US 4

உன்னில் சங்கமித்தேன் 4

மாலை அலமேலு வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவர், மகளை பார்த்ததும், “எப்படி இருக்க? மதியம் சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தீயா? இனி அங்க போற வேலை இருக்காதே, இங்க தானே வேலை பார்க்கணும்,” என்று கடமைக்கு சில கேள்விகளை கேட்க,

அது நதிக்கு வருத்தத்தை கொடுத்தாலும், அன்னைக்கு தன் மீதிருக்கும் கோபம் குறையவில்லை என்பதால் அவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தாள்.

அடுத்து இரவு நேரம் சாப்பிடும் நேரம் வந்ததும், மீதமிருந்த கறிக்குழம்பை பேரன் பேத்தி இருவருக்கும் பகிர்ந்து பரிமாறினார் சிந்தாமணி. சாப்பிட ஆரம்பிக்கும்போதே, “சுதர்மா, இந்தா பணம், நாளைக்கு முதல் வேலையா அந்த கறிக்கடையில் போய் கொடுத்துட்டு வந்துடு,” என்று அலமேலு கொடுக்க,

‘என்ன கடனுக்கு சிக்கன் வாங்கினாங்களா?’ என்று மனதில் நினைத்தப்படி நதி இருவரையும் பார்த்தாள்.

சுதர்மனோ முதலில் என்ன பதில் சொல்வதென்று விழித்தான். சரளமாக பொய் கூற அவனுக்கு வராது. அதனால், “இல்லம்மா பணம் வேண்டாம், கறிக்கடைக்கு பணம் கொடுத்தாச்சு, இன்பா மாமா தான் கொடுத்தாங்க,” என்று அவன் உண்மையை கூறிவிட,

அதைகேட்டு நதி அதிர்ச்சியாகினாள் என்றால், அதற்கு மேல் அலமேலு அதிர்ச்சியாகியவர், “என்னடா சொல்ற, இன்பா பணம் கொடுத்தானா?” என்று கேட்டார்.

“ஆமாம் ம்மா, நான் கறி வாங்க போனபோது இன்பா மாமாவும் அங்க வந்தாங்க, அந்த கடை ஆள் கடனுக்கு கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டிருந்தாரு, இன்பா மாமா தான் அவரை பிடிச்சு திட்டி கறி கொடுக்க சொன்னாங்க, அதில்லாம நான் வேணாம்னு சொல்லியும் அவங்களே பணம் கொடுத்துட்டாங்க,” என்று நடந்ததை கூற,

“ஏற்கனவே அவங்க செஞ்சதுக்கெல்லாம் நன்றி மறந்துட்டோம்னு பேச்சு, இதில் இது வேறயா? சொந்த காசில் கறி வாங்கி சாப்பிட கூட வழியில்ல, இதுக்கும் எங்க காசு தான் வேணும், என் மகன் ஒரு இளிச்சவாயன், அவனை சுரண்டி திங்கறீங்கன்னு அந்த அம்மா பேசும், இதெல்லாம் நமக்கு தேவையா? இதுக்கு தான் நான் காசு வந்ததும் வாங்கிக்கலாம்னு சொன்னேன். கடைக்காரன் தர முடியாதுன்னு சொன்னதும் வந்துட வேண்டியது தானே,” என்று அலமேலு மகனை கேட்க,

“சரி விடு, என்னவோ புதுசா நடக்கறதா, முன்ன இதெல்லாம் என் தம்பியும் இன்பாவும் செய்தது தானே,”  என்று சிந்தாமணி கூறினார்.

