UN NINAIVIL VAAZHVEN NAANAGAVE …
அத்தியாயம் _ 20
“என்ன தொழிலதிபரே, நான் சொல்றதையெல்லாம் கேட்க அதிர்ச்சியா இருக்கா ? ஹம்ஸினீயின் முழு கதையை கேட்டால் நீ அதிர்ச்சியின் உச்சத்திற்க்கே போய்டுவே. அதுமட்டுமில்லை நான் ஏன் ஹம்ஸினீ மீது இந்தளவு அக்கறையுடன் இருக்கிறேன்னு புரியும். சொல்றேன் கேட்டுக்கோ…” என்றவன் ஹம்ஸினீயின் திருமண வாழ்க்கை தோற்ற கதையை சொல்லி முடிக்க கெளதம் அதிர்ச்சியில் சமைந்து போயிருந்தான்.
“கேட்கவே அதிர்ச்சியா இருக்கில்லையா ? ஹம்ஸினீ கொஞ்சம் ஏமாந்திருந்தால் அவளை உயிரோடவே பார்த்திருக்க முடியாது. அந்த சைக்கோ டாக்டர் அவளை பிணம் மாதிரி கூறு போட்டிருப்பான். இப்படிப்பட்ட ஒருத்தனுக்கு கறிவேப்பில்லை கொத்து மாதிரி ஒற்றை பெண்ணை பெற்று ஆசை ஆசையாய் வளர்த்து கிளியை ஒரு குரங்கு இல்லையில்லை ராஜாளி கழுகுகிட்டே ஒப்படைச்சி அவள் வாழ்க்கையை சின்னாபின்னாமாக்கிட்டோம் என்ற அதிர்ச்சியில் அவளுடைய அம்மா உள்ளுக்குள்ளே மருகி மருகி ஒரு நாள் தூக்கத்திலேயே இறந்து போக, மகளுக்கு நேர்ந்த துக்கத்தை தாங்க முடியாமல் இருந்த தந்தை மேற்கொண்டு மனைவி இறந்து போன அதிர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாமல் நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்துவிட்டார். அன்றிலிருந்து ஹம்ஸினீ தனி ஒருத்தியாய் தந்தையை கவனித்துக்கொள்ள ஹாஸ்பிடலும் கையுமாக இருந்தாள். திடீரென்று ஒரு வருடம் காணாமல் போனவள் சில மாதங்களுக்கு முன்பு அவளை பேங்கில் சந்தித்தேன்.
ஆனால் அன்று மதியமே அவளின் தந்தை இறந்துவிட்டார். அப்பொழுதும் கூட அவள் உடனேயே என்னை அழைத்து சொல்லவில்லை. தனியாளாக எல்லாவற்றையும் ஒரு வைராக்கியத்துடன் செய்தவளுக்கு தனிமை அழுத்தம் தாங்க முடியாமல் தான் என்னை அழைத்து விஷயத்தை சொன்னாள்.
உனக்கொரு விஷயம் தெரியுமா கெளதம் அவளை காலையில் பேங்கில் சந்தித்தேன், அத்தோடு மாலை சந்தித்தேன், இடைப்பட்ட நேரத்திற்குள் அவள் இருந்த நிலையை வார்த்தையால் வர்ணிக்க கூட முடியாது. அந்தளவு நொறுங்கி போயிருந்தாள். ஒரு வயது பெண் பெற்றவரும் இல்லாமல், கட்டின கணவனும் இல்லாமல் எப்பொழுது வேலைகள் முடியும் பறந்துபோய் விடலாம் என்ற உறவினர்களுக்கு மத்தியில் இருப்பவளின் நிலையை கொஞ்சம் யோசித்து பார். அதன் பயங்கரம் புரியும்.
எல்லா சடங்குகளும் முடிந்ததும் அவளை வீட்டுக்கு அழைத்த பொழுது அவள் சொன்ன வார்த்தை இன்னும் என் காதுகளில் ஒலிச்சிக்கிட்டே இருக்கு. எப்பொழுதும் உன்னால் எனக்கு பாதுகாப்பு தரமுடியுமான்னு, இது எனக்காக டிசைன் செய்யப்பட்ட வாழ்க்கை. நானே பார்த்துக்கொள்கிறேன் என்றாள். உண்மை தான் என்னால் அவளுக்கு வாழ்நாள் முழுதும் பாதுகாப்பு தர முடியாது. ஆனால் அவளுக்கென்று ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுக்கலாமே. அதற்கு முதற்கட்டமாக உன்னுடன் இங்கே அனுப்பி வைத்தேன். அப்பொழுது தான் அவள் நார்மலான மனநிலைக்கு வருவாளென்று.
