UN NINAIVIL VAAZHVEN NAANAGAVE…

அத்தியாயம்_ 21

“ஆன்ட்டி உங்க கடந்தகாலத்தை பற்றி சொன்னாங்க. அதை கேட்டதிலிருந்து உங்க மேலிருந்த மரியாதை அதிகமாயிடுச்சி, ரியலி யூ ஆர் க்ரேட் ஸார். எத்தனை பிள்ளைங்க அதுவும் பிறப்பிலே பணக்காரங்க பிள்ளைங்க உங்களை போல இருக்காங்க…”

பேசிக்கொண்டே சென்றவளை புன்னகையுடன் இடைமறித்தான் கெளதம்.

“போதும் ஹம்ஸினீ, பூங்காவனம் ஆன்ட்டி உங்களிடம் என்ன சொன்னாங்கன்னு தெரியலை. ஆனால் இந்தளவு பெரிசா புகழற அளவுக்கு நான் எதுவும் செய்யலை. என் மனசுக்கு எது சரின்னு தோணுதோ அதை செய்துட்டு இருக்கேன். தட்ஸ் இட் …”

கௌதமின் பேச்சிற்கு மெலிதாக புன்னகைத்தவளுக்கு அடுத்து என்ன பேசுவதென்று புரியாமல் அமைதியாக இருந்தாள். கௌதமும் அமைதி காத்தான். சில நொடிகள் அங்கு மௌனம் நிலவியது. காற்று சிலு சிலுவென்று வீச தேகம் லேசாக நடுங்கியது குளிரில். கைகளை மார்புக்கு குறுக்கே அழுத்தமாக கட்டிக்கொண்டாள் ஹம்ஸினீ.

தன் இருக்கையிலிருந்து எழுந்தவன்,”லேசா குளிருது, உள்ளே போகலாமா …? என்றவன் ஹம்ஸினீ ஊஞ்சலிலிருந்து இறங்க கைகொடுத்தான்.

ஒரு நொடி அவனை ஆச்சர்யமாக பார்த்துவிட்டு சிறு கூச்சத்துடன் கையை அவன் கையில் வைக்க மென்மையாக இறக்கிவிட , ஹம்ஸினீ சொன்ன நன்றியை ஏற்றுக்கொண்டு அவளுடன் உள்ளே வந்தான். காஃபி ட்ரேயுடன் வந்த பூங்காவனம் கைகோர்த்தபடி வந்த இருவரையும் எதிர்க்கொண்டார். அவரின் முகத்தில் சிறு இளநகை. அதை கண்டுகொண்ட ஹம்ஸினீக்கு கூச்சம் உண்டாக சட்டென்று தன் கையை உருவிக்கொண்டாள் நாசூக்காக.

“என்ன கௌதம் உள்ளே வந்துட்டீங்க. இந்தாங்க காஃபியை எடுத்துக்கங்க …”

கெளதம் எடுத்துக்கொள்ள ஹம்ஸினீ அபியை பார்க்க போகிறேன் என்று மேலே சென்றுவிட, சோஃபாவில் அமர்ந்து போனில் புதையலை எடுத்துக்கொண்டிருந்த மகனுக்கும் ஒரு கப்பை கொடுத்துவிட்டு, தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு மகனின் பக்கத்தில் அமர்ந்துக்கொண்டார்.

“கெளதம் நான் கேட்கிறேன்னு தவறா எடுத்துக்காதே, உன்னாலேயும், ஹம்ஸினீயாலேயும் உடம்பு சரியில்லாத பெண்ணை ஒழுங்கா பார்த்துக்க முடியுமா? உங்களுக்கு ப்ராஜெக்ட் ஒர்க்கே சரியா இருக்குமே…?

“பார்த்துக்கலாம் ஆன்ட்டி, நர்ஸ், சரசம்மா, அப்புறம் நாங்க இரண்டு பேரும் இருக்கோம். எனக்கு அபி நல்லபடியா குணமாகி எழுந்துட்டா போதும். என் குற்ற உணர்வு என்னை விட்டு போய்டும். அதன் பிறகு அவளின் வாழ்க்கைக்கு என்ன செய்யணுமோ அதை செய்து செட்டில் செய்துடுவேன்…”

“ஹ்ம்ம் நீ சொல்றதும் சரி தான். கடவுளின் மேல் பாரத்தை போடுவோம். அவர் பார்த்துக்குவார். இருந்தாலும் நான் கொஞ்ச நாள் இங்கேயே தங்கி அபியை பார்த்துக்கிறேனே. உங்களுக்கு ஏதும் ஆட்சேபனை இல்லையென்றால்…?

