US 5

உன்னில் சங்கமித்தேன் 5
ஊரில் அவளுக்கு தெரிந்து நான்கைந்து பேர் புல்லட் வண்டி வைத்திருக்கிறார்கள். அப்படியிருக்க வருவது இன்பசாகரன் தான் என்று ஏன் நதிவதனாவிற்கு தோன்ற வேண்டும்? ஒருவேளை நேற்றிலிருந்து அவனைப்பற்றியே நினைத்திருந்ததனாலா? தெரியவில்லை. அந்த நினைவை ஒதுக்கி அவனை பார்த்தாள். தலைக்கவசம் போட்டிருந்தாலும் வருவது அவன் தான் என்று அவளுக்கு நன்றாகவே தெரிந்தது.
அப்போது நேற்றைய பிரச்சனை மட்டுமல்ல, பழைய விஷயங்களும் அவளுக்கு நினைவிற்கு வர, நியாயமாக எல்லாம் உன்னால் தானே? என்று அவன் மீது கோபம் எழுந்திருக்க வேண்டும், ஆனால் அவன் மனதை அறிந்ததாலோ என்னவோ, அவளுக்கு குற்ற உணர்வு தான் அதிகம் தோன்றியது.
ஆனால் அவனுக்கு அவள் மீது கோபமோ வருத்தமோ எதுவுமில்லை போல், அவனும் அவளை பார்த்துவிட்டவன், அருகில் வந்ததும் வண்டியை நிறுத்தி, தலைக்கவசத்தை கழட்டியவன், வண்டியில் அமர்ந்தபடியே, “எப்படியிருக்க நதி, நேத்து தான் நீ வர விஷயத்தை சுதர்மன் சொன்னான். இன்னைக்கே உன்னை பார்ப்பேன்னு நினைக்கல, என்ன சரியா சாப்பிட்றதில்லையா? இளைச்சு போன மாதிரி இருக்க,” என்று நலம் விசாரிக்க,
“அப்படியெல்லாம் எதுவுமில்ல, நான் நல்லா தான் இருக்கிறேன்.” என்று அவள் பதில் கூறினாள்.
“சுதர்மன் நேத்து எல்லா விவரமும் சொன்னான். உனக்கு இங்க சென்னையிலேயே வேலை கிடைச்சிருக்காமே, கடைசியா நீ பட்ட கஷ்டத்துக்கு பலன் கிடைச்சிடுச்சு, நீ விரும்பின மாதிரியே இஞ்சினியர் படிச்சு முடிச்சு, இப்போ ஒரு நல்ல வேலைக்கும் போகப் போற, உன்னை பார்க்கும்போது எனக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கு,” என்று அவன் சொன்னது மோலோட்டமாக சொன்னதில்லை. மனதிலிருந்தே அந்த வார்த்தைகள் வந்திருக்கிறது.
அதேபோல் அவன் நலம் விசாரித்ததும் கூட ஏதோ கடமைக்காக இல்லாமல் அவள் மீதிருக்கும் அக்கறையில் தான் கேட்கிறான். இப்படியான வார்த்தைகளை தான் தன் குடும்பத்தில் உள்ளவர்களிடம் அவள் வந்ததிலிருந்து எதிர்பார்த்தது. ஆனால் அவர்கள் யாரிடமும் வராத வார்த்தைகளை இவனிடமிருந்து கேட்கிறாள்.
இதில் இந்த திருமணம் நடந்தால் என்ன? நான் இறந்தால் என்ன? எல்லாம் ஒன்று தான் என்று அவனிடமே சொல்லியிருக்கிறாள். அப்போதும் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் பேசுபவனை என்னவென்று சொல்வது. இவள் இப்படி ஒரு நிலையில் இருக்க இவனை தவிர வேறு யார் காரணமாக இருக்க முடியும், ஆனால் அதை வெளிப்படையாக அவனிடம் கூற முடியாமல் மௌனமாக இருந்தாள்.
இன்பாவும் அதை எதிர்பார்க்கவில்லை போலும், “ஆமாம் காலையில் எங்க கிளம்பிட்ட?” என்று அவன் அடுத்த கேள்வியை கேட்க,
அவள் முழு விவரத்தை சொல்லவும், “முதல்நாள் வேலைக்குப் போற, கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கக் கூடாது,” என்று அவளிடம் கடிந்துக் கொண்டவன்,
“நான் ஒரு வேலையா தாம்பரம் வரை போயிட்டிருக்கேன். அங்க ஒருத்தரை பார்க்கணும், அவரை காலையில் போய் பார்த்தா முடியும், அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன். அப்படியே உன்னை உன்னோட ஆஃபிஸில் விட்டுட்றேன். வண்டியில் ஏறு,” என்று அவளிடம் கூறினான்.
