UN NINAIVIL VAAZHVEN NAANAGAVE …

அத்தியாயம் -19

இரு ஆண்களும் வெளியே கிளம்பியதும் மூன்று பெண்களும் பொதுவான விஷயங்களை பற்றி பேசியபடி சாப்பிட்டு முடித்து சற்று நேரம் அபியின் பக்கத்தில் அமர்ந்து பூங்காவனமும், ஹம்ஸினீயும் பேசிக்கொண்டிருந்தார்கள். 

பக்கத்திலேயே வித்யா மற்ற இரு பெண்களும் பேசுவதை சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருக்கவும் பெரியவருக்கு ஹம்ஸினீயிடம் மனசு விட்டு பேச முடியாமல் எரிச்சலடைய செய்தது. அவருக்கு கெளதம் பற்றி அவளிடம் சில விஷயங்கள் கேட்க வேண்டியிருந்தது. 

“ஹம்ஸினீ வா கீழே போகலாம், அம்மாடி நர்ஸ் ஏதாவது என்றால் எங்களை கூப்பிடு …” என்றவர் எழுந்து வெளியே செல்ல ஹம்ஸினீயும் அவரை தொடர்ந்து கீழே செல்ல தோட்டத்து பக்கம் சென்றார். 

“என்னாச்சு ஆன்ட்டி, ஏதாவது பேசணுமா … ? 

நடந்துக்கொண்டிருந்தவர் நின்று ஒரு நொடி அவள் முகத்தை கூர்ந்துவிட்டு, மீண்டும் நடந்து ஊஞ்சல் போட்டிருந்த பக்கம் நகர்ந்து சென்று  பக்கத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்துக்கொண்டு அவளை ஊஞ்சலில் அமர சொன்னார். 

“நீ சரியா கணிச்சி தான் கேட்டிருக்கே, ஆனால் உங்களுக்குள் இருக்கும் பிரச்சினையை பற்றி ஏதும் சொல்ல மாட்டேங்கறியே…? 

“என்ன ஆன்ட்டி சொல்றீங்க? யாருக்கு பிரச்சினை? நான் என்ன சொல்லலை? 

“ஹம்ஸினீ நான் தேவையில்லாத எதையும் கேட்கமாட்டேன்னு உனக்கு தெரியும், நான் யாரை பற்றி கேட்கிறேன்னு உனக்கு உண்மையிலேயே தெரியலையா? சரி நானே சொல்றேன். வந்ததிலிருந்து பார்க்கிறேன் கெளதம் முகமே சரியில்லை. அவன் உன்னிடம் சரியா பேசவும் இல்லை. என்ன பிரச்சினை உங்களுக்குள் … ? 

அவர் சொல்ல சொல்ல ஹம்சினீயின் நெற்றி சுருங்கியது புரியாத ரீதியில். 

“நீங்க கேட்கிற கேள்வியின் அர்த்தம் சுத்தமா புரியலை, ஷாக்கிங்கா இருக்குது. கெளதம் சாருக்கும் எனக்கும் பிரச்சினையா? அப்படி எதுவும் இல்லையே ஆன்ட்டி. ஆனால் நீங்க சொன்னதில் ஒரு விஷயம் உண்மை, அவர் அடிக்கடி மௌனமாக ஆயிடறார், அதுக்கு காரணம் நானில்லை ஆன்ட்டி. எல்லாம் அபிநயாவின் நிலையை நினைத்து தான். மற்றபடி நீங்க சொல்கிற மாதிரி எந்த கருத்து வேறுபாடுமில்லை. சரி ஏன் ஆன்ட்டி அப்படி கேட்டீங்க…?

ஹம்ஸினீ சொன்னதை தனக்குள் கிரஹித்துக்கொண்டவர்க்கு கௌதமின் அமைதிக்கு காரணம் அபி இல்லை, ஹம்ஸினீ மட்டுமே காரணம் என்று புரிந்தது. ஆனால் இந்த அசட்டு பெண்ணுக்கு அவனின் மனது புரியாமல் எதையோ செய்தோ அல்லது பேசியோ வைத்திருக்கு. அதை முதலில் புரிய வைக்கணும். ஆனால் எப்படி …? 

அமைதியாக யோசித்துக்கொண்டிருக்க, ஹம்ஸினீ அவரை மென்மையாக உலுக்கினாள்.