அவரின் உதவும் மனதை பற்றி அவனுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் இன்று அவர் கேட்டதும் அவனின் நெஞ்சம் நெகிழ்ந்தது.

“ஹையோ அதெல்லாம் வேண்டாம் ஆன்ட்டி, இது என்னுடைய அஜாக்கிரதைனால் உண்டான இழப்பு. இதற்கு நான் தான் பொறுப்பு. என்னுடைய பொறுப்பை மற்றவர் தலையில் ஏற்றுவது எந்த வகையிலும் சரி வராது. நீங்க சொன்னதே எனக்கு போதும் ஆன்ட்டி. நாங்க பார்த்துக்கிறோம்…” என்றான் தீர்மானமாக.

“சரி கெளதம், உனக்கு அபி விஷயத்தில் என்ன உதவி வேண்டுமென்றாலும் என்னிடம் தயங்காமல் கேள்…” என்றபடி எழுந்து குடித்து வைத்த காபி கோப்பைகளை சேகரித்துக்கொண்டு சமயலறைக்கு சென்றார்.

பனிரெண்டு மணிக்கு பிரபுவின் அழைப்பின் பேரில் புதுவருடத்தை கேக் வெட்டி கொண்டாடிவிட்டு தன்னறைக்கு செல்வதற்கு முன் அபியை பார்த்துவிட்டு சென்றவளுக்கு அன்றிரவு உறக்கம் வரவில்லை. கடந்த வருடம் தாய் தந்தையுடன் கிறிஸ்துமஸையும், புதுவருடத்தையும் சந்தோஷத்துடன் கொண்டாடியது நினைவு வர விழிகள் நீரால் நனைந்தது. பக்கத்து கட்டிலில் பூங்காவனம் ஆன்ட்டி படுத்திருந்ததால் வாய்விட்டு அழ முடியாத நிலை.

எவ்வளவு நேரம் தாய் தந்தையின் நினைவில் அழுதுக்கொண்டிருந்தாளோ அப்படியே உறங்கிவிட்டிருந்தாள். காலையில் கோவிலுக்கு போக வேண்டும் என்று முதல் நாளிரவே சொல்லிவிட்டதால் அலாரம் வைத்து எழ, பூங்காவனம் படுத்திருந்த இடம் காலியாக இருந்தது. குளித்துவிட்டு கீழே இறங்கியவளின் கையில் காஃபி கோப்பையை திணித்தார் பூங்காவனம்.

ரெடியாகி வந்த பிரபு அவள் சூரிதாரில் இருக்கவும், தலை முதல் பாதம் வரை அளவிட்டுவிட்டு உதட்டை பிதுக்கினான்.

“என்னடா வீட்டை அளக்கிற மாதிரி ஹம்சூவை அளக்கிறே ….?

“அதில்லைம்மா , இன்று புதுவருடத்தின் முதல் நாள், கோவிலுக்கு போகிறோம்…” என்ற மகனை இடைமறித்தார்.

“ஆஹா பிரபு எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு இன்று புதுவருடம்ன்னு. பாரேன் எனக்கும், ஹம்சூவுக்கும் இது தெரியாம போச்சே …” என்றார் முகவாய் கட்டையில் கைவைத்தபடி.

அவரின் மரண கலாய்க்கு காஃபியை அருந்திக்கொண்டிருந்தவளுக்கு சிரிப்பு வந்துவிட சட்டென்று புரை ஏறிக்கொண்டது. ஆன்ட்டியின் கேலி பேச்சிற்கு சிரித்தபடி வந்த கெளதம் ஹம்ஸினீ இரும ஆரம்பிக்கவும் பதறி வேகமாக அவளை நெருங்கி தலையில் மென்மையாக தட்டினான்.

தாயும், மகனும் கண்ணால் சிரித்தபடி பார்வை பரிமாற்றம் செய்துக்கொண்டபடி பூங்காவனம் அவளின் கையிலிருந்த காஃபி கப்பை வாங்கி டேபிள் மேல் வைக்க கெளதம் அவளை சேரில் அமர்த்தினான். சற்று இருமல் அடங்கியதும் விழிகளில் துளிர்த்திருந்த நீரை துடைத்தபடி மெலிதாக புன்னகைத்தாள்.

