US 1

உன்னில் சங்கமித்தேன் 1

சூரியன் தன் பணியை செய்ய மெல்ல தன் தலையை காட்ட ஆரம்பித்த அந்த காலை வேளை மைசூரிலிருந்து சென்னைக்கு செல்லும் பேருந்தில் அமர்ந்திருந்தாள் நதிவதனா. கல்லூரியில் கேம்பஸில் தேர்வாகி அவளுக்கு கிடைத்த பணி நிமித்தமாக ஆரம்பக்கட்ட ஒருவருட பயிற்சி நேற்றோடு முடிந்து சென்னையிலேயே அவள் வேலை செய்வது உறுதியாகிவிட்டதில் இப்போது சொந்த ஊருக்கு செல்லும் மகிழ்ச்சி ஒருபுறமிருந்தாலும், பெற்ற அன்னை தன்னிடம் அன்னியமாய் இருப்பதில் பேசாமல் வேறு ஏதாவது மாநிலத்திலேயே வேலை கிடைத்திருக்கலாம் என்ற மனநிலை தான் அவளுக்கு பெரிதாக இருந்தது.

ஆனாலும் அந்த மனநிலையை நொடி பொழுதில் மாற்றிக் கொண்டாள். அன்னையின் கோபம் எத்தனைநாள் தான் தாக்கு பிடிக்குமாம், இத்தனைநாள் தள்ளியே இருந்ததால் அவர் கோபம் குறையாமல் இருந்தது. இப்போது அவருடனேயே இருக்கும்போது அந்த கோபம் குறையாமலா போய்விடும், அவள் சகோதரனும் இப்போது அவள் பக்கம் தானே பேசுகிறான். அதனால் அன்னையை எளிதாக சமாதானப்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது. அன்னையையே சமாதானப்படுத்தி விட முடியும் என்றால், பாட்டியை வழிக்கு கொண்டு வருவது அவளுக்கு பெரிய விஷயமேயில்லை.

அதுவுமில்லாமல் வேறெங்காவது வேலை கிடைத்தால் தங்குமிடம், சாப்பாடு, இதர செலவுகள் என்று குறிப்பிட்ட தொகையை அவளுக்கென ஒதுக்க வேண்டும், மீதி அன்னை, பாட்டி மற்றும் தம்பியின் தேவைக்கு அனுப்பினால், எப்படி சேமிக்க முடியும்? எப்படி கடனை அடைக்க முடியும்?

இப்போதானால் அவள் வேலை செய்யும் நிறுவனத்தின் பேருந்து அவள் ஊருக்கே வந்து அவளை அழைத்துக் கொண்டு போகும், அதனால் அவள் வீட்டிலேயே இருக்கலாம், அவளுக்கு வரும் வருமானத்தில் குறிப்பிட்ட தொகையை சேமித்து கடனை அடைத்துவிடலாம் என்பதே இப்போதைய நிம்மதியான விஷயம் என்று அவள் நினைத்தாள்.

அதேநேரம் அவள் தான் அதை கடன் என்கிறாள். ஆனால் அவன் அதை கடனாக நினைக்கவில்லையே, அவளாக கொண்டுபோய் கொடுத்தாலும் அதை அவன் வாங்கிக் கொள்வானா என்பதே நதிவதனாவிற்கு பெரிய கவலையாக இருந்தது.

இல்லை எப்படியும் அந்த கடனை அடைத்துவிட வேண்டும், இல்லையென்றால் அவனை சார்ந்தவர்கள் என்னமோ அவளை ஏமாற்றுக்காரி, துரோகி என்ற அளவுக்கு பேசுவது அதிகமாகத்தான் ஆகும், அவளை மட்டுமல்ல அவள் குடும்பத்தையும் மோசமாக தான் பேசுவார்கள் என்று நினைத்து பார்த்தவள், அவள் முடிவில் உறுதியாக இருந்தாள்.