‘என்ன சர்வ சாதாரணமா வண்டியில் ஏறுன்னு சொல்றான். நேத்து இவன் சிக்கனுக்கு காசு கொடுத்ததுக்கே அம்மா அப்படி கத்தினாங்க, அதில்லாம இவன் கூட வண்டியில் போனா இவனோட அம்மா என்ன நினைப்பாங்க, ஏற்கனவே அவங்க ஜாடை மாடையா தங்களை பேசுவதா அம்மா சொன்னாங்களே, இவன் இதெல்லாம் யோசிக்க மாட்டானா?” என்று அவள் யோசிக்க,
“என்ன நதி என்ன யோசனை, உனக்கு சீக்கிரமா வேலைக்கு போகணுமா இல்லையா?” என்று கேட்டான்.
“இல்ல கொஞ்ச நேரத்தில் பஸ்ஸோ இல்லை ஆட்டோவோ வந்திடும், நான் அதிலேயே போயிக்கிறேன்.” என்று தயக்கத்தோடு அவள் பதில் கூறினாள்.
அவள் எதற்காக தயங்குகிறாள் என்பது புரிந்தவனாக, “இங்கப்பாரு நதி, நாம உறவுக்காரங்க, நடந்த விஷயத்துக்காக பார்த்தா முகத்தை திருப்பிட்டு போறது நல்லாவா இருக்கும், பெரியவங்க தான் புரியாம நடந்துக்கிறாங்க, ஆனா எதுக்காக இதெல்லாம் நடந்துச்சுன்னு நமக்கு தெரியுமில்லையா? நான் தெளிவான மனசோட தான் இந்த முடிவெடுத்தேன்.
எனக்கு யார்மேலேயும் எந்த கோபமோ வருத்தமோ இல்லை. அதனால நம்ம ரெண்டு குடும்பமும் சுமூகமா இருக்கணும்னு நினைக்கிறேன். இந்த பிரச்சனைக்கு காரணமான நாம தானே இதை சரி செய்யணும், நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா?” என்று கேட்டான்.
அவன் சொல்வது சரிதான், ஆனால் அனைத்திற்கும் அவளை மட்டுமே காரணம் சொல்பவர்கள் இதையெல்லாம் புரிந்துக் கொள்வார்களா? என்ற கேள்விக்கு பதில் தெரியவில்லை. ஆனாலும் அவன் சொல்வதற்கு புரிந்ததாக தலையாட்டி வைத்தாள்.
“அப்போ வண்டியில் ஏறு, ஊருக்குள்ள போன ஆட்டோ எப்போ வருமோ, சில சமயம் அங்கேயே சவாரி ஏறிப்பாங்க, அடுத்த பஸ் சரியான நேரத்துக்கு வருமாங்கிறது சந்தேகம் தான்,” என்று சொல்ல, அவளுக்கு இன்னுமே அவன் வண்டியில் ஏற தயக்கமாக இருந்தது.
“நீ என்ன என்னோட வண்டியில் வந்ததே கிடையாதா? இப்படி தயங்குற,” என்று அவன் கேட்கவும்,
‘ஆமாம் சென்றிருக்கிறாள் தான், ஆனால் அப்போதே அவனோடு தயக்கத்துடன் தான் செல்வாள். அப்படியிருக்க இப்போது மட்டும் எப்படி?’ என்று அவள் யோசிக்க,
“சரி உனக்கு வர விருப்பமில்லன்னா விடு, இரு எனக்கு தெரிஞ்ச ஆட்டோக்காரர் ஒருத்தர் இருக்காரு, அவர் எங்க இருக்கார்னு கேட்கிறேன்.” என்று அவன் சட்டை பாக்கெட்டிலிருந்து அலைபேசியை எடுக்க,
‘இப்போ ஆட்டோவில் போனாலும் இவனே தான் காசு கொடுப்பான். ஏற்கனவே எனக்கு இவன் அதிகம் செய்துவிட்டான். இதில் இன்னும் இவனுக்கு செலவு வைக்க வேண்டாம்’ என்று நினைத்தவள்,
“இல்ல வேண்டாம், நான் உங்க வண்டியிலேயே வரேன்.” என்றாள்.
அதன்பின் வண்டியில் அவள் ஒருபக்கமாக அமர போக, “பக்கமா போறதா இருந்தா பரவாயில்லை, நாம தூரமா போகணும், அதனால ரெண்டுப்பக்கமா காலை போட்டு உட்காரு,” என்று அவன் கூறவும்,
‘என்ன கொஞ்சம் விட்டா ஓவரா தான் போறான். இந்த நேரத்தை அவனுக்கு சாதகமா பயன்படுத்திக்க நினைக்கிறானா?’ என்று அவளுக்கு தோன்றினாலும், அவன் சொல்வதும் நியாயமாக தெரியவே அவன் சொன்னது போல் தான் அமர்ந்தாள்.