இங்கு வந்து பார்த்தால் நீ அவளை வறுத்தெடுத்துக்கிட்டு இருக்கே ? உனக்கு என்னதாண்டா பிரச்சினை. உன் அம்மா மாதிரியே எல்லோரும் இருப்பார்களென்று நினைச்சிக்கிட்டிருப்பதை முதலில் தூர தூக்கி போடு. ஹம்ஸினீ அருமையான பெண். அவளை எந்த விதத்திலும் காயப்படுத்திடாதே ப்ளீஸ் …”
உருக்கத்துடன் நீளமாக சொல்லி முடிக்க கெளதம் எந்த இடத்திலும் குறுக்கிட முயற்சிக்கவே இல்லை. ஹம்ஸினீயின் வாழ்க்கையை பற்றியும், அவள் மனநிலைகளை பற்றியும் கெளதம் தெரிந்துகொள்ள விரும்பியே நடுவில் பிரபுவை கேள்விகள் கேட்டு அவனின் கவனத்தை திசை திருப்பவில்லை. ஹம்ஸினீயின் கடந்த காலம் அவன் மனதை யாரோ கையால் பிசைவது போன்ற ஒருவித வலியை உண்டு பண்ணியது. பிரபு சொன்னதை கிரஹிக்கவே சில நொடிகள் தேவைப்பட்டது.
இத்தனை களோபரங்கள் அவள் வாழ்க்கையில் நடந்திருக்கு, ஆனால் அதை ஒரு முறை கூட தன்னிடம் காட்டிக்கொள்ளவே இல்லையே, அவ்வளவு ஏன் சிறு குறிப்பு கூட கொடுக்கவில்லை. அன்று அபியை பற்றி சொன்ன பொழுது என் மீது கோபப்படாமல் அபியை காப்பாற்றியதற்காக நன்றி சொன்னாளே. இவளுக்கா இப்படியொரு கஷ்டம் என்ற வேதனை கரையான் மாதிரி அரித்தது.
ஆனாலும் பிரபு சொன்னதில் ஒரு சந்தேகம் உண்டானது. இத்தனை நாள் அவனை ஹம்ஸினீயிடம் பேசாமல் தூர தள்ளி வைத்த விஷயம் தான் அது. அதை பற்றி பிரபுவிடம் கேட்கலாமா வேண்டாமா என்று தனக்குள் ஆயிரம் முறை யோசித்து, இவ்வளவு தூரம் வந்த பிறகு ஹம்ஸினீ மனதில் என்ன இருக்கென்று தெரிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆவலில் நண்பனிடம் அந்த கேள்வியை முன் வைத்தான்.
“ஹம்ஸினீ வாழ்க்கையில் இவ்வளவு பெரிய விஷயங்கள் நடந்திருக்கு என்று நினைச்சி பார்க்கவே பயமாக இருக்கு. விதி யார் வாழ்க்கையையும் விட்டு வைக்கவில்லை. எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு விளையாட்டை நிகழ்த்திக்கொண்டே தான் இருக்கு. ஹ்ம்ம் சரி பிரபு எனக்கொரு சந்தேகம், அதற்கு சரியான பதிலை சொல்வாயா… ?
“கேளு … ?
“எப்பொழுது உங்க இரண்டு பேருக்கும் திருமணம்… ?
கௌதம் கேள்வியை கேட்டு முடிக்க, பிரபு அதிர்ந்தது என்னவோ ஒரு நொடி தான், அடுத்த நொடி வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தான். அவனின் சிரிப்பிற்கான அர்த்தம் புரியாமல் கெளதம் அவனை எரிச்சலுடன் நோக்கினான் மார்பின் குறுக்காக கையை கட்டி அமர்ந்தபடி. பிரபு நிறுத்தாமல் சிரித்துக்கொண்டே இருக்கவும் அமர்த்தலாக கையை தூக்கி அவன் சிரிப்பை அடக்கினான்.
