US 3

உன்னில் சங்கமித்தேன் 3

நதியின் தந்தை இறந்து ஆறுமாதம் கடந்திருக்கும், அவர்கள் ஊர் கோவில் திருவிழா நடந்துக் கொண்டிருக்க, அலமேலு பிள்ளைகளை அந்த திருவிழாவிற்கு அழைத்துச் சென்றிருந்தார். 

தந்தை உயிரோடு இல்லை என்ற நிதர்சனம் புரிந்து, அன்னைக்கு அதிக கஷ்டத்தை கொடுக்காமல் நதி அப்போது பொறுப்பான பெண்ணாக தான் நடந்துக் கொள்வாள். திருவிழாவை முன்னிட்டு அவர்கள் ஊரில் கடைகள் அதிகம் போட்டிருந்தாலும், அன்னைக்கு செலவு வைக்கக் கூடாதென்று அவள் ஆசைகளை மனதிலேயே அடக்கி வைத்துக் கொண்டாள்.

ஆனாலும் திருவிழாவிற்கு வந்து குழந்தைகளுக்கு எதுவும் வாங்கித் தராமல் இருக்க கூடாதென்று அவர்களுக்கு கொஞ்சம் திண்பண்டங்களும், நதிக்கு பொட்டு, கம்மல், வளையல், சுதர்மனுக்கு அவன் கேட்ட சில விளையாட்டு சாமான்களும் அலமேலு வாங்கி தந்திருந்தார்.

ஆனாலும் கொஞ்சம் தூரம் வந்தபின் அங்கு சீம்பால் விற்றுக் கொண்டிருக்க, நதிக்கு அது மிகவும் பிடிக்குமென்பதால், அவள் நினைத்திருந்ததையும் மீறி, “அம்மா சீம்பால் வாங்கி தாம்மா,” என்று நதி ஆசையாக கேட்க,

“இப்போ தானே திண்பண்டம் வாங்கி தந்தேன். திரும்ப எதுவும் செலவு வைக்கக் கூடாதுன்னு சொன்னேனா இல்லையா? சின்ன பையன் அவனே சும்மா வரான், உனக்கென்ன வந்துச்சு,” என்று அலமேலு கொஞ்சம் கோபமாக பேசவும்,

“அப்பான்னா கேட்டதும் வாங்கி கொடுப்பாரு தெரியுமா?” என்று அலமேலுவின் சிடுசிடுப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் நதி கேட்டாள்.

“ஆமா வரவுக்கேத்த செலவு செய்யாம, இஷ்டத்துக்கு செலவு செய்யவும் தான், அடுத்தவங்களை எதிர்பார்த்து இப்போ நாம இருக்கோம், அவர் மட்டும் ரெண்டு பிள்ளைங்க வச்சிருக்கோம்னு கொஞ்சம் சேர்த்து வச்சிருந்தா நம்ம ஏன் இந்த நிலைமையில் இருக்கோம், அவர் இருந்தா எல்லாம் கிடைச்சிருக்கும் தான், ஆனா நம்மளை தவிக்கவிட்டுட்டு அவர் தான் போய் சேர்ந்துட்டாரே, இனி நாம ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கணும்னு எதிர்பார்க்க கூடாது.” என்று அலமேலு கோபமாக புலம்பினாலும்,

“இது எவ்வளவு ரூபாய் ப்பா,” என்று சீம்பால் விற்பவரிடம் விலை கேட்டுக் கொண்டிருந்தார்.

அன்னை பேசுவது போல் தான் தங்களின் நிலைமை தற்போது இருக்கிறது என்பது நதிக்கு புரிந்து இருந்தாலும், அவள் என்னவோ பொறுப்பில்லாத பெண் என்பது போல் அன்னை பேசியது அவளுக்கு வருத்தத்தை கொடுக்கவும், “எனக்கு ஒன்னும் வேண்டாம்,” என்று வீம்பாக சொல்லிவிட்டு அவள் விறுவிறுவென்று அங்கிருந்து வீட்டிற்குச் செல்ல,

“வேண்டாம்னா போயேன், எனக்கு 20ரூபாய் மிச்சம் தான், இந்த நிலையில் ரோஷம் பார்த்தா முடியுமா?” என்று அலமேலு சொல்வது நதிக்கு நன்றாகவே கேட்டது.