என்ன ஒருபக்கமா அமர்ந்திருந்தால், வண்டியை பிடித்தப்படி ஏறலாம், இப்போது இருபக்கமும் கால் போட்டு அமர்வதால் அடிக்கடி இருச்சக்கர வாகனத்தில் பயணம் செய்யாததால், அவனை பிடித்தப்படி தான் ஏறி அமர வேண்டியிருந்தது. அது அவளுக்கு இன்னும் சங்கடத்தை கொடுத்தது. ஆனால் அவனது செய்கைகளை பார்த்தால் அவன் இதை அவனுக்கு சாதகமாக்கி கொண்டது போல் தெரியவில்லை. தலைக்கவசத்தை மாட்டியவன், “போலாமா?” என்று கேட்டப்படி வண்டியை இயக்கினான்.
இன்பா சொன்னது போல் அவனுடன் வண்டியில் சென்றாலும் அடிக்கடியெல்லாம் தனியாக சென்றதில்லை. எட்டாம் வகுப்பு வரை அவர்கள் ஊர் பள்ளியில் தான் அவளும் கண்மணியும் படித்தார்கள். ஒன்பதாம் வகுப்பிலிருந்து பக்கத்து ஊரில் உள்ள பள்ளியில் படிக்க வேண்டும், அகத்தியன் இருவருக்குமே சைக்கிள் வாங்கிக் கொடுத்திருக்க, ஒன்றாக போய் வர தான் இருவரும் நெருங்கிய தோழிகள் ஆகினர்.
அப்படியும் சில சமயம் ஏதாவது காரணங்களால் சைக்கிளில் செல்ல முடியாத பட்சத்தில் அகத்தியனோ இல்லை இன்பாவோ இருச்சக்கர வாகனத்தில் அவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வார்கள். அப்போது அகத்தியனாக இருந்தாலும் இன்பாவாக இருந்தாலும் கண்மணி அவர்கள் பின்னால் அமர, அவளோ கண்மணிக்கு பின்னால் அமர்ந்து செல்வாள். இப்படித்தான் பலநாட்கள் நடந்திருக்கிறது.
அப்படியிருக்க அவர்கள் பதினோராம் வகுப்பு படிக்கும் சமயம் அவர்கள் பள்ளியில் ஆண்டு விழா நடக்கவிருந்தது. அதில் கண்மணி தான் வரவேற்பு உரை பேச வேண்டும், அதனால் அவளை புடவை கட்டி வரச் சொல்லி அவர்கள் ஆசிரியர் சொல்லி அனுப்பியிருக்க, “நதி, நாளைக்கு புடவை கட்டிக்கிட்டு சைக்கிளில் போக முடியாது. அதனால் நீ கிளம்பி எங்க வீட்டுக்கு வந்திடு, நாம பஸ்ல போகலாம்,” என்று கண்மணி முன் தினமே பள்ளியில் சொல்லியிருந்தாள்.
அதனால் நதியும் அவர்கள் வீட்டிற்கு செல்ல, கண்மணியோ புடவையுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தாள். உதவி செய்த அவளின் அன்னையும், அவள் செய்த ஆர்ப்பாட்டத்தில் நீயே கட்டிக் கொள் என்று விட்டுவிட்டு போய்விட்டார்கள். பின் நதி தான் அவளுக்கு புடவை கட்ட உதவிக்கு வந்தவள்,
“என்னடீ ரெடியாகியிருப்பேன்னு பார்த்தா, நீ என்னடான்னா மெதுவா கிளம்பற, உன்னை நம்பி பஸ்ல போகலாம்னு வந்தேன். நம்மளால டைம்க்கு பஸ்ஸை பிடிக்க முடியுமா? நான் வேற டான்ஸ் ப்ரோகிராம்க்கு அங்க போய் தான் ட்ரஸ் மாத்தணும்,” என்று கேட்க,
“உன்னோட ப்ரோகிராம் நடுவில் தான், நான்தான் சீப் கெஸ்ட்டை வரவேற்று பேசணும், கவலைப்படாத இன்பா அண்ணன் வீட்டில் தான் இருக்கு, அதுக்கிட்ட கொண்டு போய் விடச் சொல்லியிருக்கேன். சரி சீக்கிரம் டீ,” என்று கண்மணி அவசரப்படுத்த, நதிக்கும் இன்பா கொண்டு போய் விடுவது அப்போது பெரிதாக தெரியவில்லை.
ஆனால் கண்மணி தயாரானதும், “நதி நான் புடவை கட்டியிருக்கேனில்ல, என்னால ரெண்டுப்பக்கமும் கால் போட்டு உட்கார முடியாது. அதனால நீ முன்ன உட்கார்ந்துக்கோ, நான் பின்னாடி உட்கார்ந்துக்கிறேன்.” என்று சொல்லவும்,
“ஹே என்ன விளையாட்றீயா, நேத்தே இதை சொல்லியிருந்தா நான் சைக்கிளில் தனியா போயிருப்பேன் இல்ல, இப்போ இப்படி சொல்ற, இப்போ சைக்கிளில் போனாலும் பஸ்ல போனாலும் லேட்டாகிடுமே, நான் எப்படி டீ உன் அண்ணனுக்கு பக்கத்தில் உட்காருவது?” என்று கேட்டாள்.