ஆமாம் வளவன் இறந்தபின் அவர்களை அகத்தியன் கஷ்டத்தில் தவிக்க விட்டுவிடவில்லை. மாசம் மளிகை சாமான்கள். அவர்கள் வீட்டிற்கு வாங்கும்போது இவர்களுக்கும் காய்கறி, கறி, மீன் என்று அனைத்தும் வாங்கி கொடுத்துக் கொண்டுதான் இருந்தனர். ஆனால் அதெல்லாம் சகோதரிக்காக செய்ததா? இல்லை நதியை தங்கள் வீட்டு மருமகளாக்கி கொள்ள வேண்டுமென்று செய்ததா? அது நதிக்கும் எப்போதும் தோன்றும் கேள்வி தான்,

ஆனால் இந்த திருமணத்தை நிறுத்திய பின்பும் இன்பா இதெல்லாம் செய்ய தயாராக தான் இருந்தான். ஆனால் அலமேலுவிற்கு தான் மனம் கேட்கவில்லை. “போதும் இன்பா, ஏற்கனவே நீங்க செஞ்சதுக்கு பதிலுக்கு ஒன்னும் செய்ய முடியாத நிலையில் இருக்கேன். இதுக்கும் மேல நீங்க செய்றதை சாப்பிட்டுக்கிட்டு இருந்தா மனசாட்சி என்னை கொன்னுடும், கூழோ கஞ்சியோ எங்களால முடிஞ்சதை சாப்பிட்டிக்கிறோம்,” என்று சொல்லி அவர்கள் செய்த உதவிக்கு அலமேலு முற்றுபுள்ளி வைத்துவிட்டார்.

இப்படியிருக்க இன்று கறி வாங்க இன்பா தான் பணம் கொடுத்தான் என தெரிந்து அவர் மகனிடம் கோபப்பட்டு கொண்டிருக்க, மாமியார் அப்படி பேசவும்,

“நீங்க உங்க தம்பி குடும்பத்தை விட்டு கொடுப்பீங்களா? ஆனா எங்காச்சும் பார்த்தா அந்தம்மா ஜாடையா பேசறது எனக்கு தானே கஷ்டமா இருக்கு, வீட்டுக்குள்ளேயே இருக்க உங்களுக்கு அந்த கஷ்டம் எங்க இருந்து புரியும், புரிஞ்சாலும் தம்பி பொண்டாட்டியை விட்டா கொடுப்பீங்க,” என்றவர்,

“எல்லாத்துக்கும் காரணம் இவ தான்,” என்று சாப்பிட்டுக் கொண்டிருந்த நதியை குற்றம் சாட்டினார்.

ஏற்கனவே கடனுக்கு வாங்கியது, பின் இன்பா தான் அதற்கு பணம் தந்தான். என்பதை கேட்டு அவள் சாப்பிடும் உணவு கடினப்பட்டு தொண்டையில் இறங்கிக் கொண்டிருக்க, அன்னை இப்படி சொல்லவும், அடுத்து சாப்பிட கொண்டு போன உணவை அப்படியே தட்டில் போட்டாள்.

ஆனால் அலமேலு அதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல், “இந்த வீட்டு கஷ்டம் இவளுக்கு தெரியாதா? நான் படிக்கப் போறேன். வேலைக்கு போய் இந்த குடும்ப கஷ்டத்தை போக்கிடுவேன்னு பேசுவாளே, வீட்டில் கூழோ கஞ்சியோ என்ன இருக்கோ சாப்பிட வேண்டியது தானே,” என்று மேலும் பேச, அதில் நதிக்கு கோபம் வந்துவிட்டது.

“நானா சிக்கன் வேணும்னு கேட்டேன். ஒன்னும் சாப்பிட இல்ல பட்டினி கிடன்னு சொன்னாலும் கிடந்திருப்பேன். இந்த வீட்டு நிலைமை தெரிஞ்சதால தான் எத்தனை பிரச்சனையிலும் படிப்பை விடாம படிச்சேன். அதோட பலன் தான் நல்ல வேலையும் கிடைச்சிருக்கு, இன்னும் ஒரு மாசம் தான் நமக்கு இந்த நிலைமை. அதுக்குப்பிறகு கண்டிப்பா என்னோட சம்பளத்தில் நம்ம நிலை ஓரளவுக்கு நல்லாவே ஆகிடும்,” என்று அதே கோபத்தோடு அவள் பேச,

“ஆமா உன்னோட சம்பள பணத்தை எதிர்பார்த்து தான் நான் காத்துக்கிட்டு இருக்கப் போறேன் பாரு, அதிலிருந்து ஒத்த பைசா வாங்கமாட்டேன். என்னால உழைக்க முடியும், என்னோட மகன் வேலைக்கு போற வரைக்கும் அதுவே எங்களுக்கு போதும்,” என்று அலமேலு இன்னும் அவர் கோபத்தை தூண்டுவது போல் பேசினார்.

