UN NINAIVIL VAAZHVEN NAANAGAVE …

அத்தியாயம்_ 17

தன் முன்னே வந்து அமர்ந்த கௌதமை கூர்ந்து நோக்கினாள் ஹம்ஸினீ. விழிகள் சிவந்திருந்தது, அழுத்திருப்பான் போல. முகத்தை கழுவிக்கொண்டு வந்திருந்தான். ஆயினும் அழுத தடம் தெரியத்தான் செய்தது. 

சில நொடிகள் இருவருமே பேசிக்கொள்ளவில்லை. அவரவர் சிந்தனைகளில் ஆழ்ந்திருக்க கெளதம் தான் தயக்கத்துடன் பேசினான்.

“ஐ ம் சாரி, என்னால் தான் அபிக்கு இந்த நிலைமை. நான் சம்பாதிச்ச சொத்து அத்தனையும் விற்றாவது அபியை சரி பண்ணிடுவேன். ட்ரஸ்ட் மீ …” 

அவனின் குரலிலிருந்த குற்ற உணர்வு அவளை பாதிக்க டேபிள் மேலிருந்த அவன் கை மீது தன் கையை வைத்து அழுத்தினாள். 

“ஹையோ ஸார், நான் உங்களை தவறாகவே நினைக்காத பொழுது தேவையில்லாத வாக்குறுதி எதற்கு. யாரோ செய்த தவறுக்கு பொறுப்பேற்று இத்தனை தூரம் வருந்த வேண்டிய அவசியமில்லை. என் அபியின் இந்த நிலைமைக்கு என் சித்தப்பா மட்டுமே பொறுப்பு. நீங்க அவள் உயிரை காப்பாற்றி இருக்கறீங்க. விதி அவளை இப்படியொரு நிலைமைக்கு தள்ளி இருக்கு. நம் வாழ்க்கையெல்லாம் தண்ணீரின் மேல் தத்தளிக்கும் இலை மாதிரி. அது இழுத்துக்கொண்டு போகிற போக்கில் தான் போயாகணும். 

விடுங்க சார், உங்களுக்கு இந்த குற்ற உணர்ச்சி தேவையில்லாதது. அபி சீக்கிரமே சரியாகிவிடுவாள். சித்தப்பா செய்த காரியத்துக்கு அவள் எப்பொழுதோ இந்த உலகத்தை விட்டு போயிருப்பாள். உங்களால் தான் அபி உயிரோடவாவது இருக்கிறாள். அதுக்கே நான் உங்களுக்கு நன்றி சொல்லணும். தேங்க்ஸ் ஸார் …” என கெளதம் அவளை வினோதமாக நோக்கினான். 

ஹம்ஸினீயின் இந்த பண்பட்ட பேச்சு அவனுக்கு இன்னதென்று புரியாத உணர்வை கொண்டு வந்தது. அவள் தங்கையின் இந்த இழி நிலைக்கு நான் தான் காரணம். ஆனால் இவளோ அதை விஷயமாக எடுத்துக்கொள்ளாமல் எனக்கு சமாதானம் சொல்கிறாளே. என்ன மாதிரி  அருமையான பெண்ணிவள். 

அவளை ஆழ்ந்து நோக்கியவனுக்கு அவனின் இறுகிய மனது லேசாக இளக தொடங்க அதில் லேசாக சலனம் எட்டி பார்த்தது. 

“தேங்க்ஸ் டு அண்டர்ஸ்டாண்ட் மீ…” என்றான் தன் கைமீது வைத்திருந்த அவள் கைமீது தனது இன்னொரு கையை வைத்து. 

அவனிடமிருந்து கையை நாசூக்காக உருவி,”ஓகே கெளதம் ஸார், நாம கிளம்பலாம்…” என கெளதம் சிறு புன்னகையுடன் தலையை உருட்டினான். இருவரும் வீட்டு வந்த பொழுது இரவாகிவிட்டிருந்தது.  

தன் அறைக்கு சென்று சிறு குளியல் போட்டு இரவு உடையில் கீழே இறங்கி வந்தவளை சரசம்மா சாப்பிட அழைத்தார். அவரிடம் தான் வாங்கிய மல்லிகை செடிகளை பற்றி கேட்க அவளுடன் தோட்டத்திற்கு வந்து தண்ணீர் வாளியில் போட்டு வைத்திருந்ததை எடுத்துக்கொடுத்தார்.