“என்னாச்சு ஆன்ட்டி, உங்க மனசுக்குள் எதையோ வைச்சுக்கிட்டு கேள்வி கேட்கறீங்க? இருக்கட்டும் எனக்கொரு சந்தேகம்  இருக்கு கெளதம் சார் பற்றி. அதை நான் கேட்கலாமா …? 

பெரியவர் அவளை சொல்லு என்பதாக பார்த்தார். 

“கெளதம் சாரை நான் சந்தித்து, பேசிய கணத்திலிருந்து இன்று வரை அவர் என்னிடம் அதிகமாக பேசியதுமில்லை, சிரித்ததுமில்லை. எப்பொழுதும் ஒரு வித மௌனத்திலேயே இருப்பார். அவர் பேசினால் வேலை விஷயமாக தான் இருக்கும். நடுவில் கொஞ்சம் நன்றாக பேசிய மாதிரி இருந்தது. கடந்த ஐஞ்சாறு நாட்களாக மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய மாதிரி முன்பை விட அமைதியாக மாறிட்டார். ஏனென்று தெரியலை? அவருக்கு என்ன தான் பிரச்சினை ஆன்ட்டி, என்னால் அவரை புரிஞ்சிக்க முடியலை …? 

ஹம்ஸினீயின் பேச்சை கேட்டு தலையில் அடித்துக்கொள்ளலாம் போலிருந்தது. 

‘அடேய் பிரபு உன் முயற்சி எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக ஆயிடும் போலேயே. உன் தோழி சரியான தத்தியா இருக்காளே. இவ சொல்றதை வைச்சி பார்த்தால் கெளதம் மனசு கொஞ்சம் இளகி வந்திருக்கு, இவ என்னத்தையோ செய்து வைச்சி அதை மீண்டும் கல்லாய் இறுக வைச்சிட்டாளோ. அதான் கெளதம புத்தர் மீண்டும் சந்நியாசி மாதிரி நடந்துக்கிறானா? ஹையோ கடவுளே…’

“என்ன ஆன்ட்டி என்னையே பார்த்துக்கிட்டு உட்கார்ந்திருக்கீங்க, என் கேள்விக்கு பதில் சொல்லலையே நீங்க…?

‘ம்கூம் சொல்லிட்டா மட்டும் நீ காலில் சலங்கை கட்டிட்டு ஆடிடுவியோ…? 

ஒரு பெருமூச்சுடன் நிமிர்ந்து அமர்ந்தார். 

“என்னன்னு சொல்ல, கௌதமை எனக்கு சின்ன வயசிலிருந்து தெரியும். ரொம்ப அமைதியான, பண்பான , திறமையான பையன். ஆனால் அவன் மனசை புரிஞ்சிக்க தான் ஆளில்லை. ஒரு மனுஷன் எந்தளவு தான் மனசில் அடிவாங்குவான்…”

பூங்காவனம் பேசியது ஹம்ஸினீக்கு தலையும் புரியலை வாலும் புரியலை. ஆனால் அவரோ மறைமுகமாக ஹம்ஸினீயை தாக்கி தான் பேசியிருந்தார்.

“நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை, கெளதம் ஸார் கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை. அவருக்கு என்ன பிரச்சினை வந்திட போகுது …”

ஹம்ஸினீயின் பேச்சு பூங்காவனத்திற்கு கசப்பான புன்னகையை கொண்டு வந்தது.

“பணம் இருக்கிறவனெல்லாம் நிம்மதியான வாழ்க்கையை வாழறான்னு யார் சொன்னது உனக்கு. சரியாக சொல்ல போனால் அவனுக்கு தான் நல்ல உறவுகள் அமையறதில்லை. சந்தோஷம் இருப்பதில்லை. வெளியில் இருந்து பார்க்கிறவங்களுக்கு அவனுடைய பணம் மட்டுமே கண்ணுக்கு தெரியுது அர்ஜுனன் குறி மாதிரி. ஆனால் அவனை கேட்டு பார் உள்ளுக்குள் அழுது வெளியே கெத்து காட்டுவான். அவ்வளவு ஏன் ஹம்சூ உன் வாழ்க்கையையே எடுத்துக்கோ. பணக்காரனுக்கு கட்டி கொடுத்தால் தன் பெண் சந்தோஷமா இருப்பாளென்று தானே உன் அப்பா, அம்மா அமெரிக்க டாக்டர் மாப்பிள்ளைக்கு கல்யாணம் செய்து வைச்சாங்க. அவனிடம் நிறைய பணம் இருந்தது, சொந்த வீடு, நிறைய சொத்துக்கள் , ஆனால் சந்தோஷமாக இருந்தாயா நீ …? இல்லை அவன் தான் சந்தோஷமாக இருந்தானா …? 

