US 10

உன்னில் சங்கமித்தேன் 10

இப்படி ஒரு விபரீதம் நடக்கும் என்று நதிவதனா எதிர்பார்க்கவில்லை. இப்படி நடக்க வேண்டுமென்று அவள் எதையும் திட்டமிட்டு செய்யவுமில்லை. எப்போது அவளுக்கு பரிசம் போடுவதாக சொல்லி இன்பா குடும்பத்தினர் வீடு தேடி வந்தார்களோ அப்போதே விதி வசம் தன் வாழ்க்கையை அவள் ஒப்படைத்திருந்தாள்.

பிடித்த படிப்பை படிப்போம் என்று அப்போது அவளுக்கு துளி கூட நம்பிக்கையில்லை. ஆனால் படித்தாள். இன்பா படிக்க வைத்தான். நினைத்த படிப்பை படிக்கவும், ஒரு நல்ல வேலையில் சேர்ந்திட வேண்டும், தன் குடும்ப நிலையை மாற்ற வேண்டுமென்ற எண்ணம் அவளுக்கு மீண்டும் துளிர் விட்டு அது மனதினுள் விருட்சமாக வளர ஆரம்பித்திருந்தது.

இப்போது இன்பா தான் அனைத்தும் செய்கிறான். அதேபோல் இதற்கு பிறகும் செய்வான் என்று அவளுக்கு தெரியும், அடுத்து சுதர்மன் ஒரு நிலையான வேலைக்கு போக ஆரம்பித்தால், பின் அவன் அந்த பொறுப்பை எடுத்துக் கொள்வான்.

ஏன் ஆண் பிள்ளைக்கு தான் அந்த கடமை இருக்கிறதா? ஒரு பெண் தன் உழைப்பால் தன் குடும்பத்தின் நிலையை மாற்ற முடியாதா? யாரின் தயவும் இல்லாமல் தன் குடும்ப நிலையை தன் கல்வியால் உயர்த்த வேண்டுமென்று நினைப்பது ஒன்றும் தவறில்லையே, அதற்கு திருமணம் தடையாக இருக்குமென்று தான் முதலில் திருமணத்தை மறுத்தாள்.

ஆனால் அவள் மறுப்பு அங்கு செல்லாக்காசாக போன பின்பு, சரி திருமணத்திற்கு பின்பும் வேலை செய்யலாம், தன் சம்பாதியத்தில் தன் குடும்பத்திற்கு செய்யலாம் என்று நினைத்திருந்தவளுக்கு அந்த இரண்டு பெண்களின் பேச்சு அது முடியாதோ என்பதாக நினைக்க வைத்திருந்தது.

இன்பா அதற்கு மறுப்பு சொல்ல மாட்டான் என்று புரிந்தாலும், சரஸ்வதி அப்படி இருப்பார் என்று சொல்ல முடியாதே, எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், ஏன் இவளே கூட மாறிப் போகலாம், அப்போது இவளின் கனவுகள் என்னாகுமோ என்ற கலவரம் அவள் மனதில் உருவெடுத்தது.

தோழியிடம் பேசிவிட்டு இதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டு வந்தவள், வலது பக்க திருப்பத்தில் திரும்பும் போது வந்துக் கொண்டிருந்த வேனை கவனிக்கவில்லை. ஒருநொடி இன்பா அங்கு வந்து அவளை தன்னோடு சேர்த்தப்படி கீழே விழவில்லை என்றால், அடுத்து என்ன பயங்கரம் நேர்ந்திருக்குமோ, 

தன் உயிருக்குயிரானவளை இப்படி ஒரு ஆபத்தில் பார்த்த அவனுக்கு இதயம் பதறியது. தன்மேல் விழுந்து கிடந்தவளை பிடித்திருந்தவனின் பிடி சிறிது நேரத்திற்கு இறுக்கமாக இருந்தது. ஆனால் நதி எதையும் உணராமல் ஒரு ஜடம் போல் அவன் மீது விழுந்து கிடந்தாள்.

இவர்கள் விழுந்ததுமே வேனில் இருந்து இறங்கிய ஓட்டுநர் இறங்கி அவர்கள் அருகில் வர, இன்பா அவளை விலக்கியவன், எழுந்து அவளையும் கைப்பிடித்து எழுப்பினான். அப்போதும் அவள் அந்த உலகத்தில் இல்லை என்பது போல் நின்றிருந்தாள்.