“இப்பொழுது நட போகிறயாம்மா, நாளைக்கு காலையில் செய்யலாமே…? 

“ப்ச் இல்லைம்மா நாளைக்கு டைம் இருக்காது, ஐஞ்சு நிமிஷத்தில் நட்டுடலாம், எங்கே நடலாம் சொல்லுங்க…”

“குண்டு மல்லியை காம்பௌண்ட் அருகே நடலாம், நித்தியமல்லியை…” என்றவரின் பேச்சு சட்டென்று நின்றுபோனது. 

செடியின் வேர்களை ஆராய்ந்தபடி,”ம்ம் சொல்லுங்க, நித்திய மல்லியை …” 

கேட்டபடி திரும்பியவள் சரசம்மா நின்ற் இடத்தில் கெளதம் வந்து நிற்கவும் அவளின் விழிகள் சரசம்மாவை தேடியது. அவனை பார்த்ததுமே ஜெர்க் ஆனது அவளுக்கு. இது அவன் வீடு, நான் கொஞ்சமும் யோசிக்காம செடிகளை வாங்கிட்டு வந்துட்டேனே. என்ன அதிகப்ரசங்கி தனம்.

“அவங்க உள்ளே போய்ட்டாங்க, என்ன பிளான்டிங் செய்ய வந்தாச்சா…? கையை கட்டியபடி புன்னகையுடன் கேட்டவனை கண்டு திருதிருத்தாள். 

“சாரி ஸார், உங்களை கேட்காமல் ஏதோ ஒரு ஆர்வத்தில் வாங்கிட்டு வந்துட்டேன்…” என்றபடி எழ முயன்றவளை தோளின் மீது கைவைத்து தடுத்தான்.

“செடி நடுவது ராணுவ குற்றமாக்கப்படவில்லையே நம் நாட்டில். அதனால் நீங்க தாராளமா நடலாம் ஹம்ஸினீ …”என்றவன் அவள் வாங்கி வந்த செடிகளை ஆராய்ந்தான். 

“இடங்களை தேர்ந்தெடுத்தாச்சா …”என்றவனுக்கு இல்லையென்று தலையை உருட்ட அவனே இடங்களை சொல்லி செடிகளை நட உதவியும் செய்தான். 

இரவு உணவை ரெடி செய்து டேபிளில் எடுத்து வைத்துவிட்டு ஹம்ஸினீ செடியை நட்டுவிட்டாளா என்று பார்க்க வந்தவர் கோதாவில் கௌதமும் இறங்கியிருப்பதையும், அவன் அவளிடம் சாதாரணமாக சிரித்து பேசுவதையும் கண்டு சில நொடிகள் ரசித்து பார்த்துவிட்டு சத்தம் போடாமல் உள்ளே சென்றுவிட்டார்.

வேலை முடிந்து இருவருமே உள்ளே வந்து சாப்பிட அமர சரசம்மா இருவருக்கும் பரிமாறினார். 

இட்லியை கொத்தமல்லி சட்னியில் தோய்த்து வாயில் வைத்தவளுக்கு அமிர்தமாக தோன்றியது. சரசம்மாவை பாராட்ட அவருக்கு வெட்கம் வந்துவிட்டது. 

“ஆமாம் சரசம்மா, உண்மையில் இட்லிக்கு இந்த சட்னி சூப்பரா இருக்கு. நீங்க பொதுவா இந்த சட்னி செய்ய மாட்டீங்களே. இப்பொழுதெல்லாம் புதுசு புதுசா செய்து அசத்தறீங்க. நானும் கவனிச்சிட்டு தான் வர்றேன்…

சின்ன முதலாளியின் பாராட்டு உச்சி குளிர்ந்து போனது அந்த பெரியவருக்கு. 

