UN NINAIVIL VAAZHVEN NAANAGAVE …
அத்தியாயம் _ 18
முதல் நாளிரவே அபியை அழைத்துக்கொண்டு வரவேண்டுமென்று ஹம்ஸினீயிடம் சொல்லியிருந்தான். அதனால் பிரபு வருவதற்கு முன்பே போயிட்டு வந்திடலாம் என்று பிளான் செய்து கிளம்பும் நேரத்தில் ஒரு போன் வந்துவிட அதிலேயே நேரம் ஓடிவிட்டிருந்தது. பேசிவிட்டு கீழே இறங்க எத்தனித்தவன் ஜன்னல் வழியாக பிரபு வந்துவிட்டதை பார்த்துவிட்டு ஆவலாக அவர்களை வரவேற்க கீழே வந்தவனுக்கு கண்ட காட்சி அவனை ஏதோ செய்தது.
“ஹாய் கெளதம், என்ன இங்கேயே நின்னுட்டே… ?
கேட்டபடி பிரபு அவனின் ட்ரேட் மார்க் சிரிப்புடன் கௌதமை நெருங்க, பிரபுவை அணைத்துக்கொண்டான். சில நொடிகள் கழித்து இருவரும் விலக பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டார்கள்.
“எப்பொழுது சென்னையிலிருந்து கிளம்பினீங்க… ? பயணத்தில் எந்த சிரமமும் இல்லையே… ?
“அதெல்லாம் இல்லைடா, காரில் வந்ததால் எவ்வித பிரச்சினையுமில்லை. சரி நீ சொல்லு, ஹம்ஸினீ அவள் வேலையை நன்றாக செய்கிறாளா ? இல்லை ஒப்பி அடிக்கிறாளா … ? என்று கலாய்த்தான்.
நண்பனின் கேள்விக்கு பதில் சொல்லுமுன் ஹம்ஸினீ பிரபுவின் தோளில் ஒரு அடி வைத்தாள் செல்ல கோபத்துடன்.
“டேய் எருமை, நான் ஒப்பி அடிக்கிறேனா, ஓ அப்போ பேங்கில் நீ வேலை செய்கிறேன் என்கிற பேரில் பொழுது போக்கிட்டு வர்றியா. ஆன்ட்டி இவன் அப்படி தானே செய்யறான் … ?
ஹம்ஸினீயின் கேள்விக்கு பூங்காவனம் நமுட்டு சிரிப்பு சிரித்து,”எப்படி ஹம்சூ இவ்வளவு சரியா சொல்றே. பயபுள்ளே ரிங்க்டோன் வைச்சே எல்லோரையும் பயமுறுத்துது. அதுக்கே அவனுக்கு டைம் போதலை, அப்புறம் எங்கே வேலை செய்யறது … ?
“அதென்ன ஆன்ட்டி ரிங்க்டோன் கதை, சொல்லுங்க …சொல்லுங்க …” என்று பரபரத்தாள்.
பிரபு இடையில் புகுந்து,”ஹையோ அம்மா நீங்க அந்த விஷயத்தை விடவே மாட்டீங்களா ? ஒரு மேளம் வாங்கித்தர்றேன், அப்படியே ஊர் பூரா டமாரம் அடிச்சி சொல்லிட்டு வாங்க…” என்று தாயை அடக்கியவன்,”உனக்கு இது ரொம்ப முக்கியம்…” என்று ஹம்ஸினீக்கும் ஒரு ஷொட்டு வைத்தான்.
“நீ சொல்லு கெளதம், இந்த அடாவடி ஒழுங்கா வேலை செய்யுதா இல்லையா ? இல்லையென்றால் சொல்லு காதை பிடிச்சி திருகி புத்தி சொல்லிட்டு போறேன்…”
ஹம்ஸினீயும், பிரபுவும் மிகவும் சகஜமாக தொட்டு பேசுவதையும், கலாட்டா செய்துகொள்வதையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன் பிரபுவின் விசாரிப்பிற்கு மெல்ல புன்னகைத்தான்.
