UN NESATHIL VAAZHVEN NAANAGAVE…
அத்தியாயம்_ 22
நாம ஜோடியாக பார்க்க போகிறோம் என்ற கௌதமின் வார்த்தையில் முதலில் ஆச்சர்யம் உண்டாகி பின் அது கோபமாக மாறி விழிகளில் கனல் தெறித்தது.
“என்ன சொன்னீங்க நாம ஜோடியா பார்ப்போமா ? வாட் யு மீன் சார்… ?
ஆனால் கௌதமின் முக பாவனையில் எவ்வித மாற்றமும் உண்டாகவில்லை. அதிலிருந்த புன்னகையும் சிறு அளவு கூட மறையவில்லை.
“ஆமாம் ஹம்ஸினீ, உன் அக்காவிற்கு திருமணமாகி அவள் பிள்ளைகளுடன் இருப்பதை நானும் பார்ப்பேன், நீயும் பார்ப்பாய். அதை தான் நான் ஷார்ட்டாக சொன்னேன். ஜோடி என்றால் நீ நினைத்து கோபப்படுகிற அர்த்தமில்லை…”
அவன் பேச்சிலிருந்த நிதானமும், புன்னகையும் ஹம்ஸினீயை மீண்டும் அசடு வழிய வைத்தது.
“ஓ சாரி நான் வேறு மாதிரி நினைச்சிட்டேன். ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி அபிக்கு அப்படியொரு வாழ்க்கை அமைந்தால் உண்மையில் மிகவும் சந்தோஷம் தான்…”
கௌதமின் பேச்சில் அவள் சட்டென்று சமாதானமாகிவிட அவனின் இதழ்களில் மர்ம புன்னகை தோன்றி மறைந்தது. அதன் பின் இருவரும் அங்கு சுற்றி திரிந்துக்கொண்டிருந்த மனிதர்களை சுவாரசியமாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க தூரத்தில் இவர்கள் இருவரையும் தாயும், மகனும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“என்னம்மா இது, இவங்க பேச நாம தனிமையை உண்டாக்கி கொடுத்தால் இரண்டும் இரண்டு திசையை நோக்கி உட்கார்ந்திருக்கு. இவங்களை பார்த்தால் எனக்கு காந்தியின் மூன்று குரங்குங்கள் நினைவுக்கு வருது. ஆனால் இங்கு இரண்டு தான் இருக்கு. எனக்கென்னவோ இரண்டுமே சரியான மக்குன்னு தான் தோணுது…” என்றான் பிரபு அலுப்பாக.
மகனின் அலுப்பிற்கு சிரித்தார் பூங்காவனம்.
“டோன்ட் ஒர்ரி மகனே, நீ தான் மூன்றாவது குரங்கு. உன் நண்பன் யாரென்று சொல், உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள். இங்கே அப்படியே தலைக்கீழாக சொன்னாலும் ஒரே அர்த்தம் தான் வரும் போலயே. நீ எப்படி மக்கோ, அதே போல உன் தோழியும், தோழனும் இருக்காங்க. இதில் என்ன கண்ணா ஆச்சர்யம் இருக்கு…” என்றார் நமுட்டு சிரிப்புடன்.
தாயின் கால் வாரலுக்கு அவரை முறைத்தான் அவரின் செல்ல மகன்.
“ம்ம்ம்மாஆ…”என்றான் பல்லை கடித்து.
“சரி சரி உடனே கோபப்படாதே. இரண்டுக்கும் ஸ்டார்டிங் ட்ரபிள் என்று நினைக்கிறேன். கொஞ்ச நாள் சென்றால் அவங்களே பிக் அப் ஆயிடுவாங்க. இவர்களுக்காக இவ்வளவு நேரம் இங்கேயே சுத்திக்கிட்டு இருக்கோம். வா வீட்டுக்கு போகலாம்…”
பூங்காவனமும், பிரபுவும் தங்களை நோக்கி வரவும் மற்ற இருவரும் எழுந்தார்கள். நால்வரும் காரை நோக்கி செல்ல பிரபு தாயின் தோளை சுரண்டினான் ஹம்ஸினீயிடம் எதையோ பேச சொல்லி. பேசறேன் என்று மகனை அடக்கிவிட்டு ஹம்ஸினீயிடம் பேச ஆரம்பித்தார்.