“ஹையோ சின்னய்யா, இந்த சட்னி ஹம்ஸினீ பொண்ணு சொல்லி கொடுத்தது. எனக்கு பொதுவா இந்த பக்க சமையல் தான் அதிகம் வரும். எனக்கு தமிழ் நாட்டு பக்கம் செய்கிற சமையல் செய்யணும்னு ஆசை. ஹம்ஸினீ பொண்ணுக்கும் நல்ல சமைக்க வருது, அதான் அவங்களிடமே கேட்டு சமைக்கிறேன்…”

சரசம்மா பெரிய மனதாக அந்த பாராட்டை ஹம்ஸினீ பக்கம் தள்ளிவிட கௌதமின் விழிகள் அவளை ஆச்சர்யமாக வருடியது. 

“உங்களுக்கு நல்லா சமைக்க வருமா…? ஆச்சர்யமா இருக்கு …? 

கெளதம் கேட்டதும் முதலில் கூச்சமாக உணர்ந்தவள் அவன் ஆச்சர்யப்படவும் சட்டென்று கோபம் உண்டானது. 

“இதில் என்ன சார் ஆச்சர்யம் ? சமைப்பது அவ்வளவு பெரிய விஷயமா…? என் அம்மா சூப்பர் குக், அவங்களிடமிருந்து நான் கத்துக்கிட்டேன்…”என்றாள் ஒரு வேகத்தோடு. 

“அமைதி …அமைதி … எதுக்கு இந்த ஆவேசம்…? நீங்க படிச்சி முடிச்சதும் உடனேயே வேலைக்காக அமெரிக்கா போனதாக கேள்விப்பட்டேன். அதுதான் சமையலை கத்துக்க நேரமிருந்துக்காதுன்னு நினைச்சேன். என் ஆச்சர்யத்துக்கு இன்னொரு காரணமும் இருக்கு…? 

சொல்லிக்கொண்டு வந்தவன் ஹம்ஸினீயின் கேள்வியான பார்வைக்கு லேசாக புன்னகைத்து இட்லி விள்ளலை வாயில் வைத்து சுவைத்தபடி பேச ஆரம்பித்தான். 

“இப்போது வேலை பார்க்கிற பெண்களுக்கு சமையலில் அரிச்சுவடி கூட தெரிய மாட்டேங்குது. கேட்டால் சமையல் கத்துக்க நேரமில்லை. விருப்பமில்லை. படிப்பு, வேலைன்னு நேரம் பிஸியா இருக்குன்னு வித விதமா காரணம் சொல்றாங்க. அதிலும் சில பெண்கள் சமையல் தெரியாதது என்னவோ ஆடம்பரமான விஷயம் மாதிரி பெருமையா சொல்லிக்கிறாங்க. அதையும் மீறி வீடியோ பார்த்து சமைத்தாலும் சகிக்கலைன்னு சில பேர் சொல்றாங்க. இந்த கமெண்ட்ஸ் எல்லாம் நான் சென்னை ஆபிஸில் வேலை செய்யறவங்க சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். அவ்வளவு ஏன் என் உடன் பிறந்தவளுக்கு கூட சமைக்க தெரியாது. நன்றாக சாப்பிட தெரியும்…”

கெளதம் விளக்கத்தை கேட்டு அவசரப்பட்டு கோபப்பட்டதற்கு தன்னையே கொட்டிக்கொண்டவளுக்கு அசடு வழிந்தது. 

“ஸாரி சார், நான் தப்பா ….” என்றவளின் பேச்சில் குறுக்கே புகுந்துந்தான்.

“நினைச்சிட்டீங்க இல்லையா….? இட்ஸ் ஓகே, ஆஹான் சொல்ல மறந்துட்டேனே, நாளை மறுநாள் பிரபுவும், ஆன்ட்டியும் இங்கே வர்றாங்க. பிரபு மெசேஜ் செய்திருந்தான் …”

பிரபு வருகிறான் என்றதும் அதுவரை வழிந்துக்கொண்டிருந்த அசடு பனித்துளி மாதிரிகாணாமற் போக அவளின் முகம் பூவாய் மலர்ந்தது. 

“இஸ் இட், வாவ் சூப்பர் சார், எப்போ வர்றாங்களாம்…”என்றாள் ஆர்வம் பொங்க. 

