. அவங்க தயவில் இருக்கோம், இதுக்கு மறுப்பு சொல்ல முடியுமான்னு அவளுக்கு ஒரு தயக்கம் இருந்திருக்கலாம், அவளுடைய வயசு எதையும் தைரியமா பேச முடியாம இருந்திருக்கலாம்,

அதுக்குப்பிறகும் நன்றிக்காக, கடமைக்காக, கட்டாயத்துக்காக அவ என்னை கல்யாணம் செய்ய தயாரா தான் இருந்தா, ஆனா அது தெரிஞ்சபிறகும் எனக்கு தான் அவளை கல்யாணம் செய்துக்க மனசு வரல, ஒருவேளை கல்யாணத்துக்கு பிறகு அவ மனசு மாறலாம்னு அவளை என்னால கல்யாணம் செய்திருக்க முடியும், ஆனா கடைசி வரைக்கும் அவ மனசு மாறாம ஒரு கட்டாயத்தின் பேரில் தான் என்னோட வாழறது போல சூழ்நிலை வந்தா அந்த வாழ்க்கை நரகமாகிடும், அதுக்கு இந்த கல்யாணத்தை நிறுத்தறது நல்லதுன்னு தோனுச்சு, இப்போதும் நதி மேல மட்டும் தான் தப்புன்னு சொல்றீயா?” என்று அவன் கேட்க, முதல்போல் கண்மணியால் பதிலுக்கு பதில் பேச முடியவில்லை என்பது தான் உண்மை.

இங்கே இன்பா கண்மணியிடம் கேட்ட ஒவ்வொன்றும் தான் அங்கே நதியும் யோசித்துக் கொண்டிருந்தாள். ‘நான் மட்டுமே தவறு செய்தது போல் கூறுகிறார்களே, இவர்கள் யாருமே தவறு செய்யவே இல்லையா? பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு இஞ்சினியரிங் படிக்கும் கனவை சுமந்தபடி சுற்றிக் கொண்டிருந்தவளை திருமணம் என்னும் கூட்டினுள் அடைக்க நினைத்தது அவர்கள் தவறில்லையா?’ என்பது தான் அவளின் மனதில் எப்போதும் தோன்றும் கேள்வி.

ஆம் நதிவதனா பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவிற்காக காத்திருந்த சமயம் தான் அகத்தியனும் சரஸ்வதியும் அவளை பெண் கேட்டு அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தனர்.

அப்போதும் அகத்தியன் படிக்கும் பெண்ணை திருமணத்திற்காக பெண் கேட்டு வந்திருக்கோமே என்ற பெரும் யோசனையுடன் தான் வந்தார். அவருக்கு அப்படியான சூழ்நிலை. சிறிது காலமாகவே சில உடல் உபாதைகள் தொடர்ந்து வரவும், மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்ததில் வயிற்றில் கேன்சர் கட்டி இருப்பது தெரிந்தது. சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம் என்று மருத்துவர்கள் நம்பிக்கை அளித்தாலும் அவருக்கு என்னமோ அதிக காலம் அவர் வாழ மாட்டார் என்பது அவருக்கு தோன்ற ஆரம்பித்துவிட, சாவை நினைத்து அவர் கவலை கொள்ளவில்லை. ஆனாலும் பிள்ளைகளுக்கு தேவையான சொத்துக்களை சேர்த்து வைத்தாலும் அவர்கள் வாழ்வில் நல்லதை பார்க்கும் முன்பே தன் காலம் முடிந்துவிடுமோ என்ற கவலை தான் அவருக்கு அதிகமாக இருந்தது. அந்த கவலை அவரை இன்னும் சோர்வடைய வைக்க,

அப்போது சரஸ்வதியின் அன்னை உயிரோடு இருந்தவர், அவர்களோடு தான் உடனிருந்தார். “மாப்பிள்ளை கவலை என்னன்னு தெரியுது. அந்த கவலையை போக்க வேணாமா? இன்னும் சில மாசத்தில் இன்பாக்கு 25 வயசு முடிஞ்சிடும், அவனுக்கு ஒரு கல்யாணத்தை செய்து வச்சா மாப்பிள்ளை கவலை தீர்ந்திடுமில்ல, அவனுக்கு இனி பொண்ணா தேடப் போறோம், அதான் உன்னோட நாத்தனார் பேத்தி ரெடியா இருக்கால்ல,” என்று அவர் தன் மகளிடம் கூற,

“அந்த பொண்ணு படிச்சிட்டு இருக்கே ம்மா,” என்று சரஸ்வதி பதில் கூறினார்.