“சாரி ஹம்சூ உன்னை ரொம்ப நேரம் போரடிக்க வைச்சிட்டேனோ, கௌதம்க்கும் போரடிச்சிடிச்சி போல. சீக்கிரம் வந்திடணும்னு தான் போனேன். ஆனால் பார் மைசூர் அரண்மனையை பார்க்க பார்க்க திகட்டவே இல்லை. அதான் அதன் கட்டிட கலை அழகில் லயிச்சி போய்ட்டேன். சாரி அகைன்ம்மா …”
பெரியவரின் மன்னிப்பு அவளை சங்கடப்படுத்தியது.
“அச்சோ என்ன ஆன்ட்டி இப்படியெல்லாம் பேசறீங்க. எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. எனக்கு தான் கெளதம் சார் துணையிருந்தாரே, ஐ மீன் பேச்சு துணைக்கு. அதனால் நேரம் போனதே தெரியலை. நீங்க வருத்தப்படாதீங்க…” என்றாள் சமாதானமாக.
முன்னாள் சென்றுக்கொண்டிருந்த கெளதம் அவள் சொன்னதை கேட்டு சிரிப்பை மெல்ல, அவன் பக்கத்தில் வந்துக்கொண்டிருந்த பிரபு ஓரக்கண்ணால் நண்பனை நோக்கிவிட்டு ஹம்ஸினீ பக்கம் திரும்பினான்.
“ஓ நேரம் போனதே தெரியாத அளவுக்கு இந்த மௌன சாமியார் அப்படியென்ன பேசினான் ஹம்ஸினீ. சொல்லேன் …”
“ஆ…அதுவா , வந்து அபியை பற்றி பேசிட்டிருந்தோம். அவளின் திருமணம், அவளுக்கு பிறக்க போகிற குழந்தைகள் பற்றி. அதை நாங்க ஜோடியாக பார்க்க போகிறதே பற்றி…”
நடந்துக்கொண்டிருந்த பூங்காவனம் சட்டென்று நின்றுவிட, பிரபுவின் விழிகளும் ஆச்சர்யத்தில் அகன்றது. ஹம்ஸினீ கேள்வியாக விழிகளை சுருக்க, மகனோ தாயை விழிகளாலே எச்சரித்தான்.
“என்ன ஆன்ட்டி நின்னுட்டீங்க …”
“நத்திங், காலில் எதுவோ மாட்டியது, என்னவென்று பார்த்தேன்…”
சமாளித்தவர் சொன்ன பொய்யை நிஜமாக்க குனிந்து காலை சோதித்துவிட்டு நிமிர இந்த கூத்தையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கௌதமுக்கு சிரிப்பு அலை அலையாய் பொங்கியது. சிரிப்பை அடக்கியபடி காரை திறந்து ஏறி அமர, மற்ற மூவரும் முன் போலவே அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர்.
“வேறெங்கும் போகணுமா ? இல்லை வீட்டுக்கு போய்டலாமா … ?
“வேண்டாம் தம்பி, நாம வீட்டுக்கு போய்டலாம். ஹம்சூ இப்போவே அபியை நினைச்சி தவிச்சி போய்ட்டாள். அப்போவே கேட்கணும்னு நினைச்சேன் ஹம்சூ. அபியை குணமாக்க நினைப்பது, அவளுக்கு திருமணம் செய்து, அவள் பிள்ளை குட்டியோடு வாழ வைக்கணும்னு நினைக்கிறது எல்லாம் சரி. ஆனால் உன் எதிர்காலத்தை பற்றி நீ யோசிக்கவே இல்லையே. இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படியே இருப்பதாக உத்தேசம்… ?
பூங்காவனத்தின் கேள்வியில் பிரபு பின் இருக்கை பக்கம் கழுத்தை திருப்பி ஹம்ஸினீயின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்க, கௌதமோ பிரபு மாதிரி திரும்பாமலே காதை மட்டும் அவள் பக்கம் அடமானம் வைத்துவிட்டு பார்வையை சாலையில் பதித்திருந்தான். பெரியவரின் கேள்வி சிறியவளை கல்லாய் இறுக வைத்தது.