சரசம்மா நால்வருக்கும் காஃபி கொண்டு வந்து கொடுக்க, எல்லோருக்கும் எடுத்துக்கொடுத்துக்கொண்டிருந்தவள் கௌதமுக்கு எடுத்துக்கொடுக்கும் முன்னரே அவனே ஒன்றை எடுத்துக்கொள்ள தானும் ஒன்றை எடுத்துக்கொண்டு அமர்ந்தாள். அதில் அவள் எவ்வித வித்தியாசமும் இருந்ததாக அவளுக்கு தெரியவில்லை. சில நிமிடங்கள் சென்னையை பற்றியும், புதுவருடத்தின் கோலாகலத்தை பற்றியும், இருவரின் வேலை, கௌதமின் ப்ராஜெக்ட் பற்றி பேசிக்கொண்டிருக்க காபியை குடித்து முடித்துவிட்டு எழுந்தான்.
“பிரபு, ஆன்ட்டி நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க. எங்களுக்கு ஒரு வேலை இருக்கு, அதை முடிச்சிட்டு வந்திடறோம். ஹம்ஸினீ போகலாமா… ? என்றான் கடமையே கண்ணாக.
ஹம்ஸினீ எழவும், அவளின் கையை பிடித்து அமர்த்திய பிரபு,”இப்போ என்னடா வேலை, நாளைக்கு புது வருஷம் பிறக்க போகுது, உங்க ப்ராஜெக்ட்க்கு மட்டும் லீவ் இல்லையா… ? என்றான் குறையாக.
“போயிட்டு உடனேயே வந்திடறோம், வந்ததும் சொல்றேன்…”என்றவன் கைபேசியில் மணியை பார்த்தபடி ஹம்சினியை அவசரப்படுத்தி அழைத்துச் செல்ல ஊரிலிருந்து வந்தவர்கள் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
காரில் செல்லும் வரை கூட கெளதம் அவள் பக்கம் திரும்பாமல் ஒரு கற்சிலை மாதிரி காரை கையாண்டுக்கொண்டிருக்க ஹம்ஸினீக்கு கௌதமின் அமைதி சற்று முரண்டியது. யோசித்து பார்த்ததில் பிரபுவிடம் கூட அதிகம் பேசவில்லை என்றே தோன்றியது. ஏன் பிரபுவுக்கும் இவருக்கும் ஏதேனும் பிரச்சினையோ ? ஆனால் பிரபு முகபாவனையில், பேச்சில் சிரிப்பில் அப்படி ஏதும் தெரியவில்லையே. பின் ஏன் இவர் இப்படி இருக்கிறார். எவ்வளவு யோசித்ததும் விடை கிடைக்காததால் அலுத்து போயிருந்தவளுக்கு வண்டி மெண்டல் அசைலம் உள்ளே நுழையவும் மனது அபியை பற்றி சிந்திக்க தொடங்கியது.
அவளை வீட்டுக்கு அழைத்து போக போகிறோம் என்ற விஷயமே அவளுக்கு புது ரத்தத்தை ஊற வைத்தது. வீட்டில் வைத்து சிகிச்சை கொடுத்தால் நிச்சயம் அந்த அமைதியான சூழ்நிலையும், என்னுடைய அன்பும் அபியை பழைய அபியாக மாற்றும். கடவுளே சீக்கிரமே அபி குணமாகிவிடவேண்டும். அவளுக்கென்று ஒரு நல்ல வாழ்க்கை அமையணும். என் வாழ்க்கை சூனியம் ஆன மாதிரி அபி வாழ்க்கை ஆகிவிட கூடாது.
காரிலிருந்து இறங்கி அபியின் அறைக்குள் போவதற்குள் ஹம்ஸினீயின் மனதில் ஆயிரத்தெட்டு வேண்டுதல்கள் பிளாஷ் நியூஸ் போல ஓடிக்கொண்டிருந்தது.
“ஹலோ கெளதம், ஹலோ ஹம்ஸினீ …” என்று எதிர்ப்பட்ட டாக்டர் சந்துரு இருவரையும் வரவேற்றார் இன்முகத்துடன்.
“டாக்டர் அபியை அழைச்சிட்டு போகலாமா ? ஒன்றும் பிரச்சினையில்லையே … ?