அதே நினைப்புடன் அன்றைய பொழுது முழுவதும் அவள் கோபத்துடனே இருக்க, அலமேலுவும் அவளை சமாதானப்படுத்த முயற்சி செய்யவில்லை. அப்போது இன்பா வீட்டிற்கு வந்தவன், “அத்தை நதி எங்க?” என்று சிந்தாமணியிடம் கேட்க,

அவள் வீட்டு பின்னே கொள்ளை புறத்தில் அமர்ந்திருப்பதை அவர் கூறவும், “நதி, நதி,” என்று அழைத்தப்படியே அவளை தேடிச் சென்றான்.

அவன் அழைப்பது காதில் விழுந்தாலும் எதுவும் கேட்காதது போல் அவள் அமர்ந்திருக்க, “என்ன இங்க தான் உட்கார்ந்திருக்கீயா? என்ன இன்னும் கோபம் போகலையா? திருவிழால நீ ஆசையா சீம்பால் கேட்டதும், அலமேலு அக்கா அப்படி பேசினதையும் நான் பார்த்தேன். என்ன இருந்தாலும் அக்கா அப்படி கோபமா பேசியிருக்கக் கூடாது தான், ஆனா பாவம் அவங்களும் என்ன செய்வாங்க? நீதான் அவங்களை புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கணும்,” என்று அவன் அவளிடம் பேசிக் கொண்டிருக்க,

என்னவோ அவள் பொறுப்பில்லாமல் நடந்துக் கொள்வது போல் அன்னை தான் பேசுகிறார் என்றால், இவனும் அதையே பேசுகிறானே, சீம்பால் வேண்டுமென்று கேட்டது தவறா?அதுவும் இப்போது தங்களின் நிலையை பற்றி தெரிந்தும் அன்னையிடம் அதை ஆசைப்பட்டு கேட்டது தன் தவறு தான் என்று அவளுக்கே புரிந்துவிட்டது. அப்படியிருக்க, அதைப்பற்றி பேசுபவனை நினைத்து அவளுக்கு கோபம் வந்தது. ஆனாலும் எதுவும் பேசாமல் அவள் அமைதியாக இருந்தாள்.

இதில் “சரி நீ கேட்ட சீம்பால், வாங்கிட்டு வந்திருக்கேன் சாப்பிடு,” என்று அவன் கொடுக்க,

ஒருவேளை அவன் அன்பாக கூட அதை வாங்கி வந்திருக்கலாம், ஆனாலும் மற்றவரை நம்பி தான் நாம் இருக்கிறோம் என்ற அன்னையின் வார்த்தை அதை அவனிடம் வாங்க மறுத்தது. “எனக்கு வேண்டாம்,” என்று அவள் கூற,

“உனக்கு இது பிடிக்கும் தானே, அப்புறம் ஏன் வேண்டாம்னு சொல்ற, இங்கப்பாரு அப்பப்ப கோபத்தை அப்பப்ப மறந்துடணும், அம்மா தானே திட்டினாங்க, இந்தா சாப்பிடு,” என்று அவன் மீண்டும் சொன்னாலும் அவள் கண்டு கொள்ளாமல் இருந்தாள்.

அந்தநேரம் அங்கு வந்த சுதர்மன், “ஐ சீம்பால்,” என்று ஆசையாக சொல்லியப்படியே இன்பா கையிலிருந்த சீம்பாலை வாங்கினான்.

சகோதரி சீம்பால் கேட்கவும், அதற்கு அன்னை திட்டியதையும் வேடிக்கை பார்த்திருந்தவனுக்கும் சீம்பால் சாப்பிட வேண்டுமென்று ஆசை தான், ஆனாலும் நடந்தவகளை பார்த்து அமைதியாக இருந்துக் கொண்டவன், இப்போது இன்பா வாங்கி வரவும், அவனுக்கு மகிழ்ச்சியாகிவிட்டது.

“ஆமாம் உன்னோட அக்கா ஆசைப்பட்டு கேட்டுட்டு, இப்போ வேண்டாம்னு சொல்லிட்டால்ல, அதான் வாங்கிட்டு வந்தேன்.” என்று இன்பா கூற,

“அப்போ எனக்கில்லையா இன்பா மாமா,” என்று சுதர்மன் கேட்டான்.