“ஏன் நான் உட்கார்ந்து போகலையா? அப்படித்தான்,” என்று கண்மணி பதில் கூற,
“நீ தெரிஞ்சு பேசறீயா? இல்ல தெரியாம பேசறீயா?” என்று நதி கேட்டாள்.
இந்த ஊருக்கு அவர்கள் வந்ததிலிருந்து தன் அத்தை வீடு என்பதால் இன்பா உரிமையாக வீட்டிற்கு வருவான். தன் அன்னையை அக்கா என்று உரிமையாக அழைப்பான். அவளிடம் சுதர்மனிடமும் பாசமாக பேசுவான்.
ஆனால் இப்போதெல்லாம் அதையும் மீறி இன்பா அவளை பார்க்கும் பார்வையில் நதி ஒரு வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறாள். இருவரும் உறவுக்காரர்கள் என்ற பாசத்தையும் தாண்டி அவள் மீது அவனுக்கு ஒரு விருப்பம் இருப்பது நதிக்கு நன்றாகவே தெரிந்தது.
அதற்கு அவனையும் குற்றம் சொல்ல முடியாது. இதற்கு பாட்டியும் ஒரு காரணம். “எனக்கு கொள்ளி வைக்க வேண்டிய ஒரே மகன் எனக்கு முன்னாடியே போய் சேர்ந்துட்டான். இந்த அக்காவுக்காக நீ இந்த குடும்பத்துக்கு நிறைய செய்ற, ஆனா நம்ம காலத்துக்கு பிறகு இவங்க நிலை எப்படியிருக்குமோன்னு நினைச்சா எனக்கு கவலையா இருக்கு, பேசாம உன் மகனுக்கு என் பேத்தியை கட்டி வச்சிடு, அப்புறம் இவங்களை பத்தி நான் கவலைப்பட தேவையேயில்லை.” என்று அகத்தியினடம் அனைவர் முன்னிலையிலும் சிந்தாமணி புலம்புவார்.
அது அவன் மனதில் மாற்றத்தை உண்டு செய்திருக்கும் என்பது நதியின் எண்ணம். ஆனால் அவளுக்கு படிக்க வேண்டும், நல்ல வேலைக்கு போக வேண்டும், மற்றவரின் தயவில்லாமல் வாழும்படியான நிலைக்கு குடும்பத்தை கொண்டு வரவேண்டும், இதுவே அவள் மனம் முழுவதும் நிரம்பியிருந்ததால், அவள் இதுபோன்ற விஷயங்களுக்கு மனதை அலைபாய விட்டதில்லை. அதனாலேயே இன்பாவின் மனது தெரிந்தும் தெரியாதது போல் காட்டிக் கொண்டாள்.
அப்படியிருக்க கண்மணி இப்படி சொல்லவும், ஒருவேளை அவளும் அவன் சகோதரனின் மனதை அறிந்து தான் இப்படி பேசுகிறாளோ என்று நதிக்கு தோன்றவே அப்படி கேட்டாள். ஆனால் கண்மணியோ, “நீ என்ன சொல்றன்னு எனக்கு புரியல, இதில் என்ன தப்பிருக்கு, நாமல்லாம் உறவுக்காரங்க தானே, அப்புறம் என்ன?” என்று கேட்டாள்.
“என்ன இருந்தாலும் உங்க அண்ணனை எப்படி பிடிச்சிக்கிட்டு போக முடியும்? எனக்கு அது சங்கடமா இருக்கும், பிடிக்காம இருந்தாலும் நான் விழுந்திட மாட்டேனா?” என்று நதி கேட்க,
“நீ அண்ணனை பிடிச்சிக்க வேண்டாம், பின்னாடி இருந்து நானே உன்னை பத்திரமா பிடிச்சிக்கிறேன். இங்கப்பாரு நதி, இப்போதைக்கு வேற ஆப்ஷனே இல்லை. அப்பா இருந்தாலும் பரவாயில்லை. அவரும் வீட்டில் இல்லை. இதுக்குதான் அப்பாக்கிட்ட கார் வாங்கலாம்னு சொல்லுவேன். அவர் இதுவே போதும் ம்மா அப்படின்னு சொல்லி தட்டி கழிச்சிடுவார். ப்ளீஸ் எனக்காக ஒரே ஒருநாள் அட்ஜஸ்ட் செய்துக்கோ,” என்று கண்மணி கெஞ்சினாள்.
“ஆமாம் இப்படி எப்பயாச்சும் ஸ்கூலுக்கு போறதுக்கு உங்க அப்பா கார் வாங்கணுமா?” என்று கேட்டவள், கண்மணி சொன்னதற்கு அரை மனதாக ஒத்துக் கொண்டாள்.
