US 11

உன்னில் சங்கமித்தேன் 11

அலமேலு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டிருந்தார். நதிக்கோ ஒருபுறம் அன்னைக்கு என்ன ஆனதோ என்ற கவலையென்றால், மருத்துவமனையில் ஆகும் செலவிற்கு என்ன செய்வது என்பதும் அதனுடன் சேர்ந்திருந்தது.

இந்த ஒருமாதத்தை தள்ளி விட்டால் போதும், அடுத்த மாதத்திலிருந்து மாதம் மாதம் சம்பளம் வந்துவிடும், ஓரளவிற்கு குடும்ப நிலையை சரி செய்துவிடலாம் என்று நினைத்திருக்க, இப்போதோ சோதனை மேல் சோதனையாக வந்து கொண்டிருக்கிறது. 

சேர்த்திருப்பது தனியார் மருத்துவமனை என்பதால் எவ்வளவு செலவாகும்? அதை எப்படி சமாளிப்பது என்று அவள் புரியாமல் அமர்ந்திருக்க, சிகிச்சை பிரிவில் இருந்து ஒரு நர்ஸ் வெளியில் வரவும், “சிஸ்டர், அம்மாக்கு என்னாச்சு? ஏதாச்சும் பெரிய பிரச்சனையா?” என்று பதறியப்படி கேட்டாள்.

“அவங்களுக்கு பிபி ரொம்ப அதிகமா இருக்கு, அதான் மயக்கமாயிட்டாங்க, கடைசியா அவங்க எப்போ செக் செய்தாங்க, அப்போ எவ்வளவு இருந்துச்சு, பிபிக்கு அவங்க என்ன மாத்திரை எடுத்துக்கிறாங்க?” என்று நர்ஸ் கேள்விகள் கேட்க,

“எனக்கு தெரிஞ்சு அம்மா இதுவரை பிபி செக் செஞ்சதில்லன்னு தான் நினைக்கிறேன்.” என்று நதி பதில் கூறினாள்.

“30 வயசு ஆனாலே இதெல்லாம் ரெகுலரா செக் செய்துக்க வேண்டாமா? இப்போ பாருங்க எதிர்பார்க்காத அளவுக்கு அதிகமா இருக்கு, பிபியை குறைக்க தான் டாக்டர்ஸ் ட்ரீட்மென்ட் கொடுத்திட்டு இருக்காங்க,” என்று நர்ஸ் சொல்லவும்,

“சிஸ்டர், பயப்படும்படி ஒன்னுமில்லையே,” என்று நதி கேட்டாள்.

“ட்ரீட்மென்ட் போயிட்டுருக்கு, டாக்டர்ஸ் தான் என்னன்னு சொல்லுவாங்க” என்று நர்ஸ் கூற, அவளுக்கோ அன்னையின் நிலையை நினைத்து பயமாக இருந்தது.

பின், “இந்த ட்ரீட்மென்ட்க்கு எவ்வளவு செலவாகும்?” என்று நதி தயங்கி தயங்கி கேட்க,

“இப்போ நடக்கும் ட்ரீட்மென்ட், பிரச்சனை பெருசா இல்லன்னா எப்படியோ நாளை வரை அவங்க ஹாஸ்பிட்டலில் தான் இருக்க வேண்டியிருக்கும், அப்புறம் மெடிசன்ஸ், இதெல்லாம் சேர்த்து இருபதாயிரத்திலிருந்து முப்பதாயிரம் ஆகலாம், இதெல்லாம் டிஸ்சார்ஜ் ஆகும்போது கட்டினா போதும், அதுக்குள்ள ரெடி செஞ்சு வச்சிக்கோங்க,” என்று அந்த நர்ஸ் கூறிவிட்டு மீண்டும் உள்ளே சென்றுவிட்டார்.

நாளைக்குள் முப்பதாயிரத்தை எப்படி தயார் செய்வது? என்று நதி தெரியாமல் குழம்பி நிற்க, அப்போதுதான் மலர் திரும்பவும் நதியை அழைத்தாள். அதைப்பார்த்து இவள் அழைப்பை ஏற்றதும், “ஹலோ நதி, என்னடி ஆச்சு, பேசிட்டிருக்கும்போதே யாரோ கத்தும் சத்தம் கேட்டுச்சு, நீயும் அப்படியே போனை கட் செய்யாம கூட போயிட்ட, நான் திரும்ப கால் செய்தாலும் எடுக்கல, என்னாச்சு?” என்று மலர் பதட்டமாக கேட்க, 

“அம்மா திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க, அதான்,” என்ற நதி, மருத்துவமனைக்கு கொண்டு வந்ததிலிருந்து நர்ஸ் கூறிய வரை அனைத்துமே மலரிடம் கூறினாள்.