“உனக்கும் தான் டா,” என்று கூறியவன்,

“நீ என்ன செய்ற, உங்க அக்கா கோபத்தில் இதை வேண்டாம்னு சொல்றா, அதனால அவளுக்கு இதை ஊட்டி விடு,” என்று சுதர்மன் காதில் கூறினான்.

அவனும் சரியென்று தலையாட்டியவன், நதி எதிர்பார்க்காத சமயத்தில் அவள் வாயில் சீம்பாலை ஊட்டி விட, அவளும் இருவரையும் முறைத்துக் கொண்டே அதை சாப்பிட்டாள்.

அன்றிலிருந்து சீம்பாலை கண்டாளே ஏனோ அந்த சம்பவம் அவளுக்கு நினைவிற்கு வந்துவிடும், அதிலிருந்து என்ன காரணம் என்பது அவளுக்கே புரியாமல் அவள் சீம்பாலை தவிர்க்கவும் ஆரம்பித்தாள். ஆனால் இன்று சகோதரன் அதை ஆசையாக வாங்கி வரவே அதை மறுக்க தோன்றவில்லை.

சீம்பாலை கையில் வைத்துக் கொண்டு சகோதரி சிந்தனையில் இருக்கவும், “என்னக்கா, இது உனக்கு ரொம்ப பிடிக்கும் தானே, அப்புறம் என்ன யோசிச்சிட்டு இருக்க,” என்று சுதர்மன் கேட்கவும் தான் அவள் நடப்பிற்கு வந்தாள்.

“ஒன்னுமில்ல சுதர்மா, சும்மா பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்துச்சு,” என்று சொல்லியப்படியே அதை சாப்பிட ஆரம்பித்தாள்.

‘பழசுன்னா என்ன? அம்மா திட்டினதா? இல்லை இன்பா மாமா சீம்பால் வாங்கிக் கொடுத்ததா? எதுவா இருக்கும்?” என்று சுதர்மன் தான் குழம்பினான். ஆனாலும் அதை சகோதரியிடம் கேட்கவில்லை. இருவரும் பேசியப்படி வீடு வந்து சேர்ந்தனர். 

பேத்தியை பார்த்து ஒருவருடமானதால் சிந்தாமணியும் நதிவதனாவை காண ஆவலாக காத்திருந்தார். ஆனாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல், அவள் வீட்டிற்கு வந்ததும், “மகாராணிக்கு இந்த வீடு, நாங்கல்லாம் சுத்தமா ஞாபகமே இல்லை போல, நடுவுல  ஒரு எட்டு எங்களை வந்து பார்க்கணும்னு நினைப்பு வந்துச்சா, அதுதான் பெத்த மனசு பித்து, பிள்ளை மனசு கல்லுன்னு சொல்லுவாங்க போல,” என்று அவர் பாட்டுக்கு புலம்ப,

“ஆமா நான் வராதது உனக்கு சந்தோஷமா தானே இருந்திருக்கும், ஏன் மூஞ்சிலேயே முழிக்காதன்னு என்னை விரட்டாத குறையா தானே அனுப்பி வச்ச, அப்புறம் என்ன இப்போ தான் பாசம் இருக்கறது போல சிவாஜியையே மிஞ்சுற ஓவர் ஆக்டிங் கொடுக்கிற,” என்று நதியும் பதிலுக்கு கேட்டாள்.

“ஒரு கோபத்தில் சொல்றது தான், அதுக்காக பாசமில்லாம போயிடுமா? நாங்க என்ன உனக்கு கெடுதல் செய்யவா இருந்தோம், நல்லது செய்ய தானே நினைச்சோம், அதை புரிஞ்சிக்க மாட்டேன்னு இருந்தா கோபமா தான் பேசுவோம், அதுக்காக இந்தப்பக்கம் எட்டிப் பார்க்காம இருந்திடுவியா?” என்று சிந்தாமணி கேட்க,

“ஆமா நீங்க பேசினதுக்கு, வேற ஏதாச்சும் ஊருக்கு வேலை கிடைச்சா, அப்படியே உங்களையெல்லாம் பார்க்காம இருந்திடலாம்னு தான் நினைச்சேன். ஆனா என்ன செய்றது. என் விதி என்னை இங்கேயே கூட்டிட்டு வந்துடுச்சு,” என்று அவளும் சலைக்காமல் பதில் கூறினாள்.