நடந்தவை அனைத்துக்கும் முக்கிய காரணம் அவன்தான், ஆனால் பழி என்னவோ அவள் மீது விழுகிறது. வேண்டாமென்று முடித்துக் கொண்டவன் அவனே ஆனால் அவள் தான் அனைத்துக்கும் காரணம் என்பதுபோல் பேச்சு, மற்றவர்கள் பேசுவது கூட பரவாயில்லை. பெற்ற அன்னையே அப்படி சொல்வது தான் அவளுக்கு வருத்தமாக இருந்தது. எல்லாம் பாட்டி உடன் இருப்பதால் வந்தது. அவர் நினைத்தது நடக்கவில்லை என்று அன்னையை தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்.

இப்படியான சிந்தனை மனதில் ஓடிக் கொண்டிருக்கும்போதே, ‘உன்னோட மனசை தொட்டு சொல்லு நதி, அவன் தான் அனைத்தையும் முடித்துக் கொண்டானா? அவன் தான் வேண்டாம் என்றானா? இதில் உன் பங்கு துளி கூட இல்லையா? நீதான் உலகம் என்பதுபோல் உன்னை சுத்தி சுத்தி வந்தவனை, வெறும் கடமைக்காக கடனுக்காக திருமணம் செய்துக் கொள்ள தயாராக இருந்தாயே, அதை வாய் வார்த்தையால் அவனிடமே கூறினாயே, அப்போது அவன் எப்படி அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும்?

அதனால் தான் அவன் அப்படி ஒரு முடிவெடுத்தான். அந்த முடிவில் உனக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் வந்து சேர்ந்ததை உன்னால் மறுக்க முடியுமா சொல்? ஆனால் அவனது இந்த முடிவு அவன் விரும்பி எடுக்கவில்லை என்பது உனக்கே தெரிந்திருக்கும், அவன் குடும்பத்தாருக்கு அவனது இந்த முடிவு எப்படிப்பட்ட அதிர்ச்சியை கொடுத்திருக்கும் என்பது உனக்கு புரியவில்லையா? அப்படியிருக்க அவன் குடும்பத்தார் உன்னை சீராட்டுவார்கள் என்று நினைப்பா?’ என்று அவளின் மனசாட்சி கேள்விகள் கேட்க,

“அவனுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் போதுமா? எனது விருப்பங்கள் பற்றி அவனுக்கு கவலை இல்லையா? அதைப்பற்றி அறிந்துக் கொள்ளத்தான் நினைத்தானா? இல்லை அவன் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் அதைப்பற்றி யோசித்திருப்பார்களா? ஏன் உயிருக்கு உயிரான தோழி என்றிருந்தவளே சகோதரன் என்று வரும்போது அவனுக்கு ஆதரவாக தானே நின்றாள். யாரும் என் மனநிலை என்னவென்று யோசிக்கவில்லையே, அவர்கள் மட்டும் பெண் கேட்டு வரவில்லையென்றால் எனக்கு ஏன் இப்படி ஒரு நிலை?” என்று அவளும் தன் நியாயங்களை எடுத்துரைத்தாள்.

‘அப்படி பெண் கேட்டு வரவில்லையென்றால் நீ விரும்பிய இஞ்சினியர் படிப்பை படித்திருக்கவும் முடியாது. இப்போது இப்படி ஒரு நிலையிலும் நீ இருந்திருக்கவும் முடியாது. நீ இப்படி ஒரு நல்ல நிலையில் இருக்க அவன் தான் காரணமென்பதை என்றும் மறக்காதே,’ என்று மீண்டும் மனசாட்சி குரல் கொடுக்க,

“நான் எப்போது அதை மறந்தேன்? அவன் செய்தததற்கு என்றும் கடமைப்பட்டவளாக, நன்றியுள்ளவளாக இருக்க தான் நினைக்கிறேன். ஆனால் அவன் அதற்கும் மேல் என்னிடம் எதிர்பார்த்தால் நான் என்ன செய்வது?” என்று நதி மனசாட்சியிடம் எதிர் கேள்வி கேட்டாள்.

