US 2

உன்னில் சங்கமித்தேன் 2

வாசலில் கேட்கும் புல்லட் வண்டியின் சத்தமே இன்பசாகரனின் வருகையை அவரது அன்னை சரஸ்வதிக்கு உணர்த்திட, “சரி சரி இன்பா வந்துட்டான். நேரம் பார்த்து அவன்கிட்ட விஷயத்தை பேசறேன்.” என்று சொல்லி அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தவர், உடனடியாக அந்த அலைபேசி அழைப்பை அணைத்தார்.

அதற்குள் இன்பசாகரன் உள்ளே வந்தவன், “யாரும்மா போன்ல, நம்ம கண்மணியா?” என்று சரஸ்வதியிடம் கேட்க,

“இல்லப்பா என்னோட ஒன்னுவிட்ட அக்காவோட மருமக தான் பேசினா,” என்று அவர் பதில் கூறினார்.

காலை நேரம் தோப்பிற்கு தண்ணீர் பாய்ச்சு விட்டு வீட்டிற்கு வந்தவன், குளித்து விட்டு காலை உணவு சாப்பிட்டதும் செக்கு ஆலைக்கு செல்ல வேண்டும், விவசாயம் மட்டுமில்லாமல், அவர்கள் சொந்தமாக செக்கு வைத்து எண்ணெய் தயாரித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் நிலத்தில் விளையும் நிலக்கடலை மற்றும் அவர்கள் தோப்பில் விளையும் தேங்காய் இத்துடன் வெளியிலும் தரமான நிலக்கடலை, எள், தேங்காய் வாங்கி செக்கு எண்ணெய் எடுக்கின்றனர்.

சுற்று வட்டாரத்தில் இவர்கள் எண்ணெய் பிரபலம். தந்தை பார்த்துக் கொண்டிருந்த தொழிலை, பேருக்கு ஒரு பட்டப்படிப்பை முடித்துவிட்டு இப்போது இன்பசாகரன் தான் கவனித்துக் கொண்டிருக்கிறான். சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் நல்லதில்லை செக்கு எண்ணெய் தான் ஆரோக்கியம் என்ற விழிப்புணர்வு இப்போது மக்களிடையே அதிகம் பரவி விட்டதால் இவர்கள் தயாரிக்கும் எண்ணெய்க்கு இப்போது டிமாண்ட் அதிகம். வெளிநாட்டில் வசிப்பவர்கள் கூட ஆர்டர் செய்து இவர்கள் தயாரிப்பை வாங்குவதால், இன்பசாகரனுக்கு ஓய்வில்லாமல் தோப்பு, செக்கு ஆலை என்று ஓட்டம் தான்,

தங்கையோடு தான் அன்னை பேசுகிறார் என்று நினைத்திருந்தவன், வேறு யாரோ பேசியிருக்கிறார்கள் என்று தெரிந்ததும்,

“காலையிலேயே போன் பேசியிருக்காங்க, ஏதாவது முக்கியமான விஷயமா?” என்று சரஸ்வதியிடம் கேட்க,

“இல்லை இன்பா, இல்ல ஆமா முக்கியம் தான்,” என்று அவர் தடுமாற, அவனுக்கு விஷயம் புரிந்துவிட்டது.

“அம்மா, நான் கல்யாணமே வேண்டாம்னா சொல்றேன். இன்னும்  ரெண்டு வருஷம் போகட்டும்னு தானே சொல்றேன்.” என்று வழக்கமாய் சொல்லும் அதே வாக்கியத்தை அவன் கூற,

“ஏன் இந்த ரெண்டு வருஷத்தில் அந்த மகாராணி உன்னை கல்யாணம் செய்துக்க ஒத்துப்பான்னு எதிர்பார்க்கறீயா? பெரிய படிப்பு படிச்சிட்டோம்னு திமிருல உன்னை வேண்டாம்னு சொல்லிட்டா, இப்போ அவளுக்கு நல்ல வேலையும் கிடைச்சிடுச்சு, இதுக்கு மேலேயும் உன்னை கல்யாணம் செஞ்சுக்குவான்னு நீ நினைக்கறீயா?” என்று சரஸ்வதி கேட்க,

