US 6

உன்னில் சங்கமித்தேன் 6

இன்பா காலையிலேயே வெளியில் கிளம்பி சென்றுவிட்டதால், கண்மணி இளநீர் வேண்டுமென்று கேட்கவே, சரஸ்வதியே அவர்கள் தோப்பில் இளநீர் பறிக்க ஆளை கூட்டி வரச் சொல்லி அனுப்ப, வந்தவரோ நெடுஞ்சாலையில் இளநீர் விற்றுக் கொண்டிருந்தவர் தான்,

அவர் வந்த வேலையை மட்டும் பார்க்காமல், கண்மணிக்கு இளநீர் சீவிக் கொண்டிருந்தவர், “என்னம்மா உங்க வீட்டு பிரச்சனையெல்லாம் சரியா போச்சு போல, அப்போ வீட்டில் சீக்கிரம் கல்யாண சாப்பாடு போடப் போறீங்கன்னு சொல்லுங்க,” என்று பீடிகை போட்டு பேச,

“என்ன சொல்றப்பா நீ, எனக்கொன்னும் புரியலையே,” என்று சரஸ்வதி கேட்டார்.

கண்மணியுமே புரியாமல் அவரை பார்த்துக் கொண்டிருக்க, “வளவன் பொண்ணு, வேலை விஷயமா வெளியூருக்கு போனது திரும்ப ஊருக்கு வந்திருச்சு போல, இன்னைக்கு காலையில் வேலைக்கு போகணும்னு பஸ் ஏற வந்துச்சு, ஆனா அது வரதுக்குள்ள ஏழரை மணி பஸ் போயிடுச்சு, அப்புறம் நம்ம இன்பா தம்பி தான், அந்த பொண்ணை அதோட வண்டியில் கூட்டிட்டு போச்சு, ரெண்டுப்பேரோட ஜோடிப் பொருத்தம் பார்க்க எப்படி இருந்துச்சு தெரியுமா?” என்று அவர்பாட்டுக்கு சொல்லிக் கொண்டிருக்க, சரஸ்வதி முகமோ கோப கணலாக கொதித்தது.

“எதனால இந்த கல்யாணம் நின்னு போச்சுன்னு தெரியல, ஆனா இப்போ தான் அந்த பொண்ணு இங்கிருந்தே வேலைக்கு போகுதே, நம்ம இன்பா தம்பிக்கும் அந்த பொண்ணை தான் பிடிக்குதுன்னு நல்லா தெரியுது, அதனால நின்னு போன கல்யாணத்தை திரும்ப நடத்துங்க,” என்று சொல்லிவிட்டு அவர் வந்த வேலை முடிந்ததென அங்கிருந்து அவர் கிளம்பிவிட,

“உன்னோட அண்ணனுக்கு புத்தி கெட்டுப் போச்சா, வேணாம்னு சொன்ன பொண்ணு பின்னாடியே எதுக்கு திரும்ப போறான். அந்த பொண்ணுக்கு பிடிக்கலன்னு தெரிஞ்சு தானே கல்யாணத்தை நிறுத்தினான். இப்போ மட்டும் அவளுக்கு பிடிச்சிடுமா?

இவனுக்கு தான் அறிவில்லன்னா அவளுக்கு எங்க போச்சு அறிவு. மெத்த படிச்சிருக்கால்ல, பிடிக்கலன்னு சொன்னவன் கூட எதுக்கு ஜோடி போட்டு வண்டியில் போகணும், இதெல்லாம் நல்லதுக்கா சொல்லு,  இங்க என்னத்தான் நடக்குது? நடக்கறதை பார்த்து என் வயிறு எறியறது தான் மிச்சம். நீயாவது கிளம்பறதுக்குள்ள உன் அண்ணனுக்கு நல்லா புத்தி சொல்லிட்டு போ,” என்று மகளிடம் சரஸ்வதி புலம்பிக் கொண்டிருக்க,

“விடும்மா, நதி நேரத்துக்கு போகணும்னு அண்ணன் கொண்டு போய்விட்டிருக்கும், வந்தா அண்ணனிடம் நான் பேசிக்கிறேன். நீ டென்ஷன் ஆகாத,” என்று அவரை கண்மணி சமாதானப்படுத்தினாள்.