“ஏதாச்சும் அடிப்பட்டுதா?” என்று ஓட்டுநர் விசாரிக்க, 

“பார்த்து வர மாட்டீங்களா? ஒருநிமிஷம் நான் பார்க்கலன்னா எவ்வளவு பெரிய விபத்து நடந்திருக்கும் தெரியுமா?” என்று இன்பா சொல்ல,

“நான் திரும்பும் போது ஹாரன் அடிச்சிட்டு தான் ப்பா திரும்பினேன். இந்த பொண்ணு தான் அதை கவனிக்கல, அதுவும் இல்லாம ஓரமா நடந்து போகாம நடுவால நடந்து வருது. என்னை என்ன செய்ய சொல்ற,” என்று அந்த ஓட்டுநரும் தன் மீது தவறில்லை என்று கூறினார்.

ஆமாம் இன்பாவும் வண்டியில் வரும்போது கவனித்ததில் நதி மீது தான் தவறு என்பது தெரிந்தது. ஆனாலும் அவளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் என்ற படப்படப்பில் அப்படி கூறியிருந்தான்.

“ம்ம் சரி எங்களுக்கு ஒன்னும் ஆகல, நீங்க போங்க,” என்று ஓட்டுநரை அனுப்பியவன், அவர் சென்றதும், “என்ன யோசனையில் வர, நான் ஒரு நொடி லேட்டா வந்திருந்தாலும், என்னாகியிருக்கும் தெரியுமா?” என்று அவளிடம் கேட்க,

“என்னாகியிருக்கும்? செத்து போயிருப்பேனா? அப்படி செத்து போனாலும் நல்லது தான், கல்யாணம் என்கிற புதைக்குழியில் புதைந்து போவதற்கு பதிலா, ஒரேடியா செத்து போகலாம்,” என்றாள்.

அவளது பேச்சு அவனுக்கு அப்படி ஒரு அதிர்ச்சியை கொடுத்தது. அவள் ஏன் இப்படி பேசுகிறாள்? அவள் இப்படி பேச என்ன காரணம்? அவனுக்கு சுத்தமாக புரியவில்லை. அவர்கள் பேசி கொண்டிருப்பது தெரு என்பதால், அருகில் அவர்களுக்கு தெரிந்தவரின் தோப்பு இருக்கவே, அவளை அங்கே அழைத்துச் சென்றவன்,

“என்னாச்சு நதி, ஏன் இப்படி பேசற, உன்னை யாராச்சும் ஏதாவது சொன்னாங்களா? யார் என்ன பேசினது? அலமேலு அக்காவா? இல்லை அத்தையா? யார் என்ன சொன்னாங்க? இல்லை எங்க வீட்டில் ஏதாச்சும் சொன்னாங்களா? ஏன் கல்யாணம் பிடிக்காத மாதிரி பேசற, என்னாச்சு உனக்கு?” என்று கேட்டான்.

“நடக்கற ஒவ்வொன்னுக்கும் எனக்கு எதுவும் ஆகாம இருக்கே, அதுதான் பிரச்சனை? எல்லோரும் ஆட்டுவிக்கும் பொம்மையா தானே நான் இருக்கேன். அதுதான் என்னோட பிரச்சனை. நீங்க சொன்னப்போ படிக்கமா கல்யாணம் செய்துக்கணும், அடுத்து நீங்க சொன்னதுக்காக படிக்கணும், இப்போ திரும்ப படிச்சு முடிக்கும் முன்னமே கல்யாணம். இங்க என் விருப்பத்துக்கு என்ன மதிப்பு இருக்கு, எல்லாம் நீங்க சொன்ன மாதிரி தானே நடக்கும்?” என்று அவள் பேச,

அதில் நீங்க என்று அவள் பேசியது பொதுவாக அவளது அன்னை, பாட்டி, இன்பாவின் பெற்றோர், இன்பா, கண்மணி என்று அனைவரையும் குறிப்பது தான், சிறிது நாட்களாகவே படிப்பு படிப்பு என்று சரியான உறக்கம் இல்லை. இதில் திருமணத்தை நினைத்து ஏற்கனவே கலக்கம். இதில் அந்த இரு பெண்கள் பேசியது வேறு என்று ஒருவித மன அழுத்தத்தில் இருந்தவளுக்கு என்ன பேசுகிறோம் என்பதை உணராமலேயே பேசி கொண்டிருந்தாள்.