“அம்மா உங்களுக்கு எத்தனைமுறை சொல்றது, நான்தான் இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொன்னேன். அவ இல்லை.” என்று இன்பா கூற,

“அத்தனை ஆசையா இருந்தவன், திடீர்னு இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னதுமே எங்களுக்கு எல்லாம் புரியாதாக்கும், இங்கப்பாரு எதுக்கு வேண்டாம்னு போனவளை பத்தி பேசிக்கிட்டு, இப்போ பேசினாளே எங்க அக்கா மருமக, அவளோட சித்தப்பா பொண்ணுக்கு வரன் பார்க்கிறாங்களாம். பொண்ணு டீச்சர்க்கு படிச்சிருக்கு, இங்க நம்ம பக்கத்து ஊர் ஸ்கூலில் தான் வேலை பார்க்குதாம், நம்மளை பத்தி எல்லாம் சொல்லியிருக்கா என்னோட அக்கா மருமக, அவங்களுக்கு நம்ம வீட்ல சம்மதம் செய்ய முழு சம்மதமாம், நீயும் சரின்னு சொன்னா உடனே அவங்க வீட்டுக்கு தகவல் சொல்லலாம்,” என்று சரஸ்வதி முழு விஷயத்தையும் கூற,

“அவங்களை வேற இடம் பார்த்துக்க சொல்லுங்க,” என்று ஒரே வாக்கியத்தில் அவரின் பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்தவன்,

“ஆமாம், கண்மணிக்கு 5ம் மாசம் நடக்குது, பூ முடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வரணும்னு சொன்னீங்களே, கண்மணி வீட்டில் அதைப்பத்தி பேசினீங்களா?” என்று பேச்சை வேறு திசைக்கு மாற்றினான்.

மகன் பிடி கொடுக்க மாட்டான் என்பதை உணர்ந்த சரஸ்வதியும், “பேசினேன் ப்பா, இங்க வர வச்சே பூ முடிச்சு அப்புறம் பொறுமையா அனுப்பி வைக்க சொன்னாங்க கண்மணியோட மாமியார். கண்மணியை கூட்டிடு போக நாம வர வேண்டாமாம், இன்னைக்கு மாப்பிள்ளையோட அனுப்பி வைக்கறதா சொன்னாங்க, வர வெள்ளிக்கிழமை நாள் நல்லா இருக்காம், அன்னைக்கே விசேஷத்தை வச்சுக்க சொன்னாங்க, அவங்க சொந்தக்காரங்களோட அன்னைக்கு விசேஷத்துக்கு வராங்களாம்,” என்று சரஸ்வதி கூறவும்,

“அம்மா முக்கியமான விஷயத்தை விட்டுட்டு, வேற எதெல்லாமோ பேசிட்டு இருக்கீங்க, கண்மணி இன்னைக்கு வீட்டுக்கு வராளா? எப்போ வரா?” என்று அவன் கேட்க,

“மதிய சாப்பாட்டு நேரத்துக்கு ரெண்டுப்பேரும் வர்றதா சொன்னாங்க ப்பா,” என்றார் சரஸ்வதி.

“மதியம் சாப்பாட்டுக்கு வராங்கன்னா, இன்னைக்கு அசைவம் சாப்பிட்ற நாள் தானே? சிக்கன், மட்டன், மீனு எல்லாம் வாங்கிட்டு வரட்டுமா?” என்று இன்பா கேட்கவும்,

“மாசமா இருக்க பொண்ணு, கோழிக்கறி சாப்பிட்டா சூடு, அதனால ஆட்டுக்கறியும் மீனும் வாங்கிட்டு வா, மணியும் இன்னைக்கு ரொம்ப சீக்கிரமே வேலைக்கு வந்துட்டா, நீ வாங்கிட்டு வந்துட்டா, அவ கடகடன்னு சமைக்க ஆரம்பிச்சிடுவா, நானும் கூடமாட அவளுக்கு ஒத்தாசை செய்றேன்.” என்று சரஸ்வதி கூறவும், இன்பாவும் தலையாட்டியவன், கடைக்கு கிளம்ப தயாராக,