அடுத்து இன்பா வண்டியை எடுக்க வந்தவன், அப்போது தான் கண்மணி புடவை கட்டியிருப்பதை கவனித்தவன், “கண்மணி நீ புடவை கட்டியிருக்கியே, அப்புறம் எப்படி ரெண்டுப்பக்கம் கால்போட்டு உட்காருவ,” என்று கேட்டான்.
“இல்ல ண்ணா, நான் உன் பின்னாடி உட்கார போறதில்ல, நதி தான் உன் பின்னாடி உட்காருவா,” என்று கண்மணி பதில் கூற,
“என்ன நதி உட்கார போறாளா? நீ தெரிஞ்சு தான் சொல்றீயா? இல்லை தெரியாம சொல்றீயா?” என்று அவனும் அதே கேள்வியை கேட்டான்.
“என்ன ரெண்டுப்பேரும் ஒரேமாதிரி கேட்கறீங்க, நானே அவளை ரொம்ப கஷ்டப்படுத்தி சம்மதிக்க வச்சிருக்கேன். நீ வேற திரும்ப ஆரம்பிக்காத, எங்களுக்கு நேரம் ஆச்சு, சீக்கிரம் வண்டியை எடு,” என்று கண்மணி அவசரப்படுத்தினாள்.
அவனும் ஒத்துக் கொண்டவன், வண்டியை இயக்க, என்னதான் அவனை பிடித்தப்படி போகக் கூடாது என்று நினைத்தாலும், ஏறும்போது கண்மணியை பிடித்தப்படி ஏறுவது போல் அவனை பிடித்தப்படி ஏறிவிட்டவள், தான் செய்த காரியத்தை நினைத்து தன்னை நொந்துக் கொண்டாள்.
அடுத்து அந்த பயணம் முழுவதும் அவன் தன்னைப்பற்றி என்ன நினைத்திருப்பானோ என்ற நினைத்தப்படி இருந்தாள். இதற்கும் இன்பாவும் சரி கண்மணியும் சரி அவர்கள் ஓரமாக ஒதுங்கி அவளுக்கு அதிக இடம் கொடுத்தனர். அவள் சங்கடப்பட கூடாதென்று, ஆனாலுமே அவள் ஒருவித சங்கடத்துடன் தான் அந்த பயணத்தை மேற்கொண்டாள்.
இப்போது அது சட்டென அவளுக்கு ஞாபகம் வந்தது. அதன்பின்னர் சிலமுறை அவனுடன் தனியாகவே வண்டியில் பயணம் செய்திருக்கிறாள் தான், ஆனால் அவனுக்கு மிக அருகில் செய்த அந்த பயணம் ஏனோ அவள் நினைவிலிருந்து நீங்க மறுக்கிறது.
வண்டி கம்பியை பிடிக்க வேண்டுமென்பதை கூட மறந்து பழைய விஷயங்களை அவள் யோசித்தப்படியே வர, திடீரென ஒரு நாய் குறுக்கே வரவும், இன்பா வண்டியில் பிரேக் போடவும், பிடிமானம் இல்லாமல் இருந்தவள், மொத்தமாக அவன் மீது சரிந்தாள்.
உடனே இன்பா வண்டியை ஓரமாக கொண்டு சென்று நிறுத்தியவன், “சாரி நதி, நாய் வரவே பிரேக் போட்டேன். நீ வண்டி கம்பியை பிடிச்சிருப்பன்னு நினைச்சேன். உனக்கு ஒன்னும் ஆகலையே,” என்று கேட்டான்.
அவன் மீது மோதியது அவளுக்கு சங்கடமாக தான் இருந்தது. ‘ச்சே கம்பியை பிடிச்சிட்டு வந்திருந்தா இந்த அளவுக்கு மோதியிருக்க வேண்டாம், என்னைப்பற்றி இவன் என்ன நினைத்திருப்பான்? கொஞ்சம் கவனமா வரக் கூடாதா நதி,” என்று மனதில் பேசிக் கொண்டவள்,
“இல்ல சாரி நான்தான் ஏதோ யோசிச்சுக்கிட்டே வந்ததில் கம்பியை பிடிச்சுக்காம வந்துட்டேன். ஒன்னும் பிரச்சனையில்லை, நீங்க வண்டியை எடுங்க,” என்றாள்.
அதன்பின் இன்பா வண்டியை இயக்க, சில நிமிடங்கள் அமைதியாக வந்தவளுக்கு பழைய விஷயங்களை பற்றி நினைத்ததில் கண்மணியை பற்றியும் வரவும், அவளை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டுமென்ற ஆவல் தோன்றவே, “கண்மணி எப்படி இருக்கா?” என்று அவனிடம் கேட்க,
“பரவாயில்லை இப்போதாவது உனக்கு கண்மணியை பத்தி கேட்க தோனுச்சே, எங்க அவளை மறந்துட்டியோன்னு நினைச்சேன்.” என்று அவன் கேட்டான்.