“தேங்க்ஸ் ஸார், ஐ ம் ஓகே நவ் …”

இன்னொரு சேரில் கெளதம் அமர, அவன் எதிரில் பிரபு அமர்ந்தான்.

“பூங்காவனம் வர வர நீ என்னை ரொம்ப கலாய்க்க ஆரம்பிச்சிட்டே, இது சரியில்லை. நான் சொல்ல வந்ததே வேறே. அதுக்குள்ளே நீ உள்ளே புகுந்து மொத்த ஆட்டத்தையும் கலைச்சிட்டே. என்னையே இந்த கலாய் கலாய்க்கிறியே, பாவம் உன் ஸ்டூடெண்ட்ஸ். உன்னிடம் சிக்கி என்ன பாடுபடறாங்களோ…?

“ஆமாம் ஆன்ட்டி எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு …”என்று ஒத்து ஊதினான் கெளதம் சிரித்தபடி.

“அட போங்கப்பா , அவனுங்கெல்லாம் ஜித்து ஜில்லாடிங்க. அவனுங்க என்னிடம் சிக்கலை, நான் தான் அவனுங்களிடம் சிக்கி சின்னாபின்னாயிட்டு இருக்கேன்…”

அவரின் பாவமான முகபாவனைக்கு டைனிங் ஹாலே அதிர்ந்தது சிரிப்பில்.

“நீ சொன்னா நம்பமாட்டே கெளதம், பிள்ளைகளா அதுங்க, பிள்ளைங்களை பெத்து வைக்கிறதுக்கு பதிலா குரங்குகளை பெத்து யூனிபார்ம் மாட்டி ஸ்கூலுக்கு அனுப்பி வைச்சிட்டாங்க போல. அவ்வளவு அமர்க்களம். போர்டில் தலைவிரி கோலமா எங்க படத்தை வரைஞ்சி வைக்கிறது, சேரில் கம் ஊத்தி வைக்கிறது, சாக்பீஸ் பாக்சில் தண்ணீர் ஊற்றி வைக்கிறது, சேரின் அடியில் ஆணி அடிக்கிறதுன்னு ஒரே சேட்டை.

அதுவும் அவனுங்க டெஸ்ட் பேப்பரை திருத்தி முடிக்கிறதுக்குள்ளே உயிர் போய் உயிர் வரும், சில சமயம் பைத்தியம் பிடிக்கிற அளவுக்கு ஆன்சர் எழுதி வைப்பானுங்க. அதிலும் ஹிஸ்டரி பேப்பர் திருத்தற டீச்சர் கதி அதோ கதி தான். எனக்கெல்லாம் சில சமயம் படிச்ச இங்கிலீஷே மறந்திடற அளவுக்கு பதில் எழுதி வைச்சிருப்பானுங்க.

ஒரு முறை ஹிஸ்ட்ரியில் நாம எல்லோரும் வெறுக்கும் நேஷன் என்ற கேள்விக்கு ஒரு பக்கி எக்ஸாமி-நேஷன் என்று எழுதி வைச்சிருந்தது. அது மட்டுமா ஈபிள் டவர் எவ்வளவு உயரம் என்ற கேள்விக்கு ஒரு அறிவாளி ஹைட் , ஹைட் , ஹைட் ஒட்டகசிவிங்கியோட ஹைட்ன்னு எழுதி வைச்சிருக்கான். இதெல்லாம் ஒரு சேம்பிள் தான்.

ஒரு காலத்தில் பசங்க டீச்சர்ஸ்க்கு பயந்தது போக , இப்போ நாங்க பசங்களை கண்டு பயப்படறோம். ஒவ்வொரு நாளும் சேரில் உட்கார்வதற்கு முன் சேரை தலைகீழா புரட்டி போட்டு செக் பண்ணிட்டு தான் உட்கார்றதுன்னா பார்த்துக்கோயேன். உன்னை கலாய்க்கற வார்த்தையெல்லாம் பசங்களிடமிருந்து கத்துக்கிட்டு வர்றது தான்…” என்று முடிக்க மீண்டும் சிரிப்பலை எழுந்தது.