அவளின் சந்தோஷத்தையும், ஆர்வத்தையும் ஒரு நொடி சலனமில்லாமல் நோக்கிவிட்டு,”காலையில் இங்கே இருப்பாங்க. ஓகே நாளைக்கு ஆபிஸ் இருக்கு. சீக்கிரம் கிளம்பணும். சோ குட் நைட் …” 

சொல்லிவிட்டு கெளதம் விடுவிடுவென்று எழுந்துச் செல்ல ஹம்ஸினீக்கு பிரபுவும், ஆன்ட்டியும் வருகிறார்கள் என்ற செய்தி தித்திப்பாய் இருந்தது. அதனால் கௌதமின் முகம் மாறியதையோ, அவன் வேகமாக அங்கிருந்து எழுந்துச் சென்றதையோ அவள் கவனிக்கவே இல்லை.  

ரூமுக்கு சென்று பிரபுவிடம் போன் செய்து அவன் எப்பொழுது வருகிறான் என்று ஒரு முறை கேட்டு உறுதி செய்துக்கொண்டவளுக்கு மனது லேசாக அடுத்த நாள் எழுந்திருக்க அலாரம் வைத்துவிட்டு படுத்தாள். கனவெல்லாம் அபி, பிரபு, சித்தப்பா, முகமே பார்த்தறியாத கௌதமின் அம்மா என்று உலாவர விடியற்காலையில் சீக்கிரமே எழுந்துவிட்டாள்.

வேகமாக குளித்து புடவையில் ரெடியாகி கீழே வர சரசம்மா அப்பொழுது தான் காஃபிக்கு பாலை அடுப்பில் ஏற்றியிருந்தார். 

“என்னம்மா சீக்கிரமே எழுந்துட்டே, கொஞ்சம் பொறும்மா, இதோ காஃபி தயாராகிவிடும் …”

சொல்லிவிட்டு அவர் வேலையை கவனிக்க சென்றுவிட ஹம்ஸினீ தோட்டத்தில் இறங்கினாள். ரோஜாக்கள் பனித்துளியில் குளித்துக்கொண்டிருக்க முதல் நாளிரவு சூரியனை கடத்தின சந்திரனமிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போராடிக்கொண்டிருந்தது விடியல். 

இவ்வளவு நாள் அழகாக தெரியாத பூக்களும், பனித்துளியும் இன்று ஏனோ அவ்வளவு அழகாக தெரிய, ஒவ்வொன்றையும் நிறுத்தி நிதானமாக ரசிக்க ஆரம்பித்தாள். முதல் நாள் நட்டு வைத்த செடிகளை மென்மையாக வருடிக்கொடுத்த பொழுது குட் மார்னிங் என்ற குரல் பின்னாலிருந்து கேட்டது. 

ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்திருந்தவள் திடீரென்று பக்கத்திலிருந்து குரல் கேட்கவும் தூக்கிவாரி போட்டுக்கொண்டு திரும்பினாள். ஜாகிங் உடையில் இருந்த கௌதமை கண்டதும் அவளின் படபடப்பு அடங்கியது. 

“ஓ கு..குட் மார்னிங் ஸார் …”

“என்ன ஹம்ஸினீ குட்மார்னிங்கிற்கு இனிஷியல் போட்ட முதல் ஆள் நீ தான் போலிருக்கு. அது சரி எதுக்கு இந்த படபடப்பு…? 

கேள்வி என்னவோ சாதாரணமாக இருந்தாலும் அவன் முகத்தில் ஆராய்ச்சி தொனி இருக்கவே செய்தது. 

அவனின் கேலிக்கு வெட்கத்துடன் புன்னகைத்து,”நத்திங், ஏதோ யோசனையில் இருந்தேன், திடீர்னு உங்க குரல் கேட்டதும் கொஞ்சம் தடுமாறிட்டேன்…” என்றாள் அசடு வழிய. 

அவள் அசடு வழிந்தது ரசிக்கத்தக்க விதமாக இருந்தாலும் அவளுக்குள் அப்படி என்ன யோசனை இருக்கும் என்ற யோசனை அவனுள் ஓடியது. பிரபு வருகிறான் என்று சொல்லும் முன் ஹம்ஸினீ மிக சாதாரணமாக தான் இருந்தாள். அவன் வருகிறான் என்று சொன்ன விநாடியிலிருந்து அவள் நடவடிக்கை, பேச்சு எல்லாவற்றிலும் ஒரு பரபரப்பு தென்பட்டது கௌதமின் கூரிய விழிகளிலிருந்து தப்பவில்லை. அதுவே அவனை எரிச்சலுக்கு உள்ளாக்கி இருந்தது. இப்பொழுதும் பிரபுவின் வருகையை எதிர்பார்த்து ஆவலாக காத்திருக்கிறாள் போலிருக்கு என்ற எண்ணம் எழுந்ததுமே அவனுள் இருந்த சந்தோஷம் காற்று போன பலூனாய் சுருங்கியது.