“அப்படியெல்லாம் இல்லை, அவளுக்குத்தான் என்மேல இருக்க கோபம் குறையல போல, ஆரம்பத்தில் அவக்கிட்ட போன்ல பேச முயற்சித்து, அவ பேசலன்னதும் விட்டுட்டேன். சுதர்மனிடம் அப்பப்போ விசாரிச்சுப்பேன். இப்போ நேத்து தானே ஊருக்கு வந்தேன். இனி தான் கேட்டு தெரிஞ்சுக்கணும்னு இருந்தேன்.” என்று அவள் பதில் கூற,
“அவ நல்லா இருக்கா, இப்போ கன்சீவ் ஆகியிருக்கா, 4 மாசம் முடிஞ்சு 5வது மாசம் ஆரம்பிச்சிருக்கு, அதனால அவளுக்கு பூ முடிச்சு வளையல் போடணும்னு சொல்லி அம்மா அவளை இங்க வரவழைச்சிருக்காங்க, நேத்து தான் அவளும் வந்தா,” என்று இன்பா விஷயத்தை கூறினான்.
“அப்படியா ரொம்ப சந்தோஷம்,” என்றவளுக்கு உடனே கண்மணியை பார்க்க வேண்டுமென்று தோன்றியது. ஆனால் அது எப்படி முடியும்? என்று நினைத்து அவள் அமைதியாகிவிட,
“முதலில் வெள்ளிக்கிழமை தான் விசேஷத்தை வைக்கறதா இருந்துச்சு, அப்புறம் மாப்பிள்ளைக்கு லீவ் கிடைக்கலன்னு ஞாயித்துக் கிழமை மாத்தியாச்சு, உனக்கு ஞாயித்துக் கிழமை லீவ் தானே, நீயும் விசேஷத்துக்கு வாயேன்.” என்று அவன் அழைக்க,
“நானா? நான் எப்படி வர முடியும்?” என்று அவள் கேட்டாள்.
“காலால் நடந்து தான், ஒருவேளை பறந்து வருவியோ,” என்று அவன் கேலி செய்ய,
‘இந்த ஜோக்குக்கு சிரிக்கணுமா?’ என்று மனதில் கேட்டுக் கொண்டவள்,
“இல்லை, உங்க அம்மா என்மேல கோபமா இருக்காங்க, கண்மணியும் தான், அப்புறம் எப்படி வர முடியும்?” என்று கேட்டாள்.
“கண்மணி உன்னோட ஃப்ரண்ட் தானே, அவ கோபமா இருந்தா அப்படியே விட்டிடுவியா? அவளை சமாதானம் செய்ய முயற்சிக்க மாட்டீயா? நான் என்ன சொன்னேன். நம்ம ரெண்டுக்குடும்பமும் இப்படியே இருக்கணும்னு நினைக்கிறீயா? நாம தானே அதை சரிசெய்ய முயற்சிக்கணும்,” என்று அவன் சொல்லவும்,
“சரி அம்மாக்கிட்ட கேட்டு பார்க்கிறேன். அவங்க ஒத்துக்கிட்டா கண்மணியை பார்க்க வரேன்.” என்று அவளும் ஒத்துக் கொண்டாள்.
அடுத்து சில நிமிடங்கள் மௌனமாக கழிய, இவனிடம் கடனை அடைப்பதை பற்றி இப்போதே சொல்லிவிடலாமா? இதற்குபிறகு இவனிடம் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமோ என்னமோ? என்று யோசித்தவள், “உங்கக்கிட்ட இன்னொரு முக்கியமான விஷயம் பேசணும்,” என்று கூற,”
“என்ன?” என்று அவனும் கேட்டான்.
பிறகு தான் வண்டியில் சென்று கொண்டிருக்கும்போதா இதை பேசுவது என்று நினைத்தவள், “இல்லை, ஒன்னுமில்லை,” என்றாள்.
“முக்கியமான விஷயம்னு சொல்லிட்டு, ஒன்னுமில்லன்னு சொன்னா எப்படி? சொல்ல வந்ததை சொல்லு,” என்று அவன் ஊக்குவிக்க,
“இல்லை, எனக்கு இப்போ வேலை கிடைச்சிருச்சு, அடுத்த மாசத்திலிருந்து சம்பளம் வந்துடும், நான் இவ்வளவு தூரம் வந்ததுக்கு நீங்களும் ஒரு காரணம். நீங்க என் படிப்புக்காக செலவு செய்த பணத்தை மாசம் மாசம் நான் கொஞ்சம் கொஞ்சமா கொடுக்கணும்னு நினைக்கிறேன். அதை நீங்க வாங்கிக்கணும்,” என்று அவள் கூறவும், அவனிடம் எந்த பதிலுமில்லை.
வண்டி இன்னும் கொஞ்சம் கூடுதல் வேகமெடுத்ததிலேயே அவனது கோபம் அவளுக்கு நன்றாக புரிந்தது. இப்போதே இதை பேசியிருக்க வேண்டாமோ என்று நினைத்தவள், ஆனால் முதல் மாத சம்பளம் வாங்கியதும், அப்போது கடன் என்று போய் கொடுப்பது ஒருவிதமான அநாகரிக செயல். முன்கூட்டியே அவனிடம் விஷயத்தை சொல்லிவிட்டால் அது தவறில்லை என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டாள்.