இத்தனை நேரம் அவன் என்று நதி தன் மனசாட்சியுடன் பேசிக்கொண்டிருக்கும் அவன் இன்பசாகரன். நதியின் தந்தை வளவனின் தாய்மாமன் அகத்தியனின் மகன் தான் அவன், வளவனின் தாய்மாமாவிற்கு மிகவுமே தாமதமாக திருமணம் நடந்ததால் வளவனை விட இன்பசாகரன் 20 வயது இளையவன். 

நதிவதனாவிற்கு கருத்து தெரிந்து அவனை முதலில் பார்த்தது அவளது பத்து வயதில் தான், அப்போது தான் அந்த ஊரில் குடியேற அவர்கள் வந்திருந்தார்கள். அதற்கு முன் வசித்து வந்த ஊரில் கடன் தொல்லை அதிகமாகி, இருந்த வீட்டையும் நிலபுலங்களையும் விற்றுவிட்டு தனது அன்னையின் பிறந்த ஊரில் அவருக்கென பாகம் பிரித்த வீட்டில் இருந்து கொண்டு ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று வளவன் தன் குடும்பத்தை அந்த ஊருக்கு அழைத்து வந்திருந்தார்.

செங்கல்பட்டு அருகில் ஒரு கிராமம் தான் அந்த ஊர். வீடு கொஞ்சம் பழைமையான ஓட்டு வீடு தான், வளவனின் அன்னை மற்றும் இன்பசாகரனின் தந்தை இருவரும் பிறந்து வளர்ந்த வீடு அது,

அகத்தியனுக்கு திருமணம் ஆனதும் அவர்கள் தோப்பு இருந்த இடத்திலேயே பெரிய வீடு கட்டிக் கொண்டு குடியேறிவிட, அவர்களின் பூர்வீக வீட்டை தனது சகோதரிக்கு கொடுத்துவிட வேண்டுமென்று அவர் முடிவு செய்துவிட்டார். ஆனால் இத்தனை வருடமாக அதை ஏற்றுக் கொள்ளாமல் வளவனின் அன்னை சிந்தாமணி இருந்துவிட, பின் மகனின் நிலையை கண்டு தான் இந்த ஊருக்கு வர சம்மதித்தார்.

ஆள் இல்லாமல் பாழடைந்து போயிருந்த வீட்டை அகத்தியன் சரிசெய்து வைக்க, கொண்டு வந்த பொருட்களை கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே வைத்து கொண்டிருந்தனர். அகத்தியனுக்கு வேலை இருந்ததால் தன் மகனை உதவிக்காக அவர் அனுப்பி வைத்திருந்தார்.

அப்போது இன்பசாகரனுக்கு பதினேழு வயதிருக்கும், லேசாக முளைத்த மீசையுடன், ஒல்லியான தோற்றத்துடன் வளவனோடும் வண்டிக்காரரோடும் சேர்ந்து அவனும் பொருட்களை எடுக்க உதவிக் கொண்டிருந்தான். 

தளம் போட்ட தாங்கள் முன்பிருந்த வீடு போல் இந்த வீடு இல்லாததால் நதி உற்சாகமிழந்து காணப்பட்டவள், உள்ளே அமர்ந்து அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, “ஏய், என்ன வீட்டுக்கு விருந்தாளியா வந்த மாதிரி உட்கார்ந்திருக்க, இந்தா இதை கொண்டு போய் உள்ளே வை.” என்று மிரட்டும்படியாக கூறியவனை அப்போதே அவளுக்கு பிடிக்கவில்லை.

அவள் அவனை முறைத்து பார்க்க, “ஏய், என்ன என்னை முறைச்சு பார்க்கிற? பார்க்கும் அந்த முட்டை கண்ணை அப்படியே தோண்டி வெளிய எடுத்துடுவேன். இனி நீங்க இந்த வீட்டில் தானே இருக்கப் போறீங்க, அப்போ உங்க வீட்டு வேலையை நீதானே செய்யணும், என்னமோ மகாராணி கணக்கா உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிற,” என்று அப்போதும் அவன் மிரட்டலாக பேசவும், அவள் அழ ஆரம்பித்துவிட்டாள்.