பெரியவர் பேச பேச ஹம்ஸினீக்கு வாயடைத்து போனது, அதன் விளைவாக அவள் தலை தாழ்ந்தது. 

“நான் உன்னை குத்தி காட்டணும்னு இதை சொல்லலை ஹம்சூ, வாழ்க்கையில் பிரச்சினை யாருக்கு வரும்ன்னு சொல்ல முடியாது. கடவுள் படைத்த அத்தனை மனிதனுக்கும் விதவிதமான பிரச்சினைகள் இருக்கு, ஆனால் ஆளுக்கேத்த மாதிரி இருக்கும் பிரச்சினைகள் அவ்வளவு தான்…”

“சாரி ஆன்ட்டி, சரி கெளதம் சாரின் பிளாஷ்பேக் தான் என்ன …? கெளதம் ஸார் அவங்க வீட்டுக்கு ஒரே பையனா…? 

“இல்லை , அவனுக்கு ஒரு அண்ணன், ஒரு தங்கை. இதில் அண்ணன் இப்பொழுது உயிரோடு இல்லை. அது தான் அவனுக்கும், அவன் குடும்பத்திற்கும் நடுவில் விரிசலை உண்டாகக்கிடிச்சி…”

“ஹையோ என்ன ஆன்ட்டி சொல்றீங்க? அவர் அண்ணனுக்கு என்ன நடந்தது…? 

“நான் ஆரம்பத்தில் சொன்ன மாதிரி கெளதம் ரொம்ப நல்ல பையனாக இருந்தது தான் அவன் பிரச்சினை. கௌதமின் அம்மா நித்யாதேவி ஒரு ராஜ குடும்பத்தை சேர்ந்தவங்க. அவனுடைய அப்பா ராம்பிரசாத் கோடீஸ்வரன் வீட்டு பிள்ளை. இருவருக்கும் திருமணமாகி மணி மணியாய் மூன்று பிள்ளைகள். எல்லாம் நன்றாக தான் போய்ட்டிருந்தது, அதாவது பிள்ளைகள் வளரும் வரை. 

நித்யாதேவி எப்பொழுதும் தன் அந்தஸ்தை எப்பொழுதும், யாருக்காகவும் விட்டு கொடுக்காதவங்க. அவருக்கு பிறந்த இரண்டு ஆண் பிள்ளைகள் பெரியவன் கௌஷிக், சின்னவன் கெளதம். இருவருக்கும் அதிக வயது வித்யாசம் இல்லை. இருவரும் அப்படியே தந்தை ராம்ப்ரசாத்தை கொண்டு பிறந்துட்டாங்க போல. அதாவது அந்தஸ்த்தை பார்க்காமல் எல்லோரிடமும் சகஜமாக பழகுவது, எளிமையாக இருப்பது, பணத்திமிரையும், அகங்காரத்தையும் யாரிடமும் காட்டாமல் இருப்பதுன்னு. ஆனால் கௌதமின் தங்கை ரித்யா அப்படியே அச்சு அசல் அவள் அம்மா மாதிரி.

அந்தஸ்த்தில் குறைந்தவர்களை மனுஷியாக கூட மதிக்க மாட்டாள். எப்பொழுதும் ஆடம்பரத்திலேயே மிதப்பவள். அன்றாட உணவு கூட ஆடம்பரமாக இருக்கணும். உடல்நிலை சரியில்லை என்றாலும் எளிய உணவான ரசத்தை தொடாதவள். அப்படிப்பட்டவர்களின் மத்தியில் கௌதமும், கௌஷிக்கும் இயல்பாக எல்லோரிடம் கலந்து பழகி வந்தது நித்யாவுக்கு பிடிக்காமல் பிள்ளைகளை கண்டித்திருக்கிறாள். 