“ஓ கொஞ்சம் சீரியஸ் தான், ஆனா இப்போ அட்வான்ஸ் ட்ரீட்மென்ட்லாம் வந்துடுச்சு, எப்படியோ பிபியை கன்ட்ரோல் செஞ்சுடுவாங்க, அம்மாக்கு ஒன்னும் ஆகாது பயப்படாதே,” என்ற மலர், நதி வெளிப்படையாக சொல்லாவிட்டாலும், ட்ரெயினிங் பொழுதுகளிலேயே பார்த்து பார்த்து சிக்கனமாக செலவு செய்வதை வைத்து நதியின் குடும்பநிலை ஓரளவு தெரிந்து வைத்திருந்ததால், 

“ஆமாம், ஹாஸ்பிட்டல் செலவுக்கு பணம் இருக்கா?” என்று கேட்க,

நதிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. “ம்ம் மேனேஜ் செய்துப்பேன்.” என்று பதில் கூறினாள்.

அவள் பதிலே அவளது நிலையை உணர்த்த, “சரி நான் உடனே வரேன். அப்படியே வரும்போது பணம் எடுத்துட்டு வரேன்.” என்ற மலர், எவ்வளவு தேவைப்படும் என்று கேட்க, நர்ஸ் சொன்ன தொகையை நதி கூறவும், எடுத்து கொண்டு வருவதாக கூறினாள்.

“ரொம்ப நன்றி மலர்.” என்ற நதி,

மணி இரவு ஏழுக்கு மேல் ஆகிவிட்டதால், “இந்த நேரத்தில் இவ்வளவுதூரம் நீ எப்படி தனியா வருவ?” என்று கேட்டாள்.

இவர்களுடன் பணிபுரியும் சம்பத் இவர்கள் இருவருடன் ஒரு நண்பன் போல் இப்போது தான் பேச ஆரம்பித்திருக்க, “நான் சம்பத்தை துணைக்கு கூட்டிட்டு வரேன்.” என்று சொல்லி மலர் அலைபேசியை வைக்க, பணப் பிரச்சனை தீர்ந்ததால் நதிக்கு கொஞ்சம் மனதிற்கு நிம்மதியாக இருந்தது.

நர்ஸ் சொன்னதை சுதர்மனும் கேட்டு கொண்டு தானே இருந்தான். இவ்வளவு பணத்தை புரட்டுவது கடினம் என்பது அவனுக்கு தெரியும், ஆயிரம் இரண்டாயிரம் என்றால் சீனியர் மாணவர்கள் யாரிடமாவது கடன் கேட்கலாம், ஆனால் அவனாலும் இவ்வளவு பணத்தை புரட்ட முடியாது என்பதால், 

மருத்துவமனையில் பணம் இல்லையென்று தெரிந்தால் அன்னைக்கு சிகிச்சை செய்ய மாட்டேன் என்று மறுத்து விடுவார்களோ என்று பயந்தவனுக்கு, நதி தன் தோழியிடம் பேசியதையும், அவள் பணம் கொண்டு வருவதாக சொன்ன விஷயமும் தெரியாது என்பதால், இப்போதைக்கு இன்பாவை தவிர வேறு யாரிடமும் உதவி கேட்க முடியாது என்பதை புரிந்தவன், இன்பாவை அலைபேசியில் அழைத்தான்.

அப்போது இன்பா வீட்டில் தான் இருக்க, சுதர்மன் தான் அழைக்கிறான் என தெரிந்து அழைப்பை ஏற்றவன், “சொல்லு சுதர்மா,” என்று பேச, சரஸ்வதியும் கண்மணியும் அவன் அருகில் தான் இருந்ததால், அவன் பேச்சை கவனிக்க ஆரம்பித்தனர்.

“இன்பா மாமா, அம்மா திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க, நானும் அக்காவும் தான் ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு வந்தோம், அம்மாக்கு பிபி அதிகாமாயிடுச்சுன்னு நர்ஸ் வந்து இப்போ தான் சொன்னாங்க, எனக்கு ரொம்ப பயமா இருக்கு,” என்று சுதர்மன் விவரத்தை கூற,

“அப்படியா? எந்த ஹாஸ்பிட்டல்,” என்று பதறிய இன்பா, சுதர்மனிடம் தகவல்களை பெற்றுக் கொண்டவன், போய் தன் வண்டி சாவியை எடுக்க,

“என்னாச்சு ண்ணா, ஏதோ ஹாஸ்பிட்டல்னு பேசிட்டு இருந்த?” என்று கண்மணி கேட்டாள்.

“அலமேலு அக்கா திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்களாம், ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்காங்க,” என்று தங்கையிடம் விவரத்தை சொல்லிவிட்டு அவன் உடனே கிளம்பிவிட்டான்.