ஆனால் அவனை குறிப்பிட்டு சொல்கிறான் என்று நினைத்து கொண்டவன், “எல்லாம் உன்னோட சம்மதத்தோட  தானே இங்க நடக்குது நதி,” என்றான்.

“என்ன என் சம்மதத்தோட நடக்குது? எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பம் இருக்கா இல்லையான்னு உங்களுக்கு தெரியுமா? என்று அவள் கேட்க,

“அப்போ உனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லையா?” என்று அவன் அதிர்ச்சியாக கேட்டான்.

“இல்லன்னா மட்டும் அதை வெளிப்படையா சொல்ல எனக்கு உரிமை இருக்கா என்ன? எனக்கு இஞ்சினியரிங் படிக்கணும், கேம்பஸில் செலக்ட ஆகி, பிளேஸ்மென்ட் கிடைச்சு, ஒரு நல்ல வேலைக்கு போகணும், என்னோட குடும்ப நிலையை மாத்தணும், இதுதான் என்னோட ஆசை. அதுக்கேத்த வசதியில்லன்னா என்னால என்ன செய்ய முடியும்?

ஏற்கனவே உங்க தயவில் தான் நாங்க இருக்கோம், இப்போ இந்த படிப்பும் உங்களால் தான் கிடைச்சுது, அப்படியிருக்க இந்த கல்யாணம் வேண்டாம்னு நான் எப்படி சொல்ல முடியும்? சொன்னா நான் நன்றி மறந்தவளா ஆகிடுவேன். அப்போ எனக்கு இதைவிட்டா வேற வழி என்ன இருக்கு?” என்று இத்தனைநாள் மனதில் போட்டு மறுகி கொண்டிருந்த அனைத்தையும் கொட்டிவிட்டாள்.

ஆனால் அவளை மனப்பூர்வமாக நேசிக்கும் அவனுக்கு இந்த வார்த்தைகள் அவன் மனதை எத்தனை ரணமாக்கும் என்பதை அவள் துளி கூட புரிந்துக் கொள்ளவில்லை.

அவள் இவ்வளவு பேசிய பிறகும் அதையெல்லாம் ஒதுக்கி அவளை அவன் திருமணம் செய்து கொண்டால் அவன் ஆண்மகனே இல்லை. ஆனால் இதில் ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், இந்த திருமணம் வேண்டாமென்றாளே தவிர, அவனை பிடிக்கவில்லை என்று கூறவில்லை. ஒருவேளை அதுவும் உண்மையாக இருக்கலாம், ஆனால் அதை அவள் சொல்லி கேட்கும் தைரியம் அவனுக்கில்லை.

“சரி வா வீட்டுக்கு போகலாம்,” என்று அவனே வண்டியில் அவளை அழைத்து போனான். அப்போது அலமேலு தான் வீட்டில் இருந்தார். கல்லூரியிலிருந்து வருபவள் இன்பாவோடு வருகிறாளே என்ற கேள்வியோடு, “வா வா இன்பா, காபி போடவா,” என்று அவனை வரவேற்க,

“இல்லக்கா எனக்கு வேலையிருக்கு நான் போகணும்,” என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பியவன் நேராக வீட்டிற்கு சென்றதும்,

“நடந்துட்டிருக்க ஏற்பாடெல்லாம் நிறுத்துங்க, இந்த கல்யாணம் நடக்காது.” என்றான்.

சரஸ்வதிக்கும் கண்மணிக்கும் அவன் என்ன சொல்கிறான் என்று புரியவில்லை. “என்னாச்சு இன்பா, ஏதாச்சும் பிரச்சனையா? அதுக்கு ஏன் கல்யாணத்தை நிறுத்தணும்?” என்று சரஸ்வதி கேட்க,

“ஏன் ண்ணா, எதனால இப்படி சொல்ற?” என்று கண்மணியும் அவனை கேட்டாள்.