“இப்போ எதுக்கு இந்த பேய் சிரிப்பு, கேட்ட கேள்விக்கு பதில் சொல் … ?
“லூஸாடா நீ, நான் சிரிக்கறதிலிருந்தே உனக்கு தெரியலையா ? நான் சொன்ன கதையில் எந்த இடத்தில் ஹம்ஸினீயை காதலிக்கிறேன்னு சொன்னேன். அவள் என் தோழி. என் அம்மா அவளை ஒரு மகளாக பார்க்கிறாங்க. அவளும் என்னை ஒரு சகோதரனாக பார்க்கிறாள், பழகுகிறாள். நாங்க திரு…” என்றவன் மீண்டும் விட்ட சிரிப்பை தொடர கெளதம் அழுத்தமாக விழிகளை மூடித்திறந்தான் தன் முட்டாள்தனமான நினைப்பை எண்ணி.
“அடேய் என்னிடம் கேட்ட மாதிரி ஹம்ஸினீயிடம் கேட்டு வைச்சிடாதே, அப்புறம் உன் கன்னம் பழுத்திடும். மேடம் ருத்ரதாண்டவம் ஆடுவாங்க…”
“சரி வண்டியை எடு, பேக்கரியில் கொடுத்த டைம் தாண்டிடிச்சி…” என்றான் உணர்வுகளை வெளிக்காட்டாத குரலில்.
ஒரு நொடி அவனை கூர்ந்து பார்த்த பிரபு,சரியான கள்ளுள்ளி மங்கன் என்று தனக்குள் முணுமுணுத்துக்கொண்டே வண்டியை கிளப்பினான்.
பிரபு முணுமுணுத்தது அவன் காதில் ஸ்பஷ்டமாக விழுந்தாலும் காதில் விழாத மாதிரியே இருந்தவனின் இதழ்கள் லேசாக புன்னகையில் வளைந்தது. பிரபு சொன்னதை கேட்டு முதல் முறையாக மனது வானத்தில் பறக்கிற மாதிரி இருந்தது. இந்த மாதிரி ஒரு உணர்வை அவன் வாழ்நாளில் அனுபவித்ததே இல்லை. யார் மீதும் பொறாமை பட்டதுமில்லை, அன்புக்காக ஏங்கியதும் இல்லை. காரணம் அவன் தாயின் அன்பு எல்லாவித சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. அதை அவன் என்றுமே விரும்பியதில்லை. எதிர்பார்ப்பில்லாத அன்பு அவன் வாழ்க்கையில் கிடைத்ததில்லை.
தனக்கு உயிர் கொடுத்த ஜீவன் என்கிற ஒரு மரியாதை மட்டுமே அவர் மீது. ஆனால் அதுகூட உடன்பிறந்தவனின் மரணத்திற்கு காரணமாக அந்த பாசமும் உடை மேல் ஒட்டிய கடல் மணல் போல உதிர்ந்துவிட்டது. ஹம்ஸினீ பிரபு மீது காட்டிய ஆர்வத்தை தான் தவறாக புரிந்துகொண்டுவிட்டோம் என்பதே அவனுக்கு வெட்கத்தை உண்டாக்கியது.
வண்டி பேக்கரி முன் நிற்க, கெளதம் இறங்கிச்சென்று ஆர்டர் கொடுத்த கேக்கை வாங்கிக்கொண்டு திரும்பி வந்து அமர மீண்டும் வண்டியை எடுத்தான் பிரபு.
“அப்புறம் சார் என்ன முடிவுக்கு வந்தீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா … ? என்றான் பிரபு சீண்டலாக.
“பார்டன் …”
“டேய் நிறுத்துங்கடா, கேட்ட கேள்விக்கு பதிலை சொல்லு ராசா, ஹம்ஸினீயின் மீது நீ எதுக்கு இத்தனை கோபமாக இருந்தேன்னு எனக்கு தெரியலை. ஆனால் இப்போ அவளின் கடந்த காலம் உன்னுள் ஏதோ ஒரு தெளிவை கொண்டு வந்திருக்குன்னு மட்டும் தெளிவா தெரியுது. அதான் கேட்டேன்…”
பிரபுவின் புத்திசாலித்தனத்தை எண்ணி மனதுக்குள் மெச்சிக்கொண்டே அலட்சியமாக தோள்களை குலுக்கினான்.