சரசு இரு ஆண்களுக்கும் காஃபி கொண்டு வந்து கொடுத்துவிட்டு சிரித்துக்கொண்டே உள்ளே சென்றார்.

“ஆக எதுவும் சொந்த சரக்கு இல்லைன்னு சொல்ல வர்றே. இது சரியில்லை பூங்காவனம்…” என்றான் போலியான மிரட்டலுடன்.

“உன்னிடம் அது கூட இல்லையே கண்ணா ….” என்று வாரிவிட்டு, “அதுசரி ஹம்சூவிடம் ஏதோ சொல்ல வந்தாயே ? என்ன அது …?

“ஓ அதுவா, புதுவருஷத்தில் கோவிலுக்கு போறோமே, அழகா ஒரு புது புடவை கட்டிட்டு வராமல், இதென்ன பழைய சுரிதார் போட்டுக்கிட்டு இருக்காளேன்னு கேட்க வந்தேன். அதுக்குள்ளே நீ குட்டையை குழப்பிட்டே. ஹம்ஸினீ புடவை கட்டிக்கிட்டு வாயேன் …”

பிரபு புடவை கட்ட சொன்னதுமே கௌதமின் விழிகள் அப்பொழுது தான் அவளை முழுமையாக பார்த்தது. ஒரு முறை இந்த சூரிதாரை அவள் அணிந்து பார்த்திருக்கிறான். புது வருடத்திற்க்கு இவள் புது துணி எடுக்கவில்லையா என்ற ஆச்சர்யம் அவனுள். பிரபு கேட்டதுமே அதுவரை சிரித்துக்கொண்டிருந்தவளின் முகம் கூம்பியது. அவளின் முகவாட்டத்தை புரிந்துக்கொண்ட பூங்காவனம் அவளின் தோளில் கை வைத்து அழுத்தினார்.

“ஏன் இந்த ட்ரஸ்க்கு என்ன குறை. எல்லாம் நல்லா தான் இருக்கு. சரி கோவிலுக்கு கிளம்பலாமா …? என்றார் பேச்சை திசை திருப்பும் விதமாக.

“நான் என் பேகை எடுத்திட்டு வந்துடறேன் …” என்று முணுமுணுத்துவிட்டு ஹம்ஸினீ மாடிப்படியேற, அவள் தலை மறைந்ததும் பிரபுவின் தலையில் செல்லமாக கொட்டினார்.

“அவள் அப்பா இறந்து இரண்டு மாசம் கூட முழுசா முடியலை. போதத்திற்கு பெத்தவங்க இரண்டு பேரையும் ஆறே மாசத்தில் வாரி கொடுத்திட்டு நிக்கிறாள். அவள் இந்தளவு சிரிச்சி பேசறதே பெரிய விஷயம், அவளிடம் போய் புது புடவை அணிய சொன்னால் எப்படிடா அணிய மனசு வரும்…”

பிரபுவுக்கு அப்பொழுது தான் தன் தவறு புரிய, தன்னையே கொட்டிக்கொண்டான்.

“ஆமா நான் அதை மறந்துட்டேன் பாருங்க…”

பிரபு அசடு வழிய கௌதமுக்கு ஹம்ஸினீயை அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் போலிருந்தது. அவளை பற்றி தெரிந்ததிலிருந்து ஒவ்வொரு நிமிடமும் புதுசாக தெரிந்தாள் அவனுக்கு. அவளை பற்றி யோசிப்பதே சுகமாக இருந்தது.

“கெளதம் சார் போகலாமா, பிரபுவும், ஆன்ட்டியும் எங்கே …? என்ற குரல் கேட்டு நிமிர்ந்தவன் கைப்பையோடு நின்றிருந்த ஹம்ஸினீயை கண்டு அவசரமாக எழுந்தான்.

“ஹ்ம்ம் வெளியில் இருப்பாங்க…”என்றபடி அவளுடன் வந்து காரில் ஏற, பிரபு நண்பனின் பக்கத்தில் அமர இரு பெண்களும் பின்னால் அமர்ந்தார்கள்.

முதல் நாள் சென்ற அதே கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து கோவிலை சுற்றிவிட்டு சில நொடிகள் கோவிலில் அமர்ந்துவிட்டு வெளியே வந்தார்கள். அப்படியே பூங்காவனம் ஆன்ட்டியின் ஆசைப்படி பிருந்தாவனம், மைசூர் பேலஸ் என்று சுற்றினார்கள். ஹம்ஸினீக்கு அபியை விட்டு வெளியில் சுற்ற விருப்பமில்லை, ஆனால் ஆன்ட்டியின் ஆசைகளை தட்டி கழிக்கவும் பிடிக்கவில்லை.