“அதெல்லாம் என்கிட்ட ஒன்னும் கேட்காதீங்க, இந்த கல்யாணம் நடக்காது. அவ்வளவு தான்,” என்று அவன் சொல்ல,

“என்ன இன்பா, உனக்கிது விளையாட்டா போச்சா?” என்ற சரஸ்வதியின் பேச்சை கேட்க அடுத்து அவன் இங்கில்லை.

சரஸ்வதிக்கோ ஒன்றும் புரியவில்லை. முக்கியமான நேரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் கணவரும் இப்போது இல்லை. ஏதாவது யோசனை சொல்லும் அன்னையும் அதற்கு முன்னே இந்த உலகத்தில் இல்லை. இப்போது இந்த வீட்டிற்கு பெரியவர் என்றால் அது சிந்தாமணி தான், அதனால் உடனே அலமேலுவின் அலைபேசிக்கு அழைத்தார்.

அப்போது சிந்தாமணி பக்கத்து வீட்டில் கதை பேசிவிட்டு வீட்டிற்கு வந்திருக்க, அலமேலு அலைபேசி இசை எழுப்பியதும், தமிழில் வந்திருக்கும் பேரை எழுத்து கூட்டி படித்தவர், அழைப்பை ஏற்று “சொல்லுங்க அம்மா,” என்று பேச,

சரஸ்வதியோ சிந்தாமணியிடம் பேசியை கொடுக்க சொல்லவும், அவரும் கொடுத்தார். சிந்தாமணி காதில் அலைபேசியை வைத்தவர், “சொல்லு சரசு,” என்று பேச,

“சித்தி, இன்பா கல்யாணத்தை நிறுத்தணும்னு சொல்றான். காரணம் கேட்டா ஒன்னும் சொல்ல மாட்டேங்குறான். நீங்க கொஞ்சம் வீட்டுக்கு வந்து என்னன்னு கேளுங்க,” என்று அவர் படபடவென்று பேச,

“ஏன் என்னவாம், கிறுக்கு பிடிச்சுக்கிச்சா அவனுக்கு, கல்யாணம் என்பது விளையாட்டாமா அவனுக்கு, இரு நான் வரேன்.” என்றவர், அழைப்பை அணைத்ததும்,

சிந்தாமணி பேசி கொண்டிருப்பதை அலமேலு அருகில் நின்று கேட்டு கொண்டிருந்தவர், “என்னாச்சு அத்தை,” என்று கேட்டார்.

“இன்பா இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்றானாம், காரணம் கேட்டா சொல்ல மாட்டேங்குறானாம், சரஸ்வதி படபடப்பா பேசறா,” என்று அவரும் கலக்கத்தோடு சொல்ல, அவர் பேசியது அறைக்குள் முடங்கியிருந்த நதிக்கும் கேட்டது.

“என்னாச்சு இந்த பயலுக்கு, எப்போ கல்யாணம்னு ஆசை ஆசையா தானே இருந்தான். இப்போ என்ன வந்ததாம்,” என்று சிந்தாமணி என்ன நடந்திருக்கும்? என்று தெரியாமல் கேள்விகள் கேட்க, அலமேலுவிற்கு ஏதோ புரிந்தது போல் இருந்தது.

என்றைக்கும் இல்லாமல் இன்று நதியை இன்பா கொண்டு வந்து விட்டுவிட்டு போனான். அவர்கள் வந்தபோது அவள் முகமும் சரியில்லை. அவன் முகமும் சரியில்லை. இதோ வந்ததிலிருந்து நதி அறைக்குள்ளேயே முடங்கியிருக்கிறாள். அதெல்லாம் அலமேலுவிற்கு சந்தேகத்தை கிளப்ப, விறுவிறுவென அறைக்குள் சென்றவர்,

“இன்பாக்கிட்ட என்ன சொன்ன நீ? கல்யாணம் வேண்டாம்னு அவன்க்கிட்ட சொன்னீயா? சொல்லு என்ன சொன்ன?” என்று நதியை பார்த்து கேட்டார்.