“ஓ உன்னோட பையன் சம்பாதிச்சு கொடுத்தா உனக்கு பரவாயில்லை. பொண்ணு சம்பாத்தியம்னா உனக்கு வேண்டாமா? பொண்ணுன்னா பாரம். அவளை கல்யாணம் செய்து தலை முழுகிடணும், அவ சம்பாதியத்தில் சாப்பிட்றது அசிங்கம்னு நீங்கல்லாம் நினைக்கறவரை பெண்கள் நிலையில் எந்த மாற்றமும் வரப் போறதில்லை. 

இப்போ அப்பா இல்லங்கிற நிலையில் நீயும் தானே வேலைக்குப் போற, யார்க்கிட்டேயாவாது கூலிக்கு வேலைக்கு போகலாம், நான் ஒரு நல்ல வேலையில் சம்பளம் வாங்கறது தப்பா? நீ இப்படித்தான் இருக்கணும், இந்த குடும்பம் இப்படித்தான் இருக்கணும்னு நீ விரும்பினா அதுக்கு நான் என்ன செய்ய முடியும்? எப்படியோ போங்க,

ச்சே இதுக்கு தான் வேற எந்த ஊரிலாவது வேலை கிடைச்சா நல்லா இருக்கணும்னு எதிர்பார்த்தேன். ஆனா ஒன்னு மட்டும் புரியல, நான் செய்த தப்பு தான் என்ன? படிக்கணும், வேலைக்கு போகணும்னு நினைச்சது ஒரு பெரிய குத்தமா? அப்போதும் நீங்க சொன்னதுக்கெல்லாம் தலையாட்டினேன் தானே, ஆனாலும் நீ என்னை புரிஞ்சிக்கலன்னா எப்படி? ஆனா நீ பேசறதை பார்க்கும்போது, நீ என்னை புரிஞ்சிக்கவே வேண்டாம்னு தோனுது,” என்று பேசியவள், சாப்பிடாமேலேயே எழுந்து போக, சுதர்மனும் சகோதரியை சமாதானப்படுத்த அவள் பின்னால் சென்றாள்.

சிந்தாமணியோ, “உனக்கு காலையில் தானே  ஒருவருஷம் கழிச்சு ஊருக்கு வரவக்கிட்ட சிடுசிடுன்னு பேசாதன்னு சொன்னேன். எத்தனை பசங்க பெத்தவங்க படும் கஷ்டத்தை பார்த்தும் பொறுப்பில்லாம இருக்குங்க, நம்ம பொண்ணு அப்படியா? அவளால கல்யாணம் நின்னது எனக்குமே கஷ்டம் தான், நானும் அவமேல கோபமா இருந்தேன். அதுக்காக என்ன செய்ய முடியும்?

நீ என்ன 100 சவரன் நகைப்போட்டு சீர்வரிசையெல்லாம் கொடுத்து பொண்ணுக்கு விமர்சையா கல்யாணம் செய்ய இருந்தீயா? அதை அவ வேண்டாம்னு சொல்லிட்டாளா? நமக்கே வக்கில்லாம தான் படிக்கிற பொண்ணுக்கு கல்யாணம் செய்ய இருந்தோம், அப்படியிருக்க நமக்கு அவமேல கோபப்பட என்ன தகுதியிருக்கு சொல்லு,

படிக்கணும், வேலைக்கு போகணும்னு தான் நதி கல்யாணத்தில் நாட்டமில்லாம இருந்தா, ஆனா இப்போ எல்லாம் அவ விருப்பப்படி நடந்திருக்கு, இனி அவ மனசு மாறலாம், ஆனா நீ இப்படி பேசி அதையும் கெடுத்து விட்டுடாத, இப்படி அவக்கிட்ட வீம்பா கோபத்தில் பேசறதால உனக்கு என்ன கிடைக்கப் போகுது சொல்லு, பாவம் பிள்ளை, சாப்பிட கூட விடாம அப்படி என்ன கோபமோ உனக்கு,” என்று அலமேலுவை திட்ட, அவருக்கு தன் தவறு புரிந்தாலும் இறங்கி வர மனமில்லாமல் மௌனமாக இருந்தார்.