அவன் ஏதாவது கூறுவான் என்று எதிர்பார்த்தவள், “நான் சொன்னது கேட்டுச்சா?” என்று கேட்டாள்.
“கேட்டுச்சு, ஆனா அதுக்கென்ன அவசியம்? நான் கடனா கொடுக்கலையே,” என்று அவன் கூற,
“ஆனா நீங்க எதை நினைச்சு கொடுத்தீங்களோ அதுவும் நடக்கலையே,” என்று அவள் பதில் கூறினாள்.
“அதுக்காக கொடுத்த பணத்தை வட்டிக்காரன் மாறி திரும்ப வசூல் செய்ற அளவுக்கு நான் கேவலமானவன் இல்ல,” என்று அவன் கோபமாக கூற,
“ஆனா என்னை எல்லாம் தப்பா நினைக்கிறாங்களே, ஒருவேளை இந்த பணத்தை நான் திருப்பி கொடுத்தா, உங்க வீட்டில் என்னை புரிஞ்சிக்க வாய்ப்பு இருக்குல்ல,” என்று அவளும் விடாமல் பதில் கூறினாள்.
“நீ இந்த பணத்தை திருப்பி கொடுக்க நினைச்சா, நீ வேலைக்கு போற திமிர்ல தான் இப்படி நடந்துக்குறன்னு அதுக்கும் தப்பா தான் உன்னை நினைப்பாங்க, இந்த நேரம் என் அப்பா இருந்திருந்தா நீ இப்படி ஒரு வார்த்தையை சொல்லியிருப்பியா? இல்லை அவர் தான் சொல்ல விட்ருப்பாரா? கடைசி வரைக்கும் அக்கா வீட்டுக்கு தன்னோட ஆதரவு இருக்கணும்னு அவர் நினைச்சாரு,
அதனால நீ இதை கடனா நினைக்கணும்னு எந்த அவசியமுமில்ல, முதலில் வேலைக்கு போய் உன்னோட குடும்பத்தின் தேவைகளை நிறைவேத்து, பிற்காலத்துக்கு சேமிச்சு வை. அப்படி நான் செலவு செய்த பணத்தை கடனா நினைச்சா, அந்த பணத்தில் உன்னை மாதிரி படிப்பில் ஆர்வம் இருப்பவங்களுக்கு உதவி செய்.
நீ சொல்றது போல உன்மேல என்வீட்டில் இருக்கவங்க கோபமா இருக்காங்க தான், ஆனா அதுக்காக நீ இந்த பணத்தை திருப்பி தரணும்னு இல்லை. நான் வேற பெண்ணை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சா, அப்புறம் அவங்க உன்மேல எதுக்கு கோபப்பட போறாங்க, எனக்கு வீட்டில் தீவிரமா பொண்ணு பார்த்துட்டு இருக்காங்க, எனக்கு பிடிச்ச மாதிரி பொண்ணு அமைஞ்சதும் கல்யாணம் முடிவாகிடும், அப்புறம் இதெல்லாம் அவங்களுக்கு பெரிய விஷயமா தெரியாது போதுமா,” என்று அவன் நீளமாக பேசி முடிக்க,
நியாமாக அவன் சொன்ன விஷயத்திற்கு அவளுக்கு மனதில் நிம்மதி வந்து சேர்ந்திருக்க வேண்டும், ஆனால் அவன் பேச்சை கேட்டு உண்மையில் அவளுக்கு அதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டுமென்று தெரியவில்லை. காதல் என்ற பெயரில் இதுவரை அவளை தொல்லை செய்திருந்தாலோ, அவளுக்கு நடக்கவிருந்த திருமணத்தில் விருப்பமில்லை என்பதை அறிந்து அவளை கட்டாயப்படுத்த முயற்சி செய்திருந்தாலோ கண்டிப்பாக அவனை இன்னேரத்திற்கு அவள் வெறுத்திருப்பாள்.
ஆனால் அவளது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க நினைத்து இந்த திருமணத்தை நிறுத்தியவனுக்கு அது எவ்வளவு வலித்திருக்கும் என்பது அவனை விட அவள் நன்றாக அறிவாள். அப்படியிருக்க அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்வதாக சொல்லவும், அத்தனை விரைவாக மனதை மாற்றிக் கொண்டானா? என்ற கேள்வி அவள் மனதை பெரிதாக அரித்தது.
‘எனன நீ, அவனே இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்துக்க போறதா சொன்னப்பிறகு சந்தோஷப்படாம, அவன் மனசு இவ்வளவு சீக்கிரம் மாறிடுச்சேன்னு வருத்தப்பட்ற, நீ என்னத்தான் நினைக்கிற?” என்று அவள் மனசாட்சி கேள்வி கேட்க, அவளுக்கே அதற்கு பதில் தெரியாமல் அமைதியாக வந்தாள்.