“என்னம்மா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இருந்தால் என்ன அர்த்தம் ? உன் எதிர்கால வாழ்க்கையை பற்றி ஏன் யோசிக்கலை … ? என்றார் இம்முறை அழுத்தமாக.
ஹம்ஸினீ விழிகளை மூடி கோபத்தை கட்டுப்படுத்துவதை கண்டுக்கொண்ட பிரபு அவளை முந்திக்கொண்டு தாய்க்கு பதிலளித்தான்.
“ம்மா என்ன கேள்வி இது ? அங்கிள் இறந்தே இரண்டு மாதங்கள் தான் ஆக போகிறது. உடனேயே அவள் எப்படிம்மா அவளுடைய வாழ்க்கையை பற்றி யோசிக்க முடியும். இன்னும் கொஞ்ச நாள் சென்றால் அவளே யோசிக்க போகிறாள். என்ன நான் சொல்றது ஹம்ஸினீ… ?
“டேய் நான் இப்பொழுதே அவளை திருமணம் செய்துக்கொள்ள சொல்லவில்லை. ஏற்கனவே அமைந்த வாழ்க்கை சரியில்லைன்னு ஆயிடிச்சு. அதன் விளைவால் பெற்றவர்களும் இறந்துட்டாங்க. அதற்காக எதிர்காலம் என்றே ஒன்று இல்லாமல் போய்டுமா ? ரத்தம் சூடாக இருக்கிறவரை எல்லாவற்றையும் அலட்சியமாக தான் எடுத்துக்க தோணும். வயதாகி ரத்தம் சுண்டிட்டா அப்பொழுது தனக்கென்று ஒரு துணை இல்லையேன்னு மனம் ஏங்கி தவிக்கும். அதுக்குத்தான் சொல்றேன் எந்த ஒரு விஷயத்தையும் தள்ளி போடாமல் உடனே செய்திடனும். அதுக்குன்னு உடனேயே எதையும் செய்ய சொல்லவும் இல்லை. இவ தனியாளாக இருந்தால் அவங்க ஆத்மா சாந்தியடையுமா ?
பெரியவர் பேச பேச எனக்கு கல்யாணமே வேண்டாமென்று கத்த தோன்றியது ஹம்ஸினீக்கு. ஆனால் அப்படி கத்த முடியாமல் தன் உணர்வுகளை அடக்கி தன்னை நிதானித்தாள்.
“நீங்க சொல்றது எல்லாம் சரி தான் ஆன்ட்டி. ஆனால் இப்போதைக்கு என் எதிர்காலத்தை பற்றி யோசிக்கிற அளவிற்கு என் மனது நிச்சலனமாக இல்லை. அது கல்லெறிந்த குட்டையாய் குழம்பி இருக்கு. முதலில் அது தெளிய வேண்டும். அதன் பிறகு தான் நீங்க சொல்ற எதையும் என்னால் யோசிக்க முடியும், செய்யமுடியும். அப்புறம் ஆன்ட்டி, இன்னொரு முறை இந்த மாதிரி பேச்சு வேண்டாமே ப்ளீஸ் …” என்றாள் வேண்டுதலாக.
“அதென்ன அப்படி சொல்லிட்டே. என்னை அம்மான்னு சில நேரம் அழைக்கிறே, என் இடத்தில் உன் அம்மாவும், அப்பாவும் இருந்திருந்தால் உன்னை பற்றிய சிந்தனை இல்லாமல் விடுவார்களா ? இப்போதைக்கு உன் மனசு குழம்பி இருப்பதாக நீ சொன்னதை ஏத்துக்கிறேன். சீக்கிரமே உன் மனசு தெளியும். உனக்கும், அபிக்கும் நல்ல எதிர்காலம் அமைய நான் ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன். புதுவருஷம் அதுவுமா எதிர்மறை எண்ணங்கள் வேண்டாம். நேர்மறை எண்ணங்களை மனதில் வளர்த்துக்கோ. எல்லாமே நல்லபடியா நடக்கும். உன் பெற்றவர்களின் ஆன்மாவும் சாந்தியடையும்…”
பேசியபடி அவளின் கைகளை பிடித்து அழுத்திக்கொடுக்க ஹம்ஸினீ அவரின் தோளில் சாய்ந்து விழிகளை மூடிக்கொண்டாள் பெற்றவர்களின் நினைவில். வீடு வந்து சேரும் வரை யாரும் எதுவும் பேசவில்லை. கார் நின்றதும் முதல் ஆளாக இறங்கியவள் தன்னை எதிர்க்கொண்டு எதையோ சொல்ல வந்த சரசம்மாவிடம் கூட பேசாமல் விடு விடுவென்று மாடியேறி அபியின் அறைக்கு சென்றாள்.