ஆனாலும் இன்பா வரும் வரை சரஸ்வதியின் புலம்பல் ஓய்ந்தபாடில்லை. உள்ளே வரும்போதே அன்னையின் புலம்பலை கேட்டப்படி வந்தவன், “என்ன பிரச்சனை? அம்மா ஏதோ கோபமா இருக்கறது போல தெரியுதே,” என்று அவன் தங்கையிடம் கேட்க,

“இப்போதைக்கு அம்மா கோபத்துக்கு நீ காரணமா இல்லாம வேற யார் இருப்பா ண்ணா,” என்று கண்மணி திருப்பி கேட்டாள்.

“நானா? நான் என்ன செய்தேன்?” என்று அவன் புரியாமல் கேட்க,

“நதியை வண்டியில் கூட்டிட்டு போனீயா? ஏன் ண்ணா உனக்கு இந்த வேலை?” என்று அவள் கேட்க,

“நமக்கு தெரிஞ்சவங்க ஒரு இக்கட்டில் இருக்கும்போது பார்த்தும் பார்க்காம போனா நல்லாவா இருக்கும், அப்படியிருக்க நதி நம்ம உறவு. அப்புறம் எப்படி பார்த்துட்டு உதவாம போக முடியும், அதில்லாம நான் போற வழியில் தான் அவளை இறக்கி விட்டுட்டு போனேன். அவளுக்காக மெனக்கிட்டு போகல, போனாலும் தப்பில்ல, இதெல்லாம் அம்மாக்கு தான் புரியல, உன்னால கூடவா புரிஞ்சிக்க முடியல, நீ ரொம்ப மாறிட்ட கண்மணி.” என்று தங்கையை கடிந்துக் கொண்டான்.

“நீதான் மாறாம அப்படியே இருக்க ண்ணா, நீ இதெல்லாம் அவளுக்கு செய்றதால, அவளுக்கு திரும்ப உன்னை பிடிக்கவா போகுது, இல்லை உன்னையே திரும்ப கல்யாணம் செய்துக்க போறதா சொல்லுவாளா?” என்று கண்மணி கேட்க,

“நான் சாதாரணமா செய்த ஒரு உதவிக்கு இப்படி கண்ணு காது மூக்கு வச்சி பேசினா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?” என்று பதில் கேள்வி கேட்டான்.

“எங்க வாயை அடைச்சிடலாம், ஆனா ஊர் வாயை அடைக்க முடியுமா? இந்த விஷயத்தை மெயின்ரோட்ல இளநீர் விக்கறவன் தான் இப்போ சொல்லிட்டு போனான். என்னமோ நாம தான் கல்யாணத்தை நிறுத்திட்ட மாதிரி பேசறான். இன்னும் எத்தனை பேர் அப்படி நினைச்சிட்டு இருக்காங்களோ, இதெல்லாம் நமக்கு தேவையா?” என்று சரஸ்வதி கேட்டார்.

“அவர் சொன்னது உண்மை தானே, கல்யாணத்தை நிறுத்தினது நான்தானே, ஊரில் இன்னைக்கு நம்மளை பேசுவாங்க, நாளைக்கு வேற ஒருத்தரை பேசுவாங்க, அதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. என்னமோ பெரிய குற்றவாளி போல என்கிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க, போய் இருக்க வேலையை பாருங்க,” என்று கோபத்தோடு அவன் பேசிக் கொண்டிருக்க, அப்போது அவன் அலைபேசி இசைத்தது.

எடுத்து காதில் வைத்தவன், “சொல்லுங்க,” என்க, மறுமுனையில் என்ன பேசினார்களோ?

“ஆமாம் நான்தான் பேசினேன். ம்ம் புது கார் தான், ரெடி கேஷ் தான், அப்படியா? சரி நாளைக்கு வரேன்.” என்று ஒவ்வொன்றிற்கும் அவன் பதில் கூறியதை வைத்தே, அவன் புதிதாக கார் வாங்க போகிறான் என்பதை புரிந்து,

“அண்ணா காரா வாங்க போற,” என்று கண்மணி கேட்டாள்.

“ஆமாம்,” என்று அவன் பதில் கூற,

“திடீர்னு எதுக்கு காரு? அதுக்கு நமக்கு என்ன அவசியம் வந்துச்சு?” என்று சரஸ்வதி சந்தேகமாக கேட்டார்.

“இப்போ நம்ம எண்ணெய் பிஸ்னஸ், சென்னையிலும் கொஞ்சம் கொஞ்சமா பிரபலமாகிட்டு வருது, அதுக்கு அடிக்கடி நாலு பேரை பார்க்க வேண்டியிருக்கும், அது சம்பந்தமா சட்டுன்னு போக வர பஸ்ல ட்ரெயினை எதிர்பார்த்துட்டு இருக்க முடியாது. வண்டியில் அத்தனைதூரம் போயிட்டு வருவது பாதுகாப்பு கிடையாது.