ஆனால் இவர்கள் சட்டை செய்யவில்லை. பெரியவன் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் பொழுது கெளதம் பள்ளி மாணவன். அப்பொழுது தான் பிரபு அவனுக்கு பழக்கம். கௌஷிக்கிற்கும் பிரபுவை ரொம்ப பிடிக்கும். பள்ளி நாட்களில் அவர்கள் வீட்டு சாப்பாட்டை சாப்பிட பிடிக்காமல் அவ்வப்பொழுது எங்கள் வீட்டிற்கு வந்து சாப்பிட்டிருக்கிறார்கள் இருவருமே. 

பெரியவன் கல்லூரி சென்றதும் பிரபுவுக்கும் அவனுக்குண்டான தொடர்பு கொஞ்சம் விட்டு போச்சு. கெளதம் மட்டுமே ரொம்ப நெருக்கமாகி விட்டான். ஆனால் ஒரு முறை கூட பிரபு அவர்கள் வீட்டுக்கு செல்ல மாட்டான். காரணம் ஒரு முறை கெளதம் அழைத்தானென்று அங்கு சென்று நித்யாதேவியிடம் அவமானப்பட்டு வந்தான். அதிலிருந்து அங்கு இவனும் செல்வதில்லை. நாட்கள் இப்படியே சென்றிருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும். ஆனால் கௌஷிகிற்க்கு அவனுடன் படித்த ஒரு பெண் மீது காதல் வந்திருக்கு. அவள் பெயர் நிலானி. அவள் அப்பர் மிடில் க்ளாஸ் பெண். 

தன் அம்மாவை பற்றி தெரிந்திருந்த கௌஷிக் தம்பியிடம் மட்டும் தன் காதல் விவகாரத்தை சொல்லியிருக்கிறான். இப்படியே நாட்கள் பஞ்சாய் பறந்து போக கௌஷிக்கின் கல்லூரி படிப்பு இறுதியாண்டை தொட்டு கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அவனின் தங்கை ரித்யா பூப்படைந்தாள். அதை பெரிய விழாவாக அவர்கள் வீட்டில் செய்ய, கௌஷிக் தன் காதலியான நிலானியை விழாவிற்கு இன்வைட் செய்திருக்கிறான்….? 

“ஹையோ அம்மாவை பற்றி தெரிந்துமா இன்வைட் செய்தார் …? அப்புறம் என்னாச்சு ஆன்ட்டி …? 

“அப்புறம் என்ன ஆகும்ன்னு நினைக்கிறே? ஒன்னும் ஒன்னும் ரெண்டு என்பது எவ்வளவு சரியானதோ அதே போல நித்யா தேவிக்கு தன் மகன் தங்கள் அந்தஸ்த்தில் ஒரு பங்கு கூட இல்லாத பெண்ணை காதலிப்பது எப்படி பிடிக்கும். வழக்கமாக எல்லா பணக்கார அம்மாக்களும் செய்கிற மாதிரி மகனுக்கு தெரியாமல் பெண்ணை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவளை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அந்தளவு கேவலமாக பேசி மண்டபத்தை விட்டு துரத்த அதை கெளதம் தம்பி பார்த்திருக்கு. 

அதை அப்படியே அண்ணனிடம் சொல்ல அவரோ தாயிடம் நியாயம் கேட்டிருக்கிறார். இங்கே ஒரு பக்கம் மகன் தாயிடம் பிரச்சினை செய்ய, அந்த பெண்ணோ வீட்டுக்கு சென்றவள் அவமானம் தாங்க முடியாமல் தூக்கில் தொங்கிவிட்டாள். அவ்வளவு தான் கௌஷிக்கிற்கு விஷயம் தெரிய வந்ததுமே துடிச்சு போய் நிலானியை பார்க்க போக அவர்கள் வீட்டில் இந்த தம்பியை உள்ளே விடாமல் வாசலோடு துரத்தி விட்டிருக்கிறார்கள். 

காதலியின் முகத்தை கடைசியாக ஒரு முறை கூட பார்க்க முடியாத சோகத்திலும், தன் வாழ்க்கையே அழிந்து போன துக்கத்திலும் வீட்டுக்கு வந்தவர் தூக்க மாத்திரைகளை விழுங்கி தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டது அந்த பிள்ளை. ஐயோ என்றால் வருமா, அம்மா என்றால் வருமா நித்யா தேவியின் பணத்திமிருக்கு இரண்டு அப்பாவி உயிர்கள் பலியானது தான் மிச்சம். இதில் ஒரு கொடுமை என்னவென்றால் தான் செய்த தவறை அந்தம்மா ஒத்துக்கவே இல்லை.