“காலை சாப்பாடு சாப்பிட்டு போ இன்பா,” என்று அவர் கூற,

“இல்லம்மா, வாங்கிட்டு வந்து கொடுத்துட்டே சாப்பிட்றேன்.” என்று சொல்லியவன் அடுத்த நொடி அங்கு இல்லை. சொல்ல சொல்ல கேட்காமல் செல்பவனை நினைத்து சரஸ்வதிக்கு பெருமூச்சு விட மட்டுமே முடிந்தது.

கறிக்கடையில் அங்கு வேலை செய்யும் ஆள் மட்டுமே இருக்க, கடைக்குள் சென்ற சுதர்மனோ, “அண்ணா, முக்கா கிலோ சிக்கன் தாங்க, எங்கம்மா நாளைக்கு காசு கொடுத்திட்றதா சொன்னாங்க,” என்று கேட்க,

“உனக்கு வேற வேலையே இல்லையா? எப்போ பார்த்தாலும் கடனுக்கு வந்து நின்னுட்ற, அப்படி கடனுக்கு வாங்கி தான் கறி சாப்பிடணும்னு என்னடா இருக்கு,” என்று அந்த கடையிலிருப்பவன் ஏளனமாக கூறவும்,

“அடிக்கடி எங்கன்னா வாங்கறோம், நாலு வாரம் முன்ன ஒருமுறை கடனுக்கு வாங்கினோம், அந்த காசையும் ரெண்டு நாளில் எங்கம்மா கொடுத்துட்டாங்க, அடுத்து ஒருமுறை காசு கொடுத்து தானே வாங்கிட்டு போனேன்.” என்று சுதர்மன் ரோஷத்துடன் கேட்கவும்,

“ஒருமுறைன்னா கொடுப்பாங்க, இப்படி அடிக்கடி கடனுக்கு கேட்டா,   ஓனர் என்னை தான் திட்டுவாரு, கடனுக்கெல்லாம் கிடையாது போடா,” என்று அந்த கடை ஆள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அங்கு இன்பசாகரனின் புல்லட் வந்து நின்றது.

அதை சுதர்மன் கவனிக்கவில்லை. கடை ஆள் இப்படி பேசுவது அவனுக்கு தர்மசங்கடமாக இருந்தாலும், தன் சகோதரிக்காக வாங்க வேண்டுமென்று நினைத்ததால், “அண்ணா ப்ளீஸ் ண்ணா, இன்னைக்கு எங்க அக்கா ஊரிலிருந்து வருது. அதுக்கு சமைக்க தான் வாங்கறேன். அம்மாக்கு இன்னைக்கு சாயந்தரமே காசு கிடைச்சிடும், ஆனா உங்க கடை தான் சாயந்தரம் இருக்காதே, அதனால நாளைக்கு காலையில் கொண்டு வந்து கண்டிப்பா காசு கொடுத்திடுவேன்.” என்று அவன் கெஞ்சுவதை இன்பா கவனித்தான். 

அதையும் தாண்டி “என் அக்கா இன்னைக்கு ஊரிலிருந்து வருது,” என்ற வாக்கியம் தான் அவனுக்கு முதன்மையாக கேட்டது. ‘நதி வராளா?’ என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டான்.

இன்பா வந்ததை சுதர்மன் கவனிக்கவில்லையென்றாலும் கடை ஆள் கவனித்துவிட்டவன், “இன்பா அண்ணா, வா வா,” என்று அழைக்க, அப்போது தான் சுதர்மனும் இன்பாவை கவனித்தான்.

“இன்பா மாமாவா,” என்று அவன் வாய்க்குள்ளேயே முனக,

“என்ன சுதர்மா, கறி வாங்க வந்தீயா?” என்று இன்பா அவனிடம் கேட்டவன்,

“என்ன பையனை மிரட்டிட்டு இருந்த மாதிரி இருந்துச்சு,” என்று கடை ஆளிடம் கேட்டான்.