இங்கே நதியிடம் வந்த சுதர்மனோ, “அக்கா, அம்மாக்கு ட்ரீட்மென்ட்க்கு நாம பணத்துக்கு என்ன செய்யப் போறோம், நம்மளால இவ்வளவு பணத்தை புரட்ட முடியாதுல்ல, அதான் நான் இன்பா மாமாக்கு போன் செய்து சொல்லிட்டேன்.” என்று சொல்ல,

நதியோ, “உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்காடா, இன்னைக்கு நடந்த பிரச்சனையில் தான் அம்மாக்கு இப்போ இப்படி ஆகியிருக்கு, ஏற்கனவே இன்பா அம்மா அதிகமா பேசிட்டாங்க, இதில் இப்போ திரும்பவும் அவங்க பணத்தில் அம்மாவோட ட்ரீட்மென்ட்க்கு பணம் செலவழிச்சது அம்மாக்கு தெரிஞ்சா, அம்மாக்கு இன்னும் சீரியஸா தான் ஆகும், இதெல்லாம் யோசிக்க மாட்டீயா?” என்று கோபப்பட்டாள்.

“இல்லக்கா, அம்மாவுக்கு பணம் இல்லன்னா ட்ரீட்மென்ட் நிறுத்திடுவாங்களோன்னு பயம் வந்துடுச்சு, அதான்,” என்று அவன் சொல்லவும்,

“அதெல்லாம் என்னோட ஃப்ரண்ட் மூலமா ஏற்பாடு செய்துட்டேன். இது தெரியாம நீ வேற,” என்று சலித்துக் கொண்டவள், தலையில் கைவைத்து அமர்ந்து விட்டாள்.

எப்படியோ சுதர்மன் சொன்ன அடுத்த நொடி இன்பா அங்கிருந்து கிளம்பியிருப்பான். வந்தால் மருத்துவமனையில் ஆகும் செலவு அனைத்தையும் அவன் தான் பார்ப்பான். ஆனால் சரஸ்வதி பணத்திற்காக தான் அவனுடன் பழகுவதாக சொன்ன பின்பு அவனே செலவை பார்க்கட்டும் என்று அனுமதிக்க கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். ஆனால் அதுதான் அவனை அதிகம் காயப்படுத்தும் என்பது அவளுக்கு புரியுமா?

அவள் நினைத்தது போலவே இன்பா அடுத்த பத்து நிமிடத்தில் அங்கு இருந்தான். அவர்களை பார்த்ததும் அருகே வந்தவன், “இப்போ அக்காக்கு எப்படி இருக்கு?” என்று கேட்க,

“நர்ஸ் வந்து சொல்லிட்டு போனது தான், அப்புறம் இன்னும் யாரும் வந்து எதுவும் சொல்லல,” என்று நதி பதில் கூறினாள்.

“பயப்படும்படி ஒன்னும் இருக்காது. கவலைப்படாத?” என்று இன்பா அவளுக்கு ஆறுதல் கூறி கொண்டிருக்க,

அப்போது நர்ஸ் திரும்ப வெளியில் வந்தவர், “இந்த மருந்து இங்க ஸ்டாக் இல்ல, வெளிய போய் தான் வாங்கணும், உடனே வாங்கிட்டு வாங்க,” என்று சொல்லவும்,

“கொடுங்க சிஸ்டர்,” என்று இன்பா அதை கையில் வாங்கியவன், எங்கே கிடைக்கும் என்று விசாரித்தான்.

அவர் கிடைக்குமிடம் சொல்லவும், “சரி நான் போய் வாங்கிட்டு வந்துட்றேன்.” என்று அவன் கிளம்பினான்.

அவள் நினைத்தது போல் அவன் வந்ததுமே அவன் செலவு செய்வது போல் நிலைமை ஆகிவிட்டதே என்று நினைத்தாலும் அவன் இந்தநேரம் இல்லையென்றால் நிலைமை என்னாகியிருக்கும் என்று நினைத்து பார்த்தவளுக்கு அதை யோசிக்கவே பயமாக இருந்தது.

மருந்து வாங்க சென்றவன் சிறிது நேரத்திலேயே மருந்தோடு வர, அதை நர்ஸ் வந்து வாங்கி கொண்டு போனார். இன்னும் சிறிது நேரம் யுகம் போல் கழிய, வெளியே வந்த மருத்துவர், இனி பயப்பட தேவையில்லை என்று சொன்னதும் தான் நதிக்கு உயிர் வந்தது.

நர்ஸ் சொன்னது போலவே நாளை வரை மருத்துவமனையில் இருக்க வேண்டி வரும், இன்னும் சிறிது நேரத்தில் சாதாரண அறைக்கு மாற்றி விடுவோம் என்று மருத்துவர் சொல்லிவிட்டு சென்றார்.