அபியின் கட்டில் பக்கத்தில் அமர்ந்து புத்தகத்தில் ஆழ்ந்திருந்த நர்ஸ் ஹம்ஸினீயை கண்டதும் மரியாதை நிமித்தம் எழுந்தாள்.அவளை கவனிக்காமல் அபியை நெருங்கி ஒரு தேவதை போல விழி மூடி உறங்கிக்கொண்டிருந்த அபியின் நெற்றியை மென்மையாக வருடியவளுக்கு தன்னையும் மீறி விழிகளில் நீர் நிறைந்தது.
‘நீ எப்போ அபி குணமாகி என்னை அடையாளம் கண்டுக்கொள்வாய். இன்று கெளதம் சொன்னபடி உனக்கானவனை நான் தேடி கண்டுபிடித்து உன் வாழ்க்கையை சரி செய்வேன். உன் பிள்ளைகளை நான் தூக்கி கொஞ்சி மகிழ்வேன். ஆனால் இதெல்லாம் சீக்கிரம் நடக்க வேண்டும் அபி. நடக்குமா … ?
ஏக்கத்தோடு மனதில் புலம்பியபடி அவளின் நெற்றி, கன்னம், தலை என்று வருடிக்கொண்டிருந்தவளுக்கு நேற்றிலிருந்து அவள் கண்விழிக்கவே இல்லை என்று உரைக்க விழிகளை துடைத்துக்கொண்டு நர்ஸிடம் திரும்பினாள்.
“நேற்றிலிருந்து அபி எழுந்திருக்கவே இல்லையே, ஏன் என்னாச்சு வித்யா… ? அப்படியென்ன ஊசி போட்டாங்க … ?
“இல்லை மேடம் அவங்களுக்கு கான்ஷியஸ் திரும்பியது. புது இடமாக இருக்க முதலில் திரு திருவென விழிச்சாங்க. சரி சாப்பாடு கொடுக்கலாம்ன்னு சரசம்மாவிடம் சாப்பாடு எடுத்து வர சொல்லி சாப்பிட வைக்க முயற்சி செய்தேன். ஆனால் அவங்க சாப்பிடாமல் கீழே தட்டிவிட்டு ஒரே கலாட்டா செய்துட்டாங்க. டாக்டர் தான் ஊசி போடும் படி அட்வைஸ் செய்தார். ஊசி போட்ட பிறகு தான் மறுபடியும் அமைதியா தூங்க ஆரம்பிச்சாங்க…”
“இவ்வளவு நடந்திருக்கு, ஏன் எனக்கு போன் செய்யலை … ? என்று எகிற கெளதம் பிரபுவுடன் உள்ளே நுழைந்தான்.
“என்னிடம் போன் செய்து சொல்லிட்டாங்க ஹம்ஸினீ, நான் டாக்டரிடம் பேசியபிறகு தான் அவர் நர்ஸ்க்கு போன் செய்து ஊசி இன்ஜெக்ட் செய்ய சொன்னாங்க. இடம் மாறியதால் உடனே அதை ஏற்றுக்கொள்ள மனது இடம் கொடாது. கொஞ்ச நாளைக்கு அவங்களை இப்படி அமைதி படுத்திய பிறகு தான் நார்மல் வாழ்க்கைக்கு மாற்ற முடியும்ன்னு சொல்லிட்டார். சோ டோன்ட் ஒர்ரி. சீக்கிரமே அபிக்கு சரியாகிடும்…” என்றான் தேறுதலாக.
“ஓ … ! என்றாள் சுரத்தே இல்லாமல்.