அவள் அழுவதை பார்த்ததும், “ஹே நான் சும்மா தான் மிரட்டினேன். பயந்துட்டீயா? நீ ஒன்னும் செய்ய வேண்டாம், பேசாம உட்காரு, அழாதம்மா தாயே,” என்று இப்போது அவன் கெஞ்ச ஆரம்பித்துவிட்டான்.

அதற்குள் அங்கு வந்த நதியின் தாய் அலமேலு, “என்ன நதிம்மா, ஏன் அழற?” என்று அவளிடம் கேட்டவர்,

“என்னாச்சு இன்பா? எதுக்கு இவ அழறா?” என்று அவனிடமும் கேட்டார்.

அவரை அவன் அக்கா என்று அழைத்து தான் பேசுவான். எனவே, “ஒன்னுமில்ல க்கா, எங்களுக்கு உதவாம, சும்மா வேடிக்கைப் பார்த்துக்கிட்டு இருக்கியேன்னு சொன்னேன். அதுக்கே உன் பொண்ணு அழறா,” என்று அலமேலுவிடம் அவன் குறைப்படிக்க,

“அவளுக்கு இங்க வந்ததே பிடிக்கல, பழைய வீட்டிலேயே இருக்கணுமாம், ஒழுங்கா இருக்கிறதை வச்சு பிழைச்சிருந்தா இந்த நிலைமை வந்திருக்குமா? ஏதோ உங்க அப்பா தன்னோட அக்காக்கு சொத்து தரணும்னு தந்ததால இந்த வீடு கிடைச்சுது. இல்ல இந்நேரம் எங்க நிலைமை நடுத்தெரு தான், இதெல்லாம் இவளுக்கு எங்க புரியப் போகுது,” என்று அவர் புலம்ப ஆரம்பிக்க,

“விடு க்கா, இப்போ அவ சின்ன பொண்ணு தானே, இன்னும் கொஞ்ச வயசு போனா அவளுக்கு எல்லாம் புரிய போகுது. அதுவுமில்லாம நிலைமை இப்படியேவா இருக்கப் போகுது, சீக்கிரம் எல்லாம் சரியாகிடும், அதான் நாங்கல்லாம் இருக்கோமில்ல, உங்களை அப்படியேவா விட்டுடப் போறோம், பார்த்துக்கலாம் விடுங்க,” என்று அலமேலுவிற்கு அவன் ஆறுதல் கூறினான்.

அதுதான் விதியோ என்னவோ அவன் சொன்னதுபோல் தான் நடந்தது. நதியின் பதினைந்து வயதிலேயே வளவன் ஒரு விபத்தில் இறந்து போக, அதன்பின் அவர்களது குடும்பத்தை இன்பசாகரனும் அவனின் தந்தையும் விட்டுவிடவில்லை தான், ஆனால் அதற்கு நன்றி கடனாக அவனையே திருமணம் செய்ய வேண்டிய சூழல் வந்தபோது அவளால் என்ன செய்ய முடியும்? 

இஞ்சினியரிங் படிக்க வேண்டுமென்ற கனவை சுமந்திருந்தவள், தன் குடும்ப சூழல் காரணமாக அந்த கனவை ஒதுக்கி அவனை திருமணம் செய்துக் கொள்ள தயாரானாள். ஆனால் அவளே எதிர்பாராதது போல் அவளின் கனவும் நிறைவேறியது. அதற்கு இன்பசாகரனுக்கு அவள் நிறையவே கடமை பட்டிருக்கிறாள். ஆனால் அவனோ இவளிடம் நேசத்தை எதிர்பார்த்தால் இவள் என்ன செய்வாள்? படிக்க வேண்டும் வேலைக்கு செல்ல வேண்டும் குடும்பத்தின் மூத்த மகளாய் தந்தையின் கடமையை தான் செய்ய வேண்டுமென்று நினைத்திருந்தவளுக்கு மனம் வேறெந்த திசையிலும் செல்லவில்லை.