“அக்கா, இனி அம்மாக்கு ஒன்னுமில்லல்ல,” என்று சுதர்மன் நதியிடம் கேட்க,

“அதான் டாக்டர் சொல்லிட்டாங்கல்ல, ஒன்னுமில்ல சுதர்மா பயப்படாத,” என்று இன்பா தான் அவனை தேற்றினான்.

அப்போது தான் மலர் சம்பத்தோடு அங்கு வந்தவள், “நதி இப்போ அம்மாக்கு எப்படி இருக்கு?” என்று விசாரித்தாள்.

“ம்ம் இப்போ பயமில்லன்னு சொல்லிட்டாங்க, கொஞ்ச நேரத்தில் நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்க,” என்று நதி அவளுக்கு பதில் சொல்லி கொண்டிருந்தாள்.

இன்பா அவர்கள் யாரென்பது போல் இருவரையும் பார்க்க, “இவ மலர், இவங்க சம்பத், ரெண்டுப்பேரும் என்னோட வேலை பார்க்கிறாங்க, அதிலும் மலரை மைசூர்ல ட்ரெயினிங் அப்பவே தெரியும், மலர்க்கிட்ட பேசிட்டு இருந்தப்ப தான் அம்மா மயக்கம் போட்டு விழுந்தாங்க, அதான் விஷயம் தெரிஞ்சு பார்க்க வந்திருக்கா,” என்று நதி விளக்கமாக கூற அவன் தலையசைத்துக் கொண்டான்.

“ஆமாம் எங்களை அறிமுக்கப்படுத்துற, ப்ரோ யாருன்னு சொல்லலையே?” என்று இன்பாவை காட்டி நதியிடம் சம்பத் கேட்க,

இன்பாவிற்கோ அவள் தன்னை என்னவென்று அறிமுகப்படுத்துவாள் என்று தெரிந்துக் கொள்ள ஆவலாக இருந்தது. இதுவரை அவள் அவனை இன்பா மாமா என்று அழைத்து அவன் கேட்டதேயில்லை. 

ஆரம்பத்தில் அப்படி கூப்பிட அவள் தயக்கம் காட்டுவது வெட்கத்தில் என்று நினைத்திருக்கிறான். ஆனால் இப்போதோ அவளுக்கு தன்னை பிடிக்காததனால் அப்படி கூப்பிட தயங்குகிறாளோ என்பது போல் அடிக்கடி தோன்றும், அதனால் அவன் ஆவலாக அவளை நோக்க,

அவளோ, “இவன் என்னோட தம்பி சுதர்மன், டிப்ளமோ இரண்டாவது வருடம் படிக்கிறான்.” என்று முதலில் தன் சகோதரனை அறிமுகப்படுத்தியவள்,

“இவங்க, இவங்க எனக்கு மாமா முறை வேணும், என் பாட்டியோட தம்பி மகன்.” என்று இன்பாவை அறிமுகப்படுத்தினாள்.

அதில் அவன் கொஞ்சம் சுணக்கமாக, “எதுக்கு சுத்தி வளைச்சிக்கிட்டு சொல்ற நதி, முறைமாமான்னு பளிச்சுன்னு சொல்லு,” என்று சம்பத் சொல்ல, நதி அவனை முறைத்ததில் இன்பாவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.

“நேரம் காலம் பார்க்காம ஃப்ரண்டோட அம்மாக்கு உடம்பு சரியில்லைன்னு உடனே பார்க்க வந்திருக்கீங்க, ரொம்ப சந்தோஷம். பேசிட்டு இருங்க, உங்களுக்கு குடிக்க டீ காஃபி ஏதாச்சும் வாங்கிட்டு வரேன்.” என்று இன்பா சொல்ல,

“அய்யோ பரவாயில்லை, இருக்கட்டும்,” என்று மலர் கூறினாள்.

“பரவாயில்லை குடிங்க, உங்க ஃப்ரண்டை பாருங்க டயர்டா தெரியறாங்க, தனியா வாங்கி கொடுத்தா வேண்டாம்னு சொல்வாங்க, உங்க கூடன்னா குடிப்பாங்க,” என்று சொல்லி இன்பா கிளம்ப,

“இருங்க ப்ரோ, நானும் வரேன்.” என்று சம்பத் உடன் கிளம்பவும், சுதர்மனும் அவர்களுடன் செல்ல, பெண்கள் தனித்து விடப்பட்டனர்.