அதற்கு அங்கிருக்க பிடிக்காமல் அவளிடம் விடைபெற்று வெளியே ஓட துவங்க ஹம்ஸினீ தன் தடுமாற்றத்தை நினைத்து தலையில் செல்லமாக தட்டிக்கொண்டாள்.

“என்னம்மா உன்னையே கொட்டிக்கிறே …? 

கேட்டபடி கையில் காஃபியோடு வந்த சரசம்மா அவளிடம் காஃபியை நீட்டிவிட்டு அன்று என்ன சமைப்பதென்று கேட்டார். அப்போதைய மனநிலையில் அவளுக்கு யோசிக்க கூட மனது இல்லை தான், ஆனால் சரசம்மாவின் தமிழ் நாட்டு சமையல் மேலிருந்த ஆர்வம் அவளை சொல்ல வைத்தது. 

“கார குழி பணியாரமும், அதற்கு தொட்டுக்க கார சட்னியும் செய்யுங்க. இட்லி மாவு இருக்கில்லையா, அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, ஒரு கைப்பிடி முந்திரி பருப்பு, ஒரு துண்டு இஞ்சி ஆகியவற்றை தாளித்து மாவில் கொட்டி பணியார சட்டியில் ஊற்றி வேகவைத்து எடுங்க. இதுக்கு அன்றொரு நாள் சொல்லிக்கொடுத்தேனே கார சட்னி அதை செய்யுங்க. சூப்பர் காம்பினேஷன். அப்புறம் நீங்க செய்யறதை செய்துக்கங்க …”

ஹம்ஸினீ சொன்னதை கவனமாக கேட்டுக்கொண்டு சரசம்மா சென்றுவிட, சில நிமிடங்கள் மர ஊஞ்சலில் அமர்ந்தவாறு காஃபியை ரசித்து குடித்துவிட்டு தன் அறைக்கு சென்று புடவையை களைந்துவிட்டு ஆபிஸ் உடையில் ரெடியாகி கதவை திறந்துக்கொண்டு வெளியே வர கெளதம் ரூமில் சத்தம் கேட்டது. 

ஜாகிங் போயிட்டு வந்துட்டார் போல என்று நினைத்தபடியே கீழே வந்து சரசம்மாவுக்கு சின்ன சின்ன உதவிகள் செய்ய கெளதம் குரல் கேட்டது. 

“அய்யா வந்துட்டாங்க, நீ போய் உட்காரும்மா, நான் டிபன் எடுத்து வந்து வைக்கிறேன் …” என்றவரை மறுத்து அவர் செய்து வைத்திருந்ததை அவள் எடுத்துக்கொண்டு வர தோசையையும், சட்னியையும் அவர் எடுத்துக்கொண்டு வந்தார். 

கௌதம் முன்னிருந்த பீங்கான் தட்டை நிமிர்த்தி வைத்து அதில் பணியாரத்தை எடுத்து வைக்க முயல அவனின் பார்வை அவளை துளைத்தது. ஆனால் அவள் அவன் பார்வையை சந்தித்தால் தானே. அவள் பாட்டுக்கு அவன் தட்டில் பணியாரத்தை வைத்து, கார சட்னியை வைக்க சரசம்மாவின் விழிகள் பயத்தோடு சின்ன முதலாளியை நோக்கியது. 

“ஹம்ஸினீ உன் வேலை இது அல்ல, இதை சரசம்மா பார்த்துக்குவாங்க. நீங்க சாப்பிட்டு சீக்கிரம் ஆபிஸ் கிளம்புங்க …” என்றான் அழுத்தமாக.

“நீ உட்காரும்மா….” என்ற சரசம்மா அவசரமாக அவளை அமர்த்தி டிபனை பரிமாறினார். 