அதுவுமில்லாம ஏழாம் மாசமே வளைகாப்பு செய்து கண்மணியை இங்க கூட்டிட்டு வந்துடலாம்னு நீங்க சொல்லிட்டு இருக்கீங்க, இந்த சமயம் வீட்டில் கார் இருந்தா சட்டுன்னு ஹாஸ்பிட்டல் போயிட்டு வர உபயோகமா இருக்குமில்ல, அதான் கார் வாங்கலாம்னு முடிவு செய்திருக்கேன்.” என்று அவன் சொல்லவும்,

“ஆனா இத்தனைநாள் தோனாதது இன்னைக்கு தோனியிருக்கு, இது உனக்கா தோனுச்சா, இல்லை யாராச்சும் சொன்னாங்களா?” என்று கண்மணி கேட்டாள்.

“ஏன் எனக்கே தோனக் கூடாதா? அப்படியே யாராச்சும் சொல்லியிருந்தா தான் என்ன? நல்லதை யார் சொன்னாலும் எடுத்துக்க வேண்டியது தான்,” என்று சொல்லிவிட்டு அவன் அவனது அறைக்கு செல்ல,

“யார் சொல்லியிருப்பாங்க,” என்று சரஸ்வதி புரியாமல் மகளிடம் கேட்க,

“யாரா இருக்கும், நதி தான் சொல்லியிருப்பா,” என்று கண்மணி பதில் கூறினாள்.

“புதுசா அவளுக்கு என்ன அக்கறை? இது எங்க போய் முடிய போகுதோ,” என்ற சரஸ்வதி மீண்டும் தன் புலம்பல்களை ஆரம்பிக்க,

“ரெண்டுப்பேரும் ஏன் இப்படி இருக்காங்க, இது புரியாம நதியை வேற விசேஷத்துக்கு வீட்டுக்கு வர சொல்லிட்டேன். வரவக்கிட்ட எப்படி நடந்துப்பாங்களோ,’ என்று இன்பா யோசித்தவன்,

“அலமேலு அக்கா சம்மதம் சொன்னா தான் வருவதா நதி சொல்லியிருக்காளே, அப்படி வந்தாலும், விசேஷத்தை வச்சிக்கிட்டு, அதுவும் வீடு தேடி வந்ததுக்கு பிறகு அம்மாவும் கண்மணியும் மோசமா நடந்துக்க மாட்டாங்க, நாம தான் வீட்டில் இருக்கப் போகிறோமே பார்த்துக்கலாம்,’ என்று நம்பிக்கையோடு இருந்தான். ஆனால் அன்னையும் தங்கையும் அந்த நம்பிக்கையை காப்பாற்றுவார்களா? என்பதுதான் சந்தேகம்?

நதிவதனாவோ சனிக்கிழமை வரை விசேஷத்துக்கு போகலாமா? வேண்டாமா? என்று குழம்பிக் கொண்டிருந்தவளுக்கு கண்மணியை நேரில் காண வேண்டுமென்ற ஆசை இருந்தது. அவள் தான் தன்மீது கோபமாக இருக்கிறாள். அதற்காக தானும் ஒதுங்கியே இருக்கக்கூடாது என தீர்மானித்தவளுக்கு வீட்டில் எப்படி விஷயத்தை சொல்வதென குழப்பம்.

அன்னையிடம் இன்பா தான் விசேஷத்திற்கு அழைத்தான் என்று சொன்னால், உடனே எப்போது பார்த்தாய்? என்று அவர்கள் கேட்டால் அவன் அலுவலகத்திற்கு அழைத்து சென்றதை சொல்ல வேண்டும், அப்படி கூறினால் அதற்கும் அவர்கள் கோபப்படுவார்களோ என்ற பயம் என்று நாட்களை தள்ளி போட்டுக் கொண்டேயிருந்தவள், முதலில் பாட்டியிடம் விஷயத்தை கூறி, அதன்பின் அவர் மூலம் அன்னையிடம் அனுமதி வாங்கலாம் என்று யோசித்தவள், சிந்தாமணியிடம் நடந்ததை கூறிவிட்டாள்.

அதைகேட்டவருக்கோ மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. அவர் விரும்பியது திரும்ப நடக்க வாய்ப்பிருக்கிறது என்பதை உணர்ந்தவர், ” சரி நாளைக்கு விசேஷத்துக்கு போகலாம், உன் அம்மாக்கிட்ட நான் பேசிக்கிறேன். நீ நான் சொல்றதுக்கு தலையாட்டினா போதும்,” என்று அவர் கூறவும், அவளும் தலையாட்டி வைத்தாள்.