“நீ போறது தானே, யாரு வேண்டாம்னு சொன்னா, நீ போகறதுக்கு முன்ன நான் போய் சேர்ந்துட்றேன். நெய்ப்பந்தம் பிடிச்சிட்டு போ.” என்று சிந்தாமணி கண் கலங்கியப்படியே கூறினார்.

“அய்யோ பாட்டி, ஒரு பேச்சுக்கு சொன்னா இப்படியெல்லாம் பேசுவியா? உங்களையெல்லாம் விட்டுட்டு நான் மட்டும் அங்க எப்படி இருப்பேன். இங்கேயே வேலை கிடைக்கணும்னு நான் வேண்டாத தெய்வமில்ல தெரியுமா?” என்று நதி பாட்டியை கட்டிக் கொண்டவள்,

“எனக்கு பயங்கர பசி, நீ வச்ச கறிக்குழம்பை சாப்பிடலாம்னு வந்தா, நீ என்ன இப்படி பேசிட்டு இருக்க,” என்று பாட்டியிடம் கொஞ்சலாக கூற,

“சரி சரி குளிச்சிட்டு போய் சாப்பிடு,” என்று சிந்தாமணியும் சகஜமானார்.

அன்னையை கூட சமாதானப்படுத்திவிடலாம், பாட்டி தான் வீம்பு பிடிப்பார் என்று அவள் நினைத்திருக்க, பாட்டி சமாதானம் ஆகிவிட்டதில் மகிழ்ந்தாள். இனி அன்னையின் கோபத்தையும் சரி செய்திட வேண்டுமென்று நினைத்தப்படி குளிக்கச் சென்றாள்.

இன்பசாகரன் வீட்டிற்கு வரும்போது நேரம் மதியம் 3 ஆகிவிட்டிருந்தது. கண்மணி அவன் வருகைக்காக காத்திருக்க, தங்கையை பார்த்தப்படி வந்தவன், “எத்தனை மணிக்கு வந்த கண்மணி. சாப்பிட்டீயா? மாப்பிள்ளை சாப்பிட்டாச்சா? எங்க அவர்? இன்னைக்கு இங்க தானே தங்கப்போறாரு?” என்று விசாரித்தான்.

“நாங்க 1 மணிக்கு வந்தோம் ண்ணா, ரெண்டுப்பேரும் சாப்பிட்டோம், அவர் பக்கத்தில் ஒரு வேலையா போயிருக்கார். அவருக்கு நாளைக்கு வேலைக்கு போகணுமில்ல, அதனால நீங்க வந்ததும் உங்களை பார்த்ததும் கிளம்பணும்னு சொன்னாரு, நீங்க வந்ததும் அவருக்கு போன் செய்ய சொன்னாரு,” என்றவள்,

“நீ வர ஏன் இவ்வளவு நேரம், இதுவரைக்கும் சாப்பிடாமலா இருக்க, நீ போய் கை கால் கழுவிட்டு வா சாப்பிடலாம்,” என்று சொல்லவும்,

“ம்ம் போன இடத்தில் கொஞ்ச நேரமாகிடுச்சு, என்ன மணி 3 தானே ஆகுது, ஒருமணி நேரம் தானே தள்ளிப் போச்சு, அம்மா என்ன தூங்கறாங்களா?” என்றப்படியே அவன் கை கால் கழுவப் போக, கண்மணி கணவருக்கு அலைபேசியில் பேசி இன்பா வீட்டிற்கு வந்திருப்பதை கூறினாள்.

அடுத்து இன்பா சாப்பிட அமர்ந்ததும், அவளே சாப்பாடு பரிமாற, “நானே போட்டுப்பேன் கண்மணி. நீயும் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறது தானே,” என்று இன்பா கூறினான்.

“அதெல்லாம் நாள் முழுக்க ரெஸ்ட் எடுத்துட்டு தான் இருக்கேன். உனக்கு சாப்பாடு பரிமாறுவது பெரிய வேலையா?” என்று கூறியப்படியே குழம்பை ஊற்றினாள்.

“இந்த மாசம் செக்கப்க்கு போனீயா கண்மணி. எல்லாம் நல்லாத்தானே இருக்கு, எந்த பிரச்சனையுமில்லையே,” என்று சாப்பிட்டப்படியே தங்கையிடம் இன்பா நலம் விசாரிக்க,

“ஒரு பிரச்சனையுமில்லன்னா, நானும் குழந்தையும் ஆரோக்கியமாக தான் இருக்கிறோம்,” என்று கண்மணியும் பதில் கூறினாள்.