“ஓ தான், நீ முதலில் ரெஸ்ட் எடு. நம் விருப்பத்திற்கு அபியின் உடல் நிலை சரியாகாது. கொஞ்சம் கொஞ்சமாக தான் சரியாகும். நீ முதலில் சாப்பிட்டு ரெஸ்ட் எடு. காலையிலிருந்து ஒரே அலைச்சல். நாங்களும் நாளை ஊருக்கு கிளம்பறோம்…” என்றார் பூங்காவனம்.
ஆன்ட்டியும், பிரபுவும் ஊருக்கு கிளம்புகிறார்கள் என்றதும் மனது மேலும் சோர்ந்து போனது.
“ஏன் ஆன்ட்டி, இன்னும் கொஞ்ச நாள் இங்கே தங்கிவிட்டு போகலாமே… ?
“செய்யலாம் தான், ஆனால் பிரபுவுக்கு லீவ் இல்லையே. எனக்கும் லீவ் இல்லையே என்ன செய்வது… ?
பிரபு மைசூர் பேலஸை சுற்றி பார்க்கும் பொழுதே சொல்லிவிட்டிருந்தான் தாயிடம். நீயும் நானும் இங்கிருந்தால் ஹம்ஸினீ நம் நிழலில் இருக்க நினைப்பாளே தவிர கௌதமிடம் நெருங்க மாட்டாள். அதனால் நாம் முடிந்தவரை சீக்கிரம் கிளம்புவது நல்லது என அவருக்கும் அது சரியென்றே தோன்றியது.
“ஓ …” என்றாள் ஏமாற்றமாக.
அடுத்த நாள் விடியற்காலையிலேயே இருவரும் ஊருக்கு கிளம்ப ரெடியாகிவிட்டனர். ஹம்ஸினீயை அணைத்து பூங்காவனம் விடைபெற, பிரபுவுக்கு கைகுலுக்கி விடைகொடுத்தாள். கெளதம் பிரபுவை அணைத்து விடைகொடுக்க பூங்காவனம் கையாட்டி விடைபெற்றார். இருவரையும் சுமந்துக்கொண்டு கார் சென்னையை நோக்கி பயணிக்க ஹம்ஸினீயின் மனது கனத்து போனது. அவர்கள் வந்து தங்கிய இரண்டு நாள் காற்றாய் பறந்து போயிருக்க அவர்கள் சென்றதும் வெறுமையாக உணர்ந்தாள். ஆனால் அதெல்லாம் இரண்டே நாள் தான். வழக்கம் போல ஆபிஸ்க்கு செல்ல ஆரம்பித்து ப்ராஜெக்ட் வேலைகளில் மூழ்கியதும் அபியை தவிர்த்து மற்றதெல்லாம் மறந்து போனது.
காலையில் கௌதமோடு ஆபிஸ் செல்வதற்கு முன் உறங்கிக்கொண்டிருக்கும் அபியை பார்த்துவிட்டு நர்ஸிடம் அவளை பத்திரமாக பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு செல்பவள் ஆபிஸில் நேரம் கிடைக்கும் பொழுது நர்ஸிடம் போன் செய்து அபியை பற்றி விசாரிப்பாள். ஆரம்பத்தில் உறக்கம் கலைந்து கண்விழித்தால் மிரண்டு விழித்து கலாட்டா செய்தவள் நாளடைவில் அவளின் கலாட்டா குறைந்து அமைதியாக விட்டத்தையே பார்த்தபடி அமர்ந்திருக்க தொடங்கினாள்.
சரசம்மாவோ, நர்ஸோ யார் சாப்பாடு ஊட்டினாலும் அமைதியாக சாப்பிடுவாள். மாலை கௌதமோடு வீடு திரும்புகிற ஹம்ஸினீ முதலில் வருவது அபியின் அறைக்கு தான். அபியை பார்த்தால் சலனமற்று அமர்ந்திருந்தவளின் விழிகளில் சிறு அலைப்புறுதல் தோன்றி மறையும். அவளிடம் பழைய கதைகளை பேசிவிட்டு தான் அவள் அறைக்கு செல்வாள்.