அலமேலு மாலை வேலை முடிந்து வீட்டிற்கு வரவும், “உனக்கு விஷயம் தெரியுமா? கண்மணி மாசமா இருக்காளாம்,” என்று சிந்தாமணி விஷயத்தை ஆரம்பிக்க,

“ம்ம் தெரியும், வழியில் தங்கத்தை பார்த்தேன். அவதான் சொன்னா, இப்போ கண்மணி இங்க தான் வந்திருக்காளாம், பூமுடிச்சு வளையல் போடும் விசேஷம் வச்சிருக்காங்களாம், அவளையும் கூப்பிட்டிருக்காங்களாம்,” என்று அனைத்து விஷயத்தையும் கூறிய அலமேலு,

“ஆமாம் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று மாமியாரிடம் கேட்க,

“கண்மணி தான் நதிக்கு போன் செய்தா, விசேஷம் வச்சிருக்கறதையும் சொல்லி, நதியை வீட்டுக்கு கூப்பிட்டா, என்கிட்டேயும் போன் பேசினா, நம்ம எல்லோரையும் விசேஷத்துக்கு வரச் சொன்னா,” என்று வாய்க்கு வந்ததை அவர் எடுத்து விட,

அலமேலுவோ சந்தேகத்தோடு, “ஆமாவா? கண்மணியே உன்கிட்ட பேசினா, உன்னை கூப்பிட்டாளா?” என்று மகளிடம் கேட்டார்.

அவளோ பாட்டி சொன்ன பொய்யை ஒத்துக் கொள்வதா இல்லை வேண்டாமா? என்று திருதிருவென விழிக்க, சிந்தாமணி அலமேலுவிற்கு தெரியாமல் அவளிடம் ஜாடை காட்டி ஆமாமென்று சொல்லும்படி கூற, அவளும் அவசரமாக “ஆமாம் ம்மா,” என்றாள்.

ஆனாலும் அலமேலுவிற்கு இன்னும் அது உண்மையா என்ற சந்தேகம் தீரவில்லை. “சரி, அவ ஃப்ரண்ட் என்கிற முறையில் உன்னை அழைச்சிருக்கலாம், ஆனா அவங்க அம்மா தானே முறையா நம்மளை அழைக்கணும், முன்ன மாதிரி நிலைமை இருந்தா அவங்க அழைக்கணும்னு நான் எதிர்பார்க்க மாட்டேன். ஆனா இப்போ அவங்க இன்னும் நம்ம மேல கோபமா இருக்காங்க, சின்ன பொண்ணு கூப்பிட்டான்னு  நாம போக வேண்டாம்,” என்று அவர் கூறவும், நதிக்கு ஏமாற்றமாகிவிட்டது.

“இங்கப்பாரு ரெண்டு குடும்பத்துக்கும் பிரச்சனை இருக்கலாம், ஆனா இவங்க ரெண்டுப்பேரும் நல்ல தோழிங்க, இந்தமாதிரி நேரத்தில் நதியை பார்க்கணும்னு கண்மணி ஆசைப்படுமில்ல, அதனால போகட்டுமே,” என்று சிந்தாமணி கூற,

“அப்படி நதியை பார்க்கணும்னு அந்த பொண்ணு ஆசைப்பட்டா இங்க நம்ம வீட்டுக்கு வந்து பார்க்க வேண்டியது தானே, நாம வேண்டாம்னா சொல்ல போறோம்,” என்று அலமேலு கேட்டார்.

“மாசமா இருக்க பொண்ணு, அங்கங்க போக விடுவாங்களா? நாம தான் போய் பார்க்கணும், நதியை தனியா அனுப்ப யோசனை இருந்தா நாமளும் போயிட்டு வருவோம்,” என்று சிந்தாமணி சொல்லவும்,

“எனக்கு என்னமோ இது சரியா படல, அதுக்குப்பிறகு உங்க இஷ்டம். நான் வரல, வேணும்னா நீங்களும் சுதர்மனும் கூட போயிட்டு வாங்க, ஆனா மரியாதை கிடைக்குமா என்பது சந்தேகம் தான்,” என்று அலமேலு சொல்லிவிட்டு வேலையை பார்க்க போய்விட்டார்.