அதன்பின் இன்பா அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருக்க, “அண்ணா அம்மா வந்ததும் விஷயத்தை சொன்னாங்க, அந்த பொண்ணு போட்டோ கூட அவங்க வீட்டிலிருந்து எனக்கு வாட்ஸப் செஞ்சாங்க, உனக்கு ரொம்ப பொருத்தமா இருப்பா,” என்று பேச ஆரம்பிக்க,

“வந்ததும் முதல் வேலையா அம்மா உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்லிட்டாங்களா? நான்தான் அவங்களை வேற இடம் பார்த்துக்க சொல்லி சொல்லுங்கன்னு அம்மாக்கிட்ட சொல்லிட்டேனே, அப்புறம் உன்கிட்ட என்ன ரெகமெண்டேஷன்.” என்று கேட்டான்.

“அம்மாக்கும் முன்ன மாதிரி உடம்பு இருக்கறதில்ல, உன்னோட வேலைக்கு நீ சரியான நேரத்துக்கு சாப்பாட்டுக்கு வருவதில்லை. இன்னைக்கு நானிருக்கவே அம்மா போய் படுத்துட்டாங்க, இல்லை உனக்காக காத்திருக்கணும்,” என்று கண்மணி கூறவும்,

“எனக்காக எதுக்கு காத்திருக்கணும் கண்மணி. வேணாம்னு சொன்னா அவங்க கேட்டா தானே, வந்தா நானே எடுத்து போட்டு சாப்பிட்டுக்க போறேன். நான் வந்தா எனக்கு சாப்பாடு பரிமாற பொண்டாட்டி வேணும்னு நான் கல்யாணம் செய்துக்க முடியுமா? பொண்ணு டீச்சர் வேலைப் பார்க்குதுன்னு சொல்றீங்க, எஎன்னை வீட்டில் இருந்து பார்த்து கவனிச்சிக்க பொண்டாட்டி வேணும்னு ஒரு கல்யாணம் செய்துக்கணும்னு சொல்றீங்க, 

டீச்சர் வேலைப் பார்க்கும் பொண்ணை வேலையை விடணும்னு சொல்றீங்களா? இல்லை என்னை சம்மதிக்க வைக்கணும்னு இப்படி பேசறீங்களா? அம்மாக்கு தான் இதெல்லாம் யோசிக்க தெரியாது. நீ கூடவா இப்படி பேசுவ, அதில்லாம இதெல்லாம் நான் எதிர்பார்க்க மாட்டேன்னும் புரியாதா?

அம்மாக்கிட்ட சொன்னதை தான் சொல்றேன். நான் கல்யாணமே வேண்டாம்னு சொல்லல, இப்போதைக்கு வேண்டாம்னு தான் சொல்றேன். நீயாவது புரிஞ்சிக்கோ கண்மணி. எனக்கு கல்யாணம் செய்துக்கணும்னு தோனுச்சுன்னா நானே பொண்ணு பாருங்கன்னு சொல்றேன்.” என்று அவன் கூறவும், கண்மணிக்கும் அதற்கு மேல அவனிடம் அதைப்பற்றி பேசமுடியவில்லை.

மீண்டும் சில நிமிடங்கள் மௌனமாக கழிய, கண்மணி திருமணத்தை பற்றி பேசவும், அவனுக்கு நதியின் நினைவு வந்துவிட, “உனக்கொரு விஷயம் தெரியுமா? நதி ஊருக்கு வந்திருக்காளாம், அவளுக்கு இங்க பக்கத்தில் தான் வேலை கிடைச்சிருக்காம், இனி இங்க தான் இருக்கப் போறாளாம்,” என்ற செய்தியை அவன் தங்கையிடம் கூற,

‘என்ன அண்ணன் இன்னும் அவளையே தான் நினைச்சிட்டு இருக்கா, அவளைப்பத்தி எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கே,” என்று யோசித்தப்படி அவன் முகத்தை பார்க்க,

தங்கையின் முகத்தை பார்த்தே அவள் என்ன நினைக்கிறாள் என்பது இன்பாக்கு புரியவும், “இன்னைக்கு கறிக்கடையில் சுதர்மனை பார்த்தேன். அவன் தான் விஷயத்தை சொன்னான். நீயும் நதியும் ஃப்ரண்ட்ஸ் தானே, நீயும் இங்க வந்திருக்க, அவளும் இன்னைக்கு தான் வந்திருக்கா, அதான் உன்கிட்ட விஷயத்தை சொன்னா நீ அவளை பார்க்க போவன்னு சொன்னேன்.” என்றான்.