வண்டி அவளது அலுவலகத்து வாசலில் நின்றது கூட தெரியாமல் அவள் அமர்ந்திருக்க, “நதி உன்னோட ஆஃபிஸ் வந்துடுச்சு,” என்று இன்பா கூறவும் தான், அவள் நிகழ்விற்கு வந்தவள், வண்டியை விட்டு இறங்கினாள்.
“என்ன திரும்பவும் யோசனைக்கு போயிட்டீயா? இங்கப்பாரு நடந்ததை யோசிச்சிட்டு இருப்பதால எதுவும் பலனில்லை. இனி என்ன நடக்கப்போகுதோ அதை யோசி. உனக்கு பிடிச்ச படிப்பு, நீ விரும்பின வேலை. அதை விருப்பமா செய். ஆல் தி பெஸ்ட். அப்புறம் வாழ்த்துகள்.” என்று அவன் கைகுலுக்குவதற்காக கைநீட்ட,
அவளும், “ரொம்ப தேங்க்ஸ்,” என்று கூறியப்படி அவனுக்கு கைகுலுக்கினாள். அப்போது தான் அவளது விரல்களை இன்பா கவனித்தான். அவர்கள் நிச்சயத்தின் போது அவளுக்கு அவன் அணிவித்த மோதிரம். அதை அவள் இன்னும் கழட்டாமல் அணிந்திருந்தாள்.
என்னத்தான் அவளுக்கு தன்னை திருமணம் செய்துக் கொள்ள விருப்பமில்லை என்பது புரிந்து ஒதுங்கி போக நினைத்தாலும், அவளது விருப்பம் போல் படித்து வேலைக்கும் போய்விட்டாள். இப்போதாவது அவள் மனதில் மாற்றம் வருமா? என மனதின் ஓரம் ஒரு எதிர்பார்ப்பு அவனுக்கு இருக்கத்தான் செய்கிறது.
இதில் அவள் படிப்புக்காக செலவளித்த பணத்தை கடனாக திருப்பி கொடுப்பதாக அவள் சொன்னபோது, தன்னை அத்தனை அன்னியமாக நினைக்கிறாள் என நினைத்து, அவனுக்கு அத்தனை வலித்தது. அதை வெளிக்காட்டாமல் அவளிடம் சாதாரணமாக பேச அவன் எத்தனை சிரமப்பட்டான் என்பது அவனுக்கு தான் தெரியும், அதனால் தான் வேறொரு பெண் பார்க்கிறார்கள். தனக்கு பிடித்துவிட்டால் உடனே திருமணம் என்றெல்லாம் பேசினான்.
அப்படியிருக்கும்போது அவள் இன்னும் அந்த மோதிரத்தை அணிந்திருக்கிறாள் என தெரிந்ததும் அவனுக்கு அவன் நினைத்திருந்ததையும் மீறி மனதில் மகிழ்ச்சி உண்டானது. அதை இன்னும் கூடுதலாக்குவது போல்,
“அப்புறம் இன்னொரு விஷயம், இவ்வளவு தூரம் என்னை வண்டியில் கூட்டிட்டு வந்து விட்ருக்கீங்க, என்னடா இப்படி சொல்றாளேன்னு நினைச்சுக்காதீங்க, உங்க பிஸ்னஸ் சம்பந்தமா இப்படி தூரமா வந்து நிறைய பேரை சந்திக்க வேண்டியிருக்கு, ஆனா இவ்வளவு தூரம் டூவீலர்ல அடிக்கடி ட்ராவல் செய்றது பாதுகாப்பில்ல, அதனால இதுக்கு வேற ஏதாவது வழி இருக்கா பார்த்துக்கோங்க,” என்றாள்.
அதைகேட்டு இன்னும் மகிழ்ந்தவனாக, “ம்ம் நானும் ஒரு கார் வாங்கணும்னு தான் நினைச்சிட்டு இருக்கேன். சீக்கிரம் வாங்கணும், சரி நேரமாகிட போகுது, நீ உள்ள போ. அப்போ நான் வரட்டுமா?” என்று புன்ன்கைத்தப்படியே கூறியவன், அங்கிருந்து செல்ல,
அவன் சென்ற திசையையே பார்த்தப்படி நின்றிருந்தவளோ, ‘முதல்முறை இவளை கல்லூரியில் சேர்க்கவும் அவன்தான் வந்தான். இப்போது முதல்நாள் வேலைக்கு அவன்தான் அழைத்து வந்திருக்கிறான். ஒருவேளை வாழ்க்கை துணையாகவும் அவனே வந்திருந்தால், அது நன்றாக தான் இருக்குமோ?’ என்று முதல்முறையாக அந்த ரீதியில் யோசித்து பார்த்தாள்.
சங்கமிக்கும்..