அதை யாரும் புரிந்து கொள்ளவில்லையென்றால் அதற்கு மேல் என்ன செய்வது? நடந்தவைகள் அனைத்தும் இவள் எதிர்பாராதது தான், அனைத்தையும் இப்போது மீண்டும் அவள் நினைத்து பார்க்க கூட தாயாராக இல்லை. அதனால் மனதை கட்டாயமாக வேறு சிந்தனைக்கு திசை திருப்பினாள்.

காலையிலேயே அன்னை வேலைக்கு கிளம்ப தயாராவதை கண்ட சுதர்மன், “அம்மா வேலைக்கா போறீங்க?” என்று அவரிடம் கேட்க,

“ஆமாம், இன்னைக்கு கண்ணப்பன் தோட்டத்தில் மல்லாட்டை பிடுங்க ஆள் கூப்பிட்டிருந்தாங்க, அதுக்கு தான் போறேன்.” என்று அலமேலு பதில் கூறினார்.

“அம்மா, இன்னைக்கு அக்கா வரான்னு தெரியுமில்ல, நீங்க வீட்டில் இருக்கலாமில்ல,” என்று அவன் குறைபட,

“உங்க அக்கா வந்தா அவபாட்டுக்கு சாப்பிட்டிட்டு இருக்கட்டும், இன்னைக்கு வேலைக்கு  கிடைக்கிற கூலியை விடச் சொல்றீயா?” என்று அவர் கேட்டார்.

“சரி இன்னைக்கு மதியம் என்ன சமையல்?” என்று அவன் கேட்க,

“நேத்து சோறுல புளி ஊத்தி வச்சிருந்தேன். அதை தான் தாளிச்சு கிளறி வச்சிருக்கேன். கூட எல்லோருக்கும் வடை வாங்கிட்டு வந்திரு,” என்ற அவரின் பதிலை கேட்டு,

“அம்மா, அக்கா ஒரு வருஷம் கழிச்சு வீட்டுக்கு வருது, இத்தனை நாள் ஹாஸ்டலில் சாப்பிட்டு நாக்கு செத்து போயிருக்கும், அதுக்கு இன்னைக்கு ஏதாச்சும் வாய்க்கு ருசியா சமைச்சு வைக்கணும்னு உனக்கு தோனுச்சா ம்மா, ஏன் ம்மா, நீ அக்காவை அந்த அளவுக்கு வெறுத்துட்டீயா?” என்றவன்,

இத்தனை பேச்சையும் வேடிக்கை பார்த்தப்படி அமர்ந்திருந்த சிந்தாமணியை பார்த்து, “ஏன் பாட்டி, நீயாவது அம்மாக்கிட்ட சொல்லியிருக்கலாமில்ல, உனக்கும் கல் மனசா ஆயிடுச்சா, உனக்கு உன்னோட சொந்த பேத்தியை விட, உன்னோட தம்பி மகன் தான் முக்கியமா போயிட்டான் இல்ல,

இந்த ஒரு வருஷத்தில் அக்கா ஒருமுறை கூட வீட்டுக்கு வரல, நீங்களும் கூப்பிடல, அப்படி அக்கா என்ன தப்பு செஞ்சுடுச்சு, படிக்கணும் நல்ல வேலைக்கு போகணும்னு தானே ஆசைப்பட்டுச்சு, ஆனாலும் உங்க விருப்பத்துக்காக கல்யாணத்துக்கு தயாரா தானே ஆச்சு, இந்த கல்யாணத்தை நிறுத்தினது இன்பா மாமா தானே, ஆனா நீங்க ரெண்டுப்பேரும் அக்கா மேல கோபமா இருக்கீங்க, 

சரி கொஞ்ச நாளில் கோபம் போயிடும்னு பார்த்தா, ஒரு வருஷத்துக்கு மேல ஆகப் போகுது. இன்னும் அக்காவை ஒதுக்கி வச்சது போல நடந்துக்கறீங்க, இதெல்லாம் சரியே இல்லை.” என்று சுதர்மன் தன் ஆதங்கத்தை கொட்டிக் கொண்டிருக்க,

“ஊர்ல உள்ள மாரியாத்தா, என்மேல வந்து ஏறாத்தான்னு, ஏன் டா என்னை வம்புக்கு இழுக்குற,” என்று சிந்தாமணி கேட்டார்.