“எதுக்கு பாட்டி அம்மாக்கிட்ட பொய் சொன்ன,” என்று நதி சிந்தாமணியிடம் கேட்க,

“அப்போ தான் போக சொல்லுவா, இல்லை வேண்டாம்னு திட்டவட்டமா சொல்லிடுவா,” என்று அவர் பதில் கூறினார்.

“இப்போதும் அம்மா முழு மனசா ஒத்துக்கலையே?” 

“அவளைப்பத்தி தெரியாதா? அவளை முழு மனசா ஒத்துக்க வைக்கறது கஷ்டம். இந்த அளவுக்கு இறங்கி வந்தாளேன்னு சந்தோஷப்படு, உனக்கு கண்மணியை பார்க்கணும் தானே, அப்போ உன் அம்மாவை பத்தி யோசிக்காம கிளம்பு,” என்று சிந்தாமணி சொல்ல, நதியும் அரை மனதாக சம்மதித்தாள்.

விசேஷத்திற்கு கண்மணியின் புகுந்த வீட்டு சொந்தங்கள் சில பேர் வந்திருக்க, சரஸ்வதி அழைத்ததில் அக்கம்பக்கத்தில் சிலரும் வந்திருந்தனர். அந்த வீட்டிற்கு செல்வதற்கு தயக்கமாக இருந்தாலும் கண்மணியை காண வேண்டுமென்ற ஆவலில் நதி தயாராகி கிளம்பி வந்துவிட்டாள். ஆனாலும் உள்ளே செல்வதற்கு அவளுக்கு தயக்கமாக இருக்க,

“இங்கப்பாரு நாம சொந்தக்காரங்க, எத்தனைநாளுக்கு இப்படி முகத்தை திருப்பிக்கிட்டு இருக்கப் போறோம், கண்மணியை பார்க்க தானே வந்த, அப்புறம் எதுக்கு தயங்கற, உள்ளே வா,” என்று சிந்தாமணி கட்டாயமாக அவளை அழைத்துச் சென்றார்.

கண்மணிக்கு அப்போது தான் பூச்சடை தைத்து நலங்கு வைத்து வளையல் போட அமர வைத்திருந்தனர். அப்போது இவர்கள் வீட்டிற்குள் நுழைய, முதலில் அவர்களை இன்பா தான் கவனித்தவன், “அத்தை, வா வா,” என்று உற்சாகத்தோடு அழைக்க, அப்போது தான் சரஸ்வதியும் கண்மணியும் யாரென்று கவனிக்க, நதி வந்திருப்பதை பார்த்ததும், ‘இவ எதுக்கு வந்தா?’ என்று தான் இருவர் மனதிலும் முதலில் தோன்றியது.

ஆனால் இன்பாவோ சிந்தாமணியை வரவேற்றவன், அடுத்து, “வா நதி, வா சுதர்மா,” என்று இருவரையும் வரவேற்க, சரஸ்வதிக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை. ஆனால் வந்திருக்கும் கண்மணியின் புகுந்த வீட்டிற்கு நடந்தவைகள் தெரியாது. கண்மணி அவள் கணவனிடம் மட்டும் இன்பா திருமணம் நடக்கவிருந்து நின்று போனதை மேலோட்டமாக கூறியிருக்கிறாள். அதனால் அவர்கள் முன் அவரால் எதுவும் பேச முடியவில்லை.

இதில் கண்மணியின் மாமியார் வேறு, “வாங்க, வாங்க,” என்று அவர்களை வரவேற்றவர், “யார் அண்ணி இவங்க,” என்று சரஸ்வதியிடம் கேட்க,

“இது என்னோட நாத்தனார். இவங்க ரெண்டுப்பேரும் அவங்க பேர பசங்க, இதே ஊரில் தான் ரெண்டு தெரு தள்ளி இருக்காங்க,” என்று அவர்களை அறிமுகப்படுத்தியவர், இதற்கு மேல் அவர்களை தான் வரவேற்கவில்லையென்றால் மரியாதையாக இருக்காது என்பதை உணர்ந்து, “வாங்க சித்தி,” என்று சிந்தாமணியை வரவேற்றார். அப்போதும் நதியை அவர் வரவேற்கவில்லை.

நதியும் அதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவள் முக்கியமாக வந்ததே கண்மணியை காண தானே, அதனால் ஆவலாக அவள் முகம் பார்க்க, கண்மணி முகத்திலோ நெடுநாள் கழித்து தோழியை பார்த்த மகிழ்ச்சி துளி கூட இல்லை. நதியை கோபமாக முறைத்துவிட்டு பார்வையை திருப்பிக் கொண்டாள். அதுதான் நதியின் மனதை கஷ்டபடுத்தியது.