“அய்யோ உங்களுக்கு தெரிஞ்ச பையனா ண்ணா, காசில்லாம கடனுக்கு வந்து சிக்கன் கேட்டான். ஓனர் வந்தா என்னைத்தான் திட்டுவார் ண்ணா,” என்று கடை ஆள் கூற,

“தெரிஞ்ச பையன் இல்லை. உறவுக்கார பையன். உன்கிட்ட காசில்லாம சிக்கன் வாங்கிக்கிட்டு ஊரை விட்டா ஓடிடப் போறான். நீதான் வேற ஊருக்காரன். இவன் இதே ஊர் தான், அதில்லாம் இவன் என் உறவுக்கார பையன்னு உன்னோட ஓனர்க்கு நல்லாவே தெரியும், தெரிஞ்சும் கடனுக்கு கொடுக்க மாட்டேன்னு உன்னோட ஓனர் சொன்னாரா? இரு இப்பவே போன் போட்டு கேட்கிறேன்.” என்று இன்பா தனது சட்டை பாக்கெட்டிலிருந்து தனது அலைபேசியை எடுக்க,

“அய்யோ ஓனர்க்கெல்லாம் பேசாத இன்பா ண்ணா, நான்தான் ஓனர் என்னை திட்டுவாரோன்னு நினைச்சு இந்த பையன்கிட்ட இப்படி பேசிட்டேன். எனக்கு உன்னோட உறவுக்கார பையன்னு தெரியாது ண்ணா,” என்று கடை ஆள் சமாதானம் பேசினான்.

“சரி பையன் கேட்டதை கொடு, அப்படியே எனக்கு ஒரு கிலோ மட்டன் வெட்டு,” என்று இன்பா சொல்லவும், கடை ஆள் சரி என்பது போல் தலையசைத்தவன், அவனது வேலையைப் பார்க்க,

“சுதர்மா, உங்க அக்கா வரப் போறதா சொல்லிட்டு இருந்தல்ல, என்ன லீவுக்கு வராளா?” என்று இன்பா கேட்க,

“இல்ல மாமா, அக்காக்கு அங்க ட்ரெயினிங் முடிஞ்சு இப்போ சென்னையில் உள்ள பிரான்ச்லயே வேலை கிடைச்சிடுச்சு, இங்க நம்ம ஊருக்கே அவங்க கம்பெனி பஸ் வந்து அக்காவை கூட்டிட்டு போயிடும்,” என்று சுதர்மன் விவரத்தை கூறினான்.

‘ஒரு வருஷமா ஊர்ப்பக்கமே எட்டி பார்க்காதவ, ஏதாவது வேற மாநிலத்துக்கு வேலை வாங்கிட்டு போயிடுவாளோ’ என்று இன்பா அடிக்கடி நினைப்பதுண்டு. இப்போது இங்கேயே அவளுக்கு வேலை கிடைத்ததை நினைத்து அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

உடனே அவன் மனசாட்சியோ, என்ன இன்பா, அம்மா சொன்னது போல நதி மனசு மாறும்னு எதிர்பார்க்கிறீயா? வேண்டாம்னு முடிவெடுத்ததுக்கு பிறகு இப்படி மனசுல தேவையில்லாத சலனத்தை உண்டாகிக்கலாமா? நதிக்கு அவளோட மனசுக்கு பிடிச்ச பையனோட கல்யாணம் முடிஞ்சு சந்தோஷமா வாழணும், அதை மட்டும் தான் உன்னோட மனசு எப்போதும் நினைச்சு பார்க்கணும், புரியுதா?’ என்று தனக்குள்ளேயே உறுதியாக சொல்லிக் கொண்டான்.

அதற்குள் கடை ஆள் சுதரமனிடம் வெட்டிய கோழிக்கறியை பையில் போட்டுக் கொடுக்க, “இந்தா இதுக்கும் சேர்த்தே காசு எடுத்துக்க,” என்று இன்பா கடை ஆளிடம் பணத்தை நீட்ட,

“அய்யோ வேணாம் இன்பா மாமா, அம்மாக்கு இன்னைக்கு காசு கிடைச்சிடும், நாளைக்கு நான் கொண்டு வந்து கொடுத்திடுவேன்.” என்று சுதர்மன் அதை தடுக்க பார்த்தான்.