இருவரும் சாப்பிட்டு எழுந்ததும்,”இன்று மதியம் சாப்பிட வரமுடியாது சரசம்மா…”என்றவன் ஹம்ஸினீயிடம் போகலாமா என்று தலையசைப்பில் கேட்க அவளும் அதே பாணியில் பதில் கொடுத்தாள். 

ஆபிஸ் செல்லும் வரை கெளதம் அவளிடம் பேச முயற்சிக்கவில்லை. வழக்கமாக இருவரும் அதிகமாக பேசிக்கொள்ள மாட்டார்கள். இருவருக்குள்ளும் எப்பொழுதும் ஒரு விலகல், இறுக்கம் தென்படும். இது நாள் வரை இருந்த அந்த விலகல், இறுக்கம், தயக்கம் எல்லாவற்றையும் உடைத்தெறிந்திருந்தது முந்தய நாள் பேச்சுக்கள். 

ஆனால் மீண்டும் இவர் ஏன் சிடு சிடுவென்று இருக்கிறார், என்னாச்சு அதற்குள்? நேற்று இரவு வரை சிரித்து பேசியவர், இன்று மீண்டு சிடு சிடுக்கிறார். கூட்டுக்குள் சுருங்கும் நத்தையாய் மாறிட்டாரே ஏன்? நான் என்ன தவறு செய்தேன் என்று மண்டையை பிய்த்துக்கொண்டு யோசித்தும் ஒன்றும் பலனில்லை. 

ஆபிசில் இறங்கியதும் வேலை பற்றி மட்டும் தான் பேசினான். அன்றைய சைட் விசிட்க்கு வழக்கத்திற்கு மாறாக அவளை ஆபிஸில் விட்டுவிட்டு அவன் மட்டும் சென்றுவிட ஹம்ஸினீக்கு அது பெரிதாக தோன்றவில்லை. சில சமயங்களில் நடப்பது தானே என்று நினைத்துக்கொண்டாள். ஒரு வேளை வேலையில் ஏதும் பிரச்சினையோ என்ற ரீதியில் யோசித்தால் அதுவும் இல்லை என்று அவளுக்கே தெரிந்திருந்தது. 

அடுத்த வந்த நாளும் கெளதம் ஒருவித இறுக்கத்துடனேயே இருக்க, ஹம்சினிக்கு குழப்பம் தான் மேலோங்கியது. இதற்கு நடுவில் அபிக்கு ரூம் ரெடி செய்துவைத்தான் டாக்டரின் ஆலோசனைப்படி. அப்பொழுதும் அவளிடம் ஒரு தகவலாக இப்படியெல்லாம் ரூமை ரெடி செய்கிறேன் என்று சொன்னானே தவிர அவளின் ஐடியாவை கேட்கவில்லை. முன்பை விட அவளிடமிருந்து அவன் ஒதுங்கி செல்வது  புரிந்தும், புரியாமலும் இருக்க, யோசித்து குழப்பத்தை தெளிவிப்பதற்கு முன் பிரபுவும், பூங்காவனமும் வந்திறங்கினார்கள். காரிலிருந்து இறங்கிய பூங்காவனத்தை கண்டதும் ஹம்ஸினீ ஓடி போய் அணைத்துக்கொள்ள அவரும் அவளை அணைத்து முத்தமிட்டார். 

வண்டியை பார்க் செய்துவிட்டு வந்த பிரபு தோழியை நோக்கி வந்தவன் அவள் முன்பை விட சற்று தெளிவாக, அதே சமயம் சந்தோஷமாக இருப்பதை கண்டதும் அவனுக்கு பெருத்த நிம்மதி. ஆன்ட்டியை சரசம்மாவுடன் உள்ளே அனுப்பியவள் பிரபுவை வரவேற்கும் விதமாக லேசாக அணைத்து வரவேற்றாள். 

ஆபிஸ் செல்வதற்காக கிளம்பிக்கொண்டிருந்த கெளதம் பிரபுவின் கார் காம்பௌண்ட் உள்ள நுழைவதை கண்டு வேக வேகமாக கீழிறங்கி வந்தவன் பூங்காவனத்தை அன்போடு வரவேற்றுவிட்டு வாசற்பக்கம் திரும்ப ஹம்ஸினீயும், பிரபுவும் அணைத்துக்கொள்வதை கண்டு தேகம் இறுக நின்றுக்கொண்டிருந்தான்.