அவருக்காக வெளியில் பலமணி நேரத்தை கழித்தாலும் அவ்வப்பொழுது நர்ஸ்க்கும், சரசம்மாவுக்கும் போன் செய்து அபியை பற்றி விசாரித்து தெரிந்துக்கொண்டாள். அவளின் தவிப்பையும் கெளதம் பார்த்துக்கொண்டுதானிருந்தான். அவன் வீட்டை விட்டு செல்லும் முன்னரே சரசம்மாவிடம் கட்டளையாக அபியை கவனித்துக்கொள்ள சொல்லிவிட்டு தான் கிளம்பியிருந்தான்.

அவளையே கவனித்துக்கொண்டிருந்தவன் அவள் எதிலும் ஒன்றாமல் ஒரு தவிப்புடனேயே இருக்கவும் அவளை நெருங்கினான். ஆன்ட்டி மைசூர் பேலஸை சுற்றி பார்த்துக்கொண்டிருக்க பிரபு தாய்க்கு உதவியாக சென்றிருக்க ஹம்ஸினீ எதிலும் நாட்டமில்லாமல் ஓரிடத்தில் அமர்ந்துவிட்டாள். அவளருகில் அமர்ந்தவனை திரும்பி பார்த்துவிட்டு அவள் அபி பற்றிய நினைவுகளில் ஆழ்ந்தாள்.

“நோ ஒர்ரிஸ் ஹம்ஸினீ, ஆல்ரெடி நான் சரசம்மாவிடம் சொல்லிட்டு தான் வந்திருக்கேன். அவங்க அபியை பத்திரமா பார்த்துக்குவாங்க. உனக்கு எந்த கில்டியும் வேண்டாம். இப்போதைய தருணத்தை முழுசா அனுபவி…” என்றான் மென்மையாக.

“இல்லை சார், அபி இந்த நிலைமையில் இருக்கும் பொழுது நான் மட்டும் சந்தோஷமா இருக்கிறது ஒரு மாதிரி குற்ற உணர்ச்சியா இருக்கு. உங்களுக்கு ஒன்று தெரியுமா சார், அவளுக்கு டிசம்பர் மாதம் பிறந்துட்டாலே ரொம்ப குஷியா பீல் பண்ணுவா. மார்கழி மாதம் விடியற்காலையில் எழுந்து தெருவையே அடைக்கிற மாதிரி கோலம் போடுவா. அதற்காக முதல் நாளிரவே கோலத்தை ரெடி செய்து வைப்பாள். அதுவும் புதுவருஷத்திற்கு பூக்கோலம், கலர் கோலம்ன்னு அமர்க்களப்படுத்துவா.

மற்ற நாட்களில் சிக்கு கோலம் போடுவா, ஆனால் புதுவருஷத்தில் மட்டும் எப்பொழுதுமே அழகழகா பூக்கோலங்கள் தான். காரணம் கேட்டால் சிக்கு கோலம் போட்டால் அந்த வருடம் முழுக்க வாழ்க்கையும் சிக்கலாக இருக்கும் என்பாள். புதுவருடத்தில் கோவிலுக்கு செல்வாள். அன்று அவளே வடை பாயசத்தோடு சமைத்து பூஜை செய்வாள். புது புடவை தான் உடுத்துவாள். ரொம்ப சென்சிடிவ் இந்த விஷயத்தில்.

மார்கழி மாதத்தில் காலையில் திருப்பாவை, திருவெம்பாவை படிப்பாள். வெங்கடேச ஸுப்ரபாதம் அவளுக்கு அத்துப்படி. மார்கழி மாதம் முழுவதும் காலையில் தினமும் பாடிகிட்டே கோலம் போடுவா, பூஜை வேலைகளை செய்வாள்.