“உங்க நாத்தனாரா? கண்மணி கல்யாணத்தில் பார்த்த மாதிரி ஞாபகமில்லையே,” என்று கண்மணியின் மாமியார் சரஸ்வதியிடம் கேட்க, அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

அதற்குள் சிந்தாமணியோ, “இல்லை எனக்கு அப்போ உடம்புக்கு கொஞ்சம் சுகமில்லைன்னு கல்யாணத்துக்கு வரல,” என்று சமாளிக்க,

“ஓ அப்படியா? அப்புறமும் பார்த்த மாதிரி ஞாபகமில்ல, சரி அதை விடுங்க, ஏன் இப்படி ஓரமா நிக்கறீங்க, இப்படி முன்னால வாங்க, உங்களை மாதிரி பெரியவங்க ஆசீர்வாதம் என்னோட மருமகளுக்கு தேவை.” என்று கண்மணியின் மாமியார் சிந்தாமணியை தங்களின் அருகே அமர்த்திக் கொண்டார்.

நதியும் சுதர்மனும் இன்னும் ஒரு விலகல் தன்மையோடு ஓரமாக நின்றிருக்க, “போய் கண்மணி பக்கத்தில் நில்லு நதி, நீயும் போ சுதர்மா,” என்று இன்பா இருவரிடமும் சொல்லிக் கொண்டிருக்க,

கண்மணியின் பார்வையிலேயே ஒரு விலகல் தன்மை தெரியவும், “இருக்கட்டு பரவாயில்லை,” என்று சொல்லி நதி அங்கேயே நின்றுக் கொள்ள, கண்மணிக்கு உறவினர்கள் நலங்கு வைக்க ஆரம்பித்தார்கள். 

அப்போது மகனிடம் வந்த சரஸ்வதி, “எதுக்குடா அவங்களை விசேஷத்துக்கு கூப்பிட்ட,” என்று கேட்க,

“கூப்பிட்டா என்ன தப்பும்மா, நதி கண்மணியை விசாரிச்சா, பார்க்கணும்னு ஆசைப்பட்டா, அதான் பங்க்‌ஷன் நடக்க போகுதுன்னு வரச் சொன்னேன். தேவையில்லாம எல்லாத்துக்கும் கோபப்படாம போய் வேலையை பாருங்க,” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவனது அலைபேசி இசைக்க, அந்த அழைப்பை ஏற்று பேசியவன்,

“ஆர்டர் கொடுத்திருந்த சாப்பாடு ரெடியாகிடுச்சாம், நான் போய் அதை வாங்கிட்டு வந்துட்றேன்.” என்று அவரிடம் கூறியவன்,

“சுதர்மா, என்னோட கொஞ்சம் வா,” என்று சுதர்மனையும் அவனுடன் அழைத்து சென்றான்.

அதனால் நதி தனியாக நின்றிருக்க, சிந்தாமணியோ கண்மணியின் புகுந்த வீட்டில் அவர் வயதையொத்த இரண்டு பெண்மணிகள் இருக்கவும், அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். இதுதான் சரியான நேரம் என்பதை உணர்ந்த சரஸ்வதி, நதியின் அருகே சென்றவர், “உன்கிட்ட கொஞ்சம் பேசணும், அந்தபக்கம் வா,” என்று அவளை அழைத்தார்.

என்னவாக இருக்கும் என்று நதியின் மனதில் யோசனை ஓடினாலும் அவரின் பின்னால் சென்றாள். யாருமில்லாத இடமாக பார்த்து அவளை அழைத்துக் கொண்டு போனவர், “ஆமாம் உன்னோட மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? எதுக்கு இங்க வந்த? எந்த முகத்தை வச்சிக்கிட்டு உன்னால இங்க வர முடியுது?

என் பையனை பிடிக்கலன்னு அவன்கிட்ட சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்திட்டல்ல, அப்புறம் இன்னும் என்ன வேணும் உனக்கு? என் புருஷனும் மகனும் இளிச்சவாயங்க, அவங்க தயவால தான் உங்க குடும்பம் ஓடுச்சு, என் புருஷனா பார்த்து அந்த வீட்டை கொடுக்கலன்னா நீங்க அப்பவே நடுத்தெருவில் நின்னுருக்கணும் தெரியுமா? என் மகனும் அப்பாவை போலவே இருப்பதால் அவனை ஏமாத்தி நீ உனக்கு வேண்டிய படிப்பை படிச்சிட்டு, அவனை வேணாம்னு கைகழுவிட்ட,