“நோ கெளதம், ஒரு பிரச்சினையுமில்லை. நீங்க டீன் ரூம்க்கு போய் அபியின் டிஸ்சார்ஜ் பேப்பரில் கையெழுத்திட்டுவிட்டு அபி இருக்கும் ரூம்க்கு வந்துடுங்க…”
சொல்லிவிட்டு அவர் நகர்ந்துவிட ஹம்ஸினீயை அவருடன் போக சொல்லிவிட்டு கெளதம் டீனின் அறையை நோக்கி சென்றான். டிஸ்சார்ஜ் சம்பிரதாயங்களை முடித்துவிட்டு அபியின் அறைக்கு சென்றவன் துணுக்குற்றான்.
“சந்துரு என்ன இது, அபி மயக்கமாக இருக்கிறாள். என்னாச்சு அவளுக்கு… ? என்றான் பதட்டத்துடன்.
“கூல் கெளதம், அவங்க முழிச்சிட்டு நினைவு இருக்கும் பொழுது வேறு இடத்துக்கு அழைத்து போக முடியாது. ரொம்ப முரண்டு பிடிப்பாங்க. அதனால் தான் மயக்க ஊசி போட்டு படுக்க வைச்சிருக்கோம். ஒரு நர்ஸையும் அனுப்பறோம். அவங்க அபியை பார்த்துக்குவாங்க. சரி ஆம்புலன்ஸ் ரெடியா இருக்கு. அதில் அபியுடன் யாரவது ஒருத்தர் வாங்க …”
டாக்டர் சொல்லிவிட்டு அவர் மேற்கொண்டு அபியை ஆம்புலன்ஸில் ஏற்றும் வேலைகளை செய்ய, கெளதம் குழப்பத்துடன் ஹம்ஸினீ பக்கம் பார்வையை திருப்பினான்.
“சார் டாக்டர் சொல்றது சரி தான், அபி இப்போதைக்கு சுயநினைவில்… “என்றவள் அழுத்தமாக விழி மூடி திறந்து,” நினைவு இருக்கும் பொழுது அழைச்சிட்டு பொழுது கொஞ்சம் ரிஸ்க். நான் அபியுடன் ஆம்புலன்ஸில் வர்றேன். டோன்ட் ஒர்ரி …”என்றவள் அபியை ஆம்புலன்ஸில் ஏற்றியதும் டாக்டர் சந்துருவுக்கு ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு அதில் ஏறி அபியின் பக்கத்தில் அமர்ந்ததும் வண்டியின் கதவு மூடப்பட வண்டி கௌதமின் வீடு நோக்கி பயணித்தது.
சில நொடிகள் அமைதியாக சிறு பிள்ளை போல உறங்கும் தங்கையையே பார்த்துக்கொண்டிருந்தவளுக்கு சிறிய வயதில் இருவரும் ஒன்றாக விளையாடிய நாட்களும் பின் இருவரும் பூப்படைந்ததும் எப்பொழுதாவது சந்தித்த நாட்களும், பெங்களூரிலிருந்து திரும்பி வந்த பொழுது மொட்டை மாடியில் அமர்ந்து அபி பெற்றோர் தன்னை நம்பவில்லை என்று அழுததும், அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்து அவளிடம் போனில் அங்கு நடந்த விஷயங்களை மனம் நொந்து சொன்னதும் ஒவ்வொன்றாக நினைவு வர வர ஹம்ஸினீயின் விழிகளில் கண்ணீர் அவளையுமறியாமல் கன்னங்களின் வழியே பயணித்தது.
கெளதம் வீடு….
“என்ன ஆச்சு பிரபு உன் ப்ரெண்ட்க்கு. வந்ததிலிருந்து அவன் முகமே சரியில்லையே ஏன் ? பார் நாம வந்திருக்கோம் அவன் ஹம்ஸினீயை வேலை இருக்குன்னு அவசரமாக அழைச்சிட்டு போறான். என்ன விஷயமா இருக்கும்…?