ஆரம்பத்தில் இந்த திருமணம் வேண்டாமென்று மறுத்தது அவள் தானே, அப்போது படிக்க வேண்டுமென்ற ஆசையில் அவள் திருமணத்தை மறுத்தாள் சரி, இப்போது தான் அவளுக்கு பிடித்த படிப்பை படித்து முடிக்க போகிறாளே? இப்போது என்ன வந்ததாம்? என்றிருந்தது அலமேலுவிற்கு,

அவர் நதியிடம் கேட்டது சிந்தாமணியின் காதிலும் விழ, “என்ன சொல்ற, இவளா இன்பாக்கிட்ட பேசியிருப்பான்னு சொல்ற, இருக்காது.” என்று அவளுக்கு பரிந்து கொண்டு வந்தார்.

“இல்லை அத்தை, இவதான் ஏதோ சொல்லியிருக்கா,” என்று இன்று நடந்த விஷயத்தை அலமேலு சிந்தாமணியிடம் கூற,

“அம்மா சொல்றது உண்மையா நதி, நீயா இன்பாக்கிட்ட இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்ன,” என்று சிந்தாமணியும் அவளிடம் கேட்க,

அவள் என்னவென்று கூறுவாள்? பேசிய பின்பு தான், தான் அதிகம் பேசிவிட்டோம் என்று அவள் உணரவே ஆரம்பித்தாள். இத்தனை நாள் நடந்ததற்கு அவரவர் சூழ்நிலைகள் காரணமாக அமைந்தால், இன்று நடந்ததற்கு அவள் மட்டுமே காரணம். அவள் பக்கம் மட்டுமே யோசிச்சு பேசிவிட்டாள், அதன்பின் தான் அது சுயநலமாக தோன்றியது.

இனி அவனிடம் எப்படி? என்ன சமாதானம் பேச முடியும் என்று அவள் யோசித்து குழம்பி கொண்டிருக்க, இப்போது அவன் திருமணத்தையே நிறுத்த சொல்கிறான் என்ற செய்தியை கேட்டு அவள் இன்னுமே அதிர்ந்தாள். அப்படி எந்த நோக்கத்திலும் அவனிடம் அவள் பேசவில்லை. இனி அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றும் புரியாத நிலையில், அவர்களிடம் அவள் என்ன பதில் கூறுவாள்? அவள் மௌனமாகவே இருக்க,

“சும்மாவே கோபம் வந்து ஏதாச்சும் பதில் பேசுவாளே, இப்போ இப்படி அமைதியா இருக்கறதிலேயே தெரியலையா? இவ தான் இன்பாக்கிட்ட ஏதோ சொல்லியிருக்கா,” என்று அலமேலு கூறவும்,

“உன்னோட அம்மா சொல்றது உண்மை தானா? நீயா உன்னோட தலையில் மண்ணை வாரி போட்டுக்கிட்டியா? எந்த பிசாசு வந்து உன்னை இப்படி ஆட்டி படைக்குதோ,” என்று சிந்தாமணி வருத்தமாக பேச,

“எந்த பேயோ பிசாசோ இல்லை அத்தை, இவளுக்கு பெரிய படிப்பு படிக்கிறோம் என்கிற திமிரு, அதான் இப்படியெல்லாம் நடந்துக்கிறா,” என்று அலமேலு அவளை திட்டினார்.

அனைத்திற்கும் நதி எதுவும் பேசாமல் மௌனமாகவே இருக்க, “இவ வாய திறக்கமாட்டா, நான் போய் இன்பாவை பார்த்து என்ன ஏதுன்னு கேட்டுட்டு வரேன்.” என்று சிந்தாமணி கிளம்பினார்.

“இன்பா இன்பா,” என்று சிந்தாமணி அவனை அழைத்தப்படி வீட்டினுள் வர, 

“வாங்க சித்தி, இன்பாக்கு என்னாச்சு? ஏன் இப்படி சொல்றான்? நீங்களாவது என்னன்னு கேளுங்க, உங்கக்கிட்டேயாவது சொல்றானா பார்க்கலாம்,” என்றப்படி சரஸ்வதி அவர் அருகே வர, உடன் கண்மணியும் வந்தாள்.