“சாரி நீ எதை பற்றி பேசறேன்னு எனக்கு தெரியலை. ஹம்ஸினீயின் பாஸ்ட் லைஃப் பற்றி நீ சொன்னே, நான் கேட்டேன். கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருந்தது, தட்ஸ் இட். அதை தவிர்த்து வேறு என்ன தெளிவுக்கு வரணும். டோன்ட் ப்ளஃப் எனிதிங்…”
“சரிங்கடா உண்மை விளம்பிங்களா, நீங்க சொல்றதை நம்பிடறோம்…”
கேலியாக பதிலளித்தாலும் கௌதமின் குரலில் மெலிதாக சிரிப்பு இழைந்ததோ, கோபமே இல்லாமல் வந்ததே பதில் என்ற சந்தேகம் எழுந்தது அவனுள்.
கார் காம்பவுண்ட் கேட்டினுள் நுழைந்து இளைப்பாற இரு ஆண்களும் இறங்கினார்கள். பக்கவாட்டில் இரு பெண்களும் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதை இருவருமே பார்த்ததால் சரசம்மாவை அழைத்து கேக்கை அவரிடம் கொடுத்து உள்ளே வைக்க சொல்லிவிட்டு பிரபுவுடன் அவர்களை நோக்கி சென்றான் கெளதம்.
இரு பெண்களுமே தத்தம் யோசனையில் உழன்றபடி அமர்ந்திருக்க வந்த இருவரையும் கண்டுக் கொள்ளவே இல்லை.
“பூங்காவனம் எந்த கோட்டையை பிடிக்க இவ்வளவு தீவிரமா யோசிக்கிறே … ? என்றபடி தாயின் பக்கத்தில் அமர்ந்தான் பிரபு.
அவனின் கேள்வியில் இரு பெண்களுமே சுதாரித்து நிமிர கெளதம் கையை கட்டியபடி இளம் புன்னகை தவழ நின்றுக்கொண்டிருக்கவும் அவசரமாக ஊஞ்சலிலிருந்து குதித்து இறங்கினாள்.
“சாரி சார், நீங்க உட்காருங்க …”
அவனை உபசரித்தபடி அங்கிருந்த இன்னொரு சிமெண்ட் பெஞ்சில் அமர முயல, கெளதம் அவளின் கையை பிடித்து மீண்டும் அவளை ஊஞ்சலில் அமர வைத்துவிட்டு அவன் அவள் அமர முயன்ற சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்தான். மாமரத்தின் நிழலில் சிலுசிலுவென்று வீசிய தென்றல் காற்று ஏகாந்தத்தின் சதவிகிதத்தை கூட்டியது.
கௌதமின் செய்கையை தாயும், மகனும் ஒருவரை ஒருவர் பார்வை பரிமாற்றத்திலேயே கேள்விகளை இடமாற்றிக்கொண்டார்கள். பூங்காவனம் குறும்பு படர சட்டென்று எழுந்தார்.
“நீங்க பேசிட்டிருங்கப்பா, நான் காஃபி கொண்டு வர்றேன் …” என்று செல்ல முயல ஹம்ஸினீயும் இறங்க முயன்றாள் அவருடன் செல்ல நினைத்து.
“அதெல்லாம் வேண்டாம், நானே கொண்டு வர்றேன், நீ பேசிட்டிரு. இதோ வந்துட்டானே ஆல் இன் ஆல் அழகுராஜா, அவனிடம் பேசிட்டிரு …” என்று விடுவிடுவென்று உள்ளே செல்ல பிரபு ஒரு நொடி திணறி பின் எழுந்தான்.
“ரெஸ்ட்ரூம் போயிட்டு வந்துடறேன், நீங்க பேசிட்டிருங்க …”
அவனும் கழன்றுக்கொண்டு உள்ளே சென்றுவிட ஹம்ஸினீயும், கௌதமும் தனித்து விடப்பட்டனர். இருவரின் பார்வைகளும் அங்குமிங்கும் அலைந்து பின் தீர்க்கத்துடன் ஒரே நேர்கோட்டில் சந்தித்தது. ஹம்ஸினீக்கு எப்படியிருந்ததோ,ஆனால் கௌதமின் உள்ளே ஏதோ ஒன்று இதமாக பரவுவதை அவன் உணர்ந்தான். அதன் விளைவாக முகம் மென்மையாக, இதழ்களில் மென் புன்னகை படர்ந்தது.