அதற்குள் அலமேலுவோ, “பெரிய மனுஷன் ஆயிட்டியோ, பெரிய வார்த்தையெல்லாம் பேசற, என்ன இருந்தாலும் ஆசையா ஆசையா பெத்த இந்த குடும்பத்தோட முதல் வாரிசுடா அவ, அவ மேல கோபம் இருக்கலாம், ஆனா அதுக்குன்னு அவளுக்கெதுவும் செய்ய கூடாதுன்னு நினைக்கற கல் மனசு எனக்கில்ல,

கறியோ மீனோ வாங்க காசு வேணாமா, இருந்த காசை ஏதோ பிராஜக்ட் செய்யணும்னு நீ ரெண்டுநாள் முன்ன வாங்கிட்டு போயிட்டல்ல, இன்னைக்கு வேலைக்கு போனா கூலி கிடைக்கும் வரும்போது அதில் மீன் வாங்கிட்டு வந்தா ராத்திரிக்கு மீன் குழம்பு வைக்கலாம்னு தானிருந்தேன்.” என்று அவர் பதில் கூற,

“சாரிம்மா, நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். ஆனா அக்காக்கு மீன் குழம்பை விட சிக்கன் தானே பிடிக்கும்,” என்று அவன் கேட்டான்.

“வர வழியில இருக்க கறிக்கடை சாயந்தரம் மூடிடுவானே, அதுக்கு சந்தை பக்கம் தானே போகணும்,” என்று அலமேலு யோசனையாக கூற,

“சந்தைக்கெல்லாம் போக வேண்டாம், உனக்கு வேலைக்கு நேரமாகும் கிளம்பு,” என்று மருமகளிடம் கூறிய சிந்தாமணி, 

“சுதர்மா, நீ ஒன்னு செய், அம்மா நாளைக்கு காசு கொடுத்திடுவாங்கன்னு சொல்லி நாம வழக்கமா வாங்கும் கடையில் முக்கா கிலோ கோழிக்கறி வாங்கிட்டு வா, நான் குழம்பு வைக்கிறேன்.” என்று பேரனிடம் கூற,

கடன் கேட்பதற்கு தயக்கமாக இருந்தாலும், சகோதரிக்காக என்று நினைத்து சுதர்மன் கடைக்கு கிளம்பினான்.

“எதுக்கு அத்தை உங்களுக்கு கஷ்டம், நாளைக்கு கூட குழம்பு வச்சிக்கலாமில்ல, அப்படி கடனுக்கு வாங்கி தான் அசைவம் செய்யணுமா? அடிக்கடி கடன் கேட்டா அந்த கறிகடையில் நம்மளை என்னன்னு நினைப்பாங்க, வர்றது விருந்தாளியா? நம்ம பொண்ணு தானே, இந்த வீட்டு கஷ்டம் அவளுக்கு தெரியாதா?” என்று அலமேலு மாமியாரிடம் கேட்க,

“விடு, வீட்டில் அசைவம் செஞ்சு எவ்வளவு நாள் ஆகுது, எனக்கே சாப்பிடணும் போல இருக்கு, சுதர்மனும் வளர்ற புள்ள, அப்புறம் நடந்தது நடந்து போச்சு, நதி ரொம்ப நாள் கழிச்சு வீட்டுக்கு வரா, அவக்கிட்ட சிடுசிடுன்னு பேசாத, எதுவும் முடிஞ்சு போயிடல, அவ இப்போ மனசு வச்சாலும் எல்லாத்தையும் நல்லப்படியா நடத்தி முடிக்கலாம், அதனால அவக்கிட்ட பழசை பத்தி பேசி கஷ்டப்படுத்தாத,” என்று சிந்தாமணி மருமகளுக்கு அறிவுரை கூற,

“என்னமோ போங்க, எனக்கு ஒன்னும் புரியல,” என்று சலித்தப்படி அலமேலு வேலைக்கு கிளம்பிவிட்டார்.

சங்கமிக்கும்..