“ஹே நிஜமாவே அவர் உன் முறைமாமனா? நீ என்னன்னு அவரை அறிமுகப்படுத்த போறேன்னு அவர் முகத்தில் அப்படி ஒரு ஆர்வம். உன்மேல ரொம்பவே கேரிங், அவர் உன்னை காதலிக்கிறாருன்னு நினைக்கிறேன். இது தெரியாம அவரை பார்த்ததும் நான் வேற வெளிப்படையா சைட் அடிச்சிட்டேன்.” என்று மலர் சொல்ல,

“ஆமா இது எனக்கு தெரியாத செய்தி பாரு, புதுசா சொல்ல வந்துட்ட,” என்று அதற்கு நதி பதில் கூறவும்,

“ஹே அப்போ ரெண்டுப்பேருக்குமே சம்திங் சம்திங்கா?” என்று மலர் உற்சாகமாக கேட்டாள்.

“அவங்களுக்கு என்னை பிடிக்கும்னு தெரியும், எங்க ரெண்டுப்பேருக்கும் வீட்டில் பரிசம் போட்டு கல்யாணம் வரை போய் நின்னு போச்சு,” என்று நதி சொல்ல,

“அப்படியா? ஏன் என்ன பிரச்சனை?” என்று மலர் கேட்டாள்.

“அதை அப்புறம் சொல்றேன்.” என்ற நதிக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தாலும், வேறு வழியில்லை என்பதால்,

“பணம் கொண்டு வரேன்னு சொன்னீயே, இருக்கா?” என்று கேட்க,

“ம்ம் கொண்டு வந்திருக்கேன்.” என்று சொல்லி மலர் பணத்தை நதியின் கையில் கொடுத்தாள்.

“இந்த உதவியை எப்போதும் மறக்க மாட்டேன் மலர். இதை முழுசா கொடுக்க முடியாது. மாசம் மாசம் சேலரி வந்தா கொஞ்சம் கொஞ்சமா கொடுத்திட்றேன்.” என்று நதி சொல்ல,

“ஒன்னும் அவசரமில்லை. மெதுவாகவே கொடு,” என்று மலர் கூறினாள்.

இன்பாவும் மற்ற இருவரும் இரு பெண்களுக்கும் காபி மற்றும் பிஸ்கட் வாங்கி கொண்டு வர, நடந்த பிரச்சனையில் மதியத்திலிருந்து சாப்பிடாத நதி அந்த காபியும் பிஸ்கட்டும் சாப்பிட்டதும் இப்போது கொஞ்சம் தெம்பாக உணர்ந்தாள்.

“அப்புறம் நீ கிளம்பு சம்பத், நாளைக்கு நானும் ஆஃபிஸ்க்கு லீவ் சொல்லலாம்னு இருக்கேன். அதனால நான் இன்னைக்கு நைட் நதி கூட தங்கிக்கிறேன். நாளைக்கு டிஸ்டார்ஜ் செஞ்சதுக்கு பிறகு ஹாஸலுக்கு போறேன்.” என்று மலர் கூற,

“சுதர்மா, பாட்டி என்னவோ ஏதோன்னு கவலையா இருப்பாங்க, அவங்களுக்கு  போன்ல சொல்றது சரியா இருக்காது. அதான் மலர் என்னோட இங்க இருக்கேன்னு சொல்லியிருக்காளே, அதனால நீ வீட்டுக்கு போயிட்டு பாட்டிக்கிட்ட விஷயத்தை சொல்லு, அம்மாவுக்கு இப்போ பரவாயில்லை, நாளைக்கு அனுப்பிடுவாங்கன்னு சொல்லு, இல்லை பாட்டியும் உன்னோட கிளம்பி வருவேன்னு சொல்லுவாங்க,” என்று நதி சகோதரனிடம் கூற,

“அப்போ உன்னோட தம்பியை வீட்டில் விட்டுட்டு நானும் கிளம்பறேன். அம்மாவை இப்போ பார்க்க முடியாது. அதனால நாளைக்கு நானும் வரேன்.” என்று சம்பத் இரு பெண்களுடமும் விடைப் பெற்றவன், 

“அப்போ வரேன் ப்ரோ, நாளைக்கு பார்க்கலாம்,” என்று இன்பாவிடமும் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்ப, சுதர்மனும் உடன் சென்றான்.

அடுத்து மலர் அங்கு போட்டிருந்த நாற்காலியில் சென்று அமர, நதியோ, “அதான் அம்மாக்கு ஒன்னும் பிரச்சனையில்லைன்னு சொல்லிட்டாங்களே, நீங்க வீட்டுக்கு கிளம்புங்க,” என்று நதி இன்பாவிடம் கூற,

“இருக்கட்டும் நானும் போயிட்டா, நீங்க ரெண்டுப்பேரும் தனியா இருப்பீங்க, நான் இங்கேயே இருக்கேன்.” என்று அவன் பதில் கூறினான்.