“ப்ச் எனக்கும் அதே குழப்பம் தான். ஆனால் ஹம்ஸினீ பேசியதிலிருந்து நிச்சயம் இரண்டு பேருக்கும் இடையில் ஏதும் பிரச்சினையில்லைன்னு புரியுது. ஒருவேளை கௌதமின் அம்மா அவனிடம் பிரச்சினை செய்திருப்பாங்களோ, அதான் பயங்கர மூட் அவுட்டா இருக்கானோ? வரட்டும் பேசிக்கிறேன்…”
“முதலில் அதை செய் …”என்றவர் எழுந்து சமையலறைக்கு சென்று சரசம்மாவிடம் பேச்சு கொடுத்தார் பூங்காவனம்.
வாசலில் கார் சத்தம் கேட்டு போனில் எதையோ சுவாரசியமாக பார்த்துக்கொண்டிருந்த பிரபு நிமிர அதை தொடர்ந்து ஆம்புலன்ஸின் ஊய்…ஊய் … சத்தம் கேட்க குழப்பத்துடன் எழுந்து வெளியே செல்லவும், பூங்காவனம்,சரசம்மாவும் சமையலறையிலிருந்து வேகமாக வெளியே வந்தார்கள் என்னவோ ஏதோ என்று.
கெளதமும், ஹம்ஸினீயும் உதவ ஆம்புலன்ஸ் ட்ரைவர் அதிலிருந்து ஒரு ஸ்ட்ரெச்சரை இறக்கிக்கொண்டிருக்க பிரபு ஆம்புலன்ஸ் அருகே சென்றான். ஸ்ட்ரெச்சரில் ஒரு பெண் மயக்க நிலையில் படுத்திருக்க அவனின் விழிகள் குழப்பத்துடன் நண்பனை நோக்கியது. மற்ற இரு பெண்களும் புரியாமல் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
“பிரபு கொஞ்சம் ஹெல்ப் பண்ணு, ஹம்ஸினீ ரூமை திறந்து வை….” என்ற கௌதமின் பேச்சை தட்டாமல் இருவருமே செய்தார்கள்.
அபியை தூக்கிக்கொண்டு வருவதற்குள் ரூமை திறந்து , ஜன்னல்களை காற்றாட திறந்து வைத்தாள். அவளை அறையில் படுக்க வைத்துவிட்டு கெளதம் ஆம்புலன்ஸ் டிரைவருக்கு டிப்ஸ் கொடுத்து நன்றி சொல்லி அனுப்பி வைக்கும் வரை யாரும் எதுவும் பேசவில்லை. வீட்டிலிருந்த மூவருக்குமே ஆர்வம் ப்ளஸ் குழப்பம்.
கூடவே வந்த நர்ஸ் அபிக்கு சலைன் பாட்டிலை பொருத்திவிட்டு அவளின் பல்ஸை செக் செய்துக்கொண்டிருக்க, ஹம்ஸினீ அபியின் உடைகளை சரி செய்து அவளுக்கு மெல்லிய போர்வையை போர்த்திவிட்டு அவளின் நெற்றியை வாஞ்சையுடன் வருடிக்கொடுத்தாள். சில நொடிகள் அபியையே பார்த்துக்கொண்டிருந்த கெளதம் தன் பதிலுக்காக காத்திருக்கிற நண்பனையும், அவனின் தாயையும் கருத்தில் கொண்டு ஒரு பெருமூச்சுடன் கீழே இறங்கினான்.
“யாருடா இந்த பொண்ணு, என்னாச்சு ஏன் மயக்கமா இருக்குது…? நீ ஏன் வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தே …?
பிரபு சரளை கற்களாய் கேள்விகளை கொட்ட பூங்காவனம் அமைதியாக கௌதமின் முகத்தையே பார்த்திக்கொண்டிருந்தார், உடன் சரசம்மாவும்.
ஒரு பெருமூச்சுடன் நடந்த விஷயங்களை கூறி,”அபியை எப்படியாவது குணமாக்கணும் பிரபு, எனக்கு ரொம்ப குற்ற உணர்ச்சியா இருக்கு. என்னால் ஒரு உயிரை காப்பாற்ற முடியாமல் போய்டிச்சி. ஆனால் அபியின் உயிரை என்ன விலை கொடுத்தாவது காப்பாற்றியே ஆகணும்…” என்றான் முகத்தை அழுந்த துடைத்து.