இருவருக்கும் இப்படி ஒரு நேரமோ, விச்சராந்தியாக தனிமையில் அமரும் நிலையோ வந்ததே இல்லை. அப்படியே அமைந்தாலும் அது வேலை பற்றிய விஷயமாக பேசும் நேரமாக இருக்கும். இல்லை சைட் விசிட்க்கு செல்லும் நேரமாக இருக்கும். அப்படியும் இல்லையென்றால் சரசம்மாவின் முன் அமர்ந்து சாப்பிடும் நேரமாக இருக்கும். எவ்வித வேலையுமில்லாமல், எதை பற்றியும் யோசிக்காமல் யாருமற்ற ஏகாந்தமான சூழ்நிலை அவர்களுக்கு புதிது. அதனாலேயே இருவருக்கும் என்ன பேசுவது என்று புரியாமல் ஒருவரை ஓருவர் பார்த்துக்கொள்வதும் தங்களுக்கும் புன்னகைத்துக்கொள்வதும், பின் தோட்டத்து பூக்களை ரசிப்பதுமாக பொழுது செல்ல கெளதம் மெல்ல கனைத்தான்.
“உங்க ப்ரெண்டை பார்த்ததும் பயங்கர சந்தோஷமாயிட்டீங்க போல. பிரபுவை ரொம்ப மிஸ் பண்ணிட்டீங்களோ …?
எவ்வளவு நேரம் தான் மௌனத்திலேயே நேரத்தை கழிப்பது, அது மட்டுமில்லை அவளிடம் வேலையை தவிர்த்து பேசி பழக்கமில்லாத கௌதமுக்கு அவளிடம் நிறைய பேச வேண்டும் போல ஆசை இருந்தும் பேச்சு வரவில்லை. பேசியே ஆகணும் என்று தோன்ற பேச்சை எந்த புள்ளியில் ஆரம்பிப்பது என்று யோசித்தவனுக்கு பிரபு நினைவில் வர அதிலேயே ஆரம்பித்தான். அப்படியே அவளின் மனதையும் புரிந்துக்கொள்ளலாமே…
கெளதமின் கேள்விக்கு மென் புன்னகையை பரிசளித்துவிட்டு பேசலானாள்.
“ஒரு வகையில் சந்தோஷம் தான், ஆனால் மிஸ் பண்ணேனான்னு கேட்டால் நிச்சயம் இல்லைன்னு தான் சொல்வேன். அவன் என் வெல்விஷர். எனக்கு எது நல்லதோ அதை மட்டுமே எனக்கு சொல்வான். ஆனால் ஆன்ட்டியை நான் ரொம்ப மிஸ் பண்ணேன். என் பெற்றோர் என்னை விட்டு போன பிறகு எனக்கு ஒரு அம்மாவாகவும், அப்பாவாகவும் இருந்து என்னை வழி நடத்தியிருக்கிறார். ஷி இஸ் சச் எ நைஸ் லேடி…”
அவள் பூங்காவனம் அம்மாவை பற்றி சொன்னதை கேட்டு ஆமோதிப்பாக தலையசைத்தான்.
“ஹ்ம்ம் எனக்கும் நிறைய அட்வைஸ் செய்திருக்காங்க. பிரபு இஸ் வெரி லக்கி கை. சரி ஹம்ஸினீ உங்களுக்கு புதுவருட ஈவ்க்கு போகிற பழக்கம் இருக்கா? போக ஆசையாக இருந்தால் இங்கே ஒரு இடத்தில் எல்லோரும் ஒன்று கூடுவார்கள். பார்க்க கோலாகலமாக இருக்கும். போயிட்டு வரலாம்…”
அதை கேட்டதுமே மலர்ந்திருந்த அவளின் முகம் தாமரை மொட்டாய் கூம்பியது.
“இல்லை வேண்டாம் கெளதம் சார், இந்த மாதிரி ஆசையெல்லாம் எனக்கொரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போ இல்லை. அதுவும் அப்பா, அம்மா இருவரையும் ஒரே வருடத்தில் வாரி கொடுத்திருக்கிறேன். என்னால் இந்த மாதிரி கொண்டாடட்டங்களை நினைத்துக்கூட பார்க்க முடியாது. இப்போதைக்கு எனக்கு சில கடமைகள் இருக்கு. அதை முடிப்பதில் மட்டுமே என் கவனம் இருக்கும்…”
ஹம்ஸினீ மிக மிக தீர்க்கமாக பேச அவளை ஆழ்ந்து நோக்கினான். சில நொடி மௌனத்திற்கு பிறகு மீண்டும் பேசினான்.