“அதான் ஸ்கூல் படிப்பை முடிச்சிடிச்சுல்ல, அப்புறம் என்ன? மேல படிக்கணும்னா கூட கல்யாணம் செய்துக்கிட்டு படிக்கட்டும், நம்ம குடும்பத்தில் இதெல்லாம் நடக்காததா என்ன?” என்று அவர் சரஸ்வதியிடம் பேசி பேசி மனதை கரைக்க, சரஸ்வதியோ அகத்தியனிடம் பேசி அவரை அரை மனதாக சம்மதிக்க வைத்து, நதியை பெண் கேட்டு சென்றனர்.

அவர்கள் பெண் கேட்டு வந்ததும் சிந்தாமணிக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. இதில் அலமேலுவோ மகள் இஞ்சினியரிங் படிக்க போவதாக சொல்லிக் கொண்டிருக்க, “இஞ்சினியரிங் படிக்கல்லாம் நிறைய காசு செலவாகும் போலயே, எப்படியோ படிப்பு முடிஞ்சதும் உனக்கு கல்யாணம் தான் செய்ய போறோம், அதனால ஏதாச்சும் சாதாரண படிப்பா படி,” என்று சொல்லிக் கொண்டிருப்பவருக்கோ, அவர்கள் பெண் கேட்டு வரவும், மகளின் திருமணம் அவருக்கு பெரிய பொறுப்பாக இருக்கவே, விரைவில் திருமணத்தை முடித்தால் நல்லது என்ற நினைப்பு தான் அவருக்கும் இருந்தது.

அப்படியிருக்க அதில் முற்றிலும் இடிந்து போனது நதி தான், தேர்வு முடிவில் எப்படியும் நல்ல மதிப்பெண்கள் வரும், நல்ல மதிப்பெண்கள் எடுத்தால், குறைவான கட்டணத்திலேயே இஞ்சினியரிங் படிக்கலாம், உடன் ஸ்காலர்ஷிப் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. இதையெல்லாம் சொல்லி அன்னையிடம் எப்படியும் அனுமதி வாங்கிவிடலாம் என்று அவள் நினைத்திருக்க, இப்படி ஒரு இடி விழுந்தால் அவள் என்ன செய்வாள்?

நதிக்கு இன்னும் பதினெட்டு வயதாகவில்லை. அதனால் இப்போது பரிசம் போட்டுவிட்டு, பதினெட்டு வயது முடிந்ததும் திருமணத்தை வைத்துக் கொள்ளலாம், நதிக்கு மேலே படிக்க விருப்பம் இருந்தால் திருமணத்திற்கு பின் படிக்கலாம் என்ற அவர்களின் பேச்சு அவளுக்கு இனிக்கவில்லை.

பெரும்பாலும் நடுத்தர குடும்பங்களில் ஒரு பெண்ணுக்கு திருமணம் முடிப்பது பெரிய பாரம் போல் தான் பலருக்கு தோன்றுகிறது. இதில் ஆண் துணையில்லாத நிலையில் படிப்பறிவு அவ்வளாவாக இல்லாத சிந்தாமணிக்கும் அலமேலுவிற்கும் இதை விட்டுவிடக் கூடாது என்பது தான் பெரிய எண்ணமாக இருந்தது.

ஒன்று தன்னிடம் இல்லையென்றால் தான் அதன் அருமை புரியும் என்று சொல்வார்கள். தாங்கள் தான் படிக்கவில்லை. தங்கள் பிள்ளையையாவது படிக்க வைக்க வேண்டுமென்று தான் அவர்களுக்கு தோன்றியிருக்க வேண்டும், ஆனால் அதைவிட அவளின் திருமணம் தான் அவர்களுக்கு பெரதாக தோன்ற,

கெஞ்சி, கூத்தாடி, அழுது இந்த திருமணம் வேண்டாமென்றவளை, திட்டி, மிரட்டி, கெஞ்சி, தங்கள் குடும்ப சூழ்நிலையை எடுத்து சொல்லி முறையிட்டு நதியை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தார்கள்.

அப்படி கட்டாயப்படுத்தி தன்னிடம் சம்மதம் வாங்கிய தன் குடும்பத்தினர் மேல் மட்டுமில்லை. இதற்கு காரணமான இன்பா குடும்பத்தினர், ஏன் இன்பா மீது கூட அவளுக்கு கோபம் பொங்கி எழுந்தது.

‘மகனுக்கு திருமணம் செய்ய நினைத்தால் திருமணத்திற்கு தயாராக இருக்கும் எத்தனையோ பெண்கள் இருக்க, படித்துக் கொண்டிருக்கும் நான்தான் கிடைத்தேனா? அவர்களுக்கும் என் வயதில் ஒரு பெண் இருக்கிறாள் தானே, அவளுக்கு இப்போது மணம் முடிக்க நினைப்பார்களா? ஆனால் என்னை மட்டும் பெண் கேட்டு வர காரணமென்ன? அவர்கள் தயவில் நாங்கள் இருப்பதால் தானே?’ என்று நினைத்தவளுக்கு அப்போது தான் படித்து நல்ல வேலைக்கு சென்று தங்களின் குடும்ப நிலையை உயர்த்த வேண்டுமென்று உறுதியாக நினைக்க வைத்தது. ஆனால் அதை செயலாற்ற முடிதாத நிலையை நினைத்து அவளால் கண்ணீர் விடத்தான் முடிந்தது.