“இருக்கட்டும் பரவாயில்லை. அந்த பணம் வேற செலவுக்கு உதவும்,” என்று சொல்லி அந்த கறிக்கான பணத்தை கொடுத்துவிட்டான்.

அதுமட்டுமில்லாமல் “கறியை வெட்டி வை. இதோ வரேன்.” என்று கடை ஆளிடம் கூறிய இன்பா,

“கொஞ்சம் என்னோட வா,” என்று சுதர்மனை அழைத்துக் கொண்டு கடையை விட்டு வெளியேறியவன்,

அங்கே இரண்டு கடை தள்ளி ஒருவர் மரத்தடியில் திண்பண்டமாக ஒரு தட்டில் சீம்பால் வைத்து விற்றுக் கொண்டிருக்க, அதை இன்பா காசுக்கு வாங்கியவன், “இந்தா இது உங்க அக்காவுக்கு ரொம்ப பிடிக்குமில்ல, இதை அவக்கிட்ட கொடு,” என்றுகொடுத்தவன்,

“நான் வாங்கிக் கொடுத்ததா அவளுக்கு தெரிய வேணாம், நீயே வாங்கியதா சொல்லி கொடு.” என்று கூறினான்.

‘அக்கா மேல இத்தனை அன்பு இருக்க, ஏன் இன்பா மாமா கல்யாணத்தை நிறுத்தணும்? அக்கா கல்யாணம் செய்துக்க தயாரா தானே இருந்துச்சு, ஒருவேளை இந்த கல்யாணம் நடந்திருந்தா நல்லா இருந்திருக்கும்,” என்ற சுதர்மன் மனதில் நினைத்ததை வெளிக்காட்டி கொள்ளாமல், அங்கிருந்து புறப்பட்டான்.

நதிவதனா பேருந்தை விட்டு இறங்கும்போது சுதர்மன் அவளுக்காக சைக்கிளோடு காத்திருந்தான். பேருந்து நிறுத்ததிலிருந்து அவர்கள் வீட்டிற்கு நடந்து செல்ல, கால்மணி நேரம் போதும், அதனால் சகோதரனை அங்கு பார்த்ததும், “என்ன சுதர்மா, நானே வந்துக்க மாட்டேனா?” என்று அவள் கேட்க,

“நீயே வந்துடுவ க்கா, ஆனா இந்த பையெல்லாம் வச்சிக்கிட்டு உனக்கு நடந்து வர கஷ்டமா இருக்காதா? அதான் நான் சைக்கிள் கொண்டு வந்தேன். இப்போ இதில் பையெல்லாம் வச்சிட்டு நாம சைக்கிளை தள்ளிக்கிட்டே நடந்து போகலாம்,” என்று சொல்லியப்படி அவன் பைகளை வாங்கி சைக்கிளில் வைத்தான். இருவரும் அப்படியே மெதுவாக நடக்க,

“அதுவுமில்லாம இது சாப்பிடும் நேரம், காலையிலேயே பஸ் ஏறப் போறதா போன் செஞ்சுருந்த, காலையில் டிஃபன் வேற சாப்பிட்டியோ இல்லையோ, பசியோட எல்லாத்தையும் தூக்கிட்டு வருவீயா?” என்று சுதர்மன் சகோதரியை கேள்வியாக பார்க்க,

உண்மை தான், விடியற்காலையிலேயே விடுதியிலிருந்து கிளம்பியதால், காலை உணவை அவளால் எடுத்துக் கொண்டு வர முடியவில்லை. காலை உணவுக்காக பேருந்தை ஒரு இடத்தில் நிறுத்திய போதும், தன் உடமைகளை பேருந்தில் விட்டுவிட்டு கீழே இறங்க யோசித்தவள், பேருந்து உள்ளே ஏறி விற்ற நபரிடம் வெறும் வடை மட்டும் வாங்கி சாப்பிட்டாள். இப்போதோ அவளுக்கு பயங்கர பசி.