ப்ச் அப்படிப்பட்டவ இன்று புதுவருஷம்ன்னு உணர முடியாதவளாய் படுத்துக்கிடக்கிறா. நினைச்சி பார்க்கவே ரொம்ப வருத்தமா இருக்கு. ஒரு வெள்ளிக்கிழமை, நல்ல நாள், பிறந்த நாள், விரத நாள்ன்னு விடாமல் கோவிலுக்கு போயிட்டு வந்தவளுக்கு கடவுள் கொடுத்திருக்கிற வாழ்க்கையை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியலை. கெடுதல் செய்கிறவனெல்லாம் நன்றாக இருக்கிறான், எந்த கெடுதலும் செய்யாதவ இப்படி படுத்துக்கிடக்கிறாள். இதெல்லாம் அநியாயம் சார்…”

ஹம்ஸினீயின் மன வருத்தமும் கொந்தளிப்பும் அவனுள் குற்ற உணர்வை உண்டு பண்ண அமைதியாக அமர்ந்திருந்தான். என்னவென்று அவளுக்கு விளக்கம் சொல்லுவது, இல்லை ஆறுதல் வார்த்தைகளை சொல்லுவது. அவனின் அமைதி அவளை தாக்கியது என்னவோ. பேசிக்கொண்டே சென்றவள் சட்டென்று பேச்சை நிறுத்தி அவனை நோக்கி திரும்பினாள். அப்பொழுது தான் தன் பேச்சு அவனை வருத்தியிருக்கு என்று புரிய தன்னையே நொந்துக்கொண்டாள்.

“ஐ ம் சாரி சார், நான் உங்களை மீன் செய்து சொல்லலை. எனக்கு கடவுள் மேலே தான் கோபம். அபியின் குணத்திற்கு அவளை உள்ளங்கையில் வைச்சி தாங்குகிற புருஷன் அமைந்திருக்கணும். ஆனால் எப்பேர்ப்பட்ட அயோக்கியன் புருஷனா அமைஞ்சிருக்கான் பாருங்க. அதை சொன்னேன். நீங்க தவறா எடுத்துக்காதீங்க ப்ளீஸ்…”

அவளின் விளக்கத்திற்கு அவனின் இதழ்களில் சிறு கசந்த புன்னகை வெளிப்பட்டது. ஒரு நெடிய பெருமூச்சென்று வெளிப்பட்டது.

“நீ எதுவும் தவறா பேசிடலை, ஆனால் நீ சொன்னதை வைத்து யோசிக்கும் பொழுது ஆண்டவன் எந்தவொரு மனிதனையும் ஏதோ ஒரு காரணத்திற்க்காக தான் படைத்திருக்கிறார் என்று மட்டும் புரியுது. காரண காரியமில்லாமல் யாருமே பிறப்பதில்லை. அதே போல அபிக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கு. அவளின் கணவன் அமெரிக்க மாப்பிள்ளையாக இல்லாமல் இருக்கலாம். அதனால் தான் என்னவோ அபி அவனுடன் வாழவில்லை…”

“என்ன சார் சொல்றீங்க …?

“இருக்கலாம் ஹம்ஸினீ, அமெரிக்க மாப்பிள்ளை ப்ரோக்கர் மூலம் வந்து அவளின் பெற்றோர் முடிவு செய்தது, அதுவும் அவசரமாக. ஆனால் கடவுள் அபிக்கென்று முடிச்சி போட்டவன் வேறொருத்தனாக கூட இருக்கலாம். இல்லை அமெரிக்கா மாப்பிள்ளை வேண்டும் என்பவர்களுக்கு இப்படியெல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள் என்று தெரியபடுத்துவதாக கூட இருக்கலாம். அதுவும் இல்லையென்றால் அபியின் மீதிருக்கிற உன் சித்தப்பாவின் தப்பான அபிப்ராயத்தை மாற்றுவதற்காக கூட இப்படியொரு வாழ்க்கை அமைந்திருக்கலாம். எதுவென்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு காரணம் தான் அபியின் மரணத்தை தள்ளி போட்டிருக்கு.

நீ வேண்டுமென்றால் பார், அபி குணமாகி எழுந்து அவளுக்கென்று ஒரு நல்ல வாழ்க்கை அமைந்து அவள் சந்தோஷமாக அவள் பிள்ளைகளுடன் வாழத்தான் போகிறாள். அதை நாம ஜோடியாக பார்க்க போகிறோம். சோ பீ கூல்…”

கெளதம் பேச பேச ஹம்ஸினீ யோசனையுடன் கேட்டுக்கொண்டிருக்க அவளின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்தது அவனின் கடைசி வரியில்.