நானா கொலை செய்தேன், அது அவங்கவங்க முடிவு, நான் பெற்ற பையனுக்கு என்னை விட அந்த பிச்சைக்காரி தான் முக்கியம்ன்னு போய்ட்டான். அவனை பற்றி என்னிடம் பேசவேண்டாம் என்று வீட்டில் ஒரே கலாட்டா. அண்ணனை பறிகொடுத்த சோகத்திலிருந்த கௌதமுக்கு தாய் பேசின விதமும், நடந்துக்கொண்டு விதமும் அரக்கத்தனமாக தோன்றியது. ஏற்கனவே தாயின் பகட்டுத்தனம் பிடிக்காமல் ஒதுங்கி சென்றவன், இப்பொழுது சுத்தமாக ஒதுங்கிவிட்டான்.

அவனுக்கு ஒரு தந்தையாக, தாயாக, நண்பனாக இருந்த தமையன் இறந்ததும் அவனுக்கு அந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. தங்கையிடம் பேசினால் அவளும் தாயை போலவே பகட்டும் ஆடம்பரமுமாக பேசுவதும், நண்பர்களை அழைத்து வந்து வீட்டில் கும்மாளம் போடுவதுமாக இருக்க கௌதமுக்கு வெறுத்து போனது. 

அவனுக்கு அந்த வீட்டின் ஒரே பிடிப்பு அவனின் தந்தை மட்டுமே. அவரால் தான் இன்றும் அந்த வீட்டில் இருக்குது தம்பி. இதெல்லாம் போதாதுன்னு நித்யா தேவி அபியின் உயிருக்கும் உலை வைச்சிருக்காங்க. ஹ்ம்ம் என்ன ஜென்மமோ, அந்தம்மா இறந்ததும் சொத்து பணம் எல்லாவற்றையும் மூட்டை கட்டி அது போகிற நரகத்திற்கு கொண்டு போய்டும் போலிருக்கு. இவர்களின் சொத்தை பரிமாறிக்க அங்கிருக்கிற சித்ரகுப்தனுக்கு செயலாளர் பதவி கொடுக்குமோ என்னவோ…”

சாதாரணமாக சொல்ல ஆரம்பித்தவர் முடிக்கும் பொழுது நித்யாதேவியின் மீது வெறுப்பை உமிழ ஹம்ஸினீக்கு என்ன பேசுவதென்று புரியாமல் சமைந்து போனாள். அவள் ஒன்றும் நித்யாதேவி மாதிரி ஆடம்பர பிசாசுகளையும், டாம்பீக ராணிகளையும், அந்தஸ்து பேய்களை பற்றியும் அறியாதவள் இல்லை. ஆனால் என்னவோ யாருக்கும் சிறு தீங்கை கூட நினைக்காத கெளதம் சாருக்கு அம்மாவாக இருக்கிற தகுதி நித்யா தேவி போன்ற ஆட்களுக்கு இல்லை என்றே தோன்றியது.

கெளதம் சார்க்குள்ளே இவ்வளவு சோகம் இருக்கா ? ஆனால் இதுவரை அவர் வெளிகாட்டிக்கொண்டதே இல்லையே. அபியின் கதையை சொன்ன பொழுது கூட அவரின் அண்ணன் கதையை பற்றி சொல்லவே இல்லையே, இந்த பிரபு முண்டம் கூட சொல்லலையே, சொல்லியிருந்தால் நானும் அவ்வப்பொழுது அவரை ஹர்ட் செய்திருக்க மாட்டேன். என்னவோ மனுஷனா பிறந்த எல்லோருக்குமே ஆன்ட்டி சொன்ன மாதிரி ஏதோ ஒரு விதத்தில் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யுது என்ற ரீதியில் யோசித்துக்கொண்டிருந்தவளுக்கு ஏதோ ஒன்று நெருடியது. அதை அவரிடம் சொல்ல வேண்டும் போல தோன்றினாலும் ஆன்ட்டி ஏதாவது நினைத்துக்கொள்வார்களோ என்ற பயமும் எழுந்தது.