கிட்டத்தட்ட அவளை போல் தான் இன்பாவும் தன் வீட்டில் கோபமாக பேசிக் கொண்டிருந்தான். “யாரை  கேட்டு அங்க போனீங்க? என் கல்யாணத்தை பேச போயிருக்கீங்க, ஆனா என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லலை, அப்படி என்ன என் கல்யாணத்துக்கு அவ்வளவு அவசரம்? நதிக்கும் நம்ம கண்மணி வயசு தான், நம்ம கண்மணியை யாராச்சும் பொண்ணு கேட்டு வந்தா கொடுத்திடுவீங்களா? அப்போ நதியை பத்தி யோசிக்காம எப்படி பொண்ணு கேட்டீங்க, நம்ம தயவில் அவங்க இருக்காங்க, அவங்களால மறுப்பு சொல்ல முடியாதுங்கிறதனால தானே,” என்று அவன் கூறவும்,

“இங்கப்பாரு ஏன் நீ அப்படியெல்லாம் நினைக்கிற, உனக்கு நதியை தான் கட்டிக்கணும்னு ஆசைன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும், அதனால தானே போய் பொண்ணு கேட்டோம்,” என்று சரஸ்வதி காரணம் கூறினார்.

“அது உண்மை தான், ஆனா இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம்? எனக்குமே இன்னும் கல்யாண வயசு வரலையே, இப்போ தான் அப்பாவோட சேர்ந்து எண்ணெய் வியாபாரத்தை கவனிக்க ஆரம்பிச்சிருக்கேன். அதுக்குள்ள எனக்கு எதுக்கு கல்யாணம்? நதி காலேஜ் படிப்பை முடிக்கட்டுமே,” என்று அவன் சொல்ல, 

ஏற்கனவே தாங்கள் அவசரப்படுகிறோமோ என்று அகத்தியனுக்கு தோன்றிக் கொண்டிருக்க, மகன் பேசியது வேறு அவரை இன்னும் சங்கடப்படுத்த, உடல்ந சரியில்லாதவர் என்பதால் மயங்கி சரிந்தார்.

அதில் சரஸ்வதிக்கு இன்னும் பயமாகிவிட்டது. “இங்கப்பாரு இன்பா, பிள்ளைங்களோட நல்லதெல்லாம் பார்ப்போமா? இல்லையான்னு அப்பாக்கு கவலை ப்பா, இப்போ உனக்கும் கண்மணிக்கும் ரெண்டு, மூனு வயசு வித்தியாசம்னா முதலில் கண்மணிக்கு கல்யாணம் செய்றதை பத்தி தான் யோசிச்சிருப்போம், 7 வயசு வித்தியாசம் என்பதால் தான் உனக்கு முதலில் செய்யலாம்னு நினக்கிறோம்,

இங்கப்பாரு நதி மேல எங்களுக்கு என்ன விரோதமா? அந்த பொண்ணு படிக்கக் கூடாதுன்னு நாங்க நினைப்போமா? அப்பா நல்லப்படியா இருந்தா நாங்க ஏன் இப்படி யோசிக்க போறோம், இப்போ உன்னோட கல்யாண வேலையை பார்க்க ஆரம்பிச்சா அவரும் கொஞ்சம் தெம்பா இருப்பாருன்னு தான் இப்படி யோசிக்கிறோம், நதி கல்யாணத்துக்கு பிறகு எவ்வளவு படிக்கணுமோ படிக்கட்டும், நாங்க யாரும் அதுக்கு தடையா இருக்க மாட்டோம், அப்பாக்காக ஒத்துக்கோ கண்ணா,” என்று அவரும் மகனிடம் கெஞ்சினார்.

இன்பா வீட்டில் பேசியது கண்மணி மூலமாக நதிக்கு தெரிய தான் வந்தது. ஆனால் தந்தையை காரணம் காட்டி அவனை சம்மதிக்க வைத்து விட்டார்கள். அவனாலும் நடக்க போகும் நிச்சயத்தை நிறுத்த முடியவில்லை என்று தெரிந்த பின் அவளுக்கு எப்படி மகிழ்ச்சியாக இருக்கும்? தன் கனவுகள் தனக்குள்ளேயே புதைந்து போகப் போவதை நினைத்து அழது கரைந்தாள்.

சங்கமிக்கும்..