கெளதம் பேசிமுடிக்கும் வரை அங்கு ஊசி விழுந்தால் கூட விகாரமாக கேட்குமளவுக்கு அமைதியாக இருந்தது. இந்த விஷயத்தை பற்றி இருவருக்குமே தெரியும் என்றாலும் அந்த பெண் அபி என்றும் ஹம்ஸினீ அவளின் அக்கா என்றும் அபிக்கு இப்படியொரு கோரமான கடந்தகாலம் இருக்குமென்று இருவருமே நினைத்து பார்த்ததில்லை.
ஹம்ஸினீக்கு தான் திருமண வாழ்வு சரியாக அமையவில்லை என்றால் அவளின் தங்கையான அபிக்கும் அதே கொடுமையல்லவா நடந்திருக்கு. இதென்ன சாபக்கேடு. அக்கா தங்கை இருவருக்குமே வாழ்க்கை எட்டாக்கனியாக மாறிவிட்டதே என்ற எண்ணம் உள்ளே ஓட தாயும், மகனும் பார்வை பரிமாற்றம் செய்துக்கொண்டார்கள் பரிதாபத்துடன்.
“சரசம்மா, கொஞ்ச நாளைக்கு நர்ஸ் இங்கே தான் இருப்பாங்க, அவங்களுக்கு தேவையானதை பார்த்து செய்யுங்க. அப்படியே அபிநயாவையும் பார்த்துக்கங்க. ஹம்ஸினீக்கு இந்த விஷயத்தில் உதவி செய்தால் போதும்…” என அவர் பணிவுடன் தலையை உருட்டினார்.
அவனின் விழிகள் கீழே இறங்கி வந்த ஹம்ஸினீயை களைப்புடன் நோக்கியது.
“கவலைப்படாதீங்க கெளதம், கூடிய விரைவில் அபி குணமாகி எழுந்துவிடுவாள். அப்புறம் பிரபு அவள் என் கசின் சிஸ்டர் அபிநயா …”
அறிமுகப்படுத்த ஆரம்பித்தவள் கையமர்த்தி இடைமறித்தான் பிரபு.
“கெளதம் எல்லாவற்றையும் சொன்னான். கேட்கவே வருத்தமாக இருக்கு. சில நேரங்களில் ஆண்டவன் இருக்கானா என்ற சந்தேகம் வருவதை தடுக்க முடியவில்லை…”
“அப்படி சொல்லாதே பிரபு, கடவுள் இருப்பதினால் தான் எங்கேயோ காணாமல் அவ்வளவு ஏன் உயிரோடு இருக்கிறாளா இல்லையான்னே தெரியாமல் இருந்த அபி இன்று உயிரோடு கிடைத்திருக்கிறாள் அதுவும் கெளதம் ஸாரின் புண்ணியத்தில். இந்த நன்றியை நான் என் வாழ்நாள் முழுமைக்கும் மறக்க மாட்டேன்…” என்றாள் நன்றிப்பெருக்கோடு கௌதமை நோக்கியவாறு.
“நான் …”என்று ஆரம்பித்த கௌதமின் பேச்சை இடைவெட்டினார் பூங்காவனம்.
“சரி விடுங்க, கடவுள் எல்லா நேரத்திலும், எல்லா இடங்களிலும் நேரில் வர முடியாததால் அவருக்கு பதிலாக மனிதர்களை அனுப்புவார்ன்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுது கெளதம் உருவில் பார்க்கிறேன். நல்ல விஷயம் தான் நடந்திருக்கு. சாப்பாடு ரெடி ஆயிடிச்சு. சரசா நீ போய் நர்ஸ் பொண்ணுக்கு சாப்பாடு கொடுத்திட்டு வா, நான் எல்லோருக்கும் சாப்பாடு பறிமாறறேன்…”
இறுக்கமான சூழ்நிலையை சகஜமாக்க பேசியபடி எல்லோரையும் சாப்பிட அழைத்துவிட்டு எழுந்துச் சென்றார்.