“பிரபு சொன்னான் உங்க கடந்த காலத்தை. கேட்கவே கஷ்டமாக இருந்தது …”
பேசிக்கொண்டிருந்தவன் ஹம்ஸினீயின் உடல் விரைப்பதை கண்டு பேச்சை நிறுத்தி பின் தொடர்ந்தான்.
“எல்லோரின் வாழ்க்கையில் விதி இஷ்டத்திற்கு புகுந்து விளையாடும் பொழுது சாதாரண மனிதனால் என்ன செய்ய முடியும். என் வாழ்க்கையில் தான் சோகம் என்று நினைத்திருந்தேன் அபியை சந்திக்கும் வரை. ஆனால் உன்னை சந்தித்து உன் வாழ்க்கையை பற்றி தெரிய வந்த பொழுது விதி யாருக்கும் கருணையோ, பாரபட்சமோ பார்ப்பதில்லை என்று புரிந்தது. ஒரு விஷயத்தில் உன் மீது எனக்கு ஒரு அபிமானம் வந்திருக்கு ஹம்ஸினீ …”
“அபிமானமா …?
“ஹ்ம்ம் அபி மாதிரி நடந்ததை மண்டையில் ஏற்றிக்கொண்டு கழிவிரக்கத்திலே காலத்தை தள்ளிக்கொண்டோ அல்லது நடந்த கொடுமைகளுக்காக உயிரை மாய்த்துக்கொள்ளாமல் அடுத்து என்னவென்று எதிர்காலத்தை நோக்கி மூவ் ஆன் ஆகிற தெளிவு எத்தனை பேருக்கு இருக்கும். உங்களுக்கு இருக்கே ஹம்ஸினீ. ரியலி ஐ அப்ரிஷியேட் யூ…”
கௌதமின் பாராட்டிற்கு மெல்ல புன்னகைத்து,”நாமெல்லாம் ஆற்றில் மிதக்கும் இலை மீதிருக்கும் தண்ணீர் மாதிரி சார். ஆற்றின் போக்கிலேயே சென்றால் பிழைத்துக்கொள்வோம். இல்லை நான் எதிர் திசையில் தான் செல்வேன் என்று திமிறினால் தண்ணீரில் மூழ்கி விடுவோம். அப்புறம் வாழ்க்கையாவது ஒன்றாவது.
அபிக்கு ஆற்றின் போக்கிலே போகிற பக்குவத்தையும், தைரியத்தையும் அவள் அப்பா அதான் என் சித்தப்பா அவளுக்கு கற்று கொடுக்கவில்லை. அவளும் கற்றுக்கொள்ளவில்லை. பிரச்சினை வந்ததும் எதிர்த்து நிற்க தோன்றாமல் உயிரை மாய்த்துக்கொண்டால் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று பல கோழைகள் நினைக்கிறார்கள். ஆனால் இறந்த பிறகு மட்டும் நிம்மதியாக இருந்துவிடுவார்களா என்று கேட்டால் அதற்கும் பதிலில்லை. கண்டவர் விண்டிலர், விண்டிலர் கண்டவர் கதை தான்…
ஆனால் நேற்று வரை நான் உங்களை பார்த்த கோணமும், இன்றிலிருந்து உங்களை பார்க்கும் கோணமும் நிறைவே எனக்கு வித்யாசம் தெரியுது. வேலைக்கு போக சொல்லி சிபாரிசு செய்த பொழுது பிரபு உங்களை பற்றி ஹைப்பா நிறைய சொன்னான். அப்போ அது எனக்கு பெரிசா தோணலை. இப்போ அவன் கொஞ்சமாக தான் உங்களை பற்றி சொல்லியிருக்கான்னு தோணுது…”
ஹம்ஸினீ பேசியதை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டிருந்தவன் தன்னை பற்றி அவள் உயர்த்தி பேசவும் வியப்பும், ஆச்சர்யமும் உண்டாக அவன் புருவங்களும் அவள் பேச்சை போலவே உயர்ந்தது.