“நைட்டும் ஆள் நடமாட்டம் இருந்துட்டு தான் இருக்கும், அதனால் தனியா இருப்பதில் பிரச்சனை ஒன்னும் இருக்காது.” என்று அவள் கூறியும், அவன் கேட்பது போல் தெரியவில்லை.

மீண்டும் மீண்டும் அவனை காயப்படுத்துகிறோம் என்று புரிந்தாலும், நதிக்கு வேறு வழி தெரியவில்லை. “சரி அம்மாக்கு மருந்து வாங்கிட்டு வந்தீங்களே, அதுக்கு எவ்வளவு ஆச்சு?” என்று கேட்க,

“அது எதுக்கு விடு,” என்றான்.

“ம்ம் இல்லை எவ்வளவு ஆச்சுன்னு சொல்லுங்க,” என்று அவள் வற்புறுத்தவும், அவனும் மருந்தின்  விலையை சொல்ல, அந்த பணத்தை அவள் அவனிடம் நீட்டினாள்.

“இப்போ எதுக்கு இந்த பணம், இது கூட நான் செலவு செய்யக் கூடாதா? இங்கப்பாரு நீ இப்போ தான் வேலைக்கு போக ஆரம்பிச்சிருக்க, இன்னும் முதல் மாசம் சம்பளம் கூட வாங்கல, இந்த நிலைமையை உன்னால எப்படி சமாளிக்க முடியும்,” என்றவன்,

ஏதோ புரிந்தவனாக, “ஓ அதான் உன்னோட ஃப்ரண்ட்ஸ் வந்திருக்காங்களா? இப்போ தான் கொஞ்சம் நாளா தெரியற அவங்கக்கிட்ட பணம் கேட்ப, ஆனா நான் செலவு செய்யக் கூடாதா?” என்று கேட்டான்.

“உங்களுக்கு உங்க வீட்டில் நடந்தது தெரியுமான்னு எனக்கு தெரியல, அதை நான் சொன்னா அதுவும் தப்பா இருக்குமான்னும் புரியல, ஆனா உங்கம்மா பணத்துக்காக தான் உங்களோட முன்ன பழகனதாகவும், இப்போ திரும்ப அதுதான் என்னோட நோக்கமென்பது போல மோசமா பேசிட்டாங்க, 

அதுமட்டுமில்ல இதுவரை உங்க குடும்பம் எங்களுக்கு செஞ்சதெல்லாம் சொல்லி காட்டிட்டாங்க, அதில் தான் பாட்டிக்கே கோபம் வந்துடுச்சு, அம்மாக்கு திடீர்னு இப்படி ஆனதுக்கும் இதுதான் காரணமா இருக்கும், அப்படியிருக்க திரும்ப நீங்களே செலவு செய்ங்கன்னு என்னால அமைதியா இருக்க முடியாது. 

என்னை நீங்க என்ன நினைச்சாலும் பரவாயில்லை. இனி பணம் சம்பந்தமா உங்க உதவி எங்களுக்கு வேண்டாம், அதனால தயவு செய்து இந்த பணத்தை வாங்கிக்கோங்க,” என்று அவளே அவன் கையை பிடித்து அந்த பணத்தை திணித்தாள்.

தன் அன்னை அதிகம் பேசிவிட்டதாக கண்மணி சொன்னாள் தான், ஆனால் இவ்வளவு மோசமாக பேசியிருப்பார் என்று அவனும் நினைக்கவில்லை. ஆனால் அதற்காக இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் தன்னிடம் பணம் வாங்கமாட்டேன் என்று இவ்வளவு மறுக்கிறாள் என்றால் அந்த அளவுக்கு தன்னை யாரோவோகா தான் அவள் நினைக்கிறாள் என்பது தான் அவனுக்கு வலித்தது.

தன் அன்னை மோசமாக பேசிவிட்டார் தான், ஆனால் தன்னை அவள் முக்கியமானவனாக நினைத்திருந்தால், அந்த பேச்சை புறம் தள்ளியிருப்பாளே, அப்படியானால் எந்த காலத்திலும் அவள் மனதில் தனக்கு ஒரு இடம் கிடைக்கவே கிடைக்காதா? என்று நினைக்கும்போது அந்த நினைப்பே மிகவும் வேதனையாக இருந்தது.

அவள் கொடுத்த பணத்தை  அவன் சட்டை பையில் போட்டு கொண்டான். “அப்புறம் அம்மா கண் விழிச்சதும் உங்களை பார்த்தா, உங்க அம்மா பேசினது அவங்களுக்கு  திரும்ப ஞாபகத்துக்கு வரும், அதனால,”  என்று சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் அவள் தயங்க,

“இப்போ என்ன நான் இங்க இருந்து போகணும், அதானே? போயிட்றேன் போதுமா,” என்று கோபமாக கூறினான்.