சில நேரங்களில் அமைதியாக சமர்த்தாக கேட்டுக்கொண்டிருப்பாள், சில நேரங்களில் அவளின் விழிகள் அந்த அறையை சுற்றி சுற்றி அலையும். ஒரு சில நேரங்களில் அவளின் கைகள் ஹம்ஸினீயின் முகத்தை தொட்டு தடவும். அப்படி செய்யும் பொழுது ஹம்ஸினீ பதறாமல் அபியின் செய்கைகளையும், அவளின் விழிகளில் தோன்றி மறையும் உணர்வுகளை ஊன்றி கவனிப்பாள்.
அவளுக்கு ஏழரை எட்டு மணிக்கே சாப்பாடு கொடுக்க சொல்லி உறங்க வைத்துவிட்டு தான் சாப்பிட வருவாள். அவள் வரும் வரை கெளதம் அவளுக்காக காத்திருப்பான். அவனும் மாலை நேரங்களில் ஹம்சினியோடு அமர்ந்து அபியிடம் அவள் பேசுவதை பார்த்துக்கொண்டிருப்பான். அடிக்கடி டாக்டரிடம் போன் செய்து அபியின் விஷயங்களை பகிர்ந்துக்கொள்வான்.
அன்று வழக்கம் போல அபியை சாப்பிட வைத்து அவள் உறங்கியதும் டைனிங் ஹாலுக்கு வந்தவள் சோர்வாக சேரில் அமர லேப்டாப்பில் ஆபிஸ் வேலையை கவனித்துக்கொண்டிருந்தவன் நிமிர்ந்தான். ஹம்ஸினீயின் முகத்தில் அளவுக்கதிகமான சோர்வை கண்டதும் விழிகள் கேள்வியை கக்கின.
“ப்ச் இன்னும் எததனை நாளைக்கு சார் அபி இப்படியே இருப்பாள். அவளை இங்கே அழைத்துக்கொண்டு வந்து ஒரு மாதமாகி விட்டது. ஆனால் நாம எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லையே அவள் உடல் நிலையில்…”
“தவறு ஹம்ஸினீ, நீ சரியாக கவனிக்கவில்லைன்னு நினைக்கிறேன். அபியின் முகம் முன்பை விட நன்றாக தெளிஞ்சிருக்கு. முன்பு குட்டை குட்டையாக இருந்த முடி இன்று வளர்ந்திருக்கு. உடலில் கூட சதை போட்டிருப்பதாக சரசம்மா சொன்னாங்க. இதுவே ஒரு நல்ல அறிகுறி தான். இப்படியே சென்றால் இன்னும் இரண்டே மாதத்தில் அபியின் கலங்கிய மூளை நிச்சயம் தெளிவடைந்துவிடும்ன்னு நம்புகிறேன்…”
கெளதம் சொல்ல சொல்ல ஹம்ஸினீயின் மனம் யோசித்தது. அவன் சொன்னபடி ஆங்காங்கே சொட்டையாக இருந்த அபியின் தலை முடி செழித்து வளர்ந்து கொட்டைகளை மறைத்திருந்தது. நைட்டி கூட ஒரு சைஸ் பெரிதாக வாங்கியதாக நினைவு வந்தது. விழிகளில் அடிக்கடி ஹம்ஸினீயை பார்க்கும் பொழுது ஓர் பளபளப்பு தோன்றி மறையும். அட ஆமாம் இதை எப்படி மறந்தேன். ஒரு வேளை அவள் நல்லபடியா எழுந்து நடமாடாமல், கோர்வையாக பேசாமல் இருப்பதால் அபி அப்படியே இருப்பதாக எண்ணிவிட்டேனே…
“ஆமாம் ஹம்ஸினீ, அவள் உன்னை பார்க்கும் பொழுதெல்லாம் அவளின் விழிகளில் ஓர் உயிர்ப்பு தெரியுது. ஒரு வேளை நீ அவளுடனேயே இருந்தால் அபிக்கு சீக்கிரம் குணமாக வாய்ப்பு இருக்கு. டூ ஒன்திங் நீ அபியுடனே வீட்டில் இரு. நான் ஆபிஸ் வேலைகளை பார்த்துக்கொள்கிறேன்…”
“சார்…” என்று கூவியே விட்டாள் புரியாத உணர்வுடன்.
“கால் மீ கெளதம் …”என்றான் அழுத்தமாக.