ஆனாலும் அதை சகோதரனிடம் சொல்ல தோன்றாததால், “பஸ் சாப்பாடுக்கு நின்ன இடத்தில் இறங்கி சாப்பிட்டேன் டா,” என்று அவள் சமாளிக்க,

“எனக்கு தெரியாதா என்னோட அக்கா பத்தி, அப்படியே சாப்பிட்டு இருந்தாலும் இப்போ மதிய சாப்பாட்டுக்கு பசிக்க ஆரம்பிச்சிருக்கும், இன்னைக்கு வீட்டில் என்ன சமையல் தெரியுமா? சிக்கன் குழம்பு. அதுவும் பாட்டி செஞ்சு வச்சிருக்காங்க,” என்று சுதர்மன் கூறினான்.

“என்னடா சொல்ற, இன்னைக்கு பாட்டி குழம்பு வச்சாங்களா?” என்று அவள் வியப்பாக கேட்டாள்.

“ஆமாம், அம்மாக்கு இன்னைக்கு வேலைக்கு போகணும்னு புளி சோறு கிளறி வச்சிட்டு கிளம்பினாங்க, நான்தான் நீ வர்றீயேன்னு சிக்கன் குழம்பு வைக்க சொன்னேன். அம்மாக்கு நேரமில்லாததால பாட்டி வைக்கறதா சொல்லி என்னை வாங்கிட்டு வரச் சொன்னாங்க,” என்று காலையில் வீட்டில் நடந்ததை சுருக்கமாக அவன் சொல்ல,

“அப்படி இப்பவே சிக்கன் குழம்பு வைக்கணும்னு என்ன டா அவசியம், இனி இங்க தான் இருக்கப் போறேன். மெதுவா சாப்பிட்டுக்கிட்டா போச்சு,” என்று கேட்டாள்.

“என்னக்கா ஹாஸ்டலில் உப்பு சப்பில்லாம சாப்பிட்டு நாக்கு செத்து போயிருக்கும், அதான் செய்ய சொன்னேன்.” என்று சுதர்மன் கூற,

“அதில்லடா, ஹாஸ்டலில் வேணும்னா சாப்பாடு நல்லா இல்லாம இருக்கலாம், ஆனா ட்ரெயினிங் போன கம்பெனியில் மதியம் அங்கேயே சாப்பாடு சாப்பிட்டுக்கலாம், அதிலும் புதன்கிழமை சிக்கன் குழம்பெல்லாம் இருக்கும்,” என்று சொல்ல,

“இருந்தாலும் நம்ம பாட்டி வைக்கும் சிக்கன் குழம்பு மாதிரி வருமா? அப்பா இருந்தப்ப வாரத்துக்கு ரெண்டு முறை சிக்கன், மட்டன்னு வாங்கிட்டு வருவாரு, அப்போல்லாம் பாட்டி தான் குழம்பு வைப்பாங்க, அடுப்பில் குழம்பு கொதிக்கிற வாசனைக்கே நமக்கு பசிக்க ஆரம்பிச்சிடும், சமையல்கட்டுக்கும் கூடத்துக்கும் நடையா நடந்து ரெடியா ரெடியான்னு பாட்டிக்கிட்ட கேட்டுட்டிருப்போம், அப்போதும் நமக்கு வசதி குறைவு தான், ஆனாலும் சந்தோஷமா இருந்தோம், அப்புறமும் எல்லாம் தான் கிடைச்சுது. ஆனாலும் அப்பா நம்ம கூட இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் இல்லக்கா,” என்று சுதர்மன் கேட்க,

“அப்போ நமக்கு சின்ன வயசு, அப்பாவோ அம்மாவோ பட்ட கஷ்டம் கூட இருந்து பார்த்தாலும் பெருசா தெரியல, ஆனா இப்போ நாம வளர்ந்துட்டோம், அப்பா இருந்திருந்தாலும் அவரோட கஷ்டம் நமக்கு புரிய ஆரம்பிச்சிருக்கும், வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது சுதர்மா,” என்றவள்,

“இதுக்கு மேல இந்த கஷ்டம் நீடிக்காது டா, எனக்கு வேலை கிடைச்சிடுச்சு, இன்னும் ரெண்டு மூனு வருஷத்தில் நீயும் வேலைக்கு போயிடுவ, நாம ரெண்டுப்பேரும் அம்மாவையும் பாட்டியையும் நல்லப்படியா பார்த்துக்கலாம், அப்பா நமக்கு எப்போதும் துணையா இருப்பாரு,” என்று சொல்லி நதி சகோதரனை தேற்றினாள்.