“அப்புறம் இன்னொன்னு, அன்னைக்கு மாசம் மாசம் என் படிப்புக்காக நீங்க செலவு செய்த பணத்தை கொடுக்கிறேன்னு சொன்னேனே, அதை நீங்க வாங்கிக்கணும், இதுக்கு எனக்கு என்ன பேர் கிடைச்சாலும் பரவாயில்லை. ஏற்கனவே ரொம்ப மோசமா பேசியதெல்லாம் கேட்டாச்சு, இதுக்கு மேல கேட்க என்ன இருக்கு,” என்று அவள் கூற,

“திரும்ப கொடுக்கறதுன்னு முடிவாகிடுச்சு, ஆனா எப்படி கொடுக்கப் போற, வட்டியோடவா இல்லை வெறும் அசல் மட்டும் தானா? எப்படி கொடுத்தாலும் எனக்கு பிரச்சனையில்லை. கொடுக்கறதுன்னு முடிவு செய்துட்ட, அப்புறம் நான் சொல்றதையா கேட்க போற, ஏதாவது செஞ்சுக்கோ, ஆனா அதை கொடுக்கிறேன்னு நேரில் வந்து நிக்காத,” என்று இன்னும் அதிகமாகவே கோபப்பட்டவன், அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அவளின் பேச்சு அவனை எவ்வளவு காயப்படுத்தியிருக்கும் என்பது அவளுக்கு புரியாமல் இல்லை. அப்போது உணராமல் என்றால் இப்போது உணர்ந்தே செய்திருக்கிறாள் தான், அவளுக்கு வேறு வழி தெரியவில்லை. ஆனால் அன்று எப்படியோ? ஆனால் இன்று அவனை  காயப்படுத்தியது அவளையும் வருத்தியது.

அப்படியே நாற்காலியில் தளர்ந்து போய் அமர்ந்தவளிடம், “என்னாச்சு நதி, உன்னோட மாமா ரொம்ப கோபமா போறது மாதிரி தெரியுது. என்ன பிரச்சனை?” என்று மலர் கேட்க,

நதி நடந்ததை சொல்லவும், “ஏன் நதி, அவர் செலவு செய்தால் தான் என்ன? அப்படி அவரை நீ அவ்வளவு காயப்படுத்தும் அளவுக்கு என்ன நடந்தது? உங்களுக்கு கல்யாணம் நடக்கவிருந்து நின்னு போச்சுன்னு வேற சொல்ற, என்ன காரணம்? ஏதாவது குடும்ப பிரச்சனையா?” என்று மலர் கேட்டாள்.

“நடந்த பிரச்சனைக்கு யார் மேல தப்பு சொல்றதுன்னு தெரியல, எல்லோரும் சொல்றது போல என்மேல கூட தப்பு இருக்கலாம், ஆனா எதையும் நான் வேணும்னே செய்யல,” என்ற நதி நடந்தது அனைத்தையும் மலரிடம் சொல்ல,

“இதை கேட்டு எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியல நதி, என்னை கேட்டா இப்படி ஒருத்தரை உன்னால எப்படி மிஸ் பண்ண முடிஞ்சுதுன்னு தான் கேட்பேன். வள்ளி படத்தில் ரஜினி ஒரு டயலாக் சொல்வாரு கேட்ருக்கியா?

நீ விரும்பின ஒருத்தரை கல்யாணம் செய்துக்கறதுக்கு பதிலா உன்னை விரும்பினவரை கல்யாணம் செய்துக்கிட்டா உன்னோட வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்னு வரும் அந்த டயலாக். அது உனக்கு கண்டிப்பா பொருந்தும், இவ்வளவு தூரம் உனக்காக பார்த்து பார்த்து யோசிக்கும் இன்பா உன்னோட லைஃப் பார்டனரா வந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும் தெரியுமா? அப்படி ஒரு கோணத்தில் நீ யோசிச்சு பார்க்கலையா?” என்று மலர் கேட்டாள்.

“அப்போ என்னால அப்படி யோசிக்க முடியல, இன்பாவை பிடிக்கல அதனால இந்த கல்யாணம் வேண்டாம்னு நான் நினைக்கல, எனக்கு கல்யாணம் பிடிக்கல, அதை கொண்டு அப்போ இன்பாவை பத்தி எனக்கு எந்தவொரு ஃபீலிங்ஸும் வரல என்பது தான் உண்மை.