இப்போ திரும்ப என் மகனோட வண்டியில் ஜோடி போட்டுட்டு போறதுக்கும், அவன் கூப்பிட்டான்னு இங்க வரதுக்கும் என்ன காரணம்? புல்லட்ல போனது பத்தாதுன்னு காரில் அவனோட சுத்தணும்னு கார் வாங்க சொல்லியிருக்க, என்ன பெரிய படிப்பு படிச்சிட்ட, அதுக்கேத்த மாப்பிள்ளை பார்த்து சீர் செனத்தியோட கல்யாணம் செய்துக் கொடுக்க ஒரு இளிச்சவாயன் வேணும், அதுக்கு புதுசா எவனும் கிடைக்கமாட்டான்னு என் மகனை திரும்ப ஏமாத்த பார்க்கறீயா? இதுக்கு வேற பிழைப்பு பிழைக்கலாம்,” என்று அவர் சொல்ல நதி கூனி குறுகி போனாள்.

“அம்மா, என்னம்மா இதெல்லாம்?” என்று கேட்டப்படி கண்மணி அங்கு வந்து நின்றாள்.

ஆம் அன்னை நதியை அழைத்து செல்வதை கவனித்துக் கொண்டிருந்தவள், நலங்கு வைத்து முடித்ததும், நேராக இவர்களை தேடி இங்கு வந்தவள், தன் அன்னை கடைசியாக பேசியதை கேட்டு தான் இப்படி பேசினாள்.

“அம்மா வாயிருக்குன்னு கண்டபடி பேசாதம்மா, ஒரு கல்யாணம் ஆகாத பொண்ணுக்கிட்ட பேசறோம்னு தெரிஞ்சு பேசு, இன்னைக்கு கோபத்தில் வார்த்தையை விட்டுட்டு, அப்புறம் தப்பு செய்திட்டோம்னு யோசிக்கிறதில் பிரயோஜனமில்லை,” என்று கண்மணி சரஸ்வதியை கடிந்துக் கொள்ள, அவர் அமைதியாக நின்றிருந்தார்.

அடுத்து நதியிடம் திரும்பியவள், “உன்னை யாரு இங்க வரச் சொன்னது நதி?” என்று சரஸ்வதி கேட்ட அதே கேள்வியை அவளும் கேட்டாள்.

அந்த கேள்வியில் நதி அவளை அதிர்ச்சியாக பார்க்க, “இங்கப்பாரு அண்ணன் கூப்பிட்டு தான் நீ வந்தன்னு எனக்கு புரியுது. ஆனா நீ எங்க அண்ணனிடமிருந்து விலகியிருப்பது தான் நல்லதுன்னு நான் நினைக்கிறேன். வெளியில் எனக்கு எந்த பாதிப்புமில்லன்னு அண்ணன் காட்டிக்கிட்டாலும், அது உள்ள எவ்வளவு உடைஞ்சு போயிருக்குன்னு எங்களுக்கு தான் தெரியும்,

அதை இன்னும் அதிகப்படுத்தறது போல நீ திரும்ப என் அண்ணனோட பழகறதை நிறுத்திக்கோ, நீ விரும்பினது  உனக்கு கிடைச்சிடுச்சுல்ல, அப்புறம் உனக்கு என்னத்தான் வேணும்,” என்று அவள் கோபமாக பேச,

“உங்க அம்மா கொஞ்சம் கடினமா கேட்டதை, நீ கொஞ்சம் மென்மையா கேட்கிற, அதான் வித்தியாசம். ஆனா இந்த கேள்விக்கு என்ன பதில் சொல்றதுன்னு தான் தெரியல, அழையா விருந்தாளின்னு தெரிஞ்சும் நான் இங்க வந்தது உன்னை ஒருமுறை பார்க்க தான், பார்த்துட்டேன். அதுபோதும்,

உன் அண்ணனுக்காக என்மேல நீ கோபப்பட உனக்கு எல்லாம் உரிமையும் இருக்கு, அதேபோல என்னோட ஃப்ரண்டா எனக்காகவும் நீ யோசிப்பன்னு நான் எதிர்பார்த்தது தான் என்னோட தப்பு, நீங்கல்லாம் நான் சுயநல்வாதி நன்றிக்கெட்டவன்னு நினைக்கறீங்க, ஆனா நான் அப்படி ஆகிட கூடாதுன்னு போராடினது எனக்கு தான் தெரியும், ஆனா விதி என்னை இப்படி ஒரு சூழ்நிலையில் கொண்டு வந்து நிறுத்திடிச்சு, இப்படியான பேச்சுக்களை இன்னும் எவ்வளவு நாள் கேட்கப் போறேனோ, இதில் எனக்கு இன்னும் வேற என்ன வேண்டியிருக்கும், 

இனி எந்தவிதத்திலும் உங்களுக்கு தொந்தரவா இருக்கமாட்டேன். உன்னோட அண்ணனிடமிருந்தும் நான் விலகியே இருக்கேன் போதுமா?” என்றவள் அங்கிருந்து செல்லப் பார்க்க, சிந்தாமணி அங்கு நின்றிருந்தார்.