ஹம்ஸினீ தனக்குள் யோசனையில் அமிழ்ந்திருக்க பூங்காவனத்தின் பார்வை அவளை துளைத்தது. 

“என்ன ஹம்சூ பேச்சே காணோம், இப்பொழுதாவது கெளதம் தம்பி எப்படிபட்டவர்ன்னு புரியுதா ? அந்த தம்பியை எந்த விதத்திலும் புண்படுத்திடாதே. பாவம் ஏற்கனவே மனதால் நொந்து நூடுல்ஸாகி போயிருக்கு…”

“எல்லாம் சரி ஆன்ட்டி, தாயின் பகட்டும், மேனாமினுக்கித்தனமும் பிடிக்கலைன்னு சொல்லிட்டு அவங்க பிஸினெஸ்ஸை தானே பார்த்துக்கிட்டிருக்கார். அதாவது தவறு செய்த தாயை தண்டிக்கிறேன்னு பேசாமல் ஒதுங்கி சென்றால் மட்டும் போதாது, அதுக்கு காரணமான அவங்க சொத்தில் நயா பைசா கூட இவர் எடுத்திருக்க கூடாது. எனக்கென்னவோ ஆடு பகை, குட்டி உறவுங்கிற மாதிரி இருக்கு. ஹ்ம்ம் அவங்கவங்க சுகத்தை மட்டும் விட்டு கொடுக்க மாட்டேங்கிறாங்க…” என்றாள் சிறு கசப்புடன். 

அவளை ஏளன புன்னகையோடு நோக்கி,”உனக்கு என்ன தெரியும் கெளதம் பற்றி. அந்த பிள்ளை செலவு செய்கிற பணம் எதுவும் அவங்க அம்மாவுடையதோ, அப்பாவுடையதோ இல்லை. எல்லாமே தம்பியின் சொந்த சம்பாத்தியம். உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? எல்லா பணக்கார பசங்களும் பட்ட படிப்பை வெளிநாட்டில் படிப்பாங்க. ஆனால் கெளதம் தம்பி பட்ட படிப்பை பெங்களூரில் தான் முடித்தது, அதுவும் எப்படி அவரின் சொந்த பணத்தில்… ? 

“என்ன… ! 

“என்ன ஆச்சர்யமாக இருக்கா ? பள்ளிப்படிப்பை முடித்ததுமே வெளிநாட்டுக்கு போக சொல்லி வீட்டில் ஒரே ஆர்ப்பாட்டம். ஆனால் தாயின் மேலிருந்த வெறுப்பில் அவருடைய பணத்தையும் தொட மறுத்துவிட்டது தம்பி. பெற்றவர்களை எதிர்த்துக்கொண்டு அரசு கல்லூரியில் சேர்ந்து இளங்கலை பட்டம் வாங்கினார். அப்புறம் தாயின் அந்தஸ்து நச்சரிப்பு தாங்காமல் இங்கே வந்து முதுகலை பட்டத்திற்கு படிச்சிட்டே தன்னுடைய செலவுக்கு வேலை செய்து சம்பாதிச்சார். படிப்பு முடிஞ்சதும் தன் திறமையை வைத்து சின்ன சின்ன ப்ராஜெக்ட்ஸ் செய்து இன்று இந்த நிலையை எட்டி பிடிச்சிருக்கார். அவரை போய் என்ன வார்த்தை சொல்லிட்டே. எது பேசுவதென்றாலும் உண்மையை தெரிஞ்சிக்கிட்டு பேசு ஹம்சூ…” என்றார் சற்று காட்டமாக.

பெரியவர் சொன்னதை கேட்டதும் தன் மீதே கோபம் வந்தது. ச்சே என்ன வார்த்தை சொல்லிட்டேன். எவ்வளவு பெரிய முட்டாள் நான். பூங்காவனம் ஆன்ட்டி ஒருத்தர் மீது தன் பிள்ளையளவுக்கு பாசத்தையும், மரியாதையும் வைத்திருக்கிறார்கள் என்றால் நிச்சயம் அவர்கள் எல்லா விதத்திலும் சிறந்தவர்களாக இருப்பார்களென்று நான் ஏன் நினைக்கவில்லை என்று யோசித்து கொண்டிருந்தவளுக்கு கெளதம் கடந்த சில நாட்களாக தன்னிடமிருந்து மிகவும் விலகி போவது ஏனென்ற கேள்வி எழுந்தது.