நதியோ நேராக கொள்ளை புறத்தில் சென்று அமர, அவள் பின்னே சென்ற சுதர்மனோ, “சாரி க்கா, எல்லாம் என்னால தான், அம்மா சாயந்தரம் வரும்போது சிக்கன் வாங்கிட்டு வரேன்னு சொன்னாங்க, நான் சொல்லவே தான் பாட்டி உடனே வாங்கிட்டு வரச் சொன்னாங்க, 

அங்க இன்பா மாமா வருவாருன்னு எனக்கு தெரியாது க்கா, நான் சொல்ல சொல்ல கேட்காம பணம் கொடுத்திட்டாரு, நான் செய்யட்டும்?” என்று அவன் கேட்கவும்,

‘ஆமாம் அவன் சொன்னதை கேட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பான்.’ என்று இன்பாவை அறிந்தவளாக அவள் நினைத்துக் கொண்டவள்,

“சரி விடு, நம்ம நிலைமை இப்படி இருக்கும்போது வேறென்ன செய்ய முடியும்? பாட்டி சொன்னது போல இது ஒன்னும் புதுசு கிடையாதே, ஆனா இதெல்லாம் இன்னும் ஒரு மாசத்துக்கு தான், அப்புறம் என்னோட முதல் சம்பளம் வந்ததும் இப்படி சின்ன சின்ன செலவுக்கு கூட நாம யோசிக்க வேண்டியிருக்காது.” என்று சகோதரனுக்கு சமாதானம் கூறினாள்.

“ம்ம் ஆமா க்கா,” என்று ஒத்துக் கொண்டவன்,

“அக்கா, அம்மா கோபம் பத்தி தான் தெரியுமே, நானாவது இன்பா மாமா தான் பணம் கொடுத்தாருன்னு சொல்லாம இருந்திருக்கணும், ஆனா அந்த பணம் அம்மாக்கு வேற செலவுக்காவது உதவுமேன்னு உண்மையை சொல்லிட்டேன். அம்மா தான் கோபம் வந்தா என்ன பேசறோம்னு தெரியாம பேசிடுவாங்க, அது உனக்கே தெரியாதா? ஆனாலும் உன்மேல அவங்களுக்கு பாசம் இருக்கு க்கா, அதனால அவங்க கோபத்தை பொருட்படுத்தாம வந்து சாப்பிடு,” என்றான்.

“கோபத்தில் என்ன வேணும்னாலும் பேசலாமா? நான் என்னமோ அவங்களுக்கு பாரமென்பது போல பேசறாங்க, அந்த அளவுக்கு நான் என்ன தப்பு செய்துட்டேன். அவங்களை சமாதானம் செய்திட முடியும்னு நம்பிக்கையோட வந்தேன். ஆனா அவங்க மனசை மாத்தவே முடியாது போல, அவங்க பேசற பேச்சுக்கு எங்கேயாச்சும் போயிடலாம் போல இருக்கு, ஆனா நான் எங்க போறது, 

அவங்க இவ்வளவு பேசினப்பிறகும் அந்த சாப்பாடை சாப்பிட எனக்கு மனசு வரல, எனக்கு சாப்பாடு வேண்டாம், நீ போய் சாப்பிடு,” என்று நதி பதில் கூற, 

சரி கறிக்குழம்பு சாப்பிட வேண்டாம், அம்மா காலையில் செய்த புளிச்சோறு இருக்கும், அதையாவது வந்து சாப்பிடு,” என்று சொல்லி பார்த்தான். 