“சரசம்மா நான் நர்ஸ் வித்யாவுக்கு சாப்பாடு எடுத்திட்டு போறேன், நீங்க உங்க வேலையை கவனிங்க…”
அந்த பெண்ணிற்கு சாப்பாட்டை தட்டில் போட்டு அதை மூடி எடுத்துக்கொண்டு மாடியேற கெளதம்க்கு சற்று முன் சொன்ன அபியின் கதையின் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் சாப்பிட அமர்ந்தான். சொன்னபடி பூங்காவனம் இரு ஆண்களுக்கும் சாப்பாட்டை பரிமாற பிரபு நண்பனின் மனநிலை புரிந்து எதை எதையோ பேசி அவளை லேசாக்க முயன்று அதில் வெற்றியும் பெற்றான்.
இருவரும் சாப்பிட்டு முடித்ததும், இரு ஆண்களும் வெளியே கிளம்பிவிட பெண்கள் மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்கள். பூங்காவனம் அம்மா வீட்டுக்குள் நுழைந்தத்திலிருந்து அவரின் கலகலப்பான பேச்சும், சிரிப்பும் ஹம்ஸினீயை சந்தோஷ பள்ளத்தாக்கில் தள்ளியது.
வெளியே சென்ற இரு ஆண்களும் அன்றிரவு புத்தாண்டு என்பதால் கேக்கிற்கு ஆர்டர் கொடுத்துவிட்டு இலக்கில்லாமல் சுற்றி திரிந்து பேசி சிரித்துக்கொண்டிருந்தாலும் கௌதமின் முகத்தில் அடிக்கடி காணாமல் போகும் சிரிப்பும், அதற்கு பதிலாக குடியேறும் சிந்தனைகளும் பிரபு அறியாமலில்லை. பொறுத்து பொறுத்து பார்த்தவனுக்கு ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாமல் கௌதமிடம் கேட்டே விட்டான்.
“நானும் வந்ததிலிருந்து பார்க்கிறேன், உன் மூஞ்சியே சரியில்லை. உள்ளுக்குள் ஏதோ வைச்சுக்கிட்டு மருகுகிற மாதிரி இருக்கு. என்னென்று சொல்லுடா? உன் வீட்டில் ஏதும் பிரச்சினையா? இல்லை ஹம்ஸினீ உனக்கு பிடிக்காத விதமாக நடந்துக்கிட்டாளா? ஆனால் எனக்கு தெரிந்து அவள் அப்படிப்பட்டவள் இல்லையே? அப்படியே அவள் ஏதாவது தவறு பண்ணியிருந்தாலும் எனக்காக மன்னிச்சிடுடா. தயவு செய்து அவளிடம் உன் கோப முகத்தை காட்டிடாதே. ஏற்கனவே நிறைய கஷ்டங்களை அனுபவிச்சிருக்கா, ரொம்ப பாவம்டா ஹம்ஸினீ …
பிரபுவின் பேச்சும், வேண்டுகோளும் கௌதம் மனதில் அலட்சியத்தையும், கோபத்தையும் உண்டு பண்ணியிருந்தது.
“ஹம்ஸினீயின் பெற்றோர் இறந்ததை சொல்றியா… ? என்றான் அலட்சிய பாவனையுடன்.
“இல்லை அவர்கள் இறப்பிற்க்கான காரணத்தை சொல்கிறேன்…”
“புரியலை, அப்படி என்ன காரணம் … ?
“நீ நினைச்சிட்டு இருக்கிற மாதிரி அவள் திருமணமாகாதவள் அல்ல, திருமணமாகி அபியை போல கொடூரத்தை அனுபவித்து வாழ்க்கையே வேண்டாமென்று தூக்கி போட்டுவிட்டு வந்தவள். அவளுக்கு நடந்த கொடுமைகள் தான் அவளின் பெற்றோரின் இறப்பிற்க்கே காரணம்ன்னு சொல்றேன்…”
பிரபு பேசுவதை புரியாத பாஷையை கேட்பது போல பார்த்துக்கொண்டிருந்தான் கெளதம். அவன் முகத்தில் குழப்ப ரேகைகளின் அணிவகுப்பு.