அந்த வயசுல எல்லாருக்கும் அந்த ஃபீலிங்ஸ் வரணுமா? எனக்கு வரலன்னா எனக்கு ஏதாவது குறைபாடா? சிலசமயம் இப்படி கூட நான் யோசிச்சது உண்டு. ஒருவேளை எந்தவித கவலையுமில்லாத ஒரு சூழ்நிலையில் வளர்ந்திருந்தா இன்பா மேல எனக்கு ஏதாச்சும் ஃபீலிங்க்ஸ் தோனியிருக்குமோ என்னவோ? 

இல்லை படிச்சு முடிச்சு ஒரு வேலையில் இருந்திருக்கும்போது இந்த கல்யாண பேச்சு வந்திருந்தா கூட நான் இப்படியெல்லாம் யோசிச்சிருந்திருக்கலாம், ஆனா ஸ்கூல் படிப்பு முடிக்கும்போதே கல்யாணம் பேசினதால அந்த கல்யாணமே எனக்கு கசந்து போச்சு, கல்யாணம் என்னோட கனவுகளுக்கு தடை கல்லா இருக்குமோ என்ற நினைப்பே, அதை இனிமையா என்னால மாத்திக்க முடியல, 

இன்பா எனக்காக ஒவ்வொன்னும் யோசிச்சு செய்யும்போதெல்லாம் அதுக்கு நான் அவங்களை கல்யாணம் செய்துக்கணும், அதுக்கு தானே இதெல்லாம்? அப்படி மட்டுமே என்னால யோசிக்க முடிஞ்சுது. இன்பா இல்லன்னா என்னோட இஞ்சினியரிங் கனவு நிறைவேறாம கூட போயிருக்கலாம், ஆனா அதுக்காக இன்பா மேல காதல் வரணும்னு ஏதாச்சும் கட்டாயமா? அப்படி நடந்தா அதுக்கு பேர் காதலா?” என்று நதி கேட்க,

“உன்னை என்னால புரிஞ்சுக்க முடியுது. அப்போ படிப்பு, குடும்ப நிலை இதை மட்டுமே யோசிச்சதனால உனக்கு அப்போ எந்த ஃபீலிங்ஸும் வரல சரி. ஆனா இப்போ நீ நினைச்சதெல்லாம் நடந்துடுச்சே, எப்படியோ இப்போ இல்லன்னாலும் இன்னும் கொஞ்ச வருசத்தில் யாரையாச்சும் கல்யாணம் செய்துக்க போற தானே, அது இன்பாவா இருக்கணும்னு நினைச்சு பார்க்கலாமில்ல,” என்று மலர் கேட்க,

“நீ சொன்னாலும் சொல்லாட்டியும் என்னோட மனசுல அப்படி ஒரு எண்ணம் தான் இருக்கு மலர்.” என்றவள், தன் விரலில் இருக்கும்.மோதிரத்தை காட்டி, 

“இன்பா இந்த மோதிரத்தை என் கையில் போட்டப்போ, இனி இவங்க தான் என் வாழ்க்கைன்னு தான் நான் ஏத்துக்கிட்டேன். அடுத்தடுத்தும் அதையே தான் மனசுல பதிய வச்சிகிட்டேன். ஆனா அப்போ அது ஒரு கட்டாயத்தில் தான்,

இப்போ அந்த கல்யாணம் நின்னு போச்சு, ஆனாலும் இந்த மோதிரத்தை கழட்ட மனசு வரல, என்னவோ மனசுல பதிஞ்சு போன விஷயம், இப்போதும் இன்பாவை தவிர இன்னொருத்தரை கல்யாணம் செய்துக்க என்னால கண்டிப்பா முடியாது. இது தான் காதலான்னு கேட்டா எனக்கு சொல்ல தெரியல, திரும்ப நடந்ததை எப்படி சரி செய்றதுன்னு எனக்கு புரியல, திரும்ப நான் உங்களை கல்யாணம் செய்துக்கிறேன் என்று இன்பாக்கிட்டசொன்ன, அதுதான் ரொம்ப சுயநலமோன்னு தோனுது.

இதுல பணத்துக்காக மட்டுமே இன்பாவோட பழகியிருக்கேன். திரும்ப அவங்களோட வாழ்க்கையில் நான் இருக்கக் கூடாதுன்னு அவங்க வீட்டில் சொல்லும்போது இப்படியே விலகி இருக்கறது தான் நல்லதுன்னு தோனுது. எப்படியோ விதி என்னோட வாழ்க்கையை எப்படி கொண்டு போகுதோ போகட்டும்,” என்று நதி சொல்ல, மலருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 

நதி வாழ்க்கை இனியாவது எந்த குழப்புமில்லாமல் நல்லப்படியா அமையட்டும் என்று அவளால் கடவுளிடம் வேண்டி கொள்ள மட்டுமே முடிந்தது.

சங்கமிக்கும்..