“இல்லை எனக்கு பசியே போயிடுச்சு, நீ போய் சாப்பிடு,” என்றவள்,

“ஆமாம், அந்த சீம்பாலும் இன்பா தான் வாங்கி தந்தாங்களா? நான் இன்னைக்கு வந்திருக்க விஷயம் அவங்களுக்கு தெரியுமா?” என்று நதி சுதர்மனிடம் கேட்க,

“ம்ம் தெரியும் க்கா, நான் கறிக்கடையில் என்னோட அக்கா வருது. அதுக்கு தான் சிக்கன் வாங்கறோம்னு சொல்லிட்டு இருந்தப்ப தான், இன்பா மாமா அங்க வந்தாங்க, அப்புறம் என்கிட்ட உன்னைப்பத்தி விவரம் கேட்டாங்க, உனக்கு இங்க வேலை கிடைச்சிருக்க விஷயத்தை சொன்னேன். அப்புறம் தான் என்னை கூட்டிட்டு போய் சீம்பால் வாங்கி தந்தாங்க,” என்று அவன் சொல்லவும், 

“ஓ,” என்று மட்டும் அவள் பதிலளித்தாள்.

“சாரி க்கா, அவங்க வாங்கி தந்ததா உன்கிட்ட சொல்ல வேண்டாம்னு சொன்னாங்க, அதான் சொல்லல, என்மேல கோபமா க்கா,” என்று சுதர்மன் கேட்க,

“அப்படியெல்லாம் இல்லடா, சரி நீ போய் சாப்பிடு,” என்று அவனிடம் கூறினாள். அதன்பின்பும் சுதர்மன் எவ்வளவு வற்புறுத்தி அழைத்தும் அவள் சாப்பாடு வேண்டாமென்று மறுத்து விட்டாள்.

மறுநாள் சுதர்மன் கல்லூரிக்கு செல்ல வேண்டுமென்பதால் அவனுக்கு சாப்பாடு கட்டிக் கொடுக்க அலமேலு காலையிலே எழுந்து வேலை செய்துக் கொண்டிருக்க, சிந்தாமணி அதற்கும் முன்பே எழுந்திருந்தார். இதில் நதிவதனாவும் காலையிலேயே எழுந்து குளித்துவிட்டு வர, அவள் எங்கோ வெளியில் செல்ல இருக்கிறாள் என்பது அலமேலுவிற்கு புரிந்தது.

உடனே மாமியாரிடம் அவர் ஜாடையாய் அவள் எங்கே கிளம்புகிறாள் என்று கேட்க, அவருக்கும் தெரியாததால், “நதி காலையிலேயே எழுந்து குளிச்சிட்ட, எங்கேயாச்சும் வெளிய போகணுமா?” என்று சிந்தாமணி நேரடியாகவே பேத்தியிடம் கேட்டார்.

“ஆமாம் பாட்டி வேலைக்கு தான் கிளம்பிட்டு இருக்கேன்.” என்று அவள் பதில் கூற,

“நேத்து தான் வந்த, இன்னைக்கே வேலைக்கு போகணுமா?” என்று அவர் கேட்கவும்,

“ஆமாம் பாட்டி, இன்னைக்கு போய் வேலையில் சேரணும், அப்புறம் தான் மத்த விவரமெல்லாம் தெரியும்,” என்று அவள் பதில் கூறினாள்.

“நம்ம வீட்டுக்கே பஸ் வரும்னு சொன்னீயே, வருமா?” என்று அவர் கேட்க,

“வீட்டுக்கே வராது பாட்டி, மெயின் ரோட்ல வந்து நிக்கும், ஆனா இன்னைக்கு வராது, அதான் சொன்னேனே வேலைக்கு போய் சேர்ந்தா தான் அந்த விவரமெல்லாம் சொல்வாங்க,” என்று அவளும் பொறுமையாக பதில் கூறினாள்.

இதையெல்லாம் மௌனமாக கேட்டுக் கொண்டிருந்த அலமேலு, “சுதர்மன் எடுத்துட்டு போக சாப்பாடு செஞ்சுட்டு இருக்கேன். அவளையும் எடுத்துட்டு போக சொல்லுங்க,” என்று சிந்தாமணியிடம் கூற,

‘இதை நேரா தான் சொன்னா என்னவாம்,’ என்று மனதில் நினைத்தவள்,

“எனக்கு வேண்டாம் பாட்டி,” என்று பதில் கூறினாள்.