கண்மணி வரும்போதே நதி அங்கு இல்லை எனபதை கவனித்தவர், அவள் பின்னேயே வந்தவர், சரஸ்வதி பேசியதிலிருந்து அனைத்தையும் கேட்டுவிட்டார். அவரை கண்டு மூவரும் அதிர்ந்து நிற்க,

“நான் ஒரு பைத்தியக்காரி, என் தம்பி இருக்கவரை தான் இந்த வீட்டில் எனக்கு மதிப்பு மரியாதையும்னு தெரியாம திரும்ப ஒரு சந்தர்ப்பம் கிடைச்சா எல்லாத்தையும் சரி செய்திடலாம்னு அழையா விருந்தாளியா வந்தேன் பாரு, என்னை எதை கொண்டு அடிச்சாலும் தகும்,” என்று அவர் சொல்ல,

“சித்தி, அத்தை,” என்று சரஸ்வதியும் கண்மணியும் சமாதானம் பேச முயற்சிக்க,

“நீங்க எதுவும் சொல்ல வேண்டாம், இதுவரை பேசினதெல்லாம் போதும், உங்க தயவில் இருந்தோம்னு என்ன வேணாம் பேசலாம்னு இல்லை புரிஞ்சுதா? அந்த வீடும், தோப்பும்  எங்க பூர்வீக சொத்து, அதில் எனக்கும் பாகம் இருக்கு, நானா அதை உரிமையா கேட்கறதுக்கு முன்ன, என் தம்பியே அந்த வீட்டை எனக்கு சேர வேண்டிய பாகமா  கொடுத்துட்டானே தவிர, சும்மா ஒன்னும் தூக்கி கொடுக்கல,

அதேபோல இன்பாக்கு இவளை கட்டிக் கொடுக்கணும்னு நான்தான் சொல்லிட்டு இருந்தேன். இல்லன்னு சொல்லமாட்டேன். ஆனா படிக்கிற பொண்ணை பொண்ணு கேட்டு வந்தது யாரு, அப்பவே இவ கல்யாணம் வேண்டாம்னு எங்கக்கிட்ட கெஞ்சி கேட்டு அழுதா, ஆனா அவளை எப்படியோ நாங்க சம்மதிக்க வச்சோம், பிடிச்ச படிப்பை கூட தூக்கி போட்டுட்டு எங்களுக்காக இந்த கல்யாணத்துக்கு தயாரா நின்னா,

அப்போதும் இன்பா தான் இவ படிக்கணும், அப்புறம் தான் கல்யாணம்னு சொன்னான். அதுக்குப்பிறகும் இந்த கல்யாணத்தை நிறுத்தினான். அதுக்கு இவளுக்கு சம்மந்தமே இல்லன்னு சொல்ல மாட்டேன். ஆனா முழுக்க காரணம் இவதான்னு பேசறது கொஞ்சம் கூட நியாயமில்ல, என்னமோ நீங்க லட்சம் லட்சமா செலவு செஞ்சு அதில் படிச்சு என்னோட பேத்தி கோடி கோடியா சம்பாதிக்கிற மாதிரி பேசறீங்க,

இனி இந்த வீட்டு வாசப்படியை நானோ, இல்லை என் குடும்பமோ ஒருபோதும் மிதிக்க மாட்டோம், இதுவரைக்கும் எங்களுக்கு செஞ்சதுக்கு ரொம்ப நன்றி.” என்று கையெடுத்து கும்பிட்டவர்,

“வா நதி கிளம்பலாம், சுதர்மன் எங்க போயிட்டான். அவனுக்கு போன் போட்டு கொடு, திரும்ப இந்த வீட்டுக்கு வர வேண்டாம்னு சொல்லு, இல்ல கொடு நானே பேசறேன்.” என்றபடி சிந்தாமணி பேத்தியை கைப்பிடித்து அழைத்துக் கொண்டு அந்த வீட்டிலிருந்து வெளியேறினார்.

சங்கமிக்கும்..