“நீ சொல்றதும் சரிதான் க்கா, ஆனா நான் வேலைக்கு போக ஏன் க்கா ரெண்டு மூனு வருஷம் காத்திருக்கணும், இதோ இந்த வருஷ படிப்பு 4 மாசத்தில் முடிஞ்சிடும், அப்புறம் இன்னும் ஒரு வருஷ படிப்பு தான், கண்டிப்பா எனக்கும் கேம்பஸ்ல வேலை கிடைச்சிடும்,” என்றான்.

அவனுக்கும் இஞ்சினியரிங் படிக்க வேண்டுமென்று ஆசை. பனிரெண்டாம் வகுப்பில் இருந்தபோது தான் நடந்த பிரச்சனைகளில், அவனே கோபமாக, “ஏன் க்கா, இப்படி செஞ்ச, எல்லாம் நல்லப்படியா நடந்திருந்தா நானும் இஞ்சினியரிங் சேர்ந்திருப்பேன். எல்லாம் உன்னால கெட்டுப் போச்சு,” என்று கேட்டவன் தான்,

அதன்பின் இவளின் மனநிலையை புரிந்துக் கொண்டது மட்டுமில்லாமல் வீட்டின் சூழ்நிலையும் புரிந்ததால், பனிரெண்டாம் வகுப்பு முடித்து நேராக டிப்ளமோவில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் இரண்டாம் வருடம் சேர்ந்து படிக்கிறான். அரசு கல்லூரி என்பதால் கட்டணமும் அங்கு குறைவு தான்,

“இந்த படிப்பும் முடிச்சதும் நீ வேலைக்கு போகணும்னு அவசியமில்ல சுதர்மா, உனக்கு இஞ்சினியரிங் படிக்கணும்னு தானே ஆசை. நீ அதுக்கு முயற்சி செய்.” என்று நதி சொல்ல,

“இல்லக்கா, இதிலேயே நான் நிறைய தெரிஞ்சிக்கிட்டேன். உனக்கு தெரியுமா? பைனல் இயர் பசங்களோட நானும் பிராஜக்ட் செய்றேன். அதிலேயே எனக்கு நிறைய ஐடியா கிடைக்குது. இப்போ இஞ்சினியரிங் படிக்கணும்னு ஆசையெல்லாம் இல்லை.” என்று கூறினான்.

“சரி இன்னும் ஒரு வருஷ படிப்பு இருக்குல்ல, அதுக்குப்பிறகு உனக்கு என்ன தோனுதோ செய். அப்போ என்னால உனக்கு எதுவும் செய்ய முடியல, ஆனா இப்போ உனக்காக செய்ற அளவுக்கு கண்டிப்பா என்னால முடியும்,” என்று நதி கூற,

“எனக்கு தெரியாதா க்கா, சரி அப்போ என்ன தோனுதோ செய்வோம்,” என்றவன்,

“அக்கா, உனக்கு ஒன்னு வாங்கி வச்சிருக்கேன். எப்படியோ வீட்டுக்கு போய் குளிச்சிட்டு தான் சாப்பிடணும், அதுவரை இதை சாப்பிடு,” என்று சைக்கிள் மாட்டி வைத்திருந்த பையில் இருந்து சீம்பாலை அவளிடம் சுதர்மன் எடுத்துக் கொடுக்க,

அதை பார்த்ததும் அவனை நினைக்கவே கூடாது என்று ஒதுக்கி வைத்திருந்த இன்பசாகரனின் நினைவு அவளுக்கு திரும்ப வந்தது.

சங்கமிக்கும்..