“இங்கப்பாரு கோபத்தை சாப்பாட்டுல காட்டக்கூடாது. நேத்து ராத்திரியே சாப்பிடல, இப்பவும் சாப்பிடாம போனா உடம்பு என்னத்துக்காகும், இன்னைக்கே வேலை பார்க்க சொல்லி வேலை செய்ற இடத்தில் சொன்னாங்கன்னா உடம்பில் தெம்பு வேணுமில்ல,” என்று சிந்தாமணி கேட்க,

அன்னை மீது கோபம் தான், ஆனாலும் சாப்பாடு சாப்பிட்டு எடுத்து போகும் அளவிற்கும் அவளுக்கு நேரமில்லை. ஏழரை மணிக்கு வரும் பேருந்தை பிடித்தால் தான் அவள் நேரத்திற்கு அலுவலகத்திற்கு போக முடியும், முதல் நாளே தாமதமாக சென்றால் நன்றாக இருக்காது என்பதால்,

“சாப்பாடு எடுத்துட்டு போகறதுக்குள்ள பஸ் போயிடும் பாட்டி, நான் சீக்கிரம் போகணும், அங்க ஆஃபிஸில் கேன்டீன் இருக்கும், நான் அங்க சாப்பிட்டுக்கிறேன்.” என்று சொல்லி விரைவாக கிளம்பனாள்.

அத்தனை விரைவாக வந்தும், அங்கு இளநீர் விற்பவரிடம், “அண்ணா ஏழரை மணி பஸ் போகல இல்ல,” என்று கேட்க,

“அய்யோ பஸ் போயிடுச்சே ம்மா, ரெண்டு நிமிஷம் முன்னாடி வரக் கூடாது.” என்று அவர் கூறினார்.

‘எப்போதும் ஏழரைக்கு வர பஸ், இன்னைக்கு ரெண்டு நிமிஷம் சீக்கிரமாகவே வந்துடுச்சா, சரி நமக்கு ஏழரை நடந்தா எல்லாம் இப்படித்தான் அமையும்,” என்று நினைத்தவள், ஆட்டோவில் போகலாமா? என்று நினைத்தாள்.

பேருந்தில் போக வர மற்றும் அங்கு கேன்டீனில் சாப்பிட தான் அவளிடம் பணம் இருக்கிறது. அது மொத்தத்தையும் ஆட்டொவிற்கே கொடுத்துவிட்டால் வரும்போது பேருந்து செலவிற்கு என்ன செய்வது? அய்யோ இந்த ஒருமாசத்தை எப்படியாவது கடந்திட வேண்டும்? இந்த ஒருவருட பயிற்சியின் பொழுதே அவள் பார்த்து பார்த்து சிக்கனமாக செலவு செய்ய வேண்டிய நிலை தான், 

இப்போதும் கால் மணி நேரம் கழித்து தான் அடுத்த பேருந்து வரும், அதுவரை காத்திருக்க முடியாது. பேசாமல் செங்கல்பட்டு வரை ஆட்டோ பிடித்து போய்விட்டால், அங்கிருந்து அதிக பேருந்துகள் இருக்கும், பணமும் அவள் நினைத்ததை விட குறைவாக தான் ஆகும் என்று நினைத்தவளாக அவள் ஆட்டோவை பார்க்க, அதுவும் ஒன்று கூட அங்கில்லை.

அதைப்பற்றி இளநீர் விற்பவரிடம் விவரம் கேட்டால், “எல்லா ஆட்டோவும் ஊருக்குள்ள சவாரி போயிருக்கு ம்மா, ஒரு பத்து நிமிஷம் காத்திரு,” என்றார்.

“அய்யோ இன்னைக்கு ஆஃபிஸ்க்கு லேட்டா தான் போகணுமா?” என்று வாய்விட்டு அவள் சொன்ன நேரம், புல்லட் வண்டியின் சத்தம் கேட்க, ஒருவேளை இன்பாவோ என்று அவள் நினைத்து திரும்பி பார்க்க, அவள் நினைத்தது போல் அவன் தான் வண்டியில் வந்துக் கொண்டிருந்தான்.

சங்கமிக்கும்..