“நான் ஏன் அவளை பார்க்கணும், அதுக்கு எனக்கு எந்த அவசியமுமில்லை.” என்று கண்மணி வெறுப்புடன் கூற,

“இங்கப்பாரு கண்மணி, நதி முதலில் நம்ம உறவுக்கார பொண்ணு, அப்புறம் உன்னோட பெஸ்ட் ஃப்ரண்ட், அப்புறம் தான் மத்ததெல்லாம், அம்மா தான் புரிஞ்சிக்கிறாம பேசறாங்கன்னா, நீயும் அப்படியே பேசாத, இதில் நதியோட தப்பு எதுவுமில்ல, நான்தான் வேண்டாம்னு சொன்னேன். அது உனக்கு புரியுதா இல்லையா?” என்று அவன் கோபமாக கேட்க,

“உன்னோட மனசு புரியறதால தான் நான் இப்படி பேசறேன் ண்ணா, உனக்கு என்ன குறை? உன்னை ஏன் அவளுக்கு பிடிக்கல?” என்று அவள் கேட்க,

“ஏன் உன் அண்ணனுக்கு குறையே இருக்காதா? இல்லை என்னை அவளுக்கு கட்டாயம் பிடிக்கணும்னு ஏதாவது இருக்கா? என்னோட பார்வையில் மட்டும் பார்க்காத கண்மணி. நதி பக்கம் இருந்தும் யோசிச்சு பாரு, யார் அவ பக்கம் இருந்தாலும் இல்லன்னாலும் நீ அவ பக்கம் இருந்திருக்கணும், அவளுக்கு என்ன பிரச்சனைன்னு கேட்டு தெரிஞ்சிருக்கணும், அதை விட்டுட்டு இப்படி நீ அவ மேல வெறுப்பு காட்டக் கூடாது.” என்று அவன் கண்டிப்புடன் கூறினான்.

“என்ன புரிஞ்சிக்கணும், எனக்கு தெரியும், அவ ரொம்ப மாறிட்டா, நம்மளையெல்லாம் விட பெரிய படிப்பு படிச்சிட்டால்ல, அதான் அவளை மாத்திடுச்சு, அதை நீயும் புரிஞ்சிக்கிட்டு அவளை மறந்துட்டு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் செய்துக்கோ, உன்னோட மனசை மாத்திக்கோ,” என்று கண்மணி கூறினாள்.

“நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன பேசிட்டு இருக்க கண்மணி.” என்று இன்பா கேட்டுக் கொண்டிருக்கும்போதே,

“என்ன மச்சான் இப்போ தானா சாப்பிட வந்திருக்கீங்க,” என்று கண்மணியின் கணவன் முகிலன் கேட்டப்படி அங்கு வரவும், இருவரின் பேச்சும் நின்றுபோனது.

“ஆமாம் மாப்பிள்ளை, போன இடத்தில் கொஞ்சம் லேட்டாகிடுச்சு, அதான்,” என்று இன்பாவும் பதில் கூறினான்.

அடுத்து இன்பா சாப்பிட்டதும் முகிலனுடன் பேசிக் கொண்டிருந்தாலும், ‘கண்மணிக்கு ஏன் நதி மேல இத்தனை வெறுப்பு, இதை வளரவிடக் கூடாது, அவளுக்கு பேசி புரிய வைக்கணும்,” என்று அவன் மனதில் ஓடிக் கொண்டிருக்க,

‘அண்ணன் நதியோட நடக்கவிருந்த கல்யாணத்தை நிறுத்திட்டாலும், அது மனசுல நதி இன்னும் அப்படியே தான் இருக்கா, அப்படியிருக்க இப்போதைக்கு அண்ணன் வேற பொண்ணை கல்யாணம் செஞ்சுக்க சம்மதிக்காது. ஏன் என் அண்ணனுக்கு மட்டும் இப்படி நடக்குது.” என்று கண்மணி தன் சகோதரனை நினைத்து கவலைக் கொண்டாள்.

சங்கமிக்கும்..