இன்பாவும் சிந்தாமணியின் குரல் கேட்டு அவன் அறையிலிருந்து வெளியே வர, அவனை பார்த்து அவனிடம் சென்றவர், “ஏன் இன்பா இந்த கல்யாணத்தை நிறுத்தணும்னு சொல்ற? நதி உன்கிட்ட ஏதாவது சொன்னாளா? என்ன சொன்னா இந்த கல்யாணத்தை நிறுத்தணும்னு சொன்னாளா? அவ புரியாம இப்படி நடந்துக்கிறான்னா, அவ பேச்சை கேட்டு நீயும் இப்படி ஒரு முடிவெடுக்காத, கல்யாணம்னா உங்களுக்கு விளையாட்டா போச்சா,” என்று பேச,

“என்ன சித்தி சொல்றீங்க? நதி தான் இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னாளா?” என்று சரஸ்வதி சிந்தாமணியிடம் கேட்டவர்,

“அப்படியா இன்பா, நான் வேணும்னா நதிக்கிட்ட பேசட்டுமா?” என்று அவனிடமும் கேட்க,

“இங்கப்பாருங்க கல்யாணத்தை நிறுத்தணும்னு சொல்றது என்னோட முடிவு. நதிக்கிட்ட இந்த விஷயமா யாரும் பேச கூடாது. என்னோட இந்த முடிவில் மாற்றமில்லை. கல்யாணம் நின்னது நின்னது தான்,” என்று உறுதியாக கூறிவிட்டான்.

கணவரது ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்பதை விட, மகனின் ஆசை நிறைவேறவில்லையே என்பது தான் சரஸ்வதியின் பெரிய கவலையாக இருந்தது. இன்பாவிற்கு நதியை எவ்வளவு பிடிக்கும் என்பது ஒரு தாயாக அவர் அறியாததா? அப்படியிருக்க அவனே இந்த திருமணத்தை நிறுத்த சொல்கிறான் என்றால் நதி அந்த அளவுக்கு ஏதோ சொல்லியிருக்கிறாள் என்பது புரிந்து அவரின் கோபம் அவள் பக்கம் திரும்பியது.

“என் மகனுக்கு என்ன குறைச்சல், அவனை ஏன் வேண்டாம்னு சொன்னாளாம்? பெரிய படிப்பு படிச்ச திமிரா? ஆனா அந்த படிப்பே என் மகன் தானே படிக்க வச்சான். அந்த நன்றி கூட மறந்துட்டாளா?” என்று அவர் வெளிப்படையாக சொல்லி புலம்ப,

கண்மணியோ நதியை பார்த்து நேராகவே, “என் அண்ணனை கல்யாணம் செஞ்சுக்க பிடிக்காதுன்னா அதை முதலிலேயே சொல்லியிருக்க வேண்டியது தானே, அப்போ வாயை மூடிட்டு இருந்துட்டு, இப்போ வேண்டாம்னு சொல்ல என்ன காரணம்? ஓ அப்போ உனக்கு இஞ்சினியரிங் படிக்க வேண்டியதா இருந்துச்சு, இப்போ படிச்சு முடிச்சிட்ட, அதனால என்னோட அண்ணன் உனக்கு கீழே தெரியுதோ,” என்று கேட்டாள்.

அதில் நதி மிகவும் காயப்பட்டு போனாள். யாரும் தன்னை புரிந்து கொள்ளவில்லை. தன் தோழியிடமாவது தன்னிலை விளக்கத்தை சொல்லலாம் என்று நினைத்திருந்தால், இப்போது அவளே இப்படி பேசினால்? மற்றவர்கள் எப்படி தன்னை புரிந்துக் கொள்வார்கள் என்று நினைத்து அவளுக்கு வேதனையாக இருந்தது.

முன்னைவிட இப்போது தான் அவள் இன்னும் மன அழுத்தத்திற்கு ஆளானாள். அலமேலுவும் சிந்தாமணியும் என்னவோ இவளை மரண தண்டனை குற்றவாளி போல் தங்கள் பேச்சால் காயப்படுத்தினர். ஏன் சுதர்மன் கூட அப்போது அவளை புரிந்துக் கொள்ளாமல் கோபப்பட்டான். 

ஊரில் உள்ளவர்களுக்கு மெல்ல கல்யாணம் நின்று போன விஷயம் தெரிந்து, ஆளாளுக்கு ஒவ்வொன்று பேசினர். நதிக்கு இந்த விஷயத்தை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லை. 

இன்பாவை நேருக்கு நேர் பார்த்து பேச தயக்கம் கொண்டவள், அவனை அலைபேசியில் அழைத்தாள். அவன் அழைப்பை ஏற்றதும், “நான் அன்னைக்கு வேற ஒரு டென்ஷன்ல ஏதேதோ பேசிட்டேன். அதை நீங்களும் இத்தனை சீரியஸா எடுத்திருக்க வேண்டாம், நான் இந்த கல்யாணம் நிக்கணும் என்கிற நோக்கத்தில் பேசல,” என்று தயங்கி தயங்கி அவனிடம் கூற, 

“ஆனா கல்யாணம் நடக்காம இருந்தா நல்லா இருக்கும்னு நினைச்சிருக்க தானே, இங்கப்பாரு இந்த கல்யாணத்தை நிறுத்தினதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. இதைப்பத்தி நீயும் பெருசா எடுத்துக்காம உன்னோட படிப்பில் கவனம் செலுத்து, அப்போ தான் உன்னோட விருப்பப்படி உனக்கு காம்பஸில் நல்ல வேலை கிடைக்கும்,” என்று சொல்லி வைத்துவிட்டான்.

அவன் முடிவில் உறுதியாக இருந்ததால், அகத்தியன் இறந்த 3 மாதத்தில் தான் திருமணத்தை நடத்த முடியவில்லை. கண்மணி தான் படித்து முடித்து இப்போது வீட்டில் தானே இருக்கிறாள். அவளுக்காகவது ஒரு மாப்பிள்ளை பார்த்து இந்த ஒரு வருடத்திற்குள்ளாவது திருமணத்தை நடத்த சொல்லி, உறவினர்கள் கூற, சரஸ்வதி கண்மணிக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்.

இந்த பிரச்சனையால் இரண்டு குடும்பமும் வெளிப்படையாக சண்டை போட்டு கொள்ளவில்லையென்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி விட்டனர்.

இன்பா என்னவோ திருமணம் நிற்பது தான் ஒரே வழி என்று முடிவெடுத்து விட்டான். ஆனால் முன்பும் சரி, இப்போதும் சரி நதிக்கு தான் மனரீதியாக அதிக பிரச்சனை. தன் வீட்டிலேயே அந்நியமாக உணர்ந்தாள். அந்த இறுதி வருட படிப்பை முடித்து ட்ரெயினிங் செல்லும் வரை அவள் எவ்வளவு கஷ்டப்பட்டாள் என்று அவளுக்கு தான் தெரியும், ஆனால் படிப்பு ஒன்று தான் ஊன்றுகோல் என்பதால் அதை மட்டும் அவள் கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.

பழைய விஷயங்களை யோசித்தப்படி இருந்தவளை அலைபேசி அழைப்பு நடப்பிற்கு கொண்டு வந்தது. அவளுடன் பணி புரியும் மலர் தான் அழைத்திருந்தாள். மலரை மைசூரில் ட்ரெயினிங் நாட்களிலிருந்தே தெரியும், இரண்டு பேருக்கும் ஒரே இடத்தில் வேலை கிடைத்ததும் இன்னும் நெருங்கி விட்டார்கள். மலருக்கு சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம். இங்கு தாம்பரத்தில் ஒரு மகளிர் விடுதியில் தங்கியிருக்கிறாள்.

அவளின் அழைப்பை ஏற்று நதி பேசி கொண்டிருக்கும்போது, “அய்யோ அலமேலு, என்னாச்சு?” என்ற சிந்தாமணியின் குரலில் போனை அப்படியே போட்டுவிட்டு நதி வெளியில் போய் பார்க்க, அலமேலு மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.

சிந்தாமணியின் குரலில் சுதர்மனும் அங்கு வந்துவிட, இருவரும் அலமேலுவின் முகத்தில் தண்ணீர் தெளித்து பார்த்தும் அவர் விழிக்காமல் இருக்க, மூவருக்கும் மிகவும் பயமாகிவிட்டது. சுதர்மன் சென்று ஆட்டோ கூட்டி வர, சிந்தாமணியை வீட்டிலேயே இருக்க சொல்லிவிட்டு அலமேலுவை இருவரும் உடனே மